என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

போதைப்பொருள் வழக்கு- அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் ஆஜர்
- கடந்த மாதம் 28-ந்தேதி நடிகர் ஸ்ரீகாந்துக்கும் 29-ந்தேதி நடிகர் கிருஷ்ணாவுக்கும் அமலாக்கத்துறை நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பினர்.
- ஸ்ரீகாந்த் வங்கி கணக்கு விபரங்களுடன் நேரில் ஆஜராக வேண்டும் என்று 2-வது முறையாக சம்மன் அனுப்பி இருந்தனர்.
சென்னை:
போதை பொருட்களை பயன்படுத்தியது தொடர்பான வழக்கில் நுங்கம்பாக்கம் லேக் வியூ பகுதியை சேர்ந்த நடிகர் ஸ்ரீகாந்தை கடந்த ஜூன் 23-ந்தேதி சென்னை போதை பொருள் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.
அவரது வீட்டில் இருந்து போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல் போதை பொருள் பயன்படுத்தியதாக மற்றொரு நடிகரான கிருஷ்ணாவையும் போலீசார் கைது செய்தனர்.
நடிகர் ஸ்ரீகாந்த் அடிக்கடி கானா நாட்டை சேர்ந்த ஜான் என்பவரிடம் அதிகளவில் பணம் கொடுத்து போதை பொருள் வாங்கி பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. இதனால் சட்டவிரோத பணம் அதிகளவில் பரிமாற்றம் செய்து இருந்ததும் போலீசார் நடத்திய விசாரணை மூலம் உறுதியானது. அதைதொடர்ந்து சட்டவிரோத பணப்பரிமாற்றம் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்டமாக கடந்த மாதம் 28-ந்தேதி நடிகர் ஸ்ரீகாந்துக்கும் 29-ந்தேதி நடிகர் கிருஷ்ணாவுக்கும் அமலாக்கத்துறை நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பினர்.
அந்த சம்மனை ஏற்று கிருஷ்ணா அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். அதிகாரி முன்பு நேரில் ஆஜரானார்.
இதற்கிடையே கடந்த 28-ந்தேதி உடல் நிலையை கருத்தில் கொண்டு நேரில் ஆஜராக முடியவில்லை என்று நடிகர் ஸ்ரீகாந்த் தனது வழக்கறிஞர்கள் மூலம் அமலாக்கத்துறைக்கு தெரிவித்திருந்தார். ஆனால் அமலாக்கத்துறை அதிகாரிகள் வரும் 11-ந்தேதி நடிகர் ஸ்ரீகாந்த் சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக விசாரணைக்கு வங்கி கணக்கு விபரங்களுடன் நேரில் ஆஜராக வேண்டும் என்று 2-வது முறையாக சம்மன் அனுப்பி இருந்தனர்.
இந்த சம்மனை தொடர்ந்து நடிகர் ஸ்ரீகாந்த் இன்று காலை 10 மணிக்கு அமலாக்கத்துறை விசாரணைக்காக நேரில் ஆஜர் ஆனார்.
அவரிடம் எந்தந்த நடிகைகளுக்கு போதை பொருள் விற்பனை செய்யப்பட்டது. அதன் மூலம் கிடைத்த பணம் எவ்வளவு என்பது குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் பல்வேறு கேள்விகளைக் கேட்டு விசரணை நடத்தி வருகின்றனர்.






