என் மலர்
இந்தியா

மாநில அமைச்சர்களுக்கு நன்றி தெரிவித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடிதம்
- மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடந்தது.
- கவுன்சில் கூட்டத்தில் முக்கிய சீர்திருத்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் என 4 அடுக்குகளாக உள்ளது.
சுதந்திர தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியேற்றி பேசிய பிரதமர் மோடி, தீபாவளிக்குள் ஜி.எஸ்.டி. கணிசமாக குறைக்கப்படும் என்று அறிவித்தார்.
அதைத்தொடர்ந்து, ஜி.எஸ்.டி.யை 5 சதவீதம், 18 சதவீதம் என 2 அடுக்குகளாக குறைக்க பரிசீலிக்கப்படுவதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 12 சதவீத வரிஅடுக்கில் உள்ள 99 சதவீத பொருட்கள் 5 சதவீத வரி அடுக்குக்கும், 28 சதவீத வரிஅடுக்கில் உள்ள 90 சதவீத பொருட்கள் 18 சதவீத வரிஅடுக்குக்கும் மாற்றப்பட உள்ளதாக கூறப்பட்டது. இதனால், அன்றாடம் பயன்படுத்தப்படும் பெரும்பாலான பொருட்களின் விலை குறையும் என்று கருதப்படுகிறது.
கடந்த மாதம் கூடிய அமைச்சர்கள் குழு, ஜி.எஸ்.டி. வரி அடுக்கு குறைப்புக்கு ஒப்புதல் தெரிவித்தது. தனது பரிந்துரைகளை ஜி.எஸ்.டி. கவுன்சிலுக்கு அனுப்பி வைத்தது.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் கடந்த 3ம் தேதி மற்றும் 4ம் தேதி நடைபெற்றது. அதில், அனைத்து மாநிலங்களின் நிதி அமைச்சர்களும் பங்கேற்றார்கள். கணித்தபடி கவுன்சில் கூட்டத்தில் முக்கிய சீர்திருத்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் புதிய சீர்திருத்தத்தை மேற்கொள்ள உதவிய அனைத்து மாநில நிதி அமைச்சர்களுக்கும் நன்றி தெரிவித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடிதம் எழுதியுள்ளார்.






