என் மலர்tooltip icon

    கர்நாடகா

    • எங்களுடைய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை ஏற்றுக் கொண்டுள்ளது.
    • எங்களுடைய அரசு நிச்சயமாக அமல்படுத்தும். இதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

    கர்நாடக மாநில அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி முடித்துள்ளது. இந்த சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை அமல்படுத்துவதில் கர்நாடக மாநில அரசு உறுதிப்பூண்டுள்ளது என சித்தராமையா தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக சித்தராமையா கூறுகைapy "என்னுடைய அரசின் நோக்கத்தை மக்கள் சந்தேகிக்க வேண்டாம். சாதிவாரி கணக்கெடுப்பு அறிவியல் ரீதியாக நடத்தப்பட்டுள்ளது. எங்களுடைய அரசு நிச்சயமாக அமல்படுத்தும். இதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

    எங்களுடைய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை ஏற்றுக் கொண்டுள்ளது. வரும் நாட்களில் அமல்படுத்தப்படும்" என்றார்.

    2015-ம் ஆண்டு முந்தைய சித்தராமையா தலைமையிலான அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த கமிட்டி அமைத்தது. இந்த கமிட்டி பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவர் ஹெச். கந்தராஜு தலைமையில் அமைக்கப்ப்டது. சுமார் 169 கோடி ரூபாய் செலவில் கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டது. ஆனால் அந்த அறிக்கை கிடப்பில் போடப்பட்டது.

    2020-ல் பாஜக அரசு ஜெயபிரகாஷ் ஹெக்டேவை தலைவரான நியமித்தது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 29-ந்தேதி ஹெக்டே இறுதி அறிக்கையை சித்தராமையா அரசிடம் தாக்கல் செய்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மகாராஷ்டிராவில் ஜி.பி.எஸ். நோயால் பாதிக்கப்பட்ட யாத்ரீகர்கள் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
    • ஜிபிஎஸ் 30 முதல் 50 வயதுக்குட்பட்டவர்களை பாதிக்கிறது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    மகாராஷ்டிராவில் இருந்து திரும்பிய சில யாத்ரீகர்கள் கடுமையான வயிற்றுப்போக்கால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து 2 கர்நாடக கிராமங்களுக்கு சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    மகாராஷ்டிராவில் ஜி.பி.எஸ். (GBS) நோயால் பாதிக்கப்பட்ட யாத்ரீகர்கள் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக சுகாதார அதிகாரிகளின் கூறுகையில், யாத்ரீகர்களின் நோய்க்கான காரணத்தை அறிய அவர்களின் ரத்த மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

    ஜி.பி.எஸ். உள்ள 3 பேரில் 2 பேருக்கு வயிற்றுப்போக்கு, சுவாச நோய்த்தொற்று பாதிப்புகள் உள்ளது. இது பக்கவாதத்தை ஏற்படுத்துகிறது என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக கர்நாடக சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் கூறுகையில், ஜி.பி.எஸ். நோய் குறித்து கவலைப்படத் தேவையில்லை. எந்தவொரு அவசரநிலையையும் சமாளிக்க தனது துறை முழுமையாகத் தயாராக உள்ளது.

    மகாராஷ்டிராவின் புந்தர்பூரில் இருந்து திரும்பிய 60 யாத்ரீகர்களில் 33 பேர் மருத்துவமனைகளில் உள்ளனர் என்றும், அவர்களின் ரத்த மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

    ஜி.பி.எஸ். என்பது ஒரு அரிய தன்னுடல் தாக்க நிலையாகும், இது உடலில் நோயெதிர்ப்பு அமைப்பு, புற நரம்பு மண்டலத்தைத் தாக்குகிறது. இது உணர்வின்மை, கூச்ச உணர்வு மற்றும் தசை பலவீனம் போன்ற அறிகுறிகளுக்கு வழிவகுக்கிறது.

    இருப்பினும் முறையான சிகிச்சை எடுத்துக்கொண்டால் இதில் இருந்து முழுமையாக மக்களை மீட்க முடியும் நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.

    ஜி.பி.எஸ். எந்த வயதிலும் ஏற்படலாம். ஆனால் இது பொதுவாக 30 முதல் 50 வயதுக்குட்பட்டவர்களை அதிகம் பாதிக்கிறது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    • அமெரிக்காவில் வசிக்கும் தனது சகோதரர் பரத்துக்கு இன்று அதிகாலை 4 மணிக்கு சேத்தன் போன் செய்தார்.
    • சேத்தன், மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலாளர்களை அனுப்பும் வேலை செய்துவந்தார்.

    கர்நாடக மாநிலம் மைசூருவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இன்று (திங்கள்கிழமை) காலை மைசூருவில் விஸ்வேஸ்வரய்யா நகர் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.

    போலீசாரின் கூற்றுப்படி, இறந்தவர்கள் சேத்தன் (45), அவரது மனைவி ரூபாலி (43), அவர்களது 15 வயது மகன் மற்றும் சேதனின் தாயார் பிரியம்வதா (62) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

    சேத்தன் முதலில் மூவருக்கும் விஷம் கொடுத்துவிட்டு, பின்னர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் கூறுகின்றனர்.

    சேத்தனின் தாயார் பிரியம்வதா குடியிருப்பின் ஒரு வீட்டில் இறந்து கிடந்தனர். அதில் அவர் தனியாக வசித்து வந்தார். மற்ற மூவரும் அதே அடுக்குமாடி குடியிருப்பில் அவர்கள் வசித்து வந்த மற்றொரு வீட்டில் இறந்து கிடந்தனர்.

    அமெரிக்காவில் வசிக்கும் தனது சகோதரர் பரத்துக்கு இன்று அதிகாலை 4 மணிக்கு சேத்தன் போன் செய்து, தனது குடும்பத்தினருடன் தற்கொலை செய்யபோவதாக கூறியுள்ளார். பரத் உடனடியாக ரூபாலியின் பெற்றோரை அழைத்து சேத்தனின் வீட்க்கு சென்று பார்க்க சொல்லியுள்ளார்.

    ஆனால் ரூபாலியின் பெற்றோர் அங்கு சென்றபோது ஏற்கனவே அவர்கள் உயிரிழந்து கிடந்தனர். காலை 6 மணி அளவில் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த வித்யாரண்யபுரம் போலீசார் உடல்களை கைப்பற்றி விசாரணையை தொடங்கியுள்ளனர்.

    சேத்தன் மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலாளர்களை அனுப்பும் வேலை செய்துவந்ததாகவும் நிதி நெருக்கடி காரணமாக அவர் இந்த முடிவுக்கு வந்திருக்கலாம் என்றும் போலீசார் கருதுகின்றனர்.

    சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட கடித்தத்தில் சேதன் எழுதியதாவது, எனது மரணத்திற்காக எனது குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களை காவல்துறை துன்புறுத்தக்கூடாது. இதற்கு நானே பொறுப்பு. 

    • கடன் தொல்லையால் பெண்கள் தற்கொலை.
    • கலெக்டர் அலுவலகங்களிள் உடனடியாக உதவி மையத்தை தொடங்க வேண்டும்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் பெங்களூருவை தலைமையிடமாக வைத்து ஏராளமான நிதி நிறுவனங்கள் செயல்படுகின்றன. இந்த நிதி நிறுவனங்களில் ஏழை மக்கள், விவசாயிகள் வட்டிக்கு கடன் வாங்கி வருகிறார்கள்.

    இவ்வாறு கடன் வாங்கியவர்கள் பணத்தை திரும்ப செலுத்தாமல் இருந்தால், அவர்களுக்கு ஒரு சில நிதி நிறுவனங்களால் தொல்லை கொடுக்கப்பட்டு வருகிறது. இதனால் பெண்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் தற்கொலை செய்துள்ளனர். இதையடுத்து, நிதி நிறுவனங்களுக்கு கடிவாளம் போடும் விதமாக புதிய அவசர சட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது.

    இதற்கு கவர்னர் தாவர்சந்த் கெலாட்டும் ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து, சிறிய நிதி நிறுவனங்களுக்கு எதிராக புதிய அவசர சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் பெங்களூருவில் இருந்தபடியே காணொலி காட்சி மூலமாக முதல்-மந்திரி சித்தராமையா ஆலோசனை நடத்தினார்.

    அப்போது மாநிலத்தில் எங்கெல்லாம் முறையாக அனுமதி பெறாமலும், சட்டவிரோதமாகவும் செயல்படும் நிதி நிறுவனங்களை உடனடியாக மூட வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுகள் மேற்கொள்ள வேண்டும் என்று முதல்-மந்திரி சித்தராமையா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    குறிப்பாக நிதி நிறுவனங்கள் ரவுடிகளை வைத்து மிரட்டி பணத்தை வசூலிக்க கூடாது. மாலை 6 மணிக்கு மேல் யாரும் வீட்டுக்கு சென்று பணம் வசூலிக்க கூடாது. இதனை போலீசார் கண்காணிக்க வேண்டும். மக்கள் ஏதேனும் புகார் அளித்தால், அதன்பேரில் எந்தவித பாரபட்சமும் பார்க்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    குறிப்பாக சிறிய நிதி நிறுவனங்களின் தொல்லைகளில் இருந்து மக்களை பாதுகாக்க மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களிலும் உடனடியாக உதவி மையத்தை தொடங்க வேண்டும்.

    அதுபோல் மக்களுக்கு தொல்லை கொடுக்கும் நிதி நிறுவனங்கள் பற்றி தெரியவந்தால் போலீசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கலாம். இதற்காக பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க வேண்டும் என்று காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என தெரிவித்துள்ளார்.

    • கடந்த 2020 முதல் சுமார் 3 லட்சம் குழந்தைகள் காணாமல்போயினர்.
    • மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 58,665 குழந்தைகள் காணாமல் போயினர்.

    இந்தியாவில் கடந்த 2020 முதல் 4 வருடங்களில் காணாமல் போன 36,000 குழந்தைகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

    குழந்தைகள் கடத்தலுக்கு எதிரான வழக்கு ஒன்று நேற்று முன்தினம் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, சதீஷ் சந்திர சர்மா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

    மனுத்தார் தரப்பில் ஆஜரான மூத்த மூத்த வழக்கறிஞர் அபர்ணா பட், மாநிலங்களுக்கு இடையிலான குழந்தை கடத்தல் வழக்குகளை சிபிஐ போன்ற தேசிய அமைப்பிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாட்டி, "கடந்த 2020 முதல் காணாமல்போன சுமார் 3 லட்சம் குழந்தைகளில் பெரும்பாலானோரை மத்திய, மாநில போலீசார் கண்டுபிடித்துவிட்டனர். ஆனாலும் 36 ஆயிரம் குழந்தைகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.

    மேலும் 'கோயா-பயா' போர்ட்டலைத் தவிர, பெற்றோர்கள் அல்லது உறவினர்கள் புகார் அளித்தும் நான்கு மாதங்களாக கண்டுபிடிக்கப்படாவிட்டால், காணாமல் போன குழந்தைகள் வழக்குகளை மனித கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றுமாறு மத்திய அரசு மாநிலங்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தெரிந்தார்.

    மாவட்டந்தோறும் மனித கடத்தல் எதிர்ப்பு கட்டமைப்பை மேம்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

    மத்திய அரசு கூற்றுப்படி, பீகாரில், 2020 முதல் 24,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் காணாமல் போயுள்ளனர். அவர்களில் 12,600 க்கும் மேற்பட்டவர்களை காவல்துறை இன்னும் கண்டுபிடிக்கவில்லை.

    பீகாரைப் போலவே, ஒடிசாவிலும் 2020 முதல் 24,291 குழந்தைகள் காணாமல் போயுள்ளனர், அவர்களில் 4,852 பேரை காவல்துறை இன்னும் கண்டுபிடிக்கவில்லை. 2020 முதல் அதிகபட்சமாக மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 58,665 குழந்தைகள் காணாமல் போயினர். அதில் 45,585 பேரை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். இருப்பினும், 3,955 பேரை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.  

    • ஆட்டோ ஓட்டுநர் அவரது காரைத் துரத்திச் சென்று லாட்ஜ் முன் வைத்து அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்
    • ஆனால் அனுமதிக்கப்படுவதற்கு முன்பே அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

    கர்நாடக மாநிலம் பெலகாவியில் ஆட்டோ ஓட்டுநர் அறைந்த சிறிது நேரத்தில் கோவா முன்னாள் எம்எல்ஏ ஒருவர் உயிரிழந்த சம்பவம் நிகழ்துள்ளது.

    கர்நாடக மாநிலம் பெலகாவியில் வேலை நிமித்தமாக கோவாவை சேர்ந்த காங்கிரஸ் தலைவர் லாவு மம்லதார் (68) சென்றிருந்தார்.

    நேற்று அவரது கார் கார் காதேபஜார் அருகே ஒரு ஆட்டோவுடன் மோதியதாகக் கூறப்படுகிறது. மோதிய பின்னர் அவர் தனது காரில் அவர் தங்கியிருந்த ஸ்ரீனிவாஸ் லாட்ஜ் நோக்கிச் சென்றார்.

    ஆட்டோ ஓட்டுநர் அவரது காரைத் துரத்திச் சென்று லாட்ஜ் முன் வைத்து அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து அவரை ஆட்டோ ஓட்டுநர் கன்னத்தில் அறைந்துள்ளார். 

    தாக்குதலுக்குப் பிறகு, மம்லதார் லாட்ஜ் படிக்கட்டுகளில் ஏறியபோது நிலைதடுமாறி கீழே விழுந்தார். உடனே அவரை மீட்டு அங்கிருத்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அனுமதிக்கப்படுவதற்கு முன்பே அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இதன்பின் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ஆட்டோ ஓட்டுனரை போலீசார் கைது செய்தனர்.

    லாவு மம்லதார், மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி சார்பில் (எம்ஜிபி) 2012-2017 வரை கோவா எம்எல்ஏவாக இருந்தார். 2022 இல் காங்கிரசில் சேர்ந்தார். அதே ஆண்டு மட்காய் தொகுதியில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

    • காதலரை வாடகைக்கு எடுக்கும் நடைமுறை பல நாடுகளில் பிரபலமாக உள்ளது.
    • இந்தியாவில் 2018 ஆம் ஆண்டு 'ரென்ட் எ பாய்பிரண்ட்' என்ற தளம் மும்பையில் தொடங்கப்பட்டது.

    உலகம் முழுவதும் காதலர் தினம் நேற்று (பிப்ரவரி 14) கொண்டாடப்பட்டது.

    இந்நிலையில், கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் 'வாடகைக்கு காதலன் வேண்டுமா? ஒரு நாளுக்கு ரூ 389 கொடுத்தால் போதும்' என்று போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

    அந்த போஸ்டரில் ஒரு QR கொடு ஒன்றும் கொடுக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான தகவல்களை பெற அதை ஸ்கேன் செய்யுங்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த போஸ்டர்களை ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென நெட்டிசன்கள் பலர் இந்த போஸ்டரை இணையத்தில் பகிர்ந்து காவல்துறையினர் டேக் செய்தனர்.

    காதலரை வாடகைக்கு எடுக்கும் நடைமுறை ஜப்பான், சீனா மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளில் பல ஆண்டுகளாக பிரபலமாக உள்ளது.

    இந்தியாவிலும் 2018 ஆம் ஆண்டு 'ரென்ட் எ பாய்பிரண்ட்' என்ற தளம் மும்பையில் தொடங்கப்பட்டது. 2022 ஆம் ஆண்டில், இதே போன்ற சேவைகள் பெங்களூரு மற்றும் பிற பெருநகரங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • ஜெயலலிதாவின் பொருட்களுக்கு உரிமை கோரி ஜெ.தீபா தாக்கல் செய்த மனு அந்த கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.
    • ஜெயலலிதாவின் நகைகளை தமிழக அரசிடம் பிப்ரவரி 14, 15-ந் தேதிகளில் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டது.

    பெங்களூரு:

    தமிழகத்தில் ஜெயலலிதா 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை முதல்-அமைச்சராக இருந்தபோது, வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை குவித்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரது வீட்டில் சோதனை நடத்தினர். இதில் அவர் ரூ.66.65 கோடி மதிப்புள்ள சொத்துகளை சட்டவிரோதமாக வாங்கி குவித்ததாக ஜெயலலிதா மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் ஜெயலலிதாவுடன் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் சேர்க்கப்பட்டனர்.

    இந்த வழக்கு விசாரணை பெங்களூருவில் சிறப்பு கோர்ட்டில் நடைபெற்றது. இந்த வழக்கில் கடந்த 2014-ம் ஆண்டு ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடியும், மற்ற மூவருக்கு தலா ரூ.10 கோடியும் அபராதம் விதிக்கப்பட்டது. அவர்களுக்கு விதிக்கப்பட்ட இந்த தண்டனையை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.

    இதில் ஜெயலலிதா உள்பட 4 பேருக்கும் வழங்கப்பட்ட தண்டனை ரத்து செய்யப்பட்டது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்தது. இதில் பெங்களூரு சிறப்பு கோர்ட்டு வழங்கிய தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது. இந்த தீர்ப்பு வந்த நேரத்தில் ஜெயலலிதா ஏற்கனவே மரணம் அடைந்ததை அடுத்து அவரது பெயர் தீர்ப்பில் இருந்து கைவிடப்பட்டது. சசிகலா உள்பட 3 பேரும் சிறை தண்டனை அனுபவித்து வெளியே வந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கில் பறிமுதல் செய்யப்பட்டு கர்நாடக அரசிடம் உள்ள சுமார் 27 கிலோ தங்க-வைர நகைகளை ஏலம் விட உத்தரவிடுமாறு பெங்களூருவை சேர்ந்த சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி பெங்களூரு சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இதற்கிடையே ஜெயலலிதாவின் பொருட்களுக்கு உரிமை கோரி ஜெ.தீபா தாக்கல் செய்த மனு அந்த கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.

    இதையடுத்து தமிழக அரசிடம் ஜெயலலிதாவின் நகைகளை கடந்த ஆண்டு மார்ச் 6, 7-ந் தேதிகளில் ஒப்படைக்கும்படி கர்நாடக அரசுக்கு சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டது. இதை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் ஜெ.தீபா தாக்கல் செய்த மனுவில் அடிப்படையில் ஜெயலலிதாவின் நகைகளை தமிழக அரசிடம் வழங்க இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

    அதைத்தொடர்ந்து ஜெயலலிதாவின் நகைகளை ஒப்படைக்கும் பணி நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் ஜெ.தீபாவின் மனுவை ஐகோர்ட்டு ரத்து செய்து தீர்ப்பளித்தது.

    இதையடுத்து பெங்களூரு சிறப்பு கோர்ட்டு, ஜெயலலிதாவின் நகைகளை தமிழக அரசிடம் பிப்ரவரி 14, 15-ந் தேதிகளில் ஒப்படைக்கும்படி கடந்த மாதம் (ஜனவரி) உத்தரவிட்டது.

    இந்நிலையில் பெங்களூரு சிட்டி சிவில் கோா்ட்டு வளாகத்தில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் நீதிபதி மோகன் முன்னிலையில் ஜெயலலிதாவின் நகைகள் சரிபார்க்கப்பட்டு தமிழக அரசிடம் ஒப்படைக்கும் பணி தொடங்கியது.

    • கார் ஓட்டிச்செல்லும் பெண் ஒருவர் ஸ்டியரிங் மீது லேப்டாப்பை வைத்துக்கொண்டு பயன்படுத்தி வருகிறார்.
    • போக்குவரத்து போலீசார் அப்பெண்ணுக்கு 1000 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

    கர்நாடக தலைநகர் பெங்களூருவில் பெண் ஒருவர் கார் ஓட்டிக்கொண்டே லேப்டாப் பயன்படுத்திய வீடியோ இணையத்தில் வைரலானது.

    அந்த வீடியோவில் கார் ஓட்டிச்செல்லும் பெண் ஒருவர் ஸ்டியரிங் மீது லேப்டாப்பை வைத்துக்கொண்டு பயன்படுத்தி வருகிறார்.

    இந்த வீடியோ வைரலான நிலையில், போக்குவரத்து போலீசார் அப்பெண்ணுக்கு 1000 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

    இந்த சம்பவம் குறித்து, போக்குவரத்து துணை போலீஸ் கமிஷனர் தனது எக்ஸ் பக்கத்தில், "வீட்டில் இருந்து வேலை செய்யுங்கள், ஆனால் கார் ஓட்டும் போது வேலை செய்யாதீர்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

    • மஞ்சுளாவின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த சித்த லிங்கேஸ்வராவை கைது செய்தனர்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களா தாலுகா காரோ கியாதஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சித்த லிங்கேஸ்வரா. இவரது மனைவி மஞ்சுளா. இவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    சித்த லிங்கேஸ்வரா தனியார் நிறுவனத்திலும், மஞ்சுளா ஆயத்த ஆடை நிறுவனத்திலும் வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவருடன் சித்த லிங்கேஸ்வரா அடிக்கடி சண்டை போட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதுபோல் சம்பவத்தன்று இரவும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது தனது மனைவியின் கழுத்தை நெரித்து சித்த லிங்கேஸ்வரா கொலை செய்ய முயன்றதாக தெரிகிறது.

    அப்போது மஞ்சுளா சத்தம் போட்டதால் வீட்டில் கிடந்த பசையை (பெவி குவிக்) எடுத்து அவரது வாயில் போட்டு ஒட்டினார். அதன்பிறகும் அவரது கழுத்தை சித்த லிங்கேஸ்வரா நெரித்ததாக தெரிகிறது. முன்னதாக மஞ்சுளாவின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் அங்கு விரைந்து வந்தனர். போலீசார் வருவதை பார்த்ததும் வீட்டில் இருந்து சித்த லிங்கேஸ்வரா தப்பி ஓடி விட்டார். பின்னர் உயிருக்கு போராடிய மஞ்சுளாவை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் போலீசார் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இதுகுறித்து மாதநாயக்கனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த சித்த லிங்கேஸ்வராவை கைது செய்தனர்.

    • தனது மனைவியால் அபினவ் சிங் மன உளைச்சலில் இருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
    • பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடல் ஒடிசாவிற்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

    ஒடியா பாடகர் அபினவ் சிங் (32) பெங்களூரில் அவர் வாடகைக்கு குடியிருந்த வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

    அபினவ் சிங் மீது அவரது மனைவி பொய்யான குற்றசாட்டுகளை கூறியதால் ஏற்பட்ட மன உளைச்சலில் அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

    பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடல் ஒடிசாவில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்படவுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    • பிஷ்டப்பா குடிமணி (45) சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
    • பிஷ்டப்பா குடிமணிக்கு இறுதி சடங்கு செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது.

    கர்நாடகா மாநிலம் ஹாவேரி மாவட்டத்தில் மருத்துவர்கள் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நபருக்கு மீண்டும் உயிர் வந்த அதிசய சம்பவம் நடந்துள்ளது.

    பிஷ்டப்பா குடிமணி (45) என்ற நபர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதனையடுத்து மனைவி ஷீலா கணவரது உடலை ஆம்புலன்சில் ஏற்றி வீட்டிற்கு கொண்டு வந்துள்ளார். அப்போது அவரது மனைவி, "உங்களுக்கு பிடித்த தாபா வந்துவிட்டது. நீங்கள் இரவு உணவு சாப்பிடுகிறீர்களா?" என்று அழுதுகொண்டே கூறியவுடன் பிஷ்டப்பா குடிமணிக்கு திடீரென்று உயிர் வந்துள்ளது.

    இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனடியாக அவரை மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதனையடுத்து அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

    பிஷ்டப்பா குடிமணிக்கு இறுதி சடங்கு செய்வதற்கான ஏற்பாடுகளும் இரங்கல் அஞ்சலி போஸ்டர்களும் தயார் செய்யப்பட்ட நிலையில் அவருக்கு மீண்டும் உயிர் வந்த சம்பவம் அப்பகுதியில் பேசுபொருளாகியுள்ளது.

    ×