என் மலர்tooltip icon

    இந்தியா

    பிரதமர் மோடி 9-ந்தேதி பஞ்சாப் செல்கிறார்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுகிறார்
    X

    பிரதமர் மோடி 9-ந்தேதி பஞ்சாப் செல்கிறார்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுகிறார்

    • பஞ்சாபில் வெள்ள பாதிப்பால் 43 பேர் பலியானார்கள்.
    • கனமழையால் பாதிப்புக்குள்ளான விவசாயிகள் மற்றும் பொதுமக்களை பிரதமர் மோடி சந்திக்கிறார்.

    புதுடெல்லி:

    உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்கள் கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டன.

    இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக பிரதமர் மோடி நாளை மறுநாள் (9-ந்தேதி) பஞ்சாப் செல்கிறார்.

    பஞ்சாப் மாநிலத்தில் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்டது குர்தாஸ் பகுதியாகும். பிரதமர் மோடி அங்கு பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிடுகிறார். கனமழையால் பாதிப்புக்குள்ளான விவசாயிகள் மற்றும் பொதுமக்களை அவர் சந்திக்கிறார்.

    சட்ட விரோத சுரங்கம் மற்றும் பராமரிப்பு இல்லாமல் பல ஆண்டுகளாக பலவீனம் அடைந்துள்ள சட்லஜ், பியாஸ், காகர் நதிகளின் கரையை வலுப்படுத்த வேண்டியதன் அவசர தேவையை பிரதமர் இந்த பயணத்தின்போது வலியுறுத்துவார் என்று தெரிகிறது.

    மேலும் வெள்ளத்தால் கடும் பாதிப்புக்கு உள்ளான பஞ்சாப்புக்கு சிறப்பு நிவாரண நிதியை மோடி அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுகுறித்து பஞ்சாப் மாநில பா.ஜ.க. தனது எக்ஸ்தள பதிவில் கூறி இருப்பதாவது:-

    பிரதமர் மோடி வருகிற 9-ந்தேதி பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் வருகிறார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், விவசாயிகளை அவர் நேரடியாக சந்தித்து உதவ அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பார். பிரதமரின் இந்த வருகை மத்திய பா.ஜ.க. அரசு பஞ்சாப் மக்களுடன் எப்போதும் நிற்கிறது என்பதையும், இந்த கடினமான நேரத்தில் முழு ஆதரவையும் வழங்கும் என்பதையும் நிரூபிக்கிறது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    பஞ்சாபில் வெள்ள பாதிப்பால் 43 பேர் பலியானார்கள். 23 மாவட்டத்தில் 1,900-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. கிட்டத்தட்ட 1.71 லட்சம் ஹெக்டேர் பயிர்கள் சேதமானது.

    Next Story
    ×