என் மலர்
இந்தியா

துணை ஜனாதிபதி தேர்தலில் பாஜக அரசியல் தோல்வி அடைந்துள்ளது - காங்கிரஸ்
- துணை ஜனாதிபதித் தேர்தல் முடிவு ஆளும் கட்சியின் வெற்றி எண்ணிக்கையில் மட்டுமே இருப்பதைக் காட்டுகிறது
- எதிர்க்கட்சிகள் இப்போது முன்பை விட வலுவாக உருவாகி வருகின்றன.
துணை ஜனாதிபதிக்கான தேர்தல் நேற்று நடைபெற்று, உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டன. சி.பி. ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்று துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார். அவரை எதிர்த்து இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி 300 வாக்குகள் பெற்றார்.
இதன்மூலம் 15ஆவது துணை ஜனாதிபதியாக சி.பி. ராதாகிருஷ்ணன் பதவி ஏற்க உள்ளார். அவருக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் துணை ஜனாதிபதித் தேர்தல் முடிவு ஆளும் கட்சியின் வெற்றி எண்ணிக்கையில் மட்டுமே இருப்பதைக் காட்டுகிறது என்று காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக நின்றன. அதன் செயல்திறன் மறுக்க முடியாதது.
எங்கள் வேட்பாளர் சுதர்ஷன் ரெட்டி 40% வாக்குகளைப் பெற்றார். 2022 ஆம் ஆண்டில், துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் 26% வாக்குகளை பெற்றிருந்தது.
இதன் அடிப்படையில் பாஜகவின் வெற்றி வெறும் எண்ணிக்கை அளவிலானது மட்டுமே ஆகும். உண்மையில் இந்த வெற்றி பாஜகவின் தார்மீக மற்றும் அரசியல் தோல்வியாகும். எங்களின் சித்தாந்தப் போர் நிற்காமல் தொடர்கிறது." என்று தெரிவித்துள்ளார்.
மேலும், பொதுமக்களும் எதிர்க்கட்சிகளும் இப்போது பாஜகவின் கொள்கைகளுக்கு சவால் விடுவதாகக் கூறிய அவர், எதிர்க்கட்சிகள் இப்போது முன்பை விட வலுவாக உருவாகி வருவதாகவும், வரும் காலங்களில் இது பாஜகவுக்கு ஒரு பெரிய சவாலாக மாறும் என்றும் தெரிவித்தார்.






