என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • 240 ரூபாய்க்கு பதிலாக 250 ரூபாய் வசூலித்துள்ளார்.
    • இது தொடர்பாக கேள்வி கேட்டும், பதில் கூறாததால் நுகர்வோர் தீர்ப்பாயத்தில் முறையீடு.

    சென்னை செம்பியம் பகுதியை சேர்ந்த தேவராஜன் என்பவர், டாஸ்மாக் கடையில் 240 ரூபாய் மதிப்புள்ள மதுபானத்தை கடந்த மார்ச் மாதம் வாங்கியுள்ளார். கடை விற்பனையாளர் 250 ரூபாய் வசூலித்துள்ளார்.

    பாட்டிலில் 240 ரூபாய்தான் போட்டிருக்கிறது என விற்பனையாளரிடம் முறையிட்டுள்ளார். ஆனால் அவர் எந்தவொரு பதிலையும் கூறவில்லை. இது வாடிக்கையாளருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

    இதனால் தன்னிடம் கூடுதலாக வசூலித்த 10 ரூபாயை திரும்பி வழங்கிட உத்தரவிடக்கோரியும், தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக ஒரு லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிடக்கோரியும் நுகர்வோர் தீர்ப்பாயத்தில் முறையீடு செய்துள்ளார்.

    அந்த கடை விற்பனையாளர் தேவராஜனுக்கு 5 ஆயிரம் ரூபாயை இரண்டு மாதத்தில் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இரண்டு மாதத்திற்குள் வழங்காவிடில் ஆண்டிற்கு 9 சதவீதம் வட்டியுடன் வழங்க உத்தரவிட்டுள்ளது.

    • பூத் கமிட்டியினர் வாக்காளர் விவரங்களை சேகரித்து நிரப்ப தலைமையில் இருந்து படிவமும் செயலியும் வழங்கப்பட்டுள்ளது.
    • ஒவ்வொரு பகுதியிலும் எஸ்ஐஆர் செயல்படுத்தப்படும் விதம் விசாரிக்கப்பட்டு அறிக்கையாக தயாரிக்கப்பட்டு வருகிறது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்ஐஆர்) கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வரும் நிலையில் அதனை தீவிரமாக கண்காணிக்க தி.மு.க.வில் 8 மண்டல பொறுப்பாளர்களுக்கு கட்சித் தலைவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.

    அதன்படி மண்டல பொறுப்பாளர்களான அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சக்கரபாணி, செந்தில்பாலாஜி, துணைப் பொதுச் செயலாளர்கள் ஆ.ராசா, கனிமொழி எம்.பி. இவற்றை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    இதற்காக மாவட்டச் செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்களுக்கு சென்னையிலும், ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகளுக்கு வழக்கறிஞர் குழுவினரால் ஒவ்வொரு தொகுதியிலும் எஸ்ஐஆர் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பூத் கமிட்டி அமைக்கப்பட்டு சரி பார்க்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.

    பூத் கமிட்டியினர் வாக்காளர் விவரங்களை சேகரித்து நிரப்ப தலைமையில் இருந்து படிவமும் செயலியும் வழங்கப்பட்டுள்ளது.

    மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தலைமையில் ஒவ்வொரு மண்டலத்திற்கும் தனித்தனியாக 8 வழக்கறிஞர் குழுவும் நியமிக்கப்பட்டு உள்ளது.

    ஒவ்வொரு பகுதியிலும் எஸ்ஐஆர் செயல்படுத்தப்படும் விதம் விசாரிக்கப்பட்டு அறிக்கையாக தயாரிக்கப்பட்டு வருகிறது.

    ஒரு பக்கம் எஸ்ஐஆருக்கு எதிராக தி.மு.க. சட்டப் போராட்டம் நடத்தினாலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தொடர்ந்து கண்காணித்து அதில் நடைபெறும் தவறுகளை கண்டறிய வேண்டும் என்று முன்னணி நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தர விட்டுள்ளார்.

    • நீண்ட காலமாக தகுதிக்கு ஏற்ற உரிமைகள் மறுக்கப்படுவதாக அவர்கள் போராடி வருகின்றனர்.
    • ஆசிரியர்கள், ஊழியர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றிட பல்கலைக்கழக நிர்வாகமும், தமிழக அரசும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நூற்றாண்டு கால வரலாறு கண்ட அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் பிரச்சினைகளை உடனே தீர்க்க வேண்டியது அவசியம் ஆகும். 7-வது ஊதியக்குழு நிலுவைத் தொகைகளை வழங்குதல், முனைவர் பட்ட ஊக்கத் தொகைகளை வழங்குதல், ஆசிரியர்களுக்கான (சி.ஏ.எஸ்.) பதவி உயர்வுகளை தாமதமின்றி வழங்கல், அயற்பணியிட ஆசிரியர்களை உள்ளெடுப்பு செய்தல் உள்ளிட்ட ஆசிரியர்களின் நீண்டகால கோரிக்கைகளுக்காக அவர்கள் கடந்த 15 ஆண்டுகளாக பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனாலும் அவர்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டு, போராடி பெற்ற சட்டப்படியான உரிமைகளும் கூட ஒவ்வொன்றாக பறிக்கப்படுகிறது. இவைகள் அவர்களது உரிமைக்கு எதிரானது.

    நீண்ட காலமாக தகுதிக்கு ஏற்ற உரிமைகள் மறுக்கப்படுவதாக அவர்கள் போராடி வருகின்றனர். ஆகவே ஆசிரியர்கள், ஊழியர்களின் மேற்கண்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றிட பல்கலைக் கழக நிர்வாகமும், தமிழக அரசும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மர்ம நபர்கள் மூலஸ்தானம், அம்மன் சன்னதிக்கு எதிரே வைக்கப்பட்டிருந்த உண்டியல்களை உடைக்க முயற்சித்தனர்.
    • அறநிலையத்துறை அதிகாரிகள் மூலம் கொள்ளை போன நகைகள், விக்கிரகங்கள், சிலைகள் சரிபார்ப்பு பணியும் தொடங்கியுள்ளது.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தென்காசி செல்லும் சாலையில் அமைந்துள்ளது தேவதானம் கிராமம்.

    இங்கு தென்மாவட்ட பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலமாக போற்றப்படும் தவம்பெற்ற நாயகி சமேத நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவில் உள்ளது. பொதுவாக பஞ்சபூத கோவில்களாக திகழும் காஞ்சிபுரம், காளகஸ்தி, திருவானைக்காவல், சிதம்பரம், திருவண்ணாமலை ஆகியவற்றை ஒரே நாளில் தரிசனம் செய்ய முடியாது.

    ஆனால் தென் மாவட்டங்களில் உள்ள சங்கரன்கோவில், தாருகாபுரம், கரிவலம்வந்தநல்லூர், தென்மலை, தேவதானம் ஆகிய ஊர்களில் உள்ள பஞ்சபூத கோவில்களை ஒரே நாளில் தரிசிக்கலாம் என்பதால் இந்த ஸ்தலங்களுக்கு அதிகளவில் பக்தர்கள் வருகை தருவார்கள். குறிப்பாக மகா சிவராத்திரி தினத்தன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவிலில் வந்து தரிசனம் செய்வார்கள்.

    சேத்தூர் ஜமீன்தார் வம்சத்தினர் பரம்பரையாக கோவிலை நிர்வகித்து வந்த நிலையில் தற்போது இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. ஜமீன்தார் வம்சத்தினர் அறங்காவலர்களாக இருந்து வருகிறார்கள். இக்கோவில் தினமும் காலை 6.30 முதல் 11.30 மணி வரையிலும், மாலை 5 முதல் 7.15 மணி வரையிலும் திறந்திருக்கும்.

    பல நூற்றாண்டுகளை கடந்த இந்த கோவிலில் தற்போது பகல் நேர காவலாளியாக மாடசாமி என்பவரும், இரவு காவலாளிகளாக தேவதானம் பகுதியைச் சேர்ந்த பேச்சிமுத்து (வயது 50), சங்கரபாண்டியன் (65) ஆகியோர் வேலை பார்த்து வந்தனர். மிகப்பெரிய மதில் சுவர்களை கொண்ட கோவிலில் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.

    நேற்று இரவு கோவிலுக்கு வந்த காவலாளிகள் கதவுகளை பூட்டிக்கொண்டு உள்பகுதியில் தங்கள் பணியை தொடர்ந்தனர். இதற்கிடையே நள்ளிரவு சுமார் 12.30 மணியளவில் கோவிலுக்கு முன்பாக இரண்டு கார்கள் வந்து நிற்கும் சத்தம் கேட்டுள்ளது. உடனே காவலாளிகள் இருவரும் கதவை திறக்காமல் அதன் அருகே நின்று கொண்டு சத்தம்போட்டு கேட்டுள்ளனர். ஆனால் வெளியில் இருந்து எந்தவித பதிலும் வரவில்லை.

    இதற்கிடையே அந்த கார்களில் இருந்து இறங்கிய 10-க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் முதலில் கோவிலை சுற்றி பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக்களை கட்டைகளால் அடித்து உடைத்துள்ளனர். பின்னர் தென்பக்கமாக உள்ள தூண்கள் வழியாக ஏறி கோவில் வளாகத்திற்குள் குதித்துள்ளனர். அவர்களை பார்த்து அதிர்ச்சியில் உறைந்த காவலாளிகள் பேச்சிமுத்து, சங்கரபாண்டியன் இருவரும் யார் நீங்கள், வெளியே செல்லுங்கள் என்று கூறியவாறு அருகில் சென்றுள்ளனர்.

    ஆனால் மர்ம நபர்கள் அதனை காதில் வாங்கிக் கொள்ளாமல் மூலஸ்தானம், அம்மன் சன்னதிக்கு எதிரே வைக்கப்பட்டிருந்த உண்டியல்களை உடைக்க முயற்சித்தனர். அதனை காவலாளிகள் இரண்டு பேரும் சேர்ந்து தடுத்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள் பேச்சிமுத்து, சங்கரபாண்டியன் இருவரையும் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் கோவில் என்றும் பாராமல் சரமாரியாக வெட்டி சாய்த்தனர்.

    இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்கள். பின்னர் அவர்களது உடல்களை கொள்ளையர்கள் தரதரவென்று இழுத்து சென்று இரண்டு மூலைகளில் வீசியுள்ளனர். அத்துடன் உண்டியல்களையும் உடைத்து பணத்தை கொள்ளையடித்துள்ளனர். அத்துடன் மூலஸ்தானத்தில் உள்ள நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி, தவம்பெற்ற நாயகி அம்பாள் ஆகியோருக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்க நகைகளும் கொள்ளை போயிருப்பதாக கூறப்படுகிறது.

    அதேபோல் கோவிலில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், வெள்ளி, ஐம்பொன் விக்கிரகங்களும் கொள்ளை போயிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இன்று காலை 6 மணியளவில் பகல் நேர காவலாளியான மாடசாமி பணிக்கு வந்துள்ளார். அப்போது கோவில் கதவுகள் திறந்து கிடந்ததால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, காவலாளிகள் மாடசாமி, சங்கரபாண்டியன் இருவரும் கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து உறைந்து போனார்.

    உடனடியாக அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், ராஜபாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு மற்றும் இன்ஸ்பெக்டர்கள், போலீஸ் படையினர் விரைந்து வந்தனர். அவர்கள் கோவிலுக்குள் கொலையுண்டு கிடந்த காவலாளிகள் 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மோப்ப நாய், தடயவியல், கைரேகை நிபுணர்களை வரவழைத்து விசாரணையை தொடங்கியுள்ளனர். கொலையுண்டவர்களின் ரத்தக்கறை உறைந்திருந்த நிலையில் இச்சம்பவம் நள்ளிரவு 12 மணி முதல் 1 மணிக்குள் நடந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் அறநிலையத்துறை அதிகாரிகள் மூலம் கொள்ளை போன நகைகள், விக்கிரகங்கள், சிலைகள் சரிபார்ப்பு பணியும் தொடங்கியுள்ளது.

    மேலும் கொள்ளையர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்களா? அல்லது வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வரும் போலீசார் அவர்களை பிடிக்க தனிப்படைகளை அமைத்துள்ளனர்.

    பிரசித்தி பெற்ற சிவன் கோவிலில் 2 காவலாளிகளை கொன்று பல கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது.

    • மகர விளக்கு பூஜைக்கு சென்று திரும்பும் பக்தர்கள் வசதிக்காக காக்கி நாடா, கோட்டயம் சிறப்பு ரெயில் உள்பட 3 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.
    • ரெயில்கள் காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக இயக்கப்படும்.

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்கு சென்று திரும்பும் பக்தர்கள் வசதிக்காக, காக்கி நாடா, கோட்டயம் சிறப்பு ரெயில் உள்பட 3 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. இதன்படி காக்கிநாடா டவுனில் இருந்து வருகிற 17 -ந்தேதி மற்றும் டிசம்பர் 1, 8, 15, 22, 29 ஜனவரி 5, 12, 19 ஆகிய தேதிகளில் சிறப்பு ரெயில் இயக்கப்படும்.

    மறுமார்க்கமாக, கோட்டயத்தில் இருந்து வருகிற 18-ந் தேதி மற்றும் டிசம்பர் 2, 9, 16, 23, 30 ஜனவரி 6, 13, 20 ஆகிய தேதிகளில் வாராந்திர சிறப்பு ரெயில் (07110) இயக்கப்படும். இந்த ரெயில்கள் காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக இயக்கப்படும்.

    மகாராஷ்டிரா ஹசூர் சாஹிப் நாந்தேட்-கொல்லம் இடையே ஒரு சிறப்பு ரெயிலும், தெலுங்கானா சார்பள்ளி-கொல்லம் இடையே ஒரு சிறப்பு ரெயிலும் இயக்கப்பட உள்ளன. சிறப்பு ரெயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்குகிறது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சென்னை டி.ஜி.பி அலுவலகத்திற்கு மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
    • ரம்யா கிருஷ்ணன், எஸ்.வி.சேகர் உள்ளிட்டோர் வீட்டிலும் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது.

    சென்னை:

    நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள், பள்ளிகள், விமானங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கு சமூக ஊடகங்கள் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், சென்னை டி.ஜி.பி அலுவலகத்திற்கு மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. அதில் சென்னையில் உள்ள நடிகர் அஜித்குமார் வீட்டிற்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

    மேலும், நடிகை ரம்யா கிருஷ்ணன், நடிகர் எஸ்.வி.சேகர் உள்ளிட்டோர் வீட்டிலும் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டிருந்தது.

    அதன்பேரில் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் சம்பந்தப்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர். சோதனை முடிவில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 2000-க்கு முன் 10 முறையும், 2000-க்குப் பின் 3 முறை SIR நடைபெற்று இருக்கிறது.
    • SIR நடவடிக்கைக்கு எதிராக கொடி பிடித்து போராடி மக்களை ஏமாற்றப் பார்க்கிறது தி.மு.க. அரசு.

    கோவையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * இதற்கு முன்பு SIR நடைபெறவில்லையா?

    * 2000-க்கு முன் 10 முறையும், 2000-க்குப் பின் 3 முறை SIR நடைபெற்று இருக்கிறது.

    * ஏதோ பா.ஜ.க.வே பூதத்தைக்கொண்டு வந்தது போல கொடி பிடித்து போராட்டம் செய்வது ஏன்?

    * வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் ஒரு சூழ்ச்சி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகிறார்.

    * SIR என்றால் என்னவென்றே துணை முதலமைச்சர் உதயநிதிக்கு தெரியவில்லை. வாக்காளர் பட்டியல் ரிவிஷனை ரெஸ்டிரிக்ஷன் என்று கூறுகிறார்.

    * SIR நடவடிக்கைக்கு எதிராக கொடி பிடித்து போராடி மக்களை ஏமாற்றப் பார்க்கிறது தி.மு.க. அரசு.

    * ஒரு இடத்தில் கூட வருமான வரித்துறை பதிவு செய்த வழக்குகள் பொய்யாகவில்லை.

    * கொளத்தூர் தொகுதியில் 4379 போலி வாக்காளர்கள் உள்ளனர். இதுபோன்ற போலி வாக்காளர்களை நீக்கவே SIR பணி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தெற்கு கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக

    இன்று தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    நாளை தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள், இராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    13-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில

    பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:

    இன்று குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 

    • எதிர்க்கட்சிகள் கூறுவது போல இது எந்தவித ஆபத்தையோ, பாதிப்பையோ ஏற்படுத்தக் கூடியது அல்ல.
    • விண்ணப்பம் மிகமிக எளிமையான வகையில் உள்ளது.

    குத்தாலம்:

    பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மயிலாடுதுறை அருகே வழுவூருக்கு முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் என்பது ஒன்றும் புதிது அல்ல. புதிதாக ஏதோ ஒன்றை தேர்தல் ஆணையம் திணிப்பதாக கருத வேண்டாம். ஏற்கனவே இது நடைபெற்றுள்ளது. தற்போது மீண்டும் நடைபெறுகிறது. எதிர்க்கட்சிகள் கூறுவது போல இது எந்தவித ஆபத்தையோ, பாதிப்பையோ ஏற்படுத்தக் கூடியது அல்ல. இது நல்ல முறை. வரவேற்கத்தக்கது, ஏற்றுக்கொள்ளத்தக்கது.

    இதற்கான கால அவகாசம் குறைவாக உள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுவது ஏற்கத்தக்கது அல்ல.

    வாக்களர் பட்டியல் திருத்தத்துக்கான படிவத்தை பூர்த்தி செய்வதில் கிராமப் பகுதி மக்களுக்கு கடினமாக இருக்கும் என அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறியுள்ளது குறித்து கேட்டதற்கு, இதிலிருந்தே அவர் எதை நோக்கி பயணிக்கிறார் என்பதை எல்லோரும் புரிந்துகொள்ள முடியும்.

    விண்ணப்பம் மிகமிக எளிமையான வகையில் உள்ளது. சந்தேகங்களை நிவர்த்தி செய்வதற்கு ஏதுவாக அதில் வாக்குச்சாவடி அலுவலரின் எண்ணும் குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பம் கடினமாக உள்ளது என்று சொல்வது வினோதமாக உள்ளது.

    அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு ஒன்றிணைய வாய்ப்புள்ளதா என்று கேட்டதற்கு, பிரிந்து சென்றவர்கள் முதலில் மன்னிப்பு கேட்டு வரட்டும். பொதுச்செயலாளரிடம் நாங்களும் பேசுகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த மாதம் 28-ந்தேதி நடிகர் ஸ்ரீகாந்துக்கும் 29-ந்தேதி நடிகர் கிருஷ்ணாவுக்கும் அமலாக்கத்துறை நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பினர்.
    • ஸ்ரீகாந்த் வங்கி கணக்கு விபரங்களுடன் நேரில் ஆஜராக வேண்டும் என்று 2-வது முறையாக சம்மன் அனுப்பி இருந்தனர்.

    சென்னை:

    போதை பொருட்களை பயன்படுத்தியது தொடர்பான வழக்கில் நுங்கம்பாக்கம் லேக் வியூ பகுதியை சேர்ந்த நடிகர் ஸ்ரீகாந்தை கடந்த ஜூன் 23-ந்தேதி சென்னை போதை பொருள் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.

    அவரது வீட்டில் இருந்து போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல் போதை பொருள் பயன்படுத்தியதாக மற்றொரு நடிகரான கிருஷ்ணாவையும் போலீசார் கைது செய்தனர்.

    நடிகர் ஸ்ரீகாந்த் அடிக்கடி கானா நாட்டை சேர்ந்த ஜான் என்பவரிடம் அதிகளவில் பணம் கொடுத்து போதை பொருள் வாங்கி பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. இதனால் சட்டவிரோத பணம் அதிகளவில் பரிமாற்றம் செய்து இருந்ததும் போலீசார் நடத்திய விசாரணை மூலம் உறுதியானது. அதைதொடர்ந்து சட்டவிரோத பணப்பரிமாற்றம் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முதற்கட்டமாக கடந்த மாதம் 28-ந்தேதி நடிகர் ஸ்ரீகாந்துக்கும் 29-ந்தேதி நடிகர் கிருஷ்ணாவுக்கும் அமலாக்கத்துறை நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பினர்.

    அந்த சம்மனை ஏற்று கிருஷ்ணா அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். அதிகாரி முன்பு நேரில் ஆஜரானார்.

    இதற்கிடையே கடந்த 28-ந்தேதி உடல் நிலையை கருத்தில் கொண்டு நேரில் ஆஜராக முடியவில்லை என்று நடிகர் ஸ்ரீகாந்த் தனது வழக்கறிஞர்கள் மூலம் அமலாக்கத்துறைக்கு தெரிவித்திருந்தார். ஆனால் அமலாக்கத்துறை அதிகாரிகள் வரும் 11-ந்தேதி நடிகர் ஸ்ரீகாந்த் சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக விசாரணைக்கு வங்கி கணக்கு விபரங்களுடன் நேரில் ஆஜராக வேண்டும் என்று 2-வது முறையாக சம்மன் அனுப்பி இருந்தனர்.

    இந்த சம்மனை தொடர்ந்து நடிகர் ஸ்ரீகாந்த் இன்று காலை 10 மணிக்கு அமலாக்கத்துறை விசாரணைக்காக நேரில் ஆஜர் ஆனார்.

    அவரிடம் எந்தந்த நடிகைகளுக்கு போதை பொருள் விற்பனை செய்யப்பட்டது. அதன் மூலம் கிடைத்த பணம் எவ்வளவு என்பது குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் பல்வேறு கேள்விகளைக் கேட்டு விசரணை நடத்தி வருகின்றனர்.

    • இந்தியாவிலேயே SIR-ஐ ஆதரித்து வழக்கு தாக்கல் செய்த ஒரே கட்சி அ.தி.மு.க.தான்.
    • இ.பி.எஸ். தனது கட்சியை அடமானம் வைத்தது மட்டுமின்றி, தமிழர்களின் வாக்குரிமையைப் பறித்து தமிழ்நாட்டை டெல்லியின் அடிமையாக்க முயல்கிறார்.

    இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    சரியான வாக்காளர் பட்டியலுடன் முறைகேடுகள் இல்லாத தேர்தலை நடத்தவும், அதற்காக வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்பதிலும் தி.மு.க.வுக்கு எப்போதுமே மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்குச் சில மாதங்களே உள்ள நிலையில், போதுமான கால அவகாசம் தராமல், அவசர அவசரமாக SIR பணியைத் தேர்தல் ஆணையம் மேற்கொள்வதில் உள்நோக்கம் இருக்கிறது என்பதாலேயே தி.மு.க. எதிர்க்கிறது.

    பா.ஜ.க.வுக்கு எதிரான வாக்காளர்களை நீக்கம் செய்யும் சதியைத் தடுக்கவும், தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பாதுகாக்கவும், SIR-க்கு எதிராக அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டங்களைக் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து நடத்தியிருக்கிறது தி.மு.க. அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தி, ஜனநாயகத்தின் அடிப்படையான வாக்குரிமையைப் பறிக்கும் SIR -ஐ எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க. வழக்கு தொடர்ந்துள்ளது.

    ஆரியம், திராவிடம் பற்றிக் கேட்டால், "அதற்கெல்லாம் புராணம் படிக்க வேண்டும். ஆய்வு செய்ய வேண்டும்" எனச் சொன்ன பழனிசாமிக்கு, ஜனநாயகம் பற்றி மட்டும் தெரிந்துவிடுமா? ஜனநாயகத்தின் மீது கொஞ்சமும் அக்கறை இல்லாத அ.தி.மு.க., தமிழர்களின் வாக்குரிமையைப் பற்றியா கவலைப்படும்? தமிழர்களின் வாக்குரிமை காப்பாற்றப்பட வேண்டும் எனத் தெருவில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்துவது தொடங்கி, உச்ச நீதிமன்றத்தின் கதவைத் தட்டுவது வரை திமுக போராடிக் கொண்டிருக்கிறது. ஆனால், அ.தி.மு.க.வோ SIR-ஐ ஆதரித்து வழக்கு தொடருந்திருக்கிறது.

    'உங்க ஓட்டு உங்களுக்கு இல்லை' எனச் சொல்லி வாக்குரிமையைப் பறிப்பதற்குத் துணை போகும் சதியில் எடப்பாடி பழனிசாமியும் ஒரு பார்ட்னர். பா.ஜ.க. கூட SIR-ஐ ஆதரித்து வழக்கு போடாத நிலையில், பா.ஜ.க.வின் கிளைக் கழகமாகவே செயல்படும் அ.தி.மு.க.வும் அதன் 'சிறந்த அடிமை'யான பழனிசாமியும் நீதிமன்றம் வரை சென்றிருக்கிறார்கள். ''இந்தியாவிலேயே கார் வைத்திருக்கும் கரகாட்டக் கோஷ்டி நாம்தான்'' என்ற காமெடி போல, இந்தியாவிலேயே SIR-ஐ ஆதரித்து வழக்கு தாக்கல் செய்த ஒரே கட்சி அ.தி.மு.க.தான் என்ற வரலாற்றை எழுதிக் கொண்டிருக்கிறார் பழனிசாமி.

    தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற உண்மை தெரிந்துவிட்டதால், SIR மூலம் வெற்றி பெற்றுவிடலாம் என பா.ஜ.க.வை நம்பி, சித்து விளையாட்டில் இறங்கியிருக்கிறார் துரோகம் செய்வதில் முனைவர் பட்டம் பெற்ற பழனிசாமி. கூவத்தூரில் 'ஊர்ந்தெடுக்கப்பட்டு' முதல்வர் ஆனது போல, SIR மூலம் கொள்ளைப்புற முதலமைச்சராகத் துடிக்கிறார். பா.ஜ.க.வின் வாக்கு திருட்டு வியூகம் அ.தி.மு.க.வுக்குப் பயன்படும் என்ற நப்பாசையில் SIR-ஐ ஆதரிக்கிறார் பழனிசாமி.

    முஸ்லிம்களைப் பாதிக்கும் வகையில் மோடி அரசு கொண்டு வந்த CAA சட்டத்தை ஆதரித்துவிட்டு, ''முஸ்லிம்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை" எனப் பச்சைப் பொய் சொன்ன பழனிசாமிதான், அந்த CAA சட்டத்தை SIR வழியாக அமல்படுத்தத் துடிக்கும் பா.ஜ.க.வுக்குத் துணை போகிறார். SIR நடவடிக்கையால் தமிழர்களின் வாக்குரிமைக்கு மட்டுமல்ல; அவர்களின் குடியுரிமைக்கே ஆபத்து ஏற்படலாம் என்கிற பேராபத்து சூழ்ந்திருக்கிறது.

    வேளாண் சட்டம், உதய் மின் திட்டம், மதுரை அரிட்டாப்பட்டி டங்ஸ்டன் சுரங்கப் பிரச்சினைக்கு காரணமான MINES AND MINERALS திருத்தச் சட்டம், குடியுரிமை திருத்த சட்டம் உள்ளிட்ட பா.ஜ.க. ஒன்றிய அரசு கொண்டு வந்த சட்டங்களையும் திட்டங்களைக் கண்களை மூடி ஆதரித்து, சிறந்த அடிமையாக விளங்கி வரும் எடப்பாடி பழனிசாமி, தற்போது SIR-லும் 'ஆலம்பனா நான் உங்கள் அடிமை' என முன்னுக்கு வந்து நிற்கிறார்.

    பீகாரில் SIR பணி நடைபெற்ற போது, பா.ஜ.க.வின் கூட்டணியில் இடம் பெற்ற ஐக்கிய ஜனதா தளம் வழக்கு தாக்கல் செய்யவில்லை. பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெற்ற ஆந்திர மாநிலத்தின் தெலுங்கு தேசம் கட்சி SIR நடவடிக்கையை ஆதரித்து வழக்கு போடவில்லை. மாறாக, இஸ்லாமியர்களின் குடியுரிமையைச் சோதிக்கும் வகையில் SIR நடவடிக்கையைத் தேர்தல் ஆணையம் பயன்படுத்தக் கூடாது என்று கவலை தெரிவித்துள்ளது. ஆனால், 'அடிமை சேவை செய்வதே என் தவ வாழ்க்கை' என வாழ்ந்து கொண்டிருக்கும் பழனிசாமி, SIR-ஐ ஆதரித்தோடு வழக்கு போட்டு ராஜ விஸ்வாசத்தைக் காட்டுவது வெட்கக்கேடு.

    மக்களைப் பற்றியும் மக்கள் நலனைப் பற்றியும் துளியும் கவலையில்லாமல் டெல்லி எஜமானர்களின் மனம் குளிர மட்டுமே அடிமை சேவகம் செய்து வரும் பழனிசாமி தனது கட்சியை அடமானம் வைத்தது மட்டுமின்றி, தமிழர்களின் வாக்குரிமையைப் பறித்து தமிழ்நாட்டை டெல்லியின் அடிமையாக்க முயல்கிறார். இந்த அற்ப செயலுக்குத் தமிழ்நாட்டு மக்கள் தக்க பதிலடி அளிப்பார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • SIR எனும் பேராபத்துக்கு எதிராகக் கூடியுள்ள மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினர்!
    • தொடர்ந்து செயலாற்றுவோம்!

    சென்னை:

    தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் தி.மு.க. கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில், #SIR-ஐத் தடுப்பதே நம்முன் இப்போதுள்ள ஆகப்பெரும் கடமை! என்ற தலைப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    ஒருபுறம், மக்களாட்சியின் அடிப்படையான வாக்குரிமையையே பறிக்கும் SIR எனும் ஆபத்துக்கு எதிராகச் சட்டப் போராட்டம் - களப் போராட்டம் -

    மறுபுறம், தொடங்கப்பட்டுவிட்ட SIR பணிகளில் குளறுபடிகளைத் தடுத்திட #WarRoom #Helpline -

    களப் போராட்டத்தில், இன்று தமிழ்நாடெங்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பதாகைகளை ஏந்தியும் - கண்டன முழக்கங்களை எழுப்பியும் SIR எனும் பேராபத்துக்கு எதிராகக் கூடியுள்ள மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினர்!

    தொடர்ந்து செயலாற்றுவோம்! நம் மக்களின் வாக்குரிமையைப் பாதுகாப்போம்! என்று கூறியுள்ளார். 



    ×