என் மலர்
செய்திகள்
தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
பா.ஜனதா கட்சி அத்தனை மொழிகளையும் மதிக்கின்ற கட்சி. மத்திய அரசு நீட் தேர்வை தமிழ் மொழியில் எழுத அனுமதித்திருப்பது பாராட்டுக்குரியது. ஆனால் சில அதிகாரிகளால் தவறு நடந்திருக்கிறது.
எந்த விதத்திலும் அதிகாரிகளின் தவறினால் மாணவர்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது. எனவே மாணவர்கள் பாதிக்கப்படாமல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
நான் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தை தொடர்பு கொண்டு மாணவர்கள் எந்த விதத்திலும் பாதிக்கப்படக்கூடாது என்று கோரிக்கை வைத்தேன். கோர்ட்டு உத்தரவு இன்னும் கையில் வரவில்லை. வந்ததும் தகுந்த நடவடிக்கை எடுக்கிறோம் என்று சொல்லி இருக்கிறார்கள்.

தி.மு.க.வினர் மற்ற கட்சிகளை எதிர்த்து இணைய தளத்தில் பதிவு செய்பவர்களுக்கு எப்படி அனுசரணையாக நடந்து கொண்டிருக்கிறார்கள் என்று ஒரு பத்திரிகையில் செய்தி வெளியாகி இருக்கிறது. மற்ற கட்சி தலைவர்களை கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாக்குகிறார்கள்.
ஊழல் குற்றச்சாட்டுக்களுக்காக பா.ஜனதா தலைவர்கள் யாரும் சிறை சென்றது கிடையாது. இதில் கேலி-கிண்டல் செய்ய என்ன இருக்கிறது?
தொண்டர்கள், நிர்வாகிகள் 15 ஆயிரம் பேர் கூடி மிகப்பெரிய மாநாட்டை நடத்திக் காட்டி இருக்கிறோம். எனவே மற்ற தலைவர்களை அனைவரும் மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். மற்ற கட்சிகளின் நடவடிக்கையை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.
தமிழகத்துக்கு வரும் ஒரு தலைவரை போங்க என்கிறார்கள். இது விருந்தோம்பல் ஆகுமா? நாங்கள் அப்படிப்பட்ட தரம் தாழ்ந்த அரசியலில் ஈடுபட மாட்டோம்.
தமிழகத்தில் ஊழல் நிறைந்திருக்கிறது என்று அமித்ஷா சொன்னதை திருநாவுக்கரசர் போன்றவர்கள் வேறு மாதிரி திசை திருப்பிக் கொண்டிருக்கிறார்கள். நம்மைப் பொறுத்தவரை நேர்மையான நிர்வாகம் தமிழகத்தில் வரவேண்டும். 50 வருடமாக தமிழகத்தில் நேர்மையான நிர்வாகம் இல்லை என்பதுதான் நமக்கு கவலையாக இருக்கிறது.
பிப்ரவரி 16-ந்தேதி எனது சுற்றுப்பயணத்தை தொடங்கி விட்டேன். அந்த சுற்றுப்பயணத்தில் நான் சந்தித்தவர்கள்தான் நேற்று முன்தினம் நடந்த கூட்டத்துக்கு வந்தார்கள். தேர்தல் வேலையை நாங்கள் ஆரம்பித்து விட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார். #BJP #TamilisaiSoundararajan
ஆரணி அருணகிரி சத்திரத்தில் அரசு நடுநிலைப்பள்ளி திறப்பு விழா இன்று நடந்தது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு கட்டிடத்தை திறந்து வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அரசு பள்ளிகளில் கழிவறைகளை சுத்தம் செய்ய ஆயிரம் வாகனங்கள் வாங்கப்பட உள்ளன. 20 பள்ளிகளுக்கு ஒரு வாகனம் என ஊழியர்கள் நியமிக்கப்பட்டு கழிவறைகள் சுத்தம் செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #TNMinister #Sengottaiyan
எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் மாநில, மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனை கரூரில் நடந்தது. கரூர் மாவட்ட பொறுப்பாளர் வி.கே.துரைசாமி தலைமை தாங்கினார். நகர செயலாளர் ஞானசேகரன், துணை செயலாளர் மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பொது செயலாளர் ஜெ.தீபா கலந்து கொண்டார். அப்போது, தனிக்கட்சி தொடங்கி அ.தி.மு.க.வை வழி நடத்துவதா? அல்லது எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து அ.தி.மு.க.வை வழிநடத்துவதா அல்லது தனிக்கட்சி தொடங்கி மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைப்பதா என 3 கேள்விகள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டன.
இதில் தங்கள் விருப்பத்தை தொண்டர்கள் மார்க் செய்து அளித்தனர். பின்னர் கூட்டத்தில் பேசிய பெரும்பாலான நிர்வாகிகள் அ.தி.மு.க.வை கைப்பற்றுவதே நோக்கமாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினர்.

பின்னர் ஜெ.தீபா நிருபர்களிடம் கூறியதாவது:-
பா.ஜ.க.வினர் தமிழகத்தை அவர்களது வீட்டு வேலைக்காரர்கள் போல் நடத்துகிறார்கள். பா.ஜ.க. ஆட்சி புரியும் மற்ற மாநிலங்களில் ஊழல்களே நடக்கவில்லையா? அதற்கு முதலில் அவர்கள் பதில் சொல்லட்டும். அ.தி.மு.க. பொது செயலாளர்களை தொண்டர்கள் தான் நேரடியாக தேர்வு செய்ய வேண்டும். ஆனால் எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகியோர் கட்சியின் சட்ட விதிகளை திருத்தி பதவியேற்றுள்ளனர். இது தவறு.
நான் அ.தி.மு.க. உறுப்பினர் இல்லை என்றாலும் ஜெயலலிதா வகித்த அனைத்து பதவிகளையும் ரத்த வாரிசு என்ற அடிப்படையில் சட்டபூர்வமாக நான் வகிக்க முடியும். ஓ.பி.எஸ், இ.பி.எஸ். கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்று கொண்டதை எதிர்த்து தேர்தல் ஆணையத்தில் சட்ட ரீதியாக போராடுவேன். ஜெயலலிதா விட்டு சென்ற பணிகளை தொடர அ.தி.மு. க.வை கைப்பற்றுவதே எனது நோக்கம். இதில் உறுதியாக இருப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார். #ADMK #Jayalalithaa #Deepa
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் மதுரை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
லோக் ஆயுக்தா சட்டம் தமிழக சட்டமன்றத்தில் அவசரமாக கொண்டுவரப்பட்டுள்ளது. இதுகுறித்து யாரிடமும் ஆலோசனை கேட்கவில்லை. அவசர கோலத்தில் கொண்டு வந்துள்ளனர்.
எந்த வகையான விதிகளோடு வைக்கப்பட்டு ஒரே நாளில் கொண்டு வரப்பட்டது என்பது தெரியவில்லை. அதனால் தி.மு.க., காங்கிரஸ் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தோம். லோக் ஆயுக்தா விசயத்தில் புதிய மாற்றங்கள், திருத்தங்கள் செய்து அமல்படுத்த வேண்டும்.

எனவே நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத்திற்கும் தமிழகத்தில் ஒரே நேரத்தில் தேர்தல் வரலாம். ஆனால் இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல் என்பது பண மதிப்பீடு போல் ஒரே இரவில் அறிவிக்க முடியாது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் தேசிய கட்சிகளுடனும்-மாநில கட்சிகளுடனும் பேசி முடிவு எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மதுரை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் அண்ணாநகரில் நடந்தது. இதில் திருநாவுக்கரசர் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கார்த்திகேயன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பி.ஜே.காமராஜ், செய்யதுபாபு, ராஜாஹசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
வாக்காளர்களை சந்தித்து கட்சியை பலப்படுத்துவது, தேர்தலின்போது எப்படி செயல்படுவது? உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. #Congress #Thirunavukkarasar #BJP #Amitshah
சென்னையில் பா.ஜனதா நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அமித்ஷா இந்தியாவிலேயே ஊழல் மலிந்த மாநிலமாக தமிழகம் மாறி விட்டது என்று விமர்சித்தார்.
இதுபற்றி முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி. கே.எஸ்.இளங்கோவன் கூறியதாவது:-

ஜெயலலிதா இல்லாத காரணத்தால் அமைச்சர் ஜெயக்குமார் இஷ்டம் போல் பேசி வருகிறார். தொடர்ந்து அ.தி.மு.க.வினர் காங்கிரஸ் பற்றி விமர்சிப்பதை பார்க்கும்போது விரைவில் இவர்கள் கம்பி எண்ணும் நேரம் நெருங்கி வருவதை காட்டுகிறது.
இவ்வாறு அவர் கூறினார். #Congress #EVKSElangovan
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-
1967-லேயே தமிழ்நாட்டில் காங்கிரசுக்கு சமாதி கட்டப்பட்டுவிட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். 1991-ல் காங்கிரசுடன் கெஞ்சி கூத்தாடி ஜெயலலிதா கூட்டணி வைத்தார். ராஜீவ் காந்தி உயிர்தியாகத்தால் ஜெயலலிதா மீண்டும் முதல்- அமைச்சர் ஆனார்.
எம்.ஜி.ஆர். உருவாக்கிய அ.தி.மு.க.வுக்கு, ஜெயலலிதாவுடன் சேர்த்து சமாதி கட்டி விட்டார்கள். தற்போது பா.ஜனதாவின் பினாமி ஆட்சி, நிழல் ஆட்சிதான் நடைபெறுகிறது. பா.ஜனதாவை சந்தோஷப்படுத்துவதற்காக அமைச்சர் ஜெயக்குமாரும், அ.தி.மு.க.வினரும் காங்கிரசை விமர்சிக்கிறார்கள்.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் நடைபெறும் ஆட்சியில்தான் அதிக ஊழல் நடந்திருப்பதாக பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா கூறி இருக்கிறார். எனவே, இனி பா.ஜனதா தமிழ்நாட்டில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்காது என்று கருதுகிறேன்.

அனைத்து கட்சி தலைவர்கள், சட்ட நிபுணர்களுடன் கலந்து பேசி சட்டத்தை நிறைவேற்றி இருக்க வேண்டும். இப்போது நிறைவேற்றியுள்ள லோக் ஆயுக்தா சட்டத்தால் எந்த பயனும் ஏற்படாது.
தமிழ்நாட்டில் அ.தி.மு.க. பற்றியும், அமைச்சர்கள் பற்றியும் எனக்கு நன்றாக தெரியும். காங்கிரசை பற்றி தேவை இல்லாமல் விமர்சித்தால் அமைச்சர்கள் குறித்து நான் பேசுவேன்.
இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார். #Congress #Thirunavukkarasar
தமிழ்நாட்டில் 8 அரசு போக்குவரத்து கழகங்களில் சுமார் 20 ஆயிரம் பஸ்கள் உள்ளன.
இதில் சுமார் 1,100 பஸ்கள் நீண்ட தூரத்துக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் பஸ்களாகும்.
தமிழக அரசு கடந்த ஜனவரி மாதம் சாதாரண மற்றும் எக்ஸ்பிரஸ் பஸ்களின் கட்டணத்தை கணிசமான அளவுக்கு உயர்த்தியது. இதன் காரணமாக அரசு பஸ்களில் வருவாய் இழப்பு ஏற்பட்டது. தற்போதுதான் இந்த வருவாய் இழப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது.
இந்த நிலையில் அரசு போக்குவரத்து கழகத்தை மேம்படுத்தும் வகையிலும் நிதி ஆதாரத்தை உயர்த்தும் வகையிலும் புதிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இதற்காக 5 மாதங்களுக்கு உயர்மட்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்த குழு ஆய்வு செய்து சில பரிந்துரைகளை அரசுக்கு வழங்கியுள்ளது.
அதன்படி ரெயில்களில் தட்கல் முறை டிக்கெட் முன்பதிவு கடைபிடிக்கப்படுவது போன்று அரசு எக்ஸ்பிரஸ் பஸ்களிலும் தட்கல் முறையில் முன்பதிவு திட்டத்தை கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக பண்டிகை நாட்களிலும், வார இறுதி நாட்களிலும் இந்த திட்டத்தை அமல்படுத்துவது பற்றி பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
தற்போது திங்கட்கிழமை முதல் புதன்கிழமை வரை நீண்ட தூர பஸ்கள் 85 சதவீதம் பயணிகளுடன் இயக்கப்படுகிறது. வார இறுதி நாட்களில் அரசு எக்ஸ்பிரஸ் பஸ்களில் டிக்கெட் தேவை அதிகரித்தப்படி உள்ளது.

சமீபத்தில் அரசு நீண்ட தூர எக்ஸ்பிரஸ் பஸ்களில் படுக்கை வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு பஸ்களிலும் தலா 4 படுக்கைகளை தட்கல் முறையில் ஒதுக்கீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக அரசு எக்ஸ்பிரஸ் போக்குவரத்து கழகங்களுக்கு 15 முதல் 20 சதவீதம் கூடுதல் வருவாய் கிடைக்கும்.
அரசு நீண்ட தூர பஸ்களை பொறுத்தவரை சென்னை - மதுரை, சென்னை-திருநெல்வேலி, சென்னை-திருச்செந்தூர், சென்னை-நாகர்கோவில், சென்னை-தூத்துக்குடி, சென்னை - கோவை, சென்னை-கோவில்பட்டி ஆகிய வழித்தடங்களுக்கு அதிக பயணிகள் வருகிறார்கள். எனவே இந்த வழித்தடங்களில் தட்கல் முறை முதல்கட்டமாக விரைவில் அமலுக்கு வர உள்ளது. #GovtBus #TNGovt
தமிழக அரசின் பல்வேறு துறைகள் தொடர்பான மத்திய தணிக்கைத் துறையின் அறிக்கை நேற்று தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.
அந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* தமிழக அரசு போக்குவரத்து கழகங்களுக்கு 2012-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை 5 ஆண்டுகளில் 4357 புதிய பஸ்கள் வாங்கப்பட்டன. இதில் 2020 புதிய பஸ்கள் குறித்த காலத்துக்குள் இயக்கப்படவில்லை.
* முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா புதிய பஸ்களை தொடங்கி வைக்க தேதி கொடுக்காததால் சுமார் 3 மாதங்கள் அந்த பஸ்கள் வெறுமனே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. சும்மா நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் வட்டியாக ரூ.10.29 கோடி வழங்கப்பட்டது.
* புதிய பஸ்கள் தாமதம் காரணமாக எரிபொருள் சேமிப்பில் ரூ.3.94 கோடி இழப்பு ஏற்பட்டது. மொத்தத்தில் புதிய பஸ்களை குறித்த காலத்துக்குள் இயக்காததால் அரசுக்கு ரூ.14 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
* சென்னையில் உள்ள அரசு நிலங்களில் 23 சதவீத நிலம் தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதில் 49 சதவீதம் சென்னை குடிநீர் ஆதாரமாகத் திகழும் நீர்நிலைப் பகுதிகளில் இருக்கின்றன.
* தமிழ்நாடு முழுவதும் 5.03 லட்சம் ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் உள்ளன. இதில் 65 ஆயிரத்து 411 ஏக்கர் இடங்களில் நிரந்தர குடியிருப்புகள் உள்ளன. இவற்றை ஆய்வு செய்ய நடத்தப்படும் குழு கூட்டம் 2010-ம் ஆண்டுக்கு பிறகு நடக்கவே இல்லை.
* சேலம் மாவட்டத்தில் 15.09 சதவீதம், திருவள்ளூர் மாவட்டத்தில் 14.16 சதவீதம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 12.65 சதவீதம், திண்டுக்கல் மாவட்டத்தில் 11.85 சதவீதம், விழுப்புரம் மாவட்டத்தில் 11.14 சதவீதம், தர்மபுரி மாவட்டத்தில் 10.06 சதவீதம் அரசு நிலங்கள் தனியார் ஆக்கிரமிப்பாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளன.

* சென்னையில் கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 289 பேர் உயிரிழந்தனர். 23.25 லட்சம் வீடுகள் தண்ணீரில் மூழ்கின. சென்னையில் மழை நீர் வடிகால் அமைப்புகள் சரியாக இல்லாததே வெள்ளம் ஏற்பட்டதற்கு முக்கிய காரணமாகும்.
* அனுமதி இல்லாத கட்டுமானங்கள், தனியார் நிலத்தை பாதுகாத்தது, அடையாறு ஆற்றுக்குள் வரைமுறை இல்லாமல் நீர் விடப்பட்டதும் வெள்ளம் ஏற்பட காரணமாகும். எனவே சென்னையில் 2015-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளம் மனிதர்களால் உருவாக்கப்பட்ட பேரழிவாகும்.
* கூவம் ஆற்றை சீரமைக்க 2011-ல் திட்டமிடப்பட்டது. ஆனால் இதற்கான ஒப்புதல் 2014-ல்தான் வழங்கப்பட்டது. 2018-ம் ஆண்டு இந்த திட்டத்தை முடிக்க ரூ.185 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் திட்டப்பணிகளில் எந்தவித முன்னேற்றமும் இல்லாததால் 2018-ம் ஆண்டுக்குள் இதை முடிக்க இயலாத நிலை உள்ளது.
* மின் பகிர்மான கழகம் பராமரிப்புக்காக உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ரூ.749 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
* சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு தேவைக்கு அதிகமாக மருந்து, மாத்திரைகள் வாங்கப்பட்டதால் பல மருந்துகள் காலாவதியாகி விட்டன. இதனால் ரூ.16.17 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
* ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் மூல உயிரணு ஆராய்ச்சி மையம் அமைக்க ரூ.2.70 கோடி தேவை இல்லாமல் செலவு செய்யப்பட்டுள்ளது. ஆராய்ச்சிக்கான மானியம் ரூ.5.7 கோடி பெறப்படவில்லை.
* தமிழகம் முழுவதும் மணல் குவாரிகள் மூலம் 19,021 வாகனங்களில் மணல் எடுக்கப்பட்டுள்ளது. இதில் 7906 லாரிகள் போலி பதிவு எண் கொண்டவை என்று தெரிய வந்துள்ளன. 16,778 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. உரிய ஆவணங்கள் இல்லாமல் மணல் எடுத்த வகையில் ரூ.300 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
* முதல்வரின் விரிவான காப்பீடு திட்டத்தில் ரூ.10 கோடி கூடுதல் செலவு செய்யப்பட்டுள்ளது.
* வெளிநாடுகளில் இருந்து கடந்த 3½ ஆண்டுகளாக நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதில் ரூ.1560 கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
* தமிழ்நாட்டில் சதுப்பு நில பாதுகாப்பு திட்டம் முறையாக செயல்படுத்தப்படவில்லை.
* மக்களிடம் உள்ளாட்சி அமைப்புகள் நூலக வரியாக 6 சதவீதம் வரி வசூலிக்கிறது. அப்படி வசூலித்த 19 ஆயிரம் கோடி ரூபாய் நூலகத்துறைக்கு வழங்கப்படவில்லை.
* கம்பம், நாகர்கோவில், வெள்ளக்கோவில் ஆகிய 3 நகராட்சிகளிலும் திட்ட பணிகள் முடிப்பதில் அலட்சியம் காட்டப்பட்டதால் ரூ.37.43 கோடி மானிய உதவித் தொகை பறிபோய் உள்ளது.
* பதிவுத்துறையில் வழி காட்டி மதிப்பு குளறுபடி காரணமாக அரசுக்கு ரூ.13.76 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
* கல்லூரிகளுக்கு தளவாட பொருட்கள் வாங்கியதில் ரூ.14 கோடி வீணாக செலவு செய்யப்பட்டுள்ளது.
* சென்னைப் பல்கலைக்கழகம் கடுமையான நிதி பற்றாக்குறையில் உள்ள நிலையில் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு 23 கோடி ரூபாயை வீணாக செலவு செய்துள்ளது.
* தமிழக காவல் துறையில் டி.ஜி.பி. செய்த தாமதத்தால் ரூ.97 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
* வணிக வரித்துறைக்கு ரூ.1,120 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
* மொத்தத்தில் தமிழக அரசின் 68 பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் அரசுக்கு ரூ.78,854 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. #Jayalalithaa
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்துவதற்கான சட்டம் சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. லோக் ஆயுக்தா அமைப்பு எப்படி இருந்து விடக்கூடாது என்று அச்சம் தெரிவித்திருந்தேனோ, அதே போன்று தான் உருவாக்கப்படவிருக்கிறது. கோட்டையைக் காவல் காப்பதற்காக வலிமையும், வீரமும் மிக்க படைவீரனை நிறுத்துவதற்கு மாற்றாக சோளக்கொல்லை பொம்மையை நிறுத்தினால் எப்படி இருக்குமோ, அதேபோன்று தான் தமிழக அரசு உருவாக்கவுள்ள லோக் ஆயுக்தாவும் அமையும்.
லோக் ஆயுக்தாவை உருவாக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளான பினாமி அரசு, லோக் ஆயுக்தாவாகவும் இருக்க வேண்டும்; தங்களின் ஊழல்களையும் கண்டு கொள்ளக்கூடாது என்ற எண்ணத்தில் பொம்மை அமைப்பை உருவாக்கவே வகை செய்திருக்கிறது. தமிழக அரசு உருவாக்க உள்ள லோக் ஆயுக்தாவால் ஊழலை எந்த வகையிலும் கட்டுப்படுத்த முடியாது என்பது தான் உண்மை.
தமிழக முதல்-அமைச்சரும் லோக் ஆயுக்தாவின் அதிகார வரம்புக்குள் வருவார் என்று சட்டத்தில் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. முதல்-அமைச்சரும் ஓர் அமைச்சராகக் கருதப்படுவார் என்று 2(1)(ஐ)பிரிவில் கூறப்பட்டிருப்பதன் அடிப்படையில் மட்டுமே முதல்-அமைச்சர் மீதான ஊழல் புகாரை விசாரிக்கும் படி லோக் ஆயுக்தாவை கோர முடியும். இந்த குழப்பத்தை முதல்-அமைச்சர்கள் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.
ஓர் அரசு நிர்வாகத்தில் மிகப் பெரிய அளவில் ஊழல் நடை பெறுவது ஒப்பந்தங்களை வழங்குவதிலும், உள்ளாட்சி அமைப்புகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களிலும்தான். ஆனால், இவை இரண்டிலும் நடைபெறும் முறைகேடுகள் குறித்து விசாரிக்கும் அதிகாரம் லோக் ஆயுக்தாவுக்கு இல்லை.
அதேபோல், அரசு அலுவலகங்களில் நடைபெறும் ஊழல்கள் குறித்த புகார்களை லோக் ஆயுக்தா நேரடியாக விசாரிக்க முடியாது. தமிழக அரசின் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையரிடம் இது குறித்து புகார் அளித்து, அதில் முகாந்திரம் இருப்பதாக அவர் கருதினால் மட்டுமே அப்புகார் லோக் ஆயுக்தாவுக்கு அனுப்பி வைக்கப்படுமாம். இவ்வாறு எந்த அதிகாரமும் இல்லாத லோக் ஆயுக்தா அமைப்பை உருவாக்குவதற்கு பதிலாக, ஊழலை சட்டப்பூர்வமாக்குவதாக அரசு அறிவித்து விடலாம்.
லோக் ஆயுக்தாவாக நியமிக்கப்படுவதற்கான தகுதிகளும், லோக் ஆயுக்தாவை தேர்வு செய்வதற்காக அமைக்கப்படவுள்ள குழுவும் லோக் ஆயுக்தா குறித்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையையும் தகர்க்கின்றன. லோக் ஆயுக்தாவாக நியமிக்கப்படுவர்கள் அப்பழுக்கற்ற பின்னணி கொண்ட, தமிழகத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியாகவோ, உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாகவோ இருக்க வேண்டும் என்று கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கையில் நான் வலியுறுத்தியிருந்தேன். ஆனால், ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியைக் கூட லோக் ஆயுக்தாவாக நியமிக்கலாம் என்று சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் ஜெயலலிதாவை ‘இதய தெய்வமே வணங்குகிறேன்’ என்று பதாகை அமைத்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் உண்டு. அப்படிப்பட்டவர்கள் லோக் ஆயுக்தாவாக நியமிக்கப்பட்டு விட்டால் தமிழகத்தில் அரசு நிர்வாகம் என்ன ஆகும்? என்று நினைத்துப் பார்க்கவே மிகவும் அச்சமாக உள்ளது.
அதேபோல், முதல்- அமைச்சர், சட்டப்பேரவைத் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய மூவர் அடங்கிய குழு தான் லோக் ஆயுக்தாவை தேர்வு செய்யும் என அறிவிக்கப்பட்டிருப்பது மிகவும் அபத்தமானதாகும்.
நீதித்துறையின் பிரதிநிதி இல்லாத லோக் ஆயுக்தா தேர்வுக்குழு நம்பத்தகுந்ததாக அமையாது. தேசிய அளவில் ஊழலை ஒழிக்கும் அமைப்பான லோக்பாலை தேர்வு செய்வதற்கான குழுவில் பிரதமர், மக்களவைத் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, புகழ்பெற்ற வல்லுனர் என ஐவர் இடம் பெற்றிருப்பார்கள்.
இதன் மூலம் தகுதியான ஒருவர் மட்டுமே லோக்பால் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார். ஆனால், நீதித்துறையினர் இல்லாத தேர்வுக்குழு அரசியல் குழுவாகவே அமையும்.
தமிழகத்தில் தகவல் உரிமை ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை இத்தகைய குழுவே தேர்ந்தெடுக்கிறது. இதற்கான கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பங்கேற்க முடியாத சூழலை உருவாக்கி ஆளுங்கட்சிக்கு சாதகமானவர்களை தேர்வு செய்வதே வழக்கமாக உள்ளது.
தி.மு.க. ஆட்சியின் போது, தலைமைச் செயலாளர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற ஸ்ரீபதியையும், அ.தி.மு.க. ஆட்சியில் காவல் துறை தலைமை இயக்குனர் பதவியிலிருந்து ஓய்வுபெற்ற ராமானுஜத்தையும், பின்னர் முதல்வரின் செயலராக இருந்து ஓய்வு பெற்ற ஷீலாப் பிரியாவையும் நியமித்து தகவல் உரிமை ஆணையத்தை இரு கட்சிகளும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டன. அதேபோன்று லோக் ஆயுக்தாவுக்கும் தங்களுக்கு சாதகமான ஒருவரை நியமித்து, வழக்கம் போல ஊழலை தொடரும் கொடுமை தான் நடக்கப் போகிறது.
இதற்கெல்லாம் மேலாக, லோக் ஆயுக்தாவில் தவறான புகார்களை அளிப்பவர்களுக்கு ஓராண்டு சிறை தண்டனையும், ஒரு லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது. ஊழல்கள் குறித்து எவரும் புகார் செய்யக்கூடாது என்பதற்காகவே இத்தகைய மிரட்டல் பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது.
மொத்தத்தில் ஊழல் செய்பவர்களை அச்சுறுத்தும் வகையில் புலியாக அமைய வேண்டிய லோக் ஆயுக்தா, ஆட்சியாளர்களைக் கண்டு அஞ்சி ஓடும் எலியாக மாற்றப்பட்டுள்ளது. ஊழலை ஒழிப்பதற்கு பதிலாக ஊழலை வளர்க்கும் இந்த அமைப்பை ஏற்க முடியாது. இதற்கு மாற்றாக அனைத்து அதிகாரங்களும் கொண்ட புதிய லோக் ஆயுக்தா சட்டத்தை பேரவையைக் கூட்டி நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். #Ramadoss #LokayuktaBill
திருச்சியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக பள்ளி கல்வித்துறை இந்தியாவிலேயே முன்னோடியாக செயல்பட்டு வருகிறது. மற்ற மாநிலங்கள் இங்கு செயல்படுத்தப்படும் திட்டங்களை பின்பற்றுகின்றன.
பள்ளியில் படிக்கும் போதே மாணவ-மாணவிகளின் திறமையை மேம்படுத்தும் வகையில் திறன்மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக 12 பாடங்களில் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
முதல் கட்டமாக கணக்கு தணிக்கையாளர் (சி.ஏ.) பாடத்துக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் அதிக அளவு பயன் பெறுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார். #NEET #TNMinister #Sengottaiyan
திருக்கோவிலூர் வந்த டி.டி.வி.தினகரன் திருவண்ணாமலை ஓட்டலில் தங்கினார். அவர், இன்று காலை நிருபர்களிடம் கூறியதாவது:-
லோக் ஆயுக்தா மசோதா சட்டசபையில் நிறைவேறியது வரவேற்கத்தக்கது. இந்த அமைப்பில் யாருடைய தலையீடும் இருக்க கூடாது. சத்துணவு முட்டை ஊழல், மறைந்த முதல்-அமைச்சர் இருக்கும் போதே அவருடைய கவனத்திற்கு செல்லாமல் 10 ஆண்டுகளாக ஊழல் செய்து வந்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார். #TTVDhinakaran #BJP
சட்டசபையில் பொதுத்துறை தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-
டெல்லியில் உள்ள வைகை தமிழ்நாடு இல்ல வளாகத்தில் ரூ.57 கோடி செலவில் புதிய விருந்தினர் இல்லம் கட்டப்படும். தற்போதுள்ள பிரதான விருந்தினர் இல்ல கட்டிடம் ரூ.2½ கோடி செலவில் மறுசீரமைப்பு பணிகள் செய்யப்படும்.
தலைமை செயலகத்தில் செயல்பட்டு வரும் நாமக்கல் கவிஞர் மாளிகையில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் ரூ.90 லட்சம் செலவில் நவீன கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்படும்.
தாயகம் திரும்பியோர் பயன்பெறும் வகையில் முதல்- அமைச்சரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் ஆயிரம் வீடுகள், தாயகம் திரும்பியோருக்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மூலம் ஒதுக்கீடு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #OPanneerselvam #TNAssembly






