என் மலர்
டெல்லி
- முன்னதாக ஆதார் அட்டை, குடியுரிமை ஆவணமாக கருதப்படாது என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
- வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தத்தில், ஆதார் அட்டையையும் அடையாள ஆவணமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்
பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலின் சிறப்பு விரிவான திருத்தத்தை (SIR) நடத்திய தேர்தல் ஆணையம் (EC), இந்த மாதம் 1 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டது. வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து 65 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளதாக அறிவித்தது.
இந்நிலையில் பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்களை வெளியிட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து நீக்கப்பட்ட வாக்காளர் விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
மேலும், வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தத்தில், ஆதார் அட்டையையும், EPIC நம்பர்களையும் அடையாள ஆவணமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், பீகார் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வாக்காளர் பட்டியலில் விபர சரிபார்ப்புக்கு ஆதார் அட்டையை 12வது ஆவணமாக கருத தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இருப்பினும் , ஆதார் விபரங்களின் உண்மைத்தன்மையை உறுதிபடுத்த தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உண்டு என்பதை தெளிவுபடுத்தியதுடன், ஆதார் குடியுரிமைக்கான சான்றாக ஏற்றுக் கொள்ளப்படாது எனவும் தெரிவித்தது.
- துணை ஜனாதிபதியை பாராளுமன்ற இரு சபைகளின் எம்.பி.க்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுப்பார்கள்.
- பாராளுமன்ற மக்களவையில் ஒரு இடம் காலியாக இருப்பதால் மொத்தம் 542 எம்.பி.க்கள் உள்ளனர்.
புதுடெல்லி:
துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை மாதம் 21-ந்தேதி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். உடல் நலக்குறைவு காரணமாக பதவியை ராஜினாமா செய்வதாக அவர் ஜனாதிபதியிடம் விளக்கம் அளித்தார்.
நாட்டின் 2-வது மிக உயர்ந்த அரசமைப்பு பதவியான துணை ஜனாதிபதி பதவியை நீண்ட நாட்களுக்கு காலியாக வைத்திருக்க கூடாது என்று சட்ட விதிகளில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கு தலைமை தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்து பட்டியல் வெளியிட்டது. அதன்படி கடந்த மாதம் 7-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து பா.ஜ.க. கூட்டணி வேட்பாளராக தமிழ்நாட்டை சேர்ந்த மகாராஷ்டிரா மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார். எதிர்க்கட்சிகள் கூட்டணியான இந்தியா கூட்டணி சார்பில் தெலுங்கானாவை சேர்ந்த சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டார்.
கடந்த மாதம் அவர்கள் இருவரும் துணை ஜனாதிபதி பதவிக்கு தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்த னர். அதன் பிறகு அவர்கள் இருவரும் பாராளுமன்ற இரு அவைகளின் எம்.பி.க்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்கள். நேற்று அவர்கள் இருவரும் தங்களது இறுதிக்கட்ட ஆதரவு திரட்டலை நடத்தி முடித்தனர்.
துணை ஜனாதிபதியை பாராளுமன்ற இரு சபைகளின் எம்.பி.க்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுப்பார்கள். பாராளுமன்ற மக்களவையில் ஒரு இடம் காலியாக இருப்பதால் மொத்தம் 542 எம்.பி.க்கள் உள்ளனர்.
பாராளுமன்ற மேல்சபையில் 5 எம்.பி.க்கள் இடங்கள் காலியாக உள்ளதால் 228 எம்.பி.க்கள் உள்ளனர். இது தவிர மேல்சபையில் 12 நியமன எம்.பி.க்கள் உள்ளனர்.
மொத்தம் 782 எம்.பி.க் கள் நாளை (செவ்வாய்க்கிழமை) வாக்களிக்க தகுதியானவர்களாக உள்ளனர். இந்த 782 எம்.பி.க்களில் 392 வாக்குகள் பெறும் வேட்பாளர் வெற்றி பெறுவார். தற்போது பாராளுமன்ற இரு அவைகளில் பா.ஜ.க. கூட்டணிக்கு அதிக எம்.பி.க் கள் உள்ளனர்.
பா.ஜ.க. கூட்டணிக்கு இரு அவைகளிலும் மொத்தம் 422 எம்.பி.க்கள் பலம் இருக்கிறது. ஆனால் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கு பெரும்பான்மை பெறும் வகையில் எம்.பி.க்கள் பலம் இல்லை. எனவே நாளை நடக்கும் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது.
இதற்கிடையே துணை ஜனாதிபதி தேர்தலில் ரகசிய வாக்குசீட்டு முறை கடைபிடிக்கப்பட இருப்பதால் தற்போதைய எண்ணிக்கையை விட கூடுதல் வாக்குகளை பெற வேண்டும் என்பதில் இரு கூட்டணிகளும் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் 11 எம்.பி.க்களும், பா.ஜ.க.வுக்கு ஆதரவாக வாக்களிக்கப்போவதாக அறிவித்து உள்ளனர்.
இதனால் பா.ஜ.க. கூட் டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு 433 வாக்குகள் கிடைப்பது உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது. இது தவிர பிஜு ஜனதா தளத்தின் 7 எம்.பி.க்கள், பாரதீய ராஷ்டீரிய சமிதியின் 4 எம்.பி.க்கள் ஆதரவை பெற இரு கூட்டணிகளும் தீவிரமாக காய்களை நகர்த்தி வருகின்றன.
பாராளுமன்றத்தில் சிறு கட்சிகளும், 3 சுயேட்சைகளும் உள்ளனர். அவர்கள் உள்பட 23 எம்.பி.க்களின் வாக்குகள் யாருக்கு கிடைக்கும் என்பது தெரியாமல் உள்ளது. அந்த வாக்குகளும் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கிடைத்தால் அவர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வாய்ப்புள்ளது.

துணை ஜனாதிபதி தேர்தல் நாளை பாராளுமன்ற வளாகத்தில் அறை எண். எப்.101 என்ற அரங்கத்தில் நடைபெறும். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடத்தப்பட உள்ளது.
துணை ஜனாதிபதி தேர்தல் நடத்தும் அதிகாரியாக மேல்சபை செயலாளர் பி.சி.மோடி நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் ஓட்டுப்பதிவை கண்காணிப்பார். ஓட்டு போடுவதற்காக அனைத்துக் கட்சி எம்.பி.க்களும் டெல்லிக்கு சென்ற வண்ணம் உள்ளனர்.
இன்று மாலைக்குள் அனைத்து எம்.பி.க்களும் டெல்லிக்கு வந்து விட வேண்டும் என்று பா.ஜ.க. உத்தரவிட்டுள்ளது. நாளை மாலை 5 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிந்ததும் உடனடியாக ஓட்டுக்கள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும்.
- அமெரிக்க பருத்தி இறக்குமதிக்கு 11 சதவீத கலால் வரியை தள்ளுபடி செய்யும் மோடி அரசின் முடிவை கெஜ்ரிவால் விமர்சித்தார்.
- கடனில் மூழ்கிய விவசாயி தற்கொலையின் விளிம்பில் இருக்கிறார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியப் பொருட்களுக்கு விதித்த 50 சதவீத வரிக்கு இந்தியா வலுவான பதிலடி கொடுக்க வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
இதுகுறித்து ஊடகங்களிடம் பேசிய கெஜ்ரிவால், "பிரதமர் கொஞ்சம் தைரியம் காட்ட வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். முழு நாடும் உங்களுக்கு ஆதரவாக நிற்கிறது.
இந்திய ஏற்றுமதிகளுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்துள்ளது. அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு நீங்கள் 75 சதவீத வரி விதிக்கவேண்டும். வரியை மட்டும் விதித்து பாருங்கள். பின்னர் டிரம்ப் இறங்கி வருகிறாரா என்று பார்ப்போம்" என்று தெரிவித்தார்.
மேலும், டிசம்பர் 31, 2025 வரை அமெரிக்க பருத்தி இறக்குமதிக்கு 11 சதவீத கலால் வரியை தள்ளுபடி செய்யும் மோடி அரசின் முடிவை கெஜ்ரிவால் விமர்சித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட பதவில், இறக்குமதி மீதான 11% வரியை அரசாங்கம் நீக்கியுள்ளதால் ஜவுளி நிறுவனங்கள் ஏற்கனவே அமெரிக்காவிலிருந்து மலிவான பருத்தியை இறக்குமதி செய்துள்ளன.
நமது நாட்டு விவசாயிகள் இப்போது எங்கு செல்ல வேண்டும்? அவர்களின் பருத்தி சந்தையில் விற்கப்படாது. கடனில் மூழ்கிய விவசாயி தற்கொலையின் விளிம்பில் இருக்கிறார்" என்று தெரிவித்துள்ளார்.
- கிரிக்கெட் வாரியத்தின் வருடாந்திர பொதுக் குழுவில் சமர்பிக்கப்பட்ட கணக்கு அறிக்கையில் தகவல்.
- 2019-ல் பி.சி.சி.ஐ.யின் பணம் கையிருப்பு மற்றும் வங்கி இருப்பு ரூ.6,059 கோடியாக இருந்தது.
உலகின் மிகப்பெரிய பணக்கார விளையாட்டு அமைப்பு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) ஆகும்.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு கடந்த 5 ஆண்டுகளில் ரூ.14,627 கோடி வருவாய் அதிகரித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் கடந்த நிதியாண்டில் மட்டும் ரூ.4,193 கோடி கிடைத்து உள்ளது.
மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு அனைத்து நிலுவை தொகையும் வழங்கப்பட்ட பிறகு உள்ள வருவாய் உயர்வு இதுவாகும். கிரிக்கெட் வாரியத்தின் வருடாந்திர பொதுக் குழுவில் சமர்பிக்கப்பட்ட கணக்கு அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
2019-ல் பி.சி.சி.யின் வருவாய் ரூ.3,906 கோடி ஆக இருந்தது. 2024-ல் அது 2 மடங்கு ரூ.7,988 கோடியாக உயர்ந்தது. அதாவது ரூ.4082 கோடியாக அதிகரித்தது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் தற்போது ரொக்கம் மற்றும் வங்கி இருப்பு ரூ.20,686 கோடியாக உயர்ந்து இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
2019-ல் பி.சி.சி.ஐ.யின் பணம் கையிருப்பு மற்றும் வங்கி இருப்பு ரூ.6,059 கோடியாக இருந்தது. இது மாநில சங்கங்களுக்கு வழங்கப்படும் முன்பு ரூ.20,686 கோடி உயர்ந்து உள்ளதாக உறுப்பினர்களிடம் அதன் செயலாளர் தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல்., ஐ.சி.சி.யின் (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) வருவாய் பகிர்வு மற்றும் விளம்பரங்கள் மூலம் கிரிக்கெட் வாரியத்தின் வருவாய் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
வருமானவரி மற்றும் கோர்ட்டு நடவடிக்கைகளுக்காக கிரிக்கெட் வாரியம் 2023-24 நிதியாண்டில் ரூ.3.150 கோடியை ஒதுக்கி உள்ளது.
- பஞ்சாபில் வெள்ள பாதிப்பால் 43 பேர் பலியானார்கள்.
- கனமழையால் பாதிப்புக்குள்ளான விவசாயிகள் மற்றும் பொதுமக்களை பிரதமர் மோடி சந்திக்கிறார்.
புதுடெல்லி:
உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்கள் கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டன.
இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக பிரதமர் மோடி நாளை மறுநாள் (9-ந்தேதி) பஞ்சாப் செல்கிறார்.
பஞ்சாப் மாநிலத்தில் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்டது குர்தாஸ் பகுதியாகும். பிரதமர் மோடி அங்கு பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிடுகிறார். கனமழையால் பாதிப்புக்குள்ளான விவசாயிகள் மற்றும் பொதுமக்களை அவர் சந்திக்கிறார்.
சட்ட விரோத சுரங்கம் மற்றும் பராமரிப்பு இல்லாமல் பல ஆண்டுகளாக பலவீனம் அடைந்துள்ள சட்லஜ், பியாஸ், காகர் நதிகளின் கரையை வலுப்படுத்த வேண்டியதன் அவசர தேவையை பிரதமர் இந்த பயணத்தின்போது வலியுறுத்துவார் என்று தெரிகிறது.
மேலும் வெள்ளத்தால் கடும் பாதிப்புக்கு உள்ளான பஞ்சாப்புக்கு சிறப்பு நிவாரண நிதியை மோடி அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து பஞ்சாப் மாநில பா.ஜ.க. தனது எக்ஸ்தள பதிவில் கூறி இருப்பதாவது:-
பிரதமர் மோடி வருகிற 9-ந்தேதி பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் வருகிறார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், விவசாயிகளை அவர் நேரடியாக சந்தித்து உதவ அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பார். பிரதமரின் இந்த வருகை மத்திய பா.ஜ.க. அரசு பஞ்சாப் மக்களுடன் எப்போதும் நிற்கிறது என்பதையும், இந்த கடினமான நேரத்தில் முழு ஆதரவையும் வழங்கும் என்பதையும் நிரூபிக்கிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பஞ்சாபில் வெள்ள பாதிப்பால் 43 பேர் பலியானார்கள். 23 மாவட்டத்தில் 1,900-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. கிட்டத்தட்ட 1.71 லட்சம் ஹெக்டேர் பயிர்கள் சேதமானது.
- 58 வயது பொறியாளரான ரஷீத் மீது ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாதிகள் மற்றும் பயங்கரவாத குழுக்களுக்கு நிதி வழங்கியதாக குற்றச்சட்டு உள்ளது.
- 2024 மக்களவைத் தேர்தலில் பாரமுல்லா தொகுதியில் உமர் அப்துல்லாவை ரஷீத் தோற்கடித்து எம்,பி ஆனார்.
செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெற உள்ள துணை ஜனாதிபதி தேர்தலில் பொறியாளர் ரஷீத் வாக்களிக்க டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
வாக்களிக்க அனுமதி கோரிய ரஷீத்தின் மனுவை நேற்று நடந்த விசாரணையில் கூடுதல் அமர்வு நீதிபதி சந்தர் ஜீத் ஏற்றுக்கொண்டார். வாக்களிக்க நாடாளுமன்றத்திற்குச் செல்வதற்கான செலவுகளை ரஷீத் ஏற்க வேண்டும் என்றும், அதற்காக அவர் ஒரு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
58 வயது பொறியாளரான ரஷீத் மீது ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாதிகள் மற்றும் பயங்கரவாத குழுக்களுக்கு நிதி வழங்கியதாக குற்றச்சட்டு உள்ளது.
2017 ஆம் ஆண்டு பயங்கரவாத நிதியுதவி வழக்கில், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் தேசிய புலனாய்வு முகமையால் (NIA) அவர் கைது செய்யப்பட்டார்.
அவர் 2019 முதல் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் இருந்தபடியே 2024 மக்களவைத் தேர்தலில் பாரமுல்லா தொகுதியில் உமர் அப்துல்லாவை ரஷீத் தோற்கடித்து எம்,பி ஆனார்.
முன்னதாக, பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 4 வரை ரஷீத்துக்கு நீதிமன்றம் காவல் பரோல் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
- 2026 ஆம் ஆண்டில் தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ளன.
- பீகாரில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தில் 65 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர்.
பீகாரில் மேற்கொள்ளப்பட்டதைப் போலவே, நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மேற்கொள்ள தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது.
இந்த திட்டத்தை செயல்படுத்தும் நடைமுறைகள் குறித்து விவாதிக்க வரும் 10 ஆம் தேதி அனைத்து மாநிலங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகளுடன் (CEO) ஒரு உயர்மட்டக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஞானேஷ் குமார் தலைமைத் தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்ற பிறகு, தலைமைத் தேர்தல் அதிகாரிகளுடன் நடைபெறும் மூன்றாவது முக்கிய சந்திப்பு இதுவாகும்.
குறிப்பாக, 2026 ஆம் ஆண்டில் தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ளன.
இந்தச் சூழலில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் பாஜகவுக்காக வாக்குகளை திருட தேர்தல் ஆணையம் செய்யும் நாடகம் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
மக்களவை எதிரிகட்சித் தலைவர் ராகுல் காந்தி பீகாரில் வாக்காளர் உரிமைகள் பறிக்கப்படுவதற்கு எதிராக 16 நாட்கள் நடைபயணம் மேற்கொண்டார்.
இதற்கிடையே இந்த ஆண்டு இறுதிக்குள் நாடு முழுவதும் இந்த SIR திட்டத்தைத் தொடங்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன.
வங்கதேசம் மற்றும் மியான்மர் போன்ற நாடுகளிலிருந்து குடிபெயர்ந்து சட்டவிரோதமாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளவர்களைக் கண்டறிந்து நீக்குவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்று என தேர்தல் ஆணையம் வாதிடுகிறது.
பீகாரில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தில் 65 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடந்தது.
- கவுன்சில் கூட்டத்தில் முக்கிய சீர்திருத்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் என 4 அடுக்குகளாக உள்ளது.
சுதந்திர தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியேற்றி பேசிய பிரதமர் மோடி, தீபாவளிக்குள் ஜி.எஸ்.டி. கணிசமாக குறைக்கப்படும் என்று அறிவித்தார்.
அதைத்தொடர்ந்து, ஜி.எஸ்.டி.யை 5 சதவீதம், 18 சதவீதம் என 2 அடுக்குகளாக குறைக்க பரிசீலிக்கப்படுவதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 12 சதவீத வரிஅடுக்கில் உள்ள 99 சதவீத பொருட்கள் 5 சதவீத வரி அடுக்குக்கும், 28 சதவீத வரிஅடுக்கில் உள்ள 90 சதவீத பொருட்கள் 18 சதவீத வரிஅடுக்குக்கும் மாற்றப்பட உள்ளதாக கூறப்பட்டது. இதனால், அன்றாடம் பயன்படுத்தப்படும் பெரும்பாலான பொருட்களின் விலை குறையும் என்று கருதப்படுகிறது.
கடந்த மாதம் கூடிய அமைச்சர்கள் குழு, ஜி.எஸ்.டி. வரி அடுக்கு குறைப்புக்கு ஒப்புதல் தெரிவித்தது. தனது பரிந்துரைகளை ஜி.எஸ்.டி. கவுன்சிலுக்கு அனுப்பி வைத்தது.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் கடந்த 3ம் தேதி மற்றும் 4ம் தேதி நடைபெற்றது. அதில், அனைத்து மாநிலங்களின் நிதி அமைச்சர்களும் பங்கேற்றார்கள். கணித்தபடி கவுன்சில் கூட்டத்தில் முக்கிய சீர்திருத்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் புதிய சீர்திருத்தத்தை மேற்கொள்ள உதவிய அனைத்து மாநில நிதி அமைச்சர்களுக்கும் நன்றி தெரிவித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடிதம் எழுதியுள்ளார்.
- இந்த மாற்றங்கள் அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.48,000 கோடி இழப்பை ஏற்படுத்தும் என்று மத்திய அரசு மதிப்பிட்டிருந்தது.
- சுமார் 295 அத்தியாவசியப் பொருட்களின் மீதான வரி விகிதத்தை 12% முதல் 5% அல்லது பூஜ்ஜிய சதவீதமாகக் குறைகிறது.
56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 5%, 12%, 18%, 28% என்ற நான்கு அடுக்கு வரி முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக, 5% மற்றும் 18% என்ற இரண்டு அடுக்கு வரி முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் சிகரெட், பான்மசாலா, குளிர்பானங்கள் உள்ளிட்ட பொருட்களுக்கு மட்டும் 40% வரி விதிக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றங்கள் அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.48,000 கோடி இழப்பை ஏற்படுத்தும் என்று மத்திய அரசு மதிப்பிட்டிருந்தது.
ஆனால் இந்த மாற்றங்களால் அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.3,700 கோடி மட்டுமே இழப்பு ஏற்படும் என்று ஸ்டேட் வங்கி மதிப்பிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக எஸ்பிஐ வெளியிட்ட அறிக்கையில், இந்த சீர்திருத்தங்கள் நுகர்வு அதிகரிக்வும் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கும் பங்களிக்கும் என்று கூறியுள்ளது.
சுமார் 295 அத்தியாவசியப் பொருட்களின் மீதான வரி விகிதத்தை 12% முதல் 5% அல்லது பூஜ்ஜிய சதவீதமாகக் குறைப்பது சில்லறை பணவீக்கத்தைக் கணிசமாகக் குறைக்கும் என்று அதில் குறிப்பிடடுள்ளது.
மேலும் வருடம் ரூ.3,700 கோடி இழப்பு என்பது மிகக் குறைவாக இருப்பதால், நிதிப் பற்றாக்குறையில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்பது அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- 12, 28 ஆகிய 2 அடுக்குகளை நீக்க ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் அளித்தது.
- அரசாங்கத்தின் வரி குறைப்புகளின் பலன்கள் முழுமையாக நுகர்வோருக்கு பலனளிப்பதை உறுதி செய்ய கடுமையான கண்காணிப்பு இருக்கும்.
நாடு முழுவதும் 'ஒரே நாடு, ஒரே வரி' கொள்கையை அமல்படுத்துவது சாத்தியமில்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
4 அடுக்குகளை கொண்ட ஜிஎஸ்டி வரிமுறையில் 12, 28 ஆகிய 2 அடுக்குகளை நீக்க ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ஒப்புதல் அளித்த நிலையில் 5 மற்றும் 18 ஆகிய 2 அடுக்குகள் மட்டுமே இனி இருக்கும். இந்நிலையில் ஒரே நாடு ஒரே வரியை கொண்டு வரக் கோரி கோரிக்கைகள் எழுந்தன.
இதுகுறித்து தனியார் ஊடகத்துக்கு அளித்த நேர்காணலில் பதிலளித்த நிர்மலா சீதாராமன், நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு இடையே பொருளாதார வளர்ச்சியில் கடுமையான வேறுபாடுகள் உள்ளன. இந்த சூழலில் நாடு முழுவதும் 'ஒரே நாடு, ஒரே வரி' கொள்கையை அமல்படுத்துவது சாத்தியமில்லை" என்று தெரிவித்தார்.
ஆடம்பர பென்ஸ் கார் மற்றும் சாமானியர்கள் பயன்படுத்தும் Flip flop செருப்புக்கும் ஒரே வரி விதிப்பது நியாயமற்றது" என்று தெரிவித்தார்.
மேலும் அரசாங்கத்தின் வரி குறைப்புகளின் பலன்கள் முழுமையாக நுகர்வோருக்கு பலனளிப்பதை உறுதி செய்ய கடுமையான கண்காணிப்பு இருக்கும் என்று அவர் உறுதியளித்தார்.
- பாகிஸ்தானின் மறைமுகப் போர் உத்தி இரண்டாவது பெரிய சவால்.
- வெளிப்புற சக்திகள் தலையிடுவதற்கான வாய்ப்புகளை உருவாக்குகிறது.
இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு ஆறு முக்கிய சவால்கள் உள்ளன என்று முப்படை தலைமை தளபதி (CDS) அனில் சவுகான் தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூரில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய அனில் சவுகான், சீனாவுடனான தீர்க்கப்படாத எல்லைப் பிரச்சினை நாடு எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால். பாகிஸ்தானின் மறைமுகப் போர் உத்தி இரண்டாவது பெரிய சவால். இந்தப் பிரச்சினைகள் தற்காலிகமானவை அல்ல. அதனால்தான் தயார்நிலை அவசியம்.
மூன்றாவது பெரிய சவால் அண்டை நாடுகளில் உள்ள அரசியல், சமூக மற்றும் பொருளாதார உறுதியற்ற தன்மை. இது வெளிப்புற சக்திகள் தலையிடுவதற்கான வாய்ப்புகளை உருவாக்குகிறது.
நான்காவது சவால் போரின் தன்மையில் முழுமையான மாற்றம். தற்போது போர்கள் விண்வெளி மற்றும் சைபர் ஸ்பேஸ் வரை பரவியுள்ளன.
பாகிஸ்தான் மற்றும் சீனாவின் அணுசக்தித் திறன்கள் ஐந்தாவது சவால். இராணுவ தொழில்நுட்பத்தில் விரைவான மாற்றங்கள் ஆறாவது பெரிய சவால்" என்று தெரிவித்தார்.
எனவே அவற்றை எதிர்கொள்ள நாடு தொடர்ந்து தயாராக இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
- அந்நியச் செலாவணியுடன் பெரிதும் பிணைக்கப்பட்டுள்ள எண்ணெயை எங்கு வாங்குவது என்பது முற்றிலும் நமது தேவைகளைப் பொறுத்தது.
- இந்த வரிவிதிப்பு கடந்த ஆகஸ்ட் 27 முதல் அமலுக்கு வந்துள்ளது.
ரஷியாவிடமிருந்து எண்ணெய் வாங்கும் விஷயத்தில் அமெரிக்காவின் அழுத்தத்திற்கு இந்தியா அடிபணியப் போவதில்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நேற்று தனியார் தொலைக்காட்சி சேனலுக்கு பேட்டியளித்த நிர்மலா சீதாராமன், "ரஷிய எண்ணெய்யாக இருந்தாலும் சரி அல்லது வேறு எதுவாக இருந்தாலும் சரி, எங்களுக்கு ஏற்ற முடிவை எடுப்போம்.
குறிப்பாக விலை மற்றும் போக்குவரத்து போன்ற காரணிகளை நாங்கள் கருத்தில் கொள்வோம். அந்நியச் செலாவணியுடன் பெரிதும் பிணைக்கப்பட்டுள்ள எண்ணெயை எங்கு வாங்குவது என்பது முற்றிலும் நமது தேவைகளைப் பொறுத்தது.
எனவே, நாங்கள் நிச்சயமாக ரஷியாவிலிருந்து எண்ணெய் வாங்குவோம்" என்று தெரிவித்தார்.
முன்னதாக ரஷியாவிடம் குறைந்த விலையில் எண்ணெய் வாங்கி இந்தியா உக்ரைன் போருக்கு உதவுவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வரிவிதிப்பு கடந்த ஆகஸ்ட் 27 முதல் அமலுக்கு வந்துள்ளது.






