search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டாடா குழுமம்"

    • டாடா குழுமம் 125 மில்லியன் டாலருக்கு விஸ்ட்ரான் நிறுவனத்தை வாங்கியது.
    • ஐபோன் தயாரிப்பதற்கான 6 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது டாடா குழுமம்.

    டாடா எலாக்ட்ரானிக்ஸ் நிறுவனம் உலகின் முன்னணி செல்போன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் உடன் இணைந்து இந்தியாவில் ஐபோன் தயாரிக்க இருக்கிறது. இதற்காக சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாயில் முதலீடு செய்துள்ளது டாடா குழுமம். தமிழ்நாட்டில் உள்ள ஓசூரில் தொழிற்சாலை தயாராகி வருகிறது.

    இந்த நிலையில் வருகிற நவம்பர் மாதத்தில் இருந்து செல்போன் உற்பத்தி இந்த தொழிற்சாலையில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

    உதிரி பாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டு இங்கு ஐபோன் உருவாக்கப்படும் (Assembly). இதற்காக 250 ஏக்கர் நிலப்பரப்பில் நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் 50 ஆயிரம் பேர் வேலைப் பார்க்கும் வகையில் வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. பெரும்பாலும் பெண்கள்தான் வேலைக்கு அமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆப்பிள் நிறுவனம் ஐபோன் உற்பத்தியை இந்தியாவில் கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கியது. பாக்ஸ்கான் நிறுவனம் ஸ்ரீபெரும்புதூரில் ஐ-போன் செல்போன்களை உற்பத்தி (Assembly) செய்கிறது. பாக்ஸ்கான், விஸ்ட்ரான், பெகட்ரான் ஆகிய நிறுவனங்கள் ஐ-போன் தயாரித்து ஏற்றுமதி செய்கிறது. விஸ்ட்ரான் நிறுவனத்தை டாடா குழுமம் 125 மில்லியன் டாலருக்கு கடந்த வருடம் அக்டோபர் மாதம் கையகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    • இந்நிறுவனம் 2 நூற்றாண்டுகளுக்கும் மேலாக தொழில்துறையில் முன்னணியில் உள்ளது
    • பாகிஸ்தானின் ஜிடிபி $341 பில்லியன் என ஐஎம்எஃப் மதிப்பிட்டுள்ளது

    1868ல், இந்தியாவில் ஜம்ஷேட்ஜி டாடா (Jamshedji N. Tata) என்பவர் தொடங்கிய நிறுவனம், டாடா குழுமம் (Tata Group).

    2 நூற்றாண்டுகளுக்கும் மேலாக தொழில்துறையில் இந்தியாவில் முன்னணி நிறுவனமாக திகழும் டாடா குழுமத்திற்கு பல்வேறு துறைகளில் 150க்கும் மேற்பட்ட நாடுகளில் பல வர்த்தகங்கள் உள்ளன.

    சுதந்திர இந்தியாவில் பல தொழில் நிறுவனங்கள் உருவாகியிருந்தாலும், தங்களுக்கென ஒரு நற்பெயரையும் முன்னணி இடத்தையும் டாடா குழுமம் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

    கடந்த ஆண்டு, டாடா குழுமத்தின் பல நிறுவனங்கள், லாபகரமான வருவாயை ஈட்டின.

    தற்போது, டாடா குழுமம், சுமார் ரூ.31 லட்சம் கோடி ($365 பில்லியன்) சந்தை மூலதனத்தை வைத்துள்ளது.

    இது இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானின் உள்நாட்டு மொத்த உற்பத்தியை (Gross Domestic Product) விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

    சர்வதேச நாணய நிதியம் (International Monetary Fund) அளித்த மதிப்பீட்டின்படி பாகிஸ்தானின் ஜிடிபி $341 பில்லியன் எனும் அளவில் உள்ளது.


    மேலும் டாடா குழுமத்தின் ஒரு நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) எனும் முன்னணி மென்பொருள் நிறுவனம் மட்டுமே சந்தை மதிப்பில் ரூ.15 லட்சம் கோடி ($170 பில்லியன்) என மதிப்பிடப்பட்டுள்ளது.

    இது பாகிஸ்தான் பொருளாதாரத்தில் பாதி அளவு என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்திய பங்கு சந்தையிலும், உலகளவிலும் டாடா குழுமத்திற்கு உள்ள வலுவான நிலையை இந்த ஒப்பீடு கோடிட்டு காட்டுவதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

    தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களிடம் நடத்தப்படும் தொழிலாளர் நலன் மற்றும் பணியிட மகிழ்ச்சி குறித்த ஆய்வுகளில் டாடா குழும நிறுவனங்களின் பெயர்கள் முன்னிலை வகிக்கின்றது.


    2017லிருந்து டாடா குழுமத்தின் தலைவர் (Chairman) பொறுப்பில் உள்ள என். சந்திரசேகரன் (60), தமிழகத்தை சேர்ந்தவர் என்பதும் நாமக்கல் மாவட்ட மோகனூர் தாலுகா அரசு பள்ளியில் பயின்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    • H125 ரக ஹெலிகாப்டர்-ஐ FAL அசெம்பில் செய்ய இருக்கிறது.
    • வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட உள்ளன.

    ஏர்பஸ் ஹெலிகாப்டர்ஸ் நிறுவனம் டாடா குழுமத்துடன் இணைந்து இந்தியாவில் ஹெலிகாப்டர்களை அசெம்பில் செய்யும் மையத்தை கட்டமைக்க இருப்பதாக அறிவித்து இருக்கிறது. மேக் இன் இந்தியா திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில், இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    இரு நிறுவனங்கள் கூட்டணியில் உருவாகும் ஃபைனல் அசெம்ப்லி லைன் (FAL)-இல் இந்தியாவில் ஹெலிகாப்டர்கள் அசெம்பில் செய்யப்பட உள்ளன. அதன்படி ஏர்பஸ் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் H125 ரக ஹெலிகாப்டர் FAL-இல் அசெம்பில் செய்யபட இருக்கிறது.

     


    இந்தியாவில் கட்டமைக்கப்படும் FAL-இல் அசெம்பில் செய்யப்படும் ஹெலிகாப்டர்கள் இந்தியாவிற்குள் போக்குவரத்து பயன்பாடுகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளன. இதுதவிர, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட உள்ளன. இந்தியாவில் ஹெலிகாப்டர் உற்பத்தி பணிகளை தனியார் நிறுவனம் மேற்கொள்ள இருப்பது இதுவே முதல்முறை ஆகும்.

    டாடா குழுமத்தின் கீழ் இயங்கும் டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் நிறுவனம் ஏர்பஸ் ஹெலிகாப்டர்ஸ் உடன் இணைந்து FAL-ஐ கட்டமைக்கிறது. இந்திய குடியரசு தின கொண்டாட்டத்தில் பங்கேற்க பிரான்ஸ் அதிபர் மேக்ரான் பங்கேற்றுள்ள நிலையில், இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    • இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை அதிகப்படுத்த ஆப்பிள் நிறுவனம் முடிவு.
    • புதிய ஆலையில் கிட்டத்தட்ட 50 ஆயிரம் பணியாளர்கள் பணியாற்ற முடியும்.

    இந்தியாவிலேயே மிகப்பெரிய ஐபோன் உற்பத்தி ஆலையை தமிழ்நாட்டில் கட்டமைக்க டாடா குழுமம் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டும் என்று ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்திருக்கும் நிலையில், டாடா குழுமம் அதற்கான பணிகளை துரிதப்படுத்தும் என தெரிகிறது.

    இதற்காக தமிழ்நாட்டில் டாடா குழுமம் அமைக்கும் உற்பத்தி ஆலையில் கிட்டத்தட்ட 20 அசெம்ப்லி லைன்கள் இருக்கும் என்றும், இதில் கிட்டத்தட்ட 50 ஆயிரம் பணியாளர்கள் பணியாற்ற முடியும் என்றும் கூறப்படுகிறது. இது நாட்டிலேயே மிகப் பெரிய ஐபோன் உற்பத்தி ஆலையாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது. அடுத்த 12 முதல் 18 மாதங்களில் இந்த ஆலையில் பணிகள் துவங்கும் என்று எதிர்பார்க்கலாம்.

     


    டாடா குழுமத்துடன் இணைந்து உள்நாட்டில் உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டும் என்ற ஆப்பிள் முயற்சிகளை வலுப்படுத்தும் வகையில், புதிய ஆலை உருவாக்கப்பட்டு வருகிறது. சீனாவை தவிர்த்து இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை அதிகப்படுத்த நினைக்கும் ஆப்பிள் திட்டத்தை பிரதிபலிக்கும் வகையில், டாடா குழுமம் கர்நாடகா மாநிலத்தில் உள்ள விஸ்ட்ரன் ஆலையை கைப்பற்றி இருக்கிறது.

    அடுத்த இரண்டில் இருந்து மூன்று ஆண்டுகளுக்குள் இந்தியாவில் மட்டும் 50 மில்லியன் ஐபோன்களை உற்பத்தி செய்ய வேண்டும் என ஆப்பிள் திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாகவே டாடா குழுமம் ஐபோன் உற்பத்தி பணிகளை விரிவுப்படுத்தும் வகையில், புதிய ஆலையை கட்டமைத்து வருகிறது. 

    • டாடா நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்திற்கு உதிரிபாகங்களை உற்பத்தி செய்தது.
    • ஓசூரில் உள்ள உற்பத்தி ஆலை 500 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது.

    விஸ்ட்ரன் ஐபோன் உற்பத்தி ஆலையை டாடா குழுமம் முழுமையாக கையகப்படுத்தி, ஐபோன்களை உற்பத்தி செய்யும் முதல் இந்திய நிறுவனம் என்ற பெருமையை பெற்றது. முன்னதாக டாடா நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்திற்கு உதிரிபாகங்களை உற்பத்தி செய்து கொடுத்தது.

    தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் படி டாடா நிறுவனம் ஓசூரில் உள்ள ஆலையில் உற்பத்தியை இருமடங்கு அதிகப்படுத்த இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவில் ஐபோன் உற்பத்திக்காக ஆப்பிள் நிறுவனம் டாடா குழுமத்தை அதிகளவு நம்புவதாக தெரிகிறது.

     

    இங்கு உற்பத்தி செய்யப்படும் யூனிட்கள் சர்வதேச சந்தையிலும் ஏற்றுமதி செய்யப்படும் என்று கூறப்படுகிறது. தற்போது ஓசூரில் உள்ள உற்பத்தி ஆலை 500 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டு, அதில் 15 ஆயிரம் பேர் வரை பணியாற்றி வருகின்றனர்.

    முதற்கட்டமாக ஐபோன்களின் குறிப்பிட்ட சில பாகங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த பாகங்கள் ஃபாக்ஸ்கான் மற்றும் விஸ்ட்ரன் ஆலைகளுக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து வினியோகம் செய்யப்பட உள்ளன. அடுத்த 12 முதல் 18 மாதங்களில் ஓசூர் ஆலை விரிவாக்கம் செய்யப்பட்டு, உற்பத்தி தற்போது இருப்பதை விட இருமடங்கு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

     

    இதன் மூலம் விரிவாக்கம் செய்யப்பட்ட ஆலையில் 28 ஆயிரம் பேர் வரை பணியாற்ற முடியும். இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை அதிகப்படுத்துவது தொடர்பாக ஆப்பிள் நிறுவனம் டாடா குழுமத்திற்கு இலக்கு நிர்ணயித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    • சர்வதேச சந்தைக்கான ஐபோன்களை டாடா குழுமம் இந்தியாவில் உற்பத்தி செய்ய இருக்கிறது.
    • விஸ்ட்ரன் நிறுவனத்தை கைப்பற்றியதற்கு டாடா குழுமத்திற்கு வாழ்த்துக்கள்.

    டாடா குழுமம் உள்நாடு மற்றும் சர்வதேச சந்தைகளுக்கான ஐபோன்களை இந்தியாவில் வைத்து உற்பத்தி செய்ய இருக்கிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய மின்னணு மற்றும் தொழில்நுட்ப துறை மந்திரி ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்து உள்ளார். மேலும் இதே தகவலை தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்திலும் வெளியிட்டு உள்ளார்.

    அந்த பதிவில், "பிரதமர் நரேந்திர மோடியின் PLI திட்டம் மூலம் இந்தியா ஸ்மார்ட்போன் உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கு நம்பத்தகுந்த மற்றும் மிகமுக்கிய தளமாக உருவெடுத்து இருக்கிறது. இன்னும் கிட்டத்தட்ட இரண்டறை ஆண்டுகளில், உள்நாடு மற்றும் சர்வதேச சந்தைக்கான ஐபோன்களை டாடா குழுமம் இந்தியாவில் வைத்து உற்பத்தி செய்ய இருக்கிறது."

    "விஸ்ட்ரன் நிறுவனத்தை கைப்பற்றியதற்கு டாடா குழுமத்திற்கு வாழ்த்துகள். இதுவரை வழங்கிய பங்களிப்புகள் அனைத்திற்கு விஸ்ட்ரன் நிறுவனத்திற்கும் நன்றி. இந்தியாவில் இருந்து இந்திய நிறுவனங்களை வைத்து சர்வதேச விநியோகத்தை விரிவுப்படுத்த இருக்கும் ஆப்பிள் சரியான முடிவை எடுத்து இருக்கிறது."

    "இந்தியாவை சக்திவாய்ந்த மின்னணு தளமாக உருவாக்க நினைக்கும் பிரதமர் மோடியின் இலக்கை அடைய உதவுவதற்கும், இந்தியாவில் தங்களது சாதனங்களை நம்பிக்கையாக உற்பத்தி செய்ய முன்வரும் சர்வதேச மின்னணு நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கும் சர்வதேச இந்திய மின்னணு நிறுவனங்களுக்கு மத்திய மின்னணு மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் முழுமையான ஆதரவை வழங்கும்," என்று தெரிவித்து இருக்கிறார்.

    • 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்
    • விஸ்ட்ரான் தொழிற்சாலையின் மதிப்பு ரூ.5 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக மதிப்பிடப்பட்டுள்ளது

    இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமான டாடா குழுமம், அடுத்த மாதம் விஸ்ட்ரான் கார்பரேசனின், ஐபோன் தொழிற்சாலையை கையகப்படுத்துவதற்கான ஒப்பந்தம் செய்யவிருக்கிறது. ஒரு இந்திய நிறுவனம் ஐபோனை தயாரிக்கும் (assembly of iPhones) துறையில் நுழைவது இது முதல் முறையாகும். இதன்மூலம் ஐபோன் தயாரிக்கும் முதல் நிறுவனம் என்ற பெருமையை பெறப்போகிறது.

    தெற்கு கர்நாடகாவில் தைவான் நாட்டை தலைமையிடமாக கொண்ட விஸ்ட்ரான் கார்பரேசன் நிறுவனத்தின் தொழிற்சாலை ரூ.5 ஆயிரம் கோடிக்கும் ($600 மில்லியன்) அதிகமாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆலையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். அவர்கள் ஐபோன் 14 மாடலை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதனை வாங்க டாடா குழுமம் ஒரு வருடமாக பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாக தெரிகிறது.

    விஸ்ட்ரான், 2024-ம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான நிதியாண்டில், சுமார் ரூ.15 ஆயிரம் கோடி ($1.8 பில்லியன்) மதிப்பிலான ஐபோன்களை தங்கள் தொழிற்சாலையிலிருந்து அனுப்ப உறுதியளித்துள்ளது. அடுத்த ஆண்டிற்குள் ஆலையின் பணியாளர்களை மும்மடங்காக்கவும் திட்டமிட்டுள்ளது. விஸ்ட்ரான் இந்தியாவை விட்டு வெளியேறும் போது, டாடா ஒப்பந்தத்தின்படி செயல்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஜூன் 30-ம் தேதியுடன் முடிவடைந்த 2-வது காலாண்டில், விஸ்ட்ரான் இந்தியாவில் இருந்து சுமார் ரூ. 4 ஆயிரம் கோடி மதிப்பிலான ஐபோன்களை ஏற்றுமதி செய்துள்ளது. ஆனால் டாடா, விஸ்ட்ரான் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களின் செய்தித்தொடர்பாளர்கள் இதுகுறித்து கருத்து எதுவும் தெரிவிக்க மறுத்து விட்டனர்.

    தமிழ்நாட்டில் டாடா குழுமம், நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்திருக்கும் அதன் தொழிற்சாலையில் ஐபோன் சேஸிஸ் எனப்படும் முக்கிய பாகத்தை உருவாக்கி வருகிறது.

    கோவிட் முடக்கம் மற்றும் அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்கள் ஆகிய காரணங்களால் சீனாவை சார்ந்திருக்கும் நிலையிலிருந்து விலகும் முயற்சிகளை ஆப்பிள் நிறுவனம் முடுக்கிவிட்டுள்ளது.

    உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பை விரிவுபடுத்தும் வகையில் லாபகரமான நிதிச்சலுகைகளுடன் பிரதமர் நரேந்திர மோடி அரசு திட்டங்களை வகுத்ததில் இருந்து உள்நாட்டு உற்பத்தியில் இந்தியா முன்னேற்றம் கண்டு வருகிறது.

    டாடா குழுமத்தின் இந்த முயற்சி உறுதியானால் உலகின் தொழிற்சாலை என்ற சீனாவின் தற்போதைய நிலையை மாற்ற மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு குறிப்பிடத்தக்க ஊக்கம் கிடைக்கும்.

    • விஸ்ட்ரன் உற்பத்தி ஆலையில் ஐபோன் 14 மற்றும் ஐபோன் 12 மாடல்களின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.
    • ஐபோன் 15 மற்றும் அதன் பின் அறிமுகமாகும் புதிய ஐபோன்களை உற்பத்தி செய்ய டாடா திட்டமிட்டுள்ளது.

    இந்தியாவில் செயல்பட்டு வரும் விஸ்ட்ரன் ஐபோன் உற்பத்தி ஆலையை முழுமையாக கைப்பற்றும் பணிகளில் டாடா குழுமம் இறுதிக்கட்டத்தை எட்டியதாக தகவல் வெளியாகி உள்ளது. இரு நிறுவனங்கள் இடையே ரூ. 5 ஆயிரம் கோடி மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், இம்மாத இறுதியில் கையகப்படுத்தும் பணிகள் முழுமை பெறும் என கூறப்படுகிறது.

    கர்நாடக மாநிலத்தில் அமைந்து இருக்கும் விஸ்ட்ரன் உற்பத்தி ஆலையில் ஐபோன் 14 மற்றும் ஐபோன் 12 மாடல்களின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இதற்காக ஆலையில் பாகங்களை ஒருங்கிணைக்கும் எட்டு அசெம்ப்ளி லைன்கள் உள்ளன. ஆலையை கையகப்படுத்தியதும் டாடா குழுமம் ஐபோன் 15 மற்றும் அதன் பின் அறிமுகமாகும் புதிய ஐபோன்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது.

     

    இதன் மூலம் ஆப்பிள் சாதனங்கள் உற்பத்தியின் முக்கிய பகுதியாக இந்தியாவை மாற்ற முடியும். ஏற்கனவே விஸ்ட்ரன், பெகட்ரான் மற்றும் ஃபாக்ஸ்கான் போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் ஆப்பிள் நிறுவன சாதனங்களை உற்பத்தி செய்து வருகின்றன. இதில் விஸ்ட்ரன் நிறுவனம் இந்தியாவை விட்டு வெளியேற இருக்கும் நிலையில், ஃபாக்ஸ்கான் மற்றும் பெகட்ரான் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களின் உற்பத்தியை அதிகப்படுத்தி உள்ளன.

    மத்திய அரசு இந்தியாவை உற்பத்தி களமாக மாற்றும் திட்டத்தை ஊக்குவித்து வருவதோடு, ஆப்பிள் நிறுவனம் தனது பெரும்பாலான உற்பத்தியை சீனாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு மாற்ற நினைப்பதை அடுத்து டாடா குழுமம் ஆப்பிள் சாதனங்கள் உற்பத்தியை மேற்கொள்ள விருப்பம் தெரிவித்தது. விஸ்ட்ரன் நிறுவனத்தை கைப்பற்றியதும், டாடா குழுமம் பெகட்ரான் உற்பத்தி ஆலைகளை கையகப்படுத்த திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. 

    • முதலாவது ஏ350 ரக விமானம், இந்த ஆண்டு இறுதிக்குள் எங்களிடம் ஒப்படைக்கப்படும்.
    • அடுத்த 10 ஆண்டுகளுக்குள் அனைத்து விமானங்களும் வந்து சேர்ந்து விடும்.

    புதுடெல்லி :

    மத்திய பொதுத்துறை விமான நிறுவனமாக இருந்த ஏர் இந்தியாவை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் டாடா குழுமம் விலைக்கு வாங்கியது.

    இந்தநிலையில், ஏர் இந்தியாவை விரிவுபடுத்தும் நோக்கத்தில், 840 விமானங்களை வாங்க டாடா குழுமம் திட்டமிட்டுள்ளது.

    அமெரிக்காவை சேர்ந்த ஏர்பஸ், போயிங் ஆகிய விமான நிறுவனங்களிடம் இருந்து 840 விமானங்கள் வாங்க 'ஆர்டர்' கொடுத்துள்ளது.

    இதுகுறித்து ஏர் இந்தியாவின் தலைமை வர்த்தக அதிகாரி நிபுன் அகர்வால் கூறியதாவது:-

    ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 250 விமானங்களும், போயிங் நிறுவனத்திடம் இருந்து 220 விமானங்களும் வாங்கப்படும். மீதி 370 விமானங்களை கொள்முதல் உரிமத்துடன் வாங்குவோம்.

    முதலாவது ஏ350 ரக விமானம், இந்த ஆண்டு இறுதிக்குள் எங்களிடம் ஒப்படைக்கப்படும். அடுத்த 10 ஆண்டுகளுக்குள் அனைத்து விமானங்களும் வந்து சேர்ந்து விடும்.

    கடந்த 2005-ம் ஆண்டு ஏர் இந்தியா 111 விமானங்களை வாங்க 'ஆர்டர்' அளித்தது. அதன்பிறகு, கடந்த 17 ஆண்டுகளில் ஏர் இந்தியா விமானங்களை கொள்முதல் செய்வது இதுவே முதல்முறை ஆகும்.

    ஏர் இந்தியாவின் மிகப்பெரிய விமான ஆர்டர் இதுதான். இந்திய விமான போக்குவரத்து வரலாற்றில் இது மைல்கல்லாக அமையும். ஏர் இந்தியாவை உலகத்தரமான விமான நிறுவனமாக மாற்றுவதற்காகவும், உலகத்தின் முக்கிய நகரங்களுக்கு இடைவிடாமல் விமான சேவையை அளிப்பதற்காகவும் விமானங்களை வாங்குகிறோம்.

    இதுதவிர, விமான என்ஜின்களை நீண்ட காலம் பராமரிப்பதற்காக சி.எப்.எம்.இன்டர்நேஷனல், ரோல்ஸ்ராய்ஸ், ஜிஈ ஏரோஸ்பேஸ் ஆகிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஏர்பஸ், போயிங் நிறுவனங்களிடம் இருந்து ஏர் இந்தியா விமானங்கள் வாங்குவதை பிரதமர் மோடியும், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் ஏற்கனவே வரவேற்றுள்ளனர்.

    ×