என் மலர்
நீங்கள் தேடியது "Electricity bills"
- ஜூலை ஒன்றாம் தேதி முதல் 3.16% கட்டணத்தை உயர்த்த மின்வாரியம் முடிவு செய்திருக்கிறது.
- இழப்புகளை ஈடு செய்வதற்காகவே மின்சாரக் கட்டணத்தை உயர்த்தி தமிழக மக்களை திமுக அரசு வாட்டி வதைக்கிறது.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மகாராஷ்டிரத்தில் நடப்பாண்டில் தொடங்கி அடுத்த 5 ஆண்டுகளில் மின்சாரக் கட்டணத்தை 26% குறைக்கப் போவதாக அம்மாநில அரசு அறிவித்திருக்கிறது. அதேநேரத்தில் தமிழகத்தில் ஏற்கனவே 39.81% அளவுக்கு மின்சாரக் கட்டணத்தை உயர்த்தியுள்ள திராவிட மாடல் அரசு, அடுத்த சில நாள்களில் மேலும் 3.16% மின்கட்டண உயர்வை நடைமுறைப்படுத்தப் போகிறது. மக்களை வாழவைக்கப் போவதாக ஏமாற்றி ஆட்சிக்கு வந்த திமுக, மக்களைச் சுரண்டி ஊழல் செய்வது நாளுக்கு நாள் அம்பலமாகி வருகிறது.
தமிழ்நாட்டின் நடைமுறைகளுக்கு முற்றிலும் மாறாக, மகாராஷ்டிரத்தில் வீடுகள், கடைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்து வகை இணைப்புகளுக்குமான மின்கட்டணங்கள் அடுத்த 5 ஆண்டுகளில் 26% குறைக்கப்படும்; முதல் கட்டமாக நடப்பாண்டில் 10% கட்டணம் குறைக்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சரும், மின்துறை அமைச்சருமான தேவேந்திர பட்னவிஸ் அறிவித்திருக்கிறார். மகாராஷ்டிர அரசின் இம்முடிவுக்கு அம்மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையமும் ஒப்புதல் அளித்திருக்கிறது. மகாராஷ்டிர அரசின் இந்த முடிவு அம்மாநில மக்களிடம் மகத்தான வரவேற்பை பெற்றிருப்பதில் வியப்பில்லை.
ஆனால், தமிழ்நாட்டில்....?
திமுக ஆட்சிக்கு வந்த ஓராண்டில், அதாவது 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அதிகபட்சமாக 52 விழுக்காடும், சராசரியாக 32 விழுக்காடும் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதன் மூலம் அந்த நிதியாண்டின் எஞ்சிய 7 மாதங்களில் மட்டும் ரூ.23,863 கோடியும், முழு ஆண்டுக்கும் சேர்த்து ரூ.31,500 கோடியும் மின்வாரியத்திற்கு கூடுதல் வருமானம் கிடைத்தது. 2023-ஆம் ஆண்டு ஜூலை முதல் 2.18 விழுக்காடும், 2024-ஆம் ஆண்டு ஜூலை முதல் 4.83 விழுக்காடும் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டது. கடந்த இரண்டே முக்கால் ஆண்டுகளில் மட்டும் மொத்தம் 39.81% மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மட்டும் மின்சார வாரியத்திற்கு ஆண்டுக்கு ரூ.41,500 கோடியும், கடந்த இரண்டே முக்கால் ஆண்டுகளில் ஒரு லட்சம் கோடிக்கும் கூடுதலாகவும் வாரியத்திற்கு வருவாய் கிடைத்திருக்கக் கூடும்.
இவை மட்டும் போதாது என்று ஜூலை ஒன்றாம் தேதி முதல் 3.16% கட்டணத்தை உயர்த்த மின்வாரியம் முடிவு செய்திருக்கிறது. இதற்கான அறிவிப்பு எந்த நேரமும் வெளியாகும் என்று அழைக்கப்படுகிறது. அதையும் சேர்த்தால் கடந்த 3 ஆண்டுகளில் 42.17%, அதாவது ரூ.45,000 கோடி மின் கட்டணத்தை திமுக அரசு உயர்த்தியிருக்கிறது. இது உண்மையாகவே தமிழக மக்களுக்கு கிடைத்த பெரும் சாபமாகும்.
ஒருவேளை அடுத்த ஐந்தாண்டுகளுக்கு தமிழ்நாட்டில் திமுக அரசு தொடர்ந்து, இதே அளவில் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்படுவதாகவும், மகாராஷ்டிரத்தில் மின்சாரக் கட்டணம் குறைக்கப்படுவதாகவும் வைத்துக் கொண்டால், அடுத்த ஐந்தாம் ஆண்டின் முடிவில் தமிழ்நாட்டுக்கும், மகாராஷ்டிரத்திற்கும் இடையிலான மின் கட்டண வேறுபாடு இப்போது இருக்கும் அளவை விட 50% அதிகரித்திருக்கும். தமிழகத்தை ஆளும் திமுக அரசு தமிழ்நாட்டு மக்களை எவ்வாறு சுரண்டுகிறது என்பதற்கு இது தான் சிறந்த எடுத்துக்காட்டு.
தமிழ்நாட்டில் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்படுவதற்கும், மகாராஷ்டிரத்தில் மின்சாரக் கட்டணம் குறைக்கப்படுவதற்கும் முதன்மைக் காரணம் நிர்வாகத் திறன் தான். தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நிர்வாகத் திறனை பூதக் கண்ணாடி கொண்டு தான் தேட வேண்டியிருக்கிறது. மகாராஷ்டிர மாநில மின்வாரியம் நிர்வாகத்தில் சிறந்து விளங்குகிறது. எடுத்துக்காட்டாக, அடுத்த ஐந்தாண்டுகளில் சூரிய ஒளி மின்சாரம், காற்றாலை மின்சாரம், நீர் மின்சாரம் போன்ற பசுமை மின்சாரத்தை கொள்முதல் செய்வதன் மூலம் ரூ.66,000 கோடியை மகாராஷ்டிர மின்வாரியம் சேமிக்கப் போவதாக அதன் நிர்வாக இயக்குனர் லோகேஷ் சந்திரா தெரிவித்துள்ளார். அவ்வாறு சேமிக்கப்பட்ட தொகை தான் மின்கட்டண குறைப்பாக அம்மாநில மக்களுக்கு கிடைக்கவிருக்கிறது.
ஆனால், தமிழ்நாட்டின் நிலைமை முற்றிலும் தலைகீழாக உள்ளது. 2022-23ஆம் ஆண்டில் மட்டும் அனுமதிக்கப்பட்ட அளவை விட 917.6 கோடி யூனிட் மின்சாரத்தை ரூ.13,179 கோடி கூடுதலாக கொடுத்து தமிழ்நாடு மின்வாரியம் வாங்கியிருக்கிறது. சராசரியாக ஒரு யூனிட் ரூ.14.36 என்ற விலைக்கு மின்சாரத்தை வாங்கியது தான் இதற்கு காரணம் ஆகும். அந்த ஆண்டில் மின்சார வாரியத்தின் மொத்த வருவாய் ரூ.82,400 கோடி மட்டும் தான். ஆனால், அதில் ரூ.51,000 கோடிக்கு, அதாவது கிட்டத்தட்ட 62% வெளியிலிருந்து மின்சாரம் வாங்கினால் மின்வாரியத்தை எவ்வாறு லாபத்தில் இயக்க முடியும்? இந்த இழப்புகளை ஈடு செய்வதற்காகவே மின்சாரக் கட்டணத்தை உயர்த்தி தமிழக மக்களை திமுக அரசு வாட்டி வதைக்கிறது.
தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் முதன்மை மாநிலமாக்கப் போவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த திமுக, மக்களைச் சுரண்டுவதில் தான் முதலிடம் பிடித்துள்ளது. திமுகவின் கொடுங்கோல் ஆட்சியால் பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்று திரண்டு வரும் தேர்தலில் திமுகவுக்கு படுதோல்வியை பரிசாக அளிப்பார்கள். அடுத்து அமையவிருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி அங்கம் வகிக்கும் கூட்டணி ஆட்சியில், மின்கட்டணம் குறைந்தபட்சம் 25% அளவுக்கு குறைக்கப்படும்; நேர்மையான நிர்வாகத்தின் மூலம் இதை பாமக சாதிக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்.
- தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக குறைந்த வட்டியில் கடன் வழங்க வேண்டும்.
தஞ்சாவூர்:
மின் கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வுகளை திரும்ப பெற வேண்டும், மாவட்டம் முழுவதும் கிராமப்புறங்களில் ஆரம்ப சுகாதார மையங்களில் மருத்துவர்கள் இரவில் பணியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் முன்பு இருந்த பணி நேரத்தை கடைப்பிடிக்க வேண்டும், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக குறைந்த வட்டியில் கடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று இந்திய மாதர் தேசிய சம்மேளனம் தஞ்சை மாவட்ட குழ சார்பில் ஆர்ப்பாட்டம் தஞ்சாவூர் ரயிலடி முன்பு நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் விஜயலெட்சுமி தலைமை வகித்தார்.மாவட்ட தலைவர் தனசீலி, மாவட்ட துணை செயலாளர் எஸ்தர் லீமா, பொருளாளர் ஸ்ரீதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஆர்பாட்டத்தினை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் கிருஷ்ணன் தொடக்கி வைத்தார்.
நிர்வாக குழு உறுப்பினர் சேவையா சிறப்புரையாற்றினார்.மாநகர செயலாளர் பிரபாகர் ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்து பேசினார்.
தஞ்சை மாநகர செயலாளர் பத்மாவதி, ஒன்றிய நிர்வாகிகள் தஞ்சைமல்லிகா, ஒரத்தநாடு எலிசபெத், பட்டுக்கோட்டை ஜானகி, சகுந்தலா, பேராவூரணி கலைச்செல்வி, திருவோணம்தவமணி, மதுக்கூர்ஜெனிதா, சேதுபாசத்திரம் கனகம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- கட்டணங்களை பாரத் பில் பே வாயிலாக செலுத்தலாம் என மின் வாரியம் அறிவித்துள்ளது.
- மின் நுகர்வோர் தங்களது கட்டணத்தை செலுத்த பாரத் பில் பே மற்றுமோர் எளிய வழிமுறையாகும்.
திருப்பூர் :
மின் நுகர்வோர் தங்களது கட்டணங்களை பாரத் பில் பே வாயிலாக செலுத்தலாம் என மின் வாரியம் அறிவித்துள்ளது.இதுதொடர்பாக மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:- ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்துவோருக்கு கூடுதல் வசதியாக பாரத் பில் பே மூலமும் செலுத்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பாரத் பில் பே என்பது இந்திய ரிசர்வ் வங்கியால் வடிவமைக்கப்பட்டு இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தால் (என்.பி.சி.ஐ.,) நிர்வகிக்கப்படும் ஒன்றாகும்.
மின் நுகர்வோர் தாங்கள் ஏற்கனவே பயன்படுத்தி வரும் வங்கி மற்றும் வங்கி அல்லாத செயலிகள் மற்றும் இணையதளத்தில் பாரத் பில் பே லோகோவை கிளிக் செய்யவும். அதில் பில் செலுத்தும் பட்டியலில் தமிழ்நாடு மின்சார வாரியத்தை கிளிக் செய்து மின் இணைப்பு விவரங்களைக் கொடுக்க வேண்டும். தகவல்களைச் சரிபார்த்து மின் கட்டணத்தைச் செலுத்தலாம்.மின் நுகர்வோர் தங்களது கட்டணத்தை செலுத்த பாரத் பில் பே மற்றுமோர் எளிய வழிமுறையாகும். இவ்வாறு மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
- ஒரு சிலர் இணையவழி மூலமாக கட்டணங்களை செலுத்தி விடுகின்றனர்.
- வசூல் மையங்கள் படிப்படியாக மூடப்பட்டு தற்போது ஒன்று மட்டுமே நடைமுறையில் உள்ளது.
உடுமலை :
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூலமாக தொழிற்சாலைகள், அலுவலகங்கள்,வீடுகளுக்கு மின்விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலமாக பல்வேறு தரப்பட்ட மக்கள் பயன் அடைந்து வருகின்றனர். நாள்தோறும் பயன்படுத்தப்படும் மின்சாரத்தை கணக்கீடு செய்து அதற்கு தகுந்தவாறு மின் வாரியத்தின் மூலமாக கட்டணம் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதை குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்துமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
அதைத் தொடர்ந்து பொதுமக்கள் ஆன்லைன் மூலமாகவும் நேரடியாக மின்கட்டண வசூல் மையத்திற்கு சென்றும் கட்டணங்களை செலுத்தி வருகின்றனர். ஆனால் உடுமலை ஏரிப்பாளையத்தில் மின் பகிர்மான வட்ட அலுவலக வளாகத்தில் மின் கட்டண வசூல் மையம் ஒன்று மட்டுமே செயல்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-உடுமலை மின் பகிர்மான வட்ட அலுவலக வளாகத்தில் மின்சார பிரிவு அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இதன் ஆளுகைக்கு உட்பட்ட வீடுகள், தொழில் நிறுவனங்கள், அலுவலகங்களை சேர்ந்த பொதுமக்கள் மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தி வருகின்றனர். ஒரு சிலர் இணையவழி மூலமாக கட்டணங்களை செலுத்தி விடுகின்றனர்.ஆனால் படிப்பறிவற்ற பொதுமக்கள் அலுவலகத்திற்கு சென்று செலுத்தி வருகின்றனர். இதற்காக செயல்பட்டு வந்த வசூல் மையங்கள் படிப்படியாக மூடப்பட்டு தற்போது ஒன்று மட்டுமே நடைமுறையில் உள்ளது. இதனால் பொதுமக்கள் கால் கடுக்க மணிக்கணக்கில் காத்திருந்து கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. அப்போது மூத்த குடிமக்கள் வரிசையில் காத்திருப்பதற்கு இயலாத நிலை உள்ளது.மேலும் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் பொதுமக்கள் தாகம் தீர்ப்பதற்கு ஏதுவாக குடிதண்ணீரும் வைப்பதில்லை. இதனால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். கூட்டத்திற்கு தகுந்தவாறு கூடுதல் மையங்களைத் திறந்து சேவையை அளிக்க வேண்டியது அதிகாரிகளின் கடமையாகும்.ஆனால் இது குறித்து அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை.எனவே மின் கட்டண வசூல் மையத்தில் கூடுதல் பணியாளர்களை நியமித்து கூடுதல் வசூல் மையங்களை திறப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- முதல், 1000 யூனிட்டுக்கு மின் கட்டணம் இல்லை. உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தில் 50 சதவீதத்தை குறைத்து அரசு அறிவித்தது.
- 6 தவணைகளில் நிலுவை கட்டணத்தை செலுத்தவும் அரசு அனுமதி அளித்தது.
திருப்பூர்:
கோவை, திருப்பூர் மாவட்டத்தில் விசைத்தறி தொழில் பிரதானமாக உள்ளது. பல லட்சம் பேர் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். கடந்தாண்டு செப்டம்பர் மாதம் விசைத்தறிக்கான மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதனால் மின் கட்டணத்தை செலுத்தாமல் விசைத்தறியாளர்கள் போராடினர்.
அதன் பலனாக முதல், 1000 யூனிட்டுக்கு மின் கட்டணம் இல்லை. உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தில் 50 சதவீதத்தை குறைத்து அரசு அறிவித்தது. ஆனால் நிலுவையில் உள்ள மின் கட்டணத்துக்கு அபராதம் மற்றும் வட்டி விதிக்கப்பட்டது.மேலும் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்திலேயே மின் கணக்கீடு செய்யப்பட்டது. இதனால் விசைத்தறியாளர்கள் ஏமாற்றமடைந்தனர்.
கடந்த 8 மாதங்களாக முதல்-அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், மற்றும் மின்வாரிய அதிகாரிகளிடம் நிலுவை மின் கட்டணத்துக்கு அபராதம், வட்டியை ரத்து செய்ய வேண்டும், கட்டணம் செலுத்த தவணை அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.
விசைத்தறியாளர்களின் கோரிக்கையை ஏற்று, அபராதம் மற்றும் வட்டியை ரத்து செய்தும், 6 தவணைகளில் நிலுவை கட்டணத்தை செலுத்தவும் அரசு அனுமதி அளித்தது. இதனால் மகிழ்ச்சி அடைந்த விசைத்தறியாளர்கள் நிலுவை மின் கட்டணத்தை செலுத்துவதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதுகுறித்து, கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்க தலைவர் குமாரசாமி, பொருளாளர் பூபதி ஆகியோர் கூறுகையில், அரசின் அறிவிப்பால் மகிழ்ச்சி அடைந்துள்ளோம்.
கடந்த 4 நாட்களாக மின் வாரிய அலுவலகங்களுக்கு சென்று தங்களின் நிலுவை கட்டணம் குறித்து விசாரித்து அதை செலுத்துவதில் விசைத்தறியாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர் என்றனர்.
- தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை.
- 4 மாவட்டங்களுக்கு மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் கரையை கடக்க தொடங்கியுள்ளது. இன்னும் 3 அல்லது 4 மணி நேரத்தில் முழுமையாக கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுத்து வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி, சென்னை, திருவள்ளூர், செல்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வரும் டிசம்பர் 10ம் தேதி வரை மின் கட்டணம் எந்தவித அபராதமும் இன்றி செலுத்தலாம் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
- சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு மின் கட்டணம் செலுத்த அவகாசம்.
- வரும் டிசம்பர் 10ம் தேதி வரை மின் கட்டணம் எந்தவித அபராதமும் இன்றி செலுத்தலாம் என்று அறிவிப்பு.
வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் நேற்று மாமல்லபுரம்- மரக்காணம் இடையே கரையை கடந்தது.
இதன் எதிரொலியால், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது.
பல்வேறு இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. சாலைகளிலும், வீடுகளிலும் தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
இதனால், ஏற்கனவே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் அளித்து அறிவிக்கப்பட்டது.
அதன்படி, வரும் டிசம்பர் 10ம் தேதி வரை மின் கட்டணம் எந்தவித அபராதமும் இன்றி செலுத்தலாம் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மேலும் 6 மாவட்டங்களுக்கு மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு அவகாசம் நீட்டித்து அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவிட்டுள்ளார்.
- கடந்த 2016-ம் ஆண்டு முதல் மின் வினியோகம் நடந்து வருகிறது.
- நன்றிக்கடனாகவும் மின் வினியோகம் செய்து வருவதாகவும் தெரிவித்தார்.
வங்காளதேசத்துக்கு நாள்தோறும் 60 முதல் 70 மெகாவாட் வரையிலான மின்சாரத்தை திரிபுரா மாநில மின் பகிர்மான கழகம் வழங்கி வருகிறது. கடந்த 2016-ம் ஆண்டு முதல் இந்த வினியோகம் நடந்து வருகிறது.
இந்த மின்சாரத்துக்காக வங்காளதேச அரசு சுமார் ரூ.200 கோடி வரை பாக்கி வைத்து உள்ளதாக முதல்-மந்திரி மாணிக் சகா கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'வங்காளதேசம் ரூ.200 கோடி வரை மின் கட்டண பாக்கி வைத்துள்ளது. இது நாள்தோறும் அதிகரித்தும் வருகிறது. இதை விரைவில் வழங்கி மின் வினியோகம் தடைபடாமல் பார்த்துக்கொள்வார்கள் என நம்புகிறேன்' என தெரிவித்தார்.
அதிகமான கட்டணம் பாக்கி வைத்துள்ளதால் வங்காளதேசத்துக்கு மின் வினியோகம் நிறுத்தப்படுமா? என்று கேட்டபோது, அது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று பதிலளித்தார்.
திரிபுரா மின் உற்பத்தி நிலையத்துக்கான பல தளவாடங்கள் வங்காளதேசம் அல்லது சிட்டகாங் துறைமுகம் வழியாக கொண்டு வரப்படுவதாகவும், எனவே அதற்கான நன்றிக்கடனாகவும் மின் வினியோகம் செய்து வருவதாகவும் தெரிவித்தார். எனினும் கட்டண நிலுவையை வழங்காமல் இன்னும் எவ்வளவு காலத்துக்கு மின்சாரம் வழங்க முடியும் என்பது தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.






