என் மலர்
இந்தியா

ஆந்திராவில் வீட்டின் மீது கார் மோதி மருத்துவ மாணவர்கள் உள்பட 6 பேர் பலி
- வீடு முழுவதும் இடிந்து தரைமட்டமானது.
- விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆந்திரா மாநிலம் நெல்லூரில் நாராயணா மருத்துவ கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் 2-ம் ஆண்டு படிக்கும் மாணவியின் சகோதரி நிச்சயதார்த்தம் நேற்று புச்சி ரெட்டிப்பாலத்தில் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் மாணவியுடன் படிக்கும் சக மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிந்து 6 மாணவர்கள் காரில் மீண்டும் கல்லூரிக்கு சென்று கொண்டு இருந்தனர்.
நெல்லூர் அடுத்த போத்திரி ரொட்டி பாலம் அருகே உள்ள பெட்ரோல் பங்க் அருகே கார் வேகமாக சென்றது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் அங்கிருந்த வீட்டின் மீது பயங்கர வேகத்தில் மோதியது. இதில் வீடு முழுவதும் இடிந்து தரைமட்டமானது.
வீட்டில் இருந்த வெங்கட ரமணய்யா (வயது 68)என்பவர் இடிபாடுகளில் சிக்கி இறந்தார். மேலும் காரில் இருந்த 2 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக நெல்லூரில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் அங்கு சிகிச்சை பலனின்றி 3 மாணவர்கள் இறந்தனர்.
மாணவர்கள் இறந்தது குறித்து தகவல் அறிந்த சக மாணவர்கள் ஆஸ்பத்திரி முன்பாக குவிந்தனர். சற்று முன்பு தங்களுடன் சந்தோஷமாக இருந்தவர்கள் இறந்ததால் மாணவர்களின் நண்பர்கள் கதறி துடித்தனர்.
இந்த விபத்துக்கு ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, ஆளுநர் அப்துல் நசீர் மற்றும் முன்னாள் முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோர் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர்.
விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






