என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தொடர் மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு- ஏரி, குளங்கள் நிரம்பி வழிகிறது
    X

    சரபங்கா நதியில் இருந்து வெள்ளம் வெளியேறி ஊருக்கும் சீறி பாய்ந்த காட்சி

    தொடர் மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு- ஏரி, குளங்கள் நிரம்பி வழிகிறது

    • சரபங்கா நதியில் பாய்ந்து ஓடும் வெள்ள நீர் தாரமங்கலம் அணை மேடு பகுதியில் 5 இடங்களில் வெளியேறி அருவி போல் கொட்டி வருகிறது.
    • திருமணி முத்தாறில் பல ஆண்டுகளுக்கு பின்னர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    ஃபெஞ்சல் புயல் காரணமாக சேலம் மாவட்டத்தில் கன மழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகள், ஏரிகளுக்கு நீர் வரும் கால்வாய்களில் வெள்ளம் பெருக்கெடுத்தது. மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஆறுகளில் தண்ணீர் இரு கரைகளையும் தொட்டபடி வெள்ளம் கரை புரண்டோடுகிறது.

    அதன் தொடர்ச்சியாக சேர்வராயன் மலைத்தொடர்களில் கொட்டி தீர்த்த கன மழையால் சரபங்கா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சேர்வராயன் மலைத்தொடரில் இருந்து இறங்கும் தண்ணீர் டேனிஸ்பேட்டை, காடையாம்பட்டி, செம்மாண்டப்பட்டி, ஓமலூர், முத்துநாயக்கன்பட்டி, அணைமேடு பாப்பம்பாடி, சமுத்திரம், எடப்பாடி வழியாக சென்று காவிரியில் கலக்கிறது.

    கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையில் சரபங்கா நதி முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல்வேறு இடங்களில் கரைகள் உடைபட்டு விவசாய நிலங்களை சூழ்ந்தவாறு சென்று கொண்டிருக்கிறது.

    சரபங்கா நதியில் பாய்ந்து ஓடும் வெள்ள நீர் தாரமங்கலம் அணை மேடு பகுதியில் 5 இடங்களில் வெளியேறி அருவி போல் கொட்டி வருகிறது. அணை மேடு பகுதியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மேடான பகுதியில் வசிக்கும் 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்தது. அங்கிருந்து பொதுமக்கள் வெளியேற முடியாமல் தண்ணீர் ஆர்ப்பரித்த வண்ணம் சூழ்ந்து உள்ளது. இதனால் பொதுமக்கள் தங்களது வீடுகளில் வளர்க்கும் ஆடு, மாடுகளுடன் தவித்தனர். இது பற்றி தகவல் அறிந்து அணைமேடு பகுதிக்கு வந்த தாரமங்கலம் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் அவர்களை பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து பெய்து வரும் மழையால் தண்ணீரின் அளவு அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

    கல்வராயன் மலையில் உருவாகும் வசிஷ்ட நதி பல ஆண்டுகளுக்கு பின்னர் வெள்ளம் பெருக்கெடுத்து இரு கரைகளையும் தொட்டபடி ஓடுகிறது. இதனால் வசிஷ்ட நதியின் இரு கரைகளிலும் உள்ள வாழப்பாடி, பெத்த நாயக்கன்பாளையம், ஆத்தூர் தலைவாசல் வட்டாரங்களிலும் உள்ள பெரும்பாலான ஏரிகள் நிரம்பி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    சேர்வராயன் மலைச்சாரலில் உருவாகி சேலம் வழியாக பாய்ந்தோடும் திருமணி முத்தாறில் பல ஆண்டுகளுக்கு பின்னர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பார்த்து ரசித்து வருகிறார்கள். டேனீஸ் பேட்டை அடிவாரத்தில் பாலாற்றில் பெருக்கெடுத்த வெள்ளத்தால் அதனை ஒட்டியுள்ள தென்னை, பாக்குமரங்கள் வேரோடு சாய்ந்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.

    மாவட்டத்தில் உள்ள கரியகோவில், ஆனைமடுவு அணை, கன்னங்குறிச்சி புது ஏரி, அல்லிக்குட்டை ஏரி உள்பட மாவட்டத்தில் உள்ள 75 சதவீத்திற்கும் அதிகமாக ஏரிகள், குளங்கள் நிரம்பி உள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பாசனத்திற்கான ஏரிகள், குளங்கள் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×