என் மலர்
உள்ளூர் செய்திகள்

ராமேசுவரம் உடை மாற்றும் அறையில் சிக்கிய ரகசிய காமிரா: 100-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் பறிமுதல்
- சிலரை மிரட்டி பணம் பறித்ததாகவும் கூறப்படுகிறது.
- பெண் பக்தர்களின் பாதுகாப்பு இதன் மூலம் கேள்விக்குறியாகி உள்ளது.
ராமநாதபுரம்:
தென்னகத்து காசி என அழைக்கப்படும் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் இந்துக்களின் புனித ஸ்தலமாக உள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள்.
இங்குள்ள அக்னி தீர்த்தக் கடல் மற்றும் கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களில் புனித நீராடி பக்தர்கள் சாமி தரிசனம் செய்கிறார்கள். அக்னி தீர்த்த கடற்கரையையொட்டி தனியார் குளியலறை மற்றும் உடை மாற்றும் அறைகள் ஏராளமாக உள்ளன.
நேற்று கடற்கரை பகுதியில் உள்ள டீக்கடையை ஒட்டியுள்ள கட்டண உடை மாற்றும் அறைக்கு சென்ற இளம்பெண் சுவரில் டைல்சுகளுக்கு இடையே ரகசிய கேமரா பொருத்தப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் ராமேசுவரம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் உடை மாற்றும் அறையை ஒட்டியுள்ள டீக்கடை நடத்திவரும் ராஜேஷ் கண்ணன் மற்றும் அங்கு பணியாற்றிய மீரான் மைதீன் ஆகிய 2 பேர் சேர்ந்து உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா பொருத்தி அதனை செல்போன் மூலம் இணைத்திருந்தது தெரிய வந்தது.
உடைமாற்ற வரும் பெண்களின் வீடியோக்களை செல்போனில் எடுத்து அதனை இணைய தளங்களில் வெளியிட்டதாகவும், சிலரை மிரட்டி பணம் பறித்ததாகவும் கூறப்படுகிறது. 2 பேரையும் கைது செய்த ராமேசுவரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் ரகசிய கேமரா, செல்போன்கள், மெமரி கார்டு போன்றவற்றை பறிமுதல் செய்த போலீசார் அதனை சைபர் கிரைம் பிரிவிற்கு ஆய்வுக்காக அனுப்பி உள்ளனர். குறிப்பாக 100-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் சிக்கியுள்ளன.
அதில் தமிழகம் மட்டுமின்றி வடமாநில மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் சிலரின் அந்தரங்க வீடியோவும் பதிவாகி இருந்தது. இதில் கைதான ராஜேஷ் கண்ணன் ராமேசுவரத்தை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகரின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.
உடை மாற்றும் அறையில் கேமரா கண்டறியப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவிலுக்கு வரும் பெண் பக்தர்களின் பாதுகாப்பு இதன் மூலம் கேள்விக்குறியாகி உள்ளது.
நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடும் ராமேசுவரத்தில் ஏராளமான கட்டண உடை மாற்றும் அறைகள் மற்றும் லாட்ஜ்கள், செயல்பட்டு வருகின்றன.
இங்கு வரும் வடமாநில மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தங்கி சாமி தரிசனம் செய்கின்றனர். இங்குள்ள உடை மாற்றும் அறைகள், குளியலறைகள், கழிவறைகளில் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா? என போலீசார் அங்குலம், அங்குலமாக ஆய்வு நடத்த உள்ளதாக தெரியவந்து உள்ளது.
முதற்கட்டமாக அக்னி தீர்த்த கடற்கரையை ஒட்டியுள்ள கட்டண உடை மாற்றும் அறைகளில் போலீசார் சோதனை நடத்த உள்ளனர். இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும், கோவிலுக்கு வரும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






