என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • காஞ்சிபுரம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இந்த நிலை தொடர்கிறது.
    • கோரிக்கையை செவி சாய்த்து உடனடியாக அரசு நிறைவேற்ற ஆவன செய்ய வேண்டும்.

    தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழகம் முழுவதும் உள்ள நியாய விலை கடை ஊழியர்கள் தொடர்ந்து 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இந்த நிலை தொடர்கிறது. உடனடியாக நியாய விலை கடைகளில் இருக்கின்ற ஊழியர்களுக்கு அவர்கள் கேட்கிற கோரிக்கையை நிறைவேற்றி, தீபாவளிக்கு இன்னும் ஒரு வார காலம் இருக்கும் தருணத்தில் அவர்களுடைய கோரிக்கையை செவி சாய்த்து உடனடியாக அரசு நிறைவேற்ற ஆவன செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தீபாவளியை சிரமமின்றி கொண்டாட ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.
    • பகுதிநேர ஆசிரியர்களுக்கு தீபாவளிக்கு முன்னரே ஊதியம் வழங்க வேண்டும்.

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழக அரசுப் பள்ளிகளில் பணியாற்றி வரும் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களுக்கு தீபாவளிக்கு முன்னரே ஊதியம் வழங்க வேண்டும். அதுபோல் பண்டிகை கால முன்பணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ்க அரசு பரிசீலனை செய்து நிறைவேற்ற வேண்டும்.

    பகுதிநேர ஆசிரியர்கள் கடந்த 13 ஆண்டுகளாக தொகுப்பூதியத்தின் அடிப்படையில் குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருகின்றார்கள். பணிநிரந்தரம் செய்ய வேண்டி தொடர்ந்து போராட்டம், ஆர்ப்பாட்டம் மூலம் தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டுவந்தும் இதுவரை நிறைவேற்றப்படாமல் உள்ளது.

    தற்பொழுது பண்டிகை காலம் ஆதலால் பண்டிகைக்கு தேவையான பொருள்கள், புத்தாடைகள் வாங்க பண்டிகை முன்பணம் வழங்கவும், தீபாவளிக்கு முன்னதாக ஊதியம் வழங்க வேண்டும் என்று பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் சார்பில் கோரிக்கையை வைத்துள்ளார்கள்.

    அரசு ஊழியர்களுக்கு மற்றும் ஆசிரியர்களுக்கு பண்டிகை காலத்தில் கடன் வழங்கி அவற்றை சம்பளத்தில் பிடித்தம் செய்யும் நடைமுறையை போல் பகுதிநேர ஆசரியர்களுக்கும் அந்த சலுகையை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் தீபாவளியை சிரமமின்றி கொண்டாட ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • 5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.
    • ஆதரவும் இல்லாத அவர்களுக்கு தமிழக அரசு தான் துணையாக இருக்க வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தீபஒளி திருநாளுக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் அமைப்பு சாரா தொழிலாளர்களும், அவர்களுக்கும் கீழாக உள்ள தொழிலாளர்களும் தீப ஒளித் திருநாளைக் கொண்டாட கையில் பணமில்லாமல் தடுமாறுவது வருத்தமளிக்கிறது.

    தீப ஒளிக்காக ஊக்கத்தொகை மற்றும் பரிசுத் தொகுப்பு வழங்க வேண்டும் என்று அமைப்பு சாரா தொழிலாளர்கள் விடுத்த வேண்டுகோள்கள் அரசின் செவிகளில் விழாதது ஏமாற்றமளிக்கிறது.

    அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு வாரத்தில் அதிகபட்சமாக 3 அல்லது 4 நாட்கள் மட்டும் தான் வேலை கிடைக்கிறது. அதைக் கொண்டு தான் அவர்கள் வாரம் முழுவதும் வாழ்க்கை நடத்த வேண்டும்.

    அதற்கே அவர்களுக்கு வருமானம் போதாது எனும் நிலையில், அவர்களால் தீப ஒளிக்காக புத்தாடைகள், பட்டாசுகள் மற்றும் இனிப்புகள் வாங்குவதென்பது சாத்தியமற்ற ஒன்று. எந்த ஆதரவும் இல்லாத அவர்களுக்கு தமிழக அரசு தான் துணையாக இருக்க வேண்டும்.

    புதுவையில் தீப ஒளி திருநாளையொட்டி கட்டுமானத் தொழிலாளர்களுக்கு தலா 5000 ரூபாயும், அமைப்புசாராத் தொழிலாளர்களுக்கு 1500 ரூபாயும் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று அம்மாநில முதல்-மந்திரி ரங்கசாமி அறிவித்திருக்கிறார்.

    அனைத்து செலவுகளுக்கும் மத்திய அரசை நம்பியிருக்கும் புதுவை அரசால் இதைச் செய்ய முடியும் போது தமிழக அரசால் ஏன் செய்ய முடியாது? என்ற வினா எழுகிறது. அந்த வினா மிகவும் நியாயமானது தான் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

    அமைப்பு சாராத் தொழிலாளர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் தீப ஒளி திருநாளைக் கொண்டாடுவதை உறுதி செய்ய வேண்டியது தமிழக அரசின் கடமை ஆகும்.

    அதை நிறைவேற்றும் வகையில், அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியங்கள் வாயிலாக அனைத்து வகையான அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் ரூ.5,000 வீதம் ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • நீர்வரத்தால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
    • பிலிக்குண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    ஒகேனக்கல்:

    கர்நாடக காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் பலத்த மழையால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து மீண்டும் அதிகரித்து வினாடிக்கு 35 ஆயிரம் கன அடியாக நீடித்து வருகிறது. இதன் காரணமாக இன்று 13-வது நாளாக குளிக்க, பரிசல் இயக்க தடை நீடிக்கப்பட்டது.

    கர்நாடகா அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் குறைக்கப்பட்டதால் தமிழக காவிரி கரையோரப் பகுதிகளில் ஆங்காங்கே பெய்யக்கூடிய மழையைப் பொறுத்து காவிரி ஆற்றில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நீர்வரத்து குறைந்து வந்தது.

    இந்த நிலையில் தற்போது கர்நாடகா காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் ஆங்காங்கே பலத்த மழை பெய்து வருவதால், அந்த மாநிலத்தில் உள்ள கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டன.

    இதனால் தமிழக-கர்நாடகா எல்லையில் உள்ள பிலிக்குண்டுலு வழியாக காவிரி ஆற்றில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு நீர்வரத்து வர தொடங்கியதால், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 25 ஆயிரம் கனஅடிக்கு மேல் அதிகரித்தது.

    கர்நாடகா மாநில அணைகளில் இருந்து திறக்கப்பட்ட நீராலும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையாலும், ஒகேனக்கல்லில் நேற்று முன்தினம் நீர்வரத்து 31 ஆயிரம் கனஅடியாக வந்தது.

    இந்தநிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை அளவு குறைந்ததால் நேற்று ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 28 ஆயிரம் கனஅடியாக சரிந்தது.

    இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்ததால், நேற்று மாலை முதல் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து 31 ஆயிரம் கனஅடியாக வந்தது.

    இதனைத்தொடர்ந்து இன்று காலை நீர்வரத்து மேலும் அதிகரித்து வினாடிக்கு 35 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. இந்த நீர்வரத்தால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    ஒகேனக்கல்லில் அதிகளவு நீர்வரத்து வருவதால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவி மற்றும் காவிரி ஆற்றங்கரையோர ப்பகுதிகளில் குளிப்பதற்கும், பரிசல் சவாரி மேற்கொள்வதற்கும் தொடர்ந்து 13-வது நாளாக தடை நீடித்து வருகிறது.

    மேலும், நீர்வரத்து அதிகரிப்பால், தடையை மீறி காவிரி ஆற்றங்கரையோரம் பகுதிகளிலும் பொதுமக்கள் குளிக்க கூடாது என்று போலீசார் அறிவித்தப்படி கண்காணித்து வருகின்றனர்.

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மேலும் காவிரி ஆற்றில நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், பிலிக்குண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • ஏராளமான தனியார் பஸ்கள், வேன்கள் முன்பதிவு செய்யப்பட்டு உள்ளன.
    • மாநாட்டுக்கு கோவை ரசிகர்கள் அணிவகுத்து செல்ல உள்ளனர்.

    கோவை:

    விக்கிரவாண்டியில் நாளை மறுநாள் (27-ந் தேதி) நடைபெறும் தமிழக வெற்றிக்கழக மாநாட்டில் பங்கேற்க விஜய் ரசிகர்கள் தயாராகி வருகிறார்கள்.

    நடிகர் விஜய்க்கு கொங்கு மண்டலமான கோவையில் அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர். இவர்களில் ஆயிரக்கணக்கானோர் விக்கிரவாண்டி மாநாட்டில் பங்கேற்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக ஏராளமான தனியார் பஸ்கள், வேன்கள் முன்பதிவு செய்யப்பட்டு உள்ளன.

    கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், துடியலூர் போன்ற இடங்களில் இருந்து வாகனங்கள் மாநாட்டுக்கு புறப்பட உள்ளன.

    கட்சிக் கொடி ஏந்தி, தாரை-தப்பட்டை முழங்க மாநாட்டுக்கு கோவை ரசிகர்கள் அணிவகுத்து செல்ல உள்ளனர்.

    இதற்கிடையே மாநாட்டுக்கு அழைப்பு விடுத்து கோவையில் பல இடங்களில் சுவர் விளம்பரங்கள் வரையப்பட்டுள்ளன. மேலும் நகர் முழுக்க சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டு உள்ளன. சுவரொட்டிகளில் மாநாடு தொடர்பாக பரபரப்பு வாசகங்களும் இடம்பெற்றுள்ளன.

    கோவை ரெயில்நிலையம் முன்பு அரசு ஆஸ்பத்திரி அருகே உள்ள சுவர்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் அந்த வழியாகச் செல்லும் பொதுமக்களை கவரும் வகையில் உள்ளன.

    அதில் மீண்டும் எம்.ஜி.ஆர் வருகிறார், மக்களாட்சி தருகிறார் என்ற வாசகம் இடம்பிடித்துள்ளது. சுவரொட்டியில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். படமும், விஜய் படமும் இடம்பெற்றுள்ளது.

    எங்க வீட்டு பிள்ளை படத்தில் எம்.ஜி.ஆர். சாட்டையை சுற்றுவது போல் தோன்றும் காட்சியும், அதேபோல் விஜய் சாட்டையை சுற்றுவது போன்று படம் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

    மற்றொரு சுவரொட்டியில் தமிழகத்தின் எதிர்காலமே, நல்லாட்சியை எதிர்நோக்கும் இளைய தலைமுறையின் நம்பிக்கை நட்சத்திரமே என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

    ஏற்கனவே மாநாடு நடைபெறும் மைதான முகப்பில் பெரியார், அண்ணா போன்ற தலைவர்களின் கட்-அவுட்டுகள் இடம்பெற்றுள்ள நிலையில் கோவையில் எம்.ஜி.ஆர். படத்துடன் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    • கடனா அணை பகுதியில் மட்டும் 2 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.
    • சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்கின்றனர்.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் சில நாட்களாக வடகிழக்கு பருவமழை சில இடங்களில் இடி-மின்னலுடனும், சில இடங்களில் சாரல் மழையாகவும் பெய்து வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் ராதாபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்த நிலையில் நேற்று அங்கு மழை இல்லை. மாறாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி களக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் களக்காடு தலையணையில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. தொடர்ந்து அந்த பகுதியில் மழை பெய்து கொண்டே இருப்பதால் பாதுகாப்பு காரணமாக சூழல் சுற்றுலா தலமான களக்காடு தலையணையில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் சுற்றுலா பயணிகள் பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கி களக்காடு வனச்சரக அலுவலர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார்.


    களக்காடு சுற்று வட்டாரத்தில் அதிகபட்சமாக 9.2 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. மாவட்டத்தின் மற்ற பகுதியில் வானம் மேகமூட்டமாக காட்சியளித்தது. அணைகளை பொறுத்தவரை சேர்வலாறு, பாபநாசம், மணிமுத்தாறு அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது. பாபநாசத்தில் 3 மில்லிமீட்டரும், சேர்வலாறில் 2 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. கன்னடியன் கால்வாய் பகுதியில் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது.

    தென்காசி மாவடடத்தில் நேற்று மாவட்டம் முழுவதும் பகலில் வெயில் அடித்தது. பிற்பகலில் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. கடனா அணை பகுதியில் மட்டும் 2 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. இதனால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் மிதமாக கொட்டி வருகிறது. அதில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்கின்றனர்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் மட்டும் பரவலாக மழை பெய்தது. அங்கு 9 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. ஓட்டபிடாரத்தில் 2 மில்லி மீட்டரும், தூத்துக்குடியில் 1 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • திருவலம் அருகே வந்தபோது திடீரென என்ஜினில் உள்ள கப்ளிங் இணைப்பு பயங்கர சத்தத்துடன் உடைந்தது.
    • அதிகாலை சுமார் 5 மணி முதல் 10.30 மணிக்கு மேல் வரை பணிகள் நடந்தது.

    வேலூர்:

    அசாம் மாநிலம் திப்ருகாரில் இருந்து கன்னியாகுமரிக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று அதிகாலை ஆந்திர மாநிலம் ரேணிகொண்டா அரக்கோணம் வழியாக வந்து கொண்டிருந்தது.

    வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலம் அருகே வந்தபோது திடீரென என்ஜினில் உள்ள கப்ளிங் இணைப்பு பயங்கர சத்தத்துடன் உடைந்தது.

    இதனால் பெட்டிகளை விட்டு பிரிந்து என்ஜின் மட்டும் தனியாக கழன்று ஓடியது.

    இதனைக் கண்டு என்ஜின் டிரைவர் திடுக்கிட்டார். ரெயில் பெட்டியில் இருந்த பயணிகள் ஏதோ பெரிய விபத்து நடக்கப்போவதாக எண்ணி அலறி கூச்சலிட்டனர்.

    என்ஜின் மீது பின்னால் வேகமாக வந்த பெட்டிகள் மோதாமல் இருக்கும் வகையில் லாவகமாக டிரைவர் என்ஜினை இயக்கினார்.

    திருவலம் ரெயில் நிலையம் அருகே வந்தபோது என்ஜினை விட்டு பிரிந்த பெட்டிகள் தானாக தண்டவாளத்தில் நின்றன. அப்போது என்ஜினை நிறுத்திய டிரைவர் மீண்டும் பின்னோக்கி வந்து பெட்டிகள் அருகே நிறுத்தினார். இறங்கி பார்த்தபோது என்ஜினில் இருந்த கப்பளிங் உடைந்தது தெரியவந்தது.

    இது குறித்து உடனடியாக காட்பாடி ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அங்கிருந்த ஊழியர்கள் விரைந்து சென்று சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    அதிகாலை சுமார் 8.45 மணி முதல் 10.50 மணி வரை பணிகள் நடந்தது. நடுவழியில் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் நின்றதால் சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் டபுள் டக்கர், பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன. அதிலிருந்த பயணிகள் அவதி அடைந்தனர்.

    இந்த சம்பவம் இன்று காலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • தி.மு.க. எதிர்ப்பு என்பது வேறு, திராவிட எதிர்ப்பு என்பது வேறு ஆகும்.
    • சீமான் தமிழர், திராவிடர் என்று பாகுபடுத்தி சொல்வது சரியான விவாதம் இல்லை.

    திருவோணம்:

    தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் அருகே உள்ள காட்டாத்தி உஞ்சிய விடுதியை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதன்மை செயலாளராக இருந்த உஞ்சைஅரசனின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சியில் வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன் பங்கேற்றார். பின்னர், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தி.மு.க., கூட்டணியில் விரிசல் வர வேண்டும் என்பது எடப்பாடி பழனிசாமியின் எதிர்பார்பாகவும், வேட்கையாகவும் இருக்கலாம். அவரின் வேட்கை தணிய வேண்டும்.

    கூட்டணி கட்சிகளுக்கு இடையில் பிரச்சனையின் அடிப்படையில் விவாதங்கள் நடைபெறலாம். ஆனால் விரிசல் ஏற்படாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். இதை வி.சி.க. வழிமொழிகிறது.

    நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திராவிடம் என்ற ஒன்று இல்லை என்று கூறியிருப்பது குறித்து பலமுறை விளக்கம் அளித்திருக்கிறோம்.

    திராவிடர் வேறு தமிழர் வேறு என்பது போல ஒரு விவாதத்தை கூர்மைப்படுத்துவது சங்பரிவார்களுக்கு துணை போவதாக அமையும்.

    இதை தமிழக கவர்னர் ஆர்.என். ரவியும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரும் விரும்புகிறார்கள். இதை பா.ஜனதா அரசியலாக்கி வருகிறது. அவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்களோ அதற்கு துணை போகிற வகையில் சீமான் போன்றவர்களின் விவாதங்கள் அமைந்திருக்கிறது.

    தி.மு.க. எதிர்ப்பு என்பது வேறு, திராவிட எதிர்ப்பு என்பது வேறு ஆகும். ஆரியம் என்பதற்கான நேர் எதிரான கருத்தியலை கொண்டது திராவிடம் ஆகும். இதன் அடிப்படையில் தான் திராவிட அரசியலை கையாளுகிறோம். ஆனால், சீமான் தேசிய இனத்தின் அடிப்படையில் தமிழர், திராவிடர் என்று பாகுபடுத்தி சொல்வது சரியான விவாதம் இல்லை.

    தி.மு.க.வை எதிர்க்கிறோம் என்ற அடிப்படையில் ஒட்டு மொத்த திராவிட அடையாளத்தையும் எதிர்ப்பது சரியானது அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உச்சபட்ச அரசியல் ஒழுங்கோடு, உலகமே உற்று நோக்கிப் போற்றும் விதமாகக் கொண்டாடுவோம் நம் வெற்றிக் கொள்கைத் திருவிழாவை.
    • மாநாட்டுக்கு வரும்போது பாதுகாப்பையும், கட்டுப்பாட்டையும் மனதில் நிறுத்தி, பத்திரமாக வாருங்கள்.

    சென்னை:

    தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே,

    வணக்கம்.

    நம் கழகத்தின் முதல் மாநில மாநாடான வெற்றிக் கொள்கைத் திருவிழாவிற்காக எழுதும் மூன்றாவது கடிதம் இது. மாநாடு நிகழப் போகும் தருணம், நம் மனம் மற்றும் கள வளாகத்திற்கு வெகு அருகில் வந்துவிட்டது.

    உங்கள் ஒவ்வொருவரையும் நேரில் சந்திக்கப் போகும் கணங்கள், நம்மிடையே இருக்கும் அன்பின் கனத்தை இன்னும் பலமடங்கு கூட்டப் போகின்றன. அதை வார்த்தைகளில் எப்படிச் சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை.

    உச்சபட்ச அரசியல் ஒழுங்கோடு, உலகமே உற்று நோக்கிப் போற்றும் விதமாகக் கொண்டாடுவோம் நம் வெற்றிக் கொள்கைத் திருவிழாவை.

    அத்திருவிழாவைக் கொண்டாடுவதற்காக, பெருந்திரளாக அனைவரும் மாநாட்டுக்கு வரும்போது பாதுகாப்பையும், கட்டுப்பாட்டையும் மனதில் நிறுத்தி, பத்திரமாக வாருங்கள். நம் கழகக் கொடியைக் கைகளிலும் மனங்களிலும் ஏந்தி வாருங்கள். உங்கள் வருகைக்காக வி.சாலை எல்லையில், என் இரு கரங்களையும் விரித்தபடி, இதய வாசலைத் திறந்து வைத்துக் காத்திருப்பேன்.

    வாருங்கள். மாநாட்டில் கூடுவோம்.

    நம் தமிழ்நாட்டு மண்ணுக்கான வெற்றிக் கொள்கைகளைச் செயல்படுத்த உறுதிபூண்டு முழங்குவோம்.

    2026 என்ற இலக்கை நோக்கி, முதல் அடியை எடுத்து வைப்போம்.

    வி.சாலை என்னும் வியூகச் சாலையில் சந்திப்போம்.

    வெற்றி நிச்சயம்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் விஜய் கூறியுள்ளார். 



    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • திராவிட மாடல் அரசின் பணியை நேரில் பார்த்த பொதுமக்களும் பாராட்டுகின்றனர்.
    • கழகம் ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் எப்போதும் மக்களிடம் சென்று, மக்களுடன் நிற்கின்ற இயக்கமாகும்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மக்களிடம் செல்… அவர்களுடன் வாழ்… என்று நமக்கு பொது வாழ்க்கைக்கானப் பாடம் கற்றுக் தந்தவர் பேரறிஞர் அண்ணா. அந்த அண்ணாவின் அன்புத் தம்பியாக, அவர் உருவாக்கிய திராவிட முன்னேற்றக் கழகம் எனும் அரசியல் பேரியக்கத்தை அரை நூற்றாண்டு காலத்திற்கு வழிநடத்திய முத்தமிழறிஞர் கலைஞரும் அதைத்தான் நமக்கு கற்றுத் தந்திருக்கிறார். கழகம் ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் எப்போதும் மக்களிடம் சென்று, மக்களுடன் நிற்கின்ற இயக்கமாகும்.

    தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கப் பயணம் மேற்கொள்வதற்கு முன்பாகவே நமது திராவிட மாடல் அரசின் அமைச்சர்களிடம் அவரவர் துறை சார்ந்த ஆய்வுகளை மேற்கொண்டும், அவரவர் மாவட்டங்களில் உள்ள பணிகள் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டும் அறிக்கை தயாரித்து வைக்குமாறு கேட்டுக்கொண்டேன். அதுபோலவே, அமைச்சர்கள் பலரும் அறிக்கைகளை அளித்திருந்தனர். அதனை நானும் துணை முதலமைச்சரும் மூத்த அமைச்சர்களும் பார்வையிட்டு, பத்தாண்டுகால அ.தி.மு.க ஆட்சியில் முடங்கிப் போயிருந்த தமிழ்நாட்டின் வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பினை மேம்படுத்த மாவட்டவாரியான ஆய்வுகளுக்குத் திட்டமிட்ட நிலையில், பருவ மழைக்காலம் தொடங்கிவிட்டது.

    இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழையின் தொடக்கத்திலேயே சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கனமாகப் பெய்த நிலையில், முதலமைச்சரான உங்களில் ஒருவனான நானும், துணை முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்களும் நாடாளுமன்ற-சட்டமன்ற உறுப்பினர்களும், மேயர் சேர்மன்-உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் அரசு நிர்வாகத்தினரும் இரவு பகல் பாராமல் களத்தில் நின்று மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் பணியாற்றியதை ஊடகங்களும், திராவிட மாடல் அரசின் பணியை நேரில் பார்த்த பொதுமக்களும் பாராட்டுகின்றனர்.

    பருவ மழை தொடர்கின்ற நிலையில், மழை நீர் தேங்குகிற இடங்களில் உடனே அவற்றை வடியச் செய்வது, போக்குவரத்துக்கும் அத்தியாவசியத் தேவைக்கும் பாதிப்பின்றி உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்வது உள்ளிட்ட மழைக்கால நிவாரணப் பணிகள் திறம்பட நடைபெற்று வரும் நிலையில், இதனைப் பொறுக்க முடியாமலும், தாங்கள் அரசியல் செய்வதற்கு எதுவும் கிடைக்காததாலும் எதிர்வரிசையிலே இருப்பவர்கள், அதிலும் தங்களுடைய பத்தாண்டுகால மோசமான ஆட்சிக்காலத்தில், கடைசி நான்கு ஆண்டுகளில் படுமோசமான நிர்வாகம் நடத்தியவர்கள், மக்கள் மீதான அக்கறையுடன் செயல்படும் திராவிட மாடல் அரசு மீது அடிப்படையில்லாத அவதூறுகளைப் பரப்ப முனைந்து, அதிலும் முனை முறிந்து போயிருக்கிறார்கள்.

    ஆதிதிராவிட மக்களின் நலனில் தொடர்ந்து அக்கறை செலுத்தி, அவர்கள் அனைவரும் முன்னேறுவதற்கான சமூக நீதித் திட்டங்களை நிறைவேற்றி வருவதுதான் திராவிட மாடல் அரசு. நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது, துணை முதலமைச்சர் பொறுப்பினை வகித்த உங்களில் ஒருவனான நான் சட்டமன்றத்தில் ஆதிதிராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்த அருந்ததியர் இன மக்களுக்கான 3 சதவீத உள்ஒதுக்கீட்டுத் தீர்மானத்தை முன்மொழியும் வாய்ப்பினைப் பெற்றேன். தலைவர் கலைஞர் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட அந்த இடஒதுக்கீடு, அண்மையில் உச்சநீதிமன்றத்தின் ஒப்புதலையும் பெற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த 15 ஆண்டுகளில் அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் பல்வேறு நிலைகளில் முன்னேற்றம் கண்டிருப்பதைக் காணும்போது அவர்களுக்கான உள் ஒதுக்கீட்டுத் தீர்மானத்தை நிறைவேற்றும் வாய்ப்பைப் பெற்ற உங்களில் ஒருவனாகப் பெருமை கொள்கிறேன்.

    முதலமைச்சராக முதன்முறையாக நாமக்கல் சென்றபோது, அங்குள்ள அருந்ததியர் மக்களின் வசிப்பிடம் சென்று அவர்களின் நலன்களைக் கேட்டறிந்து, கோரிக்கைகளையும் கேட்டுக்கொண்டேன். அவற்றை நம் திராவிட மாடல் அரசு நிறைவேற்றித் தந்தமைக்கு அவர்கள் என்னிடம் நன்றியினைத் தெரிவித்துக்கொண்டனர். சொன்னதைச் செய்வோம் என்ற முத்தமிழறிஞர் கலைஞர் நெறியிலும், சொல்லாமலும் செய்வோம் என்ற முறையிலும், நாமக்கல்லில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் உரையாற்றும்போது, திராவிட மாடல் ஆட்சியில் அறிவிக்கப்படும் திட்டங்கள் அனைத்தும் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்ற உறுதிமொழியினை வழங்கி, திட்டங்கள் செயல்படுத்தும் முறையைக் கண்காணிப்பதற்காக நவம்பர் மாதம் முதல் மாவட்டந்தோறும் நேரில் கள ஆய்வு செய்யஇருக்கிறேன் என்பதையும் தெரிவித்தேன்.

    விழாவில் திரண்டிருந்த மக்கள் மட்டுமின்றி, தமிழ்நாடு முழுவதும் நேரலையில் நிகழ்வைப் பார்த்த பொதுமக்களும் இந்த அறிவிப்புக்குப் பெரும் வரவேற்பை அளித்துள்ளனர்.

    திராவிட மாடல் அரசு தனது திட்டங்களை முழுமையாக நிறைவேற்றும் என்ற நம்பிக்கையுடன் உள்ள தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில், பண்டிகை நாட்கள் முடிவடைந்த பிறகு, நவம்பர் 5, 6 தேதிகளில் கோவைக்குச் சென்று கள ஆய்வினைத் தொடங்க இருக்கிறேன். மற்ற மாவட்டங்களிலும் தொடர இருக்கிறேன். கள ஆய்வும் தொடரும், திராவிட மாடல் அரசின் சாதனைத் திட்டங்களும் தொடரும்.

    அரசு சார்ந்த பணிகளை மட்டும்தான் கவனிப்பீர்களா என்று உடன்பிறப்புகளான உங்களின் மனக்குரலை உங்களில் ஒருவனான நான் அறிவேன். கள ஆய்வுப் பணிகளை அந்தந்த மாவட்டங்களில் நிறைவு செய்தபிறகு, கழகப் பணிகளையும் ஆய்வு செய்வேன். கண்மணிகளாம் உடன்பிறப்புகளையும் நேரில் கண்டு நெஞ்சம் மகிழ்வேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • வருகிற 27-ந் தேதி வரை மழை நீடிக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
    • பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    ஊட்டி:

    வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் நீலகிரி உள்பட பல்வேறு மாவட்டங்களில் வருகிற 27-ந் தேதி வரை மழை நீடிக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

    இந்தநிலையில் நேற்று ஊட்டி, கோத்தகிரி உள்பட பல்வேறு இடங்களில் கனமழை கொட்டியது. மதியம் ஒரு மணிக்கு தொட ங்கிய மழை பிற்பகல் 3 மணி வரை இடைவிடாமல் பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    ஊட்டியில் சவுத்வீக் பகுதியில் இருந்து வந்த மழைநீர், சேரிங்கிராஸ் பகுதியில் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளானார்கள். மேலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

    ஒரு சில வாகனங்கள் மாற்றுப் பாதையில் சென்றன. பஸ்நிலையம் அருகே ரெயில்வே பாலம் உள்பட பல்வேறு இடங்களிலும் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் வெளியூர்களுக்கு செல்ல இருந்தவர்களும், பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவ- மாணவிகளும் அவதி அடைந்தனர்.

    புறநகர் பகுதியில் பெய்த மழையால் விவசாய தோட்டங்களில் தண்ணீர் அதிகளவில் தேங்கிநின்றது. குன்னூரில் லேசான மழை பெய்தது. மாவட்டத்தில் குளிர் நிலவி வரும் நிலையில் நேற்று பெய்த மழையால் கடும் குளிர் ஆனது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    இதற்கிடையே நீலகிரி மாவட்டத்தில் இன்றும் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நெல்லை மாநகர எல்லைக்கு உட்பட்ட இடங்களில் மாடுகள் வளர்க்க அனுமதி பெற வேண்டும்.
    • பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் அச்சுறுத்தலாக திரியும் மாடுகள் கோசாலைக்கு கொண்டு செல்லப்படும்.

    நெல்லை மாநகராட்சி 55-வது வார்டு திருமால் நகர் பகுதியில் நேற்று முன்தினம் சாலையில் சுற்றி திரிந்த ஒரு மாடு அந்த வழியாக மொபட்டில் சென்ற கல்லூரி மாணவி ஸ்வதிகா மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அந்த மாணவி சாலையில் சில அடி தூரம் போய் விழுந்தார். இதில் பலத்த காயமடைந்து அந்த மாணவியை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்நிலையில் நெல்லை மாநகராட்சி ஆணையாளர் சுகபுத்திரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    * நகர்ப்புற உள்ளாட்சி சட்டம் 1988-ன் படி மாநகராட்சி எல்லைக்குள் அனுமதி இன்றி யாரும் மாடுகள் வளர்க்க கூடாது.

    * நெல்லை மாநகர எல்லைக்கு உட்பட்ட இடங்களில் மாடுகள் வளர்க்க அனுமதி பெற வேண்டும்.

    * போக்குவரத்திற்கு இடையூறாக அச்சுறுத்தலாக சாலையில் மாடுகளை அவிழ்த்துவிடக்கூடாது.

    * மாடுகளின் உரிமையாளர்கள் மீது பிராணிகள் துன்புறுத்தல் தடைச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

    * பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் அச்சுறுத்தலாக திரியும் மாடுகள் கோசாலைக்கு கொண்டு செல்லப்படும்.

    * சாலையில் சுற்றி திரியும் மாட்டின் உரிமையாளர்களுக்கு 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    ×