திருமங்கலம் அருகே மறியலில் ஈடுபட்ட ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட 100 பேர் கைது

குழந்தைகள், பள்ளி மாணவ-மாணவிகளுடன் அமர்ந்து சாலை மறியல் போராட்டம்.அ.தி.மு.க. வினரும் மறியலில் பங்கேற்றனர்.
திருமங்கலம் அருகே மறியலில் ஈடுபட்ட ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட 100 பேர் கைது
Published on

திருமங்கலம்:

மதுரை மாவட்டம் திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் நான்கு வழிச்சாலை அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டு தற்போது திருமங்கலம்-ராஜபாளையம் சாலையில் பணிகள் நடைபெற்று வருகிறது.

அதில் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ஆலம்பட்டி கிராமத்தில் சாலையின் ஒரு புறம் அரசு பள்ளிக்கூடம், ரேஷன் கடை மற்றும் கூட்டுறவு கடன் சங்கம் அரசுடமையாக்கப்பட்ட வங்கி செயல்பட்டு வருகிறது.

மறுபுறத்தில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இதனால் பள்ளி செல்லும் குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள் சாலையை கடந்து செல்லும்போது அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. 20-க்கும் மேற்பட்டோர் தற்போது வரை காயம் அடைந்து உள்ளனர்.

எனவே சாலையை கடப்பதற்கு கிராமத்தில் சுரங்கப்பாதை ஏற்படுத்திக் கொடுத்து அதன் பின்னர் நான்கு வழிச்சாலை பணியை தொடங்க வேண்டும் என கிராம மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் குடியரசு தினத்தன்று நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தையும் புறக்கணித்தனர்.

அதன் பிறகும் அதிகாரிகள் எந்த உத்தரவாதமும் அளிக்காததால் கிராம மக்கள் 300-க்கும் மேற்பட்டோர் இன்று திருமங்கலம்-ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் குழந்தைகள், பள்ளி மாணவ-மாணவிகளுடன் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்ந்து தங்களுக்கு சுரங்கப்பாதை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை விடுத்து கோசங்கள் எழுப்பினர். தங்களுக்கு உரிய முடிவு கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என கிராம மக்கள் தெரிவித்தனர்.

இதனிடையே பொது மக்களின் சாலை மறியல் குறித்து தகவலறிந்த சட்ட மன்ற எதிர்க்கட்சி துணை தலைவரும், தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஆர்.பி. உதயகுமார் சம்பவ இடத்திற்கு வந்தார். அப்போது பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என கூறி அவரும், அ.தி.மு.க. வினரும் மறியலில் பங்கேற்றனர்.

4 மணிநேரத்துக்கும் மேலாக சாலைமறியல் போராட்டம் நடைபெற்று வருவதால் திருமங்கலம்-ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

இருபுறமும் வாகனங்கள் நீண்ட தூரத்துக்கு அணி வகுத்து நின்றன. இதனால் வெளியூர் செல்வோர், தொழிலாளிகள் என பல தரப்பினர் அவதி அடைந்தனர். மறியல் காரணமாக மாற்றுப் பாதையில் வாகனங்கள் திருப்பிவிடப்பட்டன.

போராட்டம் குறித்து ஆர்.பி.உதயகுமார் கூறுகையில், திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் தற்போது நான்கு வழிச்சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. மற்ற ஊர்களில் எல்லாம் நான்கு வழிச்சாலை புறவழிச்சாலையாக கொண்டு செல்லப்படுகிறது.

ஆனால் ஆலம்பட்டி கிராமத்தில் மட்டும் ஊருக்குள்ளே நான்கு வழி சாலை அமைவதால் நான்கு வழிச்சாலைக்காக இடம் கொடுத்தவர்கள், கிராம மக்கள் அனைவரும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

சாலையின் ஒரு புறம் குடியிருப்புகளும் மறுபுறம் பள்ளிக்கூடம், ரேஷன் கடை உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கான அலுவலகங்கள் இருப்பதால் சாலையை கடந்து செல்லும்போது விபத்து ஏற்படக்கூடிய சூழல் உருவாகி உள்ளது.

எனவே சாலையை கடக்க சுரங்கப்பாதை வசதி ஏற்படுத்திக் கொடுத்துவிட்டு பணியை தொடர வேண்டுமென கோரிக்கை வைத்து வருகின்றனர். கலெக்டர் உள்ளிட்டவர்களிடம் கோரிக்கை மனு அளித்தும் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கிராம மக்கள் இன்று சாலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நானும் அவர்களோடு அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன். பொதுமக்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்றார்.

சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் அதிகாரிகள், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் உடன்பாடு ஏற்படவில்லை. நேரம் ஆகஆக அதிக அளவில் கூட்டம் கூடியது. இதையடுத்து போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் கலைந்து செல்லுமாறு எச்சரித்தனர். ஆனால் அவர்கள் மறுத்து விட்டனர்.

இதையடுத்து 50-க்கும் மேற்பட்ட போலீசார், ஆர்.பி.உதயகுமார் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் என 100-க்கும் மேற்பட்டோரை கைது செய்து குண்டுகட்டாக தூக்கி வேனில்ஏற்றினர். மேலும் மறியலில் ஈடுபட்ட பெண்கள், மாணவ-மாணவிகளை வலுக்கட்டாயமாக இழுத்து போலீசார் அப்புறப்படுத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

அப்போது போலீசாரும், பொதுமக்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக நடந்த மறியல் போராட்டம் போலீசாரின் கைது நடவடிக்கைக்கு பின் முடிவுக்கு வந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com