என் மலர்
உள்ளூர் செய்திகள்
- என்.ஐ.ஏ. அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விசாரணை நடத்துவதற்காக தெலுங்கானாவுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
ஆலந்தூர்:
தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் ஜக்ரியா. பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் தீவிரவாத அமைப்பில் இணைந்து செயல்பட்டு வரும் இவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
தெலுங்கானா போலீசாரும், அம்மாநிலத்தில் இயங்கி வரும் என்.ஐ.ஏ. அதிகாரிகளும் ஜக்ரியாவை கண்காணிப்பு வளையத்துக்குள் வைத்திருந்தனர்.
இந்த நிலையில் ஜக்ரியா வெளிமாநிலத்தில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு வருவதாக என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து விமான நிலையத்தில் அவர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது ஜக்ரியா அதிகாரிகள் பிடியில் சிக்கினார். அவரிடம் விசாரணை நடத்துவதற்காக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெலுங்கானாவுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இவரது பின்னணி தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜக்ரியாவின் பாகிஸ்தான் பின்னணி தொடர்பாக நடத்தப்பட்டு வரும் விசாரணையில் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- இன்று காலை குழந்தையின் மூக்கில் இருந்து ரத்தம் வடிந்துள்ளது.
- டாக்டர்கள் உடனடியாக சிகிச்சை அளிக்காமல் காலம் தாழ்த்தியதாக கூறப்படுகிறது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் மானூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் அலெக்ஸ் பாண்டியன். இவர் ராஜஸ்தானில் ராணுவ வீரராக பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கும், டவுன் கண்டியப்பேரி பகுதியை சேர்ந்த சுமதி தேவி என்பவருக்கும் திருமணம் ஆகி 1 மகன் உள்ளார். இந்நிலையில் மீண்டும் கர்ப்பமான சுமதி தேவிக்கு கடந்த 45 நாட்களுக்கு முன்பு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில் நேற்று 45 நாள் ஆனதற்கான தடுப்பூசியை சுமதி தேவி, டவுனில் தொண்டர் மேல தெரு அம்மா உணவகம் அருகே உள்ள பாலர்வாடியில் நடந்த முகாமில் செலுத்தியுள்ளார்.
பின்னர் நேற்று இரவு குழந்தை தூங்கியது. இன்று காலை குழந்தையின் மூக்கில் இருந்து ரத்தம் வடிந்துள்ளது. உடனே ஆம்புலன்ஸ் மூலமாக கண்டியப்பேரி அரசு ஆரம்ப ஆஸ்பத்திரிக்கு குழந்தையை கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு டாக்டர்கள் உடனடியாக சிகிச்சை அளிக்காமல் காலம் தாழ்த்தியதாக கூறப்படுகிறது.
பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக குழந்தையை ஆம்புலன்ஸ் மூலமாக டாக்டர்கள் அனுப்பி வைத்துள்ளனர். அங்குள்ள டாக்டர்கள் குழந்தையை பரிசோதித்த போது வரும் வழியிலேயே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த சுமதி தேவி மற்றும் அவரது உறவினர்கள் ஆஸ்பத்திரி வளாகத்தில் திரண்டனர். கண்டியப்பேரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்காமல் தாமதப்படுத்தியதால் தான் குழந்தை இறந்தது என்று அவர்கள் புகார் கூறி ஆதங்கப்பட்டனர்.
இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் கூறுகையில், இன்று காலை 8.30 மணிக்கு கண்டியப்பேரி அரசு ஆஸ்பத்திரிக்கு குழந்தை சுயநினைவு இல்லாமல் இறந்த நிலையில் தான் வந்தது என்று தெரிவித்தனர்.
மேலும் குழந்தைக்கு தடுப்பூசி போட்டதில் ஏதேனும் பிரச்சனையா? என்பதை சுகாதாரத்துறையினரிடம் தான் கேட்க வேண்டும் என்று கூறி விட்டனர்.
- அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் படிக்கும் மாணவிக்கு பாதுகாப்பு இல்லை.
- தூத்துக்குடி துப்பாக்கி சம்பவத்தில் இரண்டு முறை எம்.பி.யான கனிமொழி என்ன நடவடிக்கை எடுத்தார்.
ஈரோடு:
ஈரோடு பெருமாள் மலைப்பகுதியில் பட்டாவுக்காக போராடும் மக்களை இன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரடியாக சந்தித்து அவர்களது குறைகளை கேட்டு அறிந்தார். பின்னர் நிருபர்களுக்கு சீமான் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நான் பெரியாரை இழிவுபடுத்தவில்லை. பெரியார் என்ன பேசி இருந்தாரோ எழுதியிருந்தாரோ அதை எடுத்து பேசினேன். பெரியாரைப் பற்றி அனைவரும் பேசுகிறார்கள் கனிமொழி உட்பட. பெரியார் என்ன பேசினார்? பெரியார் என்ன எழுதினார் என்று எடுத்துப் பேச உங்களுக்கு யாருக்கும் துணிவு இல்லை. பெரியார் யார் தெரியுமா என்று கேட்கிறீர்கள் தெரியவில்லை சொல்லுங்கள் என்றால் சொல்ல மறுக்கிறீர்கள்.
பெரியாரை தமிழ்நாட்டில் பேரறிஞர் அண்ணா, கருணாநிதி அளவுக்கு யாராவது இழிவு படுத்தி பேசி உள்ளார்களா? பெரியார் எங்கு சாதி ஒழிப்பை நீக்கினார். பெரியார் பற்றி பேச உங்களுக்கு என்ன தகுதி உள்ளது.
பெரியாரை பற்றி பேசும் பெருமக்கள் பெரியார் பேசியது எழுதியதை பேச துணிவில்லை.
கனிமொழி பெரியாரிஸ்டா? கடவுள் மறுப்பிலா? சமூக நீதி, பெண்ணிய உரிமை? திமுக கொடுத்த பெண்ணிய உரிமையை பேச முடியுமா? பெரியார் எங்கு சாதி ஒழிப்பு நிலையம் கட்டியுள்ளார்?
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையென்பதை பெண்ணிய உரிமை நிலை நாட்டிய பெரியாரிய பெருமக்களிடம் கேட்க வேண்டும். அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் படிக்கும் மாணவிக்கு பாதுகாப்பு இல்லை. ஈசிஆர் சாலையில் பயணித்த திமுக கட்சி கொடியுடன் வந்த காரில் குறுக்காட்டி தடுத்துள்ளனர். கேட்டால் இடித்துவிட்டது என பொய் பேசுகின்றனர்.
பொள்ளாச்சியில் கூட்டு பாலியல் வன்கொடுமை விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த நிலையில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.
தூத்துக்குடி துப்பாக்கி சம்பவத்தில் இரண்டு முறை எம்.பி.யான கனிமொழி என்ன நடவடிக்கை எடுத்தார். அருணா ஜெகதீசன் தாக்கல் செய்த அறிக்கைக்கு நடவடிக்கை என்ன?
எம்ஜிஆர் கடைசியில் தனது சொத்தை காது கேளாதோர், வாய் பேச முடியாதவர் அறக்கட்டளைக்கு எழுதி வைத்தார். பெரியார் என்ன செய்தார்?
உங்கள் வீட்டில் கை கட்டி நிற்கிறேனா? கூலி என்கிறாய்?
500 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாக்குகளை பறிக்கிறார் நீதான் கூலி. வாக்கிற்கு பணம் கொடுக்காமல் நின்று காட்டு.
இவ்வாறு அவர் கூறினார்.
- 2-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.
தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
1-ந்தேதி தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
2-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
3-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மாடுகள், செல்லப்பிராணிகளுக்கு மைக்ரோ சிப் பொருத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
- நவீன மாட்டுக்கொட்டகையில் மாடுகளை கட்டிப்போடுவதற்கு நாள் ஒன்றுக்கு 10 ரூபாய் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் 96 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சென்னையில் மாடுகள், செல்லப்பிராணிகளுக்கு மைக்ரோ சிப் பொருத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அரசு கால்நடை மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகளுக்கு வரும் கால்நடைகள், செல்லப்பிராணிகளுக்கு மைக்ரோ சிப் பொருத்த முடிவு செய்யப்பட்டது.
மேலும் சென்னை மாநகராட்சி பகுதிகளில் மாடுகள் சுற்றித்திரிவதை கட்டுப்படுத்த நவீன மாட்டுக்கொட்டகை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக மண்டலம் 5 பேசின் பாலம் சாலையில் 100 மாடுகள் தங்க வைக்கும் அளவிற்கு 7,700 சதுர அடி பரப்பளவில் நவீன மாட்டு கொட்டகை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மாட்டு கொட்டகை அமைப்பதில் சென்னை மாநகராட்சி, மாட்டின் உரிமையாளர்கள் மற்றும் கால்நடை வளர்ப்போர் சங்கங்களின் பங்களிப்புகளும் பொறுப்புகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
நவீன மாட்டுக்கொட்டகையில் மாடுகளை கட்டிப்போடுவதற்கு நாள் ஒன்றுக்கு 10 ரூபாய் வசூலிக்கவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
- 10 நிலைகளில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது.
- வீட்டு வாடகைப்படி மற்றும் நகர ஈட்டுப்படியையும் உயர்த்தி வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை:
கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்களுக்கு தோராயமாக 15 சதவீதம் வரை ஊதிய உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கோ-ஆப்டெக்சில் பணிபுரியும் அலுவலக உதவியாளர்கள் முதல் தலைமை பொது மேலாளர் வரை 10 நிலைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கான ஊதிய விகிதங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
அதன்படி 10 நிலைகளில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது. வீட்டு வாடகைப்படி மற்றும் நகர ஈட்டுப்படியையும் உயர்த்தி வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
- உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மறு ஆய்வு மனுத் தாக்கல் செய்ய வேண்டும்.
- இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 15-ம் பிரிவில் உரிய திருத்தங்களை மேற்கொள்வதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கைகையில் கூறியிருப்பதாவது:-
மருத்துவ மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் வசிப்பிட அடிப்படையிலான ஒதுக்கீடுகள் எதுவும் கூடாது என்றும், இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் சேர்ந்தவர்களுக்கும் இடம் அளிக்கப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. தமிழ்நாடு போன்ற வலுவான மருத்துவக் கல்வி கட்டமைப்பு கொண்ட மாநிலங்களின் மருத்துவக்கல்வி மாணவர் சேர்க்கை இடங்களை பிற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு தாரை வார்க்க இந்த சட்டம் வழிவகை செய்யும். இது மாநில உரிமைகளுக்கு எதிரானது.
உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மறு ஆய்வு மனுத் தாக்கல் செய்ய வேண்டும். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கையில் மாநிலங்களின் உரிமைகளைக் காக்கும் வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 15-ம் பிரிவில் உரிய திருத்தங்களை மேற்கொள்வதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் மருத்துவக் கட்டமைப்பு அதிகமாக உள்ளது.
- சட்ட ரீதியான ஆலோசனை நடத்தி, தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்.
சென்னை தலைமை செயலகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* முதுநிலை மருத்துவ படிப்புகளில் மாநில அரசுக்கென தனி ஒதுக்கீடு கூடாது என்ற உத்தரவு மாநில உரிமைகளுக்கு எதிரானது.
* இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் மருத்துவக் கட்டமைப்பு அதிகமாக உள்ளது.
* 1200-க்கும் மேற்பட்ட மருத்துவ மேற்படிப்பு இடங்கள் பறிபோகும் அபாயம்.
* சட்ட ரீதியான ஆலோசனை நடத்தி, தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்.
* மருத்துவப்படிப்பிற்கான மாணவர் இட ஒதுக்கீடு ரத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை நாடுவோம் என்று கூறினார்.
- குழந்தைகள், பள்ளி மாணவ-மாணவிகளுடன் அமர்ந்து சாலை மறியல் போராட்டம்.
- அ.தி.மு.க. வினரும் மறியலில் பங்கேற்றனர்.
திருமங்கலம்:
மதுரை மாவட்டம் திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் நான்கு வழிச்சாலை அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டு தற்போது திருமங்கலம்-ராஜபாளையம் சாலையில் பணிகள் நடைபெற்று வருகிறது.
அதில் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ஆலம்பட்டி கிராமத்தில் சாலையின் ஒரு புறம் அரசு பள்ளிக்கூடம், ரேஷன் கடை மற்றும் கூட்டுறவு கடன் சங்கம் அரசுடமையாக்கப்பட்ட வங்கி செயல்பட்டு வருகிறது.
மறுபுறத்தில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இதனால் பள்ளி செல்லும் குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள் சாலையை கடந்து செல்லும்போது அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. 20-க்கும் மேற்பட்டோர் தற்போது வரை காயம் அடைந்து உள்ளனர்.
எனவே சாலையை கடப்பதற்கு கிராமத்தில் சுரங்கப்பாதை ஏற்படுத்திக் கொடுத்து அதன் பின்னர் நான்கு வழிச்சாலை பணியை தொடங்க வேண்டும் என கிராம மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் குடியரசு தினத்தன்று நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தையும் புறக்கணித்தனர்.
அதன் பிறகும் அதிகாரிகள் எந்த உத்தரவாதமும் அளிக்காததால் கிராம மக்கள் 300-க்கும் மேற்பட்டோர் இன்று திருமங்கலம்-ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் குழந்தைகள், பள்ளி மாணவ-மாணவிகளுடன் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து தங்களுக்கு சுரங்கப்பாதை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை விடுத்து கோசங்கள் எழுப்பினர். தங்களுக்கு உரிய முடிவு கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என கிராம மக்கள் தெரிவித்தனர்.
இதனிடையே பொது மக்களின் சாலை மறியல் குறித்து தகவலறிந்த சட்ட மன்ற எதிர்க்கட்சி துணை தலைவரும், தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஆர்.பி. உதயகுமார் சம்பவ இடத்திற்கு வந்தார். அப்போது பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என கூறி அவரும், அ.தி.மு.க. வினரும் மறியலில் பங்கேற்றனர்.
4 மணிநேரத்துக்கும் மேலாக சாலைமறியல் போராட்டம் நடைபெற்று வருவதால் திருமங்கலம்-ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
இருபுறமும் வாகனங்கள் நீண்ட தூரத்துக்கு அணி வகுத்து நின்றன. இதனால் வெளியூர் செல்வோர், தொழிலாளிகள் என பல தரப்பினர் அவதி அடைந்தனர். மறியல் காரணமாக மாற்றுப் பாதையில் வாகனங்கள் திருப்பிவிடப்பட்டன.
போராட்டம் குறித்து ஆர்.பி.உதயகுமார் கூறுகையில், திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் தற்போது நான்கு வழிச்சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. மற்ற ஊர்களில் எல்லாம் நான்கு வழிச்சாலை புறவழிச்சாலையாக கொண்டு செல்லப்படுகிறது.
ஆனால் ஆலம்பட்டி கிராமத்தில் மட்டும் ஊருக்குள்ளே நான்கு வழி சாலை அமைவதால் நான்கு வழிச்சாலைக்காக இடம் கொடுத்தவர்கள், கிராம மக்கள் அனைவரும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.
சாலையின் ஒரு புறம் குடியிருப்புகளும் மறுபுறம் பள்ளிக்கூடம், ரேஷன் கடை உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கான அலுவலகங்கள் இருப்பதால் சாலையை கடந்து செல்லும்போது விபத்து ஏற்படக்கூடிய சூழல் உருவாகி உள்ளது.
எனவே சாலையை கடக்க சுரங்கப்பாதை வசதி ஏற்படுத்திக் கொடுத்துவிட்டு பணியை தொடர வேண்டுமென கோரிக்கை வைத்து வருகின்றனர். கலெக்டர் உள்ளிட்டவர்களிடம் கோரிக்கை மனு அளித்தும் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கிராம மக்கள் இன்று சாலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நானும் அவர்களோடு அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன். பொதுமக்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்றார்.
சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் அதிகாரிகள், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் உடன்பாடு ஏற்படவில்லை. நேரம் ஆகஆக அதிக அளவில் கூட்டம் கூடியது. இதையடுத்து போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் கலைந்து செல்லுமாறு எச்சரித்தனர். ஆனால் அவர்கள் மறுத்து விட்டனர்.
இதையடுத்து 50-க்கும் மேற்பட்ட போலீசார், ஆர்.பி.உதயகுமார் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் என 100-க்கும் மேற்பட்டோரை கைது செய்து குண்டுகட்டாக தூக்கி வேனில்ஏற்றினர். மேலும் மறியலில் ஈடுபட்ட பெண்கள், மாணவ-மாணவிகளை வலுக்கட்டாயமாக இழுத்து போலீசார் அப்புறப்படுத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
அப்போது போலீசாரும், பொதுமக்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக நடந்த மறியல் போராட்டம் போலீசாரின் கைது நடவடிக்கைக்கு பின் முடிவுக்கு வந்தது.
- மாணவர்களிடம் கலந்துரையாடிய அமைச்சர் தங்கம் தென்னரசு, அவர்களது பெயர், ஊர், பள்ளி வகுப்பு விவரங்களை கேட்டறிந்தார்.
- சிறுவனின் தோளில் கை போட்டவாறு சிறிது தூரம் நடந்து வந்து நன்றாக படிக்க வேண்டும் என அமைச்சர் அறிவுறுத்தினார்.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகேயுள்ள பி.புதுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் புதியதாக ஆய்வக கட்டிடம் கட்டும் பணிகளை தமிழ்நாடு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பள்ளி மாணவிகளின் கையால் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து, மாணவர்களிடம் கலந்துரையாடிய அமைச்சர் தங்கம் தென்னரசு, அவர்களது பெயர், ஊர், பள்ளி வகுப்பு விவரங்களை கேட்டறிந்தார். அப்போது ஆத்திகுளத்தைச் சேர்ந்த சக்திகாளியம்மன் என்ற மாணவியிடம் பேசிய அமைச்சர் பள்ளிக்கு எவ்வாறு வருகிறார் என்பது குறித்து உரையாடினார். அவரது அருகில் வந்த சிறுவன் அன்புக்கரசு, 'நானும் ஆத்திகுளத்தில் இருந்து நடந்து தான் சார் பள்ளிக்கு வரேன் பஸ் வரவில்லை' என்று தெரிவித்தார்.
அந்த சிறுவனின் பெயரை கேட்ட அமைச்சர் அன்புக்கரசு என்று சொன்னவுடன், 'உன்னுடைய அன்புக்கு கட்டுப்பட்டு உங்க ஊருக்கு பஸ் விடுறேன். முதல் பஸ் விட்டதும் உன்னை தான் முதலில் ஏற்றி விடுவோம்' என்று கலகலப்பாக பேசினார்.
பின்னர், சிறுவனின் தோளில் கை போட்டவாறு சிறிது தூரம் நடந்து வந்து நன்றாக படிக்க வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவுறுத்தினார். அதேபோல், அருகில் இருந்த மாணவி ஒருவர் கைகளை கட்டிக்கொண்டு பேசியதை பார்த்த அமைச்சர், கையை கட்ட வேண்டாம் எனக்கூறி இயல்பாக உரையாடினார்.
- உச்சநீதிமன்றம் தெரிவித்த கருத்து வரவேற்புக்குரியது மட்டுமல்ல கொண்டாடப்பட வேண்டிய ஒன்றாகும்
- எங்களது நிலைப்பாடு புதிய அணை மற்றும் கேரளாவின் பாதுகாப்பும், தமிழகத்துக்கு தண்ணீர் வேண்டும் என்பதுதான்.
கூடலூர்:
முல்லைப்பெரியாறு அணையின் பிரதான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில் அணையின் நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்க வேண்டும் என்றும், அணையின் பாதுகாப்பு குறித்து கேரளாவைச் சேர்ந்த ஜோசப் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கின் விசாரணை குறித்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், முல்லைப்பெரியாறு அணை உறுதியாக உள்ளது. அணையின் வயது 130 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் எத்தனையோ பருவ மாற்றங்களை கண்டும் இன்னும் உறுதியாகவே உள்ளது.
அணை உடைந்து விடும் என தெரிவித்து வருவது காமிக்ஸ் கதைகளைப் போல கற்பனையாக உள்ளது என்று தெரிவித்தனர். இத்தனை ஆண்டுகள் கடந்தும் அணை பலமாக இருப்பதற்கு இதனை கட்டிய பொறியாளர்களுக்கு நாம் நன்றி கூற வேண்டும் என்றும் தெரிவித்திருந்தனர்.
இதற்கு 5 மாவட்ட தமிழக விவசாய சங்கத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் கூறியதாவது:-
உச்சநீதிமன்றம் தெரிவித்த கருத்து வரவேற்புக்குரியது மட்டுமல்ல கொண்டாடப்பட வேண்டிய ஒன்றாகும். தமிழகத்தில் உள்ள 5 மாவட்ட மக்களின் மனங்களில் உள்ளதை உள்ளபடியே பிரதிபலிக்கும் நீதியரசர்களுக்கு நன்றிகள். போர்க்கால அடிப்படையில் அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதற்கும் தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றார்.
இதுகுறித்து கேரள மாநிலம் இடுக்கி எம்.பி. சூர்யகோஸ் தெரிவிக்கையில் 2022 ஏப்ரல் மாதம் சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தபடி தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்துக்குதான் அணை குறித்தான அனைத்து விஷயங்களும் கொண்டுவரப்பட வேண்டும். உச்சநீதிமன்ற நீதிபதியின் கூற்று பெரியாறு அணையை ஆய்வு நடத்தி அறிவித்தது அல்ல. அணை குறித்து நீதிமன்றத்தின் கூற்று ஏற்கத்தக்கதல்ல. இது வரை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழகத்துக்கு சாதகமாக உள்ளது. எங்களது நிலைப்பாடு புதிய அணை மற்றும் கேரளாவின் பாதுகாப்பும், தமிழகத்துக்கு தண்ணீர் வேண்டும் என்பதுதான் என்றார்.
- உதயநிதி ஸ்டாலின் கடந்த 28-ந்தேதி கொடியேற்றி தொடங்கி வைத்தார்.
- சாரணர்கள் கம்பீரமாக அணி வகுத்து மரியாதை செய்தனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை சிப்காட் வளாகத்தில் பாரத சாரண - சாரணியர் இயக்க வைரவிழா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு பெருந்திரளணி விழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 28-ந்தேதி கொடியேற்றி தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழா வரலாற்று சிறப்பு புகைப்பட கண்காட்சியையும் உதயநிதி ஸ்டாலின் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.

அதன்பிறகு இலங்கை, மலேஷியா, சவுதி அரேபியா, நேபால், மற்றும் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநில பாரத சாரண - சாரணியர் கம்பீரமாக அணி வகுத்து மரியாதை செய்தனர்.
சாரணியர் இயக்க வைரவிழாவின் இரண்டாம் நாளான நேற்று தமிழ்நாடு பாரத சாரண - சாரணியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு தங்கள் கலாச்சாரம், பண்பாடு குறித்த செயல்பாடுகளை நிகழ்த்தி காட்டும் வகையில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.






