என் மலர்
மகாராஷ்டிரா
- மகாராஷ்டிரா அரசு பெண்களுக்கு மாதந்தோறும் 1500 ரூபாய் வழங்குகிறது.
- அக்டோபர்-நவம்பரில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் இது சாதகமாக அமையும் என அரசு நினைக்கிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வர இருப்பதால் ஆளுங்கட்சிகளான பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் மீண்டும் ஆட்சியை பிடிக்க முனைப்பு காட்டுகின்றன. அதேவேளையில் காங்கிரஸ், சரத் பவார், உத்தவ் தாக்கரே ஆட்சியை கைப்பற்ற தீவிரமாக உள்ளனர். இதனால் கடும்போட்டி நிலவி வருகிறது.
இந்தநியைில் மகாராஷ்டிரா மாநில அரசு பெண்களுக்கு மாதந்தோறும் 1500 ரூபாய் வழங்கும் லட்கி பகின் (Ladki Bahin) திட்டம் இன்று முறைப்படி தொடங்கப்பட்டது. புனேவில் இத்திட்டத்தை தொடங்கிய வைத்த முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 1500 ரூபாய் 3 ஆயிரம் ரூபாயாக அதிகரித்து வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.
இந்த திட்டம் ஆளுங்கட்சிக்கு தேர்தலில் சாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அரசுக்கு இது திருப்பு முனையாக அமையாது. அதற்குப்பதில் அவர்களுக்கு U-turn ஆக அமையும் என உத்தவ் தாக்கரே சிவ சேனாவின் சங்சய் ராவத் தெரிவித்துள்ளார். இதற்கு முந்தைய அரசு பல நலத்திட்டங்களை அமல்படுத்தியுள்ளது என்றார்.
மகாராஷ்டிர மாநிலத்தில் 21 வயது முதல் 60 வயது வரையிலான திருமணம் முடிந்த பெண்கள், விதவை, ஆதரவற்ற பெண்களுக்கு (குடும்ப வருமானம் ஆண்டிற்கு 2.5 லட்சம்) இந்த உதவித்தொகை வழங்கப்பட்டது.
- சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு ஜம்மு காஷ்மீரில் முதல் முறையாக தேர்தல் நடைபெற உள்ளது
- காஷ்மீரில் அதிகரித்துள்ள பயங்கரவாத தாக்குதல்கள் மத்திய பாஜக அரசின் தோல்வியை காட்டுவதாக தேர்தல் ஆணையமே தற்போது ஒப்புக்கொண்டுள்ளது' என்று தெரிவித்துள்ளார்
சட்டமன்றத் தேர்தல்கள் அறிவிப்பு
அரியானா, மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் விரைவில் பதவிக்காலம் முடியவுள்ள நிலையில். சட்டசபை தேர்தல் நடைபெறும் தேதிகள் அறவிக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. அதன்படி, ஜம்மு காஷ்மீர், அரியானா மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் செப்டம்பர் 18, 25 ,அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்றும் அரியானாவில் உள்ள 90 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக அக்டோபர் 1ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் நேற்று அறிவித்திருந்தார். கடந்த முறை அரியானாவிற்கும் மகாராஷ்டிராவிற்கும் ஒரே சமயத்தில் சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படும் நிலையில் இந்த வருடம் மகாராஷ்டிர தேர்தல் தாமதமாகியுள்ளது. நவம்பர் மாதமே அங்கு தேர்தல் நடக்கும் என்று தெரிகிறது. இது அரசியல் களத்திலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா தேர்தலுக்கு என்னதான் ஆச்சு? - ஆணையம் சொல்வது என்ன?
'சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு ஜம்மு காஷ்மீரில் முதல் முறையாக தேர்தல் நடைபெற உள்ளதாலும் , அங்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய சூழல் உள்ளதாலும் மகாராஷ்டிராவில் அதே நேரத்தில் கவனம் செலுத்த முடியாது. கடந்த முறை நிலைமை வேறு. அப்போது காஷ்மீர் தேர்தல் நடக்கவில்லை. ஆனால் இப்போது காஷ்மீருக்கு அதிக பாதுகாவலர்கள் தேவைப்படுகிறார்கள். அது மட்டுமின்றி தற்போது மகாராஷ்டிராவில் கனமழை காலமாக உள்ளது. [விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி] என வரிசையாக விழாக்களும் வர உள்ளது. எனவேதான் மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தல் தாமதமாகிறது' என்று ராஜீவ் குமார் தெரிவித்தார்.
அரசியலாகும் தேர்தல் தாமதம்
ஆனால் இந்தியா கூட்டணி மகா விகாஸ் தலைவர்கள் இந்த தாமதத்தைச் சுட்டிக்காட்டி மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்துள்ளனர். உத்தவ் தாக்கரே சிவசேனா அணியை சேர்ந்த ஆதித்ய தாக்கரே தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'தேர்தல் ஆணையம் பாஜவின் ஊதுகுழலாக செயல்பட்டு வருகிறது. சட்டவிரோத பாஜக அரசு மனசாட்சியின்றி செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. கான்டிராக்டர்கள் மூலம் மாநிலத்தை பாஜக கூட்டணி இன்னும் கொஞ்சம் கொள்ளையடிக்கத் தேர்தல் ஆணையம் வழி செய்து கொடுத்துள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்காமல் இருப்பதற்கு இன்னும் தேர்தல் ஆணையத்தின் எஜமான் பாஜக தலைமையிலிருந்து உத்தரவு வரததே காரணம். தேர்தல் தாமதத்துக்கு காஷ்மீரை காரணமாக கூறுகின்றனர். எனவே சமீப காலமாக அங்கு அதிகரிக்கத்தொடங்கியுள்ள பயங்கரவாத தாக்குதல்கள் மத்திய பாஜக அரசின் தோல்வியை காட்டுவதாக தேர்தல் ஆணையமே தற்போது ஒப்புக்கொண்டுள்ளது' என்று கடுமையாக சாடியுள்ளார்.
- மேம்பாலத்தின் பிடியில் தொங்கிக் கொண்டிருந்த பெண்ணை கடும் முயற்சிக்கு பிறகு பத்திரமாக மீட்பு.
- சம்பவம் தொடர்பான காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள அடல் சேது என்றும் அழைக்கப்படும் மும்பை டிரான்ஸ் ஹார்பர் இணைப்பிலிருந்து பெண் ஒருவர் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடல் சேது மேம்பாலத்தின் பாதுகாப்பு தடுப்பு மீது இளம்பெண் ஒருவர் அமர்ந்திருந்தார். அவர் அருகே, வாடகை காரும், கார் ஓட்டுநரும் இருந்தனர். அப்போது, ரோந்து வாகனத்தில் போலீசார் அருகே வந்த நிலையில், அந்த பெண் எதையோ கடலில் தூக்கி எறிந்து, அடுத்த நொடியே திடீரென கடலில் குதிக்க முயன்றார்.
இதை சற்றும் எதிர்பாராத கார் ஓட்டுநர் பெண்ணின் தலை முடியை கெட்டியாக பிடித்துக் கொண்டார். பின்னர், ரோந்து போலீசார் மற்றும் கார் ஓட்டுநர் இணைந்து, பெண்ணை கடும் முயற்சிக்கு பிறகு பத்திரமாக மீட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பான காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சம்பந்தப்பட்ட பெண் ரீமா முகேஷ் படேல் என்பதும், அவர் மும்பையின் வடகிழக்கில் உள்ள புறநகரான முலுண்டில் வசிப்பவர் என்பதும் தெரியவந்துள்ளது.
கடந்த மாதம் 38 வயதுடைய நபர் ஒருவர் பாலத்தில் இருந்து குதித்து உயிரிழந்தார். டோம்பிவ்லியில் வசித்து வந்த பொறியியலாளர்ஸ்ரீனிவாஸ், மும்பை டிரான்ஸ் ஹார்பர் இணைப்பின் நவா ஷேவா முனையில் தனது காரை ஓட்டிச் சென்று தற்கொலை செய்து கொள்வதற்கு முன் நிறுத்தியதை பாலத்தின் சிசிடிவி காட்சிகள் காட்டியது என்பது குறிப்படத்தக்கது.
- எதிர்க்கட்சிகளான மகா விகாஸ் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
- இந்த தேர்தல் என்பது மகாராஷ்டிராவின் சுயமரியாதையை காப்பதற்கான போராட்டம் என்றார்.
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்த ஆண்டு அக்டோபர் அல்லது நவம்பரில் சட்டசபைத் தேர்தல் நடக்கலாம்.
எதிர்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாதி கூட்டணியில், சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி), தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் அணி) மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில், மகாராஷ்டிராவில் எதிர்க்கட்சிகளான மகா விகாஸ் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
இந்தச் சட்டசபைத் தேர்தல் என்பது மகாராஷ்டிராவின் சுயமரியாதையை காப்பதற்கான போராட்டம்.
கடந்த பல தேர்தலில் பா.ஜ.க. உடனான கூட்டணி அனுபவம், அதிக எம்.எல்.ஏ.க்களைப் பெற கூட்டணியில் உள்ள பிற கட்சி வேட்பாளர்களை வீழ்ச்சியடைய செய்கின்றனர் என்பதை உணர்ந்திருக்கிறோம்.
அதனால் அதிக எம்.எல்.ஏ.க்கள் கொண்ட கட்சிக்கு முதல் மந்திரி பதவி என்ற கொள்கைக்கு ஆதரவளிக்கப் போவதில்லை.
மகா விகாஸ் அகாதியின் முதல் மந்திரி வேட்பாளர் யார் என்பதை நாங்கள் முடிவு செய்வோம். நான் அதனை ஆதரிப்பேன்.
காங்கிரஸ் கட்சியும், தேசியவாத காங்கிரஸ் கட்சியும் (சரத் பவார்) அவர்களின் முதல் மந்திரி வேட்பாளரை அறிவிப்பர். நான் அவர்களுக்கு ஆதரவு அளிப்பேன்.
ஏனென்றால் நாங்கள் மகாராஷ்டிராவின் முன்னேற்றத்துக்காக உழைக்கிறோம். மக்கள் விரும்புவது எங்களைத் தான், உங்களை அல்ல என தெரிவித்தார்.
- மாநில அரசு மக்களவை தேர்தலின்போது அன்பான சகோதரியை நினைவில் கொள்ளவில்லை.
- மகாராஷ்டிர மாநில சட்டமன்ற தேர்தலின்போது அன்பு நிரம்பி வழியத் தொடங்கியுள்ளது.
பாராமதி மக்களவை தொகுதியில் சரத் பவார் மகள் சுப்ரியா சுலேவை எதிர்த்து அஜித் பவார் தனது மனைவியை நிறுத்தினார். இதில் சுப்ரியா சுலே வெற்றி பெற்றார். ஒரு சில தினங்களுக்கு முன் சகோதரி சுப்ரியா சுலேவுக்கு எதிராக மனைவியை நிறுத்தியது தவறு. அதற்கான வருந்துகிறேன் எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் மாநில தேர்தலின்போது தங்கை மீதான அன்பு நிரம்பி வழிகிறது என சுப்ரியால சுலே, அஜித் பவாரை கிண்டல் அடித்துள்ளார்.
இது தொடர்பாக மக்களவை எம்.பி.யான சுப்ரியா சுலே கூறியதாவது:-
மாநில அரசு மக்களவை தேர்தலின்போது அன்பான சகோதரியை நினைவில் கொள்ளவில்லை. மகாராஷ்டிர மாநில சட்டமன்ற தேர்தலின்போது அன்பு நிரம்பி வழியத் தொடங்கியுள்ளது.
சொந்தம் மற்றும் தொழில் ஆகியவற்றை சகோதரரால் வேறுபடுத்தி பார்க்க முடியவில்லை என்பது கவலை அளிக்கிறது. ஒன்று உறவுக்குள் (சொந்தம்) பணத்தை கொண்டு வரக்கூடாது, தொழிலில் உறவை கொண்டு வரக்கூடாது. எனினும், எங்களுடைய சகோதரர் இதை புரிந்து கொள்வதில் தோல்வியடைந்துள்ளார். இது எங்களுக்கு மிகவும் வலியை கொடுக்கிறது.
இவ்வாறு சுப்ரியா சுலே தெரிவித்தார்.
- அமெரிக்கா, ஐரோப்பிய பங்குச்சந்தைகள் உயர்ந்த நிலையில் இந்திய பங்குச்சந்தைகளும் உயர்ந்து காணப்பட்டது.
- ஐ.டி. நிறுவன பங்குகளை வாங்க முதலீட்டார்கள் ஆர்வம் காட்டியது உயர்வுக்கு முக்கிய காரணம்.
மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் 1,330.96 புள்ளிகள் உயர்ந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது. கடந்த சில நாட்களாக இறங்கு முகமாக இருந்த பங்குசந்தை இன்று உயர்ந்து காணப்பட்டது.
நேற்று முன்தினம் மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் 79,105.88 புள்ளிகளுடன் வர்த்தம் நிறைவடைந்தது. இன்று காலை 79754.85 புள்ளிகளுடன் வர்த்தகம் தொடங்கியது. சுமார் 650 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் தொடங்கியது. இடையில் குறைந்தபட்சமாக 79,306.69 புள்ளிகளில் வர்த்தகமானது. அதிகபட்சமாக 80,518.21 புள்ளிகளில் வர்த்தகமானது. இறுதியாக சென்செக்ஸ் 80,436.84 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. ஏறக்குறைய 1.68 சதவீதம் உயர்ந்து வர்த்தகமானது.
டெக் மஹிந்த்ரா, மஹிந்த்ரா அண்டு மஹிந்த்ரா, டாட்டா மோட்டார்ஸ், அல்ட்ராடெக் சிமெண்ட், டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ், ஹெச்.சி.எல். டெக்னாலாஜிஸ், ஐசிஐசிஐ வங்கி, டாட்டா ஸ்டீல் நிறுவன பங்குகள் உயர்வை கண்டன.

இந்திய பங்குச்சந்தை குறியீடு நிஃப்டி 397.40 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகம் நிறைவடைந்தது. இந்திய பங்குச் சந்தை நிஃப்டி நேற்றுமுன்தினம் 24143.75 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை 24563.90 புள்ளிகளுடன் இந்திய பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கியது. இன்று குறைந்தபட்சமாக நிஃப்டி 24204.50 புள்ளிகளில் வர்த்தகமானது. அதிகபட்சமாக 24563.90 புள்ளிகளில் வர்த்தமானது. இறுதியாக 24541.15 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
ஆசிய சந்தைகளான சியோல், டோக்கியோ, ஷாங்காய், ஹாங்காங் உயர்வுடன் முடிவடைந்தன. அதேபோல் ஐரோப்பிய சந்தைகளில் பெரும்பாலானவை க்ரீனில் முடிவடைந்தது, அமெரிக்க சந்தைகளும் (வியாழக்கிழமை) ஏறுமுகத்துடன் நிறைவடைந்தது.
- நான் ஏழு அல்லது எட்டு முறை போட்டியிட்டுள்ளேன். எனக்கு தேர்தலில் போட்டியிட ஆர்வம் இல்லை.
- எனது மகன் ஜெய் பவார் பாராமதி தொகுதியில் போட்டியிடுவது குறித்து பாராளுமன்ற குழு முடிவு செய்யும்.
மகாராஷ்டிர மாநில துணை முதல்வரான அஜித் பவார், ஏழு அல்லது எட்டு முறை வெற்றி பெற்றுள்ளேன். இதனால் தேர்தலில் போட்டியிட ஆர்வம் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநில துணை முதல்வரான அஜித் பவார் பாராமதி சட்டமன்ற தொகுதியில் பலமுறை வெற்றி பெற்றுள்ளார். வருகிற சட்டமன்ற தேர்தலில் அவரது மகன் ஜெய் பவார் பாராமதி தொகுதியில் போட்டியிடலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
பாராமதி தொகுதியில் மக்கள் உங்கள் மகனை நிறுத்த வற்புறுத்தினால் அவர் நிறுத்துவீர்களா? என்ற கேள்விக்கு அஜித் பவார் பதில் அளித்து கூறியதாவது:-
இது ஜனநாயகம். நான் ஏழு அல்லது எட்டு முறை போட்டியிட்டுள்ளேன். எனக்கு தேர்தலில் போட்டியிட ஆர்வம் இல்லை. மக்கள் மற்றும் ஆதரவாளர்கள் எனது மகன் ஜெய் பவார் பாராமதி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்தால், இது தொடர்பாக பாராளுமன்ற குழுவில் விவாதம் நடத்துவோம்.
பாராளுமன்ற குழு மற்றும் மக்கள் ஜெய் பாராமதி தொகுதியில் போட்டியிட வேண்டும் என விரும்பினால் தேசியவாத காங்கிரஸ் அவரை நிறுத்துவதற்கு தயார்.
எனக்கும் முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கும் இடையில் எந்த கருத்து வேறுபாடும் கிடையாது. லட்கி பஹின் (Ladki Bahin) திட்டம் மூலம் பெண்களுக்கு முதல் தவணையாக 1500 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதனால் பெண்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 35 லட்சம் பெண்களுக்கு வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அஜித் பவார் தெரிவித்தார்.
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சுனில் தட்காரே, "தேர்தலில் போட்டியிடமாட்டேன் என அஜித் பவார் சொல்லவில்லை. அவர் சில திட்டம் வைத்திருப்பார். முடிந்தவரை அதிகமான இடங்களை பிடிக்க விரும்புகிறோம்" என்றார்.
அஜித் பவாரின் மூத்த மகன் பர்த் பவார் மாவல் மக்களவை தொகுதியிலா் 2019-ம் ஆண்டு போட்டியிட்டு மிகப்பெரிய வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பிரதமர் மோடி 2024 ஆம் ஆண்டு அடல் சேது பாலத்தை திறந்து வைத்தார்.
- அடல் சேது பாலத்தில் விரிசல்கள் விழுந்ததாக பல புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.
மும்பை:
மகாராஷ்டிர மாநில தலைநகர் மும்பை மற்றும் அருகில் உள்ள நவிமும்பை நகரங்களை இணைக்கும் வகையில் அரபிக்கடலில் 22 கி.மீ. தூரத்துக்கு பிரமாண்ட பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
நவிமும்பை நவசேவா துறைமுகத்தை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளதால், இது 'மும்பை டிரான்ஸ் ஹார்பர் லிங்' என அழைக்கப்படுகிறது. இருப்பினும் இந்த கடல்வழி பாலத்துக்கு 'அடல் சேது' என முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயர் சூட்டப்பட்டது.
ரூ.17 ஆயிரத்து 843 கோடி செலவில் பிரமாண்டமாக வடிவம் பெற்றுள்ள இந்த பாலம் 6 வழிச்சாலையாக அமைக்கப்பட்டு உள்ளது.
இந்தப் பாலத்துக்கு 2016 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி 2024 ஆம் ஆண்டு திறந்து வைத்தார்.
இந்நிலையில், இந்த அடல் சேது பாலத்தின் கட்டுமானத்தில் ஊழல் நடந்ததாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது. இப்பாலத்தில் விரிசல்கள் விழுந்ததாக பல புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. ஆனால் பாலத்தில் விரிசல் எதுவும் ஏற்படவில்லை என்று மாநில அரசு தெரிவித்தது.
ஆனால், கடந்த ஜூன் மாதம் பாலத்தில் விரிசல் ஏற்பட்டு பின்னர் சரிசெய்யபட்டது என்றும் இதற்காக பாலத்தை கட்டிய ஸ்டார்பக் ஒப்பந்ததாரருக்கு 1 கோடி அபராதம் விதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்வியின் வழியாக இந்த தகவல் வெளியாகியுள்ளது.
- எமர்ஜென்சி படத்தில் இந்திரா காந்தி வேடத்தில் கங்கனா ரணாவத் நடித்துள்ளார்.
- எமர்ஜென்சி திரைப்பட டிரைலர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.
மும்பை:
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அறிவித்த அவசரநிலை பிரகடனத்தை முன்வைத்து எடுக்கப்பட்டுள்ள எமர்ஜென்சி படத்தில் இந்திரா காந்தி வேடத்தில் கங்கனா ரணாவத் நடித்துள்ளார். இந்தப் படத்தை அவரே இயக்கி, தயாரித்துள்ளார். ரித்தேஷ் ஷா திரைக்கதை, வசனம் எழுதியுள்ள இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
பாராளுமன்ற தேர்தலில் கங்கனா ரணாவத் வெற்றி பெற்று எம்.பியான பின் வெளியாகும் முதல் திரைப்படம் இதுவாகும். இந்தப் படம் வெற்றியடைய பெரிதும் நம்பிக்கையுடன் காத்துள்ளார் கங்கனா ரணாவத். எமர்ஜென்சி திரைப்படம் அடுத்த மாதம் 6-ம் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில், எமர்ஜென்சி திரைப்பட டிரைலர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. அப்போது கங்கனா ரணாவத் பேசியதாவது:
ஷாருக் கான், அமிர் கான், சல்மான் கான் என 3 பேரையும் எனது தயாரிப்பு, இயக்கத்தில் நடிக்க வைக்க மிகுந்த ஆசையாக உள்ளது. நன்றாக நடிக்கவும், அவர்களை அழகாக திரையில் காண்பிக்கவும் ஆசை. அவர்களால் மிகப்பெரிய மக்கள் கூட்டத்துடன் ஒன்றிணைய முடியும்.
அதனால் அவர்களால் சமூகத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை உண்டாக்க முடியும். அவர்கள் திறமைசாலிகள் மட்டுமல்ல அவர்களால் இந்தி சினிமாவுக்கு நல்ல வருமானமும் கிடைக்கின்றன. அதற்காக அவர்களுக்கு மிகவும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என தெரிவித்தார்.
- 'பாராளுமன்ற குழு முடிவு எடுத்ததால் எனது மனைவியை தேர்தலில் நிறுத்தினேன்'
- 'கூட்டணி கட்சியினர் சரத் பவாரை விமர்சிக்கும்போது என்ன பேசுகிறோம் என்பதை புரிந்து பேச வேண்டும்'
மகாராஷ்டிர அரசியலும் மகா கூட்டணிகளும்
மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடக்க உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்கத்தொடங்கியுள்ளது. மாராத்தா சமூகத்தினர் இடஒதுக்கீடு பிரச்சனை , அஜித் பவார் தேசியவாத - பாஜக - ஷிண்டே சிவசேனா ஆகியோர் இடம்பெற்றுள்ள மஹாயுதி கூட்டணியில் அதிருப்தி அலை என மொத்த அரசியல் சூழல் குழப்பத்தில் உள்ளது.
சித்தப்பா சரத் பவாரின் தேசியவாத காங்கிரசை உடைத்து தனது ஆதரவாளர்களுடன் பாஜக பக்கம் சென்ற அவரது அண்ணன் மகன் அஜித் பவாரின் நடவடிக்கைகளை பாஜக மேலிடம் சந்தேகக் கண்களோடு கவனித்து வருகிறது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அஜித் பவார் அணி பாஜகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியதும், அஜித் பவார் ஆதரவர்கள் சிலர் கொத்தாக மீண்டும் சரத் பவாரிடம் சென்றதே அதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் சரத் பவார் தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரே சிவசேனா ஆகியவை காங்கிரசின் இந்தியா கூட்டணியோடு இணைந்து மகா விகாஸ் கூட்டணியை உருவாக்கி களமாடி வருகிறது. கடந்த மக்களவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 48 இடங்களில் 31 இடங்களை வென்று பாஜக கூட்டணியின் நம்பிக்கையைச் சிதறடித்தது.
ஒரே கட்சிகளை சேர்ந்த இருவேறு அணிகள் எதிரெதிர் கூட்டணியில் உள்ளது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இது வரும் தேர்தலிலும் பிரதிபலிக்கவே செய்யும். மேலும் எப்போது யார் எந்த அணிக்கு தாவுவார்கள் என்ற நிச்சயத்தன்மை இல்லாத திரிசங்கு நிலைமையே தற்போதைய மகாராஷ்டிர அரசியல் சூழல்.
அஜித் பவாரும் குடும்ப பாசமும்
இதற்கிடையே துணை முதல்வராக உள்ள அஜித் பவார், மக்களவைத் தேர்தலில் சகோதரி சுப்ரியா சூலேவை எதிர்த்து தனது மனைவியை நிறுத்தியிருக்கக்கூடாது என்று கூறியுள்ள கருத்து பாஜக அலுவலகத்தின் பக்கம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடந்த முடிந்த மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே வை எதிர்த்து பாஜக கூட்டணி சார்பில் தனது மனைவி சுனேத்திர பவாரை பாராமதி தொகுதியில் நிறுத்தினார்.
ஆனால் ஏற்கனவே எம்,பியாக இருந்துவந்த சுப்ரியா சுலே இந்த தேர்தலிலும் வெற்றிபெற்றார். எனவே தோல்வியைத் தழுவிய சுனேத்திர பவாருக்கு ஆறுதல் பரிசாக மாநிலங்களவை எம்.பி பதவியை பாஜக கூட்டணி வழங்கியது. இதற்கு கட்சி சார்பில் பல எதிர்ப்புகளும் கிளம்பின.
இதற்கிடையில் தற்போது துணை முதல்வராக இருக்கும் அஜித் பவார் மாநிலம் தழுவிய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பவார், ''நான் அனைத்து சகோதரிகளையும் நேசிக்கிறேன். அரசியலை வீட்டிற்குள் நுழைய விடக்கூடாது. எனது சகோதரிக்கு எதிராக எனது மனைவியை தேர்தலில் நிறுத்தி தவறு செய்துவிட்டேன். இது நடந்திருக்க கூடாது. ஆனால் பாராளுமன்ற குழு முடிவு எடுத்ததால் எனது மனைவியை தேர்தலில் நிறுத்தினேன். ஆனால் அது தவறு என்று இப்போது நினைக்கிறேன்'' என்று கூறியுள்ளார்.

மேலும் அடுத்த வாரம் ரக்ஷாபந்தனுக்கு உங்களது சகோதரி வீட்டிற்குச் செல்வீர்களா? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த சரத் பவார், `நான் இப்போது சுற்றுப்பயணத்தில் இருக்கிறேன். நானும், எனது சகோதரியும் ஒரே இடத்தில் இருந்தால் நிச்சயம் அவரை சந்திப்பேன் என்றார். மேலும், சரத் பவார் மூத்த தலைவர். எங்களது குடும்பத் தலைவர். அவர் கூறும் எந்த விமர்சனங்களுக்கும் பதில் அளிக்க மாட்டேன் என்று தெரிவித்தார். மேலும் தனது கூட்டணி கட்சியினர் சரத் பவாரை விமர்சிக்கும்போது என்ன பேசுகிறோம் என்பதை புரிந்து பேச வேண்டும். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் போது இது குறித்து பேசுவேன் என்று தெரிவித்துள்ளார்.
- உள்நாட்டில் நடைபெறும் கிரிக்கெட் தொடர்களின் அட்டவணையை பிசிசிஐ மாற்றியது.
- வங்காளதேசம், இங்கிலாந்து அணிகள் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளன.
இந்திய அணியின் உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களுக்கான அட்டவணையை பிசிசிஐ மாற்றியமைத்துள்ளது. மாற்றப்பட்ட அட்டவணைப்படி இந்தியா மற்றும் வங்காளதேசம் அணிகள் இடையிலான முதலாவது டி20 போட்டி அக்டோபர் 6 ஆம் தேதி குவாலியரில் நடைபெற இருக்கிறது.
முன்னதாக இந்த போட்டி தரம்சாலாவில் நடைபெற இருந்தது. இதேபோன்று இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் அட்டவணையை மாற்றியமைத்துள்ளது.
மாற்றப்பட்ட அட்டவணை:
அடுத்த மாதம் இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் வங்காளதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது.
இதில் செப்டம்பர் 19 ஆம் தேதி துவங்க இருந்த முதலாவது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 23 ஆம் தேதி துவங்கும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 27 ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில், தற்போது அக்டோபர் 1 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
இதேபோன்று முதலாவது டி20 போட்டி அக்டோபர் 6 ஆம் தேதியும், மற்ற இரண்டு டி20 போட்டிகள் முறையே அக்டோபர் 9 மற்றும் அக்டோபர் 12 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது.
வங்காளதேசத்தை தொடர்ந்து அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாட இருக்கிறது. இந்தியா இங்கிலாந்து அணிகள் இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர், மூன்று போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடர் நடைபெற இருக்கிறது.
இதில் டி20 தொடர் ஜனவரி 22, ஜனவரி 25, ஜனவரி 28, ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 2 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது. இரு அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் பிப்ரவரி 6 ஆம் தேதி முதல் போட்டியும், பிப்ரவரி 9 மற்றும் பிப்ரவரி 12 ஆகிய தேதிகளில் மற்ற இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளன.
- எனக்கும், எனது கணவருக்கும் வாடகை தாய் மூலம் 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இரட்டை பெண் குழந்தை பிறந்தன.
- குழந்தைகளை பார்க்க என்னை அனுமதிக்க வேண்டும்.
மும்பை:
மும்பை ஐகோர்ட்டில் 42 வயது பெண் ஒருவர் மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவில் அவர் கூறியிருந்ததாவது:-
எனக்கும், எனது கணவருக்கும் வாடகை தாய் மூலம் 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இரட்டை பெண் குழந்தை பிறந்தன. அந்த குழந்தைகள் பிறக்க எனது தங்கை கருமுட்டையை தானமாக வழங்கியிருந்தார். தற்போது எனது கணவரும், தங்கையும் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர்.
மேலும் எனது தங்கை கருமுட்டையை தானமாக வழங்கியதால் எனக்கு குழந்தைகள் மீது உாிமை இல்லை என கூறுகின்றனர்.
குழந்தைகளை பார்க்க அவர்கள் என்னை விடுவதில்லை. எனவே, குழந்தைகளை பார்க்க என்னை அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
மனுவை நீதிபதி மிலிந்த் ஜாதவ் அடங்கிய அமர்வு விசாரித்தது. மனுவை விசாரித்த நீதிபதி, விந்தணு அல்லது கருமுட்டையை தானமாக கொடுத்தவர் குழந்தையின் மீது சட்டப்படி உரிமை கோரவோ அல்லது குழந்தையின் பெற்றோர் எனவோ உரிமை கோர முடியாது என்றார். மேலும் நீதிபதி "இந்த வழக்கில் 2018-ம் ஆண்டு போடப்பட்ட வாடகைத்தாய் ஒப்பந்தத்தில் மனுதாரரும், அவரது கணவரும் தான் பெற்றோர் என கையெழுத்திட்டு உள்ளனர். எனவே வாடகைத்தாய் மூலம் பிறந்த இரட்டை குழந்தைகளின் தாய் மனுதாரர் என்பது தெளிவாக தெரிகிறது. கருமுட்டையை தானமாக வழங்கிய மனுதாரரின் தங்கைக்கு குழந்தையின் தாய் என உரிமைகோர எந்த சட்ட உரிமையும் இல்லை" எனக்கூறினார்.
மனுதாக்கல் செய்த பெண்ணை வார இறுதிநாளில் 3 மணிநேரம் இரட்டை குழந்தைகளை பார்க்க அனுமதிக்க வேண்டும் என அவரது கணவருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.






