என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • புதிய பாடப் புத்தகங்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் வழங்கிடவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
    • சேதம் அடைந்த குடிசை வீடுகளுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழக மழை வெள்ள பாதிப்புகள் குறித்து இன்று தலைமை செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் நவம்பர் 30 முதல் வீசத் தொடங்கிய ஃபெஞ்சல் புயலின் காரணமாக பரவலான மற்றும் கடுமையான மழைப்பொழிவு தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் பெறப்பட்டது. குறிப்பாக, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் இதன் தாக்கம் மிக அதிகமாக இருந்தது. திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் மழையின் அளவு வழக்கத்தைவிட மிக அதிகமாக இருந்தது.

    இதுவரை இல்லாத அளவிற்கு பெரும் மழைப்பொழிவு ஏற்பட்டு, பொது மக்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதோடு, தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் பெரும் பகுதி விளைநிலங்களை வெள்ளத்தில் மூழ்கடித்து உள்ளது.

    அத்துடன், மேற்படி மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் சாலைகள், பாலங்கள், மின் கம்பங்கள், மின்மாற்றிகள், பொதுக் கட்டடங்கள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளும் மற்றும் பொது மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மீட்பு மற்றும் சீரமைப்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன.

    அங்கு ஃபெஞ்சல் புயலின் தாக்கத்தையும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளையும் நேரில் ஆய்வு செய்திட நேற்றையதினம் முதலமைச்சர் செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

    இந்த ஆய்வின்போது, பொதுமக்கள் மற்றும் அலுவலர்களிடம் பாதிப்பு விவரங்களையும், மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்து, தேவையான அறிவுரைகளை வழங்கினார்.

    துணை முதலமைச்சரும், அமைச்சர்களும் இம்மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இன்றும் நேரடியாகச் சென்று நிவாரண நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து துரிதப்படுத்தி வருகின்றார்கள்.

    இந்நிலையில், இன்று (3-12-2024) தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மற்றும் கடலூர் மாவட்டங்களில் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட்டு வரும் துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை காணொலி வாயிலாகத் தொடர்பு கொண்டு தற்போதைய நிலையைக் கேட்டறிந்தார்.

    பின்னர், ஃபெஞ்சல் புயல் மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் தலைமையில் இன்று (3-ந்தேதி) நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பின்வரும் நிவாரண உதவிகள் வழங்குவதென்று முடிவு செய்யப்பட்டது.

    * புயல், வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகையாக 5 லட்சம் ரூபாய் வழங்கிடவும்;

    * சேதமடைந்த குடிசைகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூபாய் 10 ஆயிரம் வழங்கிடவும்;

    * முழுமையாக சேதமடைந்த குடிசைகளுக்கு கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் வீடு கட்டுவதற்கு முன்னுரிமை அளித்திடவும்,

    * மழையினால் பாதிக்கப்பட்ட (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) நெற்பயிர் உள்ளிட்ட இறவைப் பாசனப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூபாய் 17 ஆயிரம் வழங்கிடவும்;

    * பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்கள் (Perennial crops and trees) சேத முற்றிருப்பின் (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) இழப்பீடாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூபாய் 22,500 வழங்கிடவும்;

    * மழையினால் பாதிக்கப்பட்ட (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) மானாவாரிப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.8,500/-ஆக வழங்கிடவும்;

    * எருது, பசு உள்ளிட்ட கால்நடைகளின் உயிரிழப்பு நிவாரணமாக ரூ.37,500/-ஆக வழங்கிடவும்;

    * வெள்ளாடு, செம்மறி ஆடு உயிரிழப்பு நிவாரணமாக ரூ.4,000/-வழங்கிடவும்; கோழி உயிரிழப்பு நிவாரணமாக ரூ.100/-வழங்கிடவும்;

    * அதி கனமழையின் காரணமாக கடுமையான மழைப்பொழிவினை சந்தித்துள்ள விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில், இரண்டு நாட்களுக்கு மேல் மழை, வெள்ளம் சூழ்ந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரணமாக ரூபாய் 2 ஆயிரம் வழங்கிடவும்;

    * மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சான்றிதழ்கள், வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டைகளை இழந்தவர்களுக்கு, சிறப்பு முகாம்கள் நடத்தி புதிய சான்றிதழ்கள் வழங்கிடவும்;

    * மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாதிப்புக்குள்ளான குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு புதிய பாடப் புத்தகங்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் வழங்கிடவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    நிவாரணம் வழங்குவது தொடர்பாக தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தங்கள் மாவட்டங்களில் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளின் விவரங்களை அரசுக்கு அனுப்பி வைத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள் என்று அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • ஃபெஞ்சல் புயலால் 12 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
    • பள்ளிகளின் தற்போதைய நிலை மற்றும் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

    சென்னை:

    பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டுள்ள 12 மாவட்டங்களின் முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக பள்ளிகளின் தற்போதைய நிலை மற்றும் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

    இன்று பிற்பகல் 3 மணியளவில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டுள்ள விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி, திருப்பத்தூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் நீலகிரி உள்ளிட்ட 12 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக பள்ளிகளின் தற்போதைய நிலை மற்றும் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விமர்சனங்கள் ஒரு படத்தின் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் இடத்தில் இருக்கின்றன.
    • அவதூறு பரப்புவது குறித்து காவல்துறையிடம் புகார் அளிக்கலாம்.

    சினிமா விமர்சனங்கள் என்பது தற்போது ஒரு படத்தின் தலையெழுத்தையே தீர்மானிக்கும் நிலையில் இருக்கிறது. படத்தின் முதல் ஷோ பார்த்து யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் போடப்படும் விமர்சனங்களை பார்த்த பின்னர் படத்துக்கு போகலாமா வேண்டாமா என முடிவெடுக்கும் மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டனர். இதனால் விமர்சனங்கள் ஒரு படத்தின் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் இடத்தில் இருக்கின்றன.

    சமீபத்தில் கூட இந்தியன் 2, கங்குவா போன்ற படங்கள் படுதோல்வி அடைந்ததாக விமர்சனங்கள் எழுந்தது. அதிலும் கங்குவா படம் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டது.

    சமூக வலைதளங்களில் அதிக அளவில் விமர்சனங்கள் வந்ததால் அப்படம் பான் இந்தியா அளவில் மிகப்பெரிய அளவில் தோல்வியை சந்தித்தது. இதனால் இந்த சினிமா விமர்சனங்களை தடை செய்யக்கோரி திரைத்துறையினர் சார்பிலும் தயாரிப்பாளர்கள் சார்பிலும் வலியுறுத்தப்பட்டு வந்தது.

    சினிமா விமர்சனங்களை வெளியிட தடை கோரி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

    அதில் படம் வெளியாகி முதல் 3 நாட்களுக்கு எந்தவித விமர்சனங்களையும் யூடியூப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக், எக்ஸ் தளம் போன்ற சமூக வலைதளங்களில் வெளியிடக்கூடாது என குறிப்பிட்டு இருந்தனர்.

    இந்த நிலையில் இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.

    வழக்கை விசாரித்த ஐகோர்ட் நீதிபதி எஸ்.சவுந்தர்,

    விமர்சனம் என்பது கருத்து சுதந்திரம் என்பதால் பொத்தாம் பொதுவாக உத்தரவு பிறப்பிக்க இயலாது. அவதூறு பரப்புவது குறித்து காவல்துறையிடம் புகார் அளிக்கலாம்.

    மேலும் இந்த வழக்கு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள், யூடியூப் நிறுவனங்கள் பதில் அளிக்க ஆணை பிறப்பித்து உத்தரவிட்டார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மண்டவாய் புதுக்குப்பம் உள்ளிட்ட பல்வேறு இடங்களையும் அண்ணாமலை ஆய்வு செய்தார்.
    • மாநிலத்தின் மற்ற பகுதிகளிலும் உள்ள பாதிப்புகள் குறித்து அரசு கவனம் கொள்ள வேண்டும்.

    மரக்காணம்:

    வங்க கடலில் உருவான பெஞ்சல் புயல் கடந்த 1-ந் தேதி புதுவை-மகாபலிபுரம் அருகே கரையை கடந்தது. இதனால் ஏற்பட்ட மழை காரணமாக விழுப்புரம் மாவட்டம் கடும் பாதிப்பை சந்தித்தது.

    விழுப்புரம் மாவட்டத்தில் கிழக்கு கடற்கரை சாலையோரம் உள்ள மரக்காணம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டது.

    அங்குள்ள உப்பளங்கள், விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியது. மரக்காணத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கினார்.

    இந்த நிலையில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய முடிவு செய்தார்.

    அதன்படி இன்று காலை அவர் மரக்காணம் வந்தார். மரக்காணத்தில் பக்கிங்காம் கால்வாயை ஒட்டியுள்ள பகுதிகளில் இருந்த உப்பளங்கள் நீரில் மூழ்கி கிடக்கிறது. அதனை அண்ணாமலை பார்வையிட்டார். எக்கியார்குப்பம், கூனிமேடு பகுதிகளையும் பார்த்தார். வண்ணாரப்பாளையம்-அச்சங்குப்பம் இடையே சுமார் 500 ஏக்கர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி உள்ளது. அதனையும் அண்ணாமலை பார்வையிட்டார். மண்டவாய் புதுக்குப்பம் உள்ளிட்ட பல்வேறு இடங்களையும் அவர் ஆய்வு செய்தார்.

    இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-

    மிகவும் கொஞ்சமாக மழை பெய்த சென்னையை மட்டுமே அரசு படம் போட்டு காட்டுகிறது. மாநிலத்தின் மற்ற பகுதிகளிலும் உள்ள பாதிப்புகள் குறித்து அரசு கவனம் கொள்ள வேண்டும். முதலமைச்சர், துணை முதல்வரை விளம்பரம் செய்வதிலேயே முக்கியத்துவம் செலுத்தப்படுகிறது என்றார். 

    • சபரிமலை ஐயப்பன் கோவில் அமைந்துள்ள பத்தினம் திட்டா மாவட்டத்துக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • கனமழையால் சபரிமலை அடிவாரத்தில் உள்ள பம்பை ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளது.

    கூடலூர்:

    தமிழகத்தில் ஃபெஞ்சல் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் புயல் தாக்கம் கேரளாவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், 40 கி.மீ வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    இதன் காரணமாக சபரிமலை ஐயப்பன் கோவில் அமைந்துள்ள பத்தினம் திட்டா மாவட்டத்துக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக சபரிமலை, நிலக்கல், பம்பை உள்ளிட்ட பகுதியில் கன மழை பெய்தது. நேற்றும் மழை நீடித்த நிலையில் பக்தர்கள் சன்னிதானம் செல்வதில் சிரமம் ஏற்பட்டது. வழியோரம் உள்ள கடைகளில் ஒதுங்கி மழை நின்ற பிறகு பின்னர் மீண்டும் சென்றனர்.

    ஒரு சில பக்தர்கள் மழையையும் பொருட்படுத்தாமல் மலை ஏறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கேரளாவில் வானிலை மையம் அறிவிப்பின் காரணமாக பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

    சாரல் மழை மற்றும் பனி மூட்டம் காணப்படுவதால் வண்டி பெரியாறு அருகே சத்திரத்தில் இருந்து புல்மேடு வழியாக சன்னிதானத்துக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

    இதே போல் பெரிய பாதை எனப்படும் எருமேலியில் இருந்து முக்குழி வழியாகவும் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே பக்தர்கள் அனைவரும் எருமேலியில் இருந்து பம்பை வரை வாகனங்களில் சென்று பின்னர் அங்கிருந்து மரக்கூட்டம், நீலிமலை, சரங்குத்தி வழியாக சன்னிதானத்துக்கு சென்று வருகின்றனர்.

    இது குறித்து விடுக்கப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் புயல் காரணமாக இடுக்கி மாவட்டத்துக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே புல்மேடு வழியாக சன்னிதானம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை பக்தர்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும்.

    கனமழையால் சபரிமலை அடிவாரத்தில் உள்ள பம்பை ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளது. எனவே நதியில் குளிக்கவும், இதனை கடந்து செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மறு உத்தரவு வரும் வரை இதனை பக்தர்கள் கடைபிடிக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பம்பையில் நேற்று மதியம் நீர்வரத்து சீராகியதால் போலீசார் கண்காணிப்பில் பக்தர்கள் குளிப்பதற்கு அவ்வப்போது அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். இருந்தபோதும் வெள்ளம் ஏற்பட்டால் மீண்டும் தடை விதிக்கப்படும் எனவும் போலீசார் எச்சரித்துள்ளனர். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
    • சாலை மறியலில் ஈடுபட்ட மக்களிடம் அமைச்சர் பொன்முடி பேச்சுவார்த்தை நடத்தினார்.

    ஃபெஞ்சல் புயலால் வரலாறு காணாத மழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடந்து இரண்டு நாட்களாகியும் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த வெள்ளம் வடியவில்லை.

    இதனால் உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் கிடைக்கவில்லை என்று கூறி பொதுமக்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில், இருவேல்பட்டு பகுதியில் வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வுக்கு சென்ற அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் ஆவேசமாக இருந்த மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனை அடுத்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசப்பட்டது. அவருடன் ஆய்வுக்கு சென்ற கௌதம சிகாமணி, ஆட்சியர் உள்ளிட்டோர் மீதும் சேற்றை வீசியதால் பாதியில் புறப்பட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 



    • அனைவரையும் உள்ளடக்கிய எதிர்காலத்துக்கு மாற்றுத்திறனாளிகளின் தலைமைத்துவத்தை ஊக்குவிக்க வேண்டும்.
    • நல்ல வேலைவாய்ப்புகளைப் பெற வேண்டும் என்பதிலும் அக்கறை கொண்டு செயலாற்றி வருகிறது நமது திராவிட மாடல் அரசு.

    உலக மக்கள் அனைவரும் மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகளைப் புரிந்து கொள்வதுடன், அவர்களுக்கு மேன்மையும், உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தால் ஐ.நா. சபை உலகம் முழுவதும் பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் என டிசம்பர் 3-ஐ அனுசரிக்கின்றது.

    இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    அனைவரையும் உள்ளடக்கிய எதிர்காலத்துக்கு மாற்றுத்திறனாளிகளின் தலைமைத்துவத்தை ஊக்குவிக்க வேண்டும் என்பதை இந்த ஆண்டுக்கான உலக மாற்றுத்திறனாளிகள் நாள் கருப்பொருளாக ஐ.நா. அறிவித்துள்ளது!

    அந்த வகையில், மாற்றுத்திறனாளர்களின் உரிமைகளையும் நலனையும் காப்பதுடன், அவர்கள் உயர்பதவிகளுக்குச் செல்ல வேண்டும், நல்ல வேலைவாய்ப்புகளைப் பெற வேண்டும் என்பதிலும் அக்கறை கொண்டு செயலாற்றி வருகிறது நமது திராவிட மாடல் அரசு.

    சவால்களைக் கடந்து வெல்வது மாற்றுத்திறனாளிகளின் சாதனை; அந்தச் சவால்களைக் களைவதே நம் கடமை! என்று தெரிவித்துள்ளார்.

    • சாத்தனூர் அணை குறித்து 5 வெள்ள அபாய எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டது.
    • அரசின் துரித நடவடிக்கைகளால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

    சென்னை:

    சாத்தனூர் அணை நிலை குறித்து உண்மைக்கு புறம்பான தகவல் பரப்பப்படுவதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

    மேலும் அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:-

    சாத்தனூர் அணை குறித்து 5 வெள்ள அபாய எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டது. முன்னறிவிப்பின்றி 1.68 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டதாக கூறுவது பொய். அரசின் துரித நடவடிக்கைகளால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. சிலர் மனசாட்சியைத் துறந்துவிட்டு புரட்டுகளை பரப்பி வருகின்றனர்.

    நீர் வரத்தை முன்கூட்டியே கணித்து அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வந்த நீர் தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்பட்டது. சாத்தனூர் அணை நீர் திறப்பு பற்றி பொய்யான தகவல் பரப்பி சிலர் அரசியல் ஆதாயம் தேட முற்படுகிறார்கள் என்று கூறியுள்ளார்.

    • ஊத்தங்கரை பகுதியில் 15-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதமாகியது.
    • சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாய நிலங்களில் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமானது.

    கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் கனமழை கொட்டியது. ஏரிகள் நிரம்பி வழிந்ததால் சுமார் 22 கிராமங்கள் துண்டிப்பு ஏற்பட்டது. மேலும், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் சேதம் அடைந்தன.

    ஃபெஞ்சல் புயல் காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கனமழை கொட்டி தீர்த்தது. இதைத்தொடர்ந்து ஊத்தங்கரையில் 50 செ.மீ அளவு மழை பொழிந்தது.

    இதன் காரணமாக ஊத்தங்கரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஏரிகள் நிரம்பி வழிந்தன. அதில் ஒரு ஏரியான பரசன ஏரி நிரம்பி அதன் உபரி நீர் ஊத்தங்கரை நகர பகுதி, பஸ் நிலையம், திருப்பத்தூர் சாலை ஆகிய பகுதிகளில் காட்டாற்று வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியதால், 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன.

    வெள்ளம் நீர் ஊருக்குள் புகுந்ததால் அங்கிருந்த பொதுமக்கள் பேரிடர் மீட்பு குழுவினர் மீட்டு பேரூராட்சி திருமண மண்டபம், தனியார் திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு முதல் 2-வது நாளாக இன்றும் மழை அவ்வப்போது பெய்து வருவதால், பொதுமக்கள் தொடர்ந்து அங்கேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    அங்கு அவர்களுக்கு தேவையான உணவு, நிவாரண உதவி பொருட்களை மாவட்ட நிர்வாகத்தினர், அரசியல் கட்சியினர் வழங்கி வருகின்றனர்.

    ஊத்தங்கரை, சிங்காரப்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 111 ஏரிகள் நிரம்பி உபரிநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியதால், அங்குள்ள தரைபாலங்கள் மூழ்கியது. இதனால் கீழ்குப்பம், காட்டேரி, அனுமன்தீர்த்தம், காரப்பட்டு, கல்லாவி, சாமல்பட்டி உள்ளிட்ட 22 கிராமங்கள் சாலையில் போக்குவரத்து செல்ல முடியாமல் துண்டிக்கப்பட்டது.

    மேலும், அந்தந்த கிராமங்களில் உள்ள பொதுமக்கள் அத்திவாசிய பொருட்கள் வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.




    ஊத்தங்கரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழையால் ஊத்தங்கரை பகுதியில் 15-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதமாகியது. மேலும், ஊத்தங்கரை பகுதியில் இன்றும் மழைநீர் வடியாமல் இருந்து வருகிறது. மேலும், பாதிக்கப்பட்ட அண்ணா நகர், காமராஜர் நகர் ஆகிய பகுதிகளில் 5-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தது.

    ஊத்தங்கரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பேரிடர் மீட்பு குழுவினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதேபோன்று போச்சம்பள்ளியில் உள்ள ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேறிதால், பஸ் நிலையம், போலீஸ் நிலையம், தாசில்தார் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அந்த பகுதியில் ஒரு இருசக்கர வாகனம், ஆடுகள், கோழிகள் அடித்து செல்லப்பட்டன.

    ஊத்தங்கரை, போச்சம்பள்ளி பகுதிகளில் ஏரிகளில் இருந்து உபரிநீர் வெளியேறி ஏற்பட்ட வெள்ளபெருக்கால் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமானது.

    தொடர் மழையால் தென்பெண்ணையாற்றில் இருந்து நீர்திறப்பு அதிகரிப்பட்டு உள்ளதால், கரையோரம் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது.

    ஊத்தங்கரை, போச்சம்பள்ளி ஆகிய பகுதிகளில் உள்ள ஏரி கரையோர வசிக்கும் பொதுமக்களையும் பேரிடர் மீட்பு பணி குழுவினர் பத்திரமாக மீட்டு பாதுகாப்பாக தனியார் திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.

    தருமபுரி மாவட்டம் அரூர் மற்றும் சுற்று வட்டாரத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

    அரூரில், திரு.வி.க. நகர் மேற்கு, தில்லை நகர், மேல்பாட்சாபேட்டை, அம்பேத்கர் நகர் புது காலனி, ஆத்தோர வீதி உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதனால், பாதிக்கப்பட்ட மக்கள் அவதியடைந்தனர்.

    அரூர் மற்றும் சுற்று வட்டாரத்தில் பெய்த தொடர்மழையால், சங்கிலிவாடி ஏரி, கோணம்பட்டி ஏரி மற்றும் எல்லப்புடையாம்பட்டி, செல்லம்பட்டி, லிங்காபுரம், பெரமாண்டப்பட்டி, மாம்பட்டி, கணபதிப்பட்டி ஏரிகள் நிரம்பின. அரூரில் 90 சதவீதத்திற்கு மேலான ஏரிகள் நிரம்பின.

    அரூர் மற்றும் சுற்று வட்டாரத்தில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால் தடுப்பணைகள், ஏரிகள் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன.

    தடுப்பணைகள், ஏரிகளில் இருந்து வெளியேற்றப்படும் நீரானது கால்வாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளால் விளை நிலங்களில் புகுந்தும், தேங்கியும் உள்ளது. மேலும், சாலைகளிலும் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது.

    அரூர் அடுத்த டி.அம்மாபேட்டை தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் சென்னியம்மன் கோவில் மற்றும் திருப்பாறை நீரில் மூழ்கியுள்ளது.

    இதேபோன்று அரூரை அடுத்த சித்தேரி மலைப்பாதையின் சில இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. மலைப்பாதையில் ராட்சத பாறை உருண்டு வந்து சாலையில் விழுந்தது.

    அப்போது, வாகனங்கள் ஏதும் செல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் சித்தேரி மலை கிராம பகுதி முழுவதும் செல்வதற்கு வழியில்லாமல் துண்டிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த பேரிடர் மீட்பு குழுவினர் உடனே அங்கு சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சித்தேரி பஞ்சாயத்துக்கு உட்பட்ட கருக்கம்பட்டி, கலசப்பாடி, அரசநத்தம் உள்ளிட்ட கிராமங்களில் பீன்ஸ், மஞ்சள், நெல், கொள்ளு உள்ளிட்ட விவசாய பயிர்களை சாகுபடி செய்திருந்தனர். அறுவடைக்கு காத்திருந்த நேரத்தில், தொடர் மழை காரணமாக 100 ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்டிருந்த எல்லா பயிர்களும் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. மேலும், விவசாய நிலங்களில் குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

    இதேபோன்று வாச்சாத்தி ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. தொடர்ந்து நீர் வெளியேற வழியின்றி உபரிநீர் வெளியேறும் பகுதியில் உடைப்பு ஏற்பட்டது. இதனால், வார்சாத்தி, கூக்கடப்பட்டி பகுதியில் உள்ள வயல்வெளிகளில் தண்ணீர் புகுந்ததால் நெல், மஞ்சள், மரவள்ளிக்கிழங்கு உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கின.

    வத்தல் மலையில் பெய்த கனமழையால், நேற்று அதிகாலை முதல், காட்டாற்று வெள்ளம் உருவாகி, நீரோடைகள் வழியாக மலை அடிவாரத்திலுள்ள தடுப்பணைகளில் சீறி பாய்ந்தது. இதில், வத்தல்மலை அடிவாரத்தில் இருந்த தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. சாலை துண்டிப்பால், வாகன போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது.

    இதனால், வத்தல் மலையிலுள்ள, 10 கிராம மக்கள் அத்தியாவசிய தேவைகள் மற்றும் மருத்துவ சிகிச்சைக்கு அங்கிருந்து வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    அப்பகுதியில், தருமபுரி ஆர்.டி.ஓ., காயத்ரி, நல்லம்பள்ளி தாசில்தார் சிவக்குமார், லோகநாதன் ஆகியோர் தலைமையில் தற்காலிக பாலம் அமைக்கும் பணிகள் மேற்கொண்டனர். இதனால் பாலம் அமைத்து போக்குவரத்து சீரானது.

    இதேபோன்று பொம்மிடி அருகே உள்ள பையர் நத்தம் ஊர் ஏரி கனமழை காரணமாக நேற்று நிரம்பியது. இதனால் கால்வாய்களில் உடைப்பு ஏற்பட்டு பையர் நத்தம் அம்பேத்கர் காலனி பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் சாக்கடையுடன் கலந்த மழை வெள்ளம் ஊருக்குள் புகுந்ததால் பொதுமக்கள் நள்ளிரவில் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

    இதே போல பொம்மிடி அருகே உள்ள கோட்டை மேடு என்ற இடத்தில் வேப்பாடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மலைப்பகுதியில் இருந்து அடித்து வரப்பட்ட மரம், செடி, கொடிகள் ஆங்காங்கே அடைப்பை ஏற்படுத்தி வயல்வெளிக்குள் மழை நீர் புகுந்துள்ளது.

    கோட்டைமேடு தரைப்பாலம் முழுவதும் மூழ்கடிக்கப்பட்டு ஆற்று வெள்ளம் அடித்து செல்லப்பட்டதால், துண்டிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக தருமபுரி மற்றும் சேலம் மாவட்ட எல்லையில் உள்ள கிராம மக்கள் போக்குவரத்து வழியில்லாமல் அவதிக்குள்ளாகினர்.

    மேலும் இந்த பகுதியில் உள்ள 8-க்கு மேற்பட்ட மின்கம்பங்கள் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் இப்பகுதியில் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து தகவலறிந்த ஊராட்சி நிர்வாகம் தற்காலிக பாலம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பெய்த கனமழையால் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாய நிலங்களில் பயிர்கள் மூழ்கி சேதமானது.

    • தமிழகத்துக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என முதல்வரிடம் பிரதமர் மோடி உறுதி அளித்தார்.
    • புயல் சேதங்கள் குறித்த விரிவான மதிப்பீட்டை மேற்கொள்ள ஒன்றியக் குழுவை அனுப்பிட வேண்டும்.

    தமிழகத்தின் ஃபெஞ்சல் புயல், மழையால் 1.5 கோடி மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

    இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் மோடி ஃபெஞ்சல் புயலால் தமிழகத்தில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார்.

    இதைத்தொடர்ந்து தமிழகத்துக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என முதல்வரிடம் பிரதமர் மோடி உறுதி அளித்தார்.

    இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    ஃபெஞ்சல் புயல் தமிழ்நாட்டில் ஏற்படுத்தியுள்ள கடுமையான பாதிப்புகள் குறித்து பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக என்னைத் தொடர்புகொண்டு கேட்டறிந்தார்.

    மாநில அரசு பேரிடர் பாதிப்பைத் திறம்பட எதிர்கொண்டு வருவதையும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருவதையும் பிரதமரிடம் தெரிவித்து, தமிழ்நாட்டு மக்களைக் கடும் துன்பத்தில் ஆழ்த்தியுள்ள இந்தப் புயலின் பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்கி - புயல் சேதங்கள் குறித்த விரிவான மதிப்பீட்டை மேற்கொள்ள ஒன்றியக் குழுவை அனுப்பிட வேண்டும் என்ற எனது கடிதத்தைக் குறிப்பிட்டு, இது குறித்து மீண்டும் வலியுறுத்தினேன்.

    தமிழ்நாட்டின் இந்தக் கோரிக்கையை பிரதமர் உடனடியாகப் பரிசீலித்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்று உறுதிபட நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    • எனது தங்கை கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்கொலைக்கு முயன்றார்.
    • இதனால் எனக்கு மனவேதனை ஏற்பட்டது.

    நெல்லை:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே உள்ள முனிவாழை கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் விஜயகுமார் (வயது 25). இவர் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு சிமெண்டு கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

    இவருக்கும், நெல்லை பாளையங்கோட்டை சாந்திநகர் 24-வது தெருவை சேர்ந்த ஞானராஜ் மகள் ஜெனிபர் (23) என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இதனை அறிந்த ஜெனிபரின் சகோதரர் சிம்சன் என்ற புஷ்பராஜ் செல்போனில் பேசி விஜயகுமாரை நெல்லைக்கு வரவழைத்துள்ளார்.

    நேற்று காலை ரெயிலில் நெல்லைக்கு வந்த விஜயகுமாரை சிம்சன் தனது நண்பரான பாளை அண்ணா நகரை சேர்ந்த சிவாவுடன் (35) சேர்ந்து அவரது வீட்டுக்கு அழைத்துச்சென்று அங்கு வைத்து கொலை செய்தார்.

    இதுகுறித்து பாளை போலீசார் வழக்குப்பதிவு செய்து சிம்சனையும், சிவாவையும் கைது செய்து நடத்திய விசாரணையில் சிம்சன் கூறியதாவது:-

    எனது தங்கையை நான் கஷ்டப்பட்டு வளர்த்து என்ஜினீயரிங் படிக்க வைத்தேன். பின்னர் அவர் நாகர்கோவிலில் வேலை பார்த்து வந்தார். அப்போது இன்ஸ்டாகிராம் மூலம் விஜயகுமாருடன் அவருக்கு காதல் ஏற்பட்டது. இதனை அறிந்து நாங்கள் அவரை வேலைக்கு செல்ல வேண்டாம் என்று கூறிவிட்டோம். இதனால் சமீபத்தில் ஜெனிபர் கள்ளக்குறிச்சியில் விஜயகுமாரை தேடி சென்றுவிட்டார்.

    இதுகுறித்து பாளை மகளிர் போலீசில் சமாதானம் பேசி மீண்டும் ஜெனிபரை எங்கள் வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டோம். ஆனாலும் எனது தங்கை கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்கொலைக்கு முயன்றார். இதனால் எனக்கு மனவேதனை ஏற்பட்டது. எனது தங்கையை இவ்வளவு கஷ்டபடுத்தும் விஜயகுமாரை கண்டிக்க வேண்டும் என்று நினைத்து அவரை நைசாக பேசி நெல்லைக்கு வரவழைத்தேன்.

    ஆனால் அவர் முன் எச்சரிக்கையாக அவரது நண்பர் ஒருவரை அழைத்து வந்திருந்தார். இதனால் அவரை நம்பும்படி பேசி கழட்டிவிட்டுவிட்டு விஜயகுமாரை மட்டும் அழைத்து வந்தேன். எனது நண்பன் சிவா வீட்டில் வைத்து சமாதானம் பேசினோம். அப்போது அவர் எங்களது சமாதானத்தை கேட்கவில்லை. காதலை கைவிட மறுத்தார். இதனால் நான் அவரை தாக்கினேன். ஆத்திரம் அதிகரித்ததில் நாங்கள் 2 பேரும் சேர்ந்து விஜயகுமாரை கொலை செய்தோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனிடையே விஜயகுமார் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் இன்று காலை அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    • 38 ஏக்கர் நிலப்பரப்பில் ரோஜா தோட்டம், இத்தாலிய தோட்டம், தேயிலைத் தோட்டம், பிரமைத் தோட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
    • பசுமைக்குடிலில் 20 ஆயிரம் பூந்தொட்டிகள் தயார் செய்யப்பட்டு உள்ளன.

    ஊட்டி:

    சர்வதேச சுற்றுலாத் தலமான ஊட்டிக்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.

    அதிலும் குறிப்பாக ஆண்டுதோறும் சுமார் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருகை தருவதாக புள்ளி விவரங்கள் தெரிவித்து உள்ளன.

    கர்நாடக அரசு தோட்டக்கலைத்துறைக்கு சொந்தமான மலர்ப்பூங்கா, ஊட்டி அருகே உள்ள பர்ன்ஹில் பகுதியில் அமைந்து உள்ளது. இங்கு சுமார் 38 ஏக்கர் நிலப்பரப்பில் ரோஜா தோட்டம், இத்தாலிய தோட்டம், தேயிலைத் தோட்டம், பிரமைத் தோட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

    நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவருவதற்காக, தமிழக தோட்டக்கலைத்துறை சார்பில் ஊட்டி பூங்காக்களில் ஆண்டுதோறும் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது.

    அதேபோல கர்நாடக அரசு பூங்காவிலும் இந்தாண்டு முதல்முறையாக குளிர்கால மலர் கண்காட்சி நடத்துவதென திட்டமிடப்பட்டு உள்ளது. இதுகுறித்து தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கிருஷ்ண மூர்த்தி கூறியதாவது:-

    கர்நாடக அரசு பூங்காவில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் ஆர்கிட், சைக்ளோமன், ரெனன்குலஸ், டியூபெரஸ், பிகோனியா, கிரைசாந்திமம், மேரிகோல்டு உள்ளிட்ட 200 ரகங்களில், 5 லட்சம் மலர்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் பசுமைக்குடிலில் 20 ஆயிரம் பூந்தொட்டிகள் தயார் செய்யப்பட்டு உள்ளன.

    இதன் காரணமாக வார நாட்களில் 6 ஆயிரம் மற்றும் வார இறுதி நாட்களில் சுமார் 12 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வரை இந்த பூங்காவை பார்வையிட்டு செல்கின்றனர். மேலும் கர்நாடக அரசு பூங்காவில் அமைக்கப்பட்டு உள்ள தொங்குபாலம், மையப் பகுதியில் இருக்கும் மலர் நீர்வீழ்ச்சி ஆகியவை சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகின்றன.

    இந்த பூங்காவை சுற்றிப் பார்க்க வரும் பயணிகளிடம் தலா ரூ.100 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மேலும் ஊட்டியின் பல இடங்களிலும் வாகனங்கள் நிறுத்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் இங்கு 'பார்க்கிங்' கட்டணம் கிடையாது.

    இதற்கிடையே ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை மேலும் கவருவதற்காக கர்நாடக அரசு பூங்காவில் இந்தாண்டு முதல்முறையாக குளிர்கால மலர் கண்காட்சி இம்மாதம் 3-வது வாரத்தில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க வேண்டுமென கர்நாடகா, தமிழக முதலமைச்சர்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×