என் மலர்tooltip icon

    கேரளா

    • நான் கட்சி நிலைப்பாட்டிலிருந்து விலகிவிட்டதாக யார் சொன்னது என்பதுதான் எனது கேள்வி.
    • முழு உரையையும் படித்த பிறகுதான், உண்மையான விஷயம் அவர்களுக்குப் புரிகிறது.

    மத்திய பாஜக அரசுக்கு சாதகமான கருத்துகளை பகிர்ந்து வருவதாக காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் மீது காங்கிரஸ் கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    இந்த நிலையில், தான் ஒருபோதும் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை மீறியது இல்லை என சசி தரூர் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக சசி தரூர் கூறியதாவது:-

    நான் கட்சி நிலைப்பாட்டிலிருந்து விலகிவிட்டதாக யார் சொன்னது என்பதுதான் எனது கேள்வி. பல்வேறு விஷயங்களில் நான் என் கருத்துக்களைத் தெரிவித்தபோதும், பெரும்பாலான விஷயங்களில் நானும் கட்சியும் ஒரே நிலைப்பாட்டில்தான் இருந்தோம்.

    நான் உண்மையில் என்ன எழுதினேன் என்பதை மக்கள் படித்திருக்கிறார்களா என்று நான் கேட்டால், பெரும்பாலானோர் படித்திருக்கவில்லை. முழு உரையையும் படித்த பிறகுதான், உண்மையான விஷயம் அவர்களுக்குப் புரிகிறது

    தான் 17 ஆண்டுகளாக கட்சியில் இருக்கிறேன், சக தோழர்களுடன் நல்லுறவைப் பேணி வருகிறேன். இப்போது திடீரென்று எந்த தவறான புரிதலுக்கும் அவசியமில்லை.

    நான் பிரதமர் மோடியை எங்கே புகழ்ந்தேன் என்று சுட்டிக்காட்டும்படி மக்களிடம் கேட்டேன். முழுப் பதிவையும் படித்தால், அதில் அப்படி எதுவும் இல்லை என்பது தெளிவாகத் தெரியும்

    இவ்வாறு சசி தரூர் தெரிவித்தார்.

    மேலும், "காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட பிறகுதான் இந்த பிரச்சனைகள் தொடங்கியதா என்று கேட்டதற்கு "நான் போட்டியிட்டு தோற்றேன். அந்த அத்தியாயம் அங்கேயே முடிந்துவிட்டது. இதில் நான் எந்தப் பெரிய விஷயத்தையும் பார்க்கவில்லை. கட்சியின் வரலாற்றில் பல தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன, பலரும் வெற்றி பெற்றும் தோற்றும் உள்ளனர்" என்றார்.

    சசி தரூர் பாஜக மூத்த தலைவர் அத்வானியின் பிறந்த நாளையொட்டி "98-வது பிறந்த நாள் கொண்டாடும் அத்வானிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். மக்களுக்கு சேவை செய்ய அவர் காட்டிய அர்ப்பணிப்பு, கண்ணியம் மற்றும் நவீன இந்தியாவுக்கான பாதையை வடிவமைப்பதில் அவரது பங்கு அழியாதவை.சேவை வாழ்க்கைக்கு முன்மாதிரியான ஒரு உண்மையான அரசியல்வாதி" எனப் புகழ்ந்து பாராட்டியிருந்தார்.

    ஏற்கனவே, பிரதமர் மோடிக்கு ஆதரவான கருத்துகளை தெரிவித்து வருவதாக காங்கிரஸ் கட்சி தலைவர்கள் சசி தரூர் கோபத்தில் இருந்தனர். தற்போது அத்வானியை புகழ்ந்து பேசியது மேலும், ஆத்திரமடையச் செய்துள்ளது.

    இந்த நிலையில் நான் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டில் இருந்து ஒருபோதும் விலகியதில்லை எனத் தெரிவித்துள்ளார்.

    • வெனிசுலாவின் மீது அமெரிக்கா நடத்தும் அப்பட்டமான ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு.
    • உலக அமைதிக்கு அச்சுறுத்தல் விடுக்கும் ஏகாதிபத்திய நடவடிக்கைகளை எதிர்த்து உலக சமூகம் நிற்க வேண்டும்.

    வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவுக்கு போதை பொருள் கடத்தப்படுவதாகவும், இதற்கு வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ உடந்தையாக இருப்பதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டி வந்தார்.

    இதையடுத்து வெனிசுலா படகுகள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தி வந்தது. வெனிசுலாவை சுற்றி கரீபியன் கடல்பகுதியில் அமெரிக்கா தனது படைகளை குவித்தது.

    வெனிசுலா அதிபர் பதவியில் இருந்து மதுரோ வெளியேற வேண்டும் என்று டிரம்ப் நேரடியாக எச்சரிக்கை விடுத்தார்.

    இந்நிலையில் இன்று (ஜனவரி 3) அமெரிக்க ராணுவத்தினர் வெனிசுலாவின் தலைநகரான கராகஸ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெரிய அளவிலான வான்வழித் தாக்குதல் நடத்தினர்.

    கராகஸில் உள்ள முக்கிய ராணுவ தளமான பியூர்டே தியுனா, லா கார்லோட்டா விமான தளம் மற்றும் லா குவைரா துறைமுகம் உள்ளிட்ட பல ராணுவ மற்றும் உள்கட்டமைப்பு இடங்கள் தாக்கப்பட்டன.

    இதன்பின், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பில், "அமெரிக்கா, வெனிசுலா மற்றும் அதன் தலைவர் அதிபர் நிக்கோலஸ் மதுரோ மீது ஒரு பெரிய அளவிலான தாக்குதலை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.

    அதிபர் மதுரோவும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டு, நாட்டிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை அமெரிக்க சட்ட அமலாக்கத் துறையுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது" என்று தெரிவித்தார்.

    மதுரோ மீது அமெரிக்காவில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் குற்றவியல் வழக்குகள் உள்ளதால் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என்று தெரிகிறது.

    இந்த நிலையில் வெனிசுலா மீதான அமெரிக்காவின் தாக்குதலுக்கு கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    பினராயி விஜயன் தனது எக்ஸ் பக்கத்தில், "வெனிசுலாவின் மீது அமெரிக்கா நடத்தும் அப்பட்டமான ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பை வன்மையாகக் கண்டிக்கிறோம். உலக அமைதிக்கு அச்சுறுத்தல் விடுக்கும் ஏகாதிபத்திய நடவடிக்கைகளை எதிர்த்து உலக சமூகம் நிற்க வேண்டும்.

    இது ஒரு முரட்டு நாட்டின் கொடூரமான செயல்பாட்டை வெளிப்படுத்துகிறது. தனது சூழ்ச்சித் திட்டங்களைத் திணிப்பதற்காக, உலக தென்பகுதியில் வெளிப்படையான விரோதத்தைத் தூண்டிவிடுகிறது. இது ஒரு பயங்கரவாதச் செயலும் கூட. இதுபோன்ற தாக்குதல்களையும் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களையும் எதிர்த்துப் போராடிய நீண்ட பாரம்பரியம் கொண்ட ஒரு கண்டமான லத்தீன் அமெரிக்காவின் அமைதிக்கு அச்சுறுத்தல் விடுக்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    • கடந்த ஆண்டு இதே நாளில் ரூ.108.71 கோடிக்கு விற்பனையாகி இருந்தது.
    • தொடுபுழா கஞ்சிக்குழி விற்பனை நிலையம் ரூ.4.61 லட்சம் மதுபானங்கள் விற்று விற்பனையில் கடைசி இடத்தை பிடித்துள்ளது.

    கேரளாவில் பண்டிகை காலங்களில் மது விற்பனை அதிகரித்து வருகிறது. கடந்த ஓணம் பண்டிகையின் போது 10 நாட்களில் ரூ.826.38 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையானது. கடந்த ஆண்டை விட ரூ.50 கோடி அதிகமாகும். அந்த வரிசையில் தற்போது புத்தாண்டு கொண்டாட்ட மது விற்பனையும் சாதனையை படைத்து உள்ளது.

    புத்தாண்டுக்கு முதல் நாளான 31-ந்தேதி மட்டும் கேரளாவில் ரூ.125.64 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் ரூ.108.71 கோடிக்கு விற்பனையாகி இருந்தது. தற்போது அதைவிட 16.93 கோடிக்கு அதிக மது விற்பனையாகி உள்ளது. கடந்த வார விற்பனை நிலையத்தில் மட்டும் ரூ.1.17 கோடிக்கு மது விற்கப்பட்டுள்ளது. 2-வது இடத்தை பாலாரி வட்டம் (ரூ.95.09 லட்சம்) பெற்றுள்ளது. தொடுபுழா கஞ்சிக்குழி விற்பனை நிலையம் ரூ.4.61 லட்சம் மதுபானங்கள் விற்று விற்பனையில் கடைசி இடத்தை பிடித்துள்ளது.

    புத்தாண்டுக்கு முதல் நாளில் 2.07 லட்சம் வெளிநாட்டு மதுபானங்கள், பீர் மற்றும் ஒயின் பெட்டிகள் கேரளாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு 1.84 லட்சம் பெட்டிகள் விற்பனையாகி இருந்தன.

    • பேரழிவால் சிதைந்த மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான ஒரு முயற்சி
    • எல்ஸ்டன் எஸ்டேட் நிலத்தில் மொத்தம் 410 வீடுகள் அமைய உள்ளன

    வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதற்கட்டமாக  300 வீடுகள் மற்றும் அவற்றுக்கான வசதிகள் தயார் செய்யப்பட்டு, அடுத்த மாதம் ஒப்படைக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 

    நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், கேரள அரசின் 'லைஃப் மிஷன்' திட்டத்தின் கீழ் இதுவரை 4.76 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாகவும், 1.24 லட்சம் வீடுகளின் கட்டுமானம் தற்போது பல்வேறு கட்டங்களில் உள்ளது, பிப்ரவரியில் இந்த எண்ணிக்கை 5 லட்சத்தை எட்டும் என்றும் தெரிவித்துள்ளார். 

    முண்டக்காய்-சூரல்மலா நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக வயநாட்டில் உள்ள கல்பெட்டா பைபாஸ் அருகே உள்ள எல்ஸ்டன் எஸ்டேட் நிலத்தில் கட்டப்பட்டு வரும் டவுன்ஷிப்பின் ஒரு பகுதியாக இந்த வீடுகள் உள்ளன. இதில் மொத்தம் 410 வீடுகள் அமைய உள்ளன. இந்த வீடுகளில் அத்தியாவசிய வசதிகள் அனைத்தும் இருக்கும் எனவும் தெரிவித்தார். 

    இது வெறும் வீடுகளை வழங்குவது மட்டுமல்லாமல், பேரழிவால் சிதைந்த மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான ஒரு முயற்சி. பேரிடர்களால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பமும் முன்பை விட பாதுகாப்பான மற்றும் சிறந்த வாழ்க்கை இடத்தைப் பெறுவதை உறுதி செய்வதே எங்கள் பொறுப்பு எனவும் தெரிவித்துள்ளார். 

    • அவினாஷ் ஒரு ஐடி ஊழியர் என்றும், அசிம், அஜித், அன்சியா ஆகியோர் ஏற்கனவே பல போதைப்பொருள் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள்.
    • கனியாபுரம் தோப்பு பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் இருந்து இந்த கும்பலை போலீசார் கைது செய்தனர்.

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் மருத்துவ மாணவர்களுக்கு போதைப்பொருள் சப்ளை செய்த மருத்துவ மாணவர் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் டாக்டர் விக்னேஷ் தாதன், பிடிஎஸ் மாணவர் ஹலீனா, அசிம், அவினாஷ், அஜித், அன்சியா மற்றும் ஹரிஷ் என்பது தெரிய வந்துள்ளது.

    அவினாஷ் ஒரு ஐடி ஊழியர் என்றும், அசிம், அஜித் மற்றும் அன்சியா ஆகியோர் ஏற்கனவே பல போதைப்பொருள் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டிருப்பதை காவல்துறையினர் தெரிவித்தனர்.

    இந்த சோதனையின்போது, சுமார் 4 கிராம் எம்.டி.எம்.ஏ, 1 கிராம் ஹைப்ரிட் கஞ்சா மற்றும் 100 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் 2 கார்கள், 2 பைக்குகள் மற்றும் 10 போன்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து கனியாபுரம் தோப்பு பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் இருந்து இந்த கும்பலை போலீசார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் காவலில் எடுக்கப்பட்டதாக புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.

    • டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 175 ரன்கள் எடுத்தது.

    திருவனந்தபுரம்:

    இந்தியா வந்துள்ள இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. நான்கு போட்டிகள் முடிவில் இந்திய அணி வெற்றி பெற்று டி20 தொடரில் 4-0 என கைப்பற்றியது.

    இந்நிலையில், இரு அணிகள் இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி கேரளாவின் திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 175 ரன்கள் எடுத்தது. முன்னணி வீராங்கனைகள் விரைவில் அவுட்டாகினர். 77 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து இந்திய அணி தத்தளித்தது.

    கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் தனி ஆளாகப் போராடி அரை சதம் கடந்தார். அவர் 43 பந்தில் 68 ரன்கள் குவித்தார். அமன்ஜோத் கவுர் 21 ரன்கள் எடுத்தார்.

    கடைசி கட்டத்தில் அருந்ததி ரெட்டி அதிரடியில் மிரட்டி 11 பந்தில் 27 ரன்கள் எடுத்தார்.

    இலங்கை சார்பில் சமாரி கவிஷா திஹாரி, ராஷ்மிகா, சமாரி அட்டபட்டு ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்குகிறது.

    • சபரிமலை கோவில் தங்கம் திருட்டு வழக்கை கேரள ஐகோர்ட்டு உத்தரவுப்படி சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது.
    • கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட விஜயகுமாரை 12-ந் தேதி வரை காவலில் வைக்க திருவனந்தபுரம் சிறப்பு விஜிலென்சு கோர்ட்டு உத்தரவிட்டது.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை கோவில் தங்கம் திருட்டு வழக்கை கேரள ஐகோர்ட்டு உத்தரவுப்படி சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது. இந்தக்குழு வழக்கு தொடர்பாக பலரை கைது செய்துள்ளது. இந்த நிலையில் நேற்று தேவசம்போர்டு முன்னாள் உறுப்பினர் விஜயகுமாரை கைது செய்தது. முன்னாள் தலைவர் பத்மகுமாருடன் சேர்ந்து சதி செய்து ஆவணங்களை திருடியதாக அவர் கைது செய்யப்பட்டார்.

    பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட விஜயகுமாரை 12-ந் தேதி வரை காவலில் வைக்க திருவனந்தபுரம் சிறப்பு விஜிலென்சு கோர்ட்டு உத்தரவிட்டது. அவரது ஜாமின் மனு நாளை (31-ந் தேதி) விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • கர்நாடகாவில் ஆக்கிரமிப்பு குடிசைகள் அகற்றப்பட்டன.
    • இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கேரள மாநில எம்.பி. பெங்களூரு சென்று பாதிக்கப்பட்ட பகுதியை பார்வையிட்டார்.

    கர்நாடக மாநில அரசு பெங்களூருவில் ஆக்கிரமிப்புக்காரர்களால் கட்டப்பட்ட குடிசைப் பகுதிகளை அப்புறப்படுத்தியது. குடிசை அமைத்தவர்கள் அனைவரும் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர்கள். கர்நாடக மாநில நடவடிக்கைக்கு கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்திருந்தார். கர்நாடக மாநில அரசு அதற்கு பதில் அளித்திருந்தது.

    இதற்கிடையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலங்களவை எம்.பி. ஏ.ஏ. ரஹிம் பெங்களூரு சென்றிருந்தார். அப்போது செய்தியாளர்களை சந்திக்கும்போது, ஆங்கிலத்தில் உரையாடினார். அப்போது, ஆங்கில இலக்கணம் தவறாக உச்சரித்ததாக கேலி கிண்டல் செய்யப்பட்டது.

    இந்த நிலையில், எம்.பி.யை கிண்டல் செய்ததற்கு, கேரள மாநில கல்வித்துறை அமைச்சர் வி. சிவன்குட்டி பதில் கொடுத்துள்ளார்.

    இது தொடர்பாக சிவன்குட்டி கூறுகையில் "பேட்டியின்போது எம்.பி. பயன்படுத்திய ஆங்கில இலக்கணத்தை விமர்சனம் செய்தவர்கள் ஒரு விசயத்தை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். மக்கள் பிரதிநிதியின் திறமை, அலங்கார வார்த்தைகளால் மதிப்பிடுவதில்லை. அவரின் செயலால் மதிப்பிடப்படும். ரஹிம் தலையிடுவது பொறுப்பான அரசியல் தலையீடு ஆகும்" என்றார்.

    • 34 சட்டமன்ற தொகுதிகளில் தங்களின் பலத்தை காட்டியதாக பாஜக மதிப்பிட்டுள்ளது.
    • பாஜக, கேரளாவில் சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தை தொடங்க உள்ளது.

    பாஜக தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தனது கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. கேரளாவிலும் தனது கட்சியை கால் பதிக்க பல்வேறு யுக்திகளை கையாண்டது.

    அதன் பலனாக கடந்த பாராளுமன்ற தேர்தலில் திருச்சூர் தொகுதியில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் கேரள மாநிலத்தில் பாஜக கால் பதித்தது. திருச்சூர் தொகுதியில் வெற்றி பெற்ற நடிகர் சுரேஷ் கோபிக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கி கவுரவப்படுத்தியது.

    இந்தநிலையில் தற்போது நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜக கைப்பற்றியது. அங்குள்ள 101 வார்டுகளில் 50 வார்டுகளில் பா.ஐ.க. வெற்றிபெற்றது.

    இதனால் மேயர் மற்றும் துணை மேயர் தேர்தலிலும் அவர்களே வெற்றி பெற்றனர். அது மட்டுமின்றி உள்ளாட்சி தேர்தலில் மாநிலத்தில் உள்ள 34 சட்டமன்ற தொகுதிகளில் தங்களின் பலத்தை காட்டியதாக பாஜக மதிப்பிட்டுள்ளது.

    நேமம், கட்டகடா, கஜகூட்டம், செங்கனூர், மலப்புழா, எலத்தூர், காசர்கோடு, மஞ்சேஸ்வரம், அரூர் ஆகிய 9 தொகுதிகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை பா.ஜ.க. பெற்றுள்ளது. அவற்றில் 5 தொகுதிகளில் பெற்ற வாக்குகள் 45 ஆயிரத்தை தாண்டியிருக்கிறது.

    கோவளம், வட்டியூர்காவு, பாறசாலை, சிராயின்கீழ், கொட்டாரக்கரா, புதுக்காடு, இரிஞ்சாலக்குடா, கொடுங் கல்லூர், நாட்டிகை, ஒட்டப்பாலம், பாலக்காடு, மாவேலிக்கரை ஆகிய 12 தொகுதிகளில் 35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வாக்குகள் வரை பெற்றிருக்கிறது.

    திருவனந்தபுரம், அட்டிங்கல், குன்னத்தூர், ஆரன்முளா, கருநாகப் பள்ளி, குந்தாரா, சேலக்கரா, வடக்கஞ்சேரி, மணலூர், சொரனூர், குனனமங்கலம், கோழிக்கோடு வடக்கு, நென்மாரா ஆகிய 13 தொகுதிகளில் 30 ஆயிரம் முதல் 35 ஆயிரம் வரை வாக்குகளை பெற்றுள்ளது. வட்டியூர்காவு, நெமோத் ஆகிய தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

    சட்டமற்ற தேர்தலில் கூடுதல் இடங்களில் வெற்றி பெறும் நோக்கில் உள்ளாட்சி தேர்தல் பணி கட்சியின் முக்கிய தலைவர்களுக்கு வழங்கப்பட்டது. பெரும்பாலான சட்டமன்ற தொகுதிகளில் வாக்குகள் அதிகரிப்பதற்கு இதுவே காரணம் என்று பாஜக முடிவு செய்துள்ளது. ஆகவே சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள உள்ளாட்சி தேர்தலில் நியமிக்கப்பட்ட தலைவர்களை பணியாற்ற அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    இப்படிப்பட்ட சூழலில் பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி மாதம் கேரளாவுக்கு வருகிறார் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. உள்ளாட்சி தேர்தலில் திருவனந்தபுரம் மாநக ராட்சியை கைப்பற்றினால் 45 நாட்களுக்குள் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தை அறிவிக்க கேரள மாநிலத்துக்கு பிரதமர் வருவார் என்று பா.ஜ.க. அறிவித்திருந்தது.

    அதன்படி பிரதமர் கேரளாவுக்கு ஜனவரி மாதம் 24-ந்தேதிக்கு முன்னதாக வரும் வகையில் திட்டம் வகுப்பப்பட்டு வருகிறது. அப்போது பா.ஜ.க.வின் "மிஷன்-2026" திட்டத்தை பிரதமர் அறிவிப்பார் என தெரிகிறது. அப்போதே பாஜக, கேரளாவில் சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தை தொடங்க உள்ளது.

    உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்திற்காக கேரள வந்திருந்த உள்துறை மந்திய மந்திரி அமித்ஷா, திருவனந்தபுரத்தில் "மிஷன் 2025" என்று பெயரிடப்பட்ட வளர்ந்த கேரளா திட்டத்தை அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 221 ரன்கள் குவித்தது.
    • ஸ்மிருதி மந்தனா 80 ரன்னும், ஷபாலி வர்மா 79 ரன்னும் எடுத்தனர்.

    திருவனந்தபுரம்:

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்துமுடிந்த 3 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை இந்திய அணி கைப்பற்றியது.

    இரு அணிகளுக்கு இடையிலான 4வது டி20 போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி இந்திய அணி முதலில் களமிறங்கியது. தொடக்கம் முதலே இருவரும் அதிரடியாக விளையாடினர். இந்திய அணி 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 221 ரன்கள் குவித்தது. ஸ்மிருதி மந்தனா 80 ரன்னும், ஷபாலி வர்மா 79 ரன்னும் எடுத்தனர். ரிச்சா கோஷ் 40 ரன்கள் எடுத்தார்.

    இந்நிலையில், இந்தப் போட்டியில் 80 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்மிருதி மந்தனா புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

    சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் அதிவேகமாக 10,000 ரன்களைக் கடந்த வீராங்கனை என்ற சாதனையை படைத்தார் ஸ்மிருதி மந்தனா. மேலும் 10,000 ரன்களைக் கடந்த 2-வது இந்திய வீராங்கனை ஆனார். இந்தப் பட்டியலில் மிதாலி ராஜ் 10868 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். ஒட்டுமொத்தமாக 10,000 ரன்களைக் கடந்த 4வது வீராங்கனை ஆவார்.

    • டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 221 ரன்கள் குவித்தது.

    திருவனந்தபுரம்:

    இந்தியா வந்துள்ள இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. மூன்று போட்டிகள் முடிவில் இந்திய அணி வெற்றி பெற்று டி20 தொடரில் 3-0 என கைப்பற்றியது.

    இந்நிலையில், இரு அணிகள் இடையிலான நான்காவது டி20 போட்டி கேரளாவின் திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 221 ரன்கள் குவித்தது. தொடக்க வீராங்கனைகள் அதிரடியில் மிரட்டினர். இருவரும் அரை சதம் கடந்தனர்.

    ஸ்மிருதி மந்தனா 48 பந்தில் 80 ரன்னும், ஷபாலி வர்மா 46 பந்தில் 79 ரன்னும் குவித்தனர். ரிச்சா கோஷ்16 பந்தில் 40 ரன்கள் சேர்த்தார்.

    இதையடுத்து, 222 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. கேப்டன் சமாரி அடப்பட்டு 52 ரன்னும், ஹாசினி பெராரா 33 ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில், இலங்கை பெண்கள் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 191 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 30 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. அத்துடன் டி20 தொடரில் இந்திய அணி 4-0 என கைப்பற்றியது.

    • இலங்கைக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி 3-0 என கைப்பற்றியுள்ளது.
    • இன்றைய ஆட்டத்தில் இலங்கை அணி ஆறுதல் வெற்றி பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    திருவனந்தபுரம்:

    இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடந்து வருகிறது.

    முதல் 3 ஆட்டங்களின் முடிவில் இந்திய அணி வெற்றி பெற்று 3-0 என தொடரைக் கைப்பற்றி உள்ளது.

    இந்திய அணி முதல் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்திலும், 3வது போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்திலும் இலங்கையை வீழ்த்தியது.

    இந்நிலையில், இந்தியா-இலங்கை மகளிர் அணிகள் மோதும் 4-வது டி20 போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடக்கிறது. இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தன் பயணத்தை தொடர முயற்சிக்கும்.

    ஆனால் தொடரை இழந்துள்ள இலங்கை அணி ஆறுதல் வெற்றி பெற தீவிரம் காட்டும்.

    ×