என் மலர்
உள்ளூர் செய்திகள்
- குழுவினர் தற்போது 5 பிரிவுகளாக பிரிந்து காட்டு யானையை கண்காணித்து வருகின்றனர்.
- ஒற்றை காட்டு யானையின் அட்டகாசம் நீடிப்பது பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் சேரம்பாடி வனச்சரகத்துக்கு உட்பட்ட சேரங்கோடு டேன் டீ, சின்கோனா, நர்சரி, படச்சேரி, சேரங்கோடு பஜார், தட்டாம்பாறை, சேரம்பாடி டேன் டீ உள்ளிட்ட பகுதிகளில் ஒற்றை காட்டு யானை (புல்லட் ராஜா) அட்டகாசம் தொடர்ந்து நீடித்து வருகிறது.
இந்த யானை கடந்த சில நாட்களில் மட்டும் 35-க்கும் மேற்பட்ட வீடுகளை தாக்கி சேதப்படுத்தி உள்ளது. மேலும் விவசாய பயிர்களை சேதப்படுத்துவது, வாகனங்களை தாக்குவது, பொதுமக்களை ஆக்ரோஷமாக துரத்துவது என்று புல்லட் ராஜாவின் தொல்லை நீடித்து வருகிறது.
தொடர்ந்து ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் ஒற்றை யானையை வனத்துக்குள் விரட்டும் பணிக்காக 75 ஊழியர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு, இந்த குழுவினர் தற்போது 5 பிரிவுகளாக பிரிந்து காட்டு யானையை கண்காணித்து வருகின்றனர்.
மேலும் டிரோன் கேமரா மூலமாகவும் புல்லட் ராஜா பதுங்கி இருக்கும் இடத்தை கண்டறிந்து, கும்கி யானைகள் உதவியுடன் அடர்ந்து வனப்பகுதிக்குள் விரட்டும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனாலும் வனத்துறையினர் முயற்சிக்கு இதுவரை பலன் கிட்டவில்லை.
இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமககள், வனத்தில் இருந்து வெளியே வரும் புல்லட் ராஜா தொடர்ந்து எங்கள் பகுதியில் அட்டகாசம் செய்து வருகிறது. எனவே அந்த யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்து தெப்பக்காடு யானை முகாமுக்கு கொண்டு சென்று பராமரிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் நாகநாதன் தலைமையில் வனத்துறை உயர்மட்ட குழுவினர் ஆய்வுக்கூட்டம் பந்தலூரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்களிடம், 3 நாட்கள் அவகாசம் கொடுங்கள், நடவடிக்கை எடுக்கிறோம் என கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் கேட்டுக்கொண்டார்.
இதற்கிடையே வனத்தில் இருந்து வெளியேறிய புல்லட் ராஜா யானை இரவு சேரம்பாடி டேன்டீ சரகம்-1 பகுதிக்கு வந்தது. பின்னர் அங்கு வசிக்கும் கூலித்தொழிலாளிகள் சுமதி, சாந்தி, கருப்பாயி ஆகிய 3 பேரின் குடியிருப்புகளை தாக்கி சேதம் செய்தது. மேலும் துப்பிக்கையால் வீட்டில் உள்ள டி.வி., கட்டில் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களை வெளியே இழுத்து போட்டு சேதப்படுத்தியது. அந்த நேரத்தில் வீட்டுக்குள் இருந்தவர்கள் பின்பக்கம் வழியாக சென்று அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
சேரங்காடு பகுதியில் ஒற்றை காட்டு யானையின் அட்டகாசம் நீடிப்பது பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அவர்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது.
சேரம்பாடி வனச்சரகம் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் புல்லட் யானையை வனப்பகுதிக்கு விரட்டும் நடவடிக்கைகளில் வனத்துறையினர் 5-வது நாளாக தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
- சிறுபான்மை மக்களுக்கு எதிராக பல திட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது.
- நலத்திட்டங்களை நிறைவேற்றுவதால்தான் மக்கள் நல அரசாக திமுக அரசு திகழ்கிறது.
சென்னை டான் போஸ்கோ பள்ளியில் திமுக சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு சார்பில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:-
சமத்துவத்தை போற்றுவதுதான் திராவிட மாடல். எந்த மதமாக இருந்தாலும் அது அன்பை, சகோதரத்துவத்தை போதிக்க வேண்டும். திராவிட மாடல் என்றால் என்ன என்று கேட்பவர்களுக்கு இதுதான் பதில். இறைவனை வேண்டுவது அவரவர் விருப்பம். பாகுபாடு எதிலும் நிலவக்கூடாது.
37 தேவாலயங்களை புனரமைக்க ரூ.1.63 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஜெருசலேம் புனித பயணம் செல்வோருக்கு ரூ.37 ஆயிரம் நிதி நேரடியாக வழங்கப்படுகிறது.
நாள்தோறும் நலத்திட்டங்கள், திறப்பு விழாக்கள் என அரசு பல திட்டங்களை நிறைவேற்றுகிறது. நலத்திட்டங்களை நிறைவேற்றுவதால்தான் மக்கள் நல அரசாக திமுக அரசு திகழ்கிறது.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நின்றது திமுக அதை ஆதரித்தது அதிமுக சிறுபான்மை மக்களுக்கு எதிராக பல திட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது. அதனால்தான் தேர்தலில் பா.ஜ.க.வை மக்கள் சிறுபான்மை அரசாக்கி இருக்கிறார்கள்.
வெறுப்பு அரசியலைக் கண்டு அஞ்சக் கூடாது. சகோதரர் என்ற உணர்வோடு உங்களுக்கு துணையாக நாங்கள் உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
- பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.
- பராமரிப்பு பணிகள் முடிந்த பிறகு, மதியம் 2 மணிக்கு முன் மின் விநியோகம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நாளை பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. அதன்படி, காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
எழும்பூர்: சைடன்ஹாம்ஸ் சாலையின் ஒரு பகுதி, டெப்போ தெரு, பி.டி.முதலி தெரு, சாமி பிள்ளை தெரு ஒரு பகுதி, சைடன்ஹாம்ஸ் சாலை, ஏ.பி.ரோடு, ஹண்டர்ஸ் சாலை, ஜெனரல் காலின்ஸ் சாலை, மேடெக்ஸ் தெரு, வி.வி.கோயில் தெரு, குறவன் குளம், சுப்பையா நாயுடு தெரு, நேரு வெளிப்புற அரங்கம், நேரு உள்விளையாட்டு அரங்கம், அப்பாராவ் கார்டன், பெரிய தம்பி தெரு, ஆண்டியப்பன் தெரு, ஆனந்த கிருஷ்ணன் தெரு, பி.கே.முதலி தெரு, சூளை பகுதி, கே.பி.பார்க் பகுதி, பெரம்பூர் பேரக்ஸ் சாலை, ரோட்லர் தெரு, காளத்தியப்பா தெரு, விருச்சூர்முத்தையா தெரு, டேலி தெரு, மாணிக்கம் தெரு, ரெங்கையா தெரு ஒரு பகுதி, அஸ்தபுஜம் சாலை ஒரு பகுதி, ராகவா தெரு ஒரு பகுதி
பணிகள் முடிவடைந்த பிறகு, மதியம் 02.00 மணிக்கு மின் விநியோகம் தொடங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள், தோல்வி அடைந்தவர்களாகவே கருதப்படுவார்கள்.
- குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களை ஃபெயில் ஆக்க கூடாது என்கிற கொள்கை ரத்து செய்வதாக மத்திய கல்வித்துறைச் செயலாளர் சஞ்சய் குமார் அறிவித்தார்.
இதுகுறித்து மேலும் கூறிய அவர், " 5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களை ஃபெயில் ஆக்க கூடாது என்கிற கொள்கை ரத்து செய்யப்படுகிறது.
தோல்வி அடைந்த மாணவர்களுக்கு இரண்டு மாதங்களுக்குள் மறு தேர்வு எழுதுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும். அதிலும், மீண்டும் தோல்வி அடைந்தால், அடுத்த வகுப்பிற்கு ப்ரோமோட் செய்யப்பட மாட்டார்கள்.
5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள், தோல்வி அடைந்தவர்களாகவே கருதப்படுவார்கள்.
குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது" என்றார்.
இதனால், தமிழகத்தில் தொடர்ந்து வரும் தேர்ச்சி முறை குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது.
இந்நிலையில், இதுகுறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறுகையில், " தமிழகத்தில் பள்ளிகளில் தேர்ச்சி முறையில் எந்த மாற்றமும் இல்லை.
5ம், 8ம் வகுப்பு தேர்ச்சி தொடர்பாக தமிழகத்தில் தற்போதைய தேர்ச்சி முறையே தொடரும்.
மாணவர்கள் மகிழ்ச்சி, பாதுகாப்போடு கல்வி கற்க உகந்த சூழல்தான் முக்கியம்.
ஏழை எளிய குடும்பங்களை சேர்ந்த குழந்தைகள் தடையின்றி 8ம் வகுப்பு வரை கல்வி பெறுவதில் மத்திய அரசு பெரிய தடை கல்லை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் இத்தகைய நடவடிக்கை தமிழகத்தில் செயல்படும் மத்திய அரசு பள்ளிகளை தவிர மற்ற பள்ளிகளுக்கு பொருந்தாது.
தமிழகத்தில் உள்ள மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் மத்திய அரசின் கல்வி உரிமை சட்ட விதிகள் குறித்து குழப்பம் அடைய தேவையில்லை.
கல்வி உரிமை சட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள திருத்தங்கள் உண்மையிலேயே வருந்தத்தக்கது" என்றார்.
- இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பு ஆஜராகி விளக்கம் தர உத்தரவிட்டது.
- தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியதை அடுத்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் சி.வி.சண்முகம் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
இரட்டை இலை சின்னம் தொடர்பான விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் தேர்தல் ஆணையத்தில் சி.வி.சண்முகம் ஆஜரானார்.
இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரி திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரிய மூர்த்தி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கில் தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் உள்ள மனுக்கள் மீது 8 வாரத்தில் முடிவெடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பு ஆஜராகி விளக்கம் தர உத்தரவிட்டது.
தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியதை அடுத்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் சி.வி.சண்முகம் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
இன்று நடைபெற்ற தேர்தல் ஆணையத்தின் விசாரணையில், மனு தாரர்கள், எதிர் மனு தாரர்கள், அவர்களுடைய பதில், ஆட்சேபனைகள் இருந்தால் அனைத்தையும் வரும் 30ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறது.
அதற்கு ஏதாவது ஆட்சேபனைகள் இருந்தால் அடுத்த மாதம் 13ம் தேதிக்குள் ஆட்சேபனைகள் தெரிவித்த பிறகு இதுகுறித்து விசாரிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
சூரிய மூர்த்தியின் மனுவின் மீது இன்று விசாரணைக்கு வந்தபோது தேர்தல் ஆணையத்தில், எதிர் தரப்பில் தாக்கல் செய்த பதில் மனுவின் நகல் வேண்டும் என்று கேட்டிருக்கிறார். அதற்கு கால அவகாசமும் கோரப்பட்டிருக்கிறது.
அதிமுகவில் பிரிவு எதுவும் கிடையாது, இபிஎஸ் தலைமையில் இருப்பதுதான் அதிமுக.
இவ்வாறு அவர் கூறினார்.
- முதல் மெட்ரோ இரயில் 2026-ஆம் ஆண்டில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும்.
- மீதமுள்ள அனைத்து மெட்ரோ இரயில்களும் மார்ச் 2027 முதல் ஏப்ரல் 2029 வரை ஒவ்வொரு கட்டமாக ஒப்படைக்கப்படும்.
ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரெயில்களை தயாரிக்கும் ஒப்பந்தத்தை BEML நிறுவனத்திற்கு சென்னை மெட்ரோ நிர்வாகம் அளித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தியில், "சென்னை மெட்ரோ இரயில் இரண்டாம் கட்ட திட்டத்தில் ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோ இரயில்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் ரூ.3,657.53 கோடி மதிப்பில் வழங்கப்பட்டது
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், இரண்டாம் கட்ட திட்டத்தில் வழித்தடம் 3 மற்றும் 5-ல் ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் 3 இரயில் பெட்டிகளை கொண்ட 70 மெட்ரோ இரயில்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் BEML நிறுவனத்திற்கு ரூ.3,657.53 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பு கடிதம் (LOA) 28.11.2024 அன்று BEML நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திரு.எம்.ஏ.சித்திக், இ.ஆ.ப., அவர்களின் முன்னிலையில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் சார்பாக இயக்குநர் திரு. ராஜேஷ்சதுர்வேதி (அமைப்புகள் மற்றும் இயக்கம்) மற்றும் BEML நிறுவனத்தின் இயக்குநர் (இரயில் மற்றும்மெட்ரோ) திரு.ராஜீவ் குமார் குப்தா ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் ஆலோசகர் திரு.எஸ்.ராமசுப்பு (இயக்கம் மற்றும் மெட்ரோ இரயில்), தலைமை பொது மேலாளர் திரு.ஏ.ஆர்.ராஜேந்திரன், (மெட்ரோ இரயில்), இணை பொது மேலாளர் திரு.எஸ்.சதீஷ் பிரபு (இயக்கம் மற்றும் மெட்ரோ இரயில்), சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மற்றும் BEML நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.
இந்த ஒப்பந்தத்தில், வடிவமைப்பு, உற்பத்தி, வழங்கல், சோதனை, ஆணையிடுதல், பணியாளர்களுக்கான பயிற்சி, மெட்ரோ இரயில் மற்றும் பணிமனை இயந்திரங்களுக்கு 15 ஆண்டுகள் முழுமையான பராமரிப்பு உள்ளிட்ட ஒட்டுனர் இல்லாத மெட்ரோ இரயில்களை வழங்குதல் போன்றவை உள்ளடங்கும்.
இந்த ஒப்பந்ததின் கீழ், முதல் மெட்ரோ இரயில் 2026-ஆம் ஆண்டில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும். அதைத் தொடர்ந்து கடுமையான பாதைகள் மற்றும் ஓட்டுநர் இல்லாத இரயில் இயக்கத்திற்கான சோதனைகள் நடத்தப்படும். அதன்பின் மீதமுள்ள அனைத்து மெட்ரோ இரயில்களும் மார்ச் 2027 முதல் ஏப்ரல் 2029 வரை ஒவ்வொரு கட்டமாக சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும்.
BEML நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட மேற்கண்ட ஒப்பந்தம், இரண்டாம் கட்ட திட்டத்திற்கான ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோ இரயில்களை கொள்முதல் செய்வதற்கான மூன்று ஒப்பந்தங்களின் வரிசையில் இரண்டாவது ஒப்பந்தமாகும். முன்னதாக, முதல் ஒப்பந்தம் வழங்கப்பட்டது, மேலும் முன்மாதிரி இரயில் ஏற்கனவே சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் பூந்தமல்லி பணிமனைக்கு வழங்கப்பட்டுள்ளது. மூன்றாவது ஒப்பந்தம் செயல்பாட்டில் உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- முன்பதிவு மையங்கள் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி இயங்கும்.
- சென்னை கடற்கரை- செங்கல்பட்டு ரெயில் சேவைகள் ஞாயிறு அட்டவணைப்படி இயக்கம்.
கிறிஸ்துமஸ் பண்டியை நாளை மறுதினம் புதன்கிழமை கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் தேசிய விடுமுறையாகும்.
இதனையொட்டி புதன்கிழமை சென்னை சென்ட்ரல்- அரக்கோணம், சென்னை சென்ட்ரல்- கும்மிடிப்பூண்டி/சூளுர்பேட்டை, சென்னை கடற்கரை- செங்கல்பட்டு ரெயில் சேவைகள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயங்கும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
அதேபோல் முன்பதிவு மையங்கள் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டும் ஞாயிறு போன்று ஒரு ஷிப்ட் அடிப்படையில் இயங்கும் எனவும் தெரிவித்துள்ளது.
- 3 சதவீதம் விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் தேர்வான வீரர், வீராங்கனைகளுக்கு தமிழக அரசில் பணி ஆணை வழங்கப்பட்டது.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் விளையாட்டு மற்றும் விளையாட்டு வளர்ச்சிக்காக தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகள், திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
தமிழ்நாட்டின் சார்பாக ஒலிம்பிக் மற்றும் பிற சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கம் பெற்ற விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்களில் 3 சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், 3 சதவீதம் விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் தேர்வான வீரர், வீராங்கனைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசில் பணி ஆணைகளை வழங்கினார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். மேலும், வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
திறமைமிகு தமிழ்நாட்டின் இளைஞர்களே… மாணவர்களே… விளையாட்டு வீரர்களே…
களம் காணுங்கள்; உங்கள் திறமையை வெளிப்படுத்துங்கள்; நம் மாநிலத்துக்கும் நாட்டுக்கும் பெருமை சேருங்கள்!
உங்கள் வாழ்க்கையை அக்கறையோடு கவனித்துக் கொள்ள நமது திராவிட மாடல் அரசு இருக்கிறது.
களம் நமதே
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- பெற்றோர், பள்ளி நுழைவாயிலில் திரண்டு பள்ளி தொடர்ந்து செயல்பட வலியுறுத்தி முற்றுகையிட்டனர்.
- பா.ம.க எம்எல்ஏ அருள் பள்ளி தாளாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
சேலம் பழைய சூரமங்கலம் பகுதியில் அரசு உதவிப் பெறும் தனியார் பள்ளி இயங்கி வருகிறது.
இந்த பள்ளியில் அருகில் உள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். தனியார் பள்ளி, விளையாட்டு மைதானம் ஏற்கனவே விற்கப்பட்டதாக கூறப்பட்டு வரும் நிலையில், பள்ளி கட்டிடம் வேறு ஒரு தனியாருக்கு விற்கப்பட்டதாக தகவல் வெளியானது.
இதனை அறிந்த பெற்றோர், பள்ளி நுழைவாயிலில் திரண்டு பள்ளி தொடர்ந்து செயல்பட வலியுறுத்தி முற்றுகையிட்டனர்.
இந்நிலையில், இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பா.ம.க எம்எல்ஏ அருள் பள்ளி தாளாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது பாமக எம்எல்ஏ அருள் திடீரென பள்ளி தாளாளர் காலில் விழுந்து, "பள்ளியை மூடும் எண்ணத்தை தயவு செய்து கைவிடுங்க.. பள்ளியை மூடாதீங்கம்மா" என்று கெஞ்சினார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- புத்தக கண்காட்சி நடத்தப்பட்ட நிலையில் அடுத்ததாக 48 வது புத்தக கண்காட்சி வரும் 27ம் தேதி தொடங்குகிறது.
- கண்காட்சியில், சிறப்பு நிகழ்வுகள் உள்ளிட்டவையுடன் பண்பாட்டு நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது.
சென்னையில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தினரால் ஆண்டுதோறும் புத்தக கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இக்கண்காட்சி பொதுவாக ஆங்கிலப் புத்தாண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜனவரி மாதம் நடைபெறும்.
தமிழகம் முழுவதும் உள்ள வெளியீட்டாளர்கள் தனித்தனி ஸ்டால்களில் தங்கள் பதிப்பக புத்தகங்களை காட்சிப்படுத்துவர். கண்காட்சியோடு சேர்த்து சொற்பொழிவு, பேச்சாளர்களின் சிறப்பு நிகழ்வுகள் உள்ளிட்டவையுடன் பண்பாட்டு நிகழ்ச்சிகளும் நடத்தப்படும்.
1977 ஆம் ஆண்டு முதல் புத்தக கண்காட்சி நடத்தப்பட்ட நிலையில் அடுத்ததாக 48 வது புத்தக கண்காட்சி வரும் 27ம் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில், புத்தகக் காட்சியில் வழங்கப்பட உள்ள கலைஞர் பொற்கிழி விருதுகள் 6 எழுத்தாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, பபாசி அமைப்புக்கு கலைஞர் வழங்கிய நிதியில் இருந்து வழங்கப்படும் இவ்விருதை இந்தாண்டு,
பேராசிரியர் அருணன் - உரைநடை, நெல்லை ஜெயந்தா – கவிதை, சுரேஷ் குமார இந்திரஜித் – நாவல், என். ஸ்ரீராம் – சிறுகதைகள், கலைராணி – நாடகம், நிர்மால்யா – மொழிபெயர்ப்பு ஆகியோர் பெற இருப்பதாக பபாசி அமைப்பு அறிவித்துள்ளது.
- கூடுதலான இடங்களில் போட்டியிட வேண்டும் என்று விரும்புவது இயல்பான ஒன்றுதான்.
- முன்கூட்டியே எத்தனை இடங்கள் வேண்டும் என்பதெல்லாம் ஒரு நிபந்தனையாக முன் வைக்க வாய்ப்பில்லை.
கடந்த சில மாதங்களாகவே தி.மு.க.-வுக்கும், கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் இடையே சச்சரவுகள் ஏற்பட்டு வருகிறது. முதலில் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு தேவை என்று திருமாவளவன் முன்பு பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தார். இது சர்ச்சையானதை தொடர்ந்து அந்த வீடியோ நீக்கப்பட்டது. இதையடுத்து திருமாவளவன் பேசிய வீடியோவை ஆதர் அர்ஜூனா பதிவிட்டு இருந்தார்.
இதை தொடர்ந்து 'எல்லாருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்ற புத்தக வெளியிட்டு விழாவில் விஜயுடன் திருமாவளவன் பங்கேற்க உள்ளதாவும் இதனால் தவெக- விசிக இடையே கூட்டணி உறுதியாகிறது என்றும் செய்திகள் வெளிவந்தன. இதனால் புத்தக வெளியிட்டு விழாவில் பங்கேற்பதை விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தவிர்த்தார்.

இதை அடுத்து புத்தக வெளியிட்டு விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜூனா பங்கேற்று மன்னராட்சி ஒழிக்கப்பட வேண்டும் என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து ஆதவ் அர்ஜூனா தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து ஆதவ் அர்ஜூனா விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து வெளியேறினார்.
இப்படி சர்ச்சைகளில் சிக்கிய விடுதலை சிறுத்தைகள் கட்சியில் மீண்டும் பிரச்சனை உருவெடுத்துள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி இரட்டை இலக்கத்தில் சட்டசபையில் இருக்க வேண்டும். அதற்கு கூடுதலான இடங்களை கேட்டுப்பெற வேண்டும். குறைந்தபட்சம் 25 தொகுதிகளையாவது கேட்டுப்பெற வேண்டும் என்பதுதான் என் விருப்பம். இதையே தான் அனைத்து தோழர்களும் விரும்புகிறார்கள் என விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு கூறியுள்ளார்.
இதையடுத்து கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் கூறியதாவது:-
தேர்தலில் எவ்வளவு இடங்கள் வேண்டும் என்பதை கூட்டணியில் பேச்சுவார்த்தை நடத்தும் போது தான் நாங்கள் முடிவு செய்வோம். முன்கூட்டியே எத்தனை இடங்கள் வேண்டும் என்பதெல்லாம் ஒரு நிபந்தனையாக முன் வைக்க வாய்ப்பில்லை. அப்படி எப்போதும் வைத்ததும் இல்லை.
ஏற்கனவே எங்களுக்கு 10 தொகுதி கொடுத்துள்ளார்கள். அது இரட்டை இலக்கம் தான். 12 தொகுதி வரை நாங்கள் 2011-ல் பேசி தவிர்க்க முடியாத காரணங்களால் அதை 10 என்று இறுதி செய்தோம். ஆகவே எங்களுடைய எண்ணிக்கையை பெருக்க வேண்டும். கூடுதலான இடங்களில் போட்டியிட வேண்டும் என்று விரும்புவது இயல்பான ஒன்றுதான். கூட்டணியில் பல கட்சிகள் இருக்கின்றபோது அவற்றையெல்லாம் அனுசரித்து எங்கள் முடிவை மேற்கொள்வோம். திமுகவிடம் 25 தொகுதிகள் கேட்போம் என வன்னி அரசு கூறியது அவரது தனிப்பட்ட கருத்து என்றார்.
ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு தேவை என்று கூறிய விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தற்போது 25 தொகுதிகள் வரை வேண்டும் என்று கூறுவது தி.மு.க.வு.க்கு அழுத்தத்தை தருவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
- தமிழகத்தில் தென்மாவட்டங்களில் பொங்கல் பண்டிகையையொட்டி விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும்.
- உரலை ஒருகையால் ஏந்தி தலைக்கு மேல் நீண்டநேரம் தூக்கி நிறுத்திவைக்கும் சாதனையும் நடைபெற இருக்கிறது.
பணகுடி:
தமிழகத்தில் தென்மாவட்டங்களில் பொங்கல் பண்டிகையையொட்டி விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும்.
இதில் தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் வகையில் இளவட்டக்கல் தூக்கும் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது.
அந்த வகையில் நெல்லை மாவட்டம் பணகுடி அருகே வடலிவிளை கிராமத்தில் இளவட்டக்கல் தூக்கும் விளையாட்டு போட்டி வழக்கம்போல் இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மிகவும் கோலாகலமாக நடைபெற இருக்கிறது.
இளவட்டக்கல் விளையாட்டு போட்டியில் பங்குபெற ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேபோன்று நடைபெற இருக்கும் உரல் தூக்கும் போட்டியிலும் பங்குபெற இளைஞர்களுக்கு இணையாக இளம்பெண்களும் தங்களை தயார்படுத்தி வருகின்றனர்.
இப்போட்டியில் உரலை ஒருகையால் ஏந்தி தலைக்கு மேல் நீண்டநேரம் தூக்கி நிறுத்திவைக்கும் சாதனையும் நடைபெற இருக்கிறது. ஒரு வார கால இடைவெளியில் போட்டி நடைபெற இருக்கும் நிலையில் தற்போது இளம்பெண்கள், வாலிபர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.






