search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயலலிதாவுக்காக காத்திருந்த புதிய பஸ்கள்- தாமதத்தால் ரூ.14 கோடி இழப்பு என அறிக்கை
    X

    ஜெயலலிதாவுக்காக காத்திருந்த புதிய பஸ்கள்- தாமதத்தால் ரூ.14 கோடி இழப்பு என அறிக்கை

    புதிய பஸ்களை தொடங்கி வைக்க ஜெயலலிதா தேதி கொடுக்காததால் ரூ.14 கோடி இழப்பு ஏற்பட்டதாக தணிக்கைத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழக அரசின் பல்வேறு துறைகள் தொடர்பான மத்திய தணிக்கைத் துறையின் அறிக்கை நேற்று தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

    அந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    * தமிழக அரசு போக்குவரத்து கழகங்களுக்கு 2012-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை 5 ஆண்டுகளில் 4357 புதிய பஸ்கள் வாங்கப்பட்டன. இதில் 2020 புதிய பஸ்கள் குறித்த காலத்துக்குள் இயக்கப்படவில்லை.

    * முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா புதிய பஸ்களை தொடங்கி வைக்க தேதி கொடுக்காததால் சுமார் 3 மாதங்கள் அந்த பஸ்கள் வெறுமனே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. சும்மா நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் வட்டியாக ரூ.10.29 கோடி வழங்கப்பட்டது.

    * புதிய பஸ்கள் தாமதம் காரணமாக எரிபொருள் சேமிப்பில் ரூ.3.94 கோடி இழப்பு ஏற்பட்டது. மொத்தத்தில் புதிய பஸ்களை குறித்த காலத்துக்குள் இயக்காததால் அரசுக்கு ரூ.14 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

    * சென்னையில் உள்ள அரசு நிலங்களில் 23 சதவீத நிலம் தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதில் 49 சதவீதம் சென்னை குடிநீர் ஆதாரமாகத் திகழும் நீர்நிலைப் பகுதிகளில் இருக்கின்றன.

    * தமிழ்நாடு முழுவதும் 5.03 லட்சம் ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் உள்ளன. இதில் 65 ஆயிரத்து 411 ஏக்கர் இடங்களில் நிரந்தர குடியிருப்புகள் உள்ளன. இவற்றை ஆய்வு செய்ய நடத்தப்படும் குழு கூட்டம் 2010-ம் ஆண்டுக்கு பிறகு நடக்கவே இல்லை.

    * சேலம் மாவட்டத்தில் 15.09 சதவீதம், திருவள்ளூர் மாவட்டத்தில் 14.16 சதவீதம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 12.65 சதவீதம், திண்டுக்கல் மாவட்டத்தில் 11.85 சதவீதம், விழுப்புரம் மாவட்டத்தில் 11.14 சதவீதம், தர்மபுரி மாவட்டத்தில் 10.06 சதவீதம் அரசு நிலங்கள் தனியார் ஆக்கிரமிப்பாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளன.

    * ரேசன் கடைகளில் விற்பனை செய்ய ஒதுக்கீடு செய்யப்பட்ட 5096 டன் கோதுமை அம்மா உணவகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது விதியை மீறியதாகும். இதனால் பொது விநியோகத் திட்டத்தில் மக்களுக்கு கோதுமை வழங்க இயலவில்லை.


    * சென்னையில் உள்ள அம்மா உணவகங்களுக்கு சப்பாத்தி தயார் செய்து கொடுக்க 15 எந்திரங்கள் வாங்கப்பட்டன. இதில் 13 எந்திரங்கள் பழுதாகி பயன்படுத்தப்படாமல் உள்ளன. 3 எந்திரங்கள் மூலமாகத்தான் சப்பாத்தி தயாரித்து வழங்கப்படுகிறது.

    * சென்னையில் கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 289 பேர் உயிரிழந்தனர். 23.25 லட்சம் வீடுகள் தண்ணீரில் மூழ்கின. சென்னையில் மழை நீர் வடிகால் அமைப்புகள் சரியாக இல்லாததே வெள்ளம் ஏற்பட்டதற்கு முக்கிய காரணமாகும்.

    * அனுமதி இல்லாத கட்டுமானங்கள், தனியார் நிலத்தை பாதுகாத்தது, அடையாறு ஆற்றுக்குள் வரைமுறை இல்லாமல் நீர் விடப்பட்டதும் வெள்ளம் ஏற்பட காரணமாகும். எனவே சென்னையில் 2015-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளம் மனிதர்களால் உருவாக்கப்பட்ட பேரழிவாகும்.

    * கூவம் ஆற்றை சீரமைக்க 2011-ல் திட்டமிடப்பட்டது. ஆனால் இதற்கான ஒப்புதல் 2014-ல்தான் வழங்கப்பட்டது. 2018-ம் ஆண்டு இந்த திட்டத்தை முடிக்க ரூ.185 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் திட்டப்பணிகளில் எந்தவித முன்னேற்றமும் இல்லாததால் 2018-ம் ஆண்டுக்குள் இதை முடிக்க இயலாத நிலை உள்ளது.

    * மின் பகிர்மான கழகம் பராமரிப்புக்காக உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ரூ.749 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

    * சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு தேவைக்கு அதிகமாக மருந்து, மாத்திரைகள் வாங்கப்பட்டதால் பல மருந்துகள் காலாவதியாகி விட்டன. இதனால் ரூ.16.17 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

    * ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் மூல உயிரணு ஆராய்ச்சி மையம் அமைக்க ரூ.2.70 கோடி தேவை இல்லாமல் செலவு செய்யப்பட்டுள்ளது. ஆராய்ச்சிக்கான மானியம் ரூ.5.7 கோடி பெறப்படவில்லை.

    * தமிழகம் முழுவதும் மணல் குவாரிகள் மூலம் 19,021 வாகனங்களில் மணல் எடுக்கப்பட்டுள்ளது. இதில் 7906 லாரிகள் போலி பதிவு எண் கொண்டவை என்று தெரிய வந்துள்ளன. 16,778 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. உரிய ஆவணங்கள் இல்லாமல் மணல் எடுத்த வகையில் ரூ.300 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

    * முதல்வரின் விரிவான காப்பீடு திட்டத்தில் ரூ.10 கோடி கூடுதல் செலவு செய்யப்பட்டுள்ளது.

    * வெளிநாடுகளில் இருந்து கடந்த 3½ ஆண்டுகளாக நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதில் ரூ.1560 கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

    * தமிழ்நாட்டில் சதுப்பு நில பாதுகாப்பு திட்டம் முறையாக செயல்படுத்தப்படவில்லை.

    * மக்களிடம் உள்ளாட்சி அமைப்புகள் நூலக வரியாக 6 சதவீதம் வரி வசூலிக்கிறது. அப்படி வசூலித்த 19 ஆயிரம் கோடி ரூபாய் நூலகத்துறைக்கு வழங்கப்படவில்லை.

    * கம்பம், நாகர்கோவில், வெள்ளக்கோவில் ஆகிய 3 நகராட்சிகளிலும் திட்ட பணிகள் முடிப்பதில் அலட்சியம் காட்டப்பட்டதால் ரூ.37.43 கோடி மானிய உதவித் தொகை பறிபோய் உள்ளது.

    * பதிவுத்துறையில் வழி காட்டி மதிப்பு குளறுபடி காரணமாக அரசுக்கு ரூ.13.76 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

    * கல்லூரிகளுக்கு தளவாட பொருட்கள் வாங்கியதில் ரூ.14 கோடி வீணாக செலவு செய்யப்பட்டுள்ளது.

    * சென்னைப் பல்கலைக்கழகம் கடுமையான நிதி பற்றாக்குறையில் உள்ள நிலையில் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு 23 கோடி ரூபாயை வீணாக செலவு செய்துள்ளது.

    * தமிழக காவல் துறையில் டி.ஜி.பி. செய்த தாமதத்தால் ரூ.97 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

    * வணிக வரித்துறைக்கு ரூ.1,120 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

    * மொத்தத்தில் தமிழக அரசின் 68 பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் அரசுக்கு ரூ.78,854 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. #Jayalalithaa
    Next Story
    ×