என் மலர்
இந்தியா

இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக திருப்பதி மலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
- இரு நாடுகளின் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது.
- இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 10 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
திருப்பதி:
காஷ்மீர் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் இரு நாடுகளின் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது.
பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஆந்திர மாநில டி.ஜி.பி ஹரிஷ் குமார் குப்தா உத்தரவின் பேரில் திருப்பதி போலீஸ் சூப்பிரண்டு ஹரிஷ் வர்தன் ராஜு தலைமையில் திருப்பதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
மேலும் ஆக்டோபஸ் படை, போலீசார், தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 120 பேர் கொண்ட குழுவினர் சந்தேகத்திற்கு இடமான நபர்கள், முக்கிய இடங்கள், நெரிசலான பகுதிகளில் 4 குழுக்களாக பிரிந்து சோதனை நடத்தினர்.
பத்மாவதி தாயார் விருந்தினர் மாளிகை, 4 மாட விதிகள், கொல்ல மண்டபம், வராக சாமி கோவில், வெங்கடேஸ்வரா ஓய்வு இல்லம், ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை, அலிபிரி உள்ளிட்ட இடங்களில் 16 மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் கருவிகளுடன் சோதனை செய்தனர். அலிபிரியில் பக்தர்களின் உடைமைகள் மற்றும் வாகனங்களை முழுமையாக சோதனை நடத்திய பிறகு திருப்பதி மலைக்கு வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. திருப்பதி மலை முழுவதும் துப்பாக்கி ஏந்திய ஆக்டோபஸ் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பதியில் நேற்று 68,213 பேர் தரிசனம் செய்தனர். 29, 635 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.45 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 10 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.






