என் மலர்
உள்ளூர் செய்திகள்
- வெள்ளி விலையில் இரண்டாவது நாளாக மாற்றமில்லை.
- பார் வெள்ளி ரூ.99,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த வாரம் பெரும்பாலும் குறைந்தே விற்பனையானது. வார தொடக்கத்தில் ரூ.57,120-க்கு விற்பனையான சவரன் விலை வார இறுதியில் ரூ.56,800-க்கு விற்பனையானது. பெரிய அளவில் விலை உயர்வு இல்லாததால் தங்கம் வாங்குவோர் சற்று நிம்மதி அடைந்தனர். இதனை தொடர்ந்து வார தொடக்க நாளான நேற்று தங்கத்தின் விலையில் மாற்றமில்லாமல் சவரனுக்கு ரூ.56,800-க்கு விற்பனையானது.
இந்த நிலையில், இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.56,720-க்கும் கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.7,090-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையில் இரண்டாவது நாளாக மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 99 ரூபாய்க்கும், பார் வெள்ளி ரூ.99,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
23-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,800
22-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,800
21-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,800
20-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,320
19-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,560
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
23-12-2024- ஒரு கிராம் ரூ. 99
22-12-2024- ஒரு கிராம் ரூ. 99
21-12-2024- ஒரு கிராம் ரூ. 99
20-12-2024- ஒரு கிராம் ரூ. 98
19-12-2024- ஒரு கிராம் ரூ. 99
- கடந்த சில நாட்களாக அங்கு பனிப்பொழிவுடன் கடுங்குளிர் நிலவி வருகிறது.
- பெரும்பாலான பொதுமக்கள் இந்த உறைபனி நேரத்தில் வீடுகளிலேயே முடங்கி கிடக்கிறார்கள்.
ஏற்காடு:
சுற்றுலா தலமான ஏற்காட்டில் பெய்த கனமழை காரணமாக சுற்றுலா தலங்கள் அனைத்தும் பசுமையாக காணப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அங்கு பனிப்பொழிவுடன் கடுங்குளிர் நிலவி வருகிறது. இதன் காரணமாக மாலையில் இருந்து காலை வரை பொதுமக்கள் நடமாட்டமின்றி நகரமே வெறிச்சோடி காணப்படுகிறது.
மேலும் பனிப்பொழிவின் காரணமாக எதிரே யார் நிற்கிறார்கள் என்று கூட தெரியாத சூழல் நிலவியது. மேலும் மலைப்பாதையில் சென்று வந்த வாகனங்கள் அனைத்தும் பகல் நேரத்திலேயே முகப்பு விளக்குகளை ஒளிரவிட்ட படி வந்து சென்றன.
இதற்கிடையே கடந்த சில நாட்களாக கடும் உறைபனி நிலவி வருகிறது. மாலை 3 மணிக்கு தொடங்கும் இந்த உறைபனி மறுநாள் காலை 11 மணி வரை நீடிக்கிறது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்லும் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகிறார்கள். மேலும் பெரும்பாலான பொதுமக்கள் இந்த உறைபனி நேரத்தில் வீடுகளிலேயே முடங்கி கிடக்கிறார்கள்.
இன்று காலையும் கடும் உறைபனி நிலவியது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் சாலை ஓரங்களில் பொதுமக்கள் தீ மூட்டி குளிர்காய்ந்தனர். மேலும் கம்பளி ஆடைகளை அணிந்து கொண்டு பொதுமக்கள் வந்து செல்கின்றனர். தொடர் பனி மற்றும் குளிரின் காரணமாக பொதுமக்கள் சளி, காய்ச்சலால் அவதிப்பட்டு வருகிறார்கள்.
- விடுதிகள், தேவாலயங்கள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் உள்ளது.
- மலை கிராமங்களில் படர்ந்துள்ள உறைபனியால் பூண்டு, காய்கறிகள் சாகுபடி செய்த விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசி எனப்படும் கொடைக்கானலில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி வரை நிலவும் உறைபனி சீசன் காலத்தில் குளிரின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு டிசம்பர் மாத தொடக்கத்தில் தொடர்மழை பெய்து வந்த நிலையில் தற்போது உறைபனி சீசன் தொடங்கி உள்ளது.
வழக்கத்தைவிட இந்த ஆண்டு கொடைக்கானலில் பருவமழை அதிக அளவு பெய்துள்ளது. இதன் காரணமாகவே உறைபனியின் தாக்கமும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கொடைக்கானல் நட்சத்திர ஏரி, பிரையண்ட் பூங்கா, கீழ்பூமி உள்ளிட்ட பகுதிகளில் உறைபனி அதிக அளவில் காணப்படுகிறது.
இதனால் கொடைக்கானல் ஏரிப்பகுதி, ஜிம்கானா, கீழ்பூமி, பிரையண்ட் பூங்கா ஆகிய பகுதிகளில் வெள்ளைக்கம்பளம் விரித்தது போல காணப்படுகிறது. குறைந்தபட்ச வெப்பநிலையாக 5 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்போது அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளதாலும், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை கொண்டாடும் விதமாகவும், கொடைக்கானலுக்கு அதிகமாக சுற்றுலா பயணிகள் வந்தவண்ணம் உள்ளனர். அவர்கள் கொடைக்கானலில் நிலவும் இந்த குளுகுளு சீதோசனத்தை உற்சாகமாக ரசித்து வருகின்றனர். உள்ளூர் மக்கள் மற்றும் வியாபாரிகளின் இயல்பு வாழ்க்கை கடும் குளிர் காரணமாக பாதிக்கப்பட்ட போதிலும், சுற்றுலா பயணிகள் கம்பளி மற்றும் ஜெர்க்கின், சுவட்டர், மப்ளர், கையுறைகள் அணிந்து சுற்றுலா இடங்களை ரசித்து வருகின்றனர்.
குறிப்பாக நட்சத்திர ஏரியில் அடர்ந்த பனிமூட்டத்திற்கு நடுவே செயற்கை நீரூற்றை ரசித்தவாறு படகு சவாரி செய்து மகிழ்கின்றனர். கடந்த வாரம் வரை சாரல் மழை பெய்து வந்த நிலையில் படகு சவாரி செய்ய ஆர்வம் காட்டாமல் இருந்து வந்தனர். தற்போது படகு சவாரி மட்டுமின்றி, ஏரியைச் சுற்றி குதிரை சவாரி, சைக்கிள் ஓட்டியும் பொழுதை கழித்து வருகின்றனர்.
கொடைக்கானல் பிரையண்ட் பார்க், குணாகுகை, மோயர் சதுக்கம், பைன் பாரஸ்ட் உள்ளிட்ட பகுதிகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று இரவு கொண்டாடப்பட உள்ள நிலையில் தேவாலயங்கள் மற்றும் தங்கும் விடுதிகளிலும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விடுதிகள், தேவாலயங்கள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் உள்ளது.
மலை கிராமங்களில் படர்ந்துள்ள உறைபனியால் பூண்டு, காய்கறிகள் சாகுபடி செய்த விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
- இன்றைய முக்கியச் செய்திகள்
- இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.
தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்..
- திருச்சி - திண்டுக்கல் வழித்தடத்தில் மேற்கொள்ள இருந்த பராமரிப்பு பணி ரத்து செய்யப்பட்டு, ரெயில்கள் வழக்கம்போல இயங்கும்.
- கோவையில் இருந்து வரும் 28, 31 ஆகிய தேதிகளில் காலை 8 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (16322) வழக்கமான அட்டவணைப்படி இயக்கப்படும்.
சென்னை:
திருச்சி - திண்டுக்கல் வழித்தடத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதாக கடந்த 10-ந்தேதி தெற்கு ரெயில்வே அறிவித்திருந்தது. இதனால் பல்வேறு ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதாகவும் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், திருச்சி - திண்டுக்கல் வழித்தடத்தில் மேற்கொள்ள இருந்த பராமரிப்பு பணி ரத்து செய்யப்பட்டு, ரெயில்கள் வழக்கம்போல இயங்கும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
* சென்னை எழும்பூரில் இருந்து வரும் 28, 31 ஆகிய தேதிகளில் காலை 6 மணிக்கு புறப்பட்டு மதுரை செல்லும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (வண்டி எண்.22671), மறுமார்க்கமாக, மதுரையில் இருந்து வரும் 28, 31 ஆகிய தேதிகளில் மாலை 3 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (22672) வழக்கமான அட்டவணைப்படி இயக்கப்படும்.
* குருவாயூரில் இருந்து வரும் 27, 30 ஆகிய தேதிகளில் இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16128) வழக்கமான அட்டவணைப்படி இயக்கப்படும்.
* செங்கோட்டையில் இருந்து வரும் 27, 28, 30, 31 ஆகிய தேதிகளில் காலை 7.05 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (16848), நாகர்கோவிலில் இருந்து வரும் 31-ந்தேதி காலை 6.15 மணிக்கு புறப்பட்டு மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (16340), உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து வரும் 29-ந்தேதி மாலை 4.20 மணிக்கு புறப்பட்டு கன்னியாகுமரி வரும் காசி தமிழ் சங்கம் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (16368) வழக்கமான அட்டவணைப்படி இயக்கப்படும்.
* இதேபோல, கன்னியாகுமரியில் இருந்து வரும் 28-ந் தேதி காலை 5.50 மணிக்கு புறப்பட்டு ஹவுரா செல்லும் அதிவிரைவு ரெயிலும் (12666), நாகர்கோவிலில் இருந்து வரும் 28-ந்தேதி காலை 9.15 மணிக்கு புறப்பட்டு தெலுங்கானா மாநிலம் காச்சிகுடா செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (16354) வழக்கமான அட்டவணைப்படி இயக்கப்படும்.
* நாகர்கோவிலில் இருந்து வரும் 28, 31 ஆகிய தேதிகளில் காலை 7.50 மணிக்கு புறப்பட்டு கோவை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (16321), மறுமார்க்கமாக கோவையில் இருந்து வரும் 28, 31 ஆகிய தேதிகளில் காலை 8 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (16322) வழக்கமான அட்டவணைப்படி இயக்கப்படும்.
* ஈரோட்டில் இருந்து வரும் 27, 30 ஆகிய தேதிகளில் மதியம் 2 மணிக்கு புறப்பட்ட செங்கோட்டை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (16845). மறுமாா்க்கமாக, செங்கோட்டையில் இருந்து வரும் 28, 31 ஆகிய தேதிகளில் காலை 5 மணிக்கு புறப்பட்டு ஈரோடு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (16846) வழக்கமான அட்டவணைப்படி இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தமிழக அரசு, இந்த பட்ஜெட்டில் சட்டசபை தேர்தலின்போது அறிவித்து விடுபட்டுள்ள திட்டங்களை நிறைவேற்ற நிதி ஒதுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- இந்த பட்ஜெட் தி.மு.க.வின் 2026-ம் ஆண்டு தேர்தல் அறிக்கைக்கு ஒரு முன்னோடியாகவும் இருக்கும்.
சென்னை:
தமிழக அரசின் பட்ஜெட், வருகிற பிப்ரவரி மாதம் சட்டசபையில் தாக்கல் செய்யப்படுகிறது. இது 2021-ம் ஆண்டு பொறுப்பேற்ற தி.மு.க. அரசின் 4-வது பட்ஜெட் ஆகும். தமிழக சட்டசபைக்கு 2026-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ளதால் வரும் ஆண்டு (2025) தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்தான் முழு பட்ஜெட்டாக இருக்கும். 2026-ம் ஆண்டு தாக்கல் செய்வது இடைக்கால பட்ஜெட் தான்.
எனவே தமிழக அரசு, தாக்கல் செய்யப்பட உள்ள இந்த பட்ஜெட், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
கடந்த 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தபடி மகளிருக்கு விலையில்லா பஸ் பயணம், ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைப்பு, ரூ.1,000 மகளிர் உரிமைத்தொகை, கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் தள்ளுபடி, முதியோர் உதவித்தொகை அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தி.மு.க. அரசு செயல்படுத்தி உள்ளது.
இதுதவிர தேர்தல் அறிக்கையில் சொல்லாத திட்டங்களான பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத்திட்டம், கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம், கல்லூரி மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 தமிழ்ப்புதல்வன் திட்டம், மாணவர்களின் திறன் வளர்க்க நான் முதல்வன் திட்டம் ஆகியவற்றையும் நிறைவேற்றி உள்ளது.
ஆனால் தேர்தலில் கூறியபடி வீடுகளுக்கு மாதந்தோறும் மின் கட்டணம் கணக்கெடுக்கும் திட்டம், 30 வயதுக்கு உட்பட்ட தமிழக கல்லூரி மாணவர்களின் கல்விக்கடன் ரத்து, சிலிண்டருக்கு ரூ.100 மானியம், பெட்ரோல் விலை குறைப்பு போன்ற திட்டங்கள் இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளது.
இந்த திட்டங்களை நிறைவேற்ற வேண்டுமானால், அதற்கு வரும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். எனவே தமிழக அரசு, இந்த பட்ஜெட்டில் சட்டசபை தேர்தலின்போது அறிவித்து விடுபட்டுள்ள திட்டங்களை நிறைவேற்ற நிதி ஒதுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேளையில் அடுத்த ஆண்டு தேர்தலை சந்திக்கும் விதமாக புதிய கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. மேலும் இந்த பட்ஜெட் தி.மு.க.வின் 2026-ம் ஆண்டு தேர்தல் அறிக்கைக்கு ஒரு முன்னோடியாகவும் இருக்கும்.
இந்தியாவின் மற்ற மாநிலங்களில் மகளிர் உரிமைத்தொகை கூடுதலாக வழங்கப்படுகிறது. அதேபோல் தமிழகத்திலும் மகளிர் உரிமைத்தொகையை ரூபாய் ஆயிரத்தில் இருந்து அதிகரிப்பது மற்றும் இன்னும் கூடுதலான பெண்களை அந்த திட்டத்தின் கீழ் கொண்டு வருவது என பல்வேறு அம்சங்கள் இந்த பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படுகிறது. மிக முக்கியமாக அரசு ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஏதாவது பட்ஜெட்டில் அறிவிப்பு வருமா? என்று அரசு ஊழியர்களும் காத்திருக்கின்றனர்.
இது போன்ற திட்டங்களுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கினால் அந்த திட்டங்களை செயல்படுத்த முடியும்.
எனவே தமிழக அரசு, எந்தெந்த திட்டங்களை நிறைவேற்றுவது, அதற்கான நிதிகளை ஒதுக்குவது என்பது குறித்து துறை ரீதியான ஆலோசனையில் இறங்கி உள்ளது. ஒவ்வொரு துறையிலும் செயலாளர்கள் தலைமையில் அதிகாரிகள் குழு பட்ஜெட் தயாரிப்பில் தங்களது கவனத்தை செலுத்த தொடங்கி உள்ளனர்.
எனவே சட்டசபை கூட்டத்தொடர் ஜனவரி 6-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்குகிறது.
இந்த கூட்டம் அதிகபட்சமாக 3 அல்லது 4 நாட்கள் மட்டுமே நடைபெற வாய்ப்பு உள்ளது. அதன்பின் மீண்டும் பிப்ரவரி மாதம் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி விடும். எனவே பட்ஜெட் தயாரிப்பதற்கான பணியில் தமிழக அரசு இப்போதே முழு அளவில் ஈடுபட தொடங்கி உள்ளது.
- நடிகர் விஜய் நடித்த ‘கோட்' திரைப்படத்தில், மறைந்த விஜயகாந்த் ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் திரையில் தோன்றினார்.
- ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் மறைந்த தலைவர்கள், பிரபலங்கள் நவீன காலத்துக்கு ஏற்ப சித்தரிக்கப்பட்டு வருகின்றனர்.
சென்னை:
உலகம் நவீனமயமாக்கலில் வீறுநடை போடுகிறது. புதிய புதிய தொழில்நுட்ப வசதிகள் அறிமுகமாகி வருகின்றன. இதில் ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அனைவரையும் வியக்க வைக்கிறது. இறந்து போன தலைவர்கள், பிரபலங்களை நம் கண்முன்னே தோன்றி பேசுவது போன்று இந்த தொழில்நுட்பத்தால் நிகழ்த்திக்காட்ட முடிகிறது.
நடிகர் விஜய் நடித்த 'கோட்' திரைப்படத்தில், மறைந்த விஜயகாந்த் ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் திரையில் தோன்றினார். தி.மு.க. முப்பெரும் விழா- பவள விழாவில், ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் கருணாநிதி தோன்றி தனது கணீர் குரலில் உரையாற்றி தி.மு.க.வினரை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தினார்.
அதே போன்று ஜானகி அம்மாளின் நூற்றாண்டு விழாவில் இதே தொழில் நுட்பத்தில் எம்.ஜி.ஆர். திரையில் தோன்றியதால் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பரித்தனர். மறைந்த தலைவர்கள் மீண்டும் தங்கள் முன்னே தோன்றுவது அரசியல் கட்சி தொண்டர்களை உற்சாகம் அடைய வைக்கிறது. எனவே ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் மறைந்த தலைவர்கள், பிரபலங்கள் நவீன காலத்துக்கு ஏற்ப சித்தரிக்கப்பட்டு வருகின்றனர்.
தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் இங்கிலாந்து ராணி எலிசபெத், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, சட்டமேதை அம்பேத்கர், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், தொழில் அதிபர் ரத்தன் டாடா, மைக்கேல் ஜாக்சன் போன்ற மறைந்த பிரபலங்கள் மூலம் தோன்றும் கேரல்ஸ் பாடல் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது
அதுபோல் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியுடன் அவருடைய மகனான ராகுல்காந்தி அமர்ந்து இருப்பது போன்று உருவாக்கப்பட்டுள்ள ஏ.ஐ. தொழில் நுட்ப படம் இணைய தளத்தில் வைரலாகி வருகிறது. இதேபோல் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியுடன், அவருடைய பேரனும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இருப்பது போன்ற ஏ.ஐ. படமும் வைரலாகி வருகிறது.
- தியாகராய நகரில் விதிமீறல் கட்டிடங்கள் ஏராளமாக உள்ளன என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
- 2025-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை பள்ளி மீது சென்னை மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கக்கூடாது.
சென்னை:
சென்னை கொளத்தூரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி, தரைதளம் மற்றும் முதல் தளம் மட்டும் கட்டுவதற்கு கட்டிட அனுமதி பெற்று உள்ளது. ஆனால், அனுமதி இல்லாமல் தரைதளம் மற்றும் மூன்று தளங்களை கட்டியுள்ளது. இதையடுத்து பள்ளி நிர்வாகத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அரசு முடிவு செய்தது.
இதையடுத்து பள்ளி கட்டிடத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தடை விதிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் தனியார் பள்ளி நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், சி.குமரப்பன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பள்ளி நிர்வாகம் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல், ''மனுதாரர் பள்ளியில் சுமார் 1,500 மாணவர்கள் படித்து வருகின்றனர். அதனால் கூடுதல் தளம் கட்டிய விவகாரத்தில் அரசு கருணை காட்டவேண்டும். சென்னை தியாகராய நகரில் ஏராளமான விதிமீறல் கட்டிடங்கள் உள்ளன. ஆனால், பள்ளி கட்டிடம் மீது மட்டும் கடும் நடவடிக்கை எடுப்பது சரியாகாது. அதனால் இரக்கம் காட்ட வேண்டும்'' என்று வாதிட்டார்.
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், ''தியாகராய நகரில் விதிமீறல் கட்டிடங்கள் ஏராளமாக உள்ளன என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
அந்த விதிமீறல் கட்டிடங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதது, அரசின் செயலற்ற தன்மையை காட்டுகிறது. பள்ளிக்கூடங்கள் மட்டுமல்ல, கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் என்று எந்த ஒரு வழிப்பாட்டுத்தலத்தில் அனுமதியின்றி கட்டிடம் கட்டினாலும், அது விதிமீறல்தான். இதற்கெல்லாம் இரக்கம் காட்டமுடியாது. இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம்.
அதேநேரம், 1,500 மாணவர்கள் படிப்பதால், கல்வியாண்டு முடிவடையும், அதாவது 2025-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை பள்ளி மீது சென்னை மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கக்கூடாது.
இந்த அளவுக்கு மட்டும்தான் இந்த ஐகோர்ட்டினால் இரக்கம் காட்ட முடியும்'' என்று உத்தரவிட்டனர்.
- குறுகிய காலக்கட்டத்திலேயே மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.
- வழக்கத்திற்கு மாறாக 18 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வருகிறது.
சென்னை நகரில் மெட்ரோ ரெயில்கள் இரண்டு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. பொதுவாக மெட்ரோ ரெயில் சேவை குறுகிய கால இடைவெளியில் இயக்கப்படும். விடுமுறை நாட்களில் கூட ஓரளவுக்கு குறுகிய கால இடைவெளியிலேயே மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை இயக்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சென்னை விமான நிலையம் மற்றும் விம்கோ நகர் பணிமனை இடையிலான மெட்ரோ ரெயில் சேவை வழக்கத்திற்கு மாறாக 18 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வருகிறது.
இதேபோல் சென்னை விமான நிலையம் மற்றும் சென்னை சென்ட்ரல் இடையிலான ரெயில் சேவை 7 நிமிட இடைவெளியிலும், சென்னை விமான நிலையத்தில் இருந்து வண்ணாரப்பேட்டை இடையே 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
- தென்தமிழகம் மற்றும் வடதமிழகத்தின் உள்மாவட்டங்களில் நேற்று லேசான மழை பொழிவு காணப்பட்டது.
- தமிழகத்தின் வடகடலோர பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும்.
சென்னை:
வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தென்தமிழகம் மற்றும் வடதமிழகத்தின் உள்மாவட்டங்களில் நேற்று லேசான மழை பொழிவு காணப்பட்டது.
மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு - தென்மேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அருகில் இன்று நிலவும்.
இதன்காரணமாக, இன்று தமிழகத்தின் வடகடலோர பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், மற்ற பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை, செங்கல்பட்டு காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது.
- சாமி தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் மற்றும் வனத்துறையினர் அனுமதி வழங்கி உள்ளனர்.
- பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
விருதுநகர்:
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு வருகிற 28-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை பக்தர்கள் மலை ஏறி சென்று சாமி தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் மற்றும் வனத்துறையினர் அனுமதி வழங்கி உள்ளனர்.
காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே மலையேறி செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அனுமதிக்கப்பட்ட நாட்களில் எதிர்பாராதவிதமாக மழை பெய்தால் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
- தூக்குப்பாலம், ரோடு பாலம் உயரத்திற்கு திறக்கப்பட்டது.
- பாலத்தில் செய்துள்ள வசதிகள் குறித்து ரெயில்வே கட்டுமான நிறுவன பொறியாளர்கள், மத்திய மந்திரியிடம் விளக்கி கூறினர்.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே ரூ.545 கோடியில் 2 கிலோமீட்டர் நீளத்துக்கு புதிய ரெயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அந்த பாலத்தின் மையப் பகுதியில் கப்பல்கள் செல்லும்போது திறந்து மூடும் வகையில் 77 மீட்டர் நீளமும், 650 டன் எடையும் கொண்ட செங்குத்து வடிவிலான தூக்குப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய ரெயில் பாலத்தை ஆய்வு செய்வதற்காக மத்திய கனரக தொழில்துறை இணை மந்திரி பூபதி ராஜூ சீனிவாச சர்மா வந்தார். அவர் டிராலியில் சென்று, பாலத்தை பார்வையிட்டு மையப்பகுதிக்கு வந்தார். தொடர்ந்து தூக்குப்பாலத்தை திறந்து மூட கட்டப்பட்டுள்ள ஆபரேட்டர் அறை, அங்குள்ள தொழில்நுட்ப சாதனங்களை பார்வையிட்டார்.
பின்னர் தூக்குப்பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள லிப்ட் மூலமாக உயரே சென்று தூக்குப்பாலத்தை திறந்து மூடுவதற்காக அமைக்கப்பட்ட சாதனங்களையும் பார்வையிட்டார். அப்போது ஆய்வுக்காக தூக்குப்பாலம், ரோடு பாலம் உயரத்திற்கு திறக்கப்பட்டது. சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக தூக்குப்பாலத்தை ஆய்வு செய்தார்.
பாலத்தில் செய்துள்ள வசதிகள் குறித்து ரெயில்வே கட்டுமான நிறுவன பொறியாளர்கள், மத்திய மந்திரியிடம் விளக்கி கூறினர். பின்னர் அங்கிருந்து டிராலி மூலம் புறப்பட்டு பாம்பன் வந்தார். தொடர்ந்து ராமேசுவரம் சென்றார். புதிய ரெயில் பாலத்தில் ஒரு சில குளறுபடிகள் உள்ளதாக ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் அறிக்கை அளித்திருந்த நிலையில், மத்திய கனரக தொழில்துறை இணை மந்திரி, ஆய்வு செய்தது முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது.






