என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

டங்ஸ்டன் சுரங்கம் விவகாரத்தில் தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது- ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
- தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்கள்.
- உண்மையை நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.
சென்னை:
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், நாயக்கர்பட்டியில் டங்ஸ்டன் கனிமவள சுரங்கம் அமைக்கப்பட்டால், அது சுற்றுப்புறச் சூழலுக்கு பெரும் கேடு விளைவிக்கும் என அப்பகுதி மக்கள் தெரிவித்து வரும் நிலையில், மக்களுக்கு ஆதரவாக நானும் எதிர்ப்பை தெரிவித்திருந்தேன். தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்கள்.
மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கப்படுவதற்கு தற்போது பொது மக்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் எதிர்த்து வருகின்ற நிலையில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அளிக்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருப்பது தி.மு.க.வின் இரட்டை வேடத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பது தொடர்பாக கடந்த 7-ந்தேதி வரை தமிழ்நாடு அரசு ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என்று மத்திய அரசு தெரிவித்து இருக்கிறது. இதற்கு தி.மு.க.வின் பதில் என்ன? இதனை தெளிவுபடுத்த வேண்டிய கடமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உண்டு. இதுகுறித்த உண்மையை நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






