என் மலர்
கிரிக்கெட் (Cricket)

கடந்த 5 ஆண்டுகளில் கிரிக்கெட் வாரியத்தின் வருவாய் ரூ.14,627 கோடி அதிகரிப்பு
- கிரிக்கெட் வாரியத்தின் வருடாந்திர பொதுக் குழுவில் சமர்பிக்கப்பட்ட கணக்கு அறிக்கையில் தகவல்.
- 2019-ல் பி.சி.சி.ஐ.யின் பணம் கையிருப்பு மற்றும் வங்கி இருப்பு ரூ.6,059 கோடியாக இருந்தது.
உலகின் மிகப்பெரிய பணக்கார விளையாட்டு அமைப்பு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) ஆகும்.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு கடந்த 5 ஆண்டுகளில் ரூ.14,627 கோடி வருவாய் அதிகரித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் கடந்த நிதியாண்டில் மட்டும் ரூ.4,193 கோடி கிடைத்து உள்ளது.
மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு அனைத்து நிலுவை தொகையும் வழங்கப்பட்ட பிறகு உள்ள வருவாய் உயர்வு இதுவாகும். கிரிக்கெட் வாரியத்தின் வருடாந்திர பொதுக் குழுவில் சமர்பிக்கப்பட்ட கணக்கு அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
2019-ல் பி.சி.சி.யின் வருவாய் ரூ.3,906 கோடி ஆக இருந்தது. 2024-ல் அது 2 மடங்கு ரூ.7,988 கோடியாக உயர்ந்தது. அதாவது ரூ.4082 கோடியாக அதிகரித்தது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் தற்போது ரொக்கம் மற்றும் வங்கி இருப்பு ரூ.20,686 கோடியாக உயர்ந்து இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
2019-ல் பி.சி.சி.ஐ.யின் பணம் கையிருப்பு மற்றும் வங்கி இருப்பு ரூ.6,059 கோடியாக இருந்தது. இது மாநில சங்கங்களுக்கு வழங்கப்படும் முன்பு ரூ.20,686 கோடி உயர்ந்து உள்ளதாக உறுப்பினர்களிடம் அதன் செயலாளர் தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல்., ஐ.சி.சி.யின் (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) வருவாய் பகிர்வு மற்றும் விளம்பரங்கள் மூலம் கிரிக்கெட் வாரியத்தின் வருவாய் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
வருமானவரி மற்றும் கோர்ட்டு நடவடிக்கைகளுக்காக கிரிக்கெட் வாரியம் 2023-24 நிதியாண்டில் ரூ.3.150 கோடியை ஒதுக்கி உள்ளது.






