என் மலர்tooltip icon

    கர்நாடகா

    • வயிற்றில் ஹீமோடோமா கட்டி போன்ற பொருள் இருப்பதாக மட்டுமே மருத்துவர் தெரிவித்துள்ளார்.
    • பெண்ணின் சிகிச்சைக்காக குடும்பம் லட்சக்கணக்கான ரூபாயை செலவிட்டுள்ளது.

    கர்நாடகா மாநிலம் மங்களூரில் கடந்த நவம்பர் 27 ஆம் தேதி தனியார் மருத்துவமனை ஒன்றில் கர்ப்பிணி ஒருவருக்கு அறுவை சிகிச்சை மூலம் மகப்பேறு நடந்துள்ளது. குழந்தை பிறப்புக்கு பின் டிஸ்சார்ஜ் ஆன 1 வாரத்தில் அப்பெண்ணுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

    மீண்டும் அதே மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். வயிற்றில் அசாதரணமான உணர்வு இருப்பதாக பெண் தெரிவித்த நிலையில் அவருக்கு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்யப்பட்டது. அதில் 10 செமீ அளவில் ஏதோவொன்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. வயிற்றில் ஹீமோடோமா கட்டி போன்ற பொருள் இருப்பதாக மட்டுமே மருத்துவர் தெரிவித்துள்ளார்.

    தொடர்ந்து அப்பெண்ணுக்கு CT ஸ்கேன் எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆனால் செலவுக்குப் பயந்த தம்பதி கட்டி காலப்போக்கில் சரியாகிவிடும் என்று அலட்சியமாக இருந்துவிட்டனர். ஆனால் பெண்ணுக்கு அதன் பிறகும் நிற்க, நடக்க குழந்தையை சுமக்க, தாய்ப்பால் கொடுக்க சிரமம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து CT ஸ்கேன் செய்யப்பட்டபோது அந்த அதிர்ச்சி உண்மை வெளிவந்தது.

    பெண்ணின் வயிற்றில் 10 சென்டி மீட்டர் அளவுக்கு அறுவை சிகிச்சை துணி (Surgical mop) இருப்பது CT ஸ்கேனில் தெரியவந்தது. இதுதொடர்பாக அறுவை சிகிச்சை செய்த மருத்துவரை கேட்டபோது அவர், பொறுப்பேற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்.

    எனவே மங்களூரு புத்தூரில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனையில் அப்பெண் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஜனவரி 25 அன்று அறுவை சிகிச்சை மூலம்  வயிற்றில் இருந்த சர்ஜிக்கல் மாப் அகற்றப்பட்டது. தொடர்ந்து அவர் பிப்ரவரி 15 அன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

    இருப்பினும் அந்த பெண் அசௌகரியங்களுக்கும், தொடர்ந்து மருந்து உட்கொள்ளும் நிலைக்கு ஆளாகியுள்ளார். பெண்ணின் சிகிச்சைக்காக குடும்பம் லட்சக்கணக்கான ரூபாயை செலவிட்டுள்ளது.

    இந்நிலையில் தற்போது மருத்துவரின் அலட்சியத்தால் ஏற்பட்ட இந்த சங்கடம் குறித்து தேசிய நுகர்வோர் குறை தீர்க்கும் ஆணையத்தில் பெண்ணின் கணவர் புகார் அளித்துள்ளார்.

    இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படும் என தட்சிண கன்னடா மாவட்ட சுகாதார மற்றும் குடும்ப நல அதிகாரி திம்மையா தெரிவித்துள்ளார். பெண்ணின் கணவர் தங்கள் நிலை குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டதை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.  

    • முதலில் ஆடிய உ.பி.வாரியர்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 177 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 144 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.

    பெங்களூரு:

    மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெற்ற 8-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ், உ.பி.வாரியர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த உ.பி.வாரியர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 177 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் சினேலி ஹென்றி அதிரடியாக ஆடி 23 பந்தில் 8 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 62 ரன்கள் குவித்து அவுட்டானார்.

    டெல்லி சார்பில் ஜெஸ் ஜோனாசென் 4 விக்கெட்டும், மரிஜான் காப், அருந்ததி ரெட்டி தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி டெல்லி கேப்பிடல்ஸ் களமிறங்கியது. அந்த அணியின் ஜெமிமா ரோட்ரிக்ஸ் போராடி அரை சதம் கடந்தார்.

    கடைசி கட்டத்தில் சிறப்பாக பந்து வீசிய கிரேஸ் ஹாரிஸ் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

    இறுதியில், டெல்லி அணி 19.3 ஓவரில் 144 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. இதன்மூலம் நடப்பு தொடரில் உபி வாரியர்ஸ் அணி முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

    உ.பி.வாரியர்ஸ் அணி சார்பில் கிரேஸ் ஹாரிஸ், கிராந்தி கவுட் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.

    • நட்பாக பேசி ஓட்டலுக்கு டின்னருக்கு அவரை அழைத்துச் சென்றுள்ளனர்.
    • யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டி காலியில் அனுப்பி வைத்தனர்.

    கர்நாடக மாநிலம் பெங்களூருவின் இளம்பெண் ஒருவர் கோரமங்களா பகுதியில் நான்கு ஆண்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    டெல்லியை சேர்ந்த 33 வயது திருமணமான பெண் ஒருவர் பெங்களூருவில் தங்கி கேட்டரிங் வேலை செய்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம்(வியாழக்கிழமை) கோரமங்கலாவில் உள்ள ஜோதி நிவாஸ் கல்லூரி அருகே அந்த பெண் நின்றுகொண்டிருந்தபோது ஏற்க்கனவே அறிமுகமான ஒரு இளைஞன் தனது மூன்று நண்பர்களுடன் அந்த பெண்ணை அணுகினார். அவருடன் நட்பாக பேசி ஓட்டலுக்கு டின்னருக்கு அவரை அழைத்துச் சென்றுள்ளனர்.

    டின்னருக்கு பிறகு அவர்கள் நான்கு பேரும் அந்தப் பெண்ணை ஓட்டலின் மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டி நேற்று (வெள்ளிக்கிழமை) காலை 6 மணியளவில் அந்தப் பெண்ணை அவர்கள் அனுப்பி வைத்தனர்.

    வீட்டிற்கு வந்த பிறகு, அந்தப் பெண் தனது கணவரிடம் நடந்த சம்பவத்தை கூறியபின் விஷயம் காவல் நிலையத்துக்கு வந்துள்ளது. இதுகுறித்து விசாரித்த போலீஸ், குற்றாவளிகளின் மூன்று பேரை கைது செய்தது.

    அவர்கள் அனைவரும் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்றும், ஓட்டல்களில் வேலை செய்பவர்கள் என்றும் தெரிவித்தனர். நான்காவது குற்றவாளியும் அடையாளம் காணப்பட்டுள்ளார் என்றும் அவரை தேடிவருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

    • அரசு பேருந்தில் ஏறிய பெண் ஒருவர் பேருந்து நடத்துநரிடம் மராத்தியில் பேசினார்.
    • மராத்தியில் பேசிய பெண்ணிடம் கன்னடத்தில் பேசுங்கள் என்று நடத்துநர் கூறியுள்ளார்.

    கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெலகாவி மாவட்டத்தில் மராத்தி பேச தெரியாது எனக்கூறிய பேருந்து நடத்துநர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக பேசிய பாதிக்கப்பட்ட நடத்துநர், அரசு பேருந்தில் ஏறிய பெண் ஒருவர் என்னிடம் மராத்தியில் பேசினார். அதற்கு தனக்கு மராத்தி தெரியாது, கன்னடத்தில் பேசுங்கள் என்று அவரிடம் கூறினேன். அதற்கு அந்தப் பெண் மராத்தி கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறி என்னைத் திட்டினார். அப்போது திடீரென்று ஏராளமான மக்கள் ஒன்றுகூடி என்னை தாக்கினர்" என்று தெரிவித்தார்.

    இந்த தாக்குதலில் நடத்துநருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    நடத்துநர் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யவேண்டும் என்று கன்னட அமைப்பினர் வலியுறுத்தினர்.

    பெலகாவி மாவட்டம் மகாராஷ்டிரா மாநிலத்தில் எல்லையில் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் மராத்தி பேசக்கூடிய மக்கள் கணிசமானோர் வாழ்கின்றனர். இம்மாதிரியான சம்பவங்கள் அவ்வப்போது அங்கு எல்லைப் பிரச்சினையைத் தூண்டி விடுகின்றன. இந்த மாவட்டத்தை மகாராஷ்டிராவுடன் இணைக்க வேண்டுமென மராத்தி பேசக்கூடிய மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த கோரிக்கையை கன்னட மக்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • டி.கே.சிவகுமாரின் கருத்து சமூக ஊடகங்களில் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.
    • சித்தராமையா தலைமையிலான கர்நாடக காங்கிரஸ் அரசு திறமையற்றது என்றது பாஜக.

    பெங்களூரு:

    கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. உலக அளவில் அதிக போக்குவரத்து நெரிசல் காணப்படும் நகரங்களில் ஒன்றாக பெங்களூரு உள்ளது.

    இதற்கிடையே, பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய கர்நாடக துணை முதல் மந்திரி டி.கே.சிவக்குமார், பெங்களூருவை 2 அல்லது 3 ஆண்டுகளில் மாற்ற முடியாது.கடவுளால் கூட அதைச் செய்யமுடியாது. சரியான திட்டமிடல் மூலம் செயல்கள் நடைபெற்றால் மட்டுமே பிரச்சனைகளை சரிசெய்ய முடியும் என தெரிவித்தார்.

    அவரது இந்தக் கருத்து சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானது.

    இந்நிலையில், கர்நாடக மாநிலத்தின் எதிர்க்கட்சியான பா.ஜ.க.வும் துணை முதல் மந்திரி சிவகுமாரின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    சித்த ராமையா தலைமையிலான கர்நாடக காங்கிரஸ் அரசு திறமையற்றது.

    துணை முதல் மந்திரி சிவகுமார் போலல்லாமல் பொது வாழ்வில் உள்ள தலைவர்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

    அவர் தனது தனிப்பட்ட லட்சியங்களுக்கு நிதியளிப்பதற்காக பெங்களூரை பணப் பசுவாக மட்டுமே கருதுகிறார்.

    பெங்களூருவின் குடிமைப் பிரச்சனைகளைச் சரிசெய்யும் பொறுப்பை டி.கே.சிவகுமார் ஏற்கவில்லை என்றால் அவர் பதவி விலக வேண்டும். திறமையான ஒருவருக்கு அவர் வழிவிட வேண்டும் என தெரிவித்தது.

    • முதலில் ஆடிய பெங்களூரு 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 167 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 170 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    பெங்களூரு:

    மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெற்ற 7-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 167 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் எல்லீஸ் பெரி அதிரடியாக ஆடி 43 பந்தில் 2 சிக்சர், 11 பவுண்டரி உள்பட 81 ரன் எடுத்து அவுட்டானார்.

    ரிச்சா கோஷ் 28 ரன்னும், ஸ்மிருதி மந்தனா 26 ரன்னும் எடுத்தனர்.

    மும்பை சார்பில் அமன்ஜோத் கவுர் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மும்பை இந்தியன்ஸ் களமிறங்கியது. கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் அரை சதமடித்து ஆட்டமிழந்தார். நாட் சீவர் பிரண்ட் 21 பந்தில் 42 ரன்கள் குவித்தார்.

    கடைசி கட்டத்தில் அமன்ஜோத் கவுர் போராடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

    இறுதியில், மும்பை அணி 19.5 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 170 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இது மும்பை அணி பெற்ற 2வது வெற்றி ஆகும். அமன்ஜோத் கவுர் 34 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    • 5,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றும் வகையில் பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ளது.
    • "பெங்களூரில் உள்ள புதிய அனந்தா வளாகம் எங்கள் பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்"

    உலகெங்கிலும் உள்ள பல நிறுவனங்களுக்கு இந்தியா முக்கியமான சந்தையாக உள்ளது. அந்த வகையில் 100 கோடிக்கும் அதிகமான மக்கள் கூகுள் நிறுவனத்தின் பல்வேறு சேவை மற்றும் தயாரிப்புகளைப் பயன்படுத்துகின்றனர்.

    இதனால் கூகிள் நிறுவனம் இந்தியாவில் பெரும் தொகையை முதலீடு செய்கிறது. அந்த வகையில் பிப்ரவரி 19 அன்று கர்நாடக மாநிலம் பெங்களூரில் தனது புதிய மற்றும் மிகப்பெரிய இந்திய அலுவலகத்தை கூகிள் நிறுவனம் திறந்து வைத்தது.

    பெங்களூரின் மகாதேவபுரா பகுதியில் அனந்தா என்ற பெயரில் இந்த புதிய கூகுள் அலுவலகம் அமைத்துள்ளது. 10 லட்சத்து 60 ஆயிரம் சதுர அடி பரப்பளவில், 5,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றும் வகையில் இந்த அலுவலகம் பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ளது.

    கூகிளின் ஆண்ட்ராய்டு, தேடல், பணம் செலுத்துதல், கிளவுட், மேப்ஸ், ப்ளே மற்றும் டீப் மைண்ட் உள்ளிட்ட பல்வேறு குழுக்களாக பணி புரியும் ஊழியர்களுக்காக தனித்தனி பிரிவுகள் இந்த புதிய அலுவலகத்திலிருந்து வேலை செய்ய உள்ளது.

    இந்த அலுவலகத்தில் 'சபா' என்று அழைக்கப்படும் மைய இடம் உள்ளது. இது கூட்டங்கள் மற்றும் பட்டறைகளுக்குப் பயன்படுத்தப்படும். பார்வை குறைபாடுள்ளவர்கள் எளிதாக நடக்க சிறப்பு தொட்டுணரக்கூடிய தரை அமைக்கப்பட்டுள்ளது. ஊழியர்கள் சுறுசுறுப்பாக இருக்க உதவும் வகையில் நடைபயிற்சி மற்றும் ஜாகிங் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்த அலுவலகம் குறித்து பேசியுள்ள கூகிள் இந்தியாவின் துணைத் தலைவரும் நாட்டு மேலாளருமான பிரீத்தி லோபனா, "பெங்களூரில் உள்ள புதிய அனந்தா வளாகம் எங்கள் பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்" என்று தெரிவித்துள்ளார்.

    கூகுள் நிறுவனம் கடந்த ஆண்டு முதல் இந்தியாவில் தனது ஸ்மார்ட் போன்களின் உற்பத்தியைத் தொடங்கியது. மும்பை, ஐதராபாத், புனே, குர்கான் ஆகிய நகரங்களிலும் கூகுள் அலுவலகம் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    • ஆயிரக்கணக்கான கோழிகள் பாதிக்கப்பட்டு இறந்து விடுகிறது.
    • பறவை காய்ச்சல் பரவலை தடுக்கும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பறவை காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கான கோழிகள் பாதிக்கப்பட்டு இறந்து விடுகிறது. இதனை தொடர்ந்து தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில், ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து கோழி, முட்டை வாங்க இறைச்சி, முட்டை டீலர்களுக்கு கர்நாடக அரசு தற்காலிகமாக தடை விதித்துள்ளது.

    பறவை காய்ச்சல் பரவலை தடுக்கும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • ரியான திட்டமிடல் செய்யப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டால் மட்டுமே இதை மாற்ற முடியும்
    • "காங்கிரஸ் அரசு கர்நாடகாவிற்கும் பெங்களூருவிற்கும் ஒரு சாபக்கேடு"

    தொழில்நுட்ப நிறுவனங்கள் நிறைந்த கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களும் தங்கி வேலை செய்து வருகின்றர். வேகாமான நகரமயமாக்கல் அதீத போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பிரச்சனைகளால் பெங்களூரு திணறி வருகிறது.

    இந்நிலையில் கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பெங்களூரு குறித்து தெரிவித்துள்ள கருத்து விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

    நேற்று பெங்களூரு மாநகராட்சி ஏற்பாடு செய்த செய்த சாலை கட்டுமானம் குறித்த பட்டறையில் பேசிய சிவகுமார், கடவுள் சொர்க்கத்திலிருந்து இறங்கி பெங்களூரு தெருக்களில் நடந்தாலும், ஒன்று, இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குள் எதுவும் மாறாது என்பதை இங்குள்ள ஊடகவியலாளர்களிடம் நான் கூற விரும்புகிறேன்.

    நகரத்தின் நிலைமை மிகவும் சவாலானது. சரியான திட்டமிடல் செய்யப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டால் மட்டுமே இதை மாற்ற முடியும். எதிர்காலத்திற்காக சிறந்த சாலைகளை உருவாக்க அரசாங்கம் முயற்சிக்கிறது என்று தெரிவித்தார்.

    சிவகுமாரின் கருத்து குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. கர்நாடக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.அசோகா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "முதலில் காங்கிரஸ் அரசாங்கம் வளர்ச்சிப் பணிகளுக்கு பணம் இல்லை என்பதை ஒப்புக்கொண்டது.

    இப்போது பகுதி நேர பெங்களூரு மேம்பாட்டு அமைச்சர் டி.கே. சிவகுமார் அடுத்த 2-3 ஆண்டுகளுக்கு நகரத்தில் எந்த மாற்றமும் சாத்தியமில்லை என்று கூறுகிறார். காங்கிரஸ் அரசு கர்நாடகாவிற்கும் பெங்களூருவிற்கும் ஒரு சாபக்கேடு. இந்த தோல்வியுற்ற அரசாங்கத்தை அகற்ற மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்" என்று விமர்சித்துள்ளார்.

    • பெங்களூருவில் தனது மாமியாரை கொலை செய்ய மருத்துவரிடம் பெண் ஒருவர் மாத்திரை கேட்டுள்ளார்.
    • மருத்துவர் போலீசில் புகார் அளிக்க, சம்மந்தப்பட்ட பெண் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் தனது மாமியாரை கொலை செய்ய மருத்துவரிடம் பெண் ஒருவர் மாத்திரை கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இது தொடர்பாக மருத்துவர் போலீசில் புகார் அளிக்க, சம்மந்தப்பட்ட பெண் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    இந்த புகார் தொடர்பாக பேட்டி அளித்த மருத்துவர் சுனில் குமார், "பிப்ரவரி 17 ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு தனக்கு வாட்சப்பில் சஹானா என்ற பெண் மெசேஜ் அனுப்பினார். பெங்களூரில் இருந்து பேசுவதாக கூறிய அவர், தன் மாமியாரைக் கொல்ல 2 மாத்திரைகளை பரிந்துரைக்கச் சொன்னாள்.

    உயிர்களை காப்பாற்றுவது தான் மருத்துவர்களின் கடமை, உயிரை எடுப்பது அல்ல என்று அவளிடம் நான் கூறினேன்.ஆனால் அவளோ, மாத்திரைகளின் பெயர்களை மெசேஜ் அனுப்புமாறு என்னிடம் கெஞ்சினார். நான் அதிர்ச்சியடைந்து அவளுடைய கோரிக்கையை நிராகரித்தேன். தொடர்ந்து சஹானா தொடர்ந்து பலமுறை மெசேஜ் அனுப்பி வந்தார்.

    பின்னர் சஹானா என்னிடம் மன்னிப்பு கேட்டாள். தன்னைப் பற்றி புகார் செய்ய வேண்டாம் என்று என்னிடம் கெஞ்சினாள். ஏன் இப்படி ஒரு செயலைச் செய்ய நினைக்கிறாய் என்று நான் கேட்டபோது, அவளுடைய மாமியார் தன்னைத் துன்புறுத்தி வருவதாகவும், இனிமேலும் இந்த சித்திரவதையைத் தாங்க முடியாது என்று கூறினார். ஆகவே இதுகுறித்து போலீசில் புகார் அளித்துள்ளேன். காவல்துறையினர் விரைவான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்" என்று தெரிவித்தார்.

    • முறைகேடு நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வந்தது.
    • முறையான ஆதாரங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கர்நாடகா மாநில முதல்வர் சித்தராமையா மைசூரு நகர்ப்புற வளர்ச்சி அமைப்பின் (MUDA) நிலம் தொடர்பான மோசடி வழக்கை எதிர்கொண்டு வந்தார்.

    14 வீட்டுமனைகளை சித்தராமையா மனைவி பார்வதி பெற்றதில் முறைகேடு நடைபெற்றதாக பா.ஜ.க. குற்றம்சாட்டியது. அதாவது, பார்வதிக்கு சொந்தமான 3.16 ஏக்கர் வளர்ச்சியடையாத பகுதியில் உள்ள நிலத்துக்கு பதிலாக நன்கு வளர்ச்சியடைந்த நகர்ப் பகுதியில் 38,284 சதுர அடி நிலம் வழங்கப்பட்டது என்றும் இதனால் அரசுக்கு ரூ.4 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

    இது தொடர்பாக லோக்ஆயுக்தா வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. முறைகேடு நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வந்தது.

    இந்நிலையில், நில ஒதுக்கீடு நடந்ததில் முறைகேடு வழக்கில் இருந்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மற்றும் அவரது மனைவியை லோக் ஆயுக்தா நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. முறையான ஆதாரங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பள்ளிகளில் குழந்தைகளுக்கு மதிய உணவுடன் துணை ஊட்டச்சத்துக்காக வழங்கப்படும் கடலை மிட்டாய் வழங்கப்பட்டு வருகிறது.
    • முட்டை மற்றும் வாழைப்பழங்களை மட்டுமே துணை ஊட்டச்சத்துக்காக வழங்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

    கர்நாடக மாநில அரசு பள்ளிகளில் குழந்தைகளுக்கு மதிய உணவுடன் துணை ஊட்டச்சத்துக்காக வழங்கப்படும் கடலை மிட்டாய் வழங்கப்பட்டு வருகிறது.

    கடலை மிட்டாயில் சர்க்கரை மற்றும் நிறைவுறா கொழுப்புகள் அதிகமாக இருப்பதாக வந்த தகவலைத் தொடர்ந்து, முட்டை மற்றும் வாழைப்பழங்களை மட்டுமே துணை ஊட்டச்சத்துக்காக வழங்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

    ஒழுங்காக சேமிக்கப்படாத கடலை மிட்டாய், காலாவதி தேதியை தாண்டிய கடலை மிட்டாய் குழந்தைகளுக்கு விநியோகிக்கப்படுவதாக தார்வாட் கூடுதல் ஆணையர் கல்வித்துறையின் கவனத்திற்குக் கொண்டு வந்த மற்றொரு கடிதத்தையும் இந்த உத்தரவில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. மதிய உணவுடன் கடலைமிட்டாய் விநியோகிப்பதை நிறுத்துமாறும் அவர் துறைக்கு அறிவுறுத்தியிருந்தார்.

    இதை பரிசீலித்த கல்வித்துறை துணை ஊட்டச்சத்துக்காக முட்டை மற்றும் வாழைப்பழங்களை மட்டுமே வழங்க உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் கடலை மிட்டாய் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    இது தொடர்பாக தனி வழிகாட்டுதல்களை வெளியிட துறை ஆணையர்களுக்கு உத்தரவிட்டது.

    ×