என் மலர்
உள்ளூர் செய்திகள்
- வனத்துறையினர் காட்டு யானைகளின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
- காட்டு யானைகள் மீண்டும் குடியிருப்பு பகுதிகளுக்கு வராதபடி கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அருவங்காடு:
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அதிலும் குறிப்பாக சமவெளி பகுதியில் இருந்து இடம் பெயர்ந்து வரும் காட்டு யானைகள் வனத்தையொட்டிய அடிவாரப்பகுதியில் முகாமிட்டு அவ்வப்போது முக்கிய சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து செல்வது வாடிக்கையாக உள்ளது.
வனத்துறையினரும் தொடர்ந்து கண்காணித்து காட்டு யானைகளை அடர்ந்த வனத்திற்குள் விரட்டினாலும் அவை மீண்டும் திரும்பி வந்துவிடுகிறது.
இந்த நிலையில் கெத்தை பகுதியில் இருந்து காட்டு யானைகள் குன்னூர் அடுத்த கிரேக்மோர் எஸ்டேட் பகுதிக்கு வந்தன.
பின்னர் அவை அங்குள்ள ரேசன் கடையை உடைத்து அங்குள்ள பொருட்களை சூறையாடியது. தொடர்ந்து பக்கத்திலுள்ள மளிகை கடையையும் உடைத்து பொருட்களை சேதப்படுத்தியது.
இதனையடுத்து சுமார் ஒரு கி.மீ.. தொலைவுக்கு நடந்துசென்ற காட்டு யானைகள் கொலகம்பை பகுதியில் உள்ள ரேசன் கடையை உடைத்து அங்குள்ள பொருட்களை சூறையாடியது. பின்னர் அங்கு இருந்த ஒரு மூட்டை அரிசியையும் தூக்கிக்கொண்டு சென்றது. தொடர்ந்து பஜார் பகுதியில் 2 மளிகை கடைகளை சேதப்படுத்தி காய்கறிகளை ருசித்தன.
இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் காட்டு யானைகளின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது அந்த யானைகள் இன்று காலை கம்மந்து வனப்பகுதியில் முகாமிட்டு நிற்பது தெரியவந்தது.
தொடர்ந்து வனச்சரகர்கள் ரவீந்திரநாத் (குன்னூர்), சீனிவாசன் (குந்தா) ஆகியோர் மேற்பார்வையில் ஊழியர்கள் தீப்பந்தங்களை ஏந்தி ஊருக்குள் நுழைந்த காட்டு யானைகளை வனத்துக்குள் விரட்டினர்.
காட்டு யானைகள் மீண்டும் குடியிருப்பு பகுதிகளுக்கு வராதபடி கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
காட்டு யானைகளின் அட்டகாசத்தால் தோட்டத் தொழிலாளர்களும் பொதுமக்களும் பீதி அடைந்ததுடன் தூக்கம் இழந்து தவித்து வருகின்றனர். மேலும் அவர்கள் வனத்துறையினருடன் இணைந்து காட்டு யானைகளை விரட்டும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
- இன்று விடுமுறை தினம் என்பதால் காலை முதலே குற்றால அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
- விட்டு விட்டு சாரல் மழை மற்றும் குளிர்ந்த காற்றுடன் குளு,குளு சீசன் நிலவி வருவதால் ரம்யமான சூழ்நிலை நிலவுகிறது.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் தொடர் சாரல் மழையினால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள அணைகள் மற்றும் நீர்நிலை பகுதிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது.
குறிப்பாக முக்கிய சுற்றுலா தலமாக விளங்கி வரும் குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
ஐந்தருவி, மெயின் அருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டி வருவதால் வெளியூர் சுற்றுலா பயணிகள் குற்றால அருவிகளில் குளிப்பதற்கு குடும்பம் குடும்பமாக படை எடுக்க தொடங்கியுள்ளனர். இன்று விடுமுறை தினம் என்பதால் காலை முதலே குற்றால அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
குற்றால அருவிகளில் ஆனந்த குளியல் போடும் சுற்றுலா பயணிகள் அங்குள்ள உணவு மற்றும் பழக்கடைகளில் விற்கப்படும் உணவுப் பொருட்களை வாங்கி உண்பதோடு பலாப்பழங்களை வீடுகளுக்கு வாங்கி செல்கின்றனர்.
இன்று வானம் மேகமூட்டத்துடனும், விட்டு விட்டு சாரல் மழை மற்றும் குளிர்ந்த காற்றுடன் குளு,குளு சீசன் நிலவி வருவதால் ரம்யமான சூழ்நிலை நிலவுகிறது.
- வட மற்றும் தென் ஒத்தவாட வீதிகளில், நீண்ட வரிசையில் பக்தர்கள் திரண்டிருந்தனர்.
- 2 வழித்தடங்களில் உள்ள பாதைகளிலும், பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
வேங்கிகால்:
திருவண்ணாமலையில் இன்று மாலை ஆடி மாத பவுர்ணமி கிரிவலம் தொடங்குகிறது. இதனையொட்டி இன்று அதிகாலையில் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
அதிகாலை கோவிலில் நடை திறக்கும் போதே தரிசனத்துக்காக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் அதிகளவில் வந்தனர்.
ராஜகோபுரம் மற்றும் அம்மணி அம்மன் கோபுரம் வழியாக பக்தர்கள் தரிசனத்திற்கு உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
வட மற்றும் தென் ஒத்தவாட வீதிகளில், நீண்ட வரிசையில் பக்தர்கள் திரண்டிருந்தனர். 2 வழித்தடங்களில் உள்ள பாதைகளிலும், பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடி பவுர்ணமி பிரதோஷத்தை முன்னிட்டு பெரிய நந்திக்கு சிறப்பு பால் அபிஷேகம் நடந்தது.
தரிசனம் முடிந்து பக்தர்கள் திருமஞ்சன கோபுரம் வழியாக வெளியே சென்றனர்.
ராஜகோபுரத்தை காட்டிலும் அம்மணி அம்மன் கோபுரம் வழியாக அதிகாலையிலேயே உள்ளே செல்ல ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.
வரிசையில் நிற்காமல், கோபுர நுழைவு வாயிலில் கூட்டமாக குவிந்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டது.
குழந்தைகளுடன் வந்திருந்த பெண்கள் மற்றும் பக்தர்கள் நெரிசலில் சிக்கி தவித்தனர். நசுங்கிய குழந்தைகள் மற்றும் முதியவர்கள் உள்ள செல்ல முடியாமல் பல மணி நேரமாக காத்திருந்தனர்.
சிலர் குழந்தைகளை தங்களது தலை மற்றும் தோல் மீது தூக்கி சுமந்தபடி அம்மணி அம்மன் கோபுர வாசலை கடந்து உள்ளே சென்றனர். பக்தர்கள் வரிசையில் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டது.
ஆனால் அதனை பொருட்படுத்தாமல் ஏராளமானோர் அம்மணி அம்மன் கோபுர வாசலில் குவிந்ததே கூட்ட நெரிசலுக்கு காரணமானது.
தரிசன வரிசை ராஜகோபுரத்தையும் கடந்து மாட வீதி வரை சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் வரை நீண்டிருந்தது. நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்த பெண்கள், முதியவர்கள் கடும் அவதிப்பட்டனர்.
கோவில் வெளி பிரகாரம் முதல் பொது தரிசன வரிசை, மூலவர் சன்னதி வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் மாட வீதி வரை அணிவகுத்து நின்றனர்.
மேலும், பக்தர்களின் வருகை அதிகரித்திருப்பதால், அதிகாலை முதல் தொடர்ச்சியாக பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.
ஏராளமான பக்தர்கள் நமசிவாய கோஷம் எழுப்பியபடி பரவசத்துடன் கிரிவலம் சென்றனர்.
- இணையதள பிரச்சனை காரணமாக நேற்று முழுவதும் 2 விமானங்கள் ரத்து மற்றும் 2 விமான சேவைகள் தாமதம் என மதுரை விமான நிலையம் அறிவித்துள்ளது.
- மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு விமானம் புறப்பட்டு சென்றது.
மதுரை:
மைக்ரோசாப்ட் இணைய தள பிரச்சனை காரணமாக சிக்னல் கோளாறு ஏற்பட்டு நாடு முழுவதும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மதுரை விமான நிலையத்திலும் இணையதளம் சேவை பிரச்சனை நேற்று முழுவதும் நீடித்து வருவதன் காரணமாக விமானங்கள் வருவதிலும், இங்கிருந்து புறப்பட்டு செல்வதிலும் தாமதம் ஏற்பட்டது.
மேலும் விமானத்தில் செல்லக்கூடிய போர்டிங் பாஸ் தற்காலிகமாக கைகளால் எழுதி பயணிகளிடம் வழங்கப்படுவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் இணையதள பிரச்சனை காரணமாக நேற்று முழுவதும் 2 விமானங்கள் ரத்து மற்றும் 2 விமான சேவைகள் தாமதம் என மதுரை விமான நிலையம் அறிவித்துள்ளது.
இன்று காலை செல்லக்கூடிய சென்னை மற்றும் பெங்களூரு விமான சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளதாக மதுரை விமான நிலையம் அறிவித்துள்ளது. இன்று காலை 6.20 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு 7.20 மதுரை விமான நிலையத்திற்கு வந்தடையும்.
அதேபோல் 6.20 பெங்களூரு விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு 7.35 மணிக்கு மதுரை விமான நிலையத்திற்கு இண்டிகோ விமானம் வந்தடையும். இந்த 2 விமான சேவையும் ரத்து என விமான நிலைய வட்டாரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் இன்று காலை இணையதள பிரச்சனைகள் சீரானதை தொடர்ந்து விமான சேவைகள் மீண்டும் தொடங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் காரணமாக இன்று காலை 8.40 மணிக்கு மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு விமானம் புறப்பட்டு சென்றது.
இதனை தொடர்ந்து பெங்களூரு உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், துபாய் உள்பட வெளி நாடுகளுக்கும் விமான சேவைகள் தொடங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- கபினி அணையின் நீர்மட்ட உயரம் 84 அடியாகும்.
- அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
சேலம்:
கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. கடலோர மாவட்டங்கள் மற்றும் மலை மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் மழையின் காரணமாக பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. குடகு மாவட்டத்தில் தயார் நிலையில் பேடரிடர் மீட்பு குழுவினர் நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் அங்குள்ள பல்வேறு ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் காவிரி மற்றும் பல்வேறு ஆறுகளின் கரையோரத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் கபினி மற்றும் கிருஷ்ண ராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. கிருஷ்ண ராஜ சாகர் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 124.80 அடியாகும். இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 119.90 அடியாக உயர்ந்து காணப்பட்டது. அணைக்கு வினாடிக்கு 51 ஆயிரத்து 375 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதுவரை கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்படவில்லை. உள்ளூர் பாசன தேவை மற்றும் குடிநீருக்காக மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை முதல் காவிரி ஆற்றில் வினாடிக்கு 4 ஆயிரத்து 714 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
கபினி அணையின் நீர்மட்ட உயரம் 84 அடியாகும். இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 80.76 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 45 ஆயிரத்து 658 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 40 ஆயிரத்து 292 கனஅடி தண்ணீர் வெளியேற்ற ப்பட்டு வருகிறது.
கபினி, கிருஷ்ண ராஜ சாகர் ஆகிய 2 அணைகளுக்கும் 97 ஆயிரத்து 33 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இந்த அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் வினாடிக்கு 47 ஆயிரத்து 714 கனஅடி தண்ணீர் வெளியேற்ற ப்பட்டு வருகிறது.
கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரித்து காணப்படு வதால் தமிழக எல்லையான பிலிகுண்டு பகுதிக்கு இன்று காலை வினாடிக்கு 61 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இதன் காரணமாக ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இந்த தண்ணீர் நேரமாக காவிரி ஆற்றில் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
மேட்டூர் அணைக்கு நேற்று வினாடிக்கு 44 ஆயிரத்து 353 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று காலை 53 ஆயிரத்து 98 கனஅடியாக அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 61.31 அடியாக உயர்ந்தது. நேற்று காலை 55 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் கடந்த 24 மணி நேரத்தில் 6 அடி உயர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
- கனமழை காரணமாக முதுமலை புலிகள் காப்பகத்தில் மின்சாரம் மற்றும் தண்ணீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
- தெப்பக்காட்டில் இருந்து சுற்றுலா பயணிகளை அழைத்து செல்லும் வாகன சவாரியும் நிறுத்தப்பட்டுள்ளது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகள் அனைவரும் ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களை பார்த்து விட்டு, முதுமலை புலிகள் காப்பகம் சென்று விட்டு திரும்புவது தான் வழக்கம்.
முதுமலை புலிகள் காப்பகத்தில் தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது. இங்குள்ள வளர்ப்பு யானைகளை பார்க்கவும், வனத்திற்கு நடுவே சவாரி செய்யவும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவார்கள்.
இதனால் இங்கு எப்போதும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட தெப்பக்காடு பகுதியிலும் கடந்த ஒரு வார காலமாக கனமழை கொட்டியது.
கனமழை காரணமாக முதுமலை புலிகள் காப்பகத்தில் மின்சாரம் மற்றும் தண்ணீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக சுற்றுலா பயணிகளின் நலன் கருதி இன்று முதல் வருகிற 22-ந்தேதி வரை 3 நாட்கள் முதுமலை புலிகள் காப்பகத்தின் சுழல் சுற்றுலா மூடப்படுகிறது.
மேலும் தெப்பக்காட்டில் இருந்து சுற்றுலா பயணிகளை அழைத்து செல்லும் வாகன சவாரியும் நிறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து முதுமலை புலிகள் காப்பக வனச்சரக அலுவலர் கூறுகையில், வானிலை ஆய்வு மைய அறிக்கையின்படி நீலகிரி மாவட்டத்தில் பலத்த காற்று மற்றும் கனமழை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தெப்பக்காட்டில் கடந்த ஒரு வாரம் பெய்த மழையால் மின்சாரம், குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் இன்று முதல் 3 நாட்களுக்கு முதுமலை புலிகள் காப்பகம் சுழல் சுற்றுலா மூடப்படுகிறது என்றார்.
- ஜெயலலிதா ஆட்சியில் சென்னையில் 407 அம்மா உணவகங்கள் செயல்பட்ட நிலையில் 19 உணவகங்களை மூடியது ஏன்?
- தமிழகத்தின் அன்னலட்சுமியாக செயல்படும் அம்மா உணவகங்கள் சுமார் 19 உணவகங்களை திமுக அரசு மூடி உள்ளது.
சென்னை:
சென்னை தேனாம்பேட்டை அம்மா உணவகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆய்வு மேற்கொண்டதை சுட்டிக்காட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
* அம்மா உணவகங்களுக்கு மூடுவிழா நடத்த முயற்சித்துவிட்டு தற்போது முதலைக்கண்ணீர் வடிக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
* ஜெயலலிதா ஆட்சியில் சென்னையில் 407 அம்மா உணவகங்கள் செயல்பட்ட நிலையில் 19 உணவகங்களை மூடியது ஏன்?
* தமிழகத்தின் அன்னலட்சுமியாக செயல்படும் அம்மா உணவகங்கள் சுமார் 19 உணவகங்களை திமுக அரசு மூடி உள்ளது.
* வாய்பந்தல் போடாமல் மூடியுள்ள உணவகங்களை திறப்பதுடன் புதிய உணவகங்களையும் திறக்க வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
- வெள்ளி விலையும் குறைந்துள்ளது.
- கிலோவுக்கு ரூ.1,750 குறைந்து பார் வெள்ளி ரூ.96ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சவரன் ரூ.55ஆயிரத்தை தாண்டி விற்பனையானது. அதன்பிறகு சற்று குறைந்து வந்த நிலையில் இன்று சவரன் ரூ.54,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் இன்று கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ.6,835-க்கும் சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.54,680-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 1 ரூபாய் 75 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.96-க்கும் கிலோவுக்கு ரூ.1,750 குறைந்து பார் வெள்ளி ரூ.96ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
- 4 நாட்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல முடியாத நிலையில் ரூ.5 கோடி மதிப்பிலான மீன் ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது.
- மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லாத காரணத்தால் துறைமுக பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம், மன்னார் வளைகுடா மற்றும் வங்கக்கடலில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து சூறை காற்று வீசி வருகிறது. இந்த நிலையில் தற்போது புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பாம்பன் துறைமுகத்தில் 9-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டது.
மேலும் ஆழ்கடலில் 45 முதல் 60 கிலோ மீட்டர் வரை காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும். கடலோர பகுதியில் சூறை காற்று வீசுவதால் துறைமுகங்களில் நிறுத்தப்பட்டு உள்ள படகுகளை பாதுகாப்புடன் நிறுத்தி வைக்க வேண்டும் என மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பல்வேறு துறைமுகங்களில் 1,500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் அந்தந்த துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.
4 நாட்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல முடியாத நிலையில் ரூ.5 கோடி மதிப்பிலான மீன் ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவித்தனர். வானிலை மையம் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் மீன்பிடிக்க செல்லக்கூடாது என மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லாத காரணத்தால் துறைமுக பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் தொடர்ந்து 4 நாட்களாக மீன்பிடிக்க செல்ல முடியாததால் மீனவர்களின் இயல்பான பணி முடங்கியது. புயல் சின்னம் நீங்கி கடலுக்குள் மீன்பிடிக்க செல்வதற்கு எப்போது அறிவிப்பு வெளியாகும்? என ராமேசுவரம் பகுதி மீனவர்கள் ஆவலோடு எதிர்நோக்கி உள்ளனர்.
- சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கவும் பரிசல் பயணம் செய்யவும் விதிக்கப்பட்ட தடையானது தொடர்ந்து இன்று 5-வது நாளாக நீடிக்கிறது.
- காவிரி ஆற்றிற்கு வரும் நீர் வரத்து மேலும் அதிகரிக்கக் கூடும் என்பதால் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
தருமபுரி:
கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்பட்ட நீரால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 61 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
கர்நாடகா, கேரளா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதால் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான குடகு, வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணை தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதையடுத்து கபினி, கிருஷ்ணராஜ சாகர் ஆகிய 2 அணைகளில் இருந்து இன்று நீர் திறப்பு சற்று சரிந்து மொத்தம் 47 ஆயிரம் கனஅடி அளவில் உபரி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து காவிரி ஆற்றில் 40 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், கர்நாடகா-தமிழக எல்லையான பிலிக்குண்டுலு வழியாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது.
இதனைத்தொடர்ந்து தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்து நேற்று வினாடிக்கு 50 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது.
இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து இன்று காலை 6 மணி நிலவரப்படி 61 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் என காவிரி ஆற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. மேலும் மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதை மூழ்கடித்தவாறு தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. கர்நாடகா அணைகளில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. எனவே ஒகேனக்கலுக்கு நாளை காலை நேரத்திற்குள் நீர்வரத்து மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருப்பதால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கவும் பரிசல் பயணம் செய்யவும் விதிக்கப்பட்ட தடையானது தொடர்ந்து இன்று 5-வது நாளாக நீடிக்கிறது.
கர்நாடகா அணைகளில் இருந்து தொடர்ந்து தண்ணீர் திறப்பு அதிகரித்து உள்ளதால், காவிரி ஆற்றிற்கு வரும் நீர் வரத்து மேலும் அதிகரிக்கக் கூடும் என்பதால் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- மின் கட்டண உயர்வை திரும்பபெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
- மாதந்தோறும் மின்கணக்கெடுப்பு நடத்தப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை தி.மு.க. அரசு இன்னும் ஏன் நிறைவேற்றவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.
சென்னை:
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து பா.ம.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமை தாங்கினார்.
மேலும், கவுரவ தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ., வக்கீல் பாலு, சிவக்குமார் எம்.எல்.ஏ., திருக்கச்சூர் ஆறுமுகம் முன்னாள் எம்.எல்.ஏ., சென்னை மாவட்ட இளைஞரணி செயலாளர் வடிவேல் உள்பட பலர் பங்கேற்றார்கள். ஆர்ப்பாட்டத்தில், மின் கட்டண உயர்வை திரும்பபெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் பேசிய பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 3 முறை மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும், மாதந்தோறும் மின்கணக்கெடுப்பு நடத்தப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை தி.மு.க. அரசு இன்னும் ஏன் நிறைவேற்றவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட போராட்டத்தில் கலந்துகொண்டோர் மீது எழும்பூர் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நேற்று நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க.வினர் பலரும் மின்விசிறி, தொலைக்காட்சியை உடைத்ததாக கூறப்படுகிறது.
- அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
- திருச்சி மத்திய சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எம்.ஆர்.விஜயபாஸ்கரை போலீசார் வேனில் கரூருக்கு அழைத்து வந்தனர்.
கரூர்:
ரூ.100 கோடி நிலமோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே அந்த நிலத்தின் உரிமையாளர் பிரகாஷ் கொடுத்த புகாரில் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது தம்பி சேகர், பிரவீன் உள்ளிட்டோர் மீது வாங்கல் போலீசார் கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த கொலை மிரட்டல் வழக்கு தொடர்பாக திருச்சி சிறையில் உள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். நேற்று திருச்சி மத்திய சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எம்.ஆர்.விஜயபாஸ்கரை போலீசார் வேனில் கரூருக்கு அழைத்து வந்தனர்.
பின்னர் கரூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்-2-ல் நீதிபதி (பொறுப்பு) மகேஷ் முன்பு நேற்று காலை 11.50 மணி அளவில் அவரை ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி வருகிற 31-ம் தேதி வரை எம்.ஆர்.விஜயபாஸ்கரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இதனையடுத்து மதியம் 1.15 மணியளவில் கரூர் கோர்ட்டில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவரை திருச்சி மத்திய சிறையில் அடைக்க போலீசார் அழைத்து சென்றனர்.
எம்.ஆர்.விஜயபாஸ்கரை கோர்ட்டில் ஆஜர்படுத்தும் தகவல் தெரிந்தவுடன் ஏராளமான அதிமுகவினர் அங்கு திரண்டனர். இதனையொட்டி கரூர் கோர்ட்டு வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.






