என் மலர்
உள்ளூர் செய்திகள்
- தமிழ்நாட்டில் கட்சிகள் பெறும் இடங்களின் எண்ணிக்கையை பொறுத்தவரை மாற்றம் இல்லை.
- அ.தி.மு.க. கூட்டணியின் வாக்குகள் 23 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக குறைந்திருக்கும் என்று கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா டுடே-சி வோட்டர் மூட் ஆப் தி நேஷன் நடத்திய கருத்துக்கணிப்பில் தமிழகத்தில் தி.மு.க.வின் செல்வாக்கு அதிகரித்திருப்பதாக தெரியவந்துள்ளது.
இந்த கருத்துக்கணிப்பின் படி, தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியின் வாக்குகள் 5 சதவீதம் உயர்ந்துள்ளது. பா.ஜ.க. கூட்டணியின் வாக்கு சதவீதம் 3 சதவீதம் உயர்ந்து உள்ளது. அதே நேரத்தில் அ.தி.மு.க.வின் வாக்கு 3 சதவீதம் சரிந்துள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி 47 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது. பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி 18 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது. அ.தி.மு.க. கூட்டணி 23 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது.
இந்த நிலையில், இப்போது பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று இருந்தால் தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியின் வாக்குகள் 5 சதவீதம் உயர்ந்து 52 சதவீதம் ஆக அதிகரித்திருக்கும்.
பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி வாக்குகள் 3 சதவீதம் அதிகரித்து 21 சதவீதம் ஆகி இருக்கும். அ.தி.மு.க. கூட்டணியின் வாக்குகள் 23 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக குறைந்திருக்கும் என்று கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கட்சிகள் பெறும் இடங்களின் எண்ணிக்கையை பொறுத்தவரை மாற்றம் இல்லை. கடந்த ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி 39 இடங்களையும் கைப்பற்றியது. இதில் தி.மு.க. 22 இடங்களிலும், காங்கிரஸ் 9 இடங்களிலும் வெற்றி பெற்றன. இப்போது தேர்தல் வைத்தாலும் அதே நிலை தான் நீடிக்கும். பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. கூட்டணிக்கு ஒரு இடம் கூட கிடைக்க வாய்ப்பில்லை என கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட விஜய், 2026 சட்டசபை தேர்தலில் முடிவுகளை நிர்ணயிக்கக்கூடிய இடத்தில் இருப்பார். பா.ஜ.க., அ.தி.மு.க. மற்றும் விஜய் கட்சி ஆகியவை இணைந்து ஒரு பெரிய கூட்டணியை உருவாக்கினால் மட்டுமே தி.மு.க.வுக்கு சவாலாக மாற முடியும் என்று அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
- மேற்கு வங்க மாநிலத்தில் குடியிருப்பவர்கள் போல் ஆதார் கார்டுகள் இருந்தன.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் கே.செட்டிப்பாளையத்தில் உள்ள ஒரு பனியன் நிட்டிங் நிறுவனத்தில் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் வேலை செய்வதாக நல்லூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் அங்கு வேலை செய்த மொதிர் ரகுமான் (வயது 37), அவரது மனைவி அஞ்சனா அக்தர் (37) ஆகியோர் வங்கதேசம் டாக்கா பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
விசாரணையில் அவர்கள் அய்யம்பாளையம் திருமூர்த்தி நகரில் வாடகை வீட்டில் குடியிருந்து நிட்டிங் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர். இவர்கள் கடந்த 11 ஆண்டுகளாக திருப்பூரில் தங்கி பணியாற்றியது தெரியவந்தது. மேலும் இவர்களிடம் மேற்கு வங்க மாநிலத்தில் குடியிருப்பவர்கள் போல் ஆதார் கார்டுகள் இருந்தன.
முறையான ஆவணங்கள் இன்றி மேற்கு வங்க மாநிலம் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்து திருப்பூர் வந்து வேலை செய்து வந்துள்ளனர். இதைத்தொடர்ந்து சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக கணவன், மனைவி 2 பேரையும் நல்லூர் போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
- அண்ணாமலை எங்கு போட்டியிட்டாலும் தி.மு.க.வின் கடைக்கோடி தொண்டர் கூட அவரை புறமுதுகிட்டு ஓடச்செய்வார்.
- 2026 தேர்தலில் மக்கள் தி.மு.க.வை ஆட்சியில் அமர வைப்பர்.
அண்ணா அறிவாலயத்தின் ஒவ்வொரு செங்கலையும் உருவாமல் விடமாட்டேன் என பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்த நிலையில் அவருக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில்,
* தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையால் அறிவாலயத்தை நெருங்கக்கூட முடியாது.
* தி.மு.க.வை அழிக்க நினைத்தோர் மண்ணோடு மண்ணாக போனதுதான் வரலாறு.
* அண்ணாமலை எங்கு போட்டியிட்டாலும் தி.மு.க.வின் கடைக்கோடி தொண்டர் கூட அவரை புறமுதுகிட்டு ஓடச்செய்வார்.
* ஆணவமாக பேசுவோருக்கு பதிலளிக்கும் வகையில் 2026 தேர்தலில் மக்கள் தி.மு.க.வை ஆட்சியில் அமர வைப்பர்.
* தி.மு.க. தொண்டர்கள் கூட அரசியலை கரைத்து குடித்தவர்கள். அண்ணாமலை போல் இறக்குமதி செய்யப்பட்டவர்களல்ல என்று கூறினார்.
- விவசாயிகள் விவசாயத்திற்கு கண்மாயில் உள்ள தண்ணீரை எடுத்தால், அதைத் தடுக்கின்றனர்.
- அ.தி.மு.க.வுடன் த.வெ.க. ஒன்றாக போராட்டத்தில் கலந்துகொண்டதை இருகட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் உற்சாகமாக வரவேற்று உள்ளனர்.
சிவகங்கை:
2026 சட்டமன்ற தேர்தலை மையப்படுத்தி அரசியல் கட்சிகள் தற்போதே தங்கள் களப்பணிகளை தொடங்கியுள்ளன. உறுப்பினர் சேர்க்கை, மாற்றுக்கட்சியினர் இணைப்பு விழா, பூத் கமிட்டி அமைப்பு என்று பம்பரமாக சுழன்று வரும் நிர்வாகிகளுக்கு அந்தந்த கட்சி தலைமையும் ஏராளமான பொறுப்புகளை அள்ளிக்கொடுத்துள்ளது.
அந்த வகையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சற்று முதல் வரிசையில் உள்ளது. முதலாம் ஆண்டு விழாவை கோலாகலமாக கொண்டாடிய கட்சி தலைவர் விஜய், தமிழகம் முழுவதும் நிர்வாக ரீதியாக மாவட்டங்களை பிரித்து அதற்கான செயலாளர்களையும், நிர்வாகிகள் பட்டியலையும் அறிவித்தார். அதே போல் பல்வேறு அணிகளையும் உருவாக்கி கட்சியினரை உற்சாகப்படுத்தி இருக்கிறார்.
எதிரணியினரின் விமர்சனங்களுக்கு கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பதிலடி கொடுத்து வரும் நிலையில், தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோருடன், த.வெ.க. தலைவர் இரண்டு கட்ட ஆலோசனைகளை நடத்தியுள்ளார். அப்போது கட்சியின் செல்வாக்கு கணிசமாக அதிகரித்துள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
இந்தநிலையில் சிவகங்கையில் கிராம மக்கள் நடத்திய போராட்டத்தில் அ.தி.மு.க.வுடன், த.வெ.க. நிர்வாகிகளும் கலந்து கொண்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது, சிவகங்கை அருகேயுள்ள வேம்பங்குடி, மாடகொட்டான் கிராமங்களில் கனிம வளங்களை வெட்டி எடுப்பதில் விதிமீறல்கள் நடப்பதாகப் புகாா் எழுந்தது. அதேபோல் அந்த பகுதியில் இயங்கிவரும் குவாரியால் கிராமத்திற்கும், விவசாயத்திற்கும் பாதிப்பு ஏற்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இதையடுத்து பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்தி மேற்கண்ட கிராமத்தினர் அதிகாரிகளிடம் மனு அளித்தும் பயனற்ற நிலையில், போலீஸ் நிலையம், கோர்ட்டு மூலம் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் இறங்கினர். இதற்கிடையே கிராம மக்கள் சாா்பில் சிவகங்கை அரண்மனைவாசல் பகுதியில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதற்கு வேம்பங்குடி கிராமத்தைச் சோ்ந்த முத்துராமலிங்கம் தலைமை தாங்கினார்.
இந்த போராட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், மாவட்ட செயலாளர் பி.ஆர்.செந்தில் நாதன் உள்ளிட்டோரும், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தெற்கு மாவட்ட செயலர் முத்துபாரதி தலைமையில் நகரச் செயலர் தாமரைப்பாண்டி, ஒன்றிய செயலாளர் பரமேஸ்வரன் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் இளஞ்செழியன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
அப்போது தி.மு.க. அரசுக்கு எதிராகவும், கிராவல் மண் கொள்ளைக்கு எதிராகவும் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் பேசுகையில், கிராம மக்கள் நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வாழ்த்தி பேசவே வந்தோம். மாவட்டம் முழுவதும், கிராவல் மண் கொள்ளை நடக்கிறது. அதை அரசு அதிகாரிகள் தடுக்கவில்லை. அமைச்சர்கள் கனிம வள கொள்ளை மூலம் கிடைக்கும் பணத்தை வெளி நாடுகளில் முதலீடு செய்கின்றனர். ஆனால், விவசாயிகள் விவசாயத்திற்கு கண்மாயில் உள்ள தண்ணீரை எடுத்தால், அதைத் தடுக்கின்றனர்.
வேம்பங்குடி கிராமத்தில் அரசு விதியை மீறி பல அடி ஆழத்திற்கு கிராவல் மண் எடுத்துள்ளனர். வேம்பங்குடியில் நடந்துள்ள கிராவல் மண் கொள்ளையை, அதிகாரிகள் ஆய்வு செய்து, அதில் அரசு விதியை மீறி, மண் அள்ளியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அதேபோல் உண்ணாவி ரதப் போராட்டத்தில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளும் மணல் கொள்ளைக்கு எதிராக பேசினர். அ.தி.மு.க.வுடன் த.வெ.க.வும் கைகோர்த்து போராட்டத்தில் பங்கேற்றது சிவகங்கை அரசியல் வட்டாரத்தில் பேசும்பொ ருளாக மாறியுள்ளது.
இதுகுறித்து த.வெ.க. தெற்கு மாவட்டச் செயலாளர் முத்துபாரதி கூறுகையில், இந்த மணல் கொள்ளை, குவாரி பிரச்சனை தொடர்பாக பல்வேறு போராட்டங்களை கிராமமக்களுக்காக நடத்தி இருக்கிறோம். கிராமமக்கள் அழைப்பின் பேரில் தமிழக வெற்றிக் கழகம், அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி, பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகளும் கலந்துகொண்டன.
மக்களுக்கான போராட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள கட்சி தலைமை எங்களுக்கு உத்தர விட்டுள்ளது. அந்த வகையில் தான் நாங்கள் நேற்று நடந்த போராட்டத்தில் கலந்துகொண்டோம். மற்றபடி தேர்தல், கூட்டணி என்பது தொடர்பாக நாங்கள் யோசிக்கவில்லை. கிராம மக்களையும், விவசாயத்தையும் காப்பதற்காகவே எந்தவித பாகுபாடும் பார்க்காமல் நாங்கள் பங்கேற்றோம் என்றார்.
சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில் எந்ததெந்த கட்சிகள் யாருடன் கூட்டணி சேரப்போகிறது, களம் மாறலாம், சூழ்நிலையும் மாறலாம் என்ற கருத்துகள் நிலவி வரும் நிலையில், அ.தி.மு.க.வுடன் த.வெ.க. ஒன்றாக போராட்டத்தில் கலந்துகொண்டதை இருகட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் உற்சாகமாக வரவேற்று உள்ளனர்.
- செடி, கொடிகள் அனைத்தும் பனி படர்ந்து வெள்ளை நிறத்தில் காட்சியளித்தது.
- சுற்றுலா பயணிகள் கூட்டம் மிக குறைந்த அளவிலேயே காணப்பட்டது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் நடப்பாண்டில் வழக்கத்தை விட குளிரின் தாக்கம் அதிகமாக இருந்தது. கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாகவும், இரவு நேரத்தில் குளிர் அதிகமாக உள்ளதால் மக்கள் தவித்து வருகின்றனர்.
இந்தநிலையில் சேலம் மாநகரில் இன்று அதிகாலை முதல் பனிப்பொழிவு மிக அதிக அளவில் இருந்தது. சாரல் மழை போல பனி கொட்டியதால் அருகில் நிற்பவர்கள் கூட தெரியாத நிலை நீடித்தது. இதனால் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் கடும் குளிரில் நடுங்கினர்.
இதனால் காலை நேரங்களில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், அலுவலகங்களுக்கு இருசக்கர வாகனங்களில் செல்வோர் வாகனங்களை இயக்க முடியாமல் தவியாய் தவித்தனர். மேலும் அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியில் செல்பவர்கள் தவிர மற்றவர்கள் வீடுகளில் முடங்கினர்.
இதே போல சேலம் புறநகர் பகுதிகளான ஏற்காடு, ஆத்தூர், வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம், ஓமலூர், மேட்டூர், சங்ககிரி, வீரபாண்டி, எடப்பாடி உள்பட அனைத்து பகுதிகளிலும் அதிக அளவில் இன்று அதிகாலை முதல் பனி கொட்டியது. இதனால் செடி, கொடிகள் அனைத்தும் பனி படர்ந்து வெள்ளை நிறத்தில் காட்சியளித்தது.
ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக கடும் குளிர் நிலவி வந்த நிலையில் இன்றும் அதிக அளவில் பனி கொட்டியதால் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், வேலைகளுக்கு செல்வோர் குளிர் தாங்கும் உடைகளை அணிந்த படி சென்றனர். சுற்றுலா பயணிகள் கூட்டம் மிக குறைந்த அளவிலேயே காணப்பட்டது.
மாவட்டத்தில் நிலவி வரும் தொடர் பனி மற்றும் குளிரின் தாக்கத்தால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலானவர்கள் சளி மற்றும் இருமலால் அவதிப்பட்டு வருகிறார்கள். இதனால் ஆஸ்பத்திரிகளிலும் கூட்டம் அதிகரித்துள்ளது. அதேநேரம் பகல் நேரத்தில் சுட்டெரிக்கும் அனல் காற்று வீசிவருகிறது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.
- கணவன்-மனைவிக்கிடையே சமீபகாலமாக தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
- காதல் மனைவியை கணவரே கொன்று எரித்த இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடையநல்லூர்:
தென்காசி அருகே இலத்தூர் இனாவிலக்கு பகுதியில் மதுநாதபேரி குளம் அருகே நேற்று முன்தினம் இளம்பெண் ஒருவர் எரித்துக்கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.
பெண்ணின் காலில் மெட்டி கிடந்தது. இடது கை, காலில் உள்ள 5 விரல் எரியாமல் கிடந்தது. சம்பவ இடத்தில் ஏராளமான மது பாட்டில்களும் கிடந்தன. சம்பவ இடத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
கொலையாளிகளை பிடிக்க டி.எஸ்.பி. மீனாட்சி சுந்தரம் மேற்பார்வையில், 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் இலத்தூர் முதல் இனாவிலக்கு வரை சாலையில் உள்ள சி.சி.டி.வி. பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில், முந்தைய நாள் இரவு 9.30 மணியளவில் அந்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக கார் ஒன்று சென்றது தெரியவந்தது.
அந்த கார் பதிவு எண் மூலம் நடத்திய விசாரணையில், அந்த கார் விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.
தொடர்ந்து நடத்திய விசாரணையில் சிவகாசி பாரதி நகரை சேர்ந்த ஜான்கில்பர்ட் என்பவரை போலீசார் பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் தனது மனைவியை கொன்று எரித்தது தெரியவந்தது.
இவர் அதே பகுதியை சேர்ந்த கமலி (வயது 30) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்ற நிலையில் பெற்றோரின் எதிர்ப்பை மீறி ஜான்கில்பர்ட் தனது காதலியை கரம்பிடித்ததாக கூறப்படுகிறது. இவர்களுக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் கணவன்-மனைவிக்கிடையே சமீபகாலமாக தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 9-ந்தேதி கணவன்-மனைவி இடையே நடந்த தகராறில் ஜான்கில்பர்ட் தனது மனைவியை கம்பியால் அடித்து கொலை செய்துள்ளார்.
பின்னர் உடலை அப்புறப்படுத்துவதற்காக தனது சகோதரர் ஒருவரின் உதவியை நாடி உள்ளார். அதன்படி, மனைவியின் உடலை ஒரு காரில் ஏற்றி அங்கிருந்து சங்கரன்கோவில், திருவேங்கடம் வழியாக தென்காசி அருகே சுமார் 110 கிலோ மீட்டர் தூரம் காரில் கொண்டு வந்து இலத்தூர் அருகே ஆள்நடமாட்டம் இல்லாத குளத்தின் ஒரு பகுதியில் முட்புதருக்குள் வீசி எரித்ததும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து ஜான்கில்பர்ட்டை கைது செய்த போலீசார், கொலைக்கு உடந்தையாக இருந்த சகோதரரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதல் மனைவியை கணவரே கொன்று எரித்த இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- பேருந்து ஓட்டுநர் நெல்சன் டேவிட்டுக்கு கால் முறிவு ஏற்பட்டது.
- பேருந்து ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.
பெருந்துறை:
ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் வளாகத்தில் ஒரு தனியார் பிஸ்கட் தயாரிப்பு நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
தொழிலாளர்கள் தினமும் கம்பெனி பேருந்தில் வந்து பணிபுரிகின்றனர். இந்நிலையில் வழக்கம்போல் பிஸ்கட் கம்பெனிக்கு சொந்தமான அந்த பேருந்து அம்மாபேட்டை, பவானி, லட்சுமி நகர் போன்ற பகுதிகளைச் சேர்ந்த சுமார் 30 தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மேட்டூரில் இருந்து பெருந்துறை சிப்காட் நோக்கி சென்று கொண்டிருந்தது.
பேருந்தை மேட்டூரை சேர்ந்த நெல்சன் டேவிட் (வயது 34) என்பவர் ஓட்டினார். பேருந்து பெருந்துறை அருகே காஞ்சிகோவில் பிரிவு சாலையைக் கடந்து சர்வீஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தது. அங்கு சாலையின் வலது ஓரத்தில் நின்று கொண்டிருந்த லாரியில் இருந்து பணியாளர்கள் சிமெண்ட் லோடு இறக்கி கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக பிஸ்கட் கம்பெனியின் பேருந்து, எதிர்பாராத விதமாக லாரியின் பின் பக்கம் மோதியது. இதில் பேருந்தில் இருந்த 19 பேர் லேசான காயம் அடைந்தனர்.
பேருந்து ஓட்டுநர் நெல்சன் டேவிட்டுக்கு கால் முறிவு ஏற்பட்டது. உடனே அங்கிருந்தவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். பெரும்பாலானவர்களுக்கு லேசான காயமே ஏற்பட்டதால் அவர்களில் பலர் சிகிச்சை முடிந்து உடனடியாக வீடு திரும்பினர்.
பேருந்து ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- தாலி உள்பட 20 பவுன் நகைகளை பறித்தனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பர்கூர்:
பர்கூர் அருகே வீடு புகுந்து கணவன்-மனைவியை கத்தி முனையில் மிரட்டி மூகமூடி கொள்ளையர்கள் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து பர்கூர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே சிகரலபள்ளி கல்லேத்துப்பட்டி கிராமத்தில் திருப்பத்தூர் சாலையில் சுந்தரேசன் (வயது65) என்பவர் வசித்து வருகிறார்.
விவசாயியான இவருக்கு மஞ்சுளா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு குழந்தை யாரும் இல்லை.
இந்த நிலையில் கணவன்-மனைவி இருவரும் அவர்களது நிலத்தில் விவசாயம் செய்து தனியாக வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை சுந்தரேசன் வீட்டின் அருகில் நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டது. அப்போது தூங்கி கொண்டிருந்த சுந்தரேசன் எழுந்து வந்து கதவை திறந்து பார்க்க முயன்றார். அப்போது அங்கு முகமூடி அணிந்து மறைந்து இருந்து 3 நபர்கள் கதவின் அருகே வந்து சுந்தரேசனை வீட்டிற்குள் தள்ளி கதவை சாத்தி கொண்டனர்.
இதைத்தொடர்ந்து மர்ம நபர்கள் 3 பேரும் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சுந்தரேசனை மிரட்டினர். அப்போது அவர் சத்தம்போடவே அவரை வெட்டுவது போல் மர்ம நபர் ஒருவர் கத்தியை வீசும்போது சுந்தரேசனின் கையில் வெட்டியது. இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
தனது கணவரின் சத்தம் கேட்டு மற்றொரு அறையில் தூங்கி கொண்டிருந்த மஞ்சுளாவும் அங்கு வந்தார். அப்போது இருவரையும் கத்தி முனையில் மர்ம நபர்கள் மிரட்டி பீரோவில் இருந்த நகைகளும், மஞ்சுளா அணிந்திருந்த தாலி உள்பட 20 பவுன் நகைகளை பறித்தனர்.
மேலும், பீரோவில் இருந்த ரூ.50 ஆயிரம் பணத்தையும் கொள்ளையடித்து அங்கிருந்து அவர்கள் தப்பி ஓடினர். உடனே கணவன்-மனைவி இருவரும் திருடன், திருடன் என்று சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர் ஓடிவருவதற்குள் அந்த 3 மர்ம நபர்கள் அவர்கள் வந்த இருசக்கர வாகனத்தில் தப்பி ஓடிவிட்டனர்.
அப்போது அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் சுந்தரேசனை மீட்டு சிகிச்சைக்காக பர்கூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்றுவிட்டு உடனே அவர் வீடு திரும்பினார்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த மாவட்ட எஸ்.பி. தங்கதுரை மற்றும் பர்கூர் போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
இதில் கணவன்-மனைவி இருவரும் மட்டும் தோட்டத்திற்குள் வீட்டில் வசித்து வருவதை நோட்டமிட்டு 3 மர்ம நபர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சுந்தரேசன் வசித்து வந்த வீட்டின் அருகே உள்ள சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுந்தரேசனையும், அவரது மனைவியையும் மர்ம நபர்கள் கத்தி முனையில் மிரட்டி பணம், நகை கொள்ளையடித்த சம்பவம் காட்டுத்தீ போல்அந்த பகுதியில் பரவியதால், அவர்களது உறவினர்கள் உடனே சம்பவ நடத்த வீட்டிற்கு திரண்டு வந்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- 'விசாகா' கமிட்டிக்கு பெண் காவலரின் புகார் மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
- தமிழகம் முழுவதும் பாலியல் சம்பவங்கள் தொடர்பான புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை:
சென்னை போக்குவரத்து பிரிவில் இணை ஆணையராக பணி புரிந்து வருபவர் மகேஷ்குமார்.
ஐ.பி.எஸ். அதிகாரியான இவர் பெண் போலீஸ் ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது. சம்பந்தப்பட்ட பெண் காவலர் இது தொடர்பாக டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதன்படி அரசு துறைகளில் பாலியல் புகார்களை விசாரிக்கும் 'விசாகா' கமிட்டிக்கு பெண் காவலரின் புகார் மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி விசாகா கமிட்டியில் இடம்பெற்று உள்ள பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் குழுவினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே ஐ.பி.எஸ். அதிகாரி மகேஷ்குமாரை சஸ்பெண்டு செய்து தமிழக அரசு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகம் முழுவதும் பாலியல் சம்பவங்கள் தொடர்பான புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசு துறையில் உயர் பதவியில் இருப்பவராக இருந்தாலும் அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். இதன் பேரிலேயே ஐ.பி.எஸ். அதிகாரி சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார் என உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதுபற்றி அவர் மேலும் கூறும்போது, காவல் துறையில் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாகும் பெண்கள் துணிச்சலாக புகார் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
- பள்ளியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரியாஸ் அகமது தலைமையிலான அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
- போக்சோ சட்டத்தின் கீழ் சுந்தர வடிவேலை போலீசார் கைது செய்தனா்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி பள்ளியில் 1000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு பணியாற்றும் கணித ஆசிரியர் சுந்தர வடிவேல் 7-ம் வகுப்பு மாணவர்களிடம் அநாகரீகமாக நடந்து கொண்டதாக புகார் எழுந்தது.
இதைத்தொடர்ந்து பள்ளி மாணவர்கள் தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்தனர். பெற்றோர்கள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து திருப்பூர் தெற்கு மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். தொடந்து பள்ளியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரியாஸ் அகமது தலைமையிலான அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் சுந்தர வடிவேலை போலீசார் கைது செய்தனா். இந்த நிலையில் அவரை சஸ்பெண்டு செய்து முதன்மை கல்வி அதிகாரி உதயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.
- சிறிது நேரத்தில் தீ மள, மள என்று பரவி கொழுந்து விட்டு எரிந்தது.
- தீ விபத்து குறித்து ஓசூர் அட்கோ போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சுண்ணாம்பு ஜீபி பகுதியை சேர்ந்தவர்கள் சம்பங்கி ராமையா மற்றும் ரமேஷ் பாபு. இவர்கள் உறவினர்கள் ஆவர். இவர்களுக்கு சொந்தமான ஸ்கிராப் குடோன் அதே பகுதியில் உள்ளது. இங்கு ஏராளமான பழைய இரும்பு சாமான்கள் பழைய பெயிண்ட் டப்பாக்கள், பேப்பர்கள், பிளாஸ்டிக் சாமான்கள் உள்ளிட்ட பழைய பொருட்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் இன்று அதிகாலை அந்த குடோனில் திடீரென தீ பிடித்தது. சிறிது நேரத்தில் தீ மள, மள என்று பரவி கொழுந்து விட்டு எரிந்தது. மேலும் அந்த பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது.
இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் தீ நீண்ட நேரம் எரிந்தவாறே இருந்தது. இது குறித்து ஓசூர் அட்கோ போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவம், அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பில் சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
- எழிலக வளாகத்தில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தினர்.
- சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்திற்கு தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
சென்னை மெரினா காமராஜர் சாலையில் உள்ள எழிலக வளாகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு உண்டானது.
எழிலக வளாகத்தில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தினர். இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வந்தது.
பாலாஜி என்பவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக தெரிய வந்ததையடுத்து அவரை பிடித்து திருவல்லிக்கேணி காவல் நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர்.
முன்னதாக, சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்திற்கு தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. மோப்பநாய் உதவியுடன் போலீசார் தீவிர சோதனை நடத்திய நிலையில் புரளி என தெரிய வந்தது.






