சாதி வாரிய கணக்கெடுப்பை நடத்த மறுக்கும் இவர்களால் எப்படி இட ஒதுக்கீட்டை பெற்றுத்தர முடியும்? - சீமான்

ஒரு வாக்குக்கு ரூ.3 ஆயிரம் கொடுக்க தி.மு.க முடிவு செய்துள்ளதாக தகவல்.திராவிடம் என்பது கட்டுக்கதை.
சாதி வாரிய கணக்கெடுப்பை நடத்த மறுக்கும் இவர்களால் எப்படி இட ஒதுக்கீட்டை பெற்றுத்தர முடியும்? - சீமான்
Published on

ஈரோடு:

ஈரோடு, குமலன்குட்டை பகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து நடந்த பிரசார கூட்டத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். அப்போது சீமான் கூறியதாவது:-

ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு ஒரு வாக்குக்கு ரூ.3 ஆயிரம் கொடுக்க தி.மு.க முடிவு செய்துள்ளதாக தகவல் வந்துள்ளது.

வாக்கினை தி.மு.க.விற்கு செலுத்தி அதனை புகைப்படம் எடுத்து வந்து காட்டினால் தான் பணம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

தமிழகத்தில் நல்ல ஆட்சி நடக்கிறது என்று மக்கள் சொல்ல வேண்டும். ஆனால் முதலமைச்சர் தனக்குத்தானே நல்லாட்சி நடப்பதாக சான்று கொடுக்கிறார்.

நல்லாட்சி நடக்கிறது என்றால், ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்கிற்கு எதற்கு பணம் கொடுக்க வேண்டும்? முதலமைச்சர், அமைச்சர்களைப் பார்க்க மக்கள் தானாக வரவில்லை என்றால், அந்த அளவுக்கு ஆட்சியின் தரம் உள்ளது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

முதலமைச்சர், துணை முதலமைச்சர் கூட்டங்களுக்கு பணம் கொடுத்து கூட்டம் சேர்க்கப்படுகிறது. தி.மு.க.விற்கு வாக்களிக்காவிட்டாலும் பரவாயில்லை, நாம் தமிழருக்கு வாக்களித்து விடாதீர்கள் என்ற பிரசாரம் நடக்கிறது.

தமிழ்தேசம் பேசுவது பிரிவினை வாதம் என்றால் ஆந்திராவில் என்.டி.ராம ராவ் தெலுங்கு தேசம் ஆரம்பித்தபோது ஏன் மவுனமாக இருந்தீர்கள்? ஒவ்வொரு மாநிலத்தவரும் அந்த மாநிலத்தவராக இருக்கும் போது, தமிழர்கள் மட்டும் திராவிடர்களாக சித்தரிக்கப்படுவது ஏன்? திராவிடம் என்பது கட்டுக்கதை.

நம்ப வைத்த போலி கோட்பாடு. திராவிட முன்னேற்றம் என்பது திருடர்கள் முன்னேற்றம் தான். தமிழர் அல்லாதவர் வசதியாக வாழவும், ஆளவும் கொண்டு வரப்பட்ட ஏற்பாடுதான் திராவிடம். இதை சகித்துக் கொள்ள முடியாது. இதனை அம்பலப்படுத்துவதே எங்களின் நோக்கம்.

50 ஆயிரம் ஆண்டுகளுக்கு மூத்த மொழியான தமிழை நாங்கள் தான் செம்மொழி ஆக்கினோம் என்று திராவிடம் கூறுகிறது. உலகின் மூத்த மொழியான தமிழை, அவதூறாகப் பேசியவர் பெரியார். பெரியார் பேசியதை, எழுதியதை நான் எடுத்து பேசுகிறேன். பெரியார் குறித்து நாங்கள் முன் வைக்கும் கேள்விகளுக்கு பதில் இல்லை.

அதற்கு பதிலாக அவதூறுகளை அள்ளி வீசுகின்றனர். அநீதி எந்த வடிவத்தில் வந்தாலும் தமிழர்கள் எதிர்த்து போராடுவார்கள். இது பரம்பரை குணம். தமிழ்நாடு என நாங்கள் தான் பெயர் சூட்டினோம் என்று திராவிடர்கள் பொய் பரப்புகின்றனர். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மறுக்கும் இவர்களால் எப்படி சமூகநீதியை, இட ஒதுக்கீட்டை பெற்றுத் தர முடியும்?

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com