என் மலர்
டெல்லி
- இஸ்ரோ அடுத்த 3 ஆண்டுகளுக்குள் செயற்கைக்கோள் ஏவுதல்களை 3 மடங்காக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
- ஆயுத மோதல்களில் விண்வெளித் துறையின் பங்கு, ஆபரேஷன் சிந்தூரின்போது கூர்மையாக கவனிக்கப்பட்டது.
புதுடெல்லி:
டெல்லியில் அகில இந்திய மேலாண்மை சங்கத்தின் 52-வது தேசிய மேலாண்மை மாநாடு நடந்தது. அதில் கலந்து கொண்ட இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறியதாவது:-
காஷ்மீரில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் 26 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதனையடுத்து 'ஆபரேஷன் சிந்தூர்' மூலம் பாகிஸ்தானுக்குள் துல்லியமாக முப்படைகளின் மூலம் பதிலடி கொடுக்கப்பட்டது.
அப்போது, தேசிய பாதுகாப்பு தேவைகளுக்காக பூமி கண்காணிப்பு மற்றும் தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை பயன்படுத்தி, 400-க்கும் மேற்பட்ட இஸ்ரோ விஞ்ஞானிகள் அனைத்து செயற்கைக்கோள்களின் செயல்பாடுகள் மூலம் 24 மணி நேரமும் தரவுகளை வழங்கினர்.
ஆயுத மோதல்களில் விண்வெளித் துறையின் பங்கு, ஆபரேஷன் சிந்தூரின்போது கூர்மையாக கவனிக்கப்பட்டது. இந்த நடவடிக்கையில் டிரோன்கள் மற்றும் சுற்றித்திரியும் வெடிமருந்துகள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டன. உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட 'ஆகாஷ் தீர்' போன்ற வான் பாதுகாப்பு அமைப்புகளின் திறன்களையும் சோதிக்கப்பட்டன.
இஸ்ரோ அடுத்த 3 ஆண்டுகளுக்குள் செயற்கைக்கோள் ஏவுதல்களை 3 மடங்காக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. கூடுதல் செலவுகள் இல்லாமல் மார்க்-3 ராக்கெட் சுமந்து செல்லும் திறன் 4 ஆயிரம் கிலோவில் இருந்து 5 ஆயிரத்து 100 கிலோவாக மேம்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். அதேபோல், அடுத்த தலைமுறை ஏவுதளம், பிரதமரால் அங்கீகரிக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய ஏவுதளம் இந்தியாவின் விரிவடைந்து வரும் விண்வெளி லட்சியங்களை நிறைவேற்ற உதவிகரமாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- துணை ஜனாதிபதித் தேர்தல் முடிவு ஆளும் கட்சியின் வெற்றி எண்ணிக்கையில் மட்டுமே இருப்பதைக் காட்டுகிறது
- எதிர்க்கட்சிகள் இப்போது முன்பை விட வலுவாக உருவாகி வருகின்றன.
துணை ஜனாதிபதிக்கான தேர்தல் நேற்று நடைபெற்று, உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டன. சி.பி. ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்று துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார். அவரை எதிர்த்து இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி 300 வாக்குகள் பெற்றார்.
இதன்மூலம் 15ஆவது துணை ஜனாதிபதியாக சி.பி. ராதாகிருஷ்ணன் பதவி ஏற்க உள்ளார். அவருக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் துணை ஜனாதிபதித் தேர்தல் முடிவு ஆளும் கட்சியின் வெற்றி எண்ணிக்கையில் மட்டுமே இருப்பதைக் காட்டுகிறது என்று காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக நின்றன. அதன் செயல்திறன் மறுக்க முடியாதது.
எங்கள் வேட்பாளர் சுதர்ஷன் ரெட்டி 40% வாக்குகளைப் பெற்றார். 2022 ஆம் ஆண்டில், துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் 26% வாக்குகளை பெற்றிருந்தது.
இதன் அடிப்படையில் பாஜகவின் வெற்றி வெறும் எண்ணிக்கை அளவிலானது மட்டுமே ஆகும். உண்மையில் இந்த வெற்றி பாஜகவின் தார்மீக மற்றும் அரசியல் தோல்வியாகும். எங்களின் சித்தாந்தப் போர் நிற்காமல் தொடர்கிறது." என்று தெரிவித்துள்ளார்.
மேலும், பொதுமக்களும் எதிர்க்கட்சிகளும் இப்போது பாஜகவின் கொள்கைகளுக்கு சவால் விடுவதாகக் கூறிய அவர், எதிர்க்கட்சிகள் இப்போது முன்பை விட வலுவாக உருவாகி வருவதாகவும், வரும் காலங்களில் இது பாஜகவுக்கு ஒரு பெரிய சவாலாக மாறும் என்றும் தெரிவித்தார்.
- நேபாள நாட்டின் அதிபர் மற்றும் பிரதமர் இல்லங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். பாராளுமன்ற கட்டிடத்துக்கு தீ வைத்தனர்.
- இன்று அமைச்சர்கள் குழு கூடி நேபாளத்தில் ஏற்பட்டவை குறித்து விரிவாக விவாதித்தது.
நேபாளத்தின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் விதிமுறைகளுக்கு உள்பட்டு பதிவு செய்யத் தவறிய இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட 26 சமூக ஊடக தளங்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்தது. இந்த தடையை எதிர்த்து நேற்று போராட்டம் வெடித்தது.
தலைநகர் காத்மாண்டுவில் பாராளுமன்ற கட்டிடத்துக்குள் நுழைய முயன்ற இளைஞர்களை நோக்கி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ஏற்பட்ட கலவரத்தில் 19 பேர் உயிரிழந்தனர்.
இதையடுத்து சமூக ஊடகங்கள் மீதான தடை நள்ளிரவில் நீக்கப்பட்டது. இருப்பினும் பிரதமர் சர்மா ஒலி பதவி விலகக் கோரி இளைஞர்கள் 2 ஆம் நாளாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். நேபாள நாட்டின் அதிபர் மற்றும் பிரதமர் இல்லங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். பாராளுமன்ற கட்டிடத்துக்கு தீ வைத்தனர்.
இதன் தொடர்ச்சியாக பிரதமர் சர்மா ஒலி மற்றும் அவரை தொடர்ந்து ஜனாதிபதி ராம் சரண் பவ்டெல் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.
இந்நிலையில் நேபாளத்தில் அமைதி திரும்ப பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதவில், "இன்று அமைச்சர்கள் குழு கூடி நேபாளத்தில் ஏற்பட்டவை குறித்து விரிவாக விவாதித்தது.
நேபாளத்தில் நடக்கும் வன்முறை மனதை உடைக்கிறது. பல இளைஞர்களின் உயிரிழப்புகளால் என் இதயம் மிகவும் வருத்தமடைந்துள்ளது.
நேபாளத்தின் ஸ்திரத்தன்மை, அமைதி மற்றும் செழிப்பு மிகவும் முக்கியம். அமைதியையும் ஒழுங்கையும் கைக்கொள்ளுமாறு நேபாளத்தின் அனைத்து சகோதர சகோதரிகளையும் நான் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.
- பொது வாழ்வில் உங்கள் பல தசாப்த கால அனுபவம் நாட்டின் முன்னேற்றத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும்- ஜனாதிபதி
- நமது அரசியலமைப்பு மதிப்புகளை வலுப்படுத்தி, நாடாளுமன்ற விவாதத்தை மேம்படுத்தும் ஒரு சிறந்த துணைத் தலைவராக இருப்பார்- பிரதமர்
துணை ஜனாதிபதிக்கான தேர்தல் இன்று நடைபெற்று, உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டன. சி.பி. ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்று துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார். அவரை எதிர்த்து இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட சுதர்சன் ரெட்டி 300 வாக்குகள் பெற்றார்.
இதன்மூலம் 15ஆவது துணை ஜனாதிபதியாக சி.பி. ராதாகிருஷ்ணன் பதவி ஏற்க உள்ளார். அவருக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்துச் செய்தியில் "இந்தியாவின் துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துக்கள். பொது வாழ்வில் உங்கள் பல தசாப்த கால அனுபவம் நாட்டின் முன்னேற்றத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும். வெற்றிகரமான மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தும் பதவிக் காலத்திற்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடி தனது வாழ்த்துச் செய்தியில் "2025 துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துகள். அவரது வாழ்க்கை எப்போதும் சமூகத்திற்கு சேவை செய்வதற்கும் ஏழைகள் மற்றும் ஓரங்கட்டப்பட்டவர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அவர் நமது அரசியலமைப்பு மதிப்புகளை வலுப்படுத்தி, நாடாளுமன்ற விவாதத்தை மேம்படுத்தும் ஒரு சிறந்த துணைத் தலைவராக இருப்பார் என்று நான் நம்புகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துகள் எனத் தெரிவித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே "தேர்ந்தெடுக்கப்பட்ட துணை ஜனாதிபதி, நாடாளுமன்ற மரபுகளின் உயர்ந்த நெறிமுறைகளைப் பின்பற்றுவார் என்றும், எதிர்க்கட்சிகளுக்கு சமமான இடத்தை உறுதி செய்வார் என்றும் நாங்கள் நம்புகிறோம்" எனவும் தெரிவித்துள்ளார்.
உங்களுடைய பரந்த அனுபவத்தைக் கருத்தில் கொண்டால், துணைத் தலைவர் பதவி நிச்சயமாக அதிக மரியாதையையும், பெருமையையும் பெறும் என முன்னாள் துணை ஜனாதிபதி தன்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- காலை 10 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிவரை நடைபெற்றது.
- தேர்தலில் பதிவான வாக்குகள் உடனே எண்ணப்பட்டன. இதில், 767 வாக்குகள் பதிவாகின.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் துணை ஜனாதிபதி தேர்தல் இன்று நடைபெற்றது. இதில் மொத்தம் 781 உறுப்பினர்கள் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள். காலை 10 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிவரை நடைபெற்றது.
தேர்தலில் பதிவான வாக்குகள் உடனடியாக எண்ணப்பட்டன. இதில், 767 வாக்குகள் பதிவாகின. 14 உறுப்பினர்கள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை. அதேவேளை, பதிவான 767 வாக்குகளில் 15 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டது.
எஞ்சிய 752 வாக்குகளில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு 452 வாக்குகளையும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி 300 வாக்குகளையும் பெற்றனர்.
இதன்மூலம் 152 வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் அபார வெற்றி பெற்றார். அவர் துணை ஜனாதிபதியாக விரைவில் பதவியேற்க உள்ளார்.
துணை ஜனாதிபதியாக பதவியேற்க உள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் மூன்றாவது தமிழர் ஆவார். சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், ஆர்.வெங்கட்ராமன் ஆகியோர் ஏற்கனவே துணை ஜனாதிபதியாக பதவி வகித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
- துணை ஜனாதிபதி பதவிக்கு இன்று தேர்தல் நடைபெற்றது.
- வாக்குப்பதிவு காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணியுடன் முடிந்தது.
புதுடெல்லி:
நாட்டின் துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை மாதம் 21-ம் தேதி பதவி விலகினார். இதையடுத்து அந்தப் பதவிக்கு இன்று தேர்தல் நடைபெற்றது.
தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன், எதிர்க்கட்சிகள் அடங்கிய 'இந்தியா' கூட்டணியின் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி ஆகிய இருவரும் தேர்தலில் போட்டியிட்டனர்.
தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணியுடன் முடிவடைந்தது. பிஜூ ஜனதா தளம், பாரத் ராஷ்ட்ரிய சமிதி ஆகிய கட்சிகள் இந்த தேர்தலை புறக்கணித்தன.
இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் சி.பி.ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்று துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார். 15 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சுதர்சன் ரெட்டி 300 வாக்குகள் பெற்றார்.
துணை ஜனாதிபதியாக தேர்வான சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
- முதல் நபராக பிரதமர் நரேந்திர மோடி தனது வாக்கினை செலுத்தினார்.
- மாலை 3 மணி நிலவரப்படி 96% வாக்குகள் பதிவாகின.
நாட்டின் 16-வது துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை மாதம் 21-ந் தேதி பதவி விலகியதை தொடர்ந்து அந்த பதவிக்கு இன்று தேர்தல் நடைபெற்றது.
தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன், எதிர்க்கட்சிகள் அடங்கிய 'இந்தியா' கூட்டணியின் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி ஆகிய இருவரும் தேர்தலில் போட்டியிட்டனர்.
இதற்கிடையே ஒடிசாவின் முன்னாள் ஆளுங்கட்சியான பிஜூ ஜனதா தளம், தெலுங்கானாவில் முன்னாள் ஆளுங்கட்சியான பாரத் ராஷ்ட்ரிய சமிதி ஆகிய காட்சிகள் இந்த தேர்தலை புறக்கணித்தன.
தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 10 மணி தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்கியதும் முதல் நபராக பிரதமர் நரேந்திர மோடி தனது வாக்கினை செலுத்தினார்.
மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மாலை 3 மணி நிலவரப்படி 96% வாக்குகள் பதிவாகின. அடுத்த துணை ஜனாதிபதி யார் என்ற முடிவுகள் விரைவில் தெரிந்து விடும். சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் என்று கூறப்படுகிறது.
- மாலை 5 மணி வரை பாராளுமன்றத்தின் எப்-101 அரங்கில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
- அடுத்த துணை ஜனாதிபதி யார் என்ற முடிவுகள் மாலையிலேயே தெரிந்து விடும்.
புதுடெல்லி:
நாட்டின் 16-வது துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை மாதம் 21-ந் தேதி பதவி விலகியதை தொடர்ந்து அந்த பதவிக்கு இன்று தேர்தல் நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்தது.
இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 21-ந்தேதி நிறைவு பெற்றதில் ஆளும் கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன், எதிர்க்கட்சிகள் அடங்கிய 'இந்தியா' கூட்டணியின் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி ஆகிய இருவருக்கும் இடையே போட்டி உறுதியானது.
இதற்கிடையே இந்த தேர்தலில் எவ்வாறு வாக்கு அளிக்க வேண்டும்? என தேசிய ஜனநாயக கூட்டணி தரப்பிலும், 'இந்தியா' கூட்டணி சார்பிலும் தங்களது அணி எம்.பி.க்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. 'இந்தியா' கூட்டணி இதனை ஒரு மாதிரி தேர்தலாகவே நடத்திப் பார்த்தது.
பழைய பாராளுமன்ற கட்டிடத்தின் மைய மண்டபத்தில் நடைபெற்ற இந்த வாக்களிப்பு ஒத்திகையில் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்களும், அந்தந்த கூட்டணி கட்சி எம்.பி.க்களும் கலந்து கொண்டனர்.
முன்னதாக அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்களும் நேற்று டெல்லி வந்தனர். அவர்கள் தேர்தல் பற்றி தனித்தனியாக ஆலோசனை நடத்தினார்கள். பா.ஜ.க. கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியின் எம்.பி.க்கள், பீகாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி எம்.பி.க்கள் ஆகியோர் தனித்தனியாக கலந்து ஆலோசித்து சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாக்களிக்க தயார் ஆனார்கள்.
இதற்கிடையே ஒடிசாவின் முன்னாள் ஆளுங்கட்சியான பிஜூ ஜனதா தளம் கட்சி, இந்த தேர்தலில் பங்களிக்கப்போவது இல்லை என தெரிவித்து உள்ளது. அந்த கட்சியின் எம்.பி.யான சஸ்மித் பத்ரா இதனை புவனேஸ்வரில் தெரிவித்தாலும், டெல்லியிலும் இதனை உறுதி செய்தார்.
இந்த கட்சிக்கு மக்களவையில் எம்.பி.க்கள் இல்லை. ஆனால் மாநிலங்களவையில் 7 பேர் இருக்கிறார்கள்.
இதைப்போல பாரதிய ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.) கட்சியும் தேர்தலை புறக்கணிக்கிறது. அந்த கட்சியின் செயல் தலைவரான கே.டி.ராமராவ் இதனை அறிவித்தார். இந்த கட்சிக்கு மக்களவையில் உறுப்பினர்கள் இல்லை. ஆனால் மாநிலங்களவையில் 4 உறுப்பினர்கள் உள்ளனர்.
தேர்தலின் போக்கு சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெறுவதற்கான சூழ்நிலையை காட்டுகிறது என்றே சொல்லலாம். இருப்பினும் இரு அணிகளும் நேற்று வாக்களிப்பில் வெற்றிகரமாக பங்கேற்பது பற்றி பல்வேறு ஆலோசனைகளை நடத்தின.
இந்த நிலையில், தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 10 மணி தொடங்கியது. மாலை 5 மணி வரை பாராளுமன்றத்தின் எப்-101 அரங்கில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அடுத்த துணை ஜனாதிபதி யார் என்ற முடிவுகள் மாலையிலேயே தெரிந்து விடும்.
வாக்குப்பதிவு தொடங்கியதும் முதல் நபராக பிரதமர் நரேந்திர மோடி தனது வாக்கினை செலுத்தினார்.
- வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் கோவையிலிருந்து இரண்டு முறை மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- கருப்புப் பணம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டது போன்றவற்றின் மூலம் நாடு முழுவதும் கவனம் பெற்றவர் ஆவார்.
நாட்டின் அடுத்த துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று (செப்டம்பர் 9) நடைபெற உள்ளது.
வாக்குப்பதிவு காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறும். இரு அவைகளிலிருந்தும் எம்.பி.க்கள் ரகசிய வாக்கெடுப்பு மூலம் தங்கள் வாக்குகளை செலுத்துவர்.
வாக்குப்பதிவு முடிந்த உடனேயே, வாக்கு எண்ணிக்கை மாலை 6 மணிக்கு தொடங்கும். இன்றிரவே முடிவுகள் அறிவிக்கப்படும்.
வேட்பாளர்கள் பின்னணி?
தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த பாஜக தலைவரும் ஆர்எஸ்எஸ் புள்ளியுமான சி.பி. ராதாகிருஷ்ணன் (67) என்.டி.ஏ வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.
வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் கோவையிலிருந்து இரண்டு முறை மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது இவர் மகாராஷ்டிராவின் ஆளுநராகப் இருந்து வருகிறார்.
தெலுங்கானாவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி சுதர்சன் ரெட்டி (79) இந்தியா கூட்டணியின் வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.
சத்தீஸ்கரில் நக்சல் எதிர்ப்பு என்ற பெயரில் தனிநபர்களுக்கு ஆயுதங்கள் வழங்கி அரசு ஆதரவுடன் நடத்தப்பட்ட சல்வா ஜூடும் அமைப்பு அரசியலமைப்பிற்கு விரோதமானது என்ற தீர்ப்பு, கருப்புப் பணம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டது போன்றவற்றின் மூலம் நாடு முழுவதும் கவனம் பெற்றவர் ஆவார்.
எதிர்க்கட்சிகள் இவரை சமூக நீதியின் அடையாளமாக நிலைநிறுத்தியுள்ளன.
யாருக்கு பலம்?
மக்களவை மற்றும் மாநிலங்களவையைச் சேர்ந்த மொத்தம் 781 எம்.பி.க்கள் வாக்களிக்க உள்ளனர்
வெற்றிக்கு 391 வாக்குகள் என்ற மேஜிக் எண்ணிக்கை தேவை. ஆளும் என்.டி.ஏ கூட்டணிக்கு 425 எம்.பி.க்கள் என்ற சொந்த பலம் உள்ளது.
கூடுதலாக, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 11 எம்.பி.க்களும் தங்கள் ஆதரவை அறிவித்துள்ளனர், இதன் மூலம் அவர்களின் எண்ணிக்கை 436 ஆக உயர்ந்துள்ளது.
ஆம் ஆத்மி கட்சி எம்.பி. ஸ்வாதி மாலிவாலும் என்.டி.ஏ வேட்பாளருக்கு வாக்களிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மறுபுறம், எதிர்க்கட்சி இந்தியா கூட்டணிக்கு 324 எம்.பி.க்களின் ஆதரவு உள்ளது. எண்ணிக்கை பலத்தின் அடிப்படையில் என்.டி.ஏ வேட்பாளரின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியானாலும், கடந்த தேர்தலை விட இதில் முன்னிலை குறைய வாய்ப்புள்ளது என்று கணிக்கப்படுகிறது.
2022 இல் ஜக்தீப் தன்கர் 346 வாக்குகள் என்ற மிகப்பெரிய பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றிருந்தார்.
இந்த முறை முன்னிலை 100 முதல் 125 வாக்குகள் வரை மட்டுமே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- இதுவரை இவிஎம்கள், 5 மக்களவை மற்றும் 130 சட்டமன்றத் தேர்தல்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
- மீதமுள்ள விருப்ப எண்களை அவர்கள் விரும்பினால் போடலாம் அல்லது விட்டுவிடலாம்.
நாட்டின் தேர்தல் செயல்முறையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (இவிஎம்) தொடர் சர்ச்சைப் பொருளாக இருந்து வருகிறது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அதன் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பி வருகின்றன.
இதுவரை இவிஎம்கள், 5 மக்களவை மற்றும் 130 சட்டமன்றத் தேர்தல்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இருப்பினும், அவை ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதித் தேர்தல்களில் பயன்படுத்தப்படவில்லை.
இன்று நாட்டின் துணை ஜனாதிபதியை தேர்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் என்.டி.ஏ. கூட்டணி சார்பில் சி.பி. ராதாகிருஷ்ணன், இந்தியா கூட்டணி சார்பில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுத்ர்சன் ரெட்டி போட்டியிடுகின்றனர்.
இவிஎம் ஏன் பயன்படுத்தப்படுவதில்லை?
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில், வேட்பாளரின் பெயருக்கு அடுத்துள்ள பொத்தானை அழுத்துவதன் மூலம் வாக்கு பதிவு செய்யப்படுகிறது.
ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதித் தேர்தல்கள் வேறுபட்டவை. பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே வாக்களிக்கும் இந்தத் தேர்தல்கள் விகிதாசார பிரதிநிதித்துவ முறையின்படி நடத்தப்படுகின்றன.
இவற்றில், ரகசிய வாக்குச்சீட்டு முறை பின்பற்றப்படுகிறது. வாக்களிக்கும் உறுப்பினர்கள் தங்கள் விருப்பத்தைக் குறிக்கும் வகையில் வாக்குச்சீட்டில் வேட்பாளர்களின் பெயர்களுக்கு அருகில் எண்களை எழுத வேண்டும்.
எண்களை 1, 2... என்ற விருப்பத்தின் வரிசையில் இருக்க வேண்டும். வாக்காளர்கள் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து, அவர்கள் விரும்பும் அளவுக்கு விருப்ப எண்களை வாக்குச்சீட்டில் எழுதலாம்.
வாக்கு செல்லுபடியாகும் வகையில், முதல் விருப்ப எண்ணை வைக்க வேண்டும். மீதமுள்ள விருப்ப எண்களை அவர்கள் விரும்பினால் போடலாம் அல்லது விட்டுவிடலாம்.
இதற்காக வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் சிறப்பு பேனாக்களை வழங்கும். வாக்காளர்கள் அந்த பேனாவால் தங்கள் வாக்குகளை குறிக்க வேண்டும். வேறு எந்த பேனாவும் பயன்படுத்தப்பட்டால், அந்த வாக்கு செல்லாததாகக் கருதப்படும். முதல் வாக்கை பிரதமர் மோடி செலுத்துவார்.
விருப்ப எண்ணின் அடிப்படையில் வாக்குகள் எண்ணப்படும். தற்போதுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் இந்த வேறுபட்ட தொழில்நுட்பம் இல்லை. அதனால்தான் அவை ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்தல்களில் பயன்படுத்தப்படுவதில்லை.
- இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேம் பேருந்து நிறுத்தத்தில் திங்களன்று நடந்த துப்பாக்கிச்சூட்டில் 6 அப்பாவி உயிர்கள் பறிபோனதற்கு இரங்கல் தெரிவித்தார்.
- காசாவில் தொடர் தாக்குதல்கள் மற்றும் பட்டினி மரணங்கள் தொடர்பாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் கண்காணிப்பில் இருக்கும் நேரத்தில் பெசலெல் ஸ்மோட்ரிச் இந்தியா வந்துள்ளார்.
இந்தியாவிற்கு வருகை தந்துள்ள இஸ்ரேலிய தீவிர வலதுசாரி தலைவரும் நிதியமைச்சருமான பெசலெல் ஸ்மோட்ரிச், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார் .
இந்த சந்திப்பின் போது, பயங்கரவாதத்திற்கு எதிரான ஒற்றுமையை வெளிப்படுத்தி, இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்தியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான ஒப்பந்தம், பரஸ்பர முதலீடு மற்றும் வர்த்தகத்தை வலுப்படுத்துவதற்கும், இவை தொடர்பான பிரச்சனைகளை தீர்க்க ஒரு சுயாதீனமான நடுவர் மன்றத்தை நிறுவுவதற்கும் வழிவகுக்கிறது,
சந்திப்பின்போது, இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேம் பேருந்து நிறுத்தத்தில் திங்களன்று நடந்த துப்பாக்கிச்சூட்டில் 6 அப்பாவி உயிர்கள் பறிபோனதற்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது இரங்கலைத் தெரிவித்தார்.
காசாவில் தொடர் தாக்குதல்கள் மற்றும் பட்டினி மரணங்கள் தொடர்பாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் கண்காணிப்பில் இருக்கும் நேரத்தில் பெசலெல் ஸ்மோட்ரிச் இந்தியா வந்துள்ளார்.
- பஞ்சாப்புக்கு சிறப்பு நிவாரண நிதியை மோடி அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- கிட்டத்தட்ட 1.71 லட்சம் ஹெக்டேர் பயிர்கள் சேதமானது.
உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்கள் கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டன.
இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக பிரதமர் மோடி நாளை (9-ந்தேதி) பஞ்சாப் செல்கிறார்.
பஞ்சாப் மாநிலத்தில் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்டது குர்தாஸ் பகுதியாகும். பிரதமர் மோடி அங்கு பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிடுகிறார். கனமழையால் பாதிப்புக்குள்ளான விவசாயிகள் மற்றும் பொதுமக்களை அவர் சந்திக்கிறார்.
சட்ட விரோத சுரங்கம் மற்றும் பராமரிப்பு இல்லாமல் பல ஆண்டுகளாக பலவீனம் அடைந்துள்ள சட்லஜ், பியாஸ், காகர் நதிகளின் கரையை வலுப்படுத்த வேண்டியதன் அவசர தேவையை பிரதமர் இந்த பயணத்தின்போது வலியுறுத்துவார் என்று தெரிகிறது.
மேலும் வெள்ளத்தால் கடும் பாதிப்புக்கு உள்ளான பஞ்சாப்புக்கு சிறப்பு நிவாரண நிதியை மோடி அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பஞ்சாபில் வெள்ள பாதிப்பால் 43 பேர் பலியானார்கள். 23 மாவட்டத்தில் 1,900-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. கிட்டத்தட்ட 1.71 லட்சம் ஹெக்டேர் பயிர்கள் சேதமானது.
தொடர்ந்து, உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களிலும் பிரதமர் மோடி வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்கிறார்.






