நெல்லை டவுனில் பிறந்து 45 நாட்களே ஆன குழந்தை திடீர் மரணம்

இன்று காலை குழந்தையின் மூக்கில் இருந்து ரத்தம் வடிந்துள்ளது. டாக்டர்கள் உடனடியாக சிகிச்சை அளிக்காமல் காலம் தாழ்த்தியதாக கூறப்படுகிறது.
நெல்லை டவுனில் பிறந்து 45 நாட்களே ஆன குழந்தை திடீர் மரணம்
Published on

நெல்லை:

நெல்லை மாவட்டம் மானூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் அலெக்ஸ் பாண்டியன். இவர் ராஜஸ்தானில் ராணுவ வீரராக பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கும், டவுன் கண்டியப்பேரி பகுதியை சேர்ந்த சுமதி தேவி என்பவருக்கும் திருமணம் ஆகி 1 மகன் உள்ளார். இந்நிலையில் மீண்டும் கர்ப்பமான சுமதி தேவிக்கு கடந்த 45 நாட்களுக்கு முன்பு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் நேற்று 45 நாள் ஆனதற்கான தடுப்பூசியை சுமதி தேவி, டவுனில் தொண்டர் மேல தெரு அம்மா உணவகம் அருகே உள்ள பாலர்வாடியில் நடந்த முகாமில் செலுத்தியுள்ளார்.

பின்னர் நேற்று இரவு குழந்தை தூங்கியது. இன்று காலை குழந்தையின் மூக்கில் இருந்து ரத்தம் வடிந்துள்ளது. உடனே ஆம்புலன்ஸ் மூலமாக கண்டியப்பேரி அரசு ஆரம்ப ஆஸ்பத்திரிக்கு குழந்தையை கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு டாக்டர்கள் உடனடியாக சிகிச்சை அளிக்காமல் காலம் தாழ்த்தியதாக கூறப்படுகிறது.

பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக குழந்தையை ஆம்புலன்ஸ் மூலமாக டாக்டர்கள் அனுப்பி வைத்துள்ளனர். அங்குள்ள டாக்டர்கள் குழந்தையை பரிசோதித்த போது வரும் வழியிலேயே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த சுமதி தேவி மற்றும் அவரது உறவினர்கள் ஆஸ்பத்திரி வளாகத்தில் திரண்டனர். கண்டியப்பேரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்காமல் தாமதப்படுத்தியதால் தான் குழந்தை இறந்தது என்று அவர்கள் புகார் கூறி ஆதங்கப்பட்டனர்.

இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் கூறுகையில், இன்று காலை 8.30 மணிக்கு கண்டியப்பேரி அரசு ஆஸ்பத்திரிக்கு குழந்தை சுயநினைவு இல்லாமல் இறந்த நிலையில் தான் வந்தது என்று தெரிவித்தனர்.

மேலும் குழந்தைக்கு தடுப்பூசி போட்டதில் ஏதேனும் பிரச்சனையா? என்பதை சுகாதாரத்துறையினரிடம் தான் கேட்க வேண்டும் என்று கூறி விட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com