என் மலர்
உள்ளூர் செய்திகள்
- சந்திரமோகன் மற்றும் அவரது தோழி தனலட்சுமி மீது 5 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
- சந்திரமோகன் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும்.
சென்னை மெரினா லூப் சாலையில் நின்று கொண்டிருந்த நான்கு சக்கர வாகனத்தை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் எடுக்குமாறு கூறியபோது, சந்திர மோகனும் அவரது தோழி தனலெட்சுமியும் காவல் துறையினரை ஆபாசமாக திட்டினர்.
இதையடுத்து, மயிலாப்பூர் காவல்துறையினர் அளித்த புகாரின் அடிப்படையில், சந்திரமோகன் மற்றும் அவரது தோழி தனலட்சுமி ஆகியோர் ஆபாசமாக திட்டுதல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் உட்பட 5 பிரிவுகளின் கீழ் மயிலாப்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட, சந்திரமோகன் மற்றும் தனலட்சுமி ஆகியோர் கடந்த சிலதினங்களுக்கு முன் ஜாமீன் கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். ஆனால் இருவரின் ஜாமின் மனுவையும் கோர்ட் தள்ளுபடி செய்தது.
இதனையடுத்து அந்த ஜோடி மீண்டும் ஜாமின் கேட்டு மனுதாக்கல் செய்த நிலையில் அவர்களுக்கு ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்திரமோகன் மட்டும் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனையும் விடுக்கப்பட்டுள்ளது.
- சாலையில் ஏற்பட்டுள்ள குண்டு, குழிகளை மூட உத்தரவிட்டார்.
- நிரந்தரமாக தேசிய நெடுஞ்சாலை சரி செய்யப்படும்.
கன்னியாகுமரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், அங்குள்ள தேசிய நெடுஞ்சாலைக்கு சென்று ஆய்வு செய்தார்.
அப்போது சாலையை சீரமைக்க 14.87 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டுள்ள நிலையில், தற்போது சாலை மிகவும் பழுதடைந்து மக்கள் பயணிக்க சிரமப்படுகின்றனர்.
எனவே நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு ஒப்பந்தக்காரர் இறுதி செய்வதற்கு முன் சாலையில் ஏற்பட்டுள்ள குண்டு குழிகளை மூட வேண்டும், உடனடியாக சாலைகளை செப்பனிடவும் உத்தரவிட்டார். இதையடுத்து இன்று குழித்துறை பகுதியில் சாலையை சீரமைக்கும் பணிகள் நடைபெற்றது.

மேலும் நெடுஞ்சாலை துறை மற்றும் நகராட்சி அதிகாரிகளிடம் விஜய் வசந்த் எம்பி பேசி சாலையை நல்ல முறையில் சீரமைக்க அறிவுறுத்தினார்.
இதையடுத்து ஓடையில் நீர் செல்ல முடியாமல் மழை நீர் சாலையில் தங்குவதால் சாலை சேதமடைவதை உணர்ந்து ஜே.சி.பி. எந்திரம் மூலம் ஓடையை தூர் வாரவும் கோரினார்.

இது தற்காலிகமான தீர்வு தான் எனவும் கூடிய விரைவில் நிரந்தரமாக தேசிய நெடுஞ்சாலை சரி செய்யப்படும் எனவும் உறுதி அளித்தார்.
- சென்னை கடலின் நடுவே கலைஞர் பேனா சிலை அமைப்பதற்கு நிதி ஒதுக்க முனைப்பு காட்டப்படுகிறது.
- திராவிட மாடல் அரசு பன்னாட்டு அரங்கம் கட்டுவதற்கு முனைப்பு காட்டுவதற்கான காரணம் என்ன?
சென்னை:
அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அம்மா ஆட்சியில் மக்கள் நலனுக்காகத் தொடங்கப்பட்ட திட்டங்கள் என்ற ஒரே காரணத்திற்காக, திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற 42 மாதங்களில், பல திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யாததால், அவை முழுமையாக முடிக்கப்படாமலும், கிடப்பிலும் போடப்பட்டுள்ளன. உதாரணமாக,
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் ஒன்றியம், கூனிமேடு கிராமத்தில் இருந்து தினமும் 60 ஆடுனு கடல் நீரை குடிநீராக்கும் சுமார் ரூ. 1,500 கோடி மதிப்பீட்டிலான திட்டம் - கைவிடப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட எல்லையில், அழகன்குப்பம் பக்கிங்ஹாம் கால்வாயிலும், ஆலம்பராகோட்டை அருகிலும் சுமார் ரூ. 235 கோடி மதிப்பீட்டில் மீன்பிடித் துறைமுகம் அமைக்கும் திட்டம் - ரத்து செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரத்தில் ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகம் - ரத்து செய்யப்பட்டு உள்ளது.
காவிரியின் குறுக்கே ஆதனூர் - குமாரமங்கலம் தடுப்பணை – காலதாமதமாக பணிகள் நடைபெறுகின்றன.
காவிரியின் குறுக்கே நஞ்சை-புகளூர் கதவணையுடன் கூடிய தடுப்பணை – காலதாமதமாக பணிகள் நடைபெறுகின்றன.
அத்திக்கடவு-அவினாசி திட்டம் - முழுமையாக செயல்படுத்தவில்லை.
காவிரி உபரி நீரினை 100 ஏரிகளில் நிரப்பும் திட்டம் - முழுமையாக செயல்படுத்தவில்லை.
தலைவாசல் கால்நடைப் பூங்கா - திறக்கப்படவில்லை.
தென்காசி - ஜம்புநதி மேல்மட்டக் கால்வாய் திட்டப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி - இரட்டைகுளம் முதல் ஊத்துமலை வரை கால்வாய் பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கப்படவில்லை.
ரூ. 125 கோடி மதிப்பீட்டிலான மதுராந்தகம் ஏரி தூர் வாரும் பணி - மூன்றாண்டுகளாக பணியில் தொய்வு.
இவ்வாறு விவசாயிகள், பொதுமக்கள் என்று அனைவருக்கும் பயன்படும் பல திட்டங்களை இந்த திராவிட மாடல் அரசு கிடப்பில் போட்டுள்ளதை அடுக்கிக்கொண்டே போகலாம். மக்கள் நலத் திட்டங்களுக்கான மூலதனச் செலவுகளை மேற்கொள்ளாமல், அத்தியாவசியமற்ற செலவுகளை ஸ்டாலினின் தலைமையிலான திமுக அரசு செய்து கொண்டிருக்கிறது. தமிழக மக்களுக்கு சிறிதும் பயனளிக்காத கார் ரேஸ் நடத்தப்படுகிறது. கருணாநிதி பெயரில் அவசியமற்ற பணிகள் மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்படுகின்றன.
சென்னை கடலின் நடுவே கலைஞர் பேனா சிலை அமைப்பதற்கு நிதி ஒதுக்க முனைப்பு காட்டப்படுகிறது. மேலும், சென்னை முட்டுக்காட்டில் ஐந்து லட்சம் சதுர அடியில், 487 கோடி ரூபாய் செலவில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைப்பதற்கு இந்த
திராவிட மாடல் அரசு டெண்டர் கோரியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், தென்பெண்ணை ஆற்றினை, பாலாற்றுடன் செய்யாறு வழியாக இணைக்கவும் மற்றும் நந்தன் கால்வாய்க்கு பாசன வசதியை உறுதி செய்யவும், இணைப்புக் கால்வாய் வெட்டும் திட்டத்தினை மேற்கொள்ள சுமார் 320 கோடி ரூபாய் தேவைப்படும் என்ற நிலையில், திராவிட மாடல் திமுக ஆட்சியில் இத்திட்டத்தில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. வட தமிழ் நாடு குறிப்பாக, விவசாயப் பெருமக்கள் பெருமளவில் பயனடையும் இத்திட்டத்திற்கு, ஸ்டாலினின் திமுக அரசு
நிதி இல்லை என்ற காரணத்தைக் காட்டி கிடப்பில் போட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
பல ஆண்டுகளாக தமிழக விவசாயிகள் நதிநீர் இணைப்புக்காக பல போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில், திராவிட மாடல் அரசு அதில் கவனம் செலுத்தாமல் பன்னாட்டு அரங்கம் கட்டுவதற்கு முனைப்பு காட்டுவதற்கான காரணம் என்ன?
உள்நாட்டு நதிநீர் இணைப்புத் திட்டங்களை, வருகின்ற பத்து ஆண்டுகளில் செயல்படுத்தாவிட்டால், தமிழகத்தில் பல மாவட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன.
மு.க. ஸ்டாலின், அவரது தந்தை பெயரை அரசு கட்டிடங்களுக்கு வைக்க வேண்டுமென்றால், அவரது அறக்கட்டளை சார்பில் அப்பணிகளை மேற்கொள்ளலாம். போதிய நிதி இல்லாமல் மக்கள் நலத் திட்டங்கள் பல முடக்கி வைக்கப்பட்டுள்ளன. எனவே, உடனடியாக தேவையான நிதியினை அத்திட்டங்களுக்கு முழுமையாக ஒதுக்கீடு செய்ய ஸ்டாலினின் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சீமானுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
- தவெக மாநாட்டிற்கு பிறகு சீமான், விஜய் குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வந்தார்.
இயக்குநரும் நடிகரும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளாரன சீமான் இன்று தனது 58-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், சீமானுக்கு தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சகோதரர் சீமான் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
தவெக மாநாட்டிற்கு பிறகு சீமான், விஜய் கட்சியின் கொள்கைள் குறித்து கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், விஜய் பிறந்தநாள் வாழ்த்து கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
- கடையை எப்போ திறப்போம்னு காத்திருக்கும்.
- எந்த பொருளையும் சேதப்படுத்தாம அதுவே போயிடும்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் ஒரு மளிகை கடையில் மாடுகள் தினமும் கடையை எப்போ திறப்போம்னு காத்திருந்து, கதவை திறந்ததுமே உள்ளே நுழைந்து அதற்கு தேவையானதை சாப்பிட்டு எந்த பொருளையும் சேதப்படுத்தாம அதுவே போயிடுமாம்.
இதுகுறித்து கடையின் உரிமையாளர் மாசிலாமணி கூறியதாவது:-
சிவகங்கை மாவட்டம் சிங்கபுணரியில் பஸ்ஸ்டாண்டிற்கு எதிரில் மளிகை கடை நடத்திவருகிறேன். மாடுகள் நாங்கள் தினமும் கடை திறப்பதற்கு முன்பே கடைக்கு வந்து காத்து நிற்கும். நாங்கள் கடையை திறந்ததும் முதல் ஆளாக கடைக்குள் நுழைந்து அதற்கு தேவையான பொருட்களை எடுத்து சாப்பிட்டுவிட்டு எந்த பொருட்சேதத்தையும் ஏற்படுத்தாமல் வெளியே சென்றுவிடும்.
தினமும் இரண்டு மூன்று தடவை கடைக்கு வரும். நாங்கள் மாடுகளை தொந்தரவு செய்வதில்லை, நாங்கள் அந்த மாடுகளை சிவனாக பாவித்து அதனை தடுப்பதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- லண்டனில் அரசியல் படிப்பை முடித்துவிட்டு நவம்பர் 28-ம் தேதி தமிழகம் திரும்ப உள்ளார்.
- அண்ணாமலை வந்த பிறகு பெருங்கோட்டம் வாரியாக பொதுக்கூட்டங்களும் நடைபெற உள்ளன.
லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் சர்வதேச அரசியல் படிப்புக்காக பல்வேறு நாடுகளை சேர்ந்த 40 பேரை தேர்வு செய்துள்ளது. இதில் இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள 12 பேரில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையும் ஒருவர். அங்கு தங்கி படிப்பவர்களுக்கான செலவை பல்கலைக்கழகமே ஏற்றுக்கொண்டது.
இதற்காக அண்ணாமலை கடந்த ஆகஸ்ட் மாதம் (28-ந்தேதி) இரவு சென்னையில் இருந்து லண்டன் புறப்பட்டு சென்றார். 3 மாதங்கள் லண்டனில் தங்கி படிக்கும் அண்ணாமலை வருகிற நவம்பர் மாத இறுதியில் படிப்பை முடித்து சென்னை திரும்புவார் என கூறப்பட்டது.
அதன்படி, லண்டனில் அரசியல் படிப்பை முடித்துவிட்டு நவம்பர் 28-ம் தேதி தமிழகம் திரும்ப உள்ளார்.
இந்நிலையில் லண்டனில் இருந்து திரும்பியதும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல அண்ணாமலை திட்டமிட்டுள்ளார்.
தமிழகம் திரும்பியதும் கோவையில் 2 நாட்கள் தனியார் நிகழ்ச்சியில் அண்ணாமலை பங்கேற்கிறார்.
ஜனவரி முதல் ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் அண்ணாமலை சுற்றுப்பயணம் செல்ல திட்டமிட்டுள்ளார். 2026 தேர்தலையொட்டி ஒவ்வொரு தொகுதியிலும் மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்க அவர் திட்டமிட்டுள்ளார்.
கிராமப்புறங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து, மக்களை சந்தித்து அண்ணாமலை மனுக்களை பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அண்ணாமலை வந்த பிறகு பெருங்கோட்டம் வாரியாக பொதுக்கூட்டங்களும் நடைபெற உள்ளன.
டிசம்பர் மாத இறுதிக்குள் பாஜகவில் நிர்வாகிகள் மாற்றம் நிகழலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இளைஞர்களுக்கு பொறுப்பு வழங்குவது, இளைஞர்களை அதிகளவில் கட்சியில் சேர்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
- கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
- சிவலிங்கம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது.
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த கரியாக்குடல் கிராமத்தில் சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான அகிலாண்டேஸ்வரி சமேத கைலாசநாதர் திருக்கோவில் உள்ளது.
இந்த கோவிலில் நேற்று கந்த சஷ்டி விழா நடந்தது. இதையொட்டி அதிகாலை கைலாசநாதர் மற்றும் வள்ளி தெய்வானை சமேத முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது.
பூஜை நடந்து கொண்டிருந்த போது சிவலிங்கத்தில் திடீரென ஒற்றைக் கண் தோன்றியது.
இதை பார்த்த பக்தர்கள் சிவலிங்கம் நெற்றிக்கண் திறந்து விட்டதாக பரவசம் அடைந்தனர். மேலும் ஓம் நம சிவாய என கோஷங்களை எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.
இந்த தகவல், சுற்று வட்டார பகுதிகளில் வேகமாக பரவியது. இந்த நிகழ்வை பக்தர்கள் சிலர் போட்டோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பகல் 12 மணி முதல் இரவு 9 மணி வரை இந்த அரிய காட்சியை கண்டு பக்தர்கள் பரவசத்தில் மூழ்கினர்.
பின்னர் சிவலிங்கம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- விஜய் தனது முதல் அரசியல் பேச்சை அதிரடியாக பேசி அரசியல் அரங்கை அதிர வைத்தார்.
- செயற்குழு கூட்டம் முடிவடைந்ததை தொடர்ந்து விஜய் தனது 69-வது படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்று நடித்து வருகிறார்.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். அவர் முதல் அரசியல் மாநாட்டை கடந்த மாதம் 27-ந் தேதி விக்கரவாண்டி வி சாலையில் நடத்தினார்.
மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றதுடன் மாநாட்டு மேடையில் விஜய் தனது முதல் அரசியல் பேச்சை அதிரடியாக பேசி அரசியல் அரங்கை அதிர வைத்தார்.
கட்சி கொள்கை, திட்டங்கள் திராவிட அரசியல் இரு மொழி கொள்கை மற்றும் பல்வேறு அரசியல் சார்ந்த விஷயங்களை அவரது பாணியில் விஜய் பேசியது தமிழகமே திரும்பி பார்க்கும் வகையில் அமைந்தது.
இதைத் தொடர்ந்து கடந்த 3-ந் தேதி அன்று சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
செயற்குழு கூட்டம் முடிவடைந்ததை தொடர்ந்து விஜய் தனது 69-வது படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்று நடித்து வருகிறார்.
இந்நிலையில் லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் தலைமையில் இயங்கும் தேர்தல் வியூக நிறுவனத்திடம் தவெக தலைவர் விஜய், நிர்வாகிகள் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
- தேரோட்டம் அடுத்த மாதம் 10-ந்தேதி நடைபெற உள்ளது.
- 5 தேர்கள் வலம் வருவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
வேங்கிக்கால்:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா அடுத்த மாதம் 13-ந்தேதி மகாதீபம் ஏற்றப்படுகிறது.
கார்த்திகை தீபத்திருவிழா 7-ம் நாள் உற்சவத்தில் தேரோட்டம் நடைபெறும். 5 தேர்கள் வலம் வருவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
இந்த ஆண்டு கார்த்திகை தீபத்திருவிழா தேரோட்டம் அடுத்த மாதம் 10-ந்தேதி நடைபெற உள்ளது.
இந்த நிலையில் பெரிய தேர் என்று அழைக்கப்படும் அண்ணாமலையார் தேர் ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கும் பணிகள் நடைபெற்றது. இந்த பணிகள் முழுமையாக முடிவுற்ற நிலையில் இன்று காலை வெள்ளோட்டம் நடந்தது.
காலை 8.14 மணிக்கு பெரிய தேரை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வடம்பிடித்து தொடங்கி வைத்தார்.
கலெக்டர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர், மாநில தடகள சங்க துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், கோவில் இணை ஆணையர் சி.ஜோதி, அறங்காவலர் குழு தலைவர் இரா.ஜீவானந்தம், முன்னாள் நகர மன்ற தலைவர் இரா.ஸ்ரீதரன், மாநகராட்சி ஆணையாளர் காந்திராஜ், அ.தி.மு.க. எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் டிஸ்கோ குணசேகரன், நகர செயலாளர் ஜெ.செல்வம், ரேடியோ ஆறுமுகம் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அண்ணாமலையாருக்கு அரோகரா, உண்ணாமலை அம்மனுக்கு அரோகரா என்ற பக்தி கோஷம் எதிரொலிக்க தேர் அசைந்தாடியபடி மாடவீதியில் வலம் வந்தது.
தேர் வெள்ளோட்டத்தை முன்னிட்டு 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தேரோட்டத்தை முன்னிட்டு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

தேருக்கு முன்பாக பரத நாட்டிய கலைஞர்கள் பரதநாட்டியம் ஆடியபடி வந்தனர். தேரோட்டத்தில் திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்காண பக்தர்கள் கலந்துகொண்டனர்.
- வட இந்திய பகுதிகளில் இருந்து வீசும் வறண்ட காற்று ஆகியவற்றால் ஏற்படும் காற்று குவிதலால் தமிழ்நாட்டில் மழை பெய்து வருகிறது.
- தமிழ்நாடு, புதுச்சேரியில் 13-ந்தேதி வரை பரவலாக மழைக்கு வாய்ப்பு உள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியில் இருந்து வரும் ஈரப்பத காற்று, வட இந்திய பகுதிகளில் இருந்து வீசும் வறண்ட காற்று ஆகியவற்றால் ஏற்படும் காற்று குவிதலால் தமிழ்நாட்டில் மழை பெய்து வருகிறது.
இதன் காரணத்தாலும், அதன் பிறகு நிகழும் வானிலை மாற்றங்களாலும் தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று முதல் 13-ந்தேதி வரை பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
இந்நிலையில் தமிழ்நாட்டின் 7 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கையில் பிற்பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கொடுமுடி பேரூராட்சியின் தலைவரின் கணவரான சுப்பிரமணியத்தின் தலையீடு பேரூராட்சி நிர்வாகத்தில் அதிகம் உள்ளது.
- தி.மு.க நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானபடுத்தினர்.
கொடுமுடி:
ஈரோடு மாவட்டம் கொடுமுடி பேரூராட்சியின் தலைவராக தற்போது உள்ளவர் திலகவதிசுப்பிரமணி. இவரது கணவர் பேரூராட்சி நிர்வாகத்திலும், பேரூராட்சிக்கு வரவேண்டிய நிதி ஆதாரங்களிலும் தலையிட்டு பேரூராட்சிக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தி வருவதுடன் பேரூராட்சி அலுவலகத்தை தனது விருப்பத்திற்கு பயன்படுத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான ராட்சத ஜெனரேட்டர்கள் உள்ளிட்டவற்றை நிறுத்தி வைக்கும் இடமாக பேரூராட்சி வளாகத்தை பயன்படுத்தி வருகிறார்.
பேரூராட்சியி்ன் தலைவரின் முகவரியிட்டு பேரூராட்சிக்கு வரும் கடிதங்களை தலைவரது கணவர் சுப்பிரமணி பெற்றுக்கொள்வதுடன் மன்றக்கூட்டங்களிலும் கலந்துகொண்டு முடிவுகளை எடுக்கசொல்லி நிர்வாகத்தை சீர்குலைக்கிறார். அத்துடன் பேரூராட்சியில் கவுன்சிலர்களாக உள்ளவர்களை மரியாதை குறைவாக நடத்துகிறார் என்பன உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து அது சம்பந்தமான கண்டனவரிகள் அடங்கிய பதாகைகளுடன் நேற்று 12 கவுன்சிலர்கள் கொடுமுடியில் உள்ள பேரூராட்சி அலுவலகத்துக்கு வந்து காலவரையற்ற போராட்டத்தை துவங்கினர்.
இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
கொடுமுடி பேரூராட்சியின் தலைவரின் கணவரான சுப்பிரமணியத்தின் தலையீடு பேரூராட்சி நிர்வாகத்தில் அதிகம் உள்ளது. இதனை கண்டித்து தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த 3-ம்தேதி கொடுமுடி பேரூராட்சியின் செயல் அலுவலர் மற்றும் பேரூராட்சிகளின் துணை இயக்குனரிடம் மனு அளித்துள்ளோம். அந்த மனு மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்த விஷயத்தை மாவட்ட செயலாளரும் அமைச்சருமான முத்துசாமியின் கவனத்துக்கு கொண்டு சென்றோம், அவரும் பல முறை இருதரப்பிடமும் பேசிவிட்டார். இருந்த போதும் தலைவரின் கணவர் மாறவில்லை, என்றனர்.
கொடுமுடி பேரூராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டது குறித்து அறிந்த கொடுமுடி ஒன்றிய தி.மு.க நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானபடுத்தினர். அவர்களிடம் தங்களது முடிவை உறுதிபட தெரிவித்த கவுன்சிலர்கள் கொடுமுடி பேரூராட்சி தலைவரை மாற்றும் வரை தங்களது போராட்டம் தொடரும் என தெரிவித்துவிட்டு தங்களது போராட்டத்தை நேற்று மாலை தற்காலிகமாக ஒத்திவைத்தனர்.
ஈரோடு:
வடகிழக்கு பருவமழை மற்றும் தென்மேற்கு வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக ஈரோடு, கோவை, நீலகிரி உள்ளிட்ட 14 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
அதன்படி 7-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
மேலும் தென்மேற்கு வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள வளி மண்டல் கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு முழுவதும் 6 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று காலை முதலே ஈரோடு மாநகர் பகுதியில் வெயிலின் தாக்கம் வழக்கம் போல் அதிகரித்து காணப்பட்டது. ஆனால் மாலை 4 மணி அளவில் திடீரென லேசான காற்று மற்றும் இடியுடன் பலத்த மழை பெய்ய தொடங்கியது. சுமார் 30 நிமிடங்கள் வரை இந்த மழை கொட்டி தீர்த்தது.
இதனால் ஈரோடு மாநகர் பகுதியில் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. ஈரோடு அகில்மேடு வீதியில் சின்ன மார்க்கெட் பகுதி அம்மா உணவகத்தில் மழைநீர் சூழ்ந்து வெள்ள காடாக காட்சியளித்தது. இதனால் இந்த பகுதியை கடக்க வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தனர்.
இதுபோல் கருங்கல்பாளையம், வீரப்பன்சத்திரம் பகுதியில் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தனர். ஈரோடு வ.உ.சி. பூங்கா காய்கறி மார்க்கெட் வளாகத்தில் வழக்கம் போல் மழைநீர் தேங்கி நின்று சேரும் சவுதியுமாக காட்சியளித்ததால் காய்கறிகள் வாங்க சென்ற பொதுமக்கள், வியாபாரிகள் கடும் அவதி அடைந்தனர். இங்கே லேசாக மழை பெய்தாலே சேரும் சகதியுமாக காட்சியளிப்பது தொடர்கதை ஆகி வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி முதல் இன்று காலை 8 மணி வரையிலான நிலவரத்தின்படி, மாவட்டத்தில் 37.40 மி.மீ. மழை பதிவாகி இருந்தது. அதிகபட்சமாக ஈரோட்டில் 14.20 மி.மீ. மழை பதிவாகி இருந்தது.
மாவட்ட த்தின் பல்வேறு பகுதிகளில் பெய்திருந்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-
ஈரோடு-14.20, கொடுமுடி-6, பெருந்துறை-5, சென்னிமலை-2, பவானி-1.60, குண்டேரிப்பள்ளம்-1.20, பவானிசாகர் அணை-7.40.






