என் மலர்
உள்ளூர் செய்திகள்
- தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்கள்.
- உண்மையை நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.
சென்னை:
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், நாயக்கர்பட்டியில் டங்ஸ்டன் கனிமவள சுரங்கம் அமைக்கப்பட்டால், அது சுற்றுப்புறச் சூழலுக்கு பெரும் கேடு விளைவிக்கும் என அப்பகுதி மக்கள் தெரிவித்து வரும் நிலையில், மக்களுக்கு ஆதரவாக நானும் எதிர்ப்பை தெரிவித்திருந்தேன். தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்கள்.
மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கப்படுவதற்கு தற்போது பொது மக்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் எதிர்த்து வருகின்ற நிலையில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அளிக்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருப்பது தி.மு.க.வின் இரட்டை வேடத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பது தொடர்பாக கடந்த 7-ந்தேதி வரை தமிழ்நாடு அரசு ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என்று மத்திய அரசு தெரிவித்து இருக்கிறது. இதற்கு தி.மு.க.வின் பதில் என்ன? இதனை தெளிவுபடுத்த வேண்டிய கடமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உண்டு. இதுகுறித்த உண்மையை நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
- அடிப்படை தேவைகளை நிறைவேற்றினால் தான் போராட்டத்தை கைவிடுவோம்.
ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் அதி கனமழை பெய்தது. இதனால் விழுப்புரம், முண்டியம்பாக்கம், விக்கிரவாண்டி, அரசூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சி அளித்தது.
இதுமட்டுமின்றி தேசிய நெடுஞ்சாலைகளில் ஒட்டி உள்ள ஏரிகள் நிரம்பியதால் வெளியேறிய தண்ணீரால் அப்பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அரசூர் பகுதியில் விழுப்புரம்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையும் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தாழ்வான பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியது.
இந்நிலையில் அடிப்படை தேவையான உணவு, குடிநீர் வழங்கவில்லை என்று அரசூர் அருகே பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கனமழையால் ஊருக்குள் சூழ்ந்துள்ள வெள்ள நீரை அகற்ற வலியுறுத்தியும், அடிப்படை தேவையான உணவு, குடிநீர் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
இதனால் சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியல் போராட்டத்தால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது.
போக்குவரத்து சீரமைக்கப்பட்டு ஒரு வழி பாதையில் பேருந்துகள், வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில்
இந்த பாதையில் தற்போது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மறியலை கைவிட மாட்டோம். அடிப்படை தேவைகளை நிறைவேற்றினால் தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கூறினர்.
- சாலை விரிவாக்கம் செய்வதற்காக கரட்டடிபாளையம் மாரியம்மன் கோவில் இடித்து அகற்ற முடிவு செய்யப்பட்டது.
- பணியாளர்கள் மூலம் கோவிலை இடிக்கும் பணி நடைபெற்றது.
கோபி:
ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் அருகே உள்ள கரட்டடிபாளையம் சத்தி-ஈரோடு மெயின் ரோட்டில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்வர்கள்.
இதையடுத்து ரோடு விரிவாக்கம் பணி செய்வதற்காக அந்த மாரியம்மன் கோவிலை அகற்ற முடிவு செய்யப்பட்டது.
இது குறித்து இரு பிரிவினருக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்தததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து பொது மக்களிடம் சமரசம் செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மாரியம்மன் கோவிலில் இருந்து அம்மன் சிலை, விநாயகர் சிலை மற்றும் உலோக சிலைகள் அகற்றப்பட்டது.
இந்த சாமி சிலைகள் கோபி அடுத்த பாரியூர் ஆதிநாராயண பெருமாள் கோவிலில் உள்ள பாதுகாப்பு அறையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. அந்த அறை பூட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
இதையடுத்து கரட்டடிபாளையம் மாரியம்மன் கோவில் மற்றும் சாமி சிலைகள் வைக்கப்பட்டு உள்ள பரியூர் ஆதி நாராயண பெருமாள் கோவில் என ஆகிய 2 கோவில்களில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் சாலை விரிவாக்கம் செய்வதற்காக கரட்டடிபாளையம் மாரியம்மன் கோவில் இடித்து அகற்ற முடிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து இன்று காலை 6 மணி அளவில் நெடுஞ்சாலை துறையினர், வருவாய் துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர்.
இதையடுத்து அவர்கள் முன்னிலையில் எந்திரங்கள் கொண்டு வரப்பட்டு பணியாளர்கள் மூலம் கோவிலை இடிக்கும் பணி நடைபெற்றது. தொடர்ந்து காலை கோவில் முழுவதும் இடித்து அகற்றப்பட்டது. இது பற்றி தகவல் கிடைத்ததும் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். மேலும் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கனமழை கொட்டியது.
- மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேல் வெள்ளம் கரைபுரண்டு சென்றன.
ஒகேனக்கல்:
கர்நாடகம் மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கே.ஆர்.எஸ்., கபினி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணைகளில் இருந்து உபரி நீர் தமிழக காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.
மேலும் கடந்த சில நாட்களாக தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, பிலிகுண்டுலு, ராசி மணல் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
இதனால் நேற்று ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கனமழை கொட்டியது. இதனால் நீர்வரத்து சற்று படிப்படியாக அதிகரித்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.
இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
காவிரி ஆற்றின் இருகரையும் தொட்டபடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேல் வெள்ளம் கரைபுரண்டு சென்றன.
நீர்வரத்து அதிகரித்து வந்ததால் அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் இன்று மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதனால் மெயின் அருவிக்கு செல்லும் பாதை பூட்டப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பரிசல் ஓட்டிகள் பரிசலை காவிரி ஆற்றின் கரையோரம் கமத்தி வைத்தனர்.
குளிக்க தடை விதிக்கப்பட்ட நிலையில் சுற்றுலா பயணிகள் மெயின் அருவியில் குளிக்க முடியாமலும், பரிசலில் பயணம் செல்ல முடியாமலும் ஏமாற்றம் அடைந்தனர்.
மேலும் காவிரி ஆற்றின் கரையோரம் சுற்றுலா பயணிகள் குளிக்காதவாறு ரோந்து பணியில் ஈடுபட்டு போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.
காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் சாலைகளில் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டது.
- ஃபெஞ்சல் புயல் பாதிப்பால் தென் மாவட்டங்களில் இருந்து வந்த ரெயில்கள் விழுப்புரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன.
ஃபெஞ்சல் புயலின் கோரத்தாண்டவத்தால் புதுச்சேரி, விழுப்புரத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் சாலைகளில் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டது. அதே போல், ரெயில் பயணத்திலும் பாதிப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், சிகிச்சைக்காக ரெயிலில் பயணித்த வாலிபர் ஒருவர் ரெயில் தாமதமாக இயக்கப்பட்டதால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசியில் இருந்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக பொதிகை ரெயிலில் அஜித் குமார் (27) என்பவர் பயணித்துள்ளார்.
மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு இருந்த அஜித் குமார் சிகிச்சைக்காக சென்னைக்கு புறப்பட்டுள்ளார். ஃபெஞ்சல் புயல் பாதிப்பால் தென் மாவட்டங்களில் இருந்து வந்த ரெயில்கள் விழுப்புரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன. இதில் அஜித் குமார் பயணித்த பொதிகை ரெயிலும் நிறுத்தி வைக்கப்பட்டு, தாமதமாக புறப்பட்ட நிலையில் அவர் ரெயிலிலேயே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் ரெயிலில் பயணித்த அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
- ஏற்காட்டில் 20 இடங்களில் மண் சரிவு, 22 கிராமங்களுக்கு செல்லும் தரைப்பாலம் சேதம் ஆகி உள்ளது.
- திருமணி முத்தாறு முழுமையாக தூர்வாரப்படாததால் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் புயல் காரணமாக கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. அதே போல் நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டியது. இதனால் பல பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து காணப்படுகிறது.
இந்த நிலையில், வெள்ள நீர் வடியத்தொடங்கிய உள்ளதாக சேலம் கந்தப்பட்டியில் ஆய்வு மேற்கொண்ட அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது:-
* ஏற்காட்டில் 20 இடங்களில் மண் சரிவு, 22 கிராமங்களுக்கு செல்லும் தரைப்பாலம் சேதம் ஆகி உள்ளது.
* திருமணி முத்தாறு முழுமையாக தூர்வாரப்படாததால் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
* முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் சேலம் மாநகரத்தில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
* சாத்தூர் அணையில் இருந்து எவ்வித அறிவிப்பும் இன்றி தென்பெண்ணை ஆற்றுக்கு நீர் திறக்கப்பட்டதால் கரையோர கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
* தென்பெண்ணை ஆற்றுக்கரையோரம் இருக்கக்கூடிய நூற்றுக்கணக்கான கிராம மக்கள் கடுமையான பாதிப்பு.
* தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- லேசான மலையின் போது எந்தவித பாதிப்பும் ஏற்பட வாய்ப்பு இல்லை.
- மலை அருகே வீடுகள் கட்டும் பொதுமக்கள் முன்கூட்டியே என்ஜினீயர் மூலம் ஆய்வு செய்து பணிகளை தொடங்க வேண்டும்.
வேங்கிக்கால்:
திருவண்ணாமலையில் மண்ணில் புதைந்து பலியான மேலும் 2 பேர் உடல்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. சென்னை ஐ.ஐ.டி ஓய்வு பெற்ற வல்லுனர்கள் மோகன், நாராயண ராவ், பூமிநாதன் ஆகியோர் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில் திருவண்ணாமலை வந்தனர். அவர்கள் மீட்பு பணிக்கு ஆலோசனைகளை வழங்கினர்.
மேலும் மகா தீப மலையில் மண் சரிவு ஏற்பட்ட இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். திருவண்ணாமலை மகாதீப மலையில் தொடர் மழை பெய்தால் மீண்டும் மண் சரிவு ஏற்படும். லேசான மலையின் போது எந்தவித பாதிப்பும் ஏற்பட வாய்ப்பு இல்லை. மலை அருகே வீடுகள் கட்டும் பொதுமக்கள் முன்கூட்டியே என்ஜினீயர் மூலம் ஆய்வு செய்து பணிகளை தொடங்க வேண்டும். மண் சரிவு குறித்து அறிக்கை தயார் செய்துள்ளோம்.
இதனை அரசிடம் சமர்ப்பிப்போம். இது குறித்த முழு விவரங்களை அரசு வெளியிடும் என்றனர்.
- தமிழகத்தின் புயல், மழையால் 1.5 கோடி மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
- இடைக்கால நிவாரண நிதியாக ரூ.2 ஆயிரம் கோடியை ஒதுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் கடிதம் எழுதி இருந்தார்.
வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயலால் தமிழகத்தில் அதி கனமழை பெய்தது. ருத்ரதாண்டவம் ஆடிய ஃபெஞ்சல் புயல் கரையை கடந்தபோது, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் பெரும் மழைப்பொழிவு இருந்தது. குறிப்பாக விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் பெரிய அளவில் பாதிப்பை சந்தித்துள்ளன.
தமிழகத்தின் புயல், மழையால் 1.5 கோடி மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
சேதத்தின் வீரியத்தை கருத்தில் கொண்டு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து இடைக்கால நிவாரண நிதியாக ரூ.2 ஆயிரம் கோடியை ஒதுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார்.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் மோடி ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பு குறித்து கேட்டறிந்தார்.
தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்பு தொடர்பாக முதலமைச்சரிடம் விரிவாக கேட்டறிந்தார்.
இதைத்தொடர்ந்து தமிழகத்துக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என முதல்வரிடம் பிரதமர் மோடி உறுதி அளித்தார்.
- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சேர்ந்த மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
- உப்பளம் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் கேட்டறிந்தார்.
ஃபெஞ்சல் புயலால் வரலாறு காணாத வகையில் பெய்த மழை காரணமாக விழுப்புரம் மாவட்டம் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த வெள்ளத்தால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். மேலும் தேசிய நெடுஞ்சாலைகளில் தேங்கிய நீரால் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டது.
இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நேரில் பார்வையிட்டார்.
மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சேர்ந்த மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். உப்பளம் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் கேட்டறிந்தார்.
- மேட்டூர் அணைக்கு கடந்த சில தினங்களாக தண்ணீர் வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
- நீர் இருப்பு 80.40 டி.எம்.சி.யாக உள்ளது.
மேட்டூர்:
கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி ஆகிய அணைகளுக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரி நீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது.
இதனிடையே பெஞ்சல் புயல் காரணமாக தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.
இதனால் மேட்டூர் அணைக்கு கடந்த சில தினங்களாக தண்ணீர் வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று முன்தினம் வினாடிக்கு 5,195 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 7,414 கன அடியாக அதிகரித்தது.
மேலும் இன்று காலை நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 9,246 கன அடி தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 1000 கன அடியும், கிழக்கு- மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 300 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது. காலை 8 மணியளவில் நீர்மட்டம் 111.39 அடி உயர்ந்தது. நீர் இருப்பு 80.40 டி.எம்.சி.யாக உள்ளது.
- சரபங்கா நதியில் பாய்ந்து ஓடும் வெள்ள நீர் தாரமங்கலம் அணை மேடு பகுதியில் 5 இடங்களில் வெளியேறி அருவி போல் கொட்டி வருகிறது.
- திருமணி முத்தாறில் பல ஆண்டுகளுக்கு பின்னர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக சேலம் மாவட்டத்தில் கன மழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகள், ஏரிகளுக்கு நீர் வரும் கால்வாய்களில் வெள்ளம் பெருக்கெடுத்தது. மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஆறுகளில் தண்ணீர் இரு கரைகளையும் தொட்டபடி வெள்ளம் கரை புரண்டோடுகிறது.
அதன் தொடர்ச்சியாக சேர்வராயன் மலைத்தொடர்களில் கொட்டி தீர்த்த கன மழையால் சரபங்கா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சேர்வராயன் மலைத்தொடரில் இருந்து இறங்கும் தண்ணீர் டேனிஸ்பேட்டை, காடையாம்பட்டி, செம்மாண்டப்பட்டி, ஓமலூர், முத்துநாயக்கன்பட்டி, அணைமேடு பாப்பம்பாடி, சமுத்திரம், எடப்பாடி வழியாக சென்று காவிரியில் கலக்கிறது.
கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையில் சரபங்கா நதி முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல்வேறு இடங்களில் கரைகள் உடைபட்டு விவசாய நிலங்களை சூழ்ந்தவாறு சென்று கொண்டிருக்கிறது.
சரபங்கா நதியில் பாய்ந்து ஓடும் வெள்ள நீர் தாரமங்கலம் அணை மேடு பகுதியில் 5 இடங்களில் வெளியேறி அருவி போல் கொட்டி வருகிறது. அணை மேடு பகுதியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மேடான பகுதியில் வசிக்கும் 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்தது. அங்கிருந்து பொதுமக்கள் வெளியேற முடியாமல் தண்ணீர் ஆர்ப்பரித்த வண்ணம் சூழ்ந்து உள்ளது. இதனால் பொதுமக்கள் தங்களது வீடுகளில் வளர்க்கும் ஆடு, மாடுகளுடன் தவித்தனர். இது பற்றி தகவல் அறிந்து அணைமேடு பகுதிக்கு வந்த தாரமங்கலம் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் அவர்களை பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து பெய்து வரும் மழையால் தண்ணீரின் அளவு அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
கல்வராயன் மலையில் உருவாகும் வசிஷ்ட நதி பல ஆண்டுகளுக்கு பின்னர் வெள்ளம் பெருக்கெடுத்து இரு கரைகளையும் தொட்டபடி ஓடுகிறது. இதனால் வசிஷ்ட நதியின் இரு கரைகளிலும் உள்ள வாழப்பாடி, பெத்த நாயக்கன்பாளையம், ஆத்தூர் தலைவாசல் வட்டாரங்களிலும் உள்ள பெரும்பாலான ஏரிகள் நிரம்பி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சேர்வராயன் மலைச்சாரலில் உருவாகி சேலம் வழியாக பாய்ந்தோடும் திருமணி முத்தாறில் பல ஆண்டுகளுக்கு பின்னர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பார்த்து ரசித்து வருகிறார்கள். டேனீஸ் பேட்டை அடிவாரத்தில் பாலாற்றில் பெருக்கெடுத்த வெள்ளத்தால் அதனை ஒட்டியுள்ள தென்னை, பாக்குமரங்கள் வேரோடு சாய்ந்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.
மாவட்டத்தில் உள்ள கரியகோவில், ஆனைமடுவு அணை, கன்னங்குறிச்சி புது ஏரி, அல்லிக்குட்டை ஏரி உள்பட மாவட்டத்தில் உள்ள 75 சதவீத்திற்கும் அதிகமாக ஏரிகள், குளங்கள் நிரம்பி உள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பாசனத்திற்கான ஏரிகள், குளங்கள் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் வெள்ள சேதம் ஏற்பட்டது.
- திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது.
வேங்கிகால்:
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள சாத்தனூர் அணைக்கு, தென்பெண்ணை ஆற்றில் இருந்து நீர்வரத்து அதிகரித்ததால் நேற்று 1 லட்சத்து 68 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
இதனால் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் வெள்ள சேதம் ஏற்பட்டது. இன்று காலை சாத்தனூர் அணைக்கு 36 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் வந்தது. இதனால் அணையில் இருந்து நீர் திறப்பு 36 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று காலை ஒரு சில இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாலாஜா சோளிங்கர் உள்ளிட்ட பகுதிகளில் பரலான மழை பெய்தது.
திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது.
வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம், பள்ளிகொண்டா, காட்பாடி உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை லேசான சாரல் மழை பெய்தது.






