என் மலர்tooltip icon

    ஆந்திர பிரதேசம்

    • ஐ.பி.எல். டி20 தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
    • சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சம பலத்துடன் திகழ்கிறது.

    விசாகப்பட்டினம்:

    17-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி கடந்த 22-ம் தேதி சென்னையில் தொடங்கியது. இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இந்த போட்டி தொடர் நடைபெற்று வருகிறது.

    இதில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் உள்ளூர், வெளியூர் என தலா 14 ஆட்டங்களில் மோதவேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

    நடப்பு சாம்பியனும், ஐ.பி.எல். கோப்பையை 5 முறை வென்ற அணியுமான சென்னை சூப்பர் கிங்ஸ் சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த தொடக்க ஆட்டத்தில் பெங்களூரு அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வென்றது . கடந்த 26-ம் தேதி சென்னையில் நடைபெற்ற 2-வது போட்டி யில் குஜராத்தை 63 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

    ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3-வது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்சை நாளை (31-ம் தேதி) எதிர்கொள்கிறது. இந்த போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.

    டெல்லி அணியையும் வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெறும் ஆர்வத்தில் சி.எஸ்.கே. உள்ளது. முதல் 2 ஆட்டங்களிலும் உள்ளூரில் ஆடிய அந்த அணி தற்போது வெளி ஆடுகளத்தில் போட்டியைச் சந்திக்கிறது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சம பலத்துடன் திகழ்கிறது. பேட்டிங்கில் ஷிவம் துபே, ரச்சின் ரவீந்திரா, கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரும், பந்து வீச்சில் முஸ்டாபிசுர் ரகுமான், தீபக் சாஹர் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

    புதுமுக வீரர் சமீர் ரிஸ்வி மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. அவரை முன்னதாகவே களம் இறக்கி வாய்ப்பு அளிக்கலாம்.

    ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் முதல் போட்டியில் பஞ்சாப்பிடமும் (4 விக்கெட்), 2-வது ஆட்டத்தில் ராஜஸ்தானிடமும் (12 ரன்) தோற்றது.

    முதல் வெற்றியைப் பெறும் வேட்கையில் அந்த அணி இருக்கிறது. முதல் 2 போட்டியிலும் டெல்லி அதிரடியாக ஆடவில்லை. அந்த அணியின் உள்ளூர் மைதானமாக விசாகப்பட்டினம் உள்ளது.

    இரு அணிகளும் ஐ.பி.எல். சீசன்களில் இதுவரை 29 முறை மோதியுள்ளன. இதில் சி.எஸ். கே. 19-ல், டெல்லி 10-ல் வெற்றி பெற்றுள்ளன.

    முன்னதாக நாளை மாலை 3.30 மணிக்கு அகமதாபாத்தில் நடைபெறும் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுமே 2-வது வெற்றிக்காக காத்திருக்கின்றன.

    • வேட்பாளர்களை மாற்றக் கோரி மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
    • தேர்தல் நேரத்தில் போராட்டம் வலுத்து வருவதால் கட்சித் தலைமை விரக்தி அடைந்து உள்ளது.

    திருப்பதி:

    ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர் பட்டியலில் மூத்த தலைவர்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் வேட்பாளர்களை மாற்றக் கோரி மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    அனந்தபுரம் மாவட்டம் குண்டக்கல் சட்டமன்ற தொகுதியில் மூத்த தலைவரான பிரபாகர் சவுத்ரிக்கு சீட்டு மறுக்கப்பட்டதால் ஆத்திரம் அடைந்த அவர்கள் கட்சி அலுவலகத்தில் புகுந்து அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர்.

    மேலும் அலுவலகத்தில் இருந்த மர சாமான்கள் பிளக்ஸ் பேனர்கள் துண்டு பிரசுரங்களை ரோட்டில் எடுத்து வந்து கொட்டி தீயிட்டு எரித்தனர். மேலும் சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

    படேறு தொகுதியில் சீட் கிடைக்காததால் பிரசாத் என்பவர் அவரது வீட்டில் இருந்த சந்திரபாபு நாயுடுவின் போட்டோக்கள் மற்றும் துண்டு பிரசுரங்களை சாலையில் போட்டு எரித்தார்.

    விஜயநகரம் மாவட்டம் நெல்லிமரலா பங்கர்ராஜுக்கு சீட்டு வழங்காததால் அவர் சுயேசையாக போட்டியிட உள்ளதாக தெரிவித்தார்.

    இதேபோல் 8 சட்டமன்ற தொகுதிகளில் மூத்த தலைவர்களுக்கு தெலுங்கு தேசம் கட்சியில் போட்டியிட வாய்ப்பு வழங்காததால் சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக போராட்டம் செய்தனர்.

    தேர்தல் நேரத்தில் போராட்டம் வலுத்து வருவதால் கட்சித் தலைமை விரக்தி அடைந்து உள்ளது.

    • பிரச்சார வாகனத்தில் இருந்து சீனிவாஸ் சைக்கிள், சைக்கிள் என மைக்கில் பேசினார்.
    • ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் சின்னமான பேன், பேன் சத்தமாக கத்தினர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் திருவூர் தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் கோலிகாபுடி சீனிவாஸ் போட்டியிடுகிறார்.

    இவர் தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பிரசாரம் செய்து வருகிறார். அந்த பகுதியில் பிரச்சார வாகனத்தில் இருந்து சீனிவாஸ் சைக்கிள், சைக்கிள் என மைக்கில் பேசினார்.

    அப்போது கீழே நின்று கொண்டு இருந்த பெண்கள் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் சின்னமான பேன், பேன் சத்தமாக கத்தினர்.

    இதனால் கடுப்பான சீனிவாஸ் அங்கிருந்த பெண்களை சைத்தான் சைத்தான் என கூறிவிட்டு வாகனத்தை வேறு ஊருக்கு ஓட்டுமாறு கூறிச் சென்றார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    • சீனிவாச வர்மா 30 ஆண்டுகளாக பா.ஜ.க.வில் உள்ளார்.
    • சீனிவாச வர்மா எம்.பி பா.ஜ.க. சின்னத்தில் படுத்தபடி அழுத காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பூபதி ராஜு சீனிவாச வர்மா இவர் 2019-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜ.க. மேல்சபை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார்.

    இந்த தேர்தலில் நரசபுரம் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்திருந்தார். இந்த நிலையில் பா.ஜ.க. வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது.

    தன்னுடைய கட்சி அலுவலகத்திற்கு வந்திருந்த சீனிவாச வர்மா எம்.பி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனால் சீனிவாச வர்மா உணர்ச்சிவசப்பட்டார்.

    கட்சி அலுவலகத்தில் இருந்த பா.ஜ.க. தாமரை சின்னத்தின் மீது கட்டிப்பிடித்து படுத்துக்கொண்டு தேம்பி தேம்பி அழுதார். இதனைக் கண்ட அவரது ஆதரவாளர்கள் பா.ஜ.க வாழ்க என கோஷம் எழுப்பினர்.

    பா.ஜ.க. சின்னத்தில் படுத்தபடியே உணர்ச்சி வசப்பட்ட எம்.பி.யை அவரது ஆதரவாளர்கள் தூக்கி சமாதானம் செய்தனர்.

    சீனிவாச வர்மா 30 ஆண்டுகளாக பா.ஜ.க.வில் உள்ளார். தன்னுடைய 30 ஆண்டு கால உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

    சீனிவாச வர்மா எம்.பி பா.ஜ.க. சின்னத்தில் படுத்தபடி அழுத காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதனால் பா.ஜ.க. தொண்டர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.

    • ஆத்திரம் தீராத மனைவி வீட்டில் இருந்த மிளகாய் பொடியை எடுத்து வந்து கணவரின் உடல் மீது தூவினார்.
    • சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே ஹேமந்த் பரிதாபமாக இறந்தார்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், கரீம் நகரை சேர்ந்தவர் ஹேமந்த் (வயது 39). இவர் அங்குள்ள பெட்ரோல் பங்கில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி ரோஹிதி. தனியார் ஆஸ்பத்திரியில் வேலை செய்து வருகிறார்.

    கடந்த சில மாதங்களாக ஹேமந்த் மது போதைக்கு அடிமையாகியதால் வேலையை விட்டு நின்றார். மேலும் தினமும் மது குடித்துவிட்டு வந்து மனைவியை அடித்து உதைத்து சித்ரவதை செய்தார்.

    இதனால் கணவரை தீர்த்துக்கட்ட ரோஹிதி முடிவு செய்தார். நேற்று முன்தினம் இரவு ஹேமந்த் மது போதையில் வீட்டிற்கு வந்தார். அப்போது கணவன் மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

    இதுகுறித்து ரோஹிதி தன்னுடன் வேலை செய்யும் நண்பர்களான சாய்கிரன் மற்றும் நவீனுக்கு போன் செய்து வீட்டிற்கு வர வழைத்தார்.

    நண்பர்கள் வீட்டிற்கு வந்ததும் கணவரின் ஆடைகளை கழற்றி விட்டு தூணில் கயிற்றால் கட்டினார். பின்னர் வெந்நீரை கொதிக்க வைத்து கணவர் உடல் மீது ஊற்றினார்.

    இதனால் ஹேமந்த் வலியால் அலறி துடித்தார். இருப்பினும் ஆத்திரம் தீராத மனைவி வீட்டில் இருந்த மிளகாய் பொடியை எடுத்து வந்து கணவரின் உடல் மீது தூவினார். பின்னர் கட்டையை எடுத்து வந்து கணவரின் தலை மீது தாக்கினார். இதில் ஹேமந்த் படுகாயம் அடைந்தார்.

    தலையில் இருந்து ரத்தம் கொட்டியது. ரோஹிதியின் நண்பர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதையடுத்து 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்த ரோஹிதி கணவரை மீட்டு அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே ஹேமந்த் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து ரோஹிதி மற்றும் அவரது நண்பர்கள் சாய் கிரண், நவீன் ஆகியவை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • விழா ஏற்பாடுகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடந்தது.
    • பிரமோற்சவ விழா 13-ந்தேதி வரை கோலாகலமாக நடக்கிறது.

    திருமலை:

    திருப்பதி கோதண்டராமர் கோவிலில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 5-ந்தேதி வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    திருப்பதி கோதண்டராமர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா அடுத்த மாதம் (ஏப்ரல்) 4-ந்தேதி அங்குரார்ப்பணத்துடன் தொடங்கி 13-ந்தேதி வரை கோலாகலமாக நடக்கிறது. விழா ஏற்பாடுகள் குறித்து திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி வீரபிரம்மன் தலைமையில் மறு ஆய்வுக்கூட்டம் நடந்தது.

    கூட்டத்துக்கு பிறகு நிருபர்களிடம் வீரபிரம்மன் கூறியதாவது:-

    ஏப்ரல் 5-ந்தேதி திருப்பதி கோதண்டராமர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வாகன சேவை தினமும் காலை 7 மணியில் இருந்து 10 மணிவரையிலும், இரவு 7 மணியில் இருந்து 9 மணி வரையிலும் நடக்கிறது.

    பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஏப்ரல் 9-ந்தேதி இரவு கருட வாகனம், ஏப்ரல் 10-ந்தேதி அனுமந்த வாகனம், ஏப்ரல் 13-ந்தேதி சக்கர ஸ்நானம் நடக்கிறது.

    பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்குதல், கலாசார நிகழ்ச்சிகள், பாதுகாப்பு, குடிநீர், மோர், மலர் மற்றும் மின் விளக்கு அலங்காரம் போன்ற அனைத்து ஏற்பாடுகளை செய்ய அந்தந்தத்துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்படுவார்கள். வாகன சேவைக்கு முன்னால் பக்தி பஜனைகள் மற்றும் கோலாட்டங்கள் நடக்கிறது.

    விழாவில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் பாதிக்கப்பட்ட பக்தர்களை மீட்டு மருத்துவனைக்குக் கொண்டு செல்ல ஆம்புலன்சுகள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்படும். மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். பிரம்மோற்சவ விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் பக்தி சேனலில் நேரடியாக ஒளிபரப்பப்படும். பக்தர்களுக்கு ராமகோடி புத்தகங்கள் வினியோகம் செய்யப்படும். போதுமான எண்ணிக்கையில் ஸ்ரீவாரி சேவா சங்க தொண்டர்களை நியமித்து பக்தர்களுக்கு சேவை செய்யப்படும்.

    ஏப்ரல் 17-ந்தேதியில் இருந்து 19-ந்தேதி வரை ராம நவமி உற்சவம், ஏப்ரல் 21-ந்தேதியில் இருந்து 23-ந்தேதி வரை வருடாந்திர தெப்போற்சவம் நடக்கிறது. இந்த விழாக்களும் வெகுவிமரிசையாக நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • லாரி வெளியே செல்லும் பாதையில் செல்லாமல் எதிர் திசையில் முகாம் அலுவலகத்தை விட்டு மர்மமான முறையில் வெளியேறியது.
    • கண்டெய்னர் லாரி வந்து சென்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் தாடே பள்ளியில் முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியின் முகாம் அலுவலகம் உள்ளது.

    இந்த அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் கண்டெய்னர் லாரி ஒன்று வந்தது. வழக்கமாக முகாம் அலுவலகத்திற்கு வரும் அனைத்து வாகனங்களும் சோதனைக்கு பிறகு உள்ளே அனுப்பபடுகின்றன.

    ஆனால் இந்த லாரி சோதனை எதுவும் செய்யப்படவில்லை. சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் அங்கு நின்ற லாரி வெளியே செல்லும் பாதையில் செல்லாமல் எதிர் திசையில் முகாம் அலுவலகத்தை விட்டு மர்மமான முறையில் வெளியேறியது.

    கண்டெய்னர் லாரி வந்து சென்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது. இது பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.

    இந்த நிலையில் தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் நாரா லோகேஷ் இதுகுறித்து தேர்தல் அதிகாரி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில்:-

    ஜெகன்மோகன் ரெட்டி முகாம் அலுவலகத்திற்கு வந்த லாரியில் கட்டு கட்டாக பணம் இருந்திருக்கலாம். அதனை எந்திரங்கள் மூலம் எண்ணி அனுப்பி வைத்துள்ளனர் அல்லது ஆந்திர பிரதேச தலைமை செயலகத்தில் மறைத்து வைக்கப்பட்ட கோப்புகள் கடத்தி வரப்பட்டு இருக்கலாம். ஒருவேளை லாரியில் போதைப்பொருட்கள் கூட இருந்திருக்கலாம் என கூறினார்.

    ஆந்திர மாநிலத்தில் உள்ள மற்ற எதிர்க்க ட்சிகளும் இது தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியுள்ளனர்.

    இது தொடர்பாக ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூறுகையில்:- தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்கள் தேவையற்ற ஒரு நாடகத்தை உருவாக்குகிறார்கள்.

    பல அரசு துறைகள் முதல்வரின் முகாம் அலுவலகத்தில் இயங்குகிறது. சம்பந்தப்பட்ட வாகனம் அலுவலகங்களுக்கு பொருட்களை எடுத்துச் சென்றிருக்கலாம்.

    அவர்கள் சொல்வது போல பணம் எதுவும் கொண்டு வரப்படவில்லை. விசாகப்பட்டினத்தில் பிடிபட்ட போதை பொருள் நிரப்பப்பட்ட கண்டெய்னர் லோகேஷின் உறவினர்களுக்கு சொந்தமானது என்பது மக்களுக்கே தெரியும் என்றார்.

    • எனக்கு எதிராக தெலுங்கு தேசம், பா.ஜ.க., ஜனசேனா, காங்கிரஸ் கட்சி இணைந்து பிரசாரம் செய்கின்றனர்.
    • கடவுள் மற்றும் மக்கள் என் பக்கம் உள்ளனர்.

    திருப்பதி:

    ஆந்திராவில் ஒரே கட்டமாக பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலையொட்டி முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி நேற்று பஸ் யாத்திரை பிரசாரம் தொடங்கினார்.

    தனது சொந்த தொகுதியான கடப்பாவில் தேர்தலில் பிரசாரத்தை முடித்து விட்டு பின்னர் பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    மக்களின் ஆதரவு இன்றி தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு மோசமான அரசியல் செய்து வருகிறார். என் மீது சேற்றை வாரி வீசி அரசியல் செய்கிறார்.

    எனக்கு எதிராக தெலுங்கு தேசம், பா.ஜ.க., ஜனசேனா, காங்கிரஸ் கட்சி இணைந்து பிரசாரம் செய்கின்றனர்.

    இது போதாதென்று எனது தங்கையை அரசியலுக்கு அழைத்து வந்து அவர் மூலம் சேற்றை வாரி இறைத்து வருகின்றனர். நான் எந்த தவறும் செய்யவில்லை. நீதியை நம்புகிறேன்.

    கடவுள் மற்றும் மக்கள் என் பக்கம் உள்ளனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கை ஷர்மிளா காங்கிரஸ் தலைவராக உள்ளார். இவர் ஜெகன்மோகன் ரெட்டியை கடுமையாக விமர்சித்து வருகிறார்.

    • நெல்லூர் இன பசுக்கள் கடந்த 1868-ம் ஆண்டு பிரேசிலுக்கு கொண்டு செல்லப்பட்டன.
    • பிரேசில் நாட்டில் 1.60 கோடி நெல்லூர் இன பசுக்கள் உள்ளன.

    திருப்பதி:

    ஆந்திராவில் ஓங்கோல் மற்றும் நெல்லுரை சேர்ந்த சில வகை இன மாடுகள் உலக அளவில் பிரபலமாக உள்ளது.

    நெல்லூர் இன வகையான பாஸ் இண்டிகஸ் என்ற இன பசு வெளிப்புறத் தோற்றத்தில் வெண்மை நிறத்தில் இருக்கும். இந்த வகை பசு பிரேசில் நாட்டில் நடந்த ஏலத்தில் 4.8 மில்லியன் டாலருக்கு விற்பனையானது.

    இது இந்திய ரூபாயின் மதிப்பில் ரூ.40 கோடி ஆகும். ரூ.40 கோடிக்கு விற்பனையாகி உலக சாதனை படைத்தது.

    நெல்லூர் இன பசுக்கள் கடந்த 1868-ம் ஆண்டு பிரேசிலுக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு இந்த வகை பசுக்கள் அதிக அளவில் இனவிருத்தி செய்யப்பட்டு வருகிறது.

    அதன்படி பிரேசில் நாட்டில் 1.60 கோடி நெல்லூர் இன பசுக்கள் உள்ளன.

    இந்த வகை பசுக்கள் அதிக வெப்பத்தை தாங்கக் கூடியவை. எளிதில் நோய்கள் தாக்க முடியாத அளவுக்கு அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவையாகும். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விரைவில் அவர் திரையுலகில் இருந்து விடைபெற்று முழு நேர அரசியல்வாதியாக மாறுவார் என தகவல்கள் பரவி வருகின்றன.
    • அனுஷ்கா போட்டியிடப் போவதாக தகவல் பரவியதால் ஆந்திராவில் பரபரப்பு ஏற்பட்டது.

    திருப்பதி:

    பாகுபலி படத்தின் மூலம் நடிகை அனுஷ்கா ஆந்திராவில் புகழ்பெற்ற நட்சத்திரமாக உள்ளார். தொடர்ந்து அவர் நடித்த படங்கள் பெரும் வெற்றியை பெற்றுள்ளன.

    இந்த நிலையில் அனுஷ்கா ஆந்திர அரசியலுக்கு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஆந்திர மாநில சட்டமன்றத் தேர்தலில் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி சார்பில் அனுஷ்கா வேட்பாளராக போட்டியிடுவார் என்று தகவல்கள் பரவி வருகின்றன.

    இது குறித்து ஜனசேனா கட்சி தலைவர்களுடன் அனுஷ்கா பேசி வருவதாகவும் தனது அரசியல் அறிமுகத்திற்கு தீவிரமாக தயாராகி வருகிறார். விரைவில் அவர் திரையுலகில் இருந்து விடைபெற்று முழு நேர அரசியல்வாதியாக மாறுவார் என தகவல்கள் பரவி வருகின்றன.

    ஆந்திர மாநிலத்தில் நகரி தொகுதியில் போட்டியிடும் நடிகை ரோஜா 3-வது முறையாக அந்த தொகுதியில் களமிறங்கியுள்ளார்.

    அவரை தோல்வி அடையச் செய்ய எதிர்க்கட்சிகள் வரிந்து கட்டிக்கொண்டு வேலை செய்கின்றன. நகரி தொகுதியை பொறுத்த வரையில் தமிழர்கள் கணிசமாக உள்ளனர்.

    நடிகை அனுஷ்கா தமிழ் படங்களிலும் பிரபலமானவர்.

    நடிகை ரோஜாவை எதிர்த்து தெலுங்கு தேசம் கூட்டணி சார்பில் ஜனசேனா கட்சி வேட்பாளராக அனுஷ்காவை களம் இறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து ஜனசேனா கட்சியினரும் அனுஷ்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    இருப்பினும் அனுஷ்கா தனது அரசியல் வருகை குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.

    ரோஜாவை எதிர்த்து அனுஷ்கா போட்டியிடப் போவதாக தகவல் பரவியதால் ஆந்திராவில் பரபரப்பு ஏற்பட்டது.

    • கர்னூல் மாவட்டத்தில் விசித்திரமான பாரம்பரியம் கடைபிடிக்கப்படுகிறது.
    • ஆண்கள் பெண்கள் வேடமிட்டு மன்மத பூஜை செய்யும் திருவிழா.

    திருப்பதி:

    ஹோலி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. மகிழ்ச்சியாக வண்ணங்களை தூவி உற்சாகமாக கொண்டாடுகின்றனர்.

    ஆனால் ஆந்திராவில் ஹோலி பண்டிகையில் ஆண்கள் பெண்கள் வேடமிட்டு மன்மத பூஜை செய்யும் திருவிழா பாரம்பரியமாக நடத்தப்படுகிறது.

    ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள சந்தேகுட்லூர் கிராமத்தில் பழங்காலத்தில் இருந்தே விசித்திரமான பாரம்பரியம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஹோலி கொண்டாட்டத்தின் போது அங்குள்ள மன்மதா தெய்வத்திற்கு திருவிழா நடத்தப்படுகிறது.

    அப்போது கிராமத்தில் உள்ள ஆண்கள் அனைவரும் பெண்கள் வேடமணிகிறார்கள். அவர்கள் அழகாக பட்டு சேலை கட்டி, நகைகள் அணிந்து பெண்கள் போல அலங்காரம் செய்கிறார்கள். பின்னர் அவர்கள் தலை நிறைய பூ வைத்து தட்டுகளில் பூ, பழம் தேங்காய் உள்ளிட்டவைகளை கையில் ஏந்தியபடி ஊர்வலமாக அங்குள்ள மன்மதன் கோவிலுக்கு செல்கிறார்கள்.

    அங்கு ஆண்கள் பெண்கள் உடையில் மன்மத பூஜை செய்கிறார்கள். மேலும் அந்த தெய்வத்திற்கு நேர்த்திக் கடன்களையும் செலுத்துகின்றனர். பாரம்பரியமாக நடைபெறும் மன்மதத் திருவிழா எங்கள் கிராமத்தின் கடவுள் நம்பிக்கையின் உணர்வை குறிக்கிறது என அங்குள்ள கிராம மக்கள் தெரிவித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • என்னை அரசியல் ரீதியாக துன்புறுத்தினார்கள். அரசியலுக்கு தொடர்பு இல்லாத என் மனைவியை சட்டசபையில் அவமானப்படுத்தினார்கள்.
    • மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு வீட்டிற்கும் ஆண்டுக்கு ரூ.15 ஆயிரமும், ஆண்டிற்கு 3 கியாஸ் சிலிண்டர்களும் இலவசமாக வழங்கப்படும்.

    திருப்பதி:

    ஆந்திர மாநில முன்னாள் முதல் மந்திரியும் தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு தனது சொந்த தொகுதியான குப்பத்தில் 2 நாட்கள் நேற்று தேர்தல் பிரசாரம் தொடங்கினார். குப்பம் தொகுதியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி மகளிர் பிரிவு நிர்வாகிகளை சந்தித்தார்.

    ஜெகன்மோகன் ஆட்சியில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை. என்னை சட்ட விரோதமாக கைது செய்து துன்புறுத்தினர். இருப்பினும் நான் பயந்து ஓடவில்லை. எனக்கு பதவி முக்கியமில்லை. மாநில நலன் தான் முக்கியம்.

    தெலுங்கு தேசம் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ. 4 ஆயிரம் வழங்கப்படும். மாநிலத்தின் நலனை பாதுகாப்பதற்காக தெலுங்கு தேசம், பா.ஜ.க. மற்றும் ஜனசேனா செயல் திட்டம் தீட்டி வருகிறது.

    மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கினேன் வக்பு வாரிய சொத்துக்கள் பாதுகாக்கப்பட்டன உருது மொழியை 2-வது மொழியாக அறிவித்தேன்.

    ஆந்திராவில் கஞ்சா மற்றும் போதை பொருள் விற்பனை அதிகரித்து காணப்படுகிறது. இதனால் போதையில் இருப்பவர்கள் தாய் யார்? சகோதரி யார்? என தெரியாமல் நடந்து கொள்கின்றனர்.

    அந்திரி நிவா திட்டத்தின் மூலம் குப்பம் பகுதியில் உள்ள கிளை கால்வாய்கள் தூர்வாரப்படும். ஒவ்வொரு ஏக்கர் விவசாய நிலத்திற்கும் பாலாற்றில் இருந்து தண்ணீர் கொண்டு செல்ல வேண்டியது எனது பொறுப்பு.

    என்னை அரசியல் ரீதியாக துன்புறுத்தினார்கள். அரசியலுக்கு தொடர்பு இல்லாத என் மனைவியை சட்டசபையில் அவமானப்படுத்தினார்கள்.

    பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும். இதனால் ஆண்கள் நாற்காலிகளை தேட வேண்டும். எனது ஆட்சியில் பெண்களுக்கு சைக்கிள் வழங்கினேன். 30 சதவீத இட ஒதுக்கீட்டில் வேலை வாய்ப்பு வழங்கினேன்.

    மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு வீட்டிற்கும் ஆண்டுக்கு ரூ.15 ஆயிரமும், ஆண்டிற்கு 3 கியாஸ் சிலிண்டர்களும் இலவசமாக வழங்கப்படும்.

    ஜெகன்மோகன் ஆட்சியில் தரமற்ற மதுபானங்கள் விற்பனை செய்வதால் அதைக் குடித்துவிட்டு கணவன்கள் இறந்து விடுவதால் பெண்கள் தாலி கொடியை இழந்து வருகின்றனர்.

    எனது ஆட்சியில் ரூ.75-க்கு விற்கப்பட்ட மதுபானங்கள் ஜெகன்மோகன் ஆட்சியில் 2 மடங்காக விலை உயர்த்தப்பட்டது. தெலுங்கு தேசம் ஆட்சிக்கு வந்த பின்னர் குறைந்த விலையில் தரமான மதுபானங்கள், பீர்கள் விற்பனை செய்யப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

    ×