என் மலர்
உள்ளூர் செய்திகள்
- பெரியார் திடலுக்கு வந்தது எனது தாய் வீட்டிற்கு வந்ததை போன்றது.
- 90 வயதிலும் இவ்வளவு சுறுசுறுப்பாக சுற்றி சுழன்று கொண்டிருக்கிறார் ஆசிரியர் வீரமணி.
சென்னை:
பெரியார் பகுத்தறிவு நூலகம் ஆய்வு மைய பொன்விழா வேப்பேரி பெரியார் திடலில் நடைபெற்றது.
விழாவிற்கு வந்த அனைவரையும் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வரவேற்றார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழாவில் பங்கேற்று நூலகத்தை திறந்து வைத்தார். அப்போது அவருக்கு கி.வீரமணி, பெரியாரின் கைத்தடி மாதிரியை நினைவுபரிசாக வழங்கினார்.
விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-
என்ன பேசுவது என்று புரியாமல் நான் விழித்துக் கொண்டிருக்கிறேன். காரணம் ஆசிரியர் கி.வீரமணி எனக்கு அளித்திருக்கக் கூடிய அந்த பரிசை வாங்குகிறபோது என்னையே நான் மறந்திருக்கிறேன்.
வாழ்க்கையில் எத்தனையோ பரிசுகளை நான் பெற்றிருக்கலாம். ஆனால் இந்தப் பரிசுக்கு எதுவும் ஈடாகாது என்பதை நான் உணர்ந்து கொண்டிருக்கிறேன். போதும்... எனக்கு இது போதும்.
திராவிட மாடல் என்றால் என்ன? என்று கேலி செய்து கொண்டிருப்பவர்களுக்கு இந்த கைத்தடி ஒன்றே போதும். தாய் வீட்டுக்கு வந்திருக்கிறேன். தாய் வீட்டுக்கு வருகிற போதெல்லாம், நான் உணர்ச்சி எழுச்சியை தொடர்ந்து பெறுவது உண்டு. அதை பெற்று உங்கள் முன்னால் நிற்கிறேன்.
ஆண்டாண்டு காலமாக ஒடுக்கப்பட்ட தமிழினம் ஒற்றுமை பெறவும், சுயமரியாதை உணர்வு பெற்று மேலெழுந்து நிற்கவும், தன்னுடைய வாழ்நாள் முழுவதும் பாடுபட்டு பல்வேறு தியாகங்களை புரிந்து நம்முடைய இனத்துக்காக அயராது உழைத்திருக்கக் கூடிய ஈரோடு சிங்கம், பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் மறைந்த நாளில் அவரது கருத்துக்களை அவரது எண்ணங்களை அவரது போராட்டங்களை அவரது தியாகங்களை அவரது வாழ்க்கை வரலாற்றை நம்முடைய இளைய தலைமுறைக்கு எடுத்து சொல்கிற வகையில், டிஜிட்டல் நூலகமாக ஆய்வு மையமாக இன்றைக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
தந்தை பெரியார் தனது பயணத்தை முடித்துக் கொண்டார். நாம் தொடர்வோம் என்று கலைஞர் சொன்னார். தந்தை பெரியாரின் தொண்டர்களாகிய நாம் அந்த பயணத்தை தொடங்கி இந்த முன்னெடுப்பை செய்திருக்கிறோம்.
அவர் வாழ்ந்த காலத்தில் அவர் பேசிய முற்போக்கு கருத்துக்களுக்காக மானுட சமுதாயத்தோட விடுதலைக்கான கருத்துக்களுக்காக பழமைவாதிகளிடம் இருந்து கடுமையான எதிர்ப்பை அவர் சந்தித்தார்.
ஊருக்குள் வர தடை, பேசத் தடை, கோவிலுக்குள் நுழைய தடை, எழுத தடை, பத்திரிகை நடத்த தடை, போராட்டம் நடத்த தடை, அத்தனை தடைகளையும் உடைத்து அவர் நம்மை வீதிகளில் மட்டும் நுழைய விடவில்லை. இந்த மண்ணுலகில் வாழக்கூடிய அத்தனை பேர்களின் மனதிலேயும் அவர் நுழைந்திருக்கிறார். அதுதான் தந்தை பெரியார்.
பெரியார் மறைந்து 50 ஆண்டுகளுக்கு பிறகும், இன்றைக்கு அவரைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். புகழ்ந்து கொண்டிருக்கிறோம். வரலாற்றை எடுத்துச் சொல்லி கொண்டிருக்கிறோம். அவரை இன்றைக்கு நினைவுப்படுத்தி அந்த உணர்வுகளை இன்றைக்கு நாம் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறோம். இதுதான் தந்தை பெரியாரின் தனித்தன்மை.
தந்தை பெரியாரின் கருத்துக்களை இன்றைக்கு வரைக்கும் எல்லா மக்களிடத்திலும் கொண்டு சேர்த்து என்றென்றும் வாழ்கிறார் என்ற நிலையை உருவாக்கி இருக்கக்கூடியவர் நம்முடைய ஆசிரியர் கி.வீரமணி.
பெரியார் தொடங்கிய இயக்கத்தை பெரியார் கொள்கைகளை இந்த திராவிட பேரியக்கத்தை காத்து வருபவர்தான் நம்முடைய ஆசிரியர். இந்த 90 வயதிலும், ஆசிரியர் கி.வீரமணி சுற்றி சுற்றி வருகிற இந்த பயணத்தை எல்லாம் பார்க்கிறபோது, நமக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால் ஆச்சரியப்படுகிற அளவுக்கு சொன்னாலும் தந்தை பெரியாரிடம் அவர் கற்றிருக்கக்கூடிய பாடத்தையும் இன்றைக்கு வெளிப்படுத்தி கொண்டிருக்கிறார்.
இன்னும் பல ஆண்டு காலம் நீங்கள் வாழ்ந்து எங்களைப் போன்ற இளைஞர்களுக்கு நீங்கள் ஊக்கத்தை தந்திட வேண்டும்.
தி.மு.க. தலைவராக தமிழ்நாட்டின் முதலமைச்சராக பெரியாரின் தொண்டராக நான் கேட்டுக் கொள்கிறேன். பெரியாரின் தொண்டராக வாழ்த்துகிறேன்.
இன்றைக்கு தந்தை பெரியாரை உலக மயமாக்கி, உலகத்தினுடைய பொது சொத்தாக கொண்டு சேர்த்திருக்கிறோம். இந்த நூலகத்தை சிறப்புற உருவாக்கி தந்திருக்கக்கூடிய கி.வீரமணிக்கும், அன்பு ராஜிக்கும் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
1974-ம் ஆண்டு கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது இதே திடலுக்கு வந்து பகுத்தறிவு நூலகம், ஆய்வு மையத்தை அன்றைக்கு திறந்து வைத்தார்.
இப்போது அவரது மகனாக இருக்கக்கூடிய ஸ்டாலின் முதலமைச்சராக வந்து இந்த ஆய்வு மையத்தை தொடங்கி வைத்துள்ளேன்.
அண்மையிலே வைக்கம் விழாவை சிறப்பாக நடத்தினோம். என்னை கி.வீரமணி மனதார பாராட்டினார். இன்னும் நீங்கள் என்னை பாராட்ட வேண்டும். வாழ்த்த வேண்டும் அதற்காக நான் காத்திருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், பி.கே.சேகர்பாபு, கயல்விழி செல்வராஜ், ஆ.ராசா எம்.பி., சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றியழகன், ஜோசப் சாமுவேல், திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் அன்புராஜ் கலந்து கொண்டனர்.
- மத்திய அரசு பள்ளிகளில் படிப்பவர்கள் அனைவரும் நகர்ப்புற பணக்காரர்கள் வீட்டு பிள்ளைகள் அல்ல.
- கிராமப்புற ஏழை மாணவர்கள் முழுமையான கல்வி சுதந்திரம் பெறும் வரை, எட்டாம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி முறை தொடர வேண்டும்.
சென்னை :
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் பள்ளிகளில் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளில் கட்டாயத் தேர்ச்சி வழங்கும் முறை ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. கல்வித்தரத்தை மேம்படுத்துதல் என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை கிராமப்புற ஏழை மாணவர்களின் கல்வி வாய்ப்புகளை பறித்து விடும். இது மிகவும் தவறான முடிவு.
மத்திய அரசு பள்ளிகளில் படிப்பவர்கள் அனைவரும் நகர்ப்புற பணக்காரர்கள் வீட்டு பிள்ளைகள் அல்ல. அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 25% இட ஒதுக்கீட்டில் ஏழைக் குழந்தைகள் சேர்க்கப்படுகிறார்கள். 5 அல்லது 8-ஆம் வகுப்பில் அவர்களுக்கு தேர்ச்சி வழங்கப்படாவிட்டால், அவர்கள் அத்துடன் படிப்பை நிறுத்தி விடுவார்கள். அப்படி ஒரு நிலை உருவாகக் கூடாது என்பதற்காகத் தான் எட்டாம் வகுப்பு வரை அனைவருக்கும் தேர்ச்சி என்ற தத்துவம் உருவாக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் 2020-ஆம் ஆண்டில் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு 2020-ஆம் ஆண்டு முதல் பொதுத்தேர்வு நடத்தப்படும் என அப்போதைய தமிழக அரசு அறிவித்தது. அதைக் கண்டித்து அந்த ஆண்டு ஜனவரி 28-ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் பாமக சார்பில் அறப்போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பாமகவுடன் பேச்சு நடத்திய அன்றைய கல்வி அமைச்சர் செங்கோட்டையன், 5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ரத்து என்றும், அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.
கிராமப்புற ஏழை மாணவர்கள் முழுமையான கல்வி சுதந்திரம் பெறும் வரை, எட்டாம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி முறை தொடர வேண்டும். எனவே, மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் பள்ளிகளில் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளில் கட்டாயத் தேர்ச்சி வழங்கும் முறையை தொடர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- ஒரு நல்ல விஷயம் நடந்தால் தான் அந்த ஊருக்கு நல்லது நடக்கும்.
- ஒரு கட்சி தலைவர் ஏ4 ஷீட்ல எழுதி வைச்சு வாசிக்கிறாரு, இதுக்கு பேரு கட்சியா? என்றார்.
சென்னை அடுத்த மாங்காட்டில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் மாங்காடு நகர தி.மு.க. சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழா மாவட்ட செயலாளர் மற்றும் குறு சிறு நடுத்தர தொழில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலையில் நடைபெற்றது. விழாவில் திண்டுக்கல் லியோனி, திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர்.
இந்த விழாவில் பேசிய திண்டுக்கல் லியோனி, விக்கிரவாண்டில இரண்டு கிழவிகள் டீக்கடையில் பேசிக்கொள்கிறார்கள். ஒரு கிழவி சொல்லுது, இதுவரைக்கும் விழுப்புரத்தில் வெள்ளம் வந்து கேள்விபட்டு இருக்கோமா? 65 வயது ஆகுது எனக்கு. இதுவரைக்கும் என்னுடைய வாழ்க்கையில விழுப்புரத்துல வெள்ளம் வந்து ஆடு, மாடு எல்லாம் அடிச்சுட்டு போனத என் கண்ணால பார்த்ததே இல்லை. ஏன் ஆத்தா இப்படி நடக்குதுன்னு கேட்டது.
அதற்கு மற்றொரு கிழவி சொல்லிச்சு, என்னிக்கு இந்த பாழா போன பையலுங்க விக்கிரவாண்டில வந்து மாநாடை போட்டாங்களோ, அன்னிக்கு விளங்காமா போனதுதான் விழுப்புரம்-ன்னு சொன்னாங்க. நான் சொல்லல பா. இரண்டு கிழவிகள் பேசினதை ஒட்டுக்கிட்டேன் நான்.
அதாவது ஒரு நல்ல விஷயம் நடந்தால் தான் அந்த ஊருக்கு நல்லது நடக்கும். சாதாரணமா படிக்காதவங்க பேசிக்கிட்டு இருங்காங்க. எங்க ஊர்ல இப்படி ஒருத்தர் மாநாடு போட்டு வெள்ளத்தில எங்க ஊரு அழிஞ்சு போச்சுன்னு.
அந்த நடிகர் பேசுகிறார் மாநாட்டில், எங்கள் கட்சியினுடைய கொள்கையின் முன்னோடிகள் யார் தெரியுமா? வேகமாக ஓடிவந்து ஒரு பேப்பர் எடுத்து கொள்கைய ஒரு கட்சி தலைவர் ஏ4 ஷீட்ல எழுதி வைச்சு வாசிக்கிறாரு, இதுக்கு பேரு கட்சியா? என்றார்.
- மலைப் பாதை ஓரத்தில் தடுப்பு சுவரும் அமைக்கப்பட்டுள்ளது.
- மாற்றுப்பாதை வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வந்தது.
திருச்செங்கோடு:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலுக்கு படி வழியாக ஏறிச் செல்ல ஒரு வழியும், வாகனங்களில் செல்ல ஏதுவாக மலைப்பாதையும் அமைக்கப்பட்டுள்ளது.
மலைப் பாதை ஓரத்தில் தடுப்பு சுவரும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வழியாக வந்து செல்லும் வாகனங்கள் குறைந்த வேகத்தில் இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஆங்காங்கே பாதுகாப்புக்காக குவி லென்சுகளும் பொருத்தப்பட்டுள்ளது.
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் மார்கழி மாதம் முழுவதும் அதிகாலை 3.30 மணி முதல் காலை 6 மணி வரை மரகத லிங்க தரிசனம் நடைபெறும். இதைக்காண அதிகாலை நேரத்திலேயே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.
அதேபோல் இன்று காலை திருச்செங்கோடு சீதாராம்பாளையம் பகுதியை சேர்ந்த தரம்ஸ்ரீ என்பவர் தனது மனைவி மற்றும் மகளுடன் காரில் மலைப்பாதை வழியாக கோவிலுக்கு வந்து கொண்டிருந்தார்.
அதிகாலை நேரத்தில் கட்டுப்பாட்டை இழந்த அவரது கார் எதிர்பாராத விதமாக தடுப்பு சுவர் மீது ஏறி அந்தரத்தில் தொங்கியபடி நின்றது. இதில் அதிர்ஷ்டவசமாக அவர்கள் 3 பேரும் தப்பினர்.
இதைப்பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அலுவலர் கரிகாலன் தலைமையில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் காரை கிரேன் உதவியுடன் மீட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
மலைப் பாதையில் முகூர்த்த நாட்கள் மற்றும் திருவிழா நாட்களில் மலைக்குச் செல்பவர்கள் அதிகமாக இருப்பதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் மாற்றுப்பாதை வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வந்தது.
இதனைத் தொடர்ந்து ரோப் கார் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆய்வு செய்தபோது ரோப் கார் அமைக்க ஏதுவான இடமில்லை என திட்டம் கைவிடப்பட்டது. அதனை தொடர்ந்து மாற்றுப் பாதை வேண்டுமென்ற கோரிக்கை வலுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
- எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
- முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட நிர்வாகிகளும் மரியாதை செலுத்தினர்.
அ.தி.மு.க. நிறுவனத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் 37-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நினைவுநாளான இன்று சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர்வளையம் வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதில் அ.தி.மு.க. தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட நிர்வாகிகளும் மரியாதை செலுத்தினர்.
- சிலரை மிரட்டி பணம் பறித்ததாகவும் கூறப்படுகிறது.
- பெண் பக்தர்களின் பாதுகாப்பு இதன் மூலம் கேள்விக்குறியாகி உள்ளது.
ராமநாதபுரம்:
தென்னகத்து காசி என அழைக்கப்படும் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் இந்துக்களின் புனித ஸ்தலமாக உள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள்.
இங்குள்ள அக்னி தீர்த்தக் கடல் மற்றும் கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களில் புனித நீராடி பக்தர்கள் சாமி தரிசனம் செய்கிறார்கள். அக்னி தீர்த்த கடற்கரையையொட்டி தனியார் குளியலறை மற்றும் உடை மாற்றும் அறைகள் ஏராளமாக உள்ளன.
நேற்று கடற்கரை பகுதியில் உள்ள டீக்கடையை ஒட்டியுள்ள கட்டண உடை மாற்றும் அறைக்கு சென்ற இளம்பெண் சுவரில் டைல்சுகளுக்கு இடையே ரகசிய கேமரா பொருத்தப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் ராமேசுவரம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் உடை மாற்றும் அறையை ஒட்டியுள்ள டீக்கடை நடத்திவரும் ராஜேஷ் கண்ணன் மற்றும் அங்கு பணியாற்றிய மீரான் மைதீன் ஆகிய 2 பேர் சேர்ந்து உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா பொருத்தி அதனை செல்போன் மூலம் இணைத்திருந்தது தெரிய வந்தது.
உடைமாற்ற வரும் பெண்களின் வீடியோக்களை செல்போனில் எடுத்து அதனை இணைய தளங்களில் வெளியிட்டதாகவும், சிலரை மிரட்டி பணம் பறித்ததாகவும் கூறப்படுகிறது. 2 பேரையும் கைது செய்த ராமேசுவரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் ரகசிய கேமரா, செல்போன்கள், மெமரி கார்டு போன்றவற்றை பறிமுதல் செய்த போலீசார் அதனை சைபர் கிரைம் பிரிவிற்கு ஆய்வுக்காக அனுப்பி உள்ளனர். குறிப்பாக 100-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் சிக்கியுள்ளன.
அதில் தமிழகம் மட்டுமின்றி வடமாநில மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் சிலரின் அந்தரங்க வீடியோவும் பதிவாகி இருந்தது. இதில் கைதான ராஜேஷ் கண்ணன் ராமேசுவரத்தை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகரின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.
உடை மாற்றும் அறையில் கேமரா கண்டறியப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவிலுக்கு வரும் பெண் பக்தர்களின் பாதுகாப்பு இதன் மூலம் கேள்விக்குறியாகி உள்ளது.
நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடும் ராமேசுவரத்தில் ஏராளமான கட்டண உடை மாற்றும் அறைகள் மற்றும் லாட்ஜ்கள், செயல்பட்டு வருகின்றன.
இங்கு வரும் வடமாநில மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தங்கி சாமி தரிசனம் செய்கின்றனர். இங்குள்ள உடை மாற்றும் அறைகள், குளியலறைகள், கழிவறைகளில் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா? என போலீசார் அங்குலம், அங்குலமாக ஆய்வு நடத்த உள்ளதாக தெரியவந்து உள்ளது.
முதற்கட்டமாக அக்னி தீர்த்த கடற்கரையை ஒட்டியுள்ள கட்டண உடை மாற்றும் அறைகளில் போலீசார் சோதனை நடத்த உள்ளனர். இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும், கோவிலுக்கு வரும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- அண்ணா சாலையில் உள்ள பெரியாரின் சிலைக்கு முதலமைச்சர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
- தந்தை பெரியார் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 51-வது நினைவு தினத்தையொட்டி அவரது திருஉருவ சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
அண்ணா சாலையில் உள்ள பெரியாரின் சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த படத்திற்கு மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதனைத்தொடர்ந்து தந்தை பெரியார் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
பெரியார் திடலில் பெரியார் பகுத்தறிவு எணினி (டிஜிட்டல்) நூலகம் மற்றும் ஆய்வு மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
- 'எதையும் அப்படியே நம்பாதே, ஏன்? எதற்கு? எப்படி? என்று கேள்வி கேள்' என்னும் பகுத்தறியும் பண்பை ஊட்டிய தந்தை பெரியாரின் நினைவு நாள் இன்று!
- சமூகநீதி, மதசார்பின்மை காக்க - மூடநம்பிக்கை ஒழிய அய்யா காட்டிய வழியில் அயராது உழைக்க இந்நாளில் உறுதி ஏற்போம்.
சென்னை :
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 51-வது ஆண்டு நினைவு நாளையொட்டி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
'எதையும் அப்படியே நம்பாதே, ஏன்? எதற்கு? எப்படி? என்று கேள்வி கேள்' என்னும் பகுத்தறியும் பண்பை ஊட்டிய தந்தை பெரியாரின் நினைவு நாள் இன்று!
'மானமும் அறிவும் தான் மனிதருக்கு அழகு' என்பதை மானுடத்துக்கு உணர்த்த தனது இறுதி மூச்சு வரை தளராமல் உழைத்த தந்தை பெரியார் தனது சுற்றுப்பயணத்தை நிறுத்திக் கொண்ட நாள்!
சமூகநீதி, மதசார்பின்மை காக்க - மூடநம்பிக்கை ஒழிய அய்யா காட்டிய வழியில் அயராது உழைக்க இந்நாளில் உறுதி ஏற்போம்.
பெரியாரின் நினைவைப் போற்றுவோம்! என்று கூறியுள்ளார்.
- வேர்கிளம்பி சந்திப்பில் நேற்று மாலை வாகனங்கள் திரண்டதால் செல்ல வழியின்றி ஆங்காங்கே நின்றன.
- முந்திச் செல்ல முயன்ற வாகனங்களால், யாரும் நின்ற இடத்தை விட்டு நகர முடியாத அளவிற்கு அந்த பகுதி ஸ்தம்பித்து நின்றது.
நாகர்கோவில்:
நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை (25-ந்தேதி) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு கிறிஸ்தவ மக்கள் கேக் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
குமரி மாவட்டத்திலும் கிறிஸ்துமஸ் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படும். பண்டிகை கொண்டாட்டத்திற்காக இன்று (செவ்வாய்க்கிழ மை) குமரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறையும் விடப்பட்டுள்ளது. பண்டிகையை குடும்பத்தினருடன் கொண்டாட வெளியூர், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் வேலை பார்ப்பவர்களும் சொந்த ஊருக்கு வந்துள்ளனர்.
இதன் காரணமாக கடந்த 2 நாட்களாகவே மாவட்டம் முழுவதும் கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் போக்குவரத்து நெருக்கடியும் நிலவி வருகிறது. வேர்கிளம்பி சந்திப்பில் நேற்று மாலை வாகனங்கள் திரண்டதால் செல்ல வழியின்றி ஆங்காங்கே நின்றன.
முந்திச் செல்ல முயன்ற வாகனங்களால், யாரும் நின்ற இடத்தை விட்டு நகர முடியாத அளவிற்கு அந்த பகுதி ஸ்தம்பித்து நின்றது. அப்போது மின்னலாக ஒரு பெண் சாலையில் இறங்கி போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் இறங்கினார்.
இங்கும் அங்கும் கைகளை காட்டி வாகனங்களை நிறுத்தியும், போகச்செய்தும் சிறிது நேரத்தில் நெருக்கடி நிலையை சீர்படுத்திய அவரை அந்தப் பகுதி மக்கள் பெரிதும் பாராட்டினர். ஆண்களும் பெண்களும் வாகனங்களை விட்டு இறங்காமல் காத்து நின்ற போது, வேகமாக செயல்பட்டு போக்குவரத்து நெருக்கடியை தீர்த்தவர் குறித்து விசாரித்த போது, அவர் பெண் போலீஸ் பவானி என தெரிய வந்தது.

ஆனால் அவர் பணிபுரிவது நம் மாவட்டத்தில் அல்ல. கோவையில் பணியாற்றும் அவர், விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார். அப்போது வேர்கிளம்பி வந்த அவர், ஸ்தம்பித்து நின்ற வாகனங்களை பார்த்து உடனடியாக களம் இறங்கி நிலைமையை சமாளித்துள்ளார். விடுமுறையிலும் பொதுச்சேவை புரிந்த அவரது செயல்பாடுகள் சமூகவலைதளங்களில் வைரலானதால் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
- தண்ணீர் வரத்தை விட குறைந்த அளவிலேயே பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
- நடப்பாண்டில் 3-வது முறையாக மேட்டூர் அணை நிரம்பும் தருவாயில் உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சேலம்:
கர்நாடக, தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது.
இந்த நிலையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையின் தீவிரம் காரணமாக மேட்டூர் அணை இந்த ஆண்டில் 2 முறை நிரம்பியது. பின்னர் மழை நின்று தண்ணீர் வரத்து குறைந்ததாலும், தொடர்ந்து நீர்வரத்தை விட அதிகளவில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வந்ததாலும் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்தது.
இதற்கிடையே வடகிழக்கு பருவமழையின் தீவிரம் காரணமாக மீண்டும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. கடந்த 50 நாட்களுக்கும் மேலாக அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. மேலும் டெல்டா மாவட்டத்திலும் பலத்த மழை பெய்ததால் அங்கு பாசனத்துக்கு தண்ணீர் தேவை குறைந்தது. இதன் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டது.
தொடர்ந்து தண்ணீர் வரத்தை விட குறைந்த அளவிலேயே பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 119.41 அடியாக இருந்தது. எனவே இந்த ஆண்டில் 3-வது முறையாக அணை நிரம்பும் தருவாயில் உள்ளது. தொடர்ந்து அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 701 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு 500 கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 300 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 92.53 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. நடப்பாண்டில் 3-வது முறையாக மேட்டூர் அணை நிரம்பும் தருவாயில் உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- தந்தை பெரியாரின் 51-வது நினைவு தினம் இன்று.
- துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள் உள்ளிட்டோரும் பெரியார் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
சென்னை:
பகுத்தறிவு பகலவன் பெரியாரின் 51-வது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை அண்ணா சாலையில் சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்தார்.
பெரியார் சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த உருவப்படத்துக்கும் அவர் மலர் தூவி வணங்கினார். இதில் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி., ஆ.ராசா, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், மு.பெ.சாமிநாதன், தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் பூச்சி முருகன், துறைமுகம் காஜா, மாவட்ட செயலாளர் நே.சிற்றரசு, எம்.எல்.ஏ.க்கள் ஜெ.கருணாநிதி, மயிலை த.வேலு மற்றும் ப.ரங்கநாதன், மாதவரம் சுதர்சனம், தாயகம் கவி, மேயர் பிரியா, சேப்பாக்கம் மதன்மோகன், புழல் நாராயணன், உள்பட ஏராளமான முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
- குடியிருப்பு பகுதிகளில் சுற்றித் திரிந்த யானை கூட்டத்தை பார்த்து பொதுமக்கள் அச்சம்.
- குட்டி யானை ஒன்று ஊருக்குள் சுற்றுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
கவுண்டம்பாளையம்:
கோவை, துடியலூர் அருகே பன்னிமடை பகுதி உள்ளது. இந்த பகுதியில் ஏராளமான குடியிருப்புகளில் மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த பகுதியையொட்டி சில கி.மீட்டர் தூரங்களில் வனப்பகுதி உள்ளது. வனப்பகுதியில் இருந்து அடிக்கடி காட்டு யானைகள் வெளியேறி, இந்த பகுதிக்குள் நுழைந்து விடுவது வாடிக்கையாக உள்ளது.
நேற்றிரவு வனத்தை விட்டு வெளியேறிய யானை கூட்டங்கள் நேராக பன்னிமடை பகுதிக்குள் நுழைந்தது. அங்குள்ள குடியிருப்பு பகுதிகளில் சுற்றித் திரிந்த யானை கூட்டத்தை பார்த்து பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.
இதுகுறித்து வனத்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து காட்டு யானைகளை வனத்திற்குள் விரட்டினர்.
இந்த நிலையில் இன்று காலை, அந்த யானை கூட்டத்தில் இருந்து பிரிந்த குட்டி யானை ஒன்று ஊருக்குள் சுற்றுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
வனத்துறையினர் வந்து, குட்டியானையை மீட்டு, அதனை அதன் தாயுடன் சேர்ப்பதற்காக வனப்பகுதிக்கு அழைத்து சென்றனர்.
அப்போது பன்னிமடை பகுதியில் இருந்து 1 கி.மீட்டர் தூரத்தில், பெண் யானை ஒன்று அமர்ந்த நிலையில் காணப்பட்டது. எந்தவித அசைவுமின்றி இருந்ததால் வனத்துறையினர் அருகே சென்று பார்த்தனர். அப்போது அந்த யானை அமர்ந்த நிலையிலேயே உயிரிழந்தது தெரியவந்தது.
இதுகுறித்து வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்களும் விரைந்து வந்து உயிரிழந்த யானையை பார்வையிட்டனர். யானை இறந்து கிடந்த தகவல் அறிந்ததும் அப்பகுதியை சேர்ந்த மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டுவிட்டனர்.
இந்த யானை எப்படி இறந்தது? யானை இறப்பிற்கான காரணம் என்ன? இறந்த யானை தான் குட்டி யானையின் தாயா? யானையை தேடி வந்தபோது இறந்ததா? அல்லது யானை கூட்டத்தில் இருந்து பிரிந்த வேறு யானையா? என்பது குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்
உயிரிழந்த யானையை வனப்பணியாளர்கள் மற்றும் வன கால்நடை அலுவலர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு பிரேத பரிசோதனை செய்தனர்.






