என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கோவில் காவலாளிகள் 2 பேரை கொன்று நகைகள் கொள்ளை - 10 பேர் கும்பல் வெறிச்செயல்
    X

    கோவில் காவலாளிகள் 2 பேரை கொன்று நகைகள் கொள்ளை - 10 பேர் கும்பல் வெறிச்செயல்

    • மர்ம நபர்கள் மூலஸ்தானம், அம்மன் சன்னதிக்கு எதிரே வைக்கப்பட்டிருந்த உண்டியல்களை உடைக்க முயற்சித்தனர்.
    • அறநிலையத்துறை அதிகாரிகள் மூலம் கொள்ளை போன நகைகள், விக்கிரகங்கள், சிலைகள் சரிபார்ப்பு பணியும் தொடங்கியுள்ளது.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தென்காசி செல்லும் சாலையில் அமைந்துள்ளது தேவதானம் கிராமம்.

    இங்கு தென்மாவட்ட பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலமாக போற்றப்படும் தவம்பெற்ற நாயகி சமேத நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவில் உள்ளது. பொதுவாக பஞ்சபூத கோவில்களாக திகழும் காஞ்சிபுரம், காளகஸ்தி, திருவானைக்காவல், சிதம்பரம், திருவண்ணாமலை ஆகியவற்றை ஒரே நாளில் தரிசனம் செய்ய முடியாது.

    ஆனால் தென் மாவட்டங்களில் உள்ள சங்கரன்கோவில், தாருகாபுரம், கரிவலம்வந்தநல்லூர், தென்மலை, தேவதானம் ஆகிய ஊர்களில் உள்ள பஞ்சபூத கோவில்களை ஒரே நாளில் தரிசிக்கலாம் என்பதால் இந்த ஸ்தலங்களுக்கு அதிகளவில் பக்தர்கள் வருகை தருவார்கள். குறிப்பாக மகா சிவராத்திரி தினத்தன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவிலில் வந்து தரிசனம் செய்வார்கள்.

    சேத்தூர் ஜமீன்தார் வம்சத்தினர் பரம்பரையாக கோவிலை நிர்வகித்து வந்த நிலையில் தற்போது இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. ஜமீன்தார் வம்சத்தினர் அறங்காவலர்களாக இருந்து வருகிறார்கள். இக்கோவில் தினமும் காலை 6.30 முதல் 11.30 மணி வரையிலும், மாலை 5 முதல் 7.15 மணி வரையிலும் திறந்திருக்கும்.

    பல நூற்றாண்டுகளை கடந்த இந்த கோவிலில் தற்போது பகல் நேர காவலாளியாக மாடசாமி என்பவரும், இரவு காவலாளிகளாக தேவதானம் பகுதியைச் சேர்ந்த பேச்சிமுத்து (வயது 50), சங்கரபாண்டியன் (65) ஆகியோர் வேலை பார்த்து வந்தனர். மிகப்பெரிய மதில் சுவர்களை கொண்ட கோவிலில் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.

    நேற்று இரவு கோவிலுக்கு வந்த காவலாளிகள் கதவுகளை பூட்டிக்கொண்டு உள்பகுதியில் தங்கள் பணியை தொடர்ந்தனர். இதற்கிடையே நள்ளிரவு சுமார் 12.30 மணியளவில் கோவிலுக்கு முன்பாக இரண்டு கார்கள் வந்து நிற்கும் சத்தம் கேட்டுள்ளது. உடனே காவலாளிகள் இருவரும் கதவை திறக்காமல் அதன் அருகே நின்று கொண்டு சத்தம்போட்டு கேட்டுள்ளனர். ஆனால் வெளியில் இருந்து எந்தவித பதிலும் வரவில்லை.

    இதற்கிடையே அந்த கார்களில் இருந்து இறங்கிய 10-க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் முதலில் கோவிலை சுற்றி பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக்களை கட்டைகளால் அடித்து உடைத்துள்ளனர். பின்னர் தென்பக்கமாக உள்ள தூண்கள் வழியாக ஏறி கோவில் வளாகத்திற்குள் குதித்துள்ளனர். அவர்களை பார்த்து அதிர்ச்சியில் உறைந்த காவலாளிகள் பேச்சிமுத்து, சங்கரபாண்டியன் இருவரும் யார் நீங்கள், வெளியே செல்லுங்கள் என்று கூறியவாறு அருகில் சென்றுள்ளனர்.

    ஆனால் மர்ம நபர்கள் அதனை காதில் வாங்கிக் கொள்ளாமல் மூலஸ்தானம், அம்மன் சன்னதிக்கு எதிரே வைக்கப்பட்டிருந்த உண்டியல்களை உடைக்க முயற்சித்தனர். அதனை காவலாளிகள் இரண்டு பேரும் சேர்ந்து தடுத்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள் பேச்சிமுத்து, சங்கரபாண்டியன் இருவரையும் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் கோவில் என்றும் பாராமல் சரமாரியாக வெட்டி சாய்த்தனர்.

    இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்கள். பின்னர் அவர்களது உடல்களை கொள்ளையர்கள் தரதரவென்று இழுத்து சென்று இரண்டு மூலைகளில் வீசியுள்ளனர். அத்துடன் உண்டியல்களையும் உடைத்து பணத்தை கொள்ளையடித்துள்ளனர். அத்துடன் மூலஸ்தானத்தில் உள்ள நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி, தவம்பெற்ற நாயகி அம்பாள் ஆகியோருக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்க நகைகளும் கொள்ளை போயிருப்பதாக கூறப்படுகிறது.

    அதேபோல் கோவிலில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், வெள்ளி, ஐம்பொன் விக்கிரகங்களும் கொள்ளை போயிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இன்று காலை 6 மணியளவில் பகல் நேர காவலாளியான மாடசாமி பணிக்கு வந்துள்ளார். அப்போது கோவில் கதவுகள் திறந்து கிடந்ததால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, காவலாளிகள் மாடசாமி, சங்கரபாண்டியன் இருவரும் கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து உறைந்து போனார்.

    உடனடியாக அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், ராஜபாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு மற்றும் இன்ஸ்பெக்டர்கள், போலீஸ் படையினர் விரைந்து வந்தனர். அவர்கள் கோவிலுக்குள் கொலையுண்டு கிடந்த காவலாளிகள் 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மோப்ப நாய், தடயவியல், கைரேகை நிபுணர்களை வரவழைத்து விசாரணையை தொடங்கியுள்ளனர். கொலையுண்டவர்களின் ரத்தக்கறை உறைந்திருந்த நிலையில் இச்சம்பவம் நள்ளிரவு 12 மணி முதல் 1 மணிக்குள் நடந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் அறநிலையத்துறை அதிகாரிகள் மூலம் கொள்ளை போன நகைகள், விக்கிரகங்கள், சிலைகள் சரிபார்ப்பு பணியும் தொடங்கியுள்ளது.

    மேலும் கொள்ளையர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்களா? அல்லது வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வரும் போலீசார் அவர்களை பிடிக்க தனிப்படைகளை அமைத்துள்ளனர்.

    பிரசித்தி பெற்ற சிவன் கோவிலில் 2 காவலாளிகளை கொன்று பல கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது.

    Next Story
    ×