என் மலர்
உள்ளூர் செய்திகள்
- சிறிது நேரத்தில் தீ மள, மள என்று பரவி கொழுந்து விட்டு எரிந்தது.
- தீ விபத்து குறித்து ஓசூர் அட்கோ போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சுண்ணாம்பு ஜீபி பகுதியை சேர்ந்தவர்கள் சம்பங்கி ராமையா மற்றும் ரமேஷ் பாபு. இவர்கள் உறவினர்கள் ஆவர். இவர்களுக்கு சொந்தமான ஸ்கிராப் குடோன் அதே பகுதியில் உள்ளது. இங்கு ஏராளமான பழைய இரும்பு சாமான்கள் பழைய பெயிண்ட் டப்பாக்கள், பேப்பர்கள், பிளாஸ்டிக் சாமான்கள் உள்ளிட்ட பழைய பொருட்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் இன்று அதிகாலை அந்த குடோனில் திடீரென தீ பிடித்தது. சிறிது நேரத்தில் தீ மள, மள என்று பரவி கொழுந்து விட்டு எரிந்தது. மேலும் அந்த பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது.
இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் தீ நீண்ட நேரம் எரிந்தவாறே இருந்தது. இது குறித்து ஓசூர் அட்கோ போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவம், அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பில் சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
- எழிலக வளாகத்தில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தினர்.
- சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்திற்கு தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
சென்னை மெரினா காமராஜர் சாலையில் உள்ள எழிலக வளாகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு உண்டானது.
எழிலக வளாகத்தில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தினர். இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வந்தது.
பாலாஜி என்பவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக தெரிய வந்ததையடுத்து அவரை பிடித்து திருவல்லிக்கேணி காவல் நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர்.
முன்னதாக, சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்திற்கு தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. மோப்பநாய் உதவியுடன் போலீசார் தீவிர சோதனை நடத்திய நிலையில் புரளி என தெரிய வந்தது.
- அறிவாலயத்தை புடுங்குவேன் என்று சொன்னவர்கள் எல்லாம் தூள் தூளாகிவிட்டனர்.
- தொண்டர்களுக்கு எழுச்சியும், உணர்ச்சியும் ஏற்படுமே தவிர சோர்வடையமாட்டார்கள்.
சென்னை:
சென்னை திருவான்மியூர் பொதுக் கூட்டத்தில் பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசும் போது, கவர்னரும், அண்ணாமலையும் தமிழகத்தில் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் பேசி வருவது ஆணவத்தின் உச்சம். நான் இங்கேயே தான் இருப்பேன். அறிவாலயத்தில் இருக்கும் ஒவ்வொரு செங்கலையும் உருவி எடுக்கும் வரை இருப்பேன் என்று பேசினார்.
அண்ணாமலையின் பேச்சுக்கு தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி காட்டமாக பதில் தெரிவித்துள்ளார்.
அறிவாலயத்தை புடுங்குவேன் என்று சொன்னவர்கள் எல்லாம் தூள் தூளாகிவிட்டனர். காணாமல் போய் விட்டார்கள். எனவே அண்ணாமலையும் அந்த வரிசையில் இடம் பெற போகிறார். அறிவாலயத்தில் உள்ள ஒரு புல்லைக் கூட அண்ணாமலையால் புடுங்க முடியாது.
தி.மு.க.வை அழிப்பேன், ஒழிப்பேன் என்று சொன்னவர்கள் எல்லாம் மொத்த பேரும் அழிந்து போயிருக்கிறார்கள். இதுதான் வரலாறு. இதெல்லாம் அண்ணாமலைக்கு தெரிய வாய்ப்பில்லை.
இந்த மாதிரி அண்ணாமலை பேசுவதால் தி.மு.க. தொண்டர்களுக்கு எழுச்சியும், உணர்ச்சியும் தான் ஏற்படுமே தவிர யாரும் சோர்வடையமாட்டார்கள்.
அதுமட்டுமல்ல 2026-ல் ஊழல் பெருச்சாளிகள் சிறைக்கு செல்வதை பார்க்கும் வரை இருப்பேன் என்கிறார். 2026 அல்ல 3026-ல் கூட அது நடக்காது.
இப்படியே அவர் பேசுவது நல்லதுதான். தி.மு.க.வுக்கு ஒரு சோதனை என்றால் தலைவர் கலைஞர் சொல்வார் தூங்கினால் என் தொண்டன் கும்பகர்ணன். எழுந்திரிச்சி நின்றால் இந்திரஜித். அந்த வகையிலே இந்த மாதிரி பேசினால், தி.மு.க. காரர்கள் அத்தனை பேரும் இந்திரஜித் ஆவார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
- தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.120-ம், சவரனுக்கு ரூ.960-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.7 ஆயிரத்து 940-க்கும், ஒரு சவரன் ரூ.63 ஆயிரத்து 520-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
- வெள்ளி விலையில் இன்றும் மாற்றமில்லை.
சென்னை:
தங்கம் விலை இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ராக்கெட் வேகத்தில் உயர்ந்து சென்றது. அதிலும் கடந்த மாதம் (ஜனவரி) 22-ந்தேதி ஒரு சவரன் ரூ.60 ஆயிரம் என்ற உச்சத்தை தாண்டியது. அதன் பின்னரும், தொடர்ந்து விலை அதிகரித்தபடியே காணப்பட்டு, ஒரு சவரன் ரூ.64 ஆயிரம் என்ற வரலாறு காணாத உச்சத்தையும் எட்டிப் பிடித்தது.
கடந்த 8 நாட்களாக தொடர்ந்து உச்சத்திலேயே பயணித்த தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.120-ம், சவரனுக்கு ரூ.960-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.7 ஆயிரத்து 940-க்கும், ஒரு சவரன் ரூ.63 ஆயிரத்து 520-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.7,980-க்கும் சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.63,840-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை மாற்றமின்றி விற்பனையாகி வருகிறது. ஒரு கிராம் வெள்ளி 107 ரூபாய்க்கும், பார் வெள்ளி ஒரு லட்சத்து ஏழாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
12-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,520
11-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,480
10-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,840
09-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,560
08-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,560
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
12-02-2025- ஒரு கிராம் ரூ.107
11-02-2025- ஒரு கிராம் ரூ.107
10-02-2025- ஒரு கிராம் ரூ.107
09-02-2025- ஒரு கிராம் ரூ.107
08-02-2025- ஒரு கிராம் ரூ.107
- கார் எரிவதை பார்த்த அக்கம் பக்கத்தினர் போராடியும் அன்பழகனை மீட்க முடியவில்லை.
- சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் இன்று அதிகாலையில் சாலை தடுப்பில் மோதிய கார் தீப்பற்றி எரிந்ததில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இன்று அதிகாலை சாலை தடுப்பில் மோதிய வேகத்தில் கார் தீப்பற்றி மளமளவென எரிந்ததில் வெளியேற முடியாமல் காரை ஓட்டி வந்த ஹோட்டல் உரிமையாளரான அன்பழகன் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார்.
கார் எரிவதை பார்த்த அக்கம் பக்கத்தினர் போராடியும் அன்பழகனை மீட்க முடியவில்லை. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து காருக்குள் இருந்து அன்பழகனின் உடலை மீட்டனர்.
இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருமணத்தை ஒரு அவாள் வந்து நடத்தி வைத்தால்.. புரியாத மொழியில் பேசுவார்கள்
- இந்த திருமணத்தில் எல்லோரும் தமிழில் வாழ்த்துகிறோம்
தூத்துக்குடி எம்.பி. கனிமொழி, விழுப்புரத்தில் நடைபெற்ற திமுக மாநில மகளிரணி பிரச்சாரக்குழுச் செயலாளர் தேன்மொழி அவர்களின் இல்லத் திருமண நிகழ்வில் கலந்து கொண்டு, மணமக்கள் ரூபன்சாந்தகுமார் - அனுபிரியா தம்பதியரை வாழ்த்தினார்.
இந்த திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் பொன்முடி, "இந்த திருமணத்தை ஒரு அவாள் வந்து நடத்தி வைத்தால்.. புரியாத மொழியில் பேசுவார்கள்.. அது மந்திரம் அல்ல, என்.சி.சி. யில் சொல்லும் இந்தி கமாண்ட். அம்மாதிரி இல்லாமல் இப்போது எல்லோரும் தமிழில் வாழ்த்துகிறோம்" என்று நகைச்சுவையாக தெரிவித்தார்.
- அடுத்த மாதம் (மார்ச்) 22, 29 மற்றும் ஏப்ரல் 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.
- ரெயில்கள் தற்போது பராமரிப்பு பணி காரணமாக மண்டபம் ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது.
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் இருந்து காலை 6.50 மணிக்கு புறப்பட்டு ராமேசுவரம் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-07355) அடுத்த மாதம் (மார்ச்) 22, 29 மற்றும் ஏப்ரல் 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.
அதேபோல, ராமேசுவரத்தில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு உப்பள்ளி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (07356) அடுத்த மாதம் 23, 30 மற்றும் 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது. மேற்கண்ட ரெயில்கள் தற்போது பராமரிப்பு பணி காரணமாக மண்டபம் ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அலங்கார நினைவு வாயிலை இடிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றது.
- விபத்தில் ஒப்பந்ததாரரும் படுகாயம் அடைந்தார்.
மதுரை:
மதுரை மாட்டுத்தாவணி எதிரே போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள நக்கீரர் நுழைவு வாயிலை இடித்து அப்புறப்படுத்த உத்தரவிட கோரி தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்ற கிளை அனுமதி வழங்கியது.
இதையடுத்து, அலங்கார நினைவு வாயிலை இடிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து நேற்றிரவு நினைவு வாயிலை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது.
அப்போது திடீரென அலங்கார நினைவு வாயில் பொக்லைன் இயந்திரம் மீது விழுந்ததில் பொக்லைன் ஆபரேட்டர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் விபத்தில் ஒப்பந்ததாரரும் படுகாயம் அடைந்தார்.
விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முறையான நடைமுறைகளை பின்பற்றாமல் நுழைவு வாயிலை இடித்ததால் விபத்து நேரிட்டதாக மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
பொக்லைன் இடிந்து விழும் வீடியோ காட்சிகள் வெளியாகி பார்ப்போரை பதற வைக்கிறது.
- தமிழகம் முழுவதும் இன்று காலை வேளையில் பனிமூட்டம் நிலவியது.
- சாலைகளில் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாததால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர்.
சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் நிலவும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
அதன்படி, தமிழகம் முழுவதும் இன்று காலை வேளையில் பனிமூட்டம் நிலவியது. இதனால் சாலைகளில் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாததால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர். சென்னையில் நிலவும் பனிமூட்டம் காரணமாக ரெயில் மற்றும் விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.
சென்னையில் நிலவிய பனிமூட்டம் காரணமாக காலை 8.30 மணிக்கு பிறகே விமான சேவைகள் சீராக இயக்கப்படும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- இ.பி.எஸ். பாராட்டு விழாவை செங்கோட்டையன் புறக்கணித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
- எனது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பை நான் கேட்கவில்லை. அவர்களாகவே பந்தோபஸ்து தந்தார்கள்.
அத்திக்கடவு - அவிநாசி திட்டம் தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு விவசாய சங்கங்கள் சார்ர்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த விழாவை அதிமுகவின் முன்னாள் அமைச்சரான செங்கோட்டையன் புறக்கணித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஈரோடு மாவட்டம் கோபியில் அதிமுக சார்பில் நடைபெறும் எம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றார்.
இவ்விழாவில் பேசிய செங்கோட்டையன், "அதிமுக ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன் நான், என்னை சோதிக்காதீர்கள். அதுதான் எனது வேண்டுகோள் நான் செல்கின்ற பாதை எம்.ஜி.ஆர்., அம்மா வகுத்த பாதை. அவர்களின் படங்கள் இல்லாததால்தான் விவசாயிகள் பாராட்டு விழாவில் கலந்துகொள்ளவில்லை.
எனது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பை நான் கேட்கவில்லை. அவர்களாகவே பந்தோபஸ்து தந்தார்கள். அம்மா விரலை நீட்டும் போதே, அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை புரிந்து கொண்டு செயல்பட்டவன் நான். அவர் ஏன் என்னை கழட்டி விட்டார்? என்பதை சொல்ல முடியாத நிலை உள்ளது" என்று தெரிவித்தார்.
எம்ஜிஆர் பிறந்தநாள் பொதுக்கூட்ட உரையில் 250-க்கும் மேற்பட்ட தொண்டர்கள், நிர்வாகிகள் பெயரை சுமார் 10 நிமிடம் படித்த செங்கோட்டையன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பெயரை ஒரு முறை கூட பயன்படுத்தாமல் உரையை நிறைவு செய்தார்.
இந்த விழா மேடையில் வைக்கப்பட்டிருந்த பேனரில் எடப்பாடி பழனிசாமிக்கு இணையாக செங்கோட்டையன் புகைப்படம் வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
- குழந்தைகள் அணி என்ற அணியை த.வெ.க. உருவாக்கியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
- புதிதாக கட்சி ஆரம்பித்த தலைவர் மத்திய பட்ஜெட்டில் ஜி.எஸ்.டி. குறைப்பு பற்றி எதுவும் இல்லை என்கிறார்.
தமிழக வெற்றிக் கழகத்தில் உருவாக்கப்பட்டுள்ள 28 அணிகள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது.
இதில் திருநங்கைகள், காலநிலை மாற்றம், தகவல் சரிபார்ப்பு, இளைஞர் அணி, குழந்தைகள் அணி உள்ளிட்ட அணிகள் இடம்பெற்றுள்ளன.
இந்தியாவில் அரசியல் கட்சிகளில் குழந்தைகளை சேர்க்க முடியாது. இந்நிலையில், குழந்தைகள் அணி என்ற அணியை த.வெ.க. உருவாக்கியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், திருவான்மியூரில் நடந்த மத்திய பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, "தவெக கட்சியில் இருப்பதே குழந்தைகள் தான், அதனால் தான் குழந்தைகள் விங் என உருவாக்கி உள்ளனர். புதிதாக கட்சி ஆரம்பித்த தலைவர் ஒருவர் மத்திய பட்ஜெட்டில் ஜி.எஸ்.டி. குறைப்பு பற்றி எதுவும் இல்லை என்கிறார். ஜி.எஸ்.டி. கவுன்சில் வேறு பட்ஜெட் வேறு" என்று தெரிவித்தார்.
- பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டம் தமிழகத்தில் நடத்துவதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளது.
- உலக நாடுகளே திரும்பிப் பார்க்கும் ஆட்சி மத்தியில் நடந்து வருகிறது என்றார் அண்ணாமலை.
சென்னை:
திருவான்மியூரில் நடந்த பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:
பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டம் தமிழகத்தில் நடத்துவதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளது. மு.க.ஸ்டாலின் போடும் பட்ஜெட்டிற்கு விளக்கப் பொதுக்கூட்டம் நடத்தியதில்லை. ஆனால், மத்திய அரசின் பட்ஜெட் குறித்து விளக்கப் பொதுக்கூட்டம் நடத்துவார். தான் போடும் பட்ஜெட் குறித்து பேசாமல், மத்திய அரசின் பட்ஜெட் குறித்து பேசுவதற்காக ஸ்டாலின் திருவள்ளூர் சென்றாரோ, அப்பவே மத்திய அரசின் பட்ஜெட் சிறப்பானது என்பது தெரிய வந்துள்ளது.
உலக நாடுகளே திரும்பிப் பார்க்கும் ஆட்சி மத்தியில் நடந்து வருகிறது. அனைத்து இடங்களிலும் மரியாதை இருக்கும் தலைவர் பிரதமர் மோடி.
கவர்னரும், அண்ணாமலையும் இருக்கவேண்டும் என்று முதலமைச்சர் சொல்கிறார். ஒரு மனிதனுக்கு எப்போது வாய்க்கொழுப்பு அதிகரிக்கிறதோ, அழிவு ஆரம்பமாகி விட்டதாக அர்த்தம்.
உங்கள் கட்சியில்தான் துண்டை போட்டு நீங்க, உங்களுக்குப் பிறகு உதயநிதி, இன்பநிதி என்று உங்கள் குடும்பத்தினரே தலைவர் பதவியில் இருக்கப் போறீங்க.
பா.ஜ.க. தலைவராக தொடர முடியாது என்பது எனக்கு தெரியும். இந்தக் கட்சியைப் பொறுத்தவரையில் ஒருவரே பதவியில் நீடிக்க முடியாது. ஆனால் இங்கு இருந்து செல்லும்போது அண்ணா அறிவாலயத்தில் உள்ள ஒவ்வொரு செங்கல்லையும் எடுக்காமல் விட மாட்டேன் என தெரிவித்தார்.






