என் மலர்
உள்ளூர் செய்திகள்
- அறவழியில் ஆங்கிலேயரை வென்ற அமைதிப் புரட்சியாளர், சத்திய வழியை மானுட உலகத்திற்கு காட்டிய வழிகாட்டி.
- அண்ணல் காந்தியடிகளின் நினைவுநாளில், மகாத்மாவின் பெரும் புகழைப் போற்றி வணங்குகிறேன்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
அறவழியில் ஆங்கிலேயரை வென்ற அமைதிப் புரட்சியாளர், சத்திய வழியை மானுட உலகத்திற்கு காட்டிய வழிகாட்டி, நம் இந்தியத் திருநாட்டின் கொள்கைத் தந்தை அண்ணல் காந்தியடிகளின் நினைவுநாளில், மகாத்மாவின் பெரும் புகழைப் போற்றி வணங்குகிறேன்.
நாட்டின் சமத்துவத்திற்காக தன்னையே தியாகம் செய்த அண்ணல் காந்தியடிகளின் நினைவுநாளில், நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்த உத்தமர்கள் அனைவரையும் நினைவுகூர்வதுடன், தீண்டாமை துளியும் இல்லாத சமத்துவ நாடாக இந்தியாவைக் கட்டமைக்க உறுதியேற்போம் என்று தெரிவித்துள்ளார்.
- மகாத்மா காந்தியின் உருவப்படத்திற்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
- முதலமைச்சர் முன்னிலையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தேசத்தந்தை மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட ஜன.30-ந்தேதி தியாகிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்திய விடுதலைப் போராட்டத்திற்காக பாடுபட்டவர்களை போற்றும் வகையில் தியாகிகள் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.
இந்நிலையில் எழும்பூர் அருங்காட்சியகத்தில் மகாத்மா காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து தலைமைச்செயலகத்தில் ராணுவ அணிவகுப்பு மைதானத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தீண்டாமையை அடிப்படையாகக் கொண்டு எவர்மீதும் தெரிந்தோ, தெரியாமலோ சமூக வேற்றுமையை மனம், வாக்கு, செயல் என்ற எந்த வகையிலும் கடைபிடிக்கமாட்டேன்.
அரசியலமைப்பின் அடிப்படை கருத்திற்கிணங்க, சமய வேறுபாடற்ற சுதந்திர சமுதாயத்தை உருவாக்குவதில் நேர்மையுடனும், உண்மையுடனும் பணியாற்றுவது எனது கடமை ஆகும்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தலைமைச்செயலக அதிகாரிகள், ஊழியர்கள் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியை ஏற்றனர்.
- பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில், வாசிப்புத் திறனில், அரசுப் பள்ளிகளைவிட தனியார் பள்ளிகளில் தொடர் முன்னேற்றம் காணப்படுவதாக அறிக்கை கூறுகிறது.
- தற்போதைய அவல நிலைமைக்குக் காரணம் தி.மு.க. அரசின் அலட்சியப் போக்கு, நிர்வாகத் திறமையின்மை, மெத்தனப் போக்கு ஆகியவைதான்.
சென்னை:
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
2024-ம் ஆண்டிற்கான ஆண்டு கல்வி நிலவர அறிக்கை குறித்த ஆய்வு வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த ஆய்வு தமிழ்நாட்டில் 30 மாவட்டங்களில், 876 கிராமங்களில் மூன்று வயது முதல் 16 வயது வரையிலான 28,984 கிராமப்புற மாணவ, மாணவியரிடையே மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆய்வில், 35 சதவீதம் எட்டாம் வகுப்பு மாணவ, மாணவியர்களால் இரண்டாம் வகுப்பு பாடங்களை படிக்க முடியவில்லை என்றும், 64 சதவீதம் 5-ம் வகுப்பு மாணவ, மாணவியர்களால் இரண்டாம் வகுப்பு பாடங்களை படிக்க இயலவில்லை என்றும் கூறப்பட்டு இருக்கிறது. மேலும், 12 சதவீதம் 3-ம் வகுப்பு மாணவ, மாணவியர் மட்டுமே 2-ம் வகுப்பு பாடங்களை படிக்கின்றனர் என்றும் அந்த ஆய்வு குறிப்பிடுகிறது.
பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில், வாசிப்புத் திறனில், அரசுப் பள்ளிகளைவிட தனியார் பள்ளிகளில் தொடர் முன்னேற்றம் காணப்படுவதாக அறிக்கை கூறுகிறது. தற்போதைய அவல நிலைமைக்குக் காரணம் தி.மு.க. அரசின் அலட்சியப் போக்கு, நிர்வாகத் திறமையின்மை, மெத்தனப் போக்கு ஆகியவைதான்.
மாணவ, மாணவியரின் நலனைக் கருத்தில் கொண்டு, ஆசிரியர் காலிப் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் முறையாக அமர்த்தி, அடுத்த ஆண்டிலாவது கிராமப்புற மாணவ, மாணவியரின் கல்வித் தரத்தை உயர்த்தி கல்வியில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாகத் திகழ நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- ஒரு வாக்குக்கு ரூ.3 ஆயிரம் கொடுக்க தி.மு.க முடிவு செய்துள்ளதாக தகவல்.
- திராவிடம் என்பது கட்டுக்கதை.
ஈரோடு:
ஈரோடு, குமலன்குட்டை பகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து நடந்த பிரசார கூட்டத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். அப்போது சீமான் கூறியதாவது:-
ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு ஒரு வாக்குக்கு ரூ.3 ஆயிரம் கொடுக்க தி.மு.க முடிவு செய்துள்ளதாக தகவல் வந்துள்ளது.
வாக்கினை தி.மு.க.விற்கு செலுத்தி அதனை புகைப்படம் எடுத்து வந்து காட்டினால் தான் பணம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
தமிழகத்தில் நல்ல ஆட்சி நடக்கிறது என்று மக்கள் சொல்ல வேண்டும். ஆனால் முதலமைச்சர் தனக்குத்தானே நல்லாட்சி நடப்பதாக சான்று கொடுக்கிறார்.
நல்லாட்சி நடக்கிறது என்றால், ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்கிற்கு எதற்கு பணம் கொடுக்க வேண்டும்? முதலமைச்சர், அமைச்சர்களைப் பார்க்க மக்கள் தானாக வரவில்லை என்றால், அந்த அளவுக்கு ஆட்சியின் தரம் உள்ளது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
முதலமைச்சர், துணை முதலமைச்சர் கூட்டங்களுக்கு பணம் கொடுத்து கூட்டம் சேர்க்கப்படுகிறது. தி.மு.க.விற்கு வாக்களிக்காவிட்டாலும் பரவாயில்லை, நாம் தமிழருக்கு வாக்களித்து விடாதீர்கள் என்ற பிரசாரம் நடக்கிறது.
தமிழ்தேசம் பேசுவது பிரிவினை வாதம் என்றால் ஆந்திராவில் என்.டி.ராம ராவ் தெலுங்கு தேசம் ஆரம்பித்தபோது ஏன் மவுனமாக இருந்தீர்கள்? ஒவ்வொரு மாநிலத்தவரும் அந்த மாநிலத்தவராக இருக்கும் போது, தமிழர்கள் மட்டும் திராவிடர்களாக சித்தரிக்கப்படுவது ஏன்? திராவிடம் என்பது கட்டுக்கதை.
நம்ப வைத்த போலி கோட்பாடு. திராவிட முன்னேற்றம் என்பது திருடர்கள் முன்னேற்றம் தான். தமிழர் அல்லாதவர் வசதியாக வாழவும், ஆளவும் கொண்டு வரப்பட்ட ஏற்பாடுதான் திராவிடம். இதை சகித்துக் கொள்ள முடியாது. இதனை அம்பலப்படுத்துவதே எங்களின் நோக்கம்.
50 ஆயிரம் ஆண்டுகளுக்கு மூத்த மொழியான தமிழை நாங்கள் தான் செம்மொழி ஆக்கினோம் என்று திராவிடம் கூறுகிறது. உலகின் மூத்த மொழியான தமிழை, அவதூறாகப் பேசியவர் பெரியார். பெரியார் பேசியதை, எழுதியதை நான் எடுத்து பேசுகிறேன். பெரியார் குறித்து நாங்கள் முன் வைக்கும் கேள்விகளுக்கு பதில் இல்லை.
அதற்கு பதிலாக அவதூறுகளை அள்ளி வீசுகின்றனர். அநீதி எந்த வடிவத்தில் வந்தாலும் தமிழர்கள் எதிர்த்து போராடுவார்கள். இது பரம்பரை குணம். தமிழ்நாடு என நாங்கள் தான் பெயர் சூட்டினோம் என்று திராவிடர்கள் பொய் பரப்புகின்றனர். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மறுக்கும் இவர்களால் எப்படி சமூகநீதியை, இட ஒதுக்கீட்டை பெற்றுத் தர முடியும்?
இவ்வாறு அவர் பேசினார்.
- குற்றவாளிகள் பெயர் உள்ளிட்ட எந்த விவரமும் வெளியிடாதது ஏன்?
- கார் நம்பர் தெரிந்துவிட்டது. ஆனால் யாரென்று இன்னும் கண்டுபிடிக்கவில்லையா?
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பெண்கள் மீது தாக்குதல் நடந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சித்தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அ.தி.மு.க.வின் தகவல் தொழில்நுட்ப பிரிவு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
புகாரளித்த பெண்ணின் பெயர் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களை வெளியிட்ட ஸ்டாலின் மாடல் அரசு, குற்றவாளிகள் பெயர் உள்ளிட்ட எந்த விவரமும் வெளியிடாதது ஏன்?
அவர்கள் முகம் தெளிவாக பதிவாகியுள்ளது. கார் நம்பர் தெரிந்துவிட்டது. ஆனால் யாரென்று இன்னும் கண்டுபிடிக்கவில்லையா?
அல்லது, விவரங்களை வெளியிடவோ, மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவோ திமுக கொடி என்னும் "லைசன்ஸ்" தடுக்கிறதா? என்று தெரிவித்துள்ளது.
- மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு கோவில் முழுவதும் விழாக்கோலம் பூண்டது.
- விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
கடலூர் அடுத்த திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவில் 108 வைணவ தளங்களில் முதன்மை பெற்றதாகும். இக்கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 2012-ம் ஆண்டு நடைபெற்று தற்போது 12 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் 2023-ம் ஆண்டு திருப்பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் கும்பாபிஷேகம் 2-ந்தேதி காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் நடைபெறுகிறது. இந்த நிலையில் நேற்று காலை சிறப்பு பூஜைகள் நடைபெற்று மூலவர் சன்னிதானம் மூடப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.
மேலும் கோவில் வளாகம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு கோவில் முழுவதும் விழாக்கோலம் பூண்டது. இதனைத் தொடர்ந்து வருகிற 2-ந்தேதி கும்பாபிஷேகம் முடிவடைந்து சாமி தரிசனம் செய்ய வழக்கம் போல் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
முன்னதாக காலை புண்யாக வாசனம், வாஸ்து சாந்தி, மகா சாந்தி ஹோமம் நடைபெற்றது. பின்னர் மாலையில் ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகள் நேரில் வந்தார். தொடர்ந்து திருப்பதி, பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து 75 பட்டாச்சாரியார்கள் கலந்து கொண்டு வேத மந்திரங்கள் முழங்க யாகசாலை பூஜை தொடங்கியது.
தொடர்ந்து அங்குரார்ப் பணம், வேத திவ்யபிரபந்த தொடக்கம் மற்றும் பூர்ணாஹதி நடைபெற்றது. இதில் ஜி.ஆர்.கே.குழும நிறுவன இயக்குநர் ஜி.ஆர்.துரைராஜ், இயக்குனர் கோமதி துரைராஜ் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி கும்பிட்டனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
இன்று (30-ந்தேதி) அக்னி பாராயணம், நித்ய ஹோமங்கள் நடைபெற்றது. இன்று மாலை மற்றும் நாளை (31-ந் தேதி) கும்ப ஆராதனம் நடைபெறுகிறது. பிப்ரவரி (1-ந் தேதி) காலை அதிவாஸத்ரய ஹோமம், மஹா சாந்தி திருமஞ்சனம், கடம் புறப்பாடு, மாலை சயனா திவாஸம் மற்றும் பூர்ணாஹதி நடைபெறுகிறது.
இதைத் தொடர்ந்து சிகர விழாவான கும்பாபிஷேக விழா வருகிற 2-ந்தேதி நடைபெற உள்ளது. அன்று காலை விஸ்வரூபம் தரிசனம், பிரதான ஹோமம், மகா பூர்ணாஹதி நடைபெற்று கும்ப புறப்பாடு ஊர்வலமாக சென்று கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.
இதனை தொடர்ந்து வேத, திவ்ய பிரபந்த சாற்று முறை, பிரம்ம கோஷம் நடைபெற்று பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
இரவு தங்க விசேஷ வாகனத்தில் தேவநாதசுவாமி உபய நாச்சியாருடன் வீதியுலா நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
- 53 இடங்களில் 237 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
- நேற்று 37 ஆயிரத்து 146 வாக்காளர்களுக்கும் பூத் சிலிப் வழங்கப்பட்டுள்ளது.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 5-ந் தேதி நடைபெறுகிறது. இதற்காக 53 இடங்களில் 237 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 546 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்கு வீடு வீடாக சென்று பூத்சிலிப் வழங்கும் பணி கடந்த 26-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 26-ந்தேதி 40 ஆயிரத்து 429 வாக்காளர்களுக்கும், 27-ந் தேதி 34 ஆயிரத்து 859 வாக்காளர்களுக்கும், 28-ந்தேதி 32 ஆயிரத்து 79 வாக்காளர்களுக்கும், நேற்று 37 ஆயிரத்து 146 வாக்காளர்களுக்கும் பூத் சிலிப் வழங்கப்பட்டுள்ளது.
மொத்தம் இதுவரை 1 லட்சத்து 44 ஆயிரத்து 513 வாக்காளர்களுக்கு பூத்சிலிப் விநியோகம் செய்யப் பட்டுள்ளது. மீதமுள்ள 83 ஆயிரத்து 33 வாக்காளர்களுக்கு இன்றும், நாளையும் பூத் சிலிப் வழங்கி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
- அம்மன் தங்கக்கவச அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
- அடுத்த மாதம் மயானக்கொள்ளை நடைபெற இருப்பதால் ஊஞ்சல் உற்சவம் நடைபெறாது.
மேல்மலையனூர்:
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று இரவு தை மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடை பெற்றது.
இதை முன்னிட்டு நேற்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு மூலஸ்தா னத்தில் உள்ள அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் பால், தயிர், மஞ்சள், சந்தனம், விபூதி குங்குமம், இளநீர் பஞ்சாமிர்தம்,தேன், பன்னீர் உள்ளிட்ட பூஜைப் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றது.
தொடர்ந்து தங்ககவச அலங்காரத்தில் அருள்பாலித்தனர். உற்சவ அம்மனுக்கு பலவித மலர்களை கொண்டு ராஜராஜேஸ்வரி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் அருள்பாலித்தார். இரவு 11 மணிக்கு மேளதாளம் முழங்க வடக்கு வாசல் வழியாக உற்சவர் அம்மன் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார்.
அப்போது ஊஞ்சல் மண்டபம் எதிரில் இருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் ஓம் சக்தி அங்காளம்மா, ஓம் சக்தி அங்காளம்மா, என கோஷத்துடன அம்மனை வழிபட்டனர். இரவு ஊஞ்சல் உற்சவம் முடிந்து அம்மனுக்கு அர்ச்சனை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதையடுத்து உற்சவர் அம்மன் கோவிலின் உட்பிரகாரத்துக்குச் சென்றார். ஊஞ்சல் உற்சவத்தில் விழுப்புரம், கடலூர், சேலம், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, ஆகிய மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அடுத்த மாதம் அமாவாசை அன்று மயானக் கொள்ளை விழா நடைபெறுவதாலும் அன்று இரவு அம்மன் ஆண் பூத வாகனத்தில் வீதி உலா வருவதாலும் அன்று இரவு ஊஞ்சல் விழா நடைபெறாது என்பது குறிப்பிடத்தக்கது.
- தற்போது நீர்ப்பனியாக மாறி சாரல் மழைபோல பொழிந்து வருகிறது.
- புல்வெளிகள் வெள்ளை கம்பளம் போல காணப்படுகின்றன.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 2-வது வாரத்துக்கு மேல் நீர்ப்பனி கொட்ட தொடங்கும். பின்னர் நவம்பர் மாதம் 2-வது வாரத்துக்கு மேல் உறைபனிக்காலம் ஆரம்பமாகி விடும்.
இந்த நேரங்களில் அங்குள்ள பல்வேறு பகுதிகளில் அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் குளிர் மிகவும் அதிகமாக காணப்படும்.
அதன்படி இந்தாண்டு வழக்கம்போல நவம்பர் மாதம் தொடங்கிய நீர்ப்பனி, கடந்த மாதம் இறுதி வாரம் முதல் உறைபனியாக கொட்ட தொடங்கியது. இது தற்போது நீர்ப்பனியாக மாறி சாரல் மழைபோல பொழிந்து வருகிறது.
இதன்காரணமாக ஊட்டியில் அதிகாலை நேரங்களில் புல்வெளிகள், தேயிலை தோட்டம் மற்றும் மலர்ச்செடிகள் கண்ணாடி இழை போல காட்சியளிக்கிறது. மேலும் தாவரவியல் பூங்கா, தலைக்குந்தா, காமராஜர் சாகர் அணை, சூட்டிங்மட்டம், குதிரைப்பந்தய மைதானம், லவ்டேல் ஆகிய பகுதிகளில் உள்ள புல்வெளிகள் வெள்ளை கம்பளம் போல காணப்படுகின்றன.
தொடர்ந்து தாவரவியல் பூங்காவில் உள்ள மலர்ச்செடிகள் மற்றும் அலங்கார செடிகள் பனியில் பாதிக்காமல் இருப்பதற்காக, அங்கு கோத்தகிரி மிலார் செடிகள் கொண்டு பாதுகாப்பு அரண் அமைக்கும் பணியில் தோட்டக்கலை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நீர்ப்பனி அதிகமாக கொட்டி வருவதால், அங்கு பயிரிடப்பட்டு உள்ள தேயிலை செடிகள் மற்றும் மலைக்காய்கறி சாகுபடி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. மேலும் ஊட்டியில் பனி கொட்டுவதால் அங்கு வசிக்கும் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கம்பளி ஆடைகளை அணிந்து வலம் வருகின்றனர்.
- 4-வது நாளாக லாரி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- போராட்டத்தால் கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது.
தளி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேன்கனிக்கோட்டை, தளி, ஓசூர், சூளகிரி, உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் கல் குவாரிகள் உள்ளன.
இந்த கல் குவாரிகளில் இருந்து வெட்டி எடுக்கப்படும் ஜல்லிக்கற்கள், எம் சாண்ட், பி சாண்ட் மற்றும் ரோபோ சாண்ட் ஆகிய கட்டுமான பொருட்கள், கட்டுமானப் பணிகளுக்காக ஓசூர் சுற்றுப்புற பகுதிகளுக்கும் அருகில் உள்ள கர்நாடக மாநிலத்தின் பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் தினந்தோறும் டிப்பர் லாரிகளில் கொண்டு செல்லப்படுகிறது.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் கல்குவாரி உரிமையாளர்கள் ஜல்லிக்கற்கள் மற்றும் எம் சாண்ட்டிற்கு ஒரு டன்னுக்கு ரூ.125, ரோபோ சாண்ட்டிற்கு ஒரு டன்னுக்கு ரூ.200 மற்றும் பி சாண்ட்டிற்கு ஒரு டன்னுக்கு 225 என விலை உயர்த்தி உள்ளனர். இந்த விலை ஏற்றத்தால் பாதிப்படைந்த லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் செய்ய போவதாக அறிவித்தனர்.
இந்த நிலையில் தேன்கனிக்கோட்டை பகுதிகளில் ஜல்லி உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களின் விலை ஏற்றத்தால் பாதிக்கப் பட்ட லாரி உரிமையாளர்கள் தங்களது லாரிகளை இயக்காமல் அங்கங்கே நிறுத்திவிட்டு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று 4-வது நாளாக லாரி உரிமையாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டத்தால் கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது. அந்த பணிகளை நம்பி வாழும் லாரி ஓட்டுநர்கள், கட்டிட மேஸ்திரிகள், தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். ஹாலோ பிளாக் கற்கள் தயார் செய்யும் தொழிலாளர்களும் பதிக்கப்பட்டுள்ளனர்.
- வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.
- பார் வெள்ளி ஒரு லட்சத்து ஆறாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த வாரம் 22-ந்தேதி சவரனுக்கு ரூ.60,200-க்கு விற்பனையாது. அன்று முதல் தங்கம் விலை சவரன் ரூ.60ஆயிரத்துக்கு கீழ் வரவில்லை. இதனை தொடர்ந்து இந்த வாரத்தில் தங்கம் விலை நேற்று புதிய உச்சமாக சவரனுக்கு ரூ.60,760-க்கு விற்பனையானது
இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.7,610-க்கும் சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.60,880-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு இரண்டு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 106 ரூபாய்க்கும், கிலோவுக்கு இரண்டாயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து ஆறாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
29-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 60,760
28-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 60,080
27-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 60,320
26-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 60,440
25-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 60,440
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
29-01-2025- ஒரு கிராம் ரூ. 104
28-01-2025- ஒரு கிராம் ரூ. 104
27-01-2025- ஒரு கிராம் ரூ. 104
26-01-2025- ஒரு கிராம் ரூ. 105
25-01-2025- ஒரு கிராம் ரூ. 105
- கட்சி எடுத்த பல நிலைப்பாடுகளைக் கேள்வி கேட்டிருக்கிறேன்.
- நம்மவர் போன்ற மகத்தான தலைவனைத் தவறவிட்டது தமிழ்நாடு மட்டுமல்ல, வினோதினியும்தான்.
சென்னை:
நடிகையும், மக்கள் நீதி மய்யம் கட்சியில் செயல்பட்டு வந்தவருமான வினோதினி, மய்யத்திலிருந்து மிகுந்த வருத்தத்துடன் வெளியேறுவதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக வினோதினி எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-
மய்யத்திலிருந்து மிகுந்த வருத்தத்துடன் வெளியேறுகிறேன்.
அரசியல் பெரிய கடல். அதில் முத்தெடுத்து, மக்களுக்குச்சேர்க்க, தனிப்பட்ட நபரால் ஆக்கப்பூர்வமான விஷயங்கள் செய்ய தேவை - எண்ணம், சிந்தனை, செயல், பணம். என்னிடம் எண்ணமும் சிந்தனையும் மட்டுமே உள்ளது என்பதைக் காலம் புரியவைத்திருக்கிறது.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக என் செயலும் பணமும் எனது சொந்த வாழ்க்கைத் தரத்தை ஓரளவு முன்னேற்றுவதற்கும், நான் மேற்கொண்டுள்ள தெருவிலங்குகளின் (நாய், பூனை, ஒரு கோஷாலாவில் என் செலவில் வாழும் சில மாடுகள்) வாழ்க்கைத்தரத்தை முன்னேற்றுவதற்குமே சென்றிருக்கிறது. ஹிந்தியில் ஒரு வார்த்தை இருக்கிறது. அதை நான் சொல்லிப்பல பேரைத் திட்டியிருக்கிறேன். காம்சோர் என்பதுதான் அந்த வார்த்தை. ஆங்கிலத்தில் சொன்னால் Slacker. கடமைகளைத்தட்டிக்கழிக்கும் சோம்பேறி. மய்யத்தில் நான் செய்தது காம்சோர். இதை ஒத்துக்கொள்வதில் தவறில்லை என்றும் இந்த உண்மையை வெளிப்படுத்துவதன்மூலம் எனக்கு மிகப்பெரிய சுதந்திரம் கிடைக்கிறது என்றும் நம்புகிறேன்.
பலர் இங்கு, கட்சி நடக்கிறதா என்றெல்லாம் கேட்பார்கள். எப்பொழுதும் நான் சொல்வது - கட்சிக்கு நீங்கள் என்ன செய்தீர்கள் என்று சிந்தியுங்கள். சிறு துளி கூட பெரு வெள்ளமாகும். அச்சிறு துளியைக்கூட நான் என் பல அலுவல்களுக்கு நடுவில்தான் செய்திருக்கிறேன். முழுமையாக அல்ல.
அமெரிக்க அரசியலில் ஒரு term பயன்பாட்டில் உள்ளது. Career Politician. முழுமையாக அரசியலில் மட்டுமே இருப்பவர்கள், அரசியலையே தொழிலாகக்கொண்டவர்கள், அதிலிருந்தே சம்பாதிப்பவர்கள். ஆனால் அதை முறியடித்துத்தான் அத்தனை career politicianகளையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு Trump அதிபரானார். (அவர் அமெரிக்காவிற்கு சரியான தலைவரா இல்லையா என்பது வேறு விஷயம்). ஆனால் அங்குள்ள மக்களே உணர்ந்தது என்னவென்றால் - career politicianகளைவிட businessmanஆன Trump எல்லாவிதத்திலும் மக்களின் நலனுக்காக மக்கள் கஷ்டங்கள் தெரிந்து போராடுவார், இதைத்தான் அமெரிக்காவின் founding fathersஉம் விரும்பினர் என்று. ஆனால், அப்படி முழுநேர அரசியல் செய்யாமல் அவ்வரசியலிலிருந்து பொருள் ஈட்டாமல் இருக்க, மக்கள் பணத்தைச் சுருட்டாமல் இருக்க, சொந்தமாகப் பெரிய வணிக அல்லது பொருளாதாரப் பின்புலம் தேவை. அது என்னிடம் இல்லை.
கட்சி எடுத்த பல நிலைப்பாடுகளைக் கேள்வி கேட்டிருக்கிறேன். பெருந்தன்மையோடு எனக்கு புரிய வைத்திருக்கின்றனர். யாருக்கும் கிடைக்காத அரிய வாய்ப்புக்கள் எனக்குக் கிடைத்திருக்கின்றன. தலைவரோடு நேரடியாக உரையாட, கேள்வி கேட்க, பற்பல நிகழ்ச்சிகளைத் துவக்க, பற்பல செயல்பாடுகளை முன்னெடுக்க. ஆனால் அவற்றையெல்லாம் நான் முழுமையாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.
நம்மவர் போன்ற மகத்தான தலைவனைத் தவறவிட்டது தமிழ்நாடு மட்டுமல்ல, வினோதினியும்தான்.
தொடர்ந்து என் எண்ணமும் சிந்தனையும் தமிழ்நாட்டு அரசியலை மையப்படுத்தியே இருக்கும். ஏனெனில், நான் பிறந்த இம்மண்ணுக்கு என் மக்களுக்கு என்னால் ஆன சிறு மாற்றத்தையாவது, குறைந்தபட்சம் சிந்தனையளிவிலாவது, இப்பிறவியில் கொண்டுவர வேண்டும் என்பதுதான் என் நோக்கம்.
65 வயதிற்கு மேலும் தனது மூத்திரப்பையை கையில் ஏந்தி பகுத்தறிவு புகட்டிய அந்த தாத்தனைப்போல், இன்றும் எங்கள் மய்யத்தில் கொடி நட்டு, போஸ்டரடித்து, உறுப்பினர் சேர்த்து, ஒவ்வொரு தேர்தலின்போதும் அயராது களத்தில் இறங்கி வேலைசெய்யும் தொண்டனைப்போல், மக்கள் பிரச்சனை என்றால் களத்தில் குதிக்கும் ஒவ்வொரு கட்சியின் நிர்வாகிபோல் நானும் என் கணக்கைத் தொடங்கும் பொழுதுதான் அது அரசியல் அல்லாது, அறச் செயலாக மாறும்.
அதுவரை, சிந்தனையில் மட்டுமே. அச்சிந்தனையை மெருகேற்றிய நம்மவருக்கும் அவர்பின் நின்ற, நிற்கும் அனைவருக்கும் நன்றிகளும் அன்பும்.
தொடர்ந்து பயணிப்போம். சமரசமற்ற நடுவு நிலையிலிருந்தபடியே என்று பதிவிட்டுள்ளார்.
நடிகை வினோதினி, கமல்ஹாசன் குறித்து எழும் எதிர்மறையான கருத்துக்களுக்கு பதிலடி கொடுத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






