என் மலர்tooltip icon

    ஆந்திர பிரதேசம்

    • பாகிஸ்தானின் தாக்குதலின் போது ஆந்திராவைச் சேர்ந்த ராணுவ வீரர் முரளி உயிரிழந்தார்.
    • பவன் கல்யாண் தனது சொந்த நிதியில் இருந்து ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கினார்.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது. இதற்கு ஆபரேசன் சிந்தூர என்று இந்திய ராணுவம் பெயரிட்டது.

    இதனையடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பின் தலையீட்டால் இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொள்வதாக அறிவித்தது. நாளை இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன.

    ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கிசூட்டில் ஆந்திராவை சேரந்த முடவத் முரணி நாயக் என்ற ராணுவ வீரர் வீர மரணம் அடைந்தார். இவர் அக்னிவீர் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் இணைந்தவர்.

    இந்நிலையில், பாகிஸ்தானின் தாக்குதலின் போது உயிரிழந்த ஆந்திராவைச் சேர்ந்த ராணுவ வீரர் முரளி நாயக்கின் உடலுக்கு ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

    மேலும், முரளியின் குடும்பத்திற்கு பவன் கல்யாண் தனது சொந்த நிதியில் இருந்து ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.

    • இரு நாடுகளின் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது.
    • இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 10 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    திருப்பதி:

    காஷ்மீர் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் இரு நாடுகளின் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது.

    பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஆந்திர மாநில டி.ஜி.பி ஹரிஷ் குமார் குப்தா உத்தரவின் பேரில் திருப்பதி போலீஸ் சூப்பிரண்டு ஹரிஷ் வர்தன் ராஜு தலைமையில் திருப்பதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    மேலும் ஆக்டோபஸ் படை, போலீசார், தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 120 பேர் கொண்ட குழுவினர் சந்தேகத்திற்கு இடமான நபர்கள், முக்கிய இடங்கள், நெரிசலான பகுதிகளில் 4 குழுக்களாக பிரிந்து சோதனை நடத்தினர்.


    பத்மாவதி தாயார் விருந்தினர் மாளிகை, 4 மாட விதிகள், கொல்ல மண்டபம், வராக சாமி கோவில், வெங்கடேஸ்வரா ஓய்வு இல்லம், ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை, அலிபிரி உள்ளிட்ட இடங்களில் 16 மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் கருவிகளுடன் சோதனை செய்தனர். அலிபிரியில் பக்தர்களின் உடைமைகள் மற்றும் வாகனங்களை முழுமையாக சோதனை நடத்திய பிறகு திருப்பதி மலைக்கு வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. திருப்பதி மலை முழுவதும் துப்பாக்கி ஏந்திய ஆக்டோபஸ் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    திருப்பதியில் நேற்று 68,213 பேர் தரிசனம் செய்தனர். 29, 635 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.45 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 10 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    • எல்லையில் பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.
    • நேற்றிரவு நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஆந்திராவைச் சேர்ந்த வீரர் மரணம்.

    பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா 7ஆம் தேதி (புதன்கிழமை) 1.05 மணி முதல் 1.30 மணி வரை 25 நிமிடத்தில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்தது. இந்த நடவடிக்கைக்கு ஆபரேஷன் சிந்தூர் என பெயரிட்டது.

    எங்கள் மண்ணில் தாக்குதல் நடத்திய இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம் என பாகிஸ்தான் தெரிவித்தது. இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டதில் இருந்து எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்தி வருகிறது.

    நேற்றிரவு எல்லையில் துப்பாக்கிச்சூடு நடத்தி வந்த நிலையில், டிரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் மக்கள் வசிக்கும் இடங்கள், வழிபாட்டு தலங்கள், ராணுவ நிலைகள் ஆகியவற்றை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயற்சி செய்தது. இதை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தி முறியடித்தது.

    நேற்று நள்ளிரவு (வெள்ளிக்கிழமை 2.00 மணி) ஜம்மு-காஷ்மீர் காட்டுப்பகுதியில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இருதரப்பிலும் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஆந்திராவை சேரந்த முடவத் முரணி நாயக் என்ற ராணுவ வீரர் வீர மரணம் அடைந்தார். இவர் அக்னிவீர் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் இணைந்தார்.

    முரளி நாயக்கின் மரணம் அவரது தந்தையை உலுக்கியுள்ளது. ஏனென்றால் அவர் ஒரே மகன் ஆவார். இது தொடர்பாக அவரது தந்தை ஸ்ரீராம் நாயக் கூறியதாவது:-

    எனது மகன் நாட்டிற்காக உயிர் நீத்துள்ளான். அவர் நாட்டிற்காக சண்டையிட்டுள்ளார். என்னை ஏன் கவலையில் ஆழ்த்தியுள்ளது என்றால், அவர் எங்களுக்கு ஒரே மகன். நாங்கள் அவனை சார்ந்திருந்தோம். எங்களது ஆதரவு போய்விட்டது. தற்போது நானும் எனது மகனும் அனாதையாகிவிட்டோம். தீர்வு எதுவாக இருந்தாலும், அதை நான் நாட்டின் முடிவுக்கே விட்டுவிடுகிறேன். எந்த முடிவை எடுப்பது என்பது நாட்டைப் பொறுத்தது.

    இன்று காலை எனது மனைவி ஜோதி பாய்க்கு 9 மணியளவில் ராணுவ அதிகாரியிடம் இருந்து போன் வந்தது. அவர் இந்தியில் முரளி நாயக் உறவுப் பற்றி கேட்டார். அவர் முரளி நாயக் யார் என்று கேட்டார். எனது மனைவி, என்னுடைய மகன்தான் முரளி என்றார். அப்போது அந்த அதிகாரி என்னுடைய மனைவிடம் போனை என்னிடம் கொடுக்கச் சொன்னார். அவர் இந்தியில் பேசினார். அப்போது தனது மகன் வீர மரணம் அடைந்ததை தெரிவித்தார்" எனக் கூறினார்.

    முரளி நாயக் கடந்த 2022ஆம் ஆண்டு ராணுவத்தில் இணைந்தார். 3 வருடம் பணியாற்றிய நிலையில் வீர மரணம் அடைந்துள்ளார்.

    • முரளி நாயக் வீர மரணம் அடைந்த செய்தி மிகுந்த வருத்தம் அளிக்கிறது.
    • குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வருகிறது. எல்லை பகுதிகளில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது. பதிலுக்கு இந்திய ராணுவமும் தாக்குதல் நடத்தி வருகிறது.

    இந்த நிலையில், பாகிஸ்தான் நடத்திய தாக்குதலை முடிறயடித்தபோது இந்திய வீரர் முரளி நாயக் வீர மரணம் அடைந்துள்ளார்.

    வீர மரணமடைந்த முரளி நாயக் ஆந்திராவின் சத்ய சாய் மாவட்டத்தை சேர்ந்தவர். இதனை தொடர்ந்து அவரது மறைவுக்கு ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், முரளி நாயக் வீர மரணம் அடைந்த செய்தி மிகுந்த வருத்தம் அளிக்கிறது. நாட்டிற்காக தனது இன்னுயிரை ஈந்த முரளி நாயக்கிற்கு எனது அஞ்சலிகள். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். 



    • வழித்தடத்தில் போக்குவரத்தை போலீசார் நிறுத்தி வைத்துள்ளனர்.
    • சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் கர்னூலின் புறநகர்ப் பகுதியான துபாடு அருகே உள்ளபெங்களூரு ஐதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் 6 மீட்டர் அகலம் 16 மீட்டர் ஆழமும் கொண்ட திடீர் பள்ளம் ஏற்பட்டது.

    அந்த நேரத்தில் வேகமாக வந்த கார் சாலையின் நடுவில் சாய்வதற்கு பதிலாக ஒரு பக்கமாக சாய்ந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    இந்த வழித்தடத்தில் போக்குவரத்தை போலீசார் நிறுத்தி வைத்துள்ளனர்.

    சில வாகனங்கள் மாற்றுப் பாதைகளில் திருப்பி விடப்பட்டாலும் பெரும்பாலான வாகனங்கள் நேற்று இரவு 8 மணி வரை அங்கேயே சிக்கித் தவித்தன.

    இந்தப் பகுதியில் சுரங்கப்பாதை பணிகள் நடந்து வருகிறது. இதன் காரணமாக சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டதாக தெரிவித்தனர். அதனை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

    • நமது ஆயுதப்படைகள் பாராட்டத்தக்க செயலை செய்துள்ளது.
    • இது நீடித்த போருக்கான நேரம். இஸ்ரேலை போல இந்தியா தீர்க்கமான தாக்குதல் நடத்தி, பாகிஸ்தானுக்கு பாடம் கற்பிக்க வேண்டும்.

    பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக நள்ளிரவு 1.05 முதல் 1.30 மணி வரை சுமார் 25 நிமிடத்திற்குள் இந்தியாவின் முப்படைகளும் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து 24 தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

    பயங்கரவாதிகளை ஒழிக்க மத்திய அரசுடன் ஒன்றிணைந்து நிற்போம் என எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் ஆந்திர மாநில துணை முதல்வரான பவன் கல்யாண், பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளை வீழ்த்துவதில் இஸ்ரேலை முன்மாதிரியாக கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பவன் கல்யாண் கூறியதாவது:-

    நமது ஆயுதப்படைகள் பாராட்டத்தக்க செயலை செய்துள்ளது. இது நீடித்த போருக்கான நேரம். இஸ்ரேலை போல இந்தியா தீர்க்கமான தாக்குதல் நடத்தி, பாகிஸ்தானுக்கு பாடம் கற்பிக்க வேண்டும். ஆபரேஷன் சிந்தூர் பெருமைக்குரிய தருணம். காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதி. பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் தொடர்ந்து இந்தியர்கள் மீது தாக்குதல் நடத்துவது கண்டனத்திற்குரியது.

    இவ்வாறு பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.

    • சுமார் 60 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசியது.
    • 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு இருந்த வாழை, மா மரங்கள், பப்பாளி, சோளம், நெல் சேதமடைந்தது.

    ஆந்திராவில் உள்ள சித்தூர், பிரகாசம், குண்டூர், கிருஷ்ணா, கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்று காலை முதல் இரவு 7 மணி வரை சூறாவளி காற்று, இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

    சுமார் 60 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசியது.

    இதனால் ஆங்காங்கே மரங்கள் வேரோடு சாய்ந்தன. 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு இருந்த வாழை, மா மரங்கள், பப்பாளி, சோளம், நெல் சேதமடைந்தது. ஸ்ரீகாகுளத்தில் பைக்கில் சென்று கொண்டிருந்த சந்திப் என்பவர் மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    திருப்பதி சம்சுக்தி நகரில் டிரான்ஸ்பார்மர் பழுது பார்த்துக் கொண்டிருந்த மின்வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கி இறந்தார். இதே போல் மாநிலம் முழுவதும் இடி மின்னல் தாக்கியதில் 8 பேர் உயிரிழந்தனர்.

    • பக்தர்களின் சிரமத்தை போக்குவதற்காக நன்கொடையாளர்கள் மூலம் 20 மின்சார பஸ்கள் வாங்கப்படுகிறது.
    • நேற்று வார இறுதி விடுமுறை நாள் என்பதால் அதிக அளவில் கூட்டம் இருந்தது.

    திருப்பதிக்கு சாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் அலிபிரி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு நடைபாதைகளில் மலைக்கு நடந்து வருகின்றனர்.

    திருப்பதி பஸ் நிலையம், ரெயில் நிலையத்தில் இருந்து நடைபாதைக்கு ஆட்டோ, கார், வேன் மூலம் வரும் பக்தர்களிடம் அதிக அளவில் கட்டணம் வசூலிக்கின்றனர்.

    பக்தர்களின் சிரமத்தை போக்குவதற்காக நன்கொடையாளர்கள் மூலம் 20 மின்சார பஸ்கள் வாங்கப்படுகிறது. பஸ் மற்றும் ரெயில் நிலையத்தில் இருந்து அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு நடைபாதைக்கு இலவசமாக பஸ்கள் இயக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இந்த செய்தி நடைபாதை பக்தர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    திருப்பதியில் நேற்று 83,380 பேர் தரிசனம் செய்தனர். 27,936 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3.35 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    நேற்று வார இறுதி விடுமுறை நாள் என்பதால் அதிக அளவில் கூட்டம் இருந்தது. இன்று காலை பக்தர்கள் கூட்டம் வெகுவாக குறைந்தது. பக்தர்கள் நேரடியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இதனால் இன்று காலை முதல் பக்தர்கள் 4 மணி நேரத்தில் தரிசனம் செய்து வருகின்றனர்.

    • அமராவதியை வெறும் நகரமாக மட்டுமல்லாமல், நிறைவேறிய கனவாகவும் நான் பார்க்கிறேன்.
    • மரபும் வளர்ச்சியும் இணைந்த ஒரு இடமாக அமராவதி உள்ளது.

    பிரதமர் மோடி இன்று மாலை ஆந்திர பிரதேச மாநிலம் அமராவதி சென்றார். நின்று போன அமராவதி திட்டத்தை மீண்டும் தொடங்கி வைத்தார். மொத்தமாக 58 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சயில் பிரதமர் பேசியதாவது:-

    * அமராவதியை வெறும் நகரமாக மட்டுமல்லாமல், நிறைவேறிய கனவாகவும் நான் பார்க்கிறேன்

    * மரபும் வளர்ச்சியும் இணைந்த ஒரு இடமாக அமராவதி உள்ளது.

    * ஆந்திராவில் இன்று தொடங்கப்பட்ட ரூ.60,000 கோடி மதிப்பிலான திட்டங்கள் விக்சித் பாரத்திற்கான அடித்தளம்

    * அமராவதி வெறும் நகரம் அல்ல. எனர்ஜழி, ஆந்திராவை 'நவீன பிரதேசமாக' மாற்றும்.

    * ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பெரிய அளவிலான திட்டங்களை விரைவாக செயல்படுத்தும் திறன் கொண்டவர்

    * அமராவதி எதிர்காலத்தில் ஐடி, செயற்கை நுண்ணறிவு, பசுமை ஆற்றல், கல்வி மற்றும் சுகாதாரம் ஆகியவற்றில் முன்னணி நகரமாக மாறும்.

    * உள்கட்டமைப்பு மிக வேகமாக நவீனமயமாக்கப்படும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

    இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

    • ரெயிலில் பயணிகளின் டிக்கெட்டுடன், உணவிற்கும் சேர்த்து கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.
    • புகார் அளித்த பயணிக்கு மாற்று உணவாக நூடுல்ஸ் வழங்கப்பட்டது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், திருப்பதியில் இருந்து செகந்திராபாத்திற்கு தினமும் வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுகிறது.

    குறைந்த நேரத்தில் பயணிகளை குறிப்பிட்ட இடத்திற்கு கொண்டு செல்வதால் இந்த ரெயிலில் பயணம் செய்ய பயணிகள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இந்த ரெயிலில் பயணிகளின் டிக்கெட்டுடன், உணவிற்கும் சேர்த்து கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.

    நேற்று திருப்பதியில் இருந்து செகந்திராபாத்திற்கு வந்தே பாரத் ரெயில் சென்று கொண்டு இருந்தது. அப்போது பயணி ஒருவருக்கு வழங்கப்பட்ட சிக்கன் குழம்பில் புழுக்கள் நெளிந்தன.

    இதனைக் கண்ட பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகளிடம் பயணிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் எழுத்து மூலமாக புகார் அளித்தனர்.

    இதையடுத்து புகார் அளித்த பயணிக்கு மாற்று உணவாக நூடுல்ஸ் வழங்கப்பட்டது. உணவுக்காக பயணிகளிடம் அதிக கட்டணம் வசூல் செய்யும் ரெயில்வே நிர்வாகம் பயணிகளுக்கு தரமான உணவு வழங்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வீடு முழுவதும் இடிந்து தரைமட்டமானது.
    • விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆந்திரா மாநிலம் நெல்லூரில் நாராயணா மருத்துவ கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் 2-ம் ஆண்டு படிக்கும் மாணவியின் சகோதரி நிச்சயதார்த்தம் நேற்று புச்சி ரெட்டிப்பாலத்தில் நடந்தது.

    இந்த நிகழ்ச்சியில் மாணவியுடன் படிக்கும் சக மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிந்து 6 மாணவர்கள் காரில் மீண்டும் கல்லூரிக்கு சென்று கொண்டு இருந்தனர்.

    நெல்லூர் அடுத்த போத்திரி ரொட்டி பாலம் அருகே உள்ள பெட்ரோல் பங்க் அருகே கார் வேகமாக சென்றது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் அங்கிருந்த வீட்டின் மீது பயங்கர வேகத்தில் மோதியது. இதில் வீடு முழுவதும் இடிந்து தரைமட்டமானது.

    வீட்டில் இருந்த வெங்கட ரமணய்யா (வயது 68)என்பவர் இடிபாடுகளில் சிக்கி இறந்தார். மேலும் காரில் இருந்த 2 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக நெல்லூரில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் அங்கு சிகிச்சை பலனின்றி 3 மாணவர்கள் இறந்தனர்.

    மாணவர்கள் இறந்தது குறித்து தகவல் அறிந்த சக மாணவர்கள் ஆஸ்பத்திரி முன்பாக குவிந்தனர். சற்று முன்பு தங்களுடன் சந்தோஷமாக இருந்தவர்கள் இறந்ததால் மாணவர்களின் நண்பர்கள் கதறி துடித்தனர்.

    இந்த விபத்துக்கு ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, ஆளுநர் அப்துல் நசீர் மற்றும் முன்னாள் முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோர் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர்.

    விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • சம்பவ இடத்திற்கு ஆந்திர உள்துறை அமைச்சர் நேரில் வந்து மீட்பு பணிகளை பார்வையிட்டார்.
    • இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் சிம்மாச்சலத்தில் உள்ள கோவிலில் புதிதாக கட்டப்பட்ட சுவர் இன்று அதிகாலை இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.

    வராஹலட்சுமி நரசிம்ம சுவாமியின் நிஜரூப தரிசனத்திற்காக பக்தர்கள் காத்திருந்த போது ரூ.300 டிக்கெட் வழங்கும் வரிசையில் அமைக்கப்பட்டு இருந்த 20 அடி நீள சுவர் இடிந்து விழுந்தது.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் மீட்புப் பணியை மேற்கொண்டனர். மேலும் சம்பவ இடத்திற்கு ஆந்திர உள்துறை அமைச்சர் நேரில் வந்து மீட்பு பணிகளை பார்வையிட்டார்.



    விபத்து குறித்து அதிகாரிகள் கூறுகையில், கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் நீடித்த பலத்த மழை மற்றும் பலத்த காற்று காரணமாக சுவர் இடிந்து விழுந்ததாக கூறினர்.

    இதற்கிடையே, இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.

    ×