என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • காட்பாடி ரெயில் நிலையம் அருகே மற்றொரு மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது.
    • மகளிருக்கு உரிமை தொகை கிடைக்காதவர்களுக்கு, உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள வள்ளிமலை தனியார் திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது.

    இதில் அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இதையடுத்து அவர் பேசியதாவது:-

    கடந்த தேர்தலில் உங்களுக்கெல்லாம் சொன்னேன். இந்த முறை எனக்கு வாக்களித்தால், 4 திட்டங்கள் வரும் என்றேன். அதன்படி பொன்னையில் ரூ.48 கோடியில் பாலம் கட்டி கொடுத்துள்ளேன். ஒரு கல்லூரி கொண்டு வந்துள்ளேன்.

    சேர்க்காடு கூட்ரோட்டில் 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. விரைவில் அதுவும் பயன்பாட்டிற்கு வரும். இப்படி பல திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு கொண்டு வர சிப்காட் அமைக்கப்பட உள்ளது.

    காட்பாடி ரெயில் நிலையம் அருகே மற்றொரு மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. கட்டிடம் இல்லாத பள்ளிக்கு கட்டிடம் கட்டப்படும். வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்கப்படும். மகளிருக்கு உரிமை தொகை கிடைக்காதவர்களுக்கு, உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    என்னை கேட்கிறார்கள் எப்படி சார் ஒரே தொகுதியில் வெற்றி பெறுகிறீர்கள் என்று, நான் தொகுதி என்று நினைக்கவில்லை. தொகுதியை கோவிலாக நினைக்கிறேன். ஓட்டு போடும் மக்களை தெய்வமாக நினைக்கிறேன்.

    எனக்கு வாக்களித்து வெற்றிபெற செய்த நீங்கள்தான் என் தெய்வம்.

    அதனால் தான் இந்த தொகுதியில் இத்தனை முறை வெற்றி பெற்றுள்ளேன்.

    சட்டமன்றத்தில் கருணாநிதி 56 ஆண்டுகள் இருந்துள்ளார். அவருக்கு அடுத்து 53 ஆண்டுகள் சட்டமன்றத்தில் இருந்து வருகிறேன்.

    என் கட்டை கீழே விழுகிற வரை காட்பாடி தொகுதி மக்களுக்காக பாடுபடுவேன். மற்ற தொகுதியுடன் ஒப்பிட்டு பாருங்கள் மற்ற தொகுதிகளை விட நான் அதிக திட்டங்கள் கொண்டு வந்துள்ளேன்.

    இவ்வாறு அவர் உருக்கமாக பேசினார்.

    • விஜய் நிகழ்ச்சியில் பங்கேற்பார் என்று மட்டுமே தெரிவிக்கப்பட்டது.
    • இன்னொரு கூட்டணிக்கு போவதற்கு என்ன தேவை எழுந்துள்ளது.

    சென்னையில் டிசம்பர் 6-ந்தேதி நடைபெறும் அம்பேத்கர் புத்தக வௌியீட்டு விழாவில் விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்கும் நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய்க்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இதனால் இருவரும் ஒரே மேடையில் பங்கேற்பார்களா? கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையும் நடைபெறுமா? என்ற கேள்விகள் எழுப்பப்பட்டன.

    இந்நிலையில் விகடனின் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்பது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் கூறியதாவது:

    * விஜய் நிகழ்ச்சியில் பங்கேற்பார் என்று மட்டுமே தெரிவிக்கப்பட்டது.

    * விஜய் பங்கேற்பார் என தெரிவித்தபோது தவெக மாநாடு நடைபெறவில்லை.

    * முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்தகத்தை வெளியிட நான் பெற்று கொள்வதாகவே திட்டமிடப்பட்டது.

    * நூல் வெளியீட்டு விழாவிற்கு அரசியல் உள்நோக்கம் கற்பிப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

    * இன்னொரு கூட்டணிக்கு போவதற்கு என்ன தேவை எழுந்துள்ளது.

    * நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்பதாலே அணி மாறி விடுவோம் என்பது எந்த வகை உளவியல்?

    விசிக அணி மாறிவிடும் என விமர்சித்தவர்களுக்கு கேள்வி எழுப்பிய திருமாவளவன், விஜயுடன் ஒரே மேடையில் பங்கேற்பதை உறுதி செய்துள்ளார்.

    • 15 வார்டுகளில் நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர்.
    • தேவைக்கு ஏற்ப, படுக்கை வசதிகள் அதிகரிக்கப்படும்.

    சென்னை:

    பருவகால காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதை தொடர்ந்து, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில், 50 படுக்கை வசதியுடன் கூடிய சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு உள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பருவநிலை மாற்றத்தால் காய்ச்சல், சளி, தொண்டையில் ஏற்படும் கிருமி தொற்று உள்ளிட்ட பாதிப்புகளுடன் மருத்துவ மனைக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    'புளூ' வைரஸ்களால் பரவும் இன்புளூயன்சா காய்ச்சல், டெங்கு, நுரையீரல் தொற்று பரவல் அதிகரித்துள்ளது. பெரும்பாலானோர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்றாலும், டிசம்பர் வரை காய்ச்சல் பாதிப்பு இருக்கும் என டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

    இதனால், காய்ச்சல் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஏற்ப, சிறப்பு வார்டுகள் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்டு, நேற்று திறந்து வைக்கப்பட்டன.

    இதுகுறித்து, மருத்துவமனை முதல்வர் தேரணிராஜன் கூறியதாவது:-

    டெங்கு, இன்புளூயன்சா, வைரஸ் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், 50 படுக்கையுடன் கூடிய சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இதில், 24 மணிநேரமும் டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    தற்போது வரை, 15 வார்டுகளில் நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். தேவைக்கு ஏற்ப, படுக்கை வசதிகள் அதிகரிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கரூரை சேர்ந்த வக்கீல் தமிழ் ராஜேந்திரன் கடந்த 7-ந்தேதி அங்குள்ள மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.
    • 2 சட்டப்பிரிவுகளின் கீழ் நீதிமன்ற உத்தரவுப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கரூர்:

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை இழிவுபடுத்தி நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சீமான் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க கோரி கரூரை சேர்ந்த வக்கீல் தமிழ் ராஜேந்திரன் கடந்த 7-ந்தேதி அங்குள்ள மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    இதை தொடர்ந்து கரூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்-1 நீதிபதி இது தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி நேற்று கரூர் தான்தோன்றிமலை போலீஸ் நிலையத்தில் சீமான் மீது அவதூறாக பேசுதல், இழிவுபடுத்தும் நோக்கத்தில் பேசி இணையதளத்தில் வெளியிடுதல் உள்ளிட்ட 2 சட்டப்பிரிவுகளின் கீழ் நீதிமன்ற உத்தரவுப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • கங்கை நதியை தரிசிக்கும் வகையில் சுற்றுலா ஏற்பாடு.
    • 3 அடுக்கு ஏ.சி.பெட்டியில் ஆன்மிக சுற்றுலா அழைத்துச் செல்லப்படும்.

    தஞ்சாவூர்:

    கும்பகோணத்தில் இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா நிறுவனம் (ஐ.ஆர். சி.டி.சி.) மற்றும் ரெயில் உபயோகிப்பாளர் சங்கத்தினர் சந்திப்பு கூட்டம் நடந்தது.

    இந்த கூட்டத்திற்கு ஐ.ஆர். சி.டி.சி. மேலாளர் முத்துக்குமார் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்தியன் ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா நிறுவனத்தின் சுற்றுலா திட்டம் மூலம் கார்த்திகை தீபம் அன்று சிவபெருமான் மற்றும் கங்கை நதியை தரிசிக்கும் வகையில் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த சுற்றுலாவிற்கு அடுத்த மாதம் (டிசம்பர்) 9-ந் தேதி ராமநாதபுரத்தில் இருந்து தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை, விழுப்புரம், சென்னை வழியாக அயோத்திக்கு செல்லும் ஸ்ரத்தா சேது எக்ஸ்பிரஸ் (22613) ரெயிலில் தனியாக 3 அடுக்கு ஏ.சி.பெட்டியில் ஆன்மிக சுற்றுலா அழைத்துச் செல்லப்படும்.

    இந்த ரெயில் காசி, கயா, பிரக்யாராஜ் ஆகிய பகுதிகளில் உள்ள வழிபாட்டு தலங்களுக்கு செல்லும் வகையில் இயக்கப்பட உள்ளது.

    இந்த ரெயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு 3 வேளை உணவு வழங்கப்படும். இந்த சுற்று லாவிற்கு முன்பதிவு செய்ய மற்றும் மேலும் விபரங்கள் தெரிந்து கொள்ள 82879 31977 மற்றும் 8287932070 எண்களை தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.
    • மாவிளக்கு எடுத்து தங்களது கந்த சஷ்டி விரதத்தை முடித்துக் கொண்டனர்.

    திருப்பரங்குன்றம்:

    முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 2-ம் தேதி தொடங்கியது.

    விழாவினை முன்னிட்டு தினமும் காலையிலும், மாலையிலும் சண்முகர் சன்னதியில் சண்முகர் வள்ளி தெய்வானைக்கு சண்முகார்ச்சனைகள் நடைபெற்றன.


    விழாவின் 5-ம் நாள் நிகழ்ச்சியாக கடந்த 6-ந்தேதி வேல் வாங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து நேற்று மாலை 6 மணி அளவில் சூரனை முருகப்பெருமான் வதம் செய்யும் சூரசம்ஹார லீலை நடைபெற்றது.

    இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கொட்டும் மழை யையும் பொருட்படுத்தாமல் சூரசம்கார லீலையை கண்டு களித்தனர். தொடர்ந்து கோவிலில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்று மாலை மாற்றும் வைபவம் நடைபெற்றது.

    இதையடுத்து பூ சப்பரத்தில் எழுந்தருளி சுப்ரமணிய சுவாமி தெய்வானை உடன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    விழாவின் நிறைவு நாளான இன்று காலையில் உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்மனுக்கு பால், சந்தனம், திரவிய பொடி உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.

    சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணியசுவாமி தெய்வானையுடன் தங்கமயில் வாகனத்தில் சிறிய சட்டத்தேரில் எழுந்தருளினார். காப்பு கட்டி விரதம் இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோசத்துடன் தேரை வடம் பிடித்து கிரிவலப் பாதை வழியாக இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து இன்று மாலை 3 மணி அளவில் பாவாடை தரிசனமும் அதனைத் தொடர்ந்து மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு தங்க கவச அலங்காரமும் நடைபெறுகிறது.

    காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் அதிகாலையில் மாவிளக்கு எடுத்து தங்களது கந்த சஷ்டி விரதத்தை முடித்துக் கொண்டனர்.

    விழாவிற்கான ஏற்பாடு களை கோவில் அறங்கா வலர் குழு தலைவர் சத்திய பிரியா பாலாஜி, அறங்கா வலர்கள் சண்முகசுந்தரம், மணி செல்வம், பொம்ம தேவன், ராமையா, கோவில் துணை ஆணையர் சூரிய நாராயணன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

      ஒகேனக்கல்:

      கர்நாடகம் மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் அங்குள்ள கே.ஆர்.எஸ்., கபினி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணைகளில் இருந்து உபரி நீர் தமிழக காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

      மேலும் கடந்த சில நாட்களாக தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, பிலிகுண்டுலு, ராசி மணல் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது.

      இதனால் நேற்று ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 11 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.

      இந்த நிலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்தது. இதனால் நீர்வரத்து படிப்படியாக குறைய தொடங்கியது.

      இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக குறைந்து வந்தது.

      மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மேலும் காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

      சுற்றுலா பயணிகள் குடும்பத்தினருடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.

      பின்னர் அவர்கள் தொங்கு பாலத்தில் நின்ற வாறு காவிரி ஆற்றை கண்டு ரசித்தனர். மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.

      காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

      • நேற்று அதிரடியாக தங்கம் விலை சரிந்து காணப்பட்டது.
      • வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது.

      தங்கம் விலை கடந்த சில வாரங்களாக தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்தது. கடந்த செப்டம்பர் மாதம் 24-ந்தேதி ஒரு பவுன் ரூ.56 ஆயிரத்தை கடந்தது.

      அதன் தொடர்ச்சியாக விலை உயர்ந்து, அக்டோபர் மாதம் 16-ந்தேதி ஒரு பவுன் ரூ.57 ஆயிரம் என்ற நிலையையும் தாண்டி, புதிய உச்சத்தில் தங்கம் விற்பனை செய்யப்பட்டதை பார்க்க முடிந்தது. அதனைத் தொடர்ந்தும் விலை குறைந்தபாடில்லை. ஒவ்வொரு நாளும் உச்சத்திலேயே தங்கம் விலை பயணித்தது.

      கடந்த மாதம் இறுதி வரை உச்சத்தில் இருந்த தங்கம் விலை, இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து சற்று குறைய ஆரம்பித்தது. கடந்த 5-ந்தேதி வரை குறைந்து கொண்டே வந்த நிலையில், நேற்று அதிரடியாக தங்கம் விலை சரிந்து காணப்பட்டது.

      நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.165-ம், சவரனுக்கு ரூ.1,320-ம் குறைந்தது. ஒரு கிராம் ரூ.7 ஆயிரத்து 200-க்கு விற்பனை ஆனது. நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.57 ஆயிரத்து 600-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

      இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.58 ஆயிரத்து 280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ரூ.7,285-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

      வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.103-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

      கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

      07-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,600

      06-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,920

      05-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,840

      04-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,960

      03-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,960

       

      கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

      07-11-2024- ஒரு கிராம் ரூ. 102

      06-11-2024- ஒரு கிராம் ரூ. 105

      05-11-2024- ஒரு கிராம் ரூ. 105

      04-11-2024- ஒரு கிராம் ரூ. 106

      03-11-2024- ஒரு கிராம் ரூ. 106

      • விண்ணப்பதாரர் 70 வயதுக்கு மேற்பட்டவர் தானா? என ஆதார் அடிப்படையில் உறுதி செய்யப்படுகிறது.
      • செல்போன் மூலம் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

      சென்னை:

      'ஆயுஷ்மான் பாரத்' எனப்படும் ஏழை மக்களுக்கான இலவச மருத்துவ காப்பீட்டு திட்டத்தை கடந்த 2018-ம் ஆண்டு முதல் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

      அதாவது, பொருளாதாரத்தில் நலிவுற்றவர்கள் இந்த காப்பீடு திட்டத்தின் மூலம் ரூ.5 லட்சம் வரை சிகிச்சை பெற முடியும்.

      அறுவை சிகிச்சை போன்ற பெரிய அளவிலான மருத்துவ சிகிச்சைக்கு இந்த காப்பீட்டு திட்டம் பெரும்பாலான ஏழைகளுக்கு உதவியாக இருந்து வருகிறது.

      இதற்கிடையே 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனைத்து விதமான சிகிச்சைகளையும் இலவசமாக பெறும் வகையில் 'ஆயுஷ்மான் பாரத்' திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது.

      இந்த திட்டத்தை கடந்த 29-ந் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ஏற்கனவே அமலில் இருந்து வரும் 'ஆயுஷ்மான் பாரத்' திட்டத்துக்கு பொருளாதார அளவுகோல் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் இருந்து வரும் நிலையில் மூத்த குடிமக்களுக்கான இந்த மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் விண்ணப்பிக்க பொருளாதார அளவுகோல் எதுவும் இல்லை.

      ஏழை, நடுத்தர, உயர் நடுத்தர அல்லது பணக்காரர் என எந்தவித பாகுபாடும் இன்றி ஆதார் அட்டை அடிப்படையில் 70 வயதை பூர்த்தி செய்த யார் வேண்டுமானாலும் இத்திட்டத்தில் இணைய முடியும்.

      இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற தங்களது பெயரை பதிவு செய்ய மூத்த குடிமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

      இந்த திட்டத்தின் கீழ் எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும் என தேசிய சுகாதார ஆணையம் விளக்கி உள்ளது. அதாவது, https://beneficiary.nha.gov.in என்ற வலைதளம் மூலமாகவோ அல்லது 'ஆயுஷ்மான்' எனப்படும் செயலி மூலமாகவே விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

      வலைதளம், செல்போன் செயலி மூலம் எப்படி விண்ணப்பிக்கலாம்? என பல்வேறு விளக்கங்களுடன் சுகாதார ஆணையம் தனது வலைதளத்தில் வீடியோவும் வெளியிட்டுள்ளது.

      'ஆயுஷ்மான் பாரத்' செயலியை பொறுத்தமட்டில் இந்த செயலியை 'கூகுள் பிளே ஸ்டோரில்' இருந்து பதிவிறக்கம் செய்ததும் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற உங்களுக்கு தகுதி உள்ளதா? என பரிசோதிக்கப்படுகிறது.

      அதாவது, விண்ணப்பதாரர் 70 வயதுக்கு மேற்பட்டவர் தானா? என ஆதார் அடிப்படையில் உறுதி செய்யப்படுகிறது. விண்ணப்பதாரர் 70 வயதுக்கு மேற்பட்டவராக இல்லையெனில் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற நீங்கள் தகுதியானவர் அல்ல என தெரிவிக்கப்படுகிறது. விண்ணப்பதாரர் 70 வயதுக்கு மேற்பட்டவர் எனில் தகுதியானவர் என்ற அடிப்படையில் சில விவரங்கள் கோரப்படுகிறது.

      அதாவது ஆதார் எண், குடும்ப அட்டை எண் ஆகியவற்றை உள்ளீடு செய்ய வேண்டும். மத்திய அரசின் சுகாதார திட்டம், மத்திய ஆயுத போலீஸ் படையினருக்கான 'ஆயுஷ்மான்' சி.ஏ.பி.எப்., முன்னாள் ராணுவ வீரர்களுக்கான பங்களிப்பு சுகாதார திட்டம் போன்ற சில சுகாதார திட்டங்களை குறிப்பிட்டு இந்த திட்டங்களில் ஏதேனும் ஒன்றில் பயன்பெற்று வருகிறீர்களா? என கேள்வி எழுப்பப்படுகிறது. (மேற்கண்ட எந்த திட்டத்திலும் பயன்பெறவில்லை என்றால் மட்டுமே மூத்த குடிமக்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பயன்பெற முடியும்)

      இதன்பின்பு மீண்டும் ஆதார் எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும். அவ்வாறு ஆதார் எண்ணை பதிவு செய்ததும் சுய விவரங்கள் தானாக பதிவு செய்யப்படுகிறது. பின்னர், செல்போன் மூலம் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

      அதுமட்டுமல்லாமல் தொடர்பு முகவரி, செல்போன் எண், குடும்ப உறுப்பினர்களில் வேறு யாரேனும் 70 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் இருந்தால் அவர்களது விவரங்களையும் பதிவிட வேண்டும். இவை அனைத்தும் முடிந்ததும் மருத்துவ காப்பீட்டு அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

      வலைதளத்திலும் இதே நடைமுறையை பின்பற்றி காப்பீட்டு அட்டையை பெறலாம்.

      ஏற்கனவே நடைமுறையில் இருந்து வரும் 'ஆயுஷ்மான் பாரத்' திட்டத்தில் மூத்த குடிமக்கள் இருக்கும்பட்சத்தில் அவர்கள் எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும் என்ற விளக்கத்தையும் சுகாதார ஆணையம் வலைதளத்தில் வீடியோவாக வௌியிட்டு உள்ளது.

      'ஆயுஷ்மான் பாரத்' திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்தில் 70 வயதிற்கு மேல் உள்ளவர்கள் இருந்தால், அவர்களுக்கென தனியாக ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீடு 'டாப் அப்' செய்யப்படும் என்றும், இந்த 'டாப் அப்'பில் வேறு குடும்ப உறுப்பினர்கள் யாரும் பயன்பெற முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

      • சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தமிழகத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் சென்று வருகிறார்கள்.
      • குழுவாக செல்லும் பக்தர்களுக்கு வாடகை அடிப்படையில் பஸ் வசதி செய்து தரப்படும்.

      சென்னை:

      தமிழக அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குனர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

      பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தமிழகத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் சென்று வருகிறார்கள். பக்தர்கள் வசதிக்காக ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு ஆகிய திருவிழாக்களின் போது, சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

      அதன்படி, இந்த ஆண்டும் வருகிற 15-ந்தேதி (வெள்ளிக்கிழமை) முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 16-ந்தேதி வரை சென்னை கோயம்பேடு, கிளாம்பாக்கம், திருச்சி, கடலூர், மதுரை மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் இருந்து பம்பைக்கு, அதிநவீன சொகுசு மிதவை பஸ்கள் மற்றும் ஏ.சி. இல்லா இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

      சபரிமலை தேவஸ்தானம் அறிவிப்பின்படி 27.12.2024 முதல் 30.12.2024 மாலை 5 மணி வரை கோவில் நடை சாத்தப்படுவதால் 26.12.2024 முதல் 29.12.2024 வரை இச்சிறப்புப் பஸ்கள் இயக்கப்படமாட்டாது.

      இந்த வருடம் பக்தர்கள் கூடுதலாக பயணம் செய்ய முன்வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவற்றினை கருத்தில் கொண்டு சென்னை மற்றும் இதர இடங்களில் இருந்து கூடுதலாக பஸ்கள் இயக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

      மேலும் குழுவாக செல்லும் பக்தர்களுக்கு வாடகை அடிப்படையில் பஸ் வசதி செய்து தரப்படும்.

      60 நாட்களுக்கு முன்னதாக, சிறப்பு பஸ்களுக்கு www.tnstc.in என்ற இணையதளம் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் அதிகாரப்பூர்வ செயலி (ஆப்) ஆகியவற்றின் வழியாக முன்பதிவு செய்துகொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

      மேலும், பஸ்களின் விவரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களுக்கு 9445014452, 9445014424 மற்றும் 9445014463 ஆகிய செல்போன் எண்களைத் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

      இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

      • 2026-ம் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணிக்கு ஆட்சி பங்கீடு அமையும்.
      • விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் பா.ம.க. கூட்டணி போடுமா? என்று கேட்கிறார்கள்.

      ராணிப்பேட்டை:

      ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் நடந்த பா.ம.க. நிர்வாகியின் இல்லத் திருமண விழாவில் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்றார். விழாவில் அவர் பேசியதாவது:-

      கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே தற்போது நடந்திருக்கும் தாக்குதல் சம்பவத்தில் எங்களுடைய நோக்கம் பொதுமேடையில் வன்னியர் சங்க தலைவரை மிரட்டிய விதத்தில் பேசிய நபர் மீது குண்டர் சட்டம் செலுத்தப்பட்டு சிறையில் அடைக்க வேண்டும். எங்களது கட்சி நிர்வாகிகள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்பப்பெற வேண்டும் என்பது தான்.

      புதிய மாவட்டமாக ராணிப்பேட்டை அறிவிக்கப்பட்ட பிறகும், இந்த மாவட்டம் எவ்வித வளர்ச்சியும் அடையவில்லை. பாலாறு அணையில் தடுப்பணை வேண்டும், சோளிங்கரில் புறவழிச்சாலை வேண்டும் என்று மாவட்டத்தை சார்ந்த அமைச்சர் துரைமுருகனுக்கும் பலமுறை கோரிக்கை விடுத்துவிட்டோம்.

      பனப்பாக்கத்தில் நிறைய விவசாய நிலங்கள் டாடா கம்பெனிக்காக கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு வடமாநிலத்தில் இருந்து ஆட்களை பணிக்காக அமர்த்துகிறார்கள். சொந்த மண்ணில் உள்ள மனிதர்களை மதிப்பதில்லை. எனவே டாடா கம்பெனியில் 80 சதவீத வேலைவாய்ப்பானது அப்பகுதி மக்களுக்கே வழங்கப்பட வேண்டும். இல்லை என்றால் கம்பெனிக்காரர்கள் அங்கிருந்து திரும்பிச்செல்ல வேண்டும்.

      2026-ம் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணிக்கு ஆட்சி பங்கீடு அமையும். நல்ல கூட்டணி அமைப்போம். விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் பா.ம.க. கூட்டணி போடுமா? என்று கேட்கிறார்கள். அதை சொல்வதற்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் உள்ளது. அப்போது பாருங்கள்.

      முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற இரண்டு நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து நிராகரிக்கப்பட்டது. அதை எதற்காக கூட்டணி கட்சிகள் பெரிதுபடுத்தவில்லை? கவர்னர் தவறு செய்தால் மட்டும் கூச்சல் போடுகிறார்களே?

      இவ்வாறு அவர் பேசினார்.

      • டெல்டா மாவட்டங்களில் ஒரு வாரத்திற்கு மழை உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
      • சிவகங்கை மாவட்டத்தில் சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

      தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியில் இருந்து வரும் ஈரப்பத காற்று, வட இந்திய பகுதிகளில் இருந்து வீசும் வறண்ட காற்று ஆகியவற்றால் ஏற்படும் காற்று குவிதலால் தமிழ்நாட்டில் மழை பெய்து வருகிறது.

      இதன் காரணத்தாலும், அதன் பிறகு நிகழும் வானிலை மாற்றங்களாலும் தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று முதல் 13-ந்தேதி வரை பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் டெல்டா மாவட்டங்களில் ஒரு வாரத்திற்கு மழை உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

      திருவாரூரில் பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

      இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

      பள்ளிக்கு விடுமுறை அளிப்பது குறித்து தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்யலாம் என்று முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். மழையின் தாக்கத்தை பொறுத்து தலைமை ஆசிரியர்கள் முடிவெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

      ×