என் மலர்
மகாராஷ்டிரா
- கடந்த சில வருடங்களுக்கு முன் கொடுத்த பேட்டியால் நான் பாதிக்கப்பட்டேன்.
- உண்மையில் நான் பள்ளியில் கூட சஸ்பெண்ட் செய்யப்பட்டதில்லை என்றார்.
மும்பை:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல். இவரும், ஹர்திக் பாண்ட்யாவும் கடந்த 2019-ம் ஆண்டு பெரிய சர்ச்சையில் சிக்கினர்.
காபி வித் கரன் ஜோகர் எனும் டி.வி. நிகழ்ச்சியில் பாண்ட்யா மற்றும் ராகுல் ஆகியோர் ஜோடியாக பங்கேற்றனர். அங்கு கேட்கப்பட்ட சில கேள்விகளுக்கு பெண்களை இழிவுபடுத்தும் வகையில் கே.எல்.ராகுல் மற்றும் ஹர்திக் பாண்ட்யா பதிலளித்தனர். அதனால் ரசிகர்கள் மற்றும் மகளிர் அமைப்புகள் அவர்களை கடுமையாக விமர்சித்தனர். மேலும், ஹர்பஜன், சுனில் கவாஸ்கர் போன்ற முன்னாள் வீரர்களும் கடுமையாக சாடினர்.
பாண்ட்யா மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் வெளிப்படையாக மன்னிப்பு கேட்டனர். எதிர்ப்புகள் அதிகரித்ததால் ஆஸ்திரேலியாவில் விளையாடிக் கொண்டிருந்த அவர்களுக்கு பி.சி.சி.ஐ. அதிரடி தடை விதித்தது.
இந்நிலையில், சர்ச்சைக்குரிய பேட்டி குறித்து கே.எல்.ராகுல் சமீபத்தில் மனம் திறந்தார். அந்தப் பேட்டியில் அவர் பேசியதாவது:
நான் எதைப் பற்றியும் கவலைப்படாமல் கிண்டலடிப்பதில் சிறந்தவனாக இருந்தேன்.
கடந்த சில வருடங்களுக்கு முன் கொடுத்த பேட்டியால் நான் பாதிக்கப்பட்டேன்.
அந்தப் பேட்டி முற்றிலும் வித்தியாசமான உலகமாக இருந்தது. அது என்னை மாற்றியது.
அந்தப் பேட்டி என்னிடம் பெரிய வடுவை ஏற்படுத்தியது. அதனால் நான் அணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டேன்.
உண்மையில் நான் பள்ளியில் கூட சஸ்பெண்ட் செய்யப்பட்டதில்லை. தண்டனை பெற்றதில்லை.
அந்தச் சூழ்நிலையை எப்படி கையாள்வது என்பதுகூட எனக்கு தெரியவில்லை. பள்ளியிலும் எனது பெற்றோர் வந்து பதில் சொல்லும் அளவுக்கு நான் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதில்லை என தெரிவித்தார்.
- ஐதராபாத் நோக்கி சென்ற ஹெலிகாப்டர் மோசமான வானிலையால் விபத்தில் சிக்கியது.
- ஹெலிகாப்டரில் பயணித்த 4 பேரில், கேப்டனுக்கு மட்டும் காயம் ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், புனே மாவட்டத்தின் பாட் கிராமத்தில் கட்டுப்பாட்டை இழந்த தனியார் ஹெலிகாப்டர் ஒன்று கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
மும்பையில் இருந்து ஐதராபாத் நோக்கி சென்ற ஹெலிகாப்டர் மோசமான வானிலையால் விபத்தில் சிக்கியது.
இந்த விபத்தில், ஹெலிகாப்டரில் பயணித்த 4 பேரில், கேப்டனுக்கு மட்டும் காயம் ஏற்பட்டுள்ளது.
கேப்டன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- மகாராஷ்டிர மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து வருகின்றன.
- காவல்துறையை கண்டு மக்கள் மத்தியில் எந்தவித அச்சமும் இல்லை.
மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் பத்லாப்பூரில் உள்ள மழலையர் பள்ளியில் 2 சிறுமிகள், அந்த பள்ளியின் துப்புரவு பணியாளரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தை கண்டித்து உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் (எஸ்.பி.) ஆகிய எதிர்க்கட்சிகள் அடங்கிய மகா விகாஸ் கூட்டணி மாநிலம் முழுவதும் இன்று முழு அடைப்பு நடத்த அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் நீதிமன்றம் அதற்கு தடைவிதித்தது. இந்த நிலையில் அமைதி போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.
அதனைத் தொடர்ந்து இன்று புனேயில் சரத் பவார் மற்றும் மகா விஹாஸ் கூட்டணி கட்சி தலைவர்களி கொட்டும் மழையில் அமைதி போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் எம்.பி.யும், சரத் பவாரின் மகளுமான சுப்ரியா சுலே கலந்து கொண்டு பேசினார்.
அப்போது சுப்ரியா சுலே கூறியதாவது:-
மகாராஷ்டிரா மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. காவல்துறையை கண்டு மக்கள் மத்தியில் எந்தவித அச்சமும் இல்லை. நான் இந்த அரசை கண்டிக்கிறேன். போராடியவர்கள் வெளி மாநிலத்தில் இருந்து வந்தவர்கள் என சிலர் சொல்கிறார்கள். அவர்கள் அனைவரும் இந்தியர்கள் என்பதை நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இதுபோன்ன உணர்ச்சியற்ற அரசை ஒருபோதும் பார்த்ததில்லை. குற்றவாளி கைது செய்யப்படும் வரை போராட்டத்தை நிறுத்த மாட்டோம்.
இவ்வாறு சுப்ரியா சுலே தெரிவித்தார்.
- நிறுவனத்தின் நிதியை மோசடியாக வேறு செலவுகளுக்கு பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
- அனில் அம்பானிக்கு தடை மட்டுமின்றி ரூ.25 கோடி அபராதமும் விதித்து செபி உத்தரவிட்டுள்ளது.
மும்பை:
பிரபல தொழிலதிபரான அனில் அம்பானி பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்ய 5 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபி இந்தத் தடையை விதித்துள்ளது.
நிறுவனத்தின் நிதியை மோசடியாக வேறு செலவுகளுக்கு பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அனில் அம்பானிக்கு இந்த தடையை செபி விதித்துள்ளது.
அனில் அம்பானி மற்றும் ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தின் முன்னாள் முக்கிய அதிகாரிகள் உள்பட 24 நிறுவனங்கள் பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்ய 5 ஆண்டுக்கு செபி தடை விதித்துள்ளது.
அனில் அம்பானிக்கு ரூ.25 கோடி அபராதம் விதித்துள்ள செபி, பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட எந்த ஒரு நிறுவனத்திலும் இயக்குநராகவோ அல்லது முக்கிய பொறுப்பாளராகவோ இருக்கவும் தடை விதித்துள்ளது.
அத்துடன், ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனத்துக்கு 6 மாதத்துக்கு தடை விதித்துள்ள செபி, அந்நிறுவனத்துக்கு ரூ.6 லட்சம் அபராதமும் விதித்துள்ளது.
- டோனி தொடங்கி தற்போது அறிவிக்கப்பட்டுள்ள யுவராஜ் சிங் பயோபிக் வரை இந்த டிரண்ட் தொடர்ந்து வருகிறது.
- பயோபிக்கில் ஹீரோவாக நடிக்க யாரைத் தேர்ந்தெடுப்பீர்கள் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
2024 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த தொடருடன் இந்திய அணியின் பயிற்சியாளராகச் இருந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலமும் முடிவுக்கு வந்தது. உலகக்கோப்பையுடன் தனது பதவிக்காலத்தை முடித்துள்ள ராகுல் டிராவிட் மும்பையில் நடந்த கிரிக்கெட் வீரர்களுக்கான தனியார் விருது விழாவில் தனது பயோபிக் படம் குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.
சமீப காலமாக விளாயாட்டு வீரர்களின் வாழ்க்கையை படமாக எடுப்பது டிரண்ட் ஆகி வருகிறது. டோனி தொடங்கி தற்போது அறிவிக்கப்பட்டுள்ள யுவராஜ் சிங் பயோபிக் வரை இந்த டிரண்ட் தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் விருது நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ட்ராவிட் -இடம், உங்களின் பயோபிக் படமாக்கப்பட்டால் யாரை உங்களின் கதாபாத்திரத்தில் நடிக்க தேர்ந்தெடுப்பீர்கள் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு சிரித்தபடி பதிலளித்த டிராவிட், நல்ல சம்பளம் கொடுத்தால் நானே எனது பயோபிக்கில் நடித்து விடுகிறேன் என்று தெரிவித்தார். இதனால் விருது அரங்கம் சிரிப்பலையில் ஆழ்ந்தது. தொடர்ந்து பேசிய டிராவிட் நாடு முழுவதும் பயணித்து ரசிகர்களின் மகிழ்ச்சியையும் ஆர்வத்தையும் அனுபவிக்க விரும்புகிறேன் என்றும் தெரிவித்தார்.
- பைக்கின் முன்புறம் பொருத்தப்பட்ட செல்போனில் இந்த விபத்து பதிவாகியுள்ளது.
- பாதிக்கப்பட்ட பெண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.
மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் பைக்கில் பயணிக்கும்போது அவருடைய துப்பட்டா சக்கரத்தில் சிக்கியுள்ளது. உடனே அப்பெண் பைக்கை நிறுத்தியுள்ளார்.
பின்னர் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உதவி செய்து அவரை காப்பாற்றியுள்ளனர். இந்த விபத்தால் அப்பெண்ணின் கழுத்தில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது.
பைக்கின் முன்புறம் பொருத்தப்பட்ட செல்போனில் இந்த விபத்து பதிவாகியுள்ளது. அதனை அப்பெண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், 'பெண்கள் பைக் ஓட்டும்போது துப்பட்டா அணிய வேண்டாம்' என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
- ராஜீவ் காந்தி தனது பதவிக்காலத்தில் தேசத்தின் நலனுக்காக உழைத்த உணர்வுப்பூர்வமான பிரதமர்.
- மக்களின் பிரச்சனைகளை உணர்ந்து அவற்றை தீர்க்க எந்த எல்லைக்கும் செல்ல அவர் தயாராக இருந்தவர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 80வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு பம்பாய் உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி கோல்சே பாட்டீல் அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் ராஜிவ் காந்தி குறித்த தனது அனுபவங்களை அவர் பகிர்ந்து கொண்டார்.
"ராஜீவ் காந்தி தனது பதவிக்காலத்தில் தேசத்தின் நலனுக்காக உழைத்த உணர்வுப்பூர்வமான பிரதமர். அவர் மக்களின் பிரச்சனைகளை உணர்ந்து அவற்றை தீர்க்க எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருந்தவர்" என்று அவர் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், "80களில், பம்பாய் உயர்நீதிமன்ற நீதிபதியாக, நான் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியிருந்தேன். சில தனியார் நிறுவனங்கள், அரசு விதித்த அதிகப்படியான கலால் வரியை திரும்ப பெற வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தது. தனியார் நிறுவனங்களின் அந்த கோரிக்கையை நான் நிராகரித்தேன்.
நான் வழங்கிய இந்த தீர்ப்பின் காரணமாக என்னை சந்திக்க நள்ளிரவு 2 மணிக்கு அவரது இல்லத்திற்கு வருமாறு ராஜிவ் காந்தி அழைத்தார். நான் வழங்கியது ஒரு சிறந்த தீர்ப்பு என்று அவர் என்னிடம் தெரிவித்தார்" என்று கோல்சே பாட்டீல் கூறினார்.
- தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி டி20 உலகக்கோப்பையை இந்தியா வென்றது.
- 2007-ம் ஆண்டுக்கு பிறகு 2-வது முறையாக டி20 உலகக்கோப்பையை இந்தியா வென்றது
டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா கோப்பையை வென்றது.
இதன்மூலம் டி20 உலகக் கோப்பையை இந்திய அணி 2-முறையாக கைப்பற்றியது. 2007-ம் ஆண்டு டோனி தலைமையில் முதல் முறை கைப்பற்றியது. அதன் பிறகு 2024-ம் ஆண்டு தான் உலகக் கோப்பையை இந்திய அணி வென்றுள்ளது.
இந்நிலையில், இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவுடன் இன்று மும்பையில் உள்ள சித்திவிநாயகர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
அப்போது அவர்கள் தங்களுடன் T20 உலகக் கோப்பையையும் எடுத்து சென்று சாமி சிலை அருகில் வைத்து பூஜை செய்தனர்.
- பேண்ட்ரி காரில் குப்பைத் தொட்டியின் அருகே உணவு தயாரிக்கப்படுவதாக புகார்.
- இந்த விவகாரம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ரிக்கி ஜெஸ்வானி. இவர் கடந்த திங்கட்கிழமை இரவு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தனது குடும்பத்துடன் ஷீரடிக்கு சுற்றுலா சென்றுவிட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது, வந்தே பாரத் ரெயிலில் பரிமாறப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி மிதந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ரிக்கியின் சகோதரி முழுமையாக சாப்பிட்ட பிறகே பூச்சி இருப்பது தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக, ரெயிலில் உள்ள 'பேண்ட்ரி காரில் புகார் செய்யச் சென்றபோது, குப்பைத் தொட்டியின் அருகே உணவு தயாரிக்கப்பட்டு, கரப்பான் பூச்சிகள் ஊர்ந்து செல்வதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதுகுறித்து ரிக்கி ஜெஸ்வானி கூறுகையில், "எனது சகோதரி சைவ உணவு உண்பவர். அவர் சாப்பிட்ட பருப்பு குழம்பின் அடிப்பகுதியில் கரப்பான் பூச்சியைக் கண்டபோது அவள் கிட்டத்தட்ட உணவை முடித்துவிட்டாள்.
அதற்குள் எனது 80 வயது தந்தை உட்பட எனது குடும்பத்தினர் அனைவரும் பருப்பு சாம்பாரை சாப்பிட்டுவிட்டனர். நாங்கள் புகார் செய்ய பேண்ட்ரி காருக்கு சென்றபோது, குப்பைத் தொட்டிக்கு அருகிலேயே உணவு தயாரிக்கப்பட்டு இருப்பதைக் கண்டோம். அங்கு கரப்பான் பூச்சிகள் ஊர்ந்து செல்கின்றன.
ஏசி சேர் கார் சி5 கோச்சில் பரிமாறப்பட்ட தயிர் கூட கூடுதல் புளிப்புடன் கெட்டுப்போனதாக இருந்தது" என்றார்.
இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
- பத்லாபூரில் சிறுமிகள் இரண்டு பேர் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- பத்லாபூர் ரெயில் நிலையத்தில் உள்ளூர்வாசிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மும்பை:
மகாராஷ்டிர மாநிலம் மும்பை அருகே பத்லாபூரில் உள்ள ஒரு பள்ளியில் சிறுமிகள் இரண்டு பேர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதை அடுத்து, நகரம் முழுவதும் பந்த் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளியின் பணியாளர்களில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து, பத்லாபூர் ரெயில் நிலையத்தில் உள்ளூர்வாசிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ரெயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பான வீடியோ வைரலானது.
ரெயில்வே வளாகத்தில் இருந்து போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அப்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்தப் போராட்டம் காரணமாக உள்ளூர் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. பத்லாபூர்வழியாக செல்லும் 10க்கும் மேற்பட்ட ரெயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன. இன்டர்நெட் சேவையும் துண்டிக்கப்பட்டது.
மேற்கு வங்கத்தில் பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட கொடூரமான சம்பவத்தால் நாடே அதிர்ச்சி அடைந்துள்ள நிலையில், பத்லாபூரில் நடந்துள்ள இச்சம்பவம் நடந்துள்ளது நிலைகுலைய வைத்துள்ளது.
- ஒரு பெண் ஸ்கூட்டரில் அமர்ந்து இருந்த தனது மகனுடன் பேசிக்கொண்டு இருக்கிறார்.
- தாக்கப்பட்ட நபர் சுனில் ராமப்பா லமணி என்று தெரிய வந்துள்ளது.
பட்டப்பகலில் மகனை வாளால் தாக்கிய மூன்று பேரை விரட்டிய பெண், தனது மகனின் உயிரை காப்பாற்றிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.
மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூர் ஜெய்சிங்பூர் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் 1:30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளன.
சமூக வலைதளத்தில் வெளியான அந்த வீடியோவில்,
ஒரு பெண் ஸ்கூட்டரில் அமர்ந்து இருந்த தனது மகனுடன் பேசிக்கொண்டு இருக்கிறார்.
அப்பொழுது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் தாய்-மகன் இருவரும் நின்று கொண்டிருக்கும் இடத்தை தாண்டி அவர்களது வண்டியை நிறுத்தினர்.
3 பேரில் ஒருவன் பின்னால் இருந்து வாளை எடுத்துக்கொண்டு வந்து, ஸ்கூட்டரில் அமர்ந்திருந்த நபரை தாக்குகிறான்.
அப்பொழுது பாதிக்கப்பட்டவரின் தாய் ஒரு கல்லை எடுத்து தாக்கியவர்களை விரட்டினார்.
பின்னர் அந்த பெண்ணும் அவரது மகனும் சேர்ந்து, நடைபாதையில் இருக்கும் கற்களை எடுத்து, தாக்க வந்தவர்களை நோக்கி வீசுகின்றனர்.
இதையடுத்து அவர்கள் தாக்குதலை கைவிட்டு தப்பி ஓடினர். மகனை வாளால் தாக்க வந்தவர்கள் மீது கல் வீசி தாக்குதல் நடத்திய தாயின் துணிச்சல் சமூக வலைதளத்தில் பாராட்டப்பட்டு வருகிறது.
தாக்கப்பட்ட நபர் சுனில் ராமப்பா லமணி என்று தெரிய வந்துள்ளது. அவரது புகாரின் பேரில், வினோத் காசு பவார், அரவிந்த் காசு பவார் மற்றும் வினோத் பாபு ஜாதவ் ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- அதிகாலை 3.30 மணியளவில் முகத்தில் காயங்களுடன் வந்த நபர் ஒருவருக்கு பணியிலிருந்த பெண் மருத்துவர் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தார்.
- அவர்களிடம் இருந்து தன்னை தற்காத்துக் கொள்ளும் முயற்சியில் பெண் மருத்துவருக்குக் காயங்கள் ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள மருத்துவமனையில் பெண் மருத்துவரிடம் 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் உள்ள சியான் [Sion Hospital] மருத்துவமனையில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் முகத்தில் காயங்களுடன் வந்த நபர் ஒருவருக்கு பணியிலிருந்த பெண் மருத்துவர் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தார்.
காயங்களுடன் வந்த நபரும் அவருடன் வந்த மற்ற உறவினர்கள் 5 பேறும் குடிபோதையில் இருந்துள்ளனர். சிகிச்சையளித்துக் கொண்டிருந்த மருத்துவரிடம் அவர்கள் 6 பேறும் பாலியல் ரீதியாக அத்துமீற முயன்றுள்ளனர். அவர்களிடம் இருந்து தன்னை தற்காத்துக் கொள்ளும் முயற்சியில் பெண் மருத்துவருக்குக் காயங்கள் ஏற்பட்டுள்ளது. உடனே அந்த இடத்திலிருந்து அவர்கள் 6 பேரும் தப்பிச் சென்று விட்டனர். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
கல்கத்தாவில் RG கர் மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திவரும் விலையில் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசை வலியுறுத்தி போராட்டங்கள் நடந்து வருகிறது. மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தால் நேற்று முழு தினமும் மருத்துவ சேவைகள் ஸ்தாபித்தன. இந்நிலையில் மும்பையில் பெண் மருத்துவர் இரவு டியூட்டியின்போது பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவம் மருத்துவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.






