என் மலர்
இந்தியா
- விருப்பப்பட்டியலை தயாரித்து மேலிடத்திற்கு அனுப்ப நயினார் நாகேந்திரன் முடிவு செய்துள்ளார்.
- விருதுநகரில் போட்டியிட சரத்குமார் விருப்பம் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் கட்சி தலைவர்கள் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகிகளை தொடர்பு கொண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட விருப்பத்தை கேட்டறிந்து வருகிறார். விருப்பப்பட்டியலை தயாரித்து மேலிடத்திற்கு அனுப்ப அவர் முடிவு செய்துள்ளார்.
பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலையை தொடர்பு கொண்டு நயினார் நாகேந்திரன் பேசி உள்ளார். அப்போது, சட்டசபை தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை என அண்ணாமலை கூறிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழிசை, சரத்குமார் போன்றோர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர். விருதுநகரில் போட்டியிட சரத்குமார் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், சென்னையில் உள்ள ஒரு தொகுதியில் போட்டியிட தமிழிசை விருப்பம் தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
- கவியருவியின் நீர்பிடிப்பு பகுதிகளான வால்பாறை சக்கி, தலனார் எஸ்டேட் பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
- கவியருவியில் தண்ணீர் வரத்து சீரானதை தொடர்ந்து வனத்துறையினர் தடுப்பு வேலிகளை சீரமைத்தனர்.
பொள்ளாச்சி:
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆழியார் பகுதியில் கவியருவி உள்ளது.
இந்த கவியருவிக்கு கோவை மாவட்டம் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களான திருப்பூர், ஈரோடு உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள்.
அவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகள் தங்கள் குடும்பத்தினருடன் கவியருவியில் உற்சாக குளியல் போட்டு விட்டு, அருகே உள்ள ஆழியார் அணை மற்றும் பூங்காவை சுற்றி பார்த்து செல்வார்கள்.
வார விடுமுறை நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகமாக இருக்கும்.
இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததால் பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை மழை பெய்தது.
குறிப்பாக கவியருவியின் நீர்பிடிப்பு பகுதிகளான வால்பாறை சக்கி, தலனார் எஸ்டேட் பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
இதன் காரணமாக கவியருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.
அருவியில் அமைக்கப்பட்ட தடுப்பு வேலிகளும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.
வெள்ளப்பெருக்கை அடுத்து கவியருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறை தடைவிதித்தது.
தற்போது மேற்குதொடர்ச்சி மலை பகுதிகளில் மழை குறைந்துள்ளது. கவியருவியின் நீர்பிடிப்பு பகுதிகளான சக்தி, தலனார் எஸ்டேட் பகுதிகளில் மழை குறைந்துள்ளதால், கவியருவிக்கு தண்ணீர் வரத்து சீராக உள்ளது.
கவியருவியில் தண்ணீர் வரத்து சீரானதை தொடர்ந்து வனத்துறையினர் தடுப்பு வேலிகளை சீரமைத்தனர். நேற்று மதியம் 1 மணி முதல் கவியருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். ஆழியார் அணை பகுதிக்கு சுற்றுலா வந்தவர்கள், அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டதை அறிந்து கவியருவிக்கு சென்று குளித்து மகிழ்ந்தனர். இன்றும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் தங்கள் குடும்பத்தினர், நண்பர்களுடன் கவியருவிக்கு வந்து குளித்து மகிழ்ந்து சென்றனர். நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை தினங்கள் என்பதால் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோவையில் உள்ள மிக முக்கியமான சுற்றுலா தலங்களில் கோவை குற்றாலமும் ஒன்று. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் கோவை குற்றாலத்திற்கு வருவார்கள்.
இங்கு நிலவும் சீதோஷ்ண நிலை மற்றும் வனத்தில் உள்ள வனவிலங்குகளை பார்ப்பதுடன், அருவியில் உற்சாக குளியல் போட்டு மகிழ்ந்து செல்கின்றனர்.
கடந்த மே மாதம் இறுதியில் மழை பெய்ததால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து அருவிக்கு செல்ல வனத்துறை தடைவிதித்தது. மீண்டும் ஜூலை 11-ந் தேதி திறக்கப்பட்டது. ஆனால் கடந்த 23-ந் தேதி பெய்த மழை காரணமாக கோவை குற்றால அருவியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அருவிக்கு செல்ல வனத்துறையினர் தடைவிதித்தனர். தற்போது அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால், ஒரு வாரத்திற்கு பிறகு நேற்று முதல் கோவை குற்றால அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.
இதையடுத்து கோவை குற்றாலத்திற்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்தனர். அவர்கள் அருவியில் குளித்து மகிழ்ந்து, அங்கு நிலவும் சீதோஷ்ண நிலை மற்றும் இயற்கை காட்சிகளை கண்டு ரசித்தனர்.
- சுகம் சவுத்ரி தனது பட்டாலியன் தலைமையகமான பந்த்சௌக்கில் இருந்து திடீரென காணாமல் போனார்.
- பந்தசௌக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகர் முகாமில் இருந்து எல்லைப் பாதுகாப்பு படை (BSF) வீரர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
தகவலின்படி, நேற்று (ஜூலை 31) இரவு, BSF வீரர் சுகம் சவுத்ரி தனது பட்டாலியன் தலைமையகமான பந்த்சௌக்கில் இருந்து திடீரென காணாமல் போனார்.
BSF உடனடியாக சுற்றியுள்ள பகுதிகளில் தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கியது. ஆனால் அந்த அவர் குறித்த எந்த தடயமும் கிடைக்கவில்லை.
இந்த சம்பவத்திற்குப் பிறகு, பந்தசௌக் காவல் நிலையத்தில் அவரை காணவில்லை என்று புகார் அளிக்கப்பட்டது.
காவல்துறையினரும் எல்லைப் பாதுகாப்புப் படையினரும் இணைந்து அவரை தேடி வருகின்றனர்.
- 5,300 பேர் நிலுவைத் தொகையை செலுத்தியதாகவும், ஆனால் அவர்களுக்கு இன்னமும் பத்திரம் வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
- வட்டித் தள்ளுபடி திட்டத்தினை தமிழ்நாடு அரசு அறிவிக்கும் என்று சங்க உறுப்பினர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
சென்னை:
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வீட்டு வசதி சங்கங்களில் நிலுவையில் உள்ள கடனை வசூலிக்க அவ்வப்போது அபராத வட்டி, இ.எம்.ஐ. வட்டி மற்றும் இதர வட்டிகளை தள்ளுபடி செய்யும் திட்டம் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்படுவது வழக்கம். இதன்மூலம் சங்க உறுப்பினர்கள் பயனடைந்து வந்தனர். கடைசியாக 2023-ம் ஆண்டு இதுபோன்ற வட்டித் தள்ளுபடி திட்டம் அறிவிக்கப்பட்டதாகவும், இந்தத் திட்டத்தின் கீழ் 5,300 பேர் நிலுவைத் தொகையை செலுத்தியதாகவும், ஆனால் அவர்களுக்கு இன்னமும் பத்திரம் வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்தச் சூழ்நிலையில், தற்போது நிலுவையிலுள்ள ஆயிரம் கோடி ரூபாய் கடனை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும்; ஆனால் நிலுவைக் கடனை அபராத வட்டி, இ.எம்.ஐ. வட்டி மற்றும் இதர வட்டிகளுடன் திருப்பிச் செலுத்த சங்க உறுப்பினர்கள் தயாராக இல்லை என்றும் கூறப்படுகிறது. வட்டித் தள்ளுபடி திட்டத்தினை தமிழ்நாடு அரசு அறிவிக்கும் என்று சங்க உறுப்பினர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
கூட்டுறவு வீட்டு வசதி சங்க உறுப்பினர்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும் வகையில், அபராத வட்டி, இ.எம்.ஐ. வட்டி மற்றும் இதர வட்டி தள்ளுபடி திட்டத்தினை அறிவிக்கவும், ஏற்கெனவே நிலுவைத் தொகையை செலுத்தியவர்களுக்கு பத்திரங்களை விரைந்து வழங்கவும் முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நலம் குறித்து வைகோ விசாரித்தார்.
- மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு மீண்டும் பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்கும்.
சென்னை :
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மற்றும் முதன்மைச் செயலாளர் துரை வைகோ ஆகியோர் சந்தித்து பேசினர்.
இச்சந்திப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நலம் குறித்து வைகோ விசாரித்தார். சந்திப்பின் போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடன் இருந்தார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வைகோ, கூட்டணி அரசு என்ற பேச்சுக்கே இடமில்லை. மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு மீண்டும் பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்கும். பா.ஜ.க. உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகளுடன் எந்த காலத்திலும் கூட்டணி இல்லை என்றார்.
இதனிடையே, தி.மு.க. கூட்டணிக்கு தே.மு.தி.க. வந்தால் ம.தி.மு.க. வெளியேறும் என்ற தகவலுக்கு வைகோ மறுப்பு தெரிவித்தார்.
- ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டி பணம் மிரட்டல் அழைப்பு வந்தது.
- குருமூர்த்தி மற்றும் கோபாலகிருஷ்ணா ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஹுலிமாவு பகுதியை சேர்ந்த நிஷித் (13 வயது) என்ற சிறுவன் கிறிஸ்ட் பள்ளியில் 8-ஆம் வகுப்பு பயின்று வந்தான்
இந்நிலையில் புதன்கிழமை மாலை, நிஷித் தனது டியூஷன் வகுப்பில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது கடத்தப்பட்டான்.
இரவு 8 மணி தாண்டியும் நிஷித் வீடு திரும்பாததால், தனியார் கல்லூரியில் உதவிப் பேராசிரியராயான நிஷித்தின் தந்தை ஹுலிமாவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
விசாரணையில், சிறுவனின் சைக்கிள் அரகேர் பகுதியில் உள்ள புரோமிலி பூங்கா அருகே கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
சிறுவன் காணாமல் போன சில மணி நேரங்களுக்குப் பிறகு, நிஷித்தின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டி பணம் மிரட்டல் போன் அழைப்பு வந்தது.
இதற்கிடையே நேற்று (வியாழக்கிழமை) மாலை, கக்கலிபுரா சாலைக்கு அருகிலுள்ள ஒரு வெறிச்சோடிய பகுதியில் நிஷித்தின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. சிறுவனின் உடல் பாதி எரிந்த நிலையில், காலணிகள் மற்றும் உடைகள் கருகிய நிலையில் கிடந்துள்ளது.
இந்நிலையில் சிறுவனை கடத்தி கொலை செய்த குற்றசாட்டில் குருமூர்த்தி மற்றும் கோபாலகிருஷ்ணா என்ற இருவரை போலீசார் நேற்று இரவு பன்னர்கட்டா காவல் நிலைய எல்லைக்குள் வைத்து மடக்கினர்.
இருவரும், கைது செய்யும்போது, போலீசாரை கொடிய ஆயுதங்களால் தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. எச்சரிக்கை விடுத்தும் அவர்கள் தாக்குதலைத் தொடர்ந்ததால், போலீசார் தற்காப்புக்காக ஆறு முறை சுட்டனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, காயமடைந்த குருமூர்த்தி மற்றும் கோபாலகிருஷ்ணா இருவரும் ஆரம்ப சிகிச்சைகளுக்காக ஜெயநகர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

- தனது அக்காள் சுபாஷினியுடனான காதலை கைவிடாததால் கவினை வெட்டிக்கொன்றதாக போலீசாரிடம் சுர்ஜித் தெரிவித்தார்.
- கவின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை:
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி தமிழ்செல்வி. ஆசிரியை. இவர்களது மகன் கவின் செல்வ கணேஷ் (வயது 27). இவர் சென்னையில் ஐ.டி.ஊழியராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் கடந்த 27-ந்தேதி தனது தாத்தாவை பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியில் உள்ள சித்த மருத்துவமனைக்கு அழைத்து வந்தபோது அதே பகுதியை சேர்ந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தம்பதியான சரவணன்-கிருஷ்ண குமாரி ஆகியோரின் மகன் சுர்ஜித் (24) என்பவரால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக பாளையங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் வழக்குப்பதிவு செய்தார். உதவி கமிஷனர் சுரேஷ் விசாரணை நடத்தியதில் தனது சகோதரி சுபாஷினியுடனான காதலை கைவிட வலியுறுத்தி அதனை கேட்காத காரணத்தினால் கவினை சுர்ஜித் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
இதனிடையே கொலைக்கு தூண்டுதலாக சுர்ஜித்தின் பெற்றோர் செயல்பட்டதாகவும், அவர்களை கைது செய்யும் வரை கவின் உடலை பெற்றுக்கொள்ள மாட்டோம் எனவும் உறவினர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர்கள் பெயர்களும் வழக்கில் சேர்க்கப்பட்டு நேற்று முன்தினம் சரவணன் கைது செய்யப்பட்டார்.
இதனிடையே இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்க தமிழக அரசு உத்தரவிட்டது. தொடர்ந்து வழக்கு குறித்த ஆவணங்கள் சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. ராஜ்குமார் நவ்ரோஜிடம் ஒப்படைக்கப்பட்டு நேற்று முதலே சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர்.
இதனிடையே கவினை காதலித்ததாகவும், அது தனது பெற்றோருக்கு தெரியாது எனவும் சுபாஷினி வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் கவின் உடலை பெற்றுக்கொள்ள அமைச்சர்கள் கே.என்.நேரு, அனிதா ராதாகிருஷ்ணன், கனிமொழி எம்.பி., ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. என பல்வேறு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும் கவின் பெற்றோரை சந்தித்து பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், த.ம.மு.க. ஜான்பாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் என பல்வேறு தரப்பினரும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
தொடர்ந்து 5-வது நாளாக நேற்றும் கவின் உடலை வாங்க அவரது உறவினர்கள் மறுப்பு தெரிவித்து வந்த நிலையில், இன்று காலை அவரது உடலை பெற்றுக்கொள்ள கவின் உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர்.
அதன்படி கவினின் தந்தை சந்திரசேகர், சகோதரர் பிரவீன், தாய்மாமா இசக்கிமுத்து மற்றும் உறவினர்கள் பாளையங்கோட்டையில் உள்ள பிரேத பரிசோதனை கூடத்திற்கு இன்று காலையில் வந்தனர். அவர்களிடம் கவின் உடல் ஒப்படைக்கப்பட்டது.
இதனிடையே சி.பி.சி.ஐ.டி. போலீசார் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் சரிபார்ப்பு, ஆவணங்கள் எழுதும் பணிகளை மேற்கொள்ள உள்ளதாகவும், கவின் உடலுக்கு இறுதிச்சடங்குகள் முடிவடைந்த பின்னர் மேற்கொண்டு விசாரணைகள் தொடங்கும் எனவும் சி.பி.சி.ஐ.டி. வட்டாரங்கள் தெரிவித்தன.
- ஓ.பன்னீர்செல்வத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாசல் வரை வந்து வரவேற்று அழைத்து சென்றார்.
- இன்று காலையிலும் நடைபயிற்சி சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஓ.பன்னீர் செல்வம் சந்தித்து பேசினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஏற்பட்ட லேசான தலை சுற்றலை தொடர்ந்து சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை குறித்து பலரும் விசாரித்தனர். இதனிடையே, அரசு பணிகளை தொடர்ந்து கவனித்து வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 27-ந்தேதி மாலை வீடு திருப்பினார். இதையடுத்து வீட்டில் ஓய்வில் இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்திற்கு வந்து பணிகளை தொடர்ந்து வருகிறார்.
இதனிடையே, மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேற்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பிரேமலதா ஆகியோர் சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
நேற்று காலை அடையாறு பகுதியில் நடைபயிற்சி சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசியதுடன் அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்து பேசினார். ஓ.பன்னீர்செல்வத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாசல் வரை வந்து வரவேற்று அழைத்து சென்றார். இதனை தொடர்ந்து இன்று காலையிலும் நடைபயிற்சி சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஓ.பன்னீர் செல்வம் சந்தித்து பேசினார்.
இதனை தொடர்ந்து, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியானது.
இதுதொடர்பாக ராமதாசிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க நேரம் கேட்கவில்லை என்று தெரிவித்தார்.
அடுத்து நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை நோக்கி அரசியல் கட்சிகள் பணியாற்றி வரும் நிலையில், அதிமுக- பாஜக கூட்டணி தலைவர்கள் எங்கள் கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் இணையும் என்றும் தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பும் விடுத்து வருகின்றனர். இதற்கெல்லம் பதில் அளிக்காமல் இருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டணி விவகாரத்தில் சத்தமில்லாமல் வேலை பார்ப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
- மருத்துவ முகாம்களில் சோதனை முடிவுகள் அன்று மாலையே அளிக்கப்படும்.
- சுகாதாரத்துறை திட்டமாக இருந்தாலும் அனைத்து துறைகளும் இணைந்து செயல்பட உள்ளன.
சென்னை:
சென்னையில் 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டத்தை நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். தமிழ்நாடு முழுவதும் 1,256 முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இதயம், அறுவை சிகிச்சை, பொது மருத்துவ நிபுணர்கள் இந்த முகாம்களில் பங்கேற்கின்றனர்.
இந்த நிலையில், முதலமைச்சர் நாளை தொடங்கி வைக்கும் 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டத்தில் அனைத்து துறைகளும் இணைந்து செயல்படும் என்று கூடுதல் தலைமைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது:-
* சென்னையில் 15 மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். ஒரு வட்டாரத்திற்கு 3 மருத்துவ முகாம்கள் வீதம் 1164 மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்.
* ஒவ்வொரு மாவட்டத்திலும் வாரந்தோறும் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும்.
* மருத்துவ முகாம்களில் சோதனை முடிவுகள் அன்று மாலையே அளிக்கப்படும்
* சுகாதாரத்துறை திட்டமாக இருந்தாலும் அனைத்து துறைகளும் இணைந்து செயல்பட உள்ளன.
* நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் மக்கள் பிரதிநிதிகளும் பங்கேற்பர் .
* உப்பு, சர்க்கரை, எண்ணெயை சற்று குறை என்ற விழிப்புணர்வு நிகழ்வுகளும் முகாம்களில் நடத்தப்படும் என்றார்.
- எதிர்பாராதவிதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
- மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட முத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
வையம்பட்டி:
கரூர் மாவட்டம், கடவூர் அருகே உள்ள வாழ்வார்மங்களம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 62). இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். மேலவெளியூரை சேர்ந்தவர் முத்து (67). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார்.
இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் வையம்பட்டி அருகே உள்ள தேக்கமலை கோவிலில் நடைபெற்ற விருந்தில் கலந்து கொண்டு கடவூர் செல்வதற்காக திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வந்தனர். தேக்கமலை கோவில்பட்டி பிரிவு சாலை அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிளில் தாளகுளத்துப் பட்டியை சேர்ந்த வடிவேல் (39) என்பவர் வந்தார்.
எதிர்பாராதவிதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் முருகேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். முத்து, வடிவேல் ஆகிய இருவரும் பலத்த காயம் அடைந்தனர்.
அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட முத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து வையம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் அவரிடம் சிறிதும் இல்லை என்று அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர்.
- இரு மாதங்களில் இரு மாணவர்கள் மர்மமான முறையில் உயிரிழந்தது இயல்பானதாகத் தோன்றவில்லை.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் துவாக்குடியில் செயல்பட்டு வரும் திருச்சி மாவட்ட அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயின்று வந்த வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு வட்டம் எம்.வி.குப்பம் கிராமத்தைச் சேர்ந்த யுவராஜ் என்ற மாணவர், அவரது விடுதி அறையில் மர்மமான முறையில் உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சி அடைந்தேன். யுவராஜை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாணவர் யுவராஜ் எவ்வாறு உயிரிழந்தார் என்பது தொடர்பாக ஆயிரமாயிரம் மர்மங்கள் எழுந்துள்ள நிலையில், அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி, மாணவனின் உயிரிழப்பை மூடி மறைக்க முயற்சிகள் நடக்கின்றன. மாணவர் யுவராஜ் அவரது விடுதி அறையின் கதவைப் பூட்டிக் கொண்டு, கேபிள் ஒயரைக் கொண்டு மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகத்தின் சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இது அப்பட்டமான பொய் என்றும், அவ்வாறு நடப்பதற்கு வாய்ப்பே இல்லை என்றும் கூறப்படுகிறது.
துவாக்குடி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த திருவள்ளூரைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவி கிருத்திகா கடந்த ஜூன் 11-ஆம் நாள் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாயின. அதைத் தொடர்ந்து அனைத்து அறைகளிலும் உள்புறமாக தாழிடும் வசதி அகற்றப்பட்டு விட்டதாகக் கூறப்படுகிறது. அவ்வாறு இருக்கும்போது மாணவர் யுவராஜ் எவ்வாறு விடுதி அறையின் கதவை உள்புறமாக பூட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டிருக்க முடியும்? என்று சக மானவர்களும், யுவராஜின் பெற்றோரும் எழுப்பும் வினாக்களுக்கும் பள்ளி நிர்வாகத்திடமிருந்து எந்த பதிலும் இல்லை.
அதுமட்டுமின்றி, மாணவர் யுவராஜ் மர்மமாக உயிரிழந்ததாகக் கூறப்படும் தினத்திற்கு முந்தைய நாள் இரவு, அவர் தமது தாய், தந்தையருடன் தொலைபேசியில் மகிழ்ச்சியாக உரையாடியிருக்கிறார். தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் அவரிடம் சிறிதும் இல்லை என்று அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர். இத்தகைய சூழலில் மாணவர் யுவராஜ் தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் தரப்பில் கூறப்படுவதை ஏற்க முடியவில்லை.
தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் மாதிரி பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. அரசு பள்ளிகளில் நன்கு படிக்கும் மாணவர்கள் மட்டும் தான் பல்வேறு தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு மாதிரி பள்ளிகளில் சேர்க்கப்படுவார்கள். அதிலும் குறிப்பாக இந்த மாதிரிப் பள்ளி, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் சொந்தத் தொகுதியில் அமைந்திருக்கிறது. இந்தப் பள்ளியை கடந்த மே மாதம் 8-ஆம் தேதி தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்கள். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பள்ளியில் அனைத்து சர்ச்சைகளுக்கும் அப்பாற்பட்டு, மாணவர்கள் மன மகிழ்ச்சியுடன் கல்வி கற்பதற்கான சூழல் உறுதி செய்யப்பட வேண்டும். ஆனால், அத்தகைய சூழல் அங்கு இல்லை.
திருவெறும்பூர் துவாக்குடி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் இரு மாதங்களில் இரு மாணவர்கள் மர்மமான முறையில் உயிரிழந்தது இயல்பானதாகத் தோன்றவில்லை. இதன் பின்னணியில் உள்ள உண்மைகள் வெளிக்கொண்டு வரப்பட வேண்டும். அதற்காக மாணவர் யுவராஜ் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். அத்துடன் மாணவர் யுவராஜின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சேத மதிப்பு உடனடியாக தெரியவில்லை.
- சேதமடைந்த வாழைகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க பாதிக்கப்பட்ட விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
மேட்டுப்பாளையம்:
மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை பேரூராட்சி லிங்காபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான காந்தவயல், மொக்கை மேடு, பழைய கூத்தாமண்டி பிரிவு, திம்மராயம்பாளையம் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் அதிகளவில் வாழை பயிரிடப்பட்டு விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தற்போது பவானி ஆறு, மாயாறு ஆறு ஆகிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரிக்கவே, ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
இதனால் பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதியிலும் நீர்மட்டமும் உயர்ந்து காணப்படுகிறது. இதனால் பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதியில் உள்ள லிங்காபுரம், காந்தவயல், மொக்கை மேடு, பழைய கூத்தாமண்டி பிரிவு, திம்மராயம்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள வாழை தோட்டங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
50 ஆயிரம் வாழைகள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. சேத மதிப்பு உடனடியாக தெரியவில்லை. சேதமடைந்த வாழைகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க பாதிக்கப்பட்ட விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.






