என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தமிழகம் முழுவதும் நகரம், கிராமங்களை மேம்படுத்த திட்டம்.
    • போக்குவரத்து நெரிசலை தவிர்க மூன்று புதிய புறநகர் பேருந்து முனையங்கள்.

    சென்னை:

    சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 'பேர்புரோ 2025' கட்டுமான வீட்டு மனை கண்காட்சியை தொடங்கி வைத்தார்.

    ஒரு மாநிலத்தின் வளர்ச்சியை சட்டென்று முதலில் உணர்ந்து கொள்வது கட்டிடங்கள்தான். அந்த வகையில், உங்களுடைய அமைப்பையும், நீங்கள் நடத்தி வரும் இந்த கண் காட்சியையும் வளர்ச்சியின் அடையாளமாகதான் நான் பார்க்கிறேன்.

    மக்கள்தொகை பெருக்கம் அதிகம் இருக்கக்கூடிய நாட்டில் மக்களின் எல்லாத்தேவைகளையும் அரசே செய்துவிட முடியாது. உங்களை போன்ற அமைப்புகளும் இணைந்து செயல்பட வேண்டும்.

    நம்முடைய மாநில மக்கள் தொகையில், 48 விழுக்காடு மக்கள் நகர்ப்புறத்தில் வசிக்கிறார்கள். இதனால் நாம் மிகவும் நகரமய மாக்கப்பட்ட மாநிலமாக இருக்கிறோம். இது வரும் ஆண்டுகளில் மேலும் உயரும். இதனால், நீடித்து நிலைக்கக்கூடிய வீட்டு வசதிக்கான தேவைகள் அதிகரிக்கும்.

    சென்னை பெருநகர பகுதிக்கான முதல் மற்றும் இரண்டாம் முழுமைத் திட்டங்கள் தி.மு.க. ஆட்சியில்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது மூன்றாவது முழுமைத் திட்டத்தையும் நம்முடைய அரசுதான் முனைப்போடு தயாரித்துக் கொண்டு வருகிறது.

    நிலையான வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம் மற்றும் தொழில்நுட்ப ரீதியான முன்முயற்சிகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு நகர்ப்புற வளர்ச்சியை முன்னெடுத்து செல்லவும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், இந்த திட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம்தான் அடுத்த 20 ஆண்டுகளுக்கு சென்னை பெருநகர பகுதியின் வளர்ச்சியை வழிநடத்தப்போகிறது.

    அதேபோல், தமிழ்நாடு முழுவதும் நகரம், கிராமங்களை மேம்படுத்த 10 மண்டலத் திட்டங்களும் தயாரிக்கப்பட்டு வருகிறது.

    கோயம்புத்தூர், மதுரை, ஒசூர், சேலம், திருப்பூர், திருச்சிராப்பள்ளி, வேலூர் மற்றும் திருநெல்வேலியை உள்ளடக்கிய 136 நகரங்களுக்கும் திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

    ஓசூருக்கான முழுமைத் திட்டமும் சமீபத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. கோயம்புத்தூர் மற்றும் மதுரைக்கான முழுமைத் திட்டம் அடுத்த மாதத்திற்குள் வெளியிடப்படும் என்பதையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

    சென்னை மாநகரை சுற்றியிருக்கக்கூடிய 9 வளர்ச்சி மையங்களான மீஞ்சூர், திருவள்ளூர், திருமழிசை, மாமல்லபுரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மறைமலைநகர், திருப்பெரும்புதூர் மற்றும் பரந்தூர் ஆகிய பகுதிகளுக்கு புதிதாக, புதுநகர் வளர்ச்சித் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. புதுநகர் திட்டங்களின் நோக்கம் என்னவென்றால்…

    சென்னையின் நெரி சலைக் குறைக்கவேண்டும், பொருளாதார மையங்களை உருவாக்க வேண்டும், போக்குவரத்து இணைப்புகளை ஏற்படுத்த வேண்டும், சென்னை மாநகரை சுற்றி இருக்கக்கூடிய பகுதிகளில் நிலையான வளர்ச்சியை உறுதிசெய்ய வேண்டும். இதுதான் நோக்கம்.

    கடந்த 10 ஆண்டுகளில், இப்படிப் பட்ட திட்டங்கள் தயாரிக்கும் பணி தேக்கமடைந்து இருந்தது. அந்த நிலையை மாற்ற நம்முடைய அரசு முனைப்போடு செயல்பட்டு வருகிறது. ஒற்றைச் சாளர முறை மற்றும் இணையதள கட்டிட அனுமதி பெறும் முறை தற்போது நிறை வேற்றப்பட்டிருக்கிறது.

    இந்த திட்டத்தின்கீழ், மனைப் பிரிவு மற்றும் கட்டிடம் ஆகியவற்றுக்கு வழங்கப்படும் திட்ட அனுமதிகளின் எண்ணிக்கை 45 விழுக்காடு அதிகரித்திருக்கிறது. ஒப்புதல் வழங்கு வதற்கான கால அளவு 180 நாட்களிலிருந்து 64 முதல் 90 நாட்களாக குறைந்திருக்கிறது.

    குடியிருப்பு கட்டிடங்களுக்கு கட்டிட முடிவுறு சான்று பெறுவதில் இருந்து, விலக்கு அளிக்கப்பட்டதால், இதுநாள் வரை 51 ஆயிரம் கட்டிட அனுமதிகள் பெறப்பட்டிருக்கிறது.

    அதனால், முன் அனுமதிக்கப்பட்ட 100 கட்டிடத்திட்டங்களை பதிவேற்றி இந்த செயல் முறையை மேலும் செம்மைப்படுத்தி எளிமையாக்கு வதற்கான முயற்சிகளை வீட்டுவசதித் துறை தற்போது மேற்கொண்டு வருகிறது.

    சென்னையின் உட்பகுதிகளில் ஏற்படும் நெரிசலை தவிர்க்கவும், வெளிவட்ட சாலைகளுக்கு இணைப்பை மேம்படுத்தவும், போக்குவரத்து முனையங்களை பரவலாக்கவும், சி.எம்.டி.ஏ மூலமாக கிளாம்பாக்கம், மாதவரம் மற்றும் குத்தம்பாக்கம் ஆகிய இடங்களில் மூன்று புதிய புறநகர் பேருந்து முனையங்களை உருவாக்கியிருக்கிறோம்.

    குத்தம்பாக்கம் பேருந்து முனையம் விரைவில் மக்களின் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது.

    செங்கல்பட்டு மற்றும் மாமல்லபுரத்தில் நவீன போக்குவரத்து முனையங்கள் அடுத்த ஆண்டு திறக்கப்பட இருக்கிறது.

    சென்னையின் நீண்ட கடற்கரை பகுதியும், ஏரிக ளும் இயற்கை நமக்கு வழங்கியிருக்கும் பெரும் கொடைகள். இதை மேம் படுத்த, முதற்கட்டமாக, சென்னை மாநகரில் அமைந்திருக்கும் 12 ஏரிகள் மற்றும் 4 கடற்கரைப் பகுதிகளைத் தேர்வு செய்து சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாமல் மக்கள் கூடும் இடங்களாக மேம்படுத்த 250 கோடி ரூபாய் செலவில் திட்டம் தயாரித்திருக்கிறது.

    இந்தத் திட்டம், பொழுதுபோக்கு சார்ந்த உட்கட்டமைப்பு வசதிகள், மழைநீரை சேகரித்து வெள்ளத்தை தடுக்கும் அமைப்போடு உருவாக்கப்படும்.

    ஸ்பாஞ்ச் பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள், விளையாட்டு வளாகங்கள், பல்நோக்கு மையங்கள் மற்றும் சந்தைகள், பேருந்து முனையங்கள், சுரங்கப்பாதைகளை நவீனபடுத்துதல், புதிய திட்ட சாலை இணைப்பு பகுதிகளை கண்டறிந்து மறுவடிவமைத்து மேம்படுத்துதல் போன்ற செயல்பாடுகள் என்று சென்னை பெருநகர வளர்ச்சிக் குழு மத்தால் 196 நகர்ப்புற வளர்ச்சித் திட்டங்கள், சுமார் 2 ஆயிரத்து 600 கோடி ரூபாய் முதலீட்டில், கடந்த 3 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதில், செம்மஞ்சேரியில் அமையவுள்ள நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய விளையாட்டு நகரம், தீவுத்திடலில் அமைய உள்ள உலகத்தரம் வாய்ந்த பொருட்காட்சி மையம் மற்றும் போரூர் நகர்ப்புறப் பகுதியில் அண்மையில் அமைக்கப்பட்ட பரந்து விரிந்த நன்செய் நிலப் பூங்கா ஆகியவை குறிப்பிடத்தக்க திட்டங்கள்.

    இதனை செயல்வடிவாக்க தற்பொழுது நடைமுறையில் இருக்கும் தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகள் 2019-ஐ புதுப்பிக்கும் செயல்பாடுகளில், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முழு ஈடுபாட்டோடு செயலாற்றி வருகிறது.

    நான் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்லும் போது பல முதலீட்டாளர்களை சந்திக்கக்கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

    அவர்கள் பெரும்பாலும் என்னிடத்தில் கேட்டது என்னவென்றால், சென்னை யிலும், மாநிலம் முழுவதும் இன்னும் கூடுதலாக தொழில் பூங்காக்களும், இன்னும் கூடுதல் அலுவலகக் கட்டிடம் தேவைப்படுகிறது என்று சொன்னார்கள். எனவே, தொழில் துறை கோரிக்கையை நீங்கள் நிறைவேற்ற வேண்டும்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ. அன்பரசன், கூடுதல் தலைமைச் செயலாளர் காகர்லா உஷா மற்றும் தொழில் அதிபர்கள், வங்கி அதிகாரிகள், கட்டுமான நிறுவனங்களின் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

    • பல அரசியல் கட்சியினர் போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்தியுள்ளனர்.
    • பல இடங்களில் இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது என வழக்கு விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்தார்.

    மதுரை:

    பழனியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி திவான் மைதீன் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் வரும் ஞாயிற்றுக்கிழமை 16-ந்தேதி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தலைமையில் பழனி மின்வாரிய அலுவலக சாலையில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி பழனி காவல் நிலையத்தில் விண்ணப்பித்திருந்தோம்.

    தைப்பூசத்தை காரணம் காட்டி எங்களுக்கு அனுமதி மறுத்து உத்தரவு பிறப்பித்து உள்ளனர். இது ஏற்கத்தக்கது அல்ல. எனவே காவல் நிலையத்தின் உத்தரவை ரத்து செய்து வரும் 16-ந்தேதி மாலை அதே இடத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனு நீதிபதி தனபால் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் வரும் ஞாயிற்றுக்கிழமை பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்துள்ளோம், அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. அந்த இடத்தில் பல அரசியல் கட்சியினர் போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்தியுள்ளனர். எங்களுக்கு மட்டும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது ஏற்கத்தக்கது அல்ல என வாதிட்டார்.

    அரசின் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் அன்பு நிதி ஆஜராகி மனுதாரர் அனுமதி கேட்கும் இடம் அருகில் பெரியார் சிலை அமைந்துள்ளது. இவர்கள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தற்போது பெரியாரை பற்றி அவதூறான கருத்துக்களை பேசி வருகிறார். இதனால் பல இடங்களில் இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது என வழக்கு விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்தார்.

    எனவே இந்த இடத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதிக்க முடியாது என்றும், தற்போது தைப்பூச விழா நடைபெறுவதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் என்றும், ஆகையால் இவர்கள் மாற்று இடமாக ஆயக்குடி பகுதியில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்குவோம் என தெரிவித்தார்.

    நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் இதனை ஏற்க மறுத்தார். இதனை தொடர்ந்து நீதிபதி தற்போது தைப்பூச நிகழ்வு என்பது அங்கே நடைபெற்று வருகிறது. மேலும் பொதுக்கூட்டம் நடத்தும் இடம் அருகே 50 அடி தூரத்தில் பெரியார் சிலை இருப்பதால் அந்தப் பகுதியில் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது.

    வேறு இடத்தை தேர்வு செய்து கொடுத்தால் அனுமதி வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும் எனக் கூறிய நீதிபதி, மனுதாரர் தரப்பில் தகவல் கேட்டு தெரிவிக்க கூறி வழக்கு விசாரணை சிறிது நேரம் ஒத்தி வைத்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஏற்கனவே மதுரையில் இந்து முன்ணணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளனர்.
    • இஸ்லாமியர்களுக்கு சொந்தம் என்று முடிவு செய்யப்பட்ட பிறகு மீண்டும் அது குறித்த பிரச்சனை எழுப்புவது சரியல்ல.

    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில், பாரத் இந்து முன்னணி அமைப்பின் வடசென்னை மாவட்ட துணை தலைவர் யுவராஜ் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், முருக பெருமானுக்கு சொந்தமான திருப்பரங்குன்றம் மலையில் சிக்கந்தர் தர்கா வைத்து இஸ்லாமியர்கள் சொந்தம் கொண்டாடுகின்றனர்.

    இதை கண்டித்து சென்னையில் வேல் ஏந்தி ஊர்வலம் செல்ல அனுமதி வழங்கும்படி போலீசாருக்கு உத்தரவிட வேண்டும். என்று கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது அரசு தரப்பில், 'ஏற்கனவே திருப்பரகுன்றம் உரிமை குறித்து பிரிவியூ கவுன்சில் வரை சென்று சிக்கந்தர் தர்கா, கொடி மரம், மலைவழி பாதை, நெல்லித்தோப்பு இஸ்லாமியர்களுக்கு சொந்தம் என்று முடிவு செய்யப்பட்ட பிறகு மீண்டும் அது குறித்த பிரச்சனை எழுப்புவது சரியல்ல.

    பேரணிக்கு அனுமதி வழங்கினாலும் அது தேவையற்ற விரும்பதகாத பிரச்சனைகளை உருவாக்கும். ஏற்கனவே மதுரையில் இந்து முன்ணணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளனர். மீண்டும் அதே பிரச்சனைக்காக சென்னையில் பேரணி நடத்துவதை நீதி மன்றம் ஊக்குவிக்க கூடாது' என்று வாதிடப்பட்டது.

    வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன் திருப்பரங்குன்றம் பிரச்சனைக்கும் சென்னைக்கும் என்ன தொடர்பு என்றும் தேவையில்லாமல் பிரச்சனையை உருவாக்க பார்க்கிறீர்கள் என மனுதாரருக்கு கண்டனம் தெரிவித்தார்.

    இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி பிறப்பித்தார். அதில் மேல் ஏந்தி சென்னையில் ஊர்வலம் நடத்த மனுதாரருக்கு அனுமதி வழங்க முடியாது இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன் என்று தீர்ப்பு அளித்தார்.

    • எதிர்க்கட்சிகள் முன்வைக்கக்கூடிய விவாதங்களுக்கு அவர்கள் செவிசாய்ப்பதில்லை என்பதே உண்மை.
    • ஜனநாயகத்தின் மீது பாராளுமன்றத்தின் மீது இருக்கக்கூடிய மரியாதை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வருகிறது.

    காஞ்சிபுரத்தில் தி.மு.க. எம்.பி. கனிமொழி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * கவர்னரே வேண்டாம் என்கிறோமே. கவர்னர் கவர்னராக செயல்படவில்லை. ஒரு அரசியல்வாதியாக தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்.

    * ஐஸ் என்று சொல்லுவோம் வருமான வரி, சிபிஐ, அமலாக்கத்துறை. இப்போது கவர்னர்களை 4-வது கரமாக தன்னுடைய ஆட்சி இல்லாத மாநிலங்களுக்கு பிரச்சனையை உருவாக்குவதற்காக தொடர்ந்து எதிராக செயல்படுவதற்கான ஒரு கருவியாக பயன்படுத்துகிறார்கள்.

    * எதிர்க்கட்சிகள் சொல்லக்கூடிய கருத்துகளை கேட்கக்கூடிய பொறுமை ஒன்றியத்தில் இருக்கக்கூடிய ஆளும் பா.ஜ.க.வுக்கு இல்லை. எந்த எதிர்வாதமாக இருந்தாலும் யார் பேசினாலும் சரி எதிர்க்கட்சிகள் சொல்லக்கூடிய கருத்துகளை கேட்பதற்கு அவர்கள் தயாராக இல்லை.

    * நாங்கள் கேட்கக்கூடிய கேள்விகளுக்கோ, எழுப்பக்கூடிய பிரச்சனைகளுக்கான விவாதங்களை ஏற்றுக்கொள்வதற்கோ அவர்கள் தயாராக இல்லை. எதிர்க்கட்சிகள் முன்வைக்கக்கூடிய விவாதங்களுக்கு அவர்கள் செவிசாய்ப்பதில்லை என்பதே உண்மை.

    * ஜனநாயகத்தின் மீது பாராளுமன்றத்தின் மீது இருக்கக்கூடிய மரியாதை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வருகிறது.

    * இதுபோன்று பேசியவர்கள் பலரை அறிவாலயம் பார்த்திருக்கிறது. தி.மு.க. பார்த்திருக்கிறது. யார், யாரை பிரிப்பது என்பதை பார்ப்போம் என்று அண்ணாமலைக்கு அவர் பதிலடி அளித்தார்.

      ராமேசுவரம்:

      ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தையும், ராமேசுவரத்தையும் இணைக்கும் வகையில் பாம்பன் கடலில் ரூ.550 கோடியில் புதிய ரெயில் பாலம் கட்டப்பட்டு உள்ளது. இந்த பாலத்தின் உறுதி தன்மை குறித்து தொடர் ஆய்வுகள் நடை பெற்று வருகின்றன.

      ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் நடத்திய ஆய்வின் போது கண்டறியப்பட்ட குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டன. தொடர்ந்து இரும்பால் ஆன இணைப்பு பகுதியை செங்குத்தாக மேலே தூக்கி இறக்கி கப்பல்கள், ரெயில்களை இயக்கி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.


      இதற்கிடையில் பொது மக்கள் விரைவில் புதிய ரெயில் பாலத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.

      பாம்பன் புதிய ரெயில் பாலம் இந்த மாத இறுதியில் பிரதமர் மோடி திறக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதையடுத்து பாம்பன் பாலத்தில் இறுதிகட்ட ஆய்வுப்பணிகள் நடைபெற்று வருகின்றன.


      இன்று காலை தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் மற்றும் அதிகாரிகள் மண்டபம் வந்தனர். அங்கிருந்து புதிய ரெயில் பாலத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பாலத்தின் உறுதித்தன்மை, தூக்கு பாலத்தின் தரம் உள்ளிட்ட வைகளை இறுதி கட்டமாக ஆய்வு செய்தனர்.

      தொடர்ந்து ராமேசுவரம் ரெயில் நிலையத்திலும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதற்கிடையே பாம்பன் புதிய ரெயில் பாலத்தை திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி வருகிற 28-ந்தேதி தமிழகம் வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பிரதமர் அலுவலகம் மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

      திறப்பு விழாவில் பங்கேற்க உள்ள நிலையில் மண்டபம் மற்றும் பாம்பனில் அதற்கான ஏற்பாடுகளை ரெயில்வே அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.

      • தி.மு.க. மாவட்டங்களின் எண்ணிக்கையை 100 ஆக உயர்த்த முடிவு.
      • புதிய மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்.

      சென்னை:

      2026-ம் ஆண்டு சட்ட சபை பொதுத் தேர்தலில் 200 தொகுதிகளில் தி.மு.க. வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கை முன் வைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார்.

      இதற்காக பல மாதங்களுக்கு முன்பே தி.மு.க. வியூகம் வகுத்து அதன் அடிப்படையில் செயல்பட்டு வருகிறது.

      இளைஞர் அணி செயலாளர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதற்கேற்ப கட்சியில் பல்வேறு சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

      இதற்கு வசதியாக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தி.மு.க. தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவை ஏற்கனவே அமைத்து இருந்தார். இந்த குழுவில் கட்சியின் முதன்மை செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, இளைஞரணி செயலாளர் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

      இந்த குழு தி.மு.க.வில் மேற்கொள்ள வேண்டிய மாறுதல்கள், அமைப்பு ரீதியான சீரமைப்புகளை தலைமைக்கு தெரிவிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது.

      இந்த குழு அண்ணா அறிவாலயத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் கூடி தி.மு.க.வில் உள்ள ஒவ்வொரு அணிகளின் மாநில நிர்வாகிகளை அழைத்து நிலவரங்களை கேட்டறிந்தது.

      அது மட்டுமின்றி எந்தெந்த மாவட்டங்களில் பிரச்சினை நிலவுகிறது என்பதையும் கேட்டறிந்தனர். மேலும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.க்களை தனியாக அழைத்தும் கட்சி நிலவரங்களை கேட்டு வந்தார்.

      இளைஞரணி அமைப்பாளர்களிடம் விவரங்கள் கேட்டறிந்து வந்தார். மாவட்ட செயலாளர்கள் எப்படி செயல்படுகிறார்கள்? கட்சிக்காரர்களுக்கு அமைச்சர்கள் உதவுகிறார்களா? மதிக்கிறார்களா? என்று பல்வேறு தகவல்களை கேட்டறிந்து வைத்துள்ளார்.

      இதன் அடிப்படையில் கட்சியை மேல்மட்ட அளவில் சீரமைக்க முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று பல்வேறு முடிவுகளை மேற்கொள்ள உதயநிதி ஸ்டாலின் முடி வெடுத்திருந்தார்.

      அந்த வகையில் மாவட்டச் செயலாளர்களின் அதிகாரத்தை பரவலாக்கும் வகையில் சென்னையில் 3 தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளரை நியமிக்கவும், மற்ற மாவட்டங்களில் 2 தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளரை நியமிக்கவும் பட்டியல் தயார் செய்யப்பட்டு வந்தது.

      அதாவது ஒரே பாராளுமன்ற தொகுதிக்குள் மாவட்டங்கள் அமையும் வகையில் புதிய மாவட்டச் செயலாளர்களை நியமிக்க ஏற்பாடுகள் நடந்து வந்தது.

      ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த பட்டியலை முதலில் ஏற்றுக் கொள்ளாமல் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று நிறுத்தி வைத்திருந்தார்.

      ஆனால் இப்போது 2026-ம் ஆண்டு பொதுத் தேர்தலை சந்திப்பதற்கு வசதியாக கட்சியை மேலும் பலப்படுத்த முடிவு செய்துள்ளார்.

      அதன் முதல் நடவடிக்கையாக தி.மு.க.வில் அமைப்பு ரீதியாக 72 மாவட்டங்கள் என்று இருப்பதை 76 மாவட்டங்களாக பிரித்துள்ளார்.

      அதன்படி ஈரோடு மாவட்ட தி.மு.க.வில் மத்திய மாவட்ட மும், திருப்பூர் மாவட்டத்தில் மேற்கு, தெற்கு ஆகிய 2 மாவட்டங்க ளும், விழுப்புரத்தில் மத்திய மாவட்டம் என 4 புதிய மாவட்டங்கள் உதயமாகி உள்ளன.

      இதன் மூலம் தி.மு.க. மாவட்டங்களின் எண்ணிக்கை 76 ஆக அதிகரித்து உள்ளது. புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு உடனடியாக மாவட்டச் செயலாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

      அந்த வகையில் ஈரோடு மத்திய மாவட்ட செயலாளராக அ.தி.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்திருந்த முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலத்துக்கு பதவி வழங்கப்பட்டது. ஈரோடு இடைத்தேர்தலில் சிறப்பாக பணியாற்றியதற்காக அவருக்கு இந்த பதவி கிடைத்துள்ளது.

      இதேபோல் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பிரச்சனைகளை சரி செய்வதற்காக விழுப்புரம் தெற்கு மாவட்டத்தில் இருந்து விழுப்புரம், வானூர் ஆகிய 2 தொகுதிகளை பிரித்து விழுப்புரம் மத்திய மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்டு உள்ளது.

      இந்த மாவட்டத்துக்கு டாக்டர் ஆர்.லட்சுமணன் எம்.எல்.ஏ. மாவட்ட செய லாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். இவரும் அ.தி.மு.க.வில் இருந்து தி.மு.க.வுக்கு வந்தவர்தான்.

      இதேபோல் திருப்பூரில் வடக்கு, தெற்கு என 2 மாவட்டங்களாக செயல் பட்ட தி.மு.க.வில் கிழக்கு, மேற்கு ஆகிய 2 மாவட்டங்கள் புதிதாக பிரிக்கப்பட்டு உள்ளது.

      இதில் தெற்கு மாவட் டத்தில் இருந்த காங்கேயம், தாராபுரம் ஆகிய 2 தொகு திகளை பிரித்து மேற்கு மாவட்டம் உருவாகி உள்ளது. இந்த மாவட்டத் துக்கு அமைச்சர் மு.பெ. சாமிநாதன் மாவட்ட செயலாளராகி உள்ளார்.

      வடக்கு மாவட்டத்தில் இருந்து பல்லடம், திருப்பூர் தெற்கு ஆகிய 2 சட்டசபை தொகுதிகளை பிரித்து கிழக்கு மாவட்டமாக்கி அதற்கு செல்வராஜ் எம்.எல்.ஏ. மாவட்டச் செயலளாராகி உள்ளார். அவர் வகித்து வந்த வடக்கு மாவட்ட செயலாளர் பதவி தினேஷ்குமாருக்கு வழங்கப்பட்டுள்ளது.

      திருப்பூர் தெற்கு மாவட்டச் செயலாளராக இல.பத்மநாபன் தொடர்கிறார். மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் தளபதி எம்.எல்.ஏ.விடம் இருந்த மதுரை மேற்கு தொகுதி, மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் மூர்த்தி வசம் வந்துள்ளது.

      இதேபோல் பதவி பறிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு மீண்டும் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

      திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தில் டி.ஜெ.எஸ்.கோவிந்தராஜன் எம்.எல்.ஏ. வசம் இருந்த மாவட்டச் செயலாளர் பதவி பறிக் கப்பட்டு வல்லூர் எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

      இதே போல் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளராக இருந்த அண்ணாதுரை எம்.எல்.ஏ.வுக்கு பதில் பட்டுக்கோட்டை பழனி வேல் நியமிக்கப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்ட செய லாளராக இருந்த முபாரக் விடுவிக்கப்பட்டு அந்த பதவிக்கு கே.எம்.ராஜூ நியமிக்கப்பட்டுள்ளார்.

      நெல்லை மத்திய மாவட்ட பொறுப்பாளராக இருந்த மைதீன்கானுக்கு பதிலாக பேட்டை அப்துல்வகாப் எம்.எல்.ஏ. நியமிக்கப் பட்டுள்ளார்.

      இன்னும் தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி, கரூர், திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

      அமைப்பு ரீதியாக தி.மு.க. மாவட்டங்களின் எண்ணிக்கையை 100 ஆக உயர்த்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாகவும் அதற்கு ஏற்ப அடுத்தடுத்த நாட்களில் அறிவிப்புகள் வெளிவரும் என்றும் தெரிகிறது.

      • திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் விசைத்தறிகள், 20 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள் இயங்கி வருகின்றது.
      • நேரடியாகவும், மறை முகமாகவும் சுமார் 5 லட்சம் பேர் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர்.

      பல்லடம்:

      திருப்பூர் மாவட்டம் பல்லடம் விசைத்தறிக்கூடங்களில் கருப்புக்கொடி ஏற்றி விசைத்தறியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

      இது குறித்து கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க பொருளாளர் பூபதி கூறியதாவது:-


      கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் விசைத்தறிகள், 20 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள் இயங்கி வருகின்றது. இதன் மூலம் நேரடியாகவும், மறை முகமாகவும் சுமார் 5 லட்சம் பேர் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர்.

      இந்தநிலையில் கூலி ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கு வர மறுக்கும் ஜவுளி உற்பத்தியாளர்களை கண்டித்தும், மாநில, மாவட்ட அரசு நிர்வாகங்கள் உடனடியாக தலையிட்டு கூலி உயர்வு பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்தியும் கோவை, திருப்பூர் மாவட்ட விசைத்தறி கூடங்களில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடைபெறுகிறது.

      இவ்வாறு அவர் தெரிவித்தார்.

      • கடந்த முறை நடந்த தேர்தலில் அந்தியூர் தொகுதியில் அதிமுக தோல்வி அடைந்தது.
      • ஆர்பி உதயகுமார் என்னை பற்றி பேசவில்லை என அவர் தெளிவாக கூறிவிட்டார்.

      கோபி:

      ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த அத்தாணியில் நேற்று இரவு முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி. ஆரின் பிறந்தநாள்விழா பொதுகூட்டம் நடைபெற்றது. இதில் கே.ஏ. செங்கோட்டையன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார்.

      அப்போது அவர் கூறும் போது, அந்தியூர் தொகுதியில் கடந்த தேர்தலின் போது சில துரோகிகளால் நாம் வெற்றியை இழந்தோம் என்று பேசினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

      இந்நிலையில் ஈரோடு மாவட்டம் கோபி அருகே ல.கள்ளிப்பட்டி பகுதியில் கால்நடை மருத்துவமனை, நாய்கள் பராமரிப்பு விடுதி மற்றும் இனப்பெருக்க தடுப்பு மையம் ஆகியவற்றை முன்னாள் அமைச்சரும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ இன்று திறந்து வைத்தார்.

      பின்னர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

      அந்தியூர் சட்டசபை தொகுதியில் சேவல் இரட்டை இலை சின்னத்தில் தொடர்ந்து வெற்றி பெற்று வந்துள்ளோம். ஆனால் கடந்த முறை நடந்த தேர்தலில் அந்தியூர் தொகுதியில் அதிமுக தோல்வி அடைந்தது. சில பேர் செய்த துரோகத்தால் நாம் தோல்வி அடைந்தோம். அதைத்தான் நாம் கவனமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினேன். துரோகம் என்ற வார்த்தை அந்தியூர் தொகுதிக்கு மட்டுமே பொருந்தும். முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் என்னை பற்றி பேசவில்லை என அவர் தெளிவாக கூறிவிட்டார்.

      அப்போது பொதுக் கூட்டங்களில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பெயரை குறிப்பிட வில்லையே என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

      அதற்கு பதில் அளித்த செங்கோட்டையன்,

      நேற்று முன்தினம் கோபி அருகே நடந்த பொதுக்கூட்டத்திலும், நேற்று இரவு அந்தியூர் அருகே நடந்த பொதுக் கூட்டத்திலும், அ.தி.மு.க பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும் என்று அழுத்தமாக கூறினேன் என்றார். அதைத்தொடர்ந்து நிருபர்கள் கேள்வி கேட்க அவர் பதில் அளிக்காமல் அங்கிருந்து கிளம்பி சென்றார்.

      இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
      • தென்காசியைச் சேர்ந்த 4 வயது சிறுவன் உயிரிழந்திருக்கும் செய்தி, மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
      • தி.மு.க. அரசின் சுகாதாரத்துறை ஒழுங்காகச் செயல்படுவதற்கு இன்னும் எத்தனை உயிர்களைப் பறிகொடுக்க வேண்டும்?

      சென்னை:

      தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதளப் பதிவில் கூறி இருப்பதாவது:-

      திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மருத்துவர் இல்லாத நிலையில், அங்கிருந்த உதவியாளர் ஒருவர் ஊசி போட்டதால், தென்காசியைச் சேர்ந்த 4 வயது சிறுவன் உயிரிழந்திருக்கும் செய்தி, மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.

      சிறுவன் குடும்பத்தினருக்கு, தி.மு.க. கட்சியில் இருந்து உதவி செய்யப் போவதாகக் கூறியிருப்பது, தி.மு.க. அரசின் தோல்வியை மூடி மறைக்கவா? தி.மு.க. கொடுக்கும் பணம், குழந்தையின் உயிருக்கு ஈடாகி விடுமா? தமிழக அரசு ஏன் பொறுப்பேற்கவில்லை? அரசு சார்பில் ஏன் இழப்பீடு அறிவிக்கவில்லை?

      தி.மு.க. அரசின் சுகாதாரத்துறை ஒழுங்காகச் செயல்படுவதற்கு இன்னும் எத்தனை உயிர்களைப் பறிகொடுக்க வேண்டும்?

      இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

      • முகம் தெரியாதவர்களுக்கு கூட, உதவிகளை செய்துள்ளார்.
      • குடும்பமே சிதைந்து போய் நிற்கிறது.

      சென்னை:

      சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வடக்கு மண்டல இணை கமிஷனராக பணிபுரிந்து வந்த ஐ.பி.எஸ். அதிகாரி மகேஸ்குமார் மீது 2 பெண் போலீசார் பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

      இதுதொடர்பாக அவர் மீது உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் பரபரப்பு திருப்பமாக போலீஸ் அதிகாரி மகேஸ்குமார் மனைவி அனுராதா பெண் போலீஸ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார்.

      எனது கணவரை திட்டமிட்டு பழிவாங்கி உள்ளனர் என்றும் பாலியல் புகார் அளித்த பெண் போலீஸ் எனது கணவரோடு நெருங்கி பழகியவர் எனவும் அவர் கூறியிருப்பது, காவல்துறை வட்டாரத்தில் புதிய புயலை கிளப்பி உள்ளது.

      இதுதொடர்பாக ஐ.பி.எஸ். அதிகாரியின் காதல் மனைவியான அனுராதா அளித்துள்ள பேட்டி வருமாறு:-

      எனது திருமண நாளான நேற்று இடி விழுந்தது போன்று உணர்கிறேன். இது போன்று ஒரு பழிவாங்கும் செயலை அந்த பெண் செய்திருப்பது எனக்கு பெரிய அதிர்ச்சியாக உள்ளது.

      எனது கணவரை நள்ளிரவு 12 மணிக்கு எழுப்பி அவரது சஸ்பெண்டு உத்தரவை வழங்கியதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. அவரது சின்சியரான உழைப்புக்கு கிடைத்த பெரிய அவமானமாகும்.

      எனது கணவர் வேலை செய்த இடங்களில் எல்லாம் தங்கமாகவே வேலை செய்துள்ளார். 'தெய்வமே' என்று அழைக்கும் அளவுக்கு அவர் எல்லோருக்கும் நல்லது செய்துள்ளார்.

      முகம் தெரியாதவர்களுக்கு கூட, உதவிகளை செய்துள்ளார். பெண் காவலரின் செயலால் எனது கணவர் பாதிக்கப்பட்டு குடும்பமே சிதைந்து போய் நிற்கிறது.

      பெண் போலீசுக்கு எனது கணவர் பாலியல் துன்புறுத்தல் அளித்தார் என்று கூறுகிறார்கள்.

      ஆனால் அதுபோன்று எதுவுமே இல்லை. இருவருக்கும் இடையே தவறான உறவு இருந்தது.

      இது தெரிந்ததும் பலமுறை இருவரையும் கண்டித்துள்ளேன். அந்த பெண்ணிடம் போனில் கெஞ்சியுள்ளேன். எனக்கும் ஒரு குடும்பம் உள்ளது. உனக்கும் ஒரு குடும்பம் இருக்கிறது. எனவே இது போன்று செய்யாதீர்கள் என்று கூறியுள்ளேன்.

      எங்கள் குடும்பமே போலீஸ் குடும்பம் என்பதால் அநீதி நடந்தால் அதனை எதிர்த்து கேட்பதே எனது குணமாக உள்ளது.

      இதுபோன்ற சூழலில் எங்கள் குடும்பத்தை பிரிக்கும் எண்ணத்தில் புகார் அளித்திருப்பது தாங்க முடியாத வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

      எனது கணவரிடம் அடிக்கடி பணம் கேட்டு மிரட்டி உள்ளார். அவரும் கேட்கும் போதெல்லாம் பணம் கொடுத்து வந்துள்ளார். தற்போது மறைமலைநகரில் பெண் போலீஸ் புதிதாக வீடு கட்டி வருகிறார். இதற்கு எனது கணவர் பல வழிகளிலும் உதவிகளை செய்துள்ளார்.

      இருப்பினும் வீடு கட்டுவதற்காக ரூ.25 லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். அந்த பணத்தை கொடுக்காத காரணத்தாலேயே அவர் புகார் அளித்துள்ளார்.

      கடந்த ஓராண்டாகவே எனது கணவருக்கும் பெண் போலீசுக்கும் இடையே பழக்கம் இருந்து வரும் நிலையில், நாளடைவில் அது சரியாகிவிடும் என்றே நினைத்திருந்தேன். ஆனால் பழிவாங்க வேண்டும் என்கிற எண்ணத்தில் அந்த பெண் இப்படி செய்துள்ளார்.

      இதன் மூலம் காவல் துறையில் 25 ஆண்டுகளாக வளர்த்தெடுத்த எனது கணவரின் பெயர் சிதைந்து போயுள்ளது. அவரது காக்கி சட்டையை கழற்ற நினைப்பது உயிரை பிச்சி எடுப்பது போல உள்ளது.

      காக்கிச் சட்டையில்தான் எங்களது காதலே மலர்ந்தது. எனவே பெண் காவலர் அளித்துள்ள புகாரில் அவசரப்பட்டு எனது கணவரின் பெயரை கெடுக்கக் கூடாது என்று தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறேன்.

      பெண் காவலர் எனது கணவரிடம் ஐ.பி.எல். டிக் கெட்டை இலவசமாக கேட்டு வாங்கிச் சென்று கிரிக்கெட் பார்த்துள்ளார். நகை-பணத்தை பறித்துள்ளார்.

      மறைமலைநகரில் கட்டி வரும் வீட்டுக்கு பெண் காவலர் ரூ.25 லட்சம் கேட்டதும் என்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறிய எனது கணவர் உள் அலங்கார பணிகளுக்காக ஒருவரை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்.

      இருவரும் விருப்பப்பட்டு ஒன்றாக பழகிய பின்னர் எப்படி பாலியல் துன்புறுத்தல் என புகார் அளிக்க முடியும்?

      சம்பந்தப்பட்ட பெண் போலீஸ் எனது கணவருடன் சொகுசு விடுதிக்கும் சென்று தங்கியுள்ளார். இதற்கு என்ன காரணமாக இருக்க முடியும். நல்லபடியாக பேசக்கூடிய விஷயங்கள் என்றால் அலுவலகத்தில் வைத்தே பேசிக் கொள்ளலாமே. இப்படி பலமுறை வெளியில் அறை எடுத்து இருவரும் தங்கியுள்ளனர்.

      எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்? என ஐ.பி.எஸ். அதிகாரி மீது புகார் அளித்துள்ள பெண் அவர் அறை எடுத்து வெளியில் தங்குவதற்கு என்னை அழைத்தார் என கூறி புகார் அளிக்காதது ஏன்? தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த எனது கணவர் மீது காழ்ப்புணர்ச்சியால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என்பது தெரியவில்லை.

      என்ன நடந்தது? என்பது பற்றி எங்கள் தரப்பில் இருந்து விளக்கம் அளிப்பதற்கு அவகாசம் அளிக்காமலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெண் போலீசுக்கு ஜிமிக்கி உள்ளிட்ட பல நகைகளையெல்லாம் வாங்கி கொடுத்துள்ளார்.

      இதுபோன்ற பரிமாற்றங்கள் அடிக்கடி நடந்துள்ளன. ரூ.5 ஆயிரம் 10 ஆயிரம் என அடிக்கடி கேட்டு வாங்கியுள்ளார்.

      கடந்த 7-ந் தேதி கூட எனது கணவருடன் வெளியில் சென்று பெண் போலீஸ் தி.நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளார். (இதற்கான வீடியோ ஆதாரத்தை வெளியிட்டார்.) இருவரும் விரும்பியே இப்படி வெளியில் சென்று வந்தார்கள்? என்பதை வெளி உலகுக்கு தெரியப்படுத்தவே இதையெல்லாம் தெரிவித்துள்ளோம்.

      இவ்வாறு ஐ.பி.எஸ். அதிகாரியின் மனைவி தெரிவித்துள்ளார்.

      அதிகாரி மனைவி பேட்டியின் போது வெளியிட்ட வீடியோவில் ஐ.பி.எஸ். அதிகாரி மகேஸ் குமாரும், பெண் போலீசும் விடுதியில் தங்குவதற்காக ஒன்றாக செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளன.

      இதன் மூலம் சென்னை காவல் துறையில் ஐ.பி.எஸ். அதிகாரி-பெண் போலீஸ் இடையே இருந்து வந்த காதல் விவகாரம் பூதாகரமாக வெடித்து வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

      • செங்கோட்டையன் அரசியலில் மிகப்பெரிய அனுபவம் கொண்டவர்.
      • முத்துசாமிக்கு சில சோதனைகள் வந்தபோது இந்த இயக்கத்தை காட்டிக்கொடுத்துவிட்டு எதிரணிக்கு சென்று இன்று அமைச்சராக இருக்கிறார்.

      கிருஷ்ணகிரியில் அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

      அண்ணன் செங்கோட்டையன் அ.தி.மு.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவர்.

      புரட்சித் தலைவர் மறைவிற்கு பின்பாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இந்த இயக்கத்தை தலைமை ஏற்று வழிநடத்தியபோது, இயக்கத்திற்கு ஒரு தளபதியாக செயலாற்றியவர். அரசியலில் மிகப்பெரிய அனுபவம் கொண்டவர். அரசியலில் ஏற்றத்தாழ்வுகளை சந்தித்தவர். அவர் உழைப்பிற்கு ஏற்ப புரட்சித் தலைவி உயர்ந்த பதவிகளை கொடுத்து அழகு பார்த்தார்.

      புரட்சித் தலைவி அவரை எந்தளவிற்கு மதிப்போடும், மரியாதையோடும் வழி நடத்தினார்களோ அதேபோல் இன்றளவில் கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார், மூத்த தலைவராக இருக்கக்கூடிய செங்கோட்டையன் அவர்களை மதித்து அழைத்து செல்கிறார் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

      அண்ணன் செங்கோட்டையனை பொறுத்தவரை இந்த இயக்கத்தோடு ஒன்றிணைந்து இருப்பவர். அவரோடு அந்த மாவட்டத்தில் இருந்த முத்துசாமிக்கு சில சோதனைகள் வந்தபோது இந்த இயக்கத்தை காட்டிக்கொடுத்துவிட்டு எதிரணிக்கு சென்று இன்று அமைச்சராக இருக்கிறார்.

      ஆனால் அதே மாவட்டத்தில் இருக்கின்ற தலைவர் செங்கோட்டையன், பல்வேறு சோதனைகளை சந்தித்தாலும் நம்முடைய உழைப்பால் இந்த இயக்கம் வளர்ந்திருக்கிறது என்ற சிந்தனையோடு இந்த இயக்கத்திற்கு கடைசி வரை உறுதுணையாக இருப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

      அ.தி.மு.க. என்ற இயக்கம் முழுமையாக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பின்னால் உள்ளது. அ.தி.மு.க.வின் உட்கட்சி விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிட எந்த உரிமையும் இல்லை.

      பொதுச்செயலாளர் இ.பி.எஸ். குறித்து பேசுவதற்கு எந்தவித தகுதியும் தார்மீக உரிமையும் டிடிவி தினகரனுக்கு இல்லை. அரசியல் ரீதியாக, எதிர்க்கட்சியாக விமர்சிக்கலாம். எங்களுடன் இணைவோம் என சொல்வதற்கு டி.டி.வி. தினகரனுக்கு உரிமையில்லை.

      நடிகரும் த.வெ.க. தலைவருமான விஜய் பாதுகாப்புக்காக Y பிரிவு பாதுகாப்பு தரப்பட்டிருந்தால் மகிழ்ச்சி. அரசியல் ரீதியாக த.வெ.க. தலைவர் விஜயை தன்பக்கம் இழுப்பதற்காக Y பிரிவு பாதுகாப்பு தரக்கூடாது என்று கூறினார்.

      • ஊராட்சிகளில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிறப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
      • அத்தியாவசியப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஊரக வளர்ச்சித் துறை அனைத்துப் பணியாளர் சங்கம் தெரிவிக்கிறது.

      சென்னை:

      முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

      தமிழ்நாடு முழுவதும் உள்ள 38 மாவட்டங்களில் பன்னிரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஊராட்சிகள் இருக்கின்ற நிலையில், ஒன்பது மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக் காலம் முடிவடைந்துவிட்டது.

      இந்த ஊராட்சிகளில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிறப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆனால், ஆயிரக்கணக்கான ஊராட்சிகளில் செயலாளர் பணியிடங்கள் காலியாக இருக்கின்ற ஓர் அவல நிலை நீடிக்கிறது.

      ஒரு செயலாளர் ஒன்றுக்கும் மேற்பட்ட ஊராட்சிகளை கவனிக்கும் நிலை உள்ளதால், ஊராட்சிகளின் அத்தியாவசியப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஊரக வளர்ச்சித் துறை அனைத்துப் பணியாளர் சங்கம் தெரிவிக்கிறது. ஊராட்சிகளில் காலியாக உள்ள ஊராட்சி செயலாளர் மற்றும் தூய்மைப் பணியாளர் பணியிடங்களை நிரப்ப முதலமைச்சர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

      இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

      ×