என் மலர்
உள்ளூர் செய்திகள்
- பள்ளிகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
- பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விட்டுவிட்டு சாரல் மழை பெய்து வந்தது. நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் மழை வெளுத்து வாங்கியது.
இந்த நிலையில் நேற்று காலை முதலே வானம் மப்பும் மந்தாரமாகவே காணப்பட்டது. இந்த நிலையில் மாலை 6 மணிக்கு மழை பெய்ய தொடங்கியது.
மாவட்டம் முழுவதும் இரவு விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. கனமழை கொட்டி தீர்த்ததையடுத்து பள்ளிகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை கலெக்டர் அழகுமீனா வெளியிட்டார். தொடர் மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மலையோர கிராமங்களில் பொதுமக்கள் பரிதவிப்பிற்கு ஆளாகியுள்ளனர். மோதிரமலை, கல்லாறு, கிழவி ஆறு, குற்றியாறு பகுதிகளில் நேற்று இரவு மழை கொட்டி தீர்த்தது. இன்று காலையில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மலையோர கிராமங்களில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மலையோர கிராம மக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர்.

நாகர்கோவிலிலும் நேற்று இரவு பொய்ய தொடங்கிய மழை இன்று காலை வரை நீடித்தது. காலையிலும் மழை பெய்து கொண்டே இருக்கிறது. இதனால் அசம்புரோடு, கோட்டார் சாலை, மீனாட்சிபுரம் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் பரிதவிப்பிற்கு ஆளாகி உள்ளனர். கனமழையின் காரணமாக நாகர்கோவில் நகரில் உள்ள அனைத்து சாலைகளும் பொதுமக்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
தக்கலை, கோழிப்போர்விளை, குருந்தன்கோடு, இரணியல், குளச்சல், மயிலாடி பகுதிகளில் நேற்று இரவு மிக கனமழை பெய்துள்ளது. கோழிப்போர்விளையில் அதிகபட்சமாக 110.6 மில்லி மீட்டர் மழை கொட்டித்தீர்த்தது. கொட்டாரம், பூதப்பாண்டி, இரணியல், களியல், குழித்துறை, முள்ளங்கினாவிளை பகுதிகளிலும் மழை பெய்தது.
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப்பகுதியிலும் மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் கொட்டித்தீர்த்து வரும் மழையின் காரணமாக அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணைகளில் நீர்மட்டத்தை 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.
அணைக்கு கூடுதல் தண்ணீர் வந்ததால் உபரிநீர் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆற்றின் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். திற்பரப்பு அருவி பகுதியிலும் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அங்கு ரம்மியமான சூழல் ஏற்பட்டுள்ளதையடுத்து அருவியில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியலிட்டு வருகிறார்கள். வேர்கிளம்பி, குலசேகரம், கருங்கல் பகுதியில் கனமழை பெய்ததால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
கோதை ஆறு, குழித்துறை ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. குழித்துறை தடுப்பணையை மூழ்கடித்து தண்ணீர் செல்வதால் இருசக்கர வாகன ஓட்டிகள் அந்த வழியாக செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. கன்னியாகுமரியிலும் நேற்று இரவு முதலே மழை பெய்து வருகிறது. இன்று காலையில் மழை கொட்டி தீர்த்தது. இதனால் கடற்கரை பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. சுற்றுலா பயணிகள் லாட்ஜிலேயே முடங்கி கிடந்தனர்.
பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 42.51 அடியாக உள்ளது. அணைக்கு 623 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 455 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 64.66 அடியாக உள்ளது. அணைக்கு 685 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 310 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- பேச்சிபாறை 28.8, பெருஞ்சாணி 55.6, சிற்றாறு 1-23.2, சிற்றாறு 2-24.6, கொட்டாரம் 16.2, மைலாடி 65.2, நாகர்கோவில் 52, கன்னிமார் 19.6, ஆரல்வாய்மொழி 15, பூதப்பாண்டி 62.6, முக்கடல் 30.5, பாலமோர் 59.2, தக்கலை 16.4, குளச்சல் 76, இரணியல் 98.6, அடையாமடை 62.2, குருந்தன்கோடு 72.6, கோழிப்போர்விளை 110.6, மாம்பழத்துறையாறு 59.6, ஆணை கிடங்கு 59.2, களியல் 32.6, குழித்துறை 28.2, புத்தன் அணை 54.2, சுருளோடு 51.4, திற்பரப்பு 39.2, முள்ளங்கினாவிளை 48.4.
- வெள்ளி விலை அதிரடியாக குறைந்துள்ளது.
- பார் வெள்ளி ஒரு லட்சத்து ஏழாயிரம் ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
சென்னை:
தங்கம் விலை தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு வருகிறது. கடந்த மாதம் (செப்டம்பர்) 1-ந் தேதி ஒரு கிராம் தங்கம் விலை ரூ.6,695-க்கும், ஒரு பவுன் ரூ.53 ஆயிரத்து 560-க்கும் விற்பனையானது. அதே மாதம் 24-ந் தேதி ஒரு கிராம் தங்கம் 7 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு பவுன் ரூ.56 ஆயிரத்தை தொட்டது. அதன்பிறகு, தங்கத்தின் விலை தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு வருகிறது. தங்கம் விலையின் புதிய உச்சமாக கடந்த 19-ந் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.7 ஆயிரத்து 280-க்கு விற்பனையானது. ஒரு பவுன் ரூ.58 ஆயிரத்து 240 என்ற புதிய உச்சத்தை அடைந்தது.
இந்த நிலையில், நேற்று தங்கம் சவரனுக்கு ரூ.440 குறைந்த நிலையில் இன்று சற்று அதிகரித்துள்ளது. கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.7,295-க்கும் சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.58,360-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை அதிரடியாக குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 3 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.107-க்கும் கிலோவுக்கு மூவாயிரம் குறைந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து ஏழாயிரம் ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
24-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,280
23-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,720
22-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,400
21-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,400
20-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,௨௪௦
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
24-10-2024- ஒரு கிராம் ரூ. 110
23-10-2024- ஒரு கிராம் ரூ. 112
22-10-2024- ஒரு கிராம் ரூ. 112
21-10-2024- ஒரு கிராம் ரூ. 110
20-10-2024- ஒரு கிராம் ரூ. 109
- ‘டேட்டிங்’ அழகியின் தேன் குரலில் அவரும் மயங்கினார்.
- அழகி சென்றவுடன், சுயநினைவுக்கு வந்த இளைஞர், வீட்டில் உள்ள பொருட்களை சரிபார்த்தார்.
சென்னை:
சென்னை மேற்கு மாம்பலம் பகுதியை சேர்ந்த திருமணம் ஆகாத 30 வயதுடைய என்ஜினீயர் ஒருவர், 'ஆன்லைன்' செயலிகளில் மூழ்கி இருந்தார்.
அப்போது அழகிகள் படங்களுடன் 'டேட்டிங்' செயலிகள் அவரை ஈர்த்தன. அவர் ஒரு செயலியை தனது செல்போனில் பதிவிறக்கம் செய்தார். அதில் ஒரு அழகியின் அறிமுகம் அவருக்கு கிடைத்தது. அந்த அழகி தனது கவர்ந்து இழுக்கும் காந்த குரலால், என்ஜினீயர் இளைஞரை கட்டிப் போட்டுவிட்டார்.
'டேட்டிங்' அழகியின் தேன் குரலில் அவரும் மயங்கினார். இதனால் அழகியின் நினைவில் இளைஞர் மூழ்கிப்போனார். அழகியை நேரில் சந்திக்க ஆசைப்பட்ட அவர், கடந்த 22-ந்தேதி அன்று 'டேட்டிங்' அழகியை தனது இல்லத்துக்கு வரவழைத்தார்.
அழைப்பை ஏற்று வந்த அழகியும் அவருக்கு உல்லாச விருந்து படைத்தார். உல்லாசத்தில் சொக்கிப்போன அந்த இளைஞர், அழகிக்கு தனது வீட்டை சுற்றி காட்டினார்.
அழகி சென்றவுடன், சுயநினைவுக்கு வந்த இளைஞர், வீட்டில் உள்ள பொருட்களை சரிபார்த்தார். பீரோவை திறந்து பார்த்தபோது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அவர் பீரோவில் வைத்திருந்த ரூ.2½ லட்சம் மதிப்பிலான 5 பவுன் தங்க நாணயங்கள் மாயமாகி இருந்தன. தன்னை சபல வலையில் வீழ்த்தி டேட்டிங் அழகி கைவரிசை காட்டி இருப்பதை அவர் உணர்ந்தார்.
இளைஞருக்கு பதற்றம் ஏற்பட்டது. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து வெட்கப்பட்டார்.
நகை முக்கியமா? மானம் முக்கியமா? என்று அவரது மனதில் கேள்விகள் எழுந்தன. நகைத்தான் முக்கியம் என்ற முடிவுக்கு வந்தார். எனவே நடந்த சம்பவங்களை மனுவாக எழுதி அசோக் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த அழகியின் புகைப்படம், செல்போன் எண் போன்ற விவரங்களையும் போலீசாரிடம் தெரிவித்தார்.
சபல வலையில் வீழ்ந்த என்ஜினீயருக்கு உல்லாச விருந்து படைத்து நகையை அபேஸ் செய்த 'டேட்டிங்' அழகியை கைது செய்வதற்கான நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
அந்த அழகி விரைவில் கைதாவார் என்று தெரிகிறது. அப்போதுதான் அந்த அழகியிடம் எத்தனை பேர் பணத்தை இழந்துள்ளார்கள்? என்ற விவரம் வெளிச்சத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- கடந்த ஆண்டு கந்த சஷ்டி விழாவின்போது விரைவு தரிசன கட்டணம் ஒரு நபருக்கு ரூ.1,000 என நிர்ணயித்து வசூலித்தனர்.
- கூட்டத்தை கட்டுப்படுத்த கூடுதல் கட்டணம் நிர்ணயம் செய்வது ஏற்புடையதல்ல.
மதுரை:
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் 6 நாட்கள் கந்த சஷ்டி விழா கொண்டாடப்படுகிறது. விழாவின்போது தினமும் 1 லட்சம் பக்தர்கள் திருச்செந்தூர் வருகிறார்கள். சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் சாதாரண நாட்களில் இலவச தரிசனம் உள்ளது. விரைவு தரிசனத்துக்கு ஒரு நபருக்கு ரூ.100 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. விசேஷ நாட்களில் விரைவு தரிசன கட்டணம் இரட்டிப்பாக, அதாவது ரூ.200 வசூலிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு கந்த சஷ்டி விழாவின்போது விரைவு தரிசன கட்டணம் ஒரு நபருக்கு ரூ.1,000 என நிர்ணயித்து வசூலித்தனர். இதனை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 200 பக்தர்கள் கைதானார்கள். பின்னர் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கோவில் நிர்வாகம் நிறுத்தி வைத்தது.
இந்த ஆண்டு கந்த சஷ்டி விழா விரைவில் தொடங்க உள்ளது. இதில் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் விரைவு தரிசன கட்டணமாக ஒரு நபருக்கு ரூ.1,000 வசூலிக்க முடிவு செய்து இருப்பதாக கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
கூட்டத்தை கட்டுப்படுத்த கூடுதல் கட்டணம் நிர்ணயம் செய்வது ஏற்புடையதல்ல. கந்தசஷ்டி விரதம் இருக்கும் ஏழை பக்தர்கள், கடவுளை தரிசனம் செய்வது மிகவும் கடினமாகிவிடும். எனவே இங்கு கந்தசஷ்டியின்போது தரிசனத்துக்கு கூடுதல் கட்டணத்துக்கு தடை விதிக்க வேண்டும். தரிசனத்துக்கு ஆதார் எண் அடிப்படையில் இணையதளம் வழியாக முன்கூட்டியே டோக்கன் வழங்கவும், இதற்காக சிறப்பு மையங்களை ஏற்படுத்தவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், கோவில்களில் தரிசனம் செய்வதற்கு ரூ.1,000, ரூ.2,000 என வசூலித்தால், ஏழை பக்தர்கள் நிலை என்ன ஆகும்? அவர்களால் இந்த தொகையை செலுத்த இயலுமா? வசதி படைத்தவர்களுக்கு மட்டும்தான் கோவில்கள் இருக்கிறதா? என அடுத்தடுத்து கேள்விகளை எழுப்பினர்.
பின்னர் இந்த மனு குறித்து இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் பதில் மனு தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.
- வழக்குகள் அனைத்தும் நீதிபதி சஞ்சய்பாபா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
- வழக்கு விசாரணையை நவம்பர் 25-ந்தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.
சென்னை:
தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, கடந்த 2011-15-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியின் போது போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த போது போக்குவரத்துக்கழகத்தில் கண்டக்டர், டிரைவர், தொழில்நுட்ப பணியாளர் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தனித்தனியாக 2 வழக்குகள் பதிவு செய்தனர்.
இதுபோன்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் தனியாக ஒரு வழக்குப்பதிவு செய்துள்ளனர். 3 வழக்குகளில் ஒரு வழக்கில் 14 பேரும், இன்னொரு வழக்கில் 23 பேரும், மற்றொரு வழக்கில் 2 ஆயிரத்து 202 பேர் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த 3 வழக்குகளிலும் அமைச்சர் செந்தில்பாலாஜி முதல் நபராக குற்றம்சாட்டப்பட்டுள்ளார். இந்த வழக்குகள் அனைத்தும் சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது.
கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, செந்தில்பாலாஜி தொடர்புடைய ஒரு வழக்கில் 2,202 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளதால் 100 பேர் வீதம் நேரில் அழைத்து குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்படும் என அறிவித்த நீதிபதி, முதல்கட்டமாக 100 பேருக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார். அதன்படி, 100 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
இந்தநிலையில் நேற்று இந்த வழக்குகள் அனைத்தும் நீதிபதி சஞ்சய்பாபா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆஜரானார். ஏற்கனவே சம்மன் அனுப்பப்பட்ட 100 பேரில் சிலர் ஆஜராகவில்லை. இதைத்தொடர்ந்து நேரில் ஆஜராகாதவர்களுக்கு மீண்டும் சம்மன் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, இதுதவிர மேலும் 50 பேருக்கு சம்மன் அனுப்பவும் உத்தரவு பிறப்பித்தார். பின்னர், வழக்கு விசாரணையை நவம்பர் 25-ந் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.
- 19 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை மையம் அறிவிப்பு.
- கன்னியாகுமரி உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு.
இன்று காலை 10 வரை ஐந்து மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை மண்டலம் வானிலை மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. தென்காசி, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.
இதற்கிடையே இந்திய வானிலை மையம் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், நாமக்கல், கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனத் தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மழைக் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- மதுரையில் 2 விமானங்கள் கனமழையால் தரையிறங்க முடியாமல் தவித்தன.
- சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வானில் வட்டமடித்த 2 விமானங்களும் தரையிறங்கின.
மதுரை:
மதுரை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது.
இதற்கிடையே, சென்னை மற்றும் பெங்களூருவில் இருந்து 2 இண்டிகோ விமானங்கள் இன்று 9 மணியளவில் மதுரை விமான நிலையம் வந்தன.
மதுரையில் கனமழை பெய்து வருவதால் 2 விமானங்களும் தரையிறங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் இரு விமானங்களும் வானத்தில் வட்டமடித்துக் கொண்டிருந்தன.
இந்நிலையில், மோசமான வானிலை மற்றும் கனமழையால் நடுவானில் வட்டமடித்துக்கொண்டிருந்த இரு இண்டிகோ விமானங்களும் சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு மதுரை விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கின.
- தமிழகத்தில் நாளை கன்னியாகுமரி உள்ளிட்ட 20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
- கனமழை எதிரொலியாக கன்னியாகுமரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழகத்தில் நாளை கன்னியாகுமரி உள்ளிட்ட 20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையை எதிர்பார்க்கலாம் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
- 85 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- சி.ஐ.எஸ்.எஃப் அதிகாரப்பூர்வ மின்னஞ்சலில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
ஏர் இந்தியா, இண்டிகோ, விஸ்தரா மற்றும் ஆகாச நிறுவனங்களின் 85 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சி.ஐ.எஸ்.எஃப் அதிகாரப்பூர்வ மின்னஞ்சலில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து,பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி வருவதாக விமான நிறுவனங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் இன்று 3 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல், கோவை விமான நிலையத்தில் 2 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, மும்பை- கோவை விஸ்தாரா விமானம், டெல்லி- கோவை விஸ்தாரா விமானங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
- முதலமைச்சர் கோப்பை 2024 போட்டிக்கான நிறைவு விழா நடைபெற்று வருகிறது.
- இந்தியாவே உற்று நோக்கும் துறையாக மாற்றிக் காட்டியிருக்கிறார் உதயநிதி.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் கோப்பை 2024 போட்டிக்கான நிறைவு விழா நடைபெற்று வருகிறது.
கடந்த 21 நாட்களாக நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை போட்டியில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு இன்று பரிசு வழங்கப்படுகிறது.
இந்நிலையில், முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நிறைவு விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
முதலமைச்சர் கோப்பை 2024 விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்குவதில் மகிழ்ச்சி அளிக்கிறது.
உதயநிதி துணை முதல்வரானதில் விளையாட்டு துறையினரின் பங்கும் உண்டு. உதயநிதி பொறுப்பேற்ற பிறகு விளையாட்டு துறையும் வளர்ந்துள்ளது, அவரும் வளர்ந்துள்ளார்.
செஸ் ஒலிம்பியாட் போட்டியை தமிழகத்தில் சிறப்பாக நடத்தி காட்டினோம். செஸ், ஸ்குவாஷ் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளை சிறப்பாக நடத்தி காட்டியுள்ளோம்.
வெளிநாட்டு வீரர்கள் தமிழக அரசை நிறைவாக பாராட்டினார்கள்.
விளையாட்டு துறை பல்வேறு சாதனைகளை நிகழ்ச்சி வருகிறது. விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்த ஏராளமான உதவிகள் வழங்கப்படுகிறது.
விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி, துணை முதலமைச்சர் ஆனதில் விளையாட்டு வீரர்களான உங்கள் பங்கும் உண்டு.
விளையாட்டுத்துறையை சிறப்பாக கவனித்து, இந்தியாவே உற்று நோக்கும் துறையாக மாற்றிக் காட்டியிருக்கிறார் உதயநிதி.
உங்க பசங்களுக்கு விளையாட்டில் ஆர்வம் இருந்தா ஊக்கமளிங்க. அதுவே அவங்களுக்கு உற்சாகம் அளிக்கும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- தனியார் மருத்துவமனையில் அமைச்சர் துரைமுருகனுக்கு தீவிர சிகிச்சை.
- சென்னைக்கு புறப்பட இருந்த நிலையில், அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு.
அமைச்சர் துரைமுருகனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால், அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அமைச்சர் துரைமுருகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வேலூரில் இருந்து சென்னைக்கு புறப்பட இருந்த நிலையில், அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- முதலமைச்சர் கோப்பை 2024 போட்டிகளில் 105 தங்கம் வென்று சென்னை முதலிடம் பெற்றது.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நினைவுச் சின்னம் வழங்கினார்.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கடந்த 21 நாட்களாக நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை போட்டியில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு இன்று பரிசு வழங்கப்படுகிறது.
முதலமைச்சர் கோப்பை 2024 போட்டிகளில் 105 தங்கம், 80 வெள்ளி, 69 வெண்கலப் பதக்கங்கள் வென்று சென்னை முதலிடம் பெற்றது.
இதில், 31 தங்கத்துடன் செங்கல்பட்டு 2ம் இடமும், 23 தங்கத்துடன் கோவை 3ம் இடமும், 21 தங்கத்துடன் சேலம் 4வது இடமும் பிடித்துள்ளன.
இந்த விழாவிற்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் வருகை தந்தனர். அப்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நினைவுச் சின்னம் வழங்கினார்.
பின்னர், 'முதலமைச்சர் கோப்பை' பரிசு வழங்கும் விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டின் ஒலிம்பிக் என சொல்லும் அளவிற்கு முதலமைச்சர் கோப்பை உயர்ந்துள்ளது. அந்த அளவிற்கு போட்டிகளை பிரமாண்டமாக நடத்திக் காட்டியுள்ளோம்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளையாட்டை Extra curricular ஆக்டிவிட்டியாகவோ, Co curricular ஆக்டிவிட்டியாகவோ பார்க்கவில்லை. அவர் விளையாட்டை Main curricular ஆக்டிவிட்டியாகவே பார்க்கிறார்.
முதலமைச்சர் கோப்பை 2024 போட்டிகளுக்கு ரூ.83 கோடி ஒதுக்கப்பட்டு, ரூ.37 கோடி பரிசுத் தொகையாக வழங்கப்படுகிறது.
இந்தியாவிலேயே ஒரு மாநில அரசால் நடத்தப்படும் விளையாட்டுப் போட்டியில் அதிக வீரர்கள் கலந்து கொள்வதிலும், அதிக பரிசுத் தொகை வழங்கப்படுவதிலும் தமிழ்நாடு நம்பர் 1 மாநிலமாக திகழ்கிறது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






