என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • 2 விசைப்படகுகளுடன் கைது செய்யப்பட்ட 18 தமிழக மீனவர்கள் காங்கேசன் கடற்படை முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
    • மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தமிழக மீனவர்கள் 18 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 18 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். 2 விசைப்படகுகளுடன் கைது செய்யப்பட்ட 18 தமிழக மீனவர்கள் காங்கேசன் கடற்படை முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

    தமிழக மீனவர்கள் தொடர்ந்து சிறைபிடிக்கப்படும் சம்பவம் மீனவ மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • நாளை மாலை 4.08 மணிக்கு ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்கிறது.
    • உத்தரவு மீன்வள கூட்டுறவு சங்கம் மூலமாக திருவள்ளூர் மாவட்ட மீன்வளத்துறை பிறப்பித்துள்ளது.

    சூரிய ஒளிவட்ட ஆய்வுக்கான ஐரோப்பிய செயற்கைகோளை சுமந்து கொண்டு நாளை (புதன்கிழமை) விண்ணில் பாய இருக்கும் பி.எஸ்.எல்.வி.- சி-59 ராக்கெட்டுக் கான 25 மணி நேர கவுண்ட் டவுன் இன்று பகல் 3.08 மணிக்கு தொடங்குகிறது. இதனை முடித்துக்கொண்டு நாளை (புதன்கிழமை) மாலை 4.08 மணிக்கு ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்கிறது.

    இந்த நிலையில், பழவேற்காடு மீனவர்கள் நாளை கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு மீன்வள கூட்டுறவு சங்கம் மூலமாக திருவள்ளூர் மாவட்ட மீன்வளத்துறை பிறப்பித்துள்ளது.

    ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி-சி 59 ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்பட உள்ள நிலையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • தருமபுரி, கிருஷ்ணகிரியில் வரலாறு காணாத அளவிற்கு கனமழை பெய்ததால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    • கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே கரையை கடந்தது.

    இதன் எதிரொலியால், தமிழ்நாட்டில் வடமாவட்டங்களில் அதி கனமழை பெய்தது. குறிப்பாக புதுச்சேரி, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரியில் வரலாறு காணாத அளவிற்கு கனமழை பெய்ததால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    கனமழையால் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

    • பேரிடர் மீட்புப் படைகளைத் தயார் நிலையில் வைத்திருப்பது அவசியமாகும்.
    • புதையுண்ட மூன்று வீடுகளில் சிக்கியவர்கள் சடலமாக மீட்கப்பட்டச் செய்தி, நெஞ்சைப் பதற வைக்கிறது.

    சென்னை:

    திருவண்ணாமலையில் புயல் காரணமாக நேற்று மிக கனமழை பெய்தது. மகா தீப மலையின் சுமார் 100 மீட்டர் உயரத்தில் இருந்து திடீரென மண் சரிவு ஏற்பட்டது. இதில் 7 பேர் சிக்கிய நிலையில் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் உயிரிழந்த குடும்பத்திற்கு தவெக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து எக்ஸ் தள பதவில் அவர் கூறியிருப்பதாவது:-

    திருவண்ணாமலை தீப மலையில் ஏற்பட்ட திடீர் மண்சரிவால் பாறைகள் உருண்டு விழுந்ததில், புதையுண்ட மூன்று வீடுகளில் சிக்கியவர்கள் சடலமாக மீட்கப்பட்டச் செய்தி, நெஞ்சைப் பதற வைக்கிறது.

    உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

    கடந்த காலத்திலும் சரி, தற்போதும் சரி, தங்கள் உயிரைப் பணயம் வைத்து மக்களின் உயிரைக் காக்கும் பேரிடர் மீட்புப் படையினரின் அர்ப்பணிப்புடன் கூடிய பணி என்பது அளப்பரியதாகும். இருப்பினும் புயல், மழை, வெள்ளப் பெருக்கு ஆகிய காலங்களில் ஒன்றிய, மாநில அரசுகள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, அதிக அளவில் ஆபத்து நேரிட வாய்ப்புள்ள பகுதிகளில் பேரிடர் மீட்புப் படைகளைத் தயார் நிலையில் வைத்திருப்பது அவசியமாகும்.

    தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, திருச்சி, பெரம்பலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் அங்கு மலையடிவாரங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களையும், ஆற்றங்கரையோரம் வசிப்பவர்களையும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து, அவர்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளைத் தமிழக அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தமிழக அரசு சார்பில் காவல், தீயணைப்பு துறையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
    • அரசு 7 பேரையும் உயிருடன் மீட்கவே முயற்சிகளை மேற்கொண்டது.

    திருவண்ணாமலையில் மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் மீட்பு பணிகள் குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

    இடிபாடுகளில் சிக்கியுள்ள வீட்டை துணை முதலமைச்சர் நேரில் பார்வையிட்டார்.

    பிறகு செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர், " திருவண்ணாமலையில் நடந்தது மிகவும் தயரமான சம்பவம். விபத்து நடந்த பின்பு தேசிய பேரிடர் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தமிழக அரசு சார்பில் காவல், தீயணைப்பு துறையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். அரசு 7 பேரையும் உயிருடன் மீட்கவே முயற்சிகளை மேற்கொண்டது.

    அமைச்சர்கள் மற்றும் ஆட்சியர் தொடர்ந்து மீட்பு பணியினை ஆய்வு செய்து வருகின்றனர். ஃபெஞ்சல் புயல், மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய ரூ.2000 கோடி கேட்கப்பட்டுள்ளது.

    நாளை மாலைக்குள், அவர்களின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். ஐஐடி குழுவினர் நாளை மண் மாதிரிகளை எடுத்து ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆகாஷ் அசோக் குமார் மற்றும் ஆந்திராவின் சுமதி நல்லபந்து ஆகியோர் சாம்பியன் பட்டம் வென்றனர்.
    • அமீபா பௌலிங் மையத்தில் ARC 33வது தேசிய டென்பின் பௌலிங் சாம்பியன்ஷிப் போட்டி நடைப்பெற்றது.

    பெங்களூரில் உள்ள அமீபா பௌலிங் மையத்தில் நடந்து முடிந்த ARC 33வது தேசிய டென்பின் பௌலிங் சாம்பியன்ஷிப் போட்டியில் கர்நாடகாவின் ஆகாஷ் அசோக் குமார் மற்றும் ஆந்திராவின் சுமதி நல்லபந்து ஆகியோர் சாம்பியன் பட்டம் வென்றனர்.

    தனது ஏழாவது தொடர் இறுதிப் போட்டியில், கர்நாடகாவின் ஆகாஷ் டெல்லியின் ஷேக் அப்துல் ஹமீதை (425- 353) இரண்டு கேம் டைட்டில் மோதலில் எளிதாக வென்று 3வது பட்டத்தை வென்றார்.

    ஸ்டெப்லேடர் சுற்று ஆட்டங்களில், 2 கேம்களின் மொத்த பின்ஃபால் அடிப்படையில், டெல்லியின் ஷேக் அப்துல் ஹமீத், டெல்லியின் துருவ் சர்தாவை (433-335) 98 பின்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    முதல் போட்டியில், டெல்லியின் துருவ் சர்தா, தமிழகத்தின் ஷபீர் தன்கோட்டை (412-372) வீழ்த்தினார்.

    தமிழ்நாடு அணியின் ஷபீர் தன்கோட், கணேஷ் என்டி மற்றும் மஹிபால் சிங் ஆகியோர் முறையே 4, 5 மற்றும் 7வது இடத்தைப் பிடித்தனர்.

     

    பெண்களுக்கான இறுதிப் போட்டியில் ஆந்திராவின் சுமதி நல்லபந்து, கர்நாடகாவின் பிரீமல் ஜேவை (342–286) தோற்கடித்தார். இது சுமதியின் 4வது தேசிய கிரீடம்.

    முன்னதாக, சுமதி (ஆந்திரப் பிரதேசம்) அனுராதா சர்தாவை (டெல்லி) தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் (356-272) மற்றும் ஆட்டம் 1 இல், சுமதி காஷ்மீர் குடாலேவை (மகாராஷ்டிரா) தோற்கடித்தார் (424-309)

    விருதுகள் வழங்கப்பட்ட வீரர்கள் பின்வருமாறு.

    சிறப்பு விருதுகள்:

    1) மிகவும் நம்பிக்கைக்குரிய வீரர் - தனுஷ் ரெட்டி (கர்நாடகா)

    2) 225க்கு மேல் பெற்ற அதிகபட்ச பின்பால்(ஆண்கள்) – ஷேக் அப்துல் ஹமீத் (டெல்லி) (11)

    3) 200 ககு மேல் பெற்ற அதிகபட்ச பின்பால் (பெண்கள்) - ஷபீனா கஸ்மானி (மகாராஷ்டிரா) (4)

    4) 6 விளையாட்டுகளில் அதிக பின்பால் (ஆண்கள்) - ஷேக் அப்துல் ஹமீத் (டெல்லி) (1359 பின்கள்)

    5) 6 விளையாட்டுகளில் அதிக பின்பால் (பெண்கள்) - அனுராதா சாரதா(டெல்லி) (1081 பின்பால்)

    6) பெர்ஃபெக்ட் கேம்- ஷேக் அப்துல் ஹமீத் (டெல்லி)

    • வடபழனி நெக்ஸஸ் விஜயா மாலில் நடைபெற்றது. அப்போது, JOOPOP HOME செயலி (app) அறிமுகப்படுத்தப்பட்டது.
    • இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி மற்றும் நடிகர் பாபி சிம்ஹா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    தமிழ் திரையுலகின் பிரபல டான்ஸ் மாஸ்டரான ஷெரிப் மாஸ்டர் நடனத்திற்காக பிரத்தியேகமாக "JOOPOP HOME" என்கிற இந்தியாவின் முதல் OTT தளத்தை துவங்கியுள்ளார்.

    இதற்கான விழா வடபழனி நெக்ஸஸ் விஜயா மாலில் நடைபெற்றது. அப்போது, JOOPOP HOME செயலி (app) அறிமுகப்படுத்தப்பட்டது.

    ஓடிடி ஆப் அறிமுக நிகழ்வில் புகழ்பெற்ற திரைப்பட கலைஞர்களான இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி மற்றும் நடிகர் பாபி சிம்ஹா ஆகியோருடன் ஷெரீப்பின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் பங்களிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    JOOPOP HOME அறிமுக நிகழ்வில் கலந்து கொண்ட நட்சத்திரங்கள், ஷெரிப்பின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பைப் பற்றிய தங்கள் பார்வையைப் பகிர்ந்து கொண்டனர். 

    இதுகுறித்து இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் கூறுகையில், " ஷெரிப் ஒரு நடன இயக்குநர் மட்டுமல்ல, அவர் ஒரு கதைசொல்லி. நாங்கள் இணைந்து பணியாற்றிய ஒவ்வொரு திரைப்படத்திலும் அவரது படைப்பாற்றலால் உயர்ந்து கொண்டே வருகிறது. JOOPOP HOME எனும் இந்த ஆப்  நடனத்தை அடுத்த படிக்கு கொண்டு  செல்வதற்கான அவரது உந்துதலுக்கு ஒரு சான்றாகும்" என்றார்.

    மேலும், டான்ஸ் மாஸ்டர்  ஷெரிப் கூறுகையில், "ஆரம்பத்தில் இருந்தே நடனம்தான் என் வாழ்க்கை. எனது நடனப் பள்ளியிலிருந்து தொடங்கி, 2009ல் போட்டி, இப்போது ஒரு திரைப்பட நடன இயக்குநர் என, நான் எப்போதும், அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி பயணிக்க வேண்டும் என்பதில் நம்பிக்கை வைத்திருக்கிறேன்.

    JOOPOP HOME என்பது சமூகத்திற்கு நான் ஆற்றும் பங்களிப்பாகும். நடனக் கலைஞர்கள் உலகளாவிய அரங்கில் பிரகாசிக்க ஒரு இடத்தை உருவாக்குவதற்கு என்னுடைய ஒரு சிறு முயற்சியாக இது இருக்கும்" என்றார்.

    • பேரிடரால் மொத்தம் 69 லட்சம் குடும்பங்களும், 1.5 கோடி தனிநபர்களும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • சேதங்கள் பற்றிய விரிவான மதிப்பீட்டை மேற்கொள்வதற்கு மத்திய குழுவை விரைவில் நியமிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    தமிழ்நாட்டின் 14 மாவட்டங்களை இதுவரை கண்டிராத அளவில் ஃபெஞ்சல் புயல் சூறையாடியுள்ளது. இதனால் 1.5 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதனால், சேதத்தின் வீரியத்தைக் கருத்தில் கொண்டு, தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து உடனடியாக ரூ.2000 கோடியை அவசர மீட்பு மற்றும் புனரமைப்பு நடவடிக்கைகளுக்காக விடுவிக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதத்தின் மூலம் கேட்டுக்கொண்டுள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது:-

    ஃபெஞ்சல் புயல் தமிழகத்தின் 14 மாவட்டங்களில் வரலாறு காணாத பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இந்த பேரிடரால் மொத்தம் 69 லட்சம் குடும்பங்களும், 1.5 கோடி தனிநபர்களும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    குறிப்பாக விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்கள், ஒரே நாளில் முழுப் பருவத்தின் சராசரி (50 செ.மீ.க்கும் அதிகமான) மழையைப் பெற்றதால், பரவலான வெள்ளம் மற்றும் உள்கட்டமைப்பு மற்றும் பயிர்களுக்கு கடுமையான சேதம் ஏற்பட்டது.

    38,000 அரசு அதிகாரிகள் மற்றும் 1,12,000 பயிற்சி பெற்ற முதல்நிலை பணியாளர்கள் அடங்கிய அர்ப்பணிப்புள்ள பணியாளர்கள் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மிகவும் பாதிக்கப்பட்ட சில மாவட்டங்களுக்கு நான் நேரில் சென்றுள்ளேன்.

    மாநில அரசுக்கு தற்காலிக சீரமைப்பு நடவடிக்கைகளுக்காக 2,475 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. எங்களின் சிறந்த முயற்சிகள் இருந்தபோதிலும், இந்த பேரழிவின் அளவு மாநிலத்தின் வளங்களை மூழ்கடித்துள்ளது.

    அழிவின் தீவிரம் மற்றும் மறுசீரமைப்புக்கான அவசரத் தேவை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இடைக்கால நிவாரணத் தொகையாக உடனடியாக NDRF-லிருந்து 2,000 கோடி ரூபாய் விடுவிக்க வேண்டும்.

    மேலும், சேதங்கள் பற்றிய விரிவான மதிப்பீட்டை மேற்கொள்வதற்கு மத்திய குழுவை விரைவில் நியமிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அவர்களின் மதிப்பீட்டின் அடிப்படையில், மேலும் நிதி உதவிக்கு உங்கள் பரிசீலனையை கோருகிறேன்.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என ஒத்தி வைப்பு தீர்மானத்திற்கு மனு.
    • ஃபெஞ்சல் புயலால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அழிவுகள் குறித்து கவலை தெரிவிக்கிறேன்.

    தமிழ்நாட்டை தாக்கிய ஃபெங்கல் புயலின் தாக்கத்தை பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என ஒத்தி வைப்பு தீர்மானத்திற்கு மனு அளித்துள்ளதாக கன்னியாகுமரி எம்.பி விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து விஜய் வசந்த் எம்.பி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    அவசர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு திட்டவட்டமான விஷயத்தைப் பற்றி விவாதிக்கும் நோக்கத்திற்காக, பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என ஒத்தி வைப்பு தீர்மானத்திற்கு மனு அளித்துள்ளேன்.

    சபாநாயகர் அவர்களுக்கு, ஃபெஞ்சல் புயலால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அழிவுகள் குறித்து கவலை தெரிவிக்கிறேன்.

    ஃபெஞ்சல் புயல் உள்கட்டமைப்பு, விவசாயம் மற்றும் மனித உயிர்களுக்கு சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு உடனடியாக பாதிக்கப்பட்ட மாநிலத்திற்கு நிவாரணமாக ரூ. 1,000 கோடி வழங்க வேண்டும்.

    மேலும், மத்திய அரசு ஒரு குழுவை அனுப்பி, சேதங்களை மதிப்பிடவும், உயிரிழந்த விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை வழங்கவும் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு மின் கட்டணம் செலுத்த அவகாசம்.
    • வரும் டிசம்பர் 10ம் தேதி வரை மின் கட்டணம் எந்தவித அபராதமும் இன்றி செலுத்தலாம் என்று அறிவிப்பு.

    வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் நேற்று மாமல்லபுரம்- மரக்காணம் இடையே கரையை கடந்தது.

    இதன் எதிரொலியால், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது.

    பல்வேறு இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. சாலைகளிலும், வீடுகளிலும் தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

    இதனால், ஏற்கனவே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் அளித்து அறிவிக்கப்பட்டது.

    அதன்படி, வரும் டிசம்பர் 10ம் தேதி வரை மின் கட்டணம் எந்தவித அபராதமும் இன்றி செலுத்தலாம் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், மேலும் 6 மாவட்டங்களுக்கு மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

    அதன்படி, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு அவகாசம் நீட்டித்து அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவிட்டுள்ளார்.

    • ஃபெஞ்சல் புயலால் தமிழ்நாட்டில் வடமாவட்டங்களில் அதி கனமழை பெய்தது.
    • கடலூர், விழுப்புரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே கரையை கடந்தது.

    இதன் எதிரொலியால், தமிழ்நாட்டில் வடமாவட்டங்களில் அதி கனமழை பெய்தது. குறிப்பாக புதுச்சேரி, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரியில் வரலாறு காணாத அளவிற்கு கனமழை பெய்ததால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    கனமழையால் கடலூர், விழுப்புரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது..

    இந்நிலையில், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    மேலும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் நகராட்சி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை மற்றும் போச்சம்பள்ளி வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    • ஊத்தங்கரையில் வெள்ளத்தால் 10 வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன.
    • கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் 50.3 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

    ஃபெஞ்சல் புயலால் பெய்த அதி கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்து பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.

    மேலும் ஏரியில் இருந்து வெளியேறும் நீரால் சாலைகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இதுதொடர்பான செய்திகள் வெளியாகி வரும் நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் வெள்ளத்தால் 10 வாகனங்கள் அடித்துச் செல்லப்படும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்நிலையில், ஊத்தங்கரையில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வாகனங்கள் கிரேன் உதவியுடன் மீட்கப்பட்டது.

    கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் 50.3 செ.மீ மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×