என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தமிழக மக்கள் தங்களின் தேவைக்காகவும், நலனுக்காகவும் வீதியில் இறங்கி போராடக்கூடிய அவலம்.
    • மக்களின் குறைகளைத் தீர்ப்பதற்கு பதிலாக, அவர்கள் மீது அடக்குமுறையை ஏவி விடுவதை இந்த அரசு வாடிக்கையாகக் கொண்டுள்ளது.

    மக்கள் பிரச்சனைக்காக போராடிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் பொதுமக்களை கைது செய்ததாக திமுக அரசைக் கண்டித்து எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மக்களின் பிரச்சனைக்காக அறவழியில் போராடிய முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஆர்.பி உதயகுமார், பொதுமக்களையும் கைது செய்துள்ள விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசுக்கு கண்டனம்.

    கடந்த 44 மாதகால விடியா திமுக ஸ்டாலின் மாடல் ஆட்சியில், தமிழக மக்கள் தங்களின் தேவைக்காகவும், நலனுக்காகவும் வீதியில் இறங்கி போராடக்கூடிய அவலம் நாள்தோறும் அரங்கேறி வருகிறது.

    மக்களின் குறைகளைத் தீர்ப்பதற்கு பதிலாக, அவர்கள் மீது அடக்குமுறையை ஏவி விடுவதை இந்த அரசு வாடிக்கையாகக் கொண்டுள்ளது. மக்களின் நலனை முன்னெடுத்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினால், அவர்களைக் கைது செய்யும் போக்கு தொடர்கிறது.

    மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் இருந்து ராஜபாளையம் வழியாக கொல்லம் வரை செல்லும் நான்கு வழிச் சாலை, திருமங்கலம் அருகே ஆலம்பட்டி வழியாகவும், தே. கல்லுப்பட்டி வழியாகவும் செல்கிறது.

    ஆலம்பட்டி நான்கு வழிச் சாலையில், சேடபட்டி விலக்கு பகுதியில் இருந்து ஆலம்பட்டி வரை, சாலை மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இப்பாலத்திற்குக் கீழ் சுரங்கப் பாதை அமைக்கப்படாததன் காரணமாக, மக்கள் சாலையை கடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பாலத்திற்குக் கீழ் சுரங்கப் பாதை அமைக்கக் கோரி அப்பகுதி மக்கள் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளுக்கும், விடியா திமுக அரசின் ஸ்டாலின் மாடல் அரசுக்கும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.

    அதன் தொடர்ச்சியாக, திருமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி உதயகுமார் அவர்கள், இக்கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார்.

    அதேபோல், மதுரை ராஜபாளையம் நான்கு வழிச் சாலையில் தே. கல்லுப்பட்டி காவேட்நாய்க்கன்பட்டி விலக்கில் மேம்பாலம் அல்லது தடுப்புடன் கூடிய (பேரிகார்டு) சிக்னல் அல்லது அணுகுசாலை அல்லது சுரங்கப் பாதை அமைத்துக் கொடுக்கக் கோரியும், மதுரை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு கடந்த ஆண்டு இப்பகுதி மக்கள் மனு அளித்துள்ளனர்.

    விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசோ, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளோ, இதுவரை இப்பிரச்சனைக்கு தீர்வுகாண எந்தவித நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்து இன்று (30.1.2025) காலை, முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அவர்கள் மக்களோடு மக்களாக கவன ஈர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

    மக்களின் தன்னெழுச்சிக்கு பதில் அளிக்க இயலாத இந்த அரசின் ஏவல் துறையான காவல் துறை அடக்குமுறையை கட்டவிழ்த்து, அனைவரையும் கைது செய்துள்ளதற்கு, எனது கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், மக்களின் பிரச்சனைகளுக்காகத் தொடர்ந்து போராடும். போராடும் மக்களின் கோரிக்கைகளுக்குத் தீர்வு காணாமல், போராடுபவர்களைக் கைது செய்யும் விடியா திமுக அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சர்வாதிகாரப் போக்கிற்கு மக்கள் விரைவில் முற்றுப் புள்ளி வைப்பார்கள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பொங்கல் வைத்து குடும்பத்துடன் வழிபடுவார்கள்.
    • குழிக்குள் வைத்து மூடப்படுவதால் அம்மனுக்கு 'மூடி அம்மன்' என்று பெயர்.

    பல்லடம்:

    இறைவனை வழிபடுவதில் பல்வேறு விதமான பழக்க வழக்கங்கள் இருந்து வருகிறது. இதில் நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக தீ மிதித்தல், முடி காணிக்கை, எடைக்கு எடை துலாபாரம் கொடுத்தல் உள்ளிட்ட பல்வேறு விதமான வழிபாடுகள் உள்ளது.

    அந்த வகையில், திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த முழுக்காதான் குலத்தை சேர்ந்தவர்கள், குழி அமைத்து அதில் அம்மன் சாமியை வைத்து மூடி அம்மன் என்று வழிபாடு செய்து வருகின்றனர்.

    அதன்படி பல்லடம் அருகே உள்ள கோடங்கிபாளையம் ஊராட்சி சங்கோதிபாளையத்தில் மூடி அம்மன் வழிபாடு நடைபெற்றது. இதுகுறித்து முழுக்காதான் குலத்தைச் சேர்ந்தவர்கள் கூறியதாவது:-

    எங்கள் குல குழந்தைகளின் காதணி விழாவுக்கு சுமார் 3 நாட்கள் முன்பாக மூடி அம்மனை வழிபடுவது வழக்கம். காதணி விழா குடும்பத்தினர், குழிக்குள் உள்ள மூடி அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் செய்து பழம், பூ , தேங்காய், வெற்றிலை, பாக்கு ஆகியவற்றுடன் பொங்கல் வைத்து குடும்பத்துடன் வழிபடுவார்கள்.

    மூடி அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்ட பின் அனைவருக்கும் பிரசாதம் வழங்கி, வழக்கம்போல் குழி மூடப்படும். இந்த விழாவானது அம்மனிடம் உத்தரவு கேட்கப்படும் நிகழ்வு.

    இதுபோல் அம்மனிடம் உத்தரவு கேட்டு குடும்ப விழாக்கள் செய்தால் அவை எந்த இடர்பாடும் இன்றி நல்லபடியாக நடக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. இதுகாலம் காலமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மூடி அம்மனை வழிபட்ட பின்னர் நவ தானியங்கள் வைத்து வழிபாடு செய்து குழியை மூடி விடுவார்கள்.

    பின்னர் வேறு ஏதேனும் திருமணம், காதணி விழா உள்ளிட்ட விழா செய்யும் குடும்பத்தினர் மூடி அம்மனிடம் உத்தரவு கேட்பதற்காக மீண்டும் வழிபாடு நடக்கும். அதுவரை மூடி அம்மன் குழிக்குள் இருப்பார். குழிக்குள் வைத்து மூடப்படுவதால் அம்மனுக்கு 'மூடி அம்மன்' என்று பெயர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • விநாயகர் சதுர்த்தியைப் போல காணும் பொங்கல் பண்டிகைக்கும் விதிமுறைகளை வகுக்க வேண்டும்.
    • காணும் பொங்கல் பண்டிகைக்கு ஒன்று கூடுவது தான் நம் கலாச்சாரம்.

    சென்னை:

    காணும் பொங்கல் தினத்தில் மெரினாவில் திரண்ட மக்களால் கடற்கரை குப்பை கூளமான விவகாரம் தொடர்பாக தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

    காணும் பொங்கலுக்கு திரளும் மக்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் போலீசார் நியமிக்கப்பட்டு, அறிவிப்புகள் அறிவிக்கப்படுவதைப் போல், குப்பை போட்டால் அபராதம் விதிக்கப்படும் என ஏன் அறிவிப்புகள் வெளியிடக் கூடாது எனக் கேள்வி எழுப்பிய தீர்ப்பாயம், விநாயகர் சதுர்த்தியைப் போல காணும் பொங்கல் பண்டிகைக்கும் விதிமுறைகளை வகுக்க வேண்டும் என அறிவுறுத்தியது.

    மேலும், காணும் பொங்கல் பண்டிகைக்கு ஒன்று கூடுவது தான் கலாச்சாரமே தவிர குப்பை போடுவது கலாச்சாரம் அல்ல எனத் தெரிவித்த தீர்ப்பாயம், இந்த விஷயத்தில் தமிழக அரசு முன் மாதிரியாக செயல்பட வேண்டும் எனக் கூறி, வழக்கு தொடர்பாக விரிவான அறிக்கையை தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கும் உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 5-ந் தேதிக்கு தள்ளி வைத்தது.

    • பல்வேறு விழாக்களில் கலந்து கொள்ள துணை ஜனாதிபதி நாளை சென்னை வருகிறார்.
    • விவிஐபி பயணிக்கும் வழித்தடங்கள் சிவப்பு மண்டலமாக காவல்துறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை அருகே நடக்கும் விழாக்களில் கலந்து கொள்ள 31ம் தேதி துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் சென்னை வருகிறார்.

    அதன்படி, சென்னை வரும் ஜனாதிபதி ஜகதீப் தன்கர் முட்டுக்காடு, மாமல்லபுரத்தில் நடக்கும் விழாக்களில் கலந்துக் கொள்ள உள்ளார்.

    துணை ஜனாதிபதி வருகையால், நாளை சென்னை விமான நிலையம், ராஜ் பவன் மற்றும் விவிஐபி பயணிக்கும் வழித்தடங்கள் சிவப்பு மண்டலமாக காவல்துறை அறிவித்துள்ளது.

    • இவர்கள் மீது பல்வேறு காரணங்கள் குற்றச்சாட்டுகளாக வைக்கப்பட்டதால் இடமாற்றம் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
    • 8 கவுன்சிலர்களும், இனி தவறு செய்ய மாட்டோம் என்று விளக்கம் எழுதி அனுப்பி இருந்தனர்.

    சென்னை:

    சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் அதிகாரிகள் இதுவரை சென்னைக்குள் மட்டுமே இடமாற்றம் செய்யப்பட்டு வந்தனர்.

    கடந்த ஆண்டு சட்டமன்ற கூட்டத்தொடரின் போது மாநகராட்சிகளின் சட்டத்திட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி குற்றச்சாட்டுக்கு ஆளாகும் அதிகாரிகள் தமிழ்நாட்டின் எந்த ஒரு மாநகராட்சிக்கும், நகராட்சிக்கும் மாற்றுவதற்கு அதில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இப்போது சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் 11 அதிகாரிகள் திருநெல்வேலி, தென்காசி, கோவை, கடலூர் மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

    இவர்கள் மீது பல்வேறு காரணங்கள் குற்றச்சாட்டுகளாக வைக்கப்பட்டதால் இடமாற்றம் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பணியிட மாற்றம் செய்யப்பட்டவர்களில் உதவி செயற் பொறியாளர்கள், உதவிப் பொறியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் விக்கிரமசிங்கபுரம், புளியங்குடி, அகிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, வால்பாறை ஆகிய ஊர்களில் உள்ள நகராட்சிக்கு மாற்றப்பட்டு உள்ளனர்.

    ஏற்கனவே ஊழல் புகார் காரணமாக சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் 8 பேர் மீது நடவடிக்கை மேற்கொள்ள நகராட்சி நிர்வாக துறை நோட்டீசு அனுப்பியிருந்தது. அதற்கு 8 கவுன்சிலர்களும், இனி தவறு செய்ய மாட்டோம் என்று விளக்கம் எழுதி அனுப்பி இருந்தனர். அதன் மீது அரசு இன்னும் முடிவெடுக்காமல் கோப்புகளை நிலுவையில் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • அ.தி.மு.க. ஒரு பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும்நிலையில் கூட இதுதொடர்பாக பேசுவதில்லை.
    • யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறை மெத்தனம் காட்டக்கூடாது.

    சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    வக்பு வாரிய திருத்த சட்ட மசோதா அரசியலமைப்பு சட்ட மரபுகளுக்கே எதிரானதாக இருக்கிறது. ஆகவே தான் அனைத்து எதிர்க்கட்சிகளும் அதனை அறிமுகப்படுத்துகிறபோது கடுமையாக எதிர்ப்புகளை முன்வைத்தோம்.

    அதன் அடிப்படையில் பாராளுமன்ற கூட்டு நடவடிக்கை குழு அமைக்கப்பட்டது. ஆனால் எதிர்க்கட்சியை சார்ந்த தலைவர்களை முறையாக பேச அனுமதிக்கவில்லை. அவர்கள் கருத்துக்களை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. பலமுறை அவர்களை அந்த கூட்டத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றி இருக்கிறார்கள்.

    மீண்டும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு நிறைவேற்றுவதற்கு பா.ஜ.க. அரசு முயற்சிக்கிறது.

    அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான ஒரு அரசு பா.ஜ.க. அரசு என்பதை உறுதிபடுத்தும் விதத்தில் இந்த விவகாரத்தில் அவர்கள் நடந்து கொள்கிறார்கள்.

    இந்த போக்கை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. அ.தி.மு.க. ஒரு பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும்நிலையில் கூட இதுதொடர்பாக பேசுவதில்லை.

    சென்னை ஈ.சி.ஆர். சாலையில் காரில் சென்ற பெண்களை, வேறொரு காரில் சென்றவர்கள் துரத்திச் சென்ற விவகாரம் குறித்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய தீவிரமான நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    அவ்வாறு குற்றச்செயல்களை ஈடுபட்டவர்கள் வண்டியில் கட்சி கொடி கட்டி இருப்பதால் அதற்கு கட்சி பொறுப்பாக முடியாது. யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறை மெத்தனம் காட்டக்கூடாது. அவர்கள் மீதான நடவடிக்கை உறுதிப்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன் என்று கூறினார்.

    • அனைத்து கட்சிகள் ஆதரவுடன் டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
    • விழா ஏற்பாடுகளை மதுரை பா.ஜ.க. நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அரிட்டாபட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஏல அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.

    தமிழக சட்ட சபையிலும் அனைத்து கட்சிகள் ஆதரவுடன் டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

    இதையடுத்து மத்திய அமைச்சர் டங்ஸ்டன் கனிம சுரங்க திட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்தார். அதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. இந்த முடிவுக்கு அரிட்டாபட்டி உள்ளிட்ட 48 கிராம மக்கள் வரவேற்றனர்.

    டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த வாரம் அரிட்டாபட்டியில் பாராட்டு விழா நடத்தினர். அரிட்டாபட்டி உள்ளிட்ட கிராம மக்களின் போராட்டத்திற்கு ஆதரவளித்த அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சென்னையில் சந்தித்து போராட்டக்குழுவினர் நன்றி தெரிவித்தனர்.

    இந்த நிலையில் டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்த மத்திய மந்திரி கிஷன் ரெட்டிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அரிட்டாபட்டி மற்றும் வல்லாளப்பட்டியில் கிராம மக்கள் சார்பில் பாராட்டு விழா இன்று (30-ந்தேதி) மாலை நடைபெறுகிறது.

    இதற்காக மத்திய மந்திரி கிஷன் ரெட்டி, பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் விமானம் மூலம் மதுரைக்கு பிற்பகலில் வருகின்றனர்.

    தொடர்ந்து அரிட்டாபட்டிக்கு செல்லும் அவர்களுக்கு மாலையில் பாராட்டு விழா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை மதுரை மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    • முனீஸ்வரன் கோவிலில் முனீஸ்வரன், முனியம்மாள் என இரண்டு தெய்வங்கள் உள்ளன.
    • பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்திய 20-க்கும் மேற்பட்ட கிடாய்கள் 50-க்கும் மேற்பட்ட கோழிகள் வெட்டப்பட்டன.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் சோழவந்தான் ரோடு மொக்கையன் அம்பலம் நகரில் முனீஸ்வரன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலை பெண் பக்தர்களே பராமரித்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தில் வரும் அமாவசையன்று இங்கு கிடாவெட்டு மற்றும் அசைவ அன்னதானம் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    நேற்று தை அமாவாசையை முன்னிட்டு அதிகாலை கோவிலில் சர்க்கரை பொங்கல் வைத்து சுவாமிக்கு படைக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் நேர்த்திக்கடனாக கோவிலுக்கு செலுத்திய ஆட்டு கிடாய்கள் மற்றும் சேவல்கள் முனீஸ்வரனுக்கு பலியிடப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    அப்போது ஏராளமான ஆண், பெண் பக்தர்கள் சாமியாடினர். முதலில் சக்தி கிடாயும், பின்னர் பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்திய 20-க்கும் மேற்பட்ட கிடாய்கள் 50-க்கும் மேற்பட்ட கோழிகள் வெட்டப்பட்டன. அவற்றை கொண்டு அசைவ அன்னதானம் தயாரிக்கப்பட்டது. தொடர்ந்து கோவிலில் முன்பு வரிசையில் பக்தர்கள் அமரவைக்கப்பட்டு அசைவ அன்னதானம் வழங்கப்பட்டது.

    இது குறித்து பக்தர்கள் கூறுகையில், மொக்கையன் அம்பலம் நகரில் எழுந்தருளியுள்ள முனீஸ்வரன் கோவிலில் முனீஸ்வரன், முனியம்மாள் என இரண்டு தெய்வங்கள் உள்ளன. பெண்களே இந்த கோவிலை நிர்வகித்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் தை அமாவசையன்று முனீஸ்வரன், முனியம்மாள் ஆகியோருக்கு படையல் வைத்து கிடாய் வெட்டி பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றி வருகின்றனர். இதே போல் இந்தாண்டு இந்த திருவிழா நேற்று நடைபெற்றது.

    திருமங்கலம் நகர் மட்டுமின்றி சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது நினைத்த காரியத்தை வேண்டி வழிபட்டனர். இதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை சுவாமிகளுக்கு செலுத்திய ஆடுகள் மற்றும் கோழிகளை வைத்து முதலில் சாமிக்கு படைத்த பின்பு திருமங்கலம், உசிலம்பட்டி, திருப்பரங்குன்றம், கள்ளிக்குடி, கல்லுப்பட்டி உள்ளிட்ட பகுதியிலிருந்து வந்த பக்தர்களுக்கு அசைவ உணவு விருந்து அளிக்கப்பட்டது.

    பெண்கள் மட்டுமே முனீஸ்வரர் கோவிலில் நிர்வாகித்து வரும் இந்த அசைவ திருவிழா அப்பகுதியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

    • இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.
    • கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர் வைத்துக்கொள்ளக் கூடாது.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் மேற்கு ஒன்றியம் கழகத்தின் கொள்கை- குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும் கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டாலும் கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பொன்னம்பலம் குன்றத்தூர் மேற்கு ஒன்றிய எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.

    கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்.

    • காந்தி மண்டபம் கிண்டி தேசிய உயிரியல் பூங்காவை ஒட்டியுள்ள ஒரு பரந்த நிலத்தில் 1956-ஆம் ஆண்டு கே. காமராஜர் அவர்களால் கட்டப்பட்ட பிரம்மாண்டமான நினைவுச்சின்னமாகும்.
    • காந்திஜி தனது வாழ்நாளில் திராவிட சித்தாந்தத்தைப் பின்பற்றுபவர்களால் கடுமையாக எதிர்க்கப்பட்டு கேலி செய்யப்பட்டார்.

    தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    "காந்தி மண்டபம், சென்னை கிண்டி தேசிய உயிரியல் பூங்காவை ஒட்டியுள்ள ஒரு பரந்த நிலத்தில் 1956 -ஆம் ஆண்டு கே. காமராஜர் அவர்களால் கட்டப்பட்ட பிரம்மாண்டமான நினைவுச்சின்னமாகும்.

    காந்தி நினைவு நிகழ்வுகளை - அவரது பிறந்தநாள் மற்றும் உயிர்த்தியாக தினத்தை - நகர அருங்காட்சியகத்தின் ஒரு மூலையில் நடத்துவதில் ஏதேனும் அர்த்தமுள்ளதா? தேசப்பிதாவுக்கு உரிய மரியாதை செலுத்தவும், அத்தகைய நிகழ்வுகளை காந்தி மண்டபத்தில் தகுந்த முறையில் நடத்தவும் முதலமைச்சரிடம் நான் பலமுறை விடுத்த கோரிக்கைகள் பிடிவாதமான மறுப்பை சந்தித்தன.

    காந்திஜி தனது வாழ்நாளில் திராவிட சித்தாந்தத்தைப் பின்பற்றுபவர்களால் கடுமையாக எதிர்க்கப்பட்டு கேலி செய்யப்பட்டார். ஆனால் இன்றும் அவர் தொடர்ந்து கேலி செய்யப்பட வேண்டுமா?" என்று அரசுக்கு அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

    • இன்ஸ்டன் உலக சாதனை நிறுவனம் அங்கீகரித்து சான்றிதழ் வழங்கியது.
    • சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி வெங்கப்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கம் அடுத்த வெங்கப்பாக்கம் அரசு மேல்நிலை பள்ளியில் 1330 மாணவ, மாணவியர்களை வைத்து திருவள்ளுவர் உருவம் அமைக்க அன்பு அறக்கட்டளை என்ற தனியார் தொண்டு நிறுவனம் முடிவு செய்தது.

    இதையடுத்து 1330 மாணவ மாணவியரை ஒருங்கிணைத்து திருவள்ளுவர் உருவத்தை பள்ளி அருகே திறந்தவெளி மைதானத்தில் வடிவமைத்தது.

    இதனை "இன்ஸ்டன்" உலக சாதனை நிறுவனம் அங்கீகரித்து அதை உலக சாதனை பட்டியலில் சேர்த்து, அரசு பள்ளிக்கு அதற்கான சான்றிதழையும் வழங்கியது.


    அதில் பங்கேற்ற பள்ளி மாணவ-மாணவியருக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி வெங்கப்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சிபுரம் எம்.பி செல்வம் பங்கேற்று சான்றிதழ்களை வழங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை நளினி, முன்னாள் எம்.எல்.ஏ தமிழ்மணி, திருக்கழுக்குன்றம் சேர்மன் அரசு, அறக்கட்டளை தலைவர் பாபு, ஊராட்சி தலைவர் வேண்டாமிர்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • பாதிக்கப்பட்ட சிவன்மலையை சேர்ந்த நூல்மில் உரிமையாளர் செல்வராஜ் என்பவர் காங்கயம் போலீசில் புகார் செய்தார்.
    • தலைமறைவாக உள்ள கஜேந்திரனை போலீசார் தேடி வருகின்றனர்.

    காங்கயம்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயத்தை அடுத்த சிவன்மலை குருகத்தி பகுதியை சேர்ந்தவர் கஜேந்திரன் (வயது 55). நிதி நிறுவன உரிமையாளர். மேலும் கந்து வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலும் செய்து வந்தார். அவர் கொடுக்கும் பணத்திற்கு வட்டிக்கு மேல் வட்டி போட்டு ராக்கெட் வட்டி விகிதத்தில் கடன் வசூலித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

    சிவன்மலையில் வசித்து வரும் பல குடும்பத்தினர் கஜேந்திரனிடம் பணம் பெற்றதாகவும், பணம் பெற்றவர்களிடம் வசூலிக்கும் பணத்தை அசலில் கழிக்காமல் வட்டியில் கழிப்பதாகவும், கடன் பெற்றவர்களை மிரட்டி பத்திரங்களை எழுதியும் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

    இதில் பாதிக்கப்பட்ட சிவன்மலையை சேர்ந்த நூல்மில் உரிமையாளர் செல்வராஜ் என்பவர் காங்கயம் போலீசில் புகார் செய்தார்.

    இதனைதொடர்ந்து காங்கயம் போலீசார் கஜேந்திரன் மீது கந்து வட்டி வழக்குப்பதிவு செய்தனர். மேலும் காங்கயம் துணை போலீஸ் சூப்பிரண்டு மாயவன், இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட கஜேந்திரன் என்பவரது வீட்டிற்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர்.

    இதில் கஜேந்திரன் வீட்டில் இருந்து 73 நிலம், வீடு, தொழில் சார்ந்த பத்திரங்கள், பணம் குறிப்பிடாத வங்கி காசோலை-6, ஆதிதிராவிடருக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டு மனை பட்டாக்கள்-2 மற்றும் வாகன உரிமம் புத்தகம் ஆகியவற்றை அதிரடியாக கைப்பற்றினர். அவற்றின் மதிப்பு ரூ.10 கோடி இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து தலைமறைவாக உள்ள கஜேந்திரனை போலீசார் தேடி வருகின்றனர்.

    ×