என் மலர்
இந்தியா

அமெரிக்காவின் அழுத்தத்திற்கு இந்தியா அடிபணியாது.. ரஷியாவிடம் எண்ணெய் வாங்குவது தொடரும் - நிர்மலா சீதாராமன்
- அந்நியச் செலாவணியுடன் பெரிதும் பிணைக்கப்பட்டுள்ள எண்ணெயை எங்கு வாங்குவது என்பது முற்றிலும் நமது தேவைகளைப் பொறுத்தது.
- இந்த வரிவிதிப்பு கடந்த ஆகஸ்ட் 27 முதல் அமலுக்கு வந்துள்ளது.
ரஷியாவிடமிருந்து எண்ணெய் வாங்கும் விஷயத்தில் அமெரிக்காவின் அழுத்தத்திற்கு இந்தியா அடிபணியப் போவதில்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நேற்று தனியார் தொலைக்காட்சி சேனலுக்கு பேட்டியளித்த நிர்மலா சீதாராமன், "ரஷிய எண்ணெய்யாக இருந்தாலும் சரி அல்லது வேறு எதுவாக இருந்தாலும் சரி, எங்களுக்கு ஏற்ற முடிவை எடுப்போம்.
குறிப்பாக விலை மற்றும் போக்குவரத்து போன்ற காரணிகளை நாங்கள் கருத்தில் கொள்வோம். அந்நியச் செலாவணியுடன் பெரிதும் பிணைக்கப்பட்டுள்ள எண்ணெயை எங்கு வாங்குவது என்பது முற்றிலும் நமது தேவைகளைப் பொறுத்தது.
எனவே, நாங்கள் நிச்சயமாக ரஷியாவிலிருந்து எண்ணெய் வாங்குவோம்" என்று தெரிவித்தார்.
முன்னதாக ரஷியாவிடம் குறைந்த விலையில் எண்ணெய் வாங்கி இந்தியா உக்ரைன் போருக்கு உதவுவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வரிவிதிப்பு கடந்த ஆகஸ்ட் 27 முதல் அமலுக்கு வந்துள்ளது.






