என் மலர்tooltip icon

    ஆசிரியர் தேர்வு

    • இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 20-ம் தேதி கொண்டாடப்படுகிறது.
    • அக்டோபர் 2-ம் தேதி தசரா பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

    புதுடெல்லி:

    இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 20-ம் தேதி கொண்டாடப்படுகிறது. அக்டோபர் 2-ம் தேதி தசராவும், அக்டோபர் 20-ம் தேதி தீபாவளி பண்டிகையும் கொண்டாடப்பட உள்ளது.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படுவது வழக்கம்.

    இந்நிலையில், ரெயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அதில், ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியத்தை போனசாக வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியத்தை போனசாக வழங்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

    இதன்மூலம் 10.9 லட்சம் ஊழியர்கள் பயன்பெறுவர். இதனால் அரசுக்கு ரூ.1,866 கோடி செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த போனஸ் தொகையானது, ரெயில்வே ஊழியர்களில் தண்டவாள பராமரிப்புப் பணி தொழிலாளர்கள், லோகோ பைலட், ரெயில்வே கார்டுகள், ரெயில்நிலைய மேலாளர், கண்காணிப்பாளர்கள், தொழில்நுட்ப ஊழியர்கள், உதவியாளர்கள் என பல தரப்பட்ட ஊழியர்களுக்கும் வழங்கப்படும்.

    ஊழியர்களின் செயல்திறனை அதிகரிக்கவும், அவர்களை ஊக்கப்படுத்தவும் மத்திய அரசு சார்பில் போனஸ் வழங்கப்பட்டு வருகிறது.

    • சில தினங்களுக்கு முன்பு படப்பிடிப்பிற்காக கேரள மாநிலம் பாலக்காட்டிற்கு நடிகர் ரஜினிகாந்த் புறப்பட்டு சென்றார்.
    • சண்டை உள்ளிட்ட பல்வேறு காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வெளியான படம் 'கூலி'. இப்படம் கடந்த மாதம் 14-ந்தேதி வெளியானது. இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் வசூல் குவித்தது.

    'கூலி' படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் 'ஜெயிலர்2' படத்தில் நடித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு படப்பிடிப்பிற்காக கேரள மாநிலம் பாலக்காட்டிற்கு நடிகர் ரஜினிகாந்த் புறப்பட்டு சென்றார். அங்கு சண்டை உள்ளிட்ட பல்வேறு காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து படப்பிடிப்புகளை முடித்து விட்டு நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை திரும்பினார். அப்போது அவர் கூறுகையில், தாதா சாகேப் பால்கே விருது பெற்ற மோகன் லாலுக்கு வாழ்த்து. அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 12-ந்தேதி 'ஜெயிலர்2' வெளியாகும் என தெரிவித்தார். 

    • PS5 டிஜிட்டல் எடிஷன் ரூ.44,990 விலையில் கிடைக்கிறது.
    • இது அதன் சில்லறை விலை ரூ.49,990இல் இருந்து ரூ.44,990ஆக குறைக்கப்பட்டுள்ளது.

    சோனி நிறுவனம் இந்தியாவில் தனது பண்டிகை கால சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் இந்திய சந்தையில் பிளே ஸ்டேஷன் 5 (PS5) மாடலுக்கு சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த குறுகிய கால சலுகை கன்சோலின் டிஜிட்டல் மற்றும் Physical Edition மாடல்களின் விலையை ரூ.5,000 குறைக்கிறது.

    அசத்தலான சலுகைகளை வழங்கும் சோனியின் பண்டிகை சிறப்பு விற்பனை நேற்று (திங்கட்கிழமை) அமேசான், பிளிப்கார்ட், இதர ஆன்லைன் வர்த்தக தளங்கள் மற்றும் பல்வேறு ஆஃப்லைன் சில்லறை விற்பனை மையங்களில் தொடங்கியது.

    ரூ. 5,000 தள்ளுபடி:

    பிளேஸ்டேஷன் சாதனத்தின் தாய் நிறுவனம் கடந்த வெள்ளிக்கிழமை தனது பண்டிகை கால விற்பனையை அறிவித்தது. இந்த சலுகை: PS5 Physical Edition (CFI-2008A01X) மற்றும் PS5 Digital Model (CFI-2008B01X)- என இரண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட பிளேஸ்டேஷன் 5 மாடல்களுக்கு பொருந்தும். அதன்படி இரண்டு கன்சோல்களும் ரூ. 5,000 தள்ளுபடியைப் பெறுகின்றன.

    சலுகையின் கீழ் PS5 டிஜிட்டல் எடிஷன் ரூ.44,990 விலையில் கிடைக்கிறது. இது அதன் சில்லறை விலை ரூ.49,990இல் இருந்து ரூ.44,990ஆக குறைக்கப்பட்டுள்ளது.

    ரூ.54,990க்கு விற்பனை செய்யப்படும் கன்சோலின் Physical Edition ரூ.49,990க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    பண்டிகை கால சிறப்பு விற்பனை அக்டோபர் 19ஆம் தேதி அல்லது ஸ்டாக் தீரும் வரை அமேசான், பிளிப்கார்ட், பிளிங்கிட், ஜெப்டோ, க்ரோமா, ரிலையன்ஸ் டிஜிட்டல், விஜய் சேல்ஸ், சோனி சென்டர் மற்றும் நாட்டில் உள்ள பிற அங்கீகரிக்கப்பட்ட பிளே ஸ்டேஷன் சில்லறை விற்பனை ஸ்டோர்களில் நடைபெறும்.

    முன்னதாக கடந்த ஜூலை மாதம், சோனி நிறுவனம் இந்தியாவில் டிஜிட்டல் மாடல் PS5 கன்சோலின் விலையை ரூ. 5,000 உயர்த்தியது. இதனால் கன்சோலின் விலை ரூ. 44,990இல் இருந்து ரூ. 49,990 ஆக உயர்ந்தது.

    • பொள்ளாச்சி, காங்கயம், கடலூர் ஆகிய இடங்களில் முக்கிய நார் மையங்கள் இருக்கிறது.
    • திருச்சி மாவட்டத்தின் மணப்பாறை முறுக்கு புவிசார் பெற்றது.

    சென்னை:

    ஜி.எஸ்.டி. குறைப்பால் பல்வேறு பொருட்களின் விலை குறைந்து உள்ளது, இதனால் தமிழகத்திற்கு என்னென்ன நன்மைகள் கிடைத்து இருக்கிறது என்பதனை மத்திய அரசு பட்டியலிட்டு தெரிவித்துள்ளது.

    அதன் விவரம் வருமாறு:-

    ஜவுளித்துறை:-

    தமிழகத்தின் ஜவுளித்துறை இந்தியாவின் மிகப்பெரிய தொழில்களில் ஒன்றாகும். அதனால் திருப்பூர், ஈரோடு, கரூர், சேலம், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கோடிக்கணக்கான மக்கள் இதன்மூலம் வாழ்வாதாரம் பெற்றுள்ளனர். "இந்தியாவின் பின்னலாடை தலைநகர்" என்று அழைக்கப்படும் திருப்பூரில் மட்டும் 10 லட்சம் மக்கள் வேலை செய்கின்றனர். இந்தியாவின் பின்னலாடை துணி ஏற்றுமதியின் 90 சதவீத பங்களிப்பும், அதாவது சுமார் 1 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு இங்கிருந்தே வருகிறது. குறைந்த மதிப்புள்ள ஆடைகள், எம்பிராய்டரி மற்றும் அணிகலன்களுக்கு ஜி.எஸ்.டி. 12 சதவீதத்தில் இருந்து 5 ஆகக் குறைக்கப்பட்டதால், உற்பத்திச் செலவு 6 முதல் 11 சதவீதம் வரை குறையும்.

    காஞ்சிபுரம் பட்டு:-

    இந்த பட்டு உலகப்புகழ் பெற்றது. அங்குள்ள நெசவாளர்கள், பட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் இதன்மீது தான். இந்த பட்டுக்கான தேவையான ஜரி, ஜி.எஸ்.டி. 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டதால், மூலப்பொருள் செலவு 7 சதவீதம் குறையும். அதனால் இறுதி பட்டு விலையும் 2 முதல் 4 சதவீதம் வரை குறையும்.

    கைத்தறிப் பொருட்கள்:-

    ஈரோட்டின் பவானி ஜமுக்காளம், மதுரையின் சுங்குடி போன்ற புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள் 6 சதவீதம் வரை மலிவாக இருக்கும். இவை உள்நாட்டுச் சந்தையில் அதிகமாக விற்பனையாகும். ஏற்றுமதிக்கும் அதிக வாய்ப்பு உண்டு.

    வெண்கலச் சிலைகள்:-

    தஞ்சை மாவட்டத்தில் சுமார் 1,200 கைவினைஞர்கள் இழந்த மெழுகு வார்ப்பு முறையில் சிலைகள் உருவாக்குகின்றனர். ஆண்டுக்கு ரூ.20 முதல் 30 கோடி மதிப்பிற்கு ஏற்றுமதியும் செய்யப்படுகிறது. ஜி.எஸ்.டி. 5 சதவீதமாக குறைந்ததால் விலையும் 6 சதவீதம் குறையும்.

    நாகர்கோவில் கோவில் நகை:-

    கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கோவில் நகை செய்யும் தொழிலில் சுமார் 500 கைவினைக்குடும்பங்கள் ஈடுபட்டுள்ளனர். 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீத குறைவால் விலை குறையும்.

    பித்தளை, கல், மர கைவினை பொருட்கள்:

    தஞ்சாவூர், கும்பகோணம், மாமல்லபுரம் போன்ற இடங்களில் உள்ள சிற்பிகள் உற்பத்தி செய்யும் பித்தளை, கல், மர கைவினை பொருட்கள் 6 முதல் 7 சதவீதம் வரை குறையும். சுற்றுலா சந்தையிலும், ஆன்லைன் விற்பனையிலும் அதிக ஆதாயம் உண்டு.

    பாரம்பரிய பொம்மைகள்:

    தஞ்சை, சேலம், காஞ்சிபுரம் பகுதிகளில் தயாரிக்கப்படும் பொம்மைகள், 5 சதவீத ஜி.எஸ்.டி.யால் விலை மலிவாகி, வெளிநாட்டு பிளாஸ்டிக் பொம்மைகளுக்கு போட்டியாகும்.

    தென்னை நார்:-

    பொள்ளாச்சி, காங்கயம், கடலூர் ஆகிய இடங்களில் முக்கிய நார் மையங்கள் இருக்கிறது. பெண்கள் அதிகம் ஈடுபடும் இந்தத் துறையில், ஜி.எஸ்.டி. 12 சதவீதத்தில் இருந்து 5 ஆக குறைந்ததால் தென்னை பாய், கயிறு, டெக்ஸ்டைல் போன்றவை 6 முதல் 7 சதவீதம் மலிவாகிறது. உள்நாட்டு, ஏற்றுமதி சந்தையில் போட்டித்திறன் உயரும்.

    ஆவின்:-

    பால் பொருட்கள் பன்னீர், வெண்ணெய் போன்றவை ஜி.எஸ்.டி. வரி 5 சதவீதம் குறைந்ததால் அதன் விலையும் 4 முதல் 11 சதவீதம் வரை குறைந்து இருக்கிறது. ஆவினில் தினசரி 37 லட்சம் லிட்டர் பால், 5 லட்சம் விவசாயிகளிடமிருந்து வாங்கப்படுகிறது. ஜி.எஸ்.டி. குறைவால் ஆவின் நெட்வொர்க் வலுவடையும்.

    மணப்பாறை முறுக்கு:

    திருச்சி மாவட்டத்தின் மணப்பாறை முறுக்கு புவிசார் பெற்றது. இந்த சிற்றுண்டி மூலம் 3 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். அதன் விலை 6 சதவீதம் மலிவாகி இருக்கிறது.

    மீன்பிடித்துறை:-

    தமிழகத்தின் கடலோர 14 மாவட்டங்களில் 10.48 லட்சம் மீனவர்கள் வாழ்கின்றனர். மீன், இறால், கடல் உணவுகளுக்கு ஜி.எஸ்.டி. 12 சதவீதத்தில் இருந்து 5 ஆக குறைக்கப்பட்டதால், விலை 7 சதவீதம் மலிவாகி இருக்கிறது. அதனால் தூத்துக்குடி, நாகப்பட்டினம், ராமநாதபுரம், கடலூர் மாவட்டங்கள் அதிக நன்மை பெறும்.

    நோட் புத்தகம்:-

    சிவகாசி, பெரம்பூர் ஆகிய இடங்களில் அச்சு, ஸ்டேஷனரி தொழில் வலுவாக உள்ளது. நோட் புத்தகம், மற்றும் ஸ்டேஷனரி ஜி.எஸ்.டி. குறைவால் வியாபாரம் அதிகரிக்கும்.

    எலெக்ட்ரானிக்ஸ்:-

    ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் எலெக்ட்ரானிக்ஸ் தொழில் மையங்கள் உள்ளன. டிவி, மானிட்டர் 28 சதவீதத்தில் இருந்து18 சதவீதமாக குறைந்து இருப்பதால் உற்பத்தி அதிகரிக்கும்.

    டிரோன்கள்:-

    சென்னை, ஓசூர், கோவை ஆகிய இடங்களில் டிரோன் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. ஜி.எஸ்.டி. 18, 28 சதவீதத்தில் இருந்து 5 சதவீதம் குறைந்ததால் விலை 18 சதவீதம் குறைந்து உற்பத்தி அதிகரிக்கிறது.

    ஆட்டோமொபைல்:-

    கடந்த 2023-ல் இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தியில் 40 சதவீத பங்கு வகித்த தமிழகம், 22 லட்சம் பேரை வேலைக்கு அமர்த்தியுள்ளது. ஜி.எஸ்.டி. 28-ல் இருந்து 18 சதவீதம் குறைவதால் வாகன விலை 8 சதவீதம் குறையும்.

    பாதுகாப்பு:-

    சென்னை ஆவடி, கோவை, திருச்சி, சேலம் ஆகிய இடங்களில் பாதுகாப்புத் தொழில் உற்பத்தி மையங்கள்உள்ளன. ஏவுகணைகள், போக்குவரத்து விமானங்கள், சிமுலேட்டர்கள் ஆகியவை இப்போது பூஜ்ஜிய ஜி.எஸ்.டி. என்பதால் விலைகுறைந்து உற்பத்தி அதிகரிக்கிறது.

    ரெயில் பெட்டிகள்:-

    சென்னை ஐ.சி.எப். உலகின் மிகப்பெரிய ரெயில் பெட்டி உற்பத்தியாளர். 8,200 பேர் பணிபுரிகின்றனர். ஜி.எஸ்.டி. 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதம் குறைவால், உற்பத்தி செலவு 5 சதவீதம் மிச்சமாகும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வங்காளதேச அணி லீக் சுற்றில் ஹாங்காங், ஆப்கானிஸ்தான் அணிகளை வென்றது.
    • இவ்விரு அணிகளும் சர்வதேச 20 ஓவர் போட்டியில் இதுவரை 17 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.

    17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் (20 ஓவர்) துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் 'சூப்பர்4' சுற்றுக்கு வந்துள்ள இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் 'டாப்-2' இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும்.

    இந்த நிலையில் துபாயில் இன்று நடக்கும் 'சூப்பர்4' சுற்றின் 4-வது ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, வங்காளதேசத்தை எதிர்கொள்கிறது.

    நடப்பு தொடரில் தோல்வியே சந்திக்காத ஒரே அணியாக வலம் வரும் இந்தியா, லீக் சுற்றில் ஐக்கிய அரபு அமீரகம், பாகிஸ்தான், ஓமனை அடுத்தடுத்து பந்தாடியது. தொடர்ந்து சூப்பர்4 சுற்றில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை மீண்டும் தோற்கடித்தது.

    இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு வலுவாக இருக்கிறது. கடந்த ஆட்டத்தில் தொடக்க ஆட்டக்காரர்கள் அபிஷேக் வர்மா (74 ரன்), சுப்மன் கில் (47 ரன்) அதிரடியால் பாகிஸ்தான் நிர்ணயித்த 172 ரன் இலக்கை 7 பந்துகள் மீதம் வைத்து இந்தியா எளிதாக எட்டியது. மேலும் பேட்டிங்கில் கேப்டன் சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, சஞ்சு சாம்சனும், பந்து வீச்சில் குல்தீப் யாதவ், பும்ரா, வருண் சக்ரவர்த்தியும், ஆல்-ரவுண்டராக ஷிவம் துபே, ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் பட்டேலும் வலுசேர்க்கின்றனர். ஆனால் பீல்டிங் தான் சற்று கவலைக்குரியதாக உள்ளது. கடந்த ஆட்டத்தில் 4 கேட்ச் வாய்ப்புகளை கோட்டை விட்ட இந்திய வீரர்கள் பீல்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.

    2024-ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து 35 இருபது ஓவர் போட்டியில் விளையாடி இருக்கும் இந்தியா 32-ல் வெற்றி பெற்றுள்ளது. 3-ல் மட்டுமே தோல்வியை சந்தித்துள்ளது. 20 ஓவர் போட்டியில் இந்திய அணி தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்டி, இறுதிப்போட்டியை உறுதி செய்யும் வேட்கையுடன் காத்திருக்கிறது.

    வங்காளதேச அணி லீக் சுற்றில் ஹாங்காங், ஆப்கானிஸ்தான் அணிகளை வென்றது. இலங்கையிடம் தோல்வி கண்டது. சூப்பர் 4 சுற்றில் தனது முதல் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி பழிதீர்த்தது. அந்த நம்பிக்கையுடன் இந்த ஆட்டத்தில் களம் காணும். அந்த அணியில் பேட்டிங்கில் தவ்ஹித் ஹிரிடாய், கேப்டன் லிட்டான் தாஸ், சைப் ஹசன், தன்சித் ஹசனும், பந்து வீச்சில் முஸ்தாபிஜூர் ரகுமான், தஸ்கின் அகமது, மெஹிதி ஹசனும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.

    இந்திய அணியோடு ஒப்பிடுகையில் வங்காளதேச அணியின் வலிமை குறைவானது என்றாலும், சுழற்பந்து வீச்சுக்கு அனுகூலமான மைதானத்தில் அந்த அணி எதிரணிக்கு அதிர்ச்சி அளிக்கும் வல்லமை கொண்டதாகும். இந்தியாவுக்கு எதிராக ஆடும் போது வங்காளதேச அணியினர் ஆக்ரோஷத்துடனும், போர்க்குணத்துடனும் போராடுவார்கள். இருப்பினும் கடந்த கால வரலாற்றையும், தற்போதைய இந்திய அணியின் வளமான செயல்பாட்டையும் பார்க்கையில் வங்காளதேசம் சரிசமமான சவால் அளிப்பது கடினம் தான்.

    இவ்விரு அணிகளும் சர்வதேச 20 ஓவர் போட்டியில் இதுவரை 17 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 16-ல் இந்தியாவும், ஒன்றில் வங்காளதேசமும் வெற்றி பெற்றுள்ளன.

    மெதுவான தன்மை கொண்ட இந்த ஆடுகளத்தில் சுழலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    போட்டி குறித்து வங்காளதேச அணியின் தலைமை பயிற்சியாளர் பில் சிமோன்ஸ் நேற்று கூறுகையில், 'இந்தியா ஒன்றும் தோற்கடிக்க முடியாத அணி கிடையாது. ஒவ்வொரு அணிக்கும் இந்தியாவை வீழ்த்தும் திறன் உள்ளது. ஆட்டத்தின் முடிவு அன்றைய நாளில் 3½ மணி நேரத்தில் என்ன நடக்கிறது என்பதை பொறுத்தே அமையும். இதற்கு முன்பு இந்திய அணி என்ன செய்தது என்பது விஷயமல்ல. எங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்போம். இந்திய அணி தவறிழைக்கும் வகையில் நெருக்கடி கொடுத்து, அதன் மூலம் வெற்றி பெற முடியும் என்று நம்புகிறோம்.

    20 ஓவர் கிரிக்கெட்டில் 'நம்பர் ஒன்' அணியாக விளங்கும் இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கு எப்போதும் நிறைய எதிர்பார்ப்பு இருக்கும். அதற்குள் நாங்களும் பயணித்து, அந்த தருணத்தை அனுபவித்து எங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் கவனம் செலுத்துவோம்' என்றார்.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    இந்தியா: அபிஷேக் ஷர்மா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் பட்டேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்ரவர்த்தி.

    வங்காளதேசம்: சைப் ஹசன், தன்சித் ஹசன், லிட்டான் தாஸ் (கேப்டன்), தவ்ஹித் ஹிரிடாய், ஷமிம் ஹூசைன், ஜாக்கர் அலி, மெஹிதி ஹசன், நசும் அகமது, தஸ்கின் அகமது, தன்சிம் ஹசன், முஸ்தாபிஜூர் ரகுமான்.

    இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி ஸ்போர்ட்ஸ் 1, 4, 5 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • சட்டவிரோத குடியேறிகள், அகதிகளால் சுதந்திர உலகின் பெரும் பகுதி அழிகிறது.

    அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 80-வது ஐ.நா. போது சபை கூட்டம் (UNGA) நேற்று(செப்டம்பர் 23 ) தொடங்கியது. வரும் 29 ஆம் தேதி வரை கூட்டம் நடைபெற உள்ளது.   

    நேற்றைய கூட்டத்தில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 1 மணி நேரம் உரையாற்றினார்.

    தனது உரையில், 'காலநிலை மாற்றம்' என்பது உலகில் நிகழ்த்தப்பட்ட மிகப்பெரிய மோசடி.

    கார்பன் தடம் (carbon footprints) என்பது தீய எண்ணம் கொண்டவர்களால் உருவாக்கப்பட்ட ஒரு ஏமாற்று வேலை" என்று குற்றம் சாட்டினார்.

    மேலும் சட்டவிரோத குடியேற்றம் மற்றும் பசுமை எரிசக்தி கொள்கைகள் ஐரோப்பாவை அழித்து வருவதாகவும் டிரம்ப் குறிப்பிட்டார்.

    "சட்டவிரோத குடியேறிகள், அகதிகளால் ஐரோப்பிய நாடுகள் மிகப்பெரிய பிரச்சினையை சந்திக்கிறது.

    அவர்களை கட்டுப்படுத்த ஐரோப்பிய நாடுகளால் ஒன்றும் செய்ய முடியவில்லை. சட்டவிரோத குடியேறிகள், அகதிகளால் சுதந்திர உலகின் பெரும் பகுதி அழிகிறது.

    திறந்த எல்லைகள் கொண்ட கொள்கைகள் ஐரோப்பாவை அழிவின் விளிம்பிற்கு தள்ளியுள்ளது. அவர்கள் தங்கள் பாரம்பரியத்தை இழந்து வருகின்றனர்" என்று டிரம்ப் தெரிவித்தார்.

    தொடர்ந்து ஐநா அமைப்பு குறித்து விமரிசத்த டிரம்ப், "ஐ.நா.வின் நோக்கம் என்ன?. ஐநா, வெறும் கடுமையான வார்த்தைகளை கொண்ட கடிதங்களை மட்டுமே எழுதுகிறது. வெறுமையான வார்த்தைகள் போரைத் தீர்க்காது" என்று சாடினார். 

    • இந்த அரசுத் துறைகள் ஏன் தடையில்லாச் சான்றிதழ்களை வழங்கவில்லை என புரியவில்லை.
    • மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ரூ.1800 கோடி மதிப்பில் ராமர் கோவில் குறுகிய காலத்தில் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது.

    1992 இல் இந்து அமைப்பு கும்பல்களால் உத்தரப் பிரதேச அயோத்தியில் அமைந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டது.

    அந்த இடத்தில் ராமர் கோவில் கட்ட கடந்த 2019 நவம்பர் மாதம் உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி தீர்ப்பளித்தது. மேலும் அதற்கு பதிலாக வேறு இடத்தில் மசூதி கட்டுவதற்காக அயோத்தி மாவட்டத்தின் சோஹாவல் தாலுகாவில் உள்ள தன்நிபூர் கிராமத்தில், மாநில சன்னி மத்திய வக்பு வாரியத்துக்கு ஐந்து ஏக்கர் நிலம் ஒதுக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

    இதையடுத்து, 2020 ஆகஸ்ட் 3 அன்று அப்போதைய மாவட்ட ஆட்சியர் அனுஜ் குமார் ஜா அந்த நிலத்தை சன்னி மத்திய வக்பு வாரியத்திடம் ஒப்படைத்தார்.

    மசூதி அறக்கட்டளை, மசூதி மற்றும் பிற வசதிகள் கட்டுவதற்கான திட்ட அனுமதிக்கு 2021 ஜூன் 23 அன்று அயோத்தி மேம்பாட்டு ஆணையத்திடம் விண்ணப்பித்தது. அனால் அதன் பின் எந்த பணிகளும் இதுவரை நடைபெறவில்லை.

    இதுதொடர்பாக மத்திய பத்திரிகையாளர் ஒருவர் தாக்கல் செய்த தகவல் அறியும் உரிமைச் சட்ட மனுவுக்கு கடந்த செப்டம்பர் 16 அன்று அயோத்தி மேம்பாட்டு ஆணையம் பதில் அளித்துள்ளது.

    அந்த பதிலில், மசூதி அறக்கட்டளையின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.

    பொதுப்பணித் துறை, மாசுக்கட்டுப்பாடு, சிவில் விமானப் போக்குவரத்து, நீர்ப்பாசனம், வருவாய், நகராட்சி, மாவட்ட ஆட்சியர் மற்றும் தீயணைப்புத் துறை போன்றவற்றிலிருந்து தடையில்லாச் சான்றிதழ்கள் பெறப்படாததைக் காரணம் காட்டி இந்த நிராகரிப்பு நடந்துள்ளது.

    மேலும், இந்த விண்ணப்பம் மற்றும் ஆய்வு கட்டணமாக மசூதி அறக்கட்டளை ரூ. 4,02,628 செலுத்தியுள்ளதாகவும் அயோத்தி மேம்பாட்டு ஆணையத்தின் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூ

    இந்த நிராகரிப்பு குறித்து மசூதி அறக்கட்டளையின் செயலாளர் அதர் ஹுசைன் கூறுகையில், "உச்ச நீதிமன்றம் மசூதிக்கான நிலத்தை ஒதுக்கீடு செய்ய உத்தரவிட்டது.

    உத்தரபிரதேச அரசு நிலத்தை ஒதுக்கியது. இந்த அரசுத் துறைகள் ஏன் தடையில்லாச் சான்றிதழ்களை வழங்கவில்லை, மேம்பாட்டு ஆணையம் ஏன் மசூதியின் திட்டத்தை நிராகரித்தது என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை" என்று தெரிவித்தார்.

    அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ரூ.1800 கோடி மதிப்பில் ராமர் கோவில் குறுகிய காலத்தில் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வந்த நிலையில் அதற்கு மாற்றாக வழங்கப்பட்ட இடத்தில் மசூதி கட்டுவதற்கு உ.பி. பாஜக அரசு சார்பில் மெத்தனம் காட்டப்படுவது விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.  

    • பல செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சிகளும் இதை வெளியிட்டன.

    மகரிஷி வால்மீகி வேடத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தோன்றும் ஒரு திரைப்படத்தின் டிரைலர் வீடியோ ஒன்று வெளியாகி வைரலானது.

    இந்த வீடியோ வேகமாகப் பரவிய நிலையில், பல செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சிகளும் இதை செய்தியாக வெளியிட்டன.

    இந்நிலையில், இதுகுறித்து விளக்கமளித்து தனது சமூக வலைதளத்தில் அக்ஷய் குமார் ஒரு பதிவை வெளியிட்டார்.

    அதில், "நான் மகரிஷி வால்மீகி வேடத்தில் நடித்ததாகக் காட்டப்படும் சில ஏஐ வீடியோக்களை நான் சமீபத்தில் பார்த்தேன்.

    அந்த வீடியோக்கள் அனைத்தும் போலியானவை என்றும், ஏஐ-யைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டவை என்றும் நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இதைவிட மோசமான விஷயம் என்னவென்றால், சில செய்தி சேனல்கள் இதைச் சரிபார்க்காமல் செய்தி என்று எடுத்துக்கொண்டன" என்று குறிப்பிட்டுள்ளார்.

      

    • ஐ.நா. பொது சபையில் பேசிய முடித்து திரும்பியபோது, சாலையில் மேக்ரான் வாகனம் நிறுத்தப்பட்டது.
    • டிரம்ப் கான்வே செல்ல வேண்டியதிருந்ததால், சாலைகளில் வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டது.

    அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. போது சபை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த சபையில் பிரான்ஸ் அதிபர் நீண்ட நேரம் உரையாற்றினார். பின்னர், ஓய்வு எடுப்பதற்காக பிரான்ஸ் தூதரகம் வந்து கொண்டிருந்தார். அப்போது, டொனால்டு டிரம்ப் கான்வே பாஸ் வந்து கொண்டிருந்தது. இதனால் போலீசார் உடனடியாக அனைத்து சாலைகளிலும் போக்குவரத்தை நிறுத்தினர்.

    இதனால் மேக்ரான் நடுரோட்டில் நிற்க வேண்டியதாயிற்று. சிறிது நேரம் காரில் அமர்ந்திருந்த மேக்ரான், பின்னர் காரில் இருந்து இறங்கி வந்து நேராக தடுப்பு கம்பி அருகே நின்று கொண்டிருந்து போலீஸ் அதிகாரிடம், ஏன் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது? என கேள்வி எழுப்பினார்.

    அதற்கு அதிகாரி "மன்னிக்கவும் மிஸ்டர் பிரசிடென்ட். எல்லாமே தற்போது தடைசெய்யப்பட்டுள்ளது" என்றார்.

    இதனால் மேக்ரான் சாலையில் நின்று கொண்டே, டொனால்டு டிரம்பிற்கு போன் செய்துள்ளார். டொனால்டு டிரம்ப் போனை எடுத்து எப்படி இக்கிறீர்கள்?. என்ன நிகழ்ந்தது? என்று கேட்டுள்ளார். நான் தெருவில் நின்று கொண்டிருக்கிறேன். ஏனென்றால், எல்லாமே உங்களுக்கான தடைசெய்யப்பட்டுள்ளது என மேக்ரான் பதில் அளித்துள்ளார்.

    எனினும், டிரம்ப் கான்வே கடந்த சென்ற பிறகு, சாலைகள் திறந்து விடப்பட்டுள்ளது. சாலை வழியாக நடந்து சென்றவர்கள், பிரான்ஸ் தலைவர் மேக்ரானை அருகில் பாதுகாப்பின்றி நிற்பதை மகிழ்ச்சியாகவும், அதேவேளையில் ஆச்சர்யத்துடன் பார்த்து சென்றனர்.

    மேக்ரான் உடனடியாக காருக்கு செல்லவில்லை. டிரம்பிடம் போனில் பேசியவாறு சாலையில் நடந்து சென்றார். பொதுமக்கள் அவரிடம் ஒரேயொரு செல்பி எனக் கட்டாயப்படுத்தியுள்ளனர். ஒருவர் அவருடைய நெற்றியில் முத்தமிட்டதாக உள்ளூர் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

    • சமூக வலைதளத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக போஸ்ட் பதிவிட்டதாக குற்றச்சாட்டு.
    • மருத்துவமனையில் இருந்தவரை வெளியில் அழைத்து சேலை அணிந்துவிட்ட பாஜக-வினர்.

    சமூக வலைத்தளத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக ஆட்சேபனைக்குரிய கருத்தை பதிவிட்டதற்காக, காங்கிரஸ்காரருக்கு பாஜக தொண்டர்கள் சேலைக்கட்டிவிட்ட சம்பவம் மகாராஷ்டிராவில் நடந்துள்ளது.

    மகாராஷ்டிரா மாநிலம் உல்காஸ்நகரைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர் பிரகாஷ் பகாரே (வயது 73), சமீபத்தில் பிரதமர் மோடியின் உருமாற்றம் செய்யப்பட்ட படத்தை பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார் எனத் தெரிகிறது. இதனால் பாஜக தொண்டர்கள் கோபம் அடைந்துள்ளனர்.

    அத்துடன் பொது இடத்தில் பகாராவை பிடித்து வைத்து, வலுக்கட்டாயமாக சேலை அணிவித்துள்ளனர். மேலும், அதை வீடியோ எடுத்துள்ளனர். அத்துடன் இதுபோன்று பதிவிட்டால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.

    ஆனால், பேஸ்புக்கில் உள்ள போஸ்ட் நான் Forward மட்டுமே செய்தேன் என பகாரே தெரிவித்துள்ளார். மேலும், நான் மருத்துவமனையில் இருந்தபோது பாஜக தவைலர் சந்தீப் மாலி போன் செய்தார். மருத்துவமனையில் இருந்து வெளியே வந்தபோது, சந்தீப் மாலி மற்றும் அவருடன் வந்தவர்கள் என்னை பிடித்து, போஸ்ட் குறத்து கேட்டு மிரட்டல் விடுத்தனர். நான் என்ன தவறு செய்தேன் என அவர்களிடம் கேட்டேன். அவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய வேணடும். அவர்களுடைய அட்டூழியங்களுக்கு எதிராக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பேன்" என்றார்.

    உள்ளூர் பாஜக தலைவர் நரேந்திர சர்மா கூறுகையில் "பகாரே பிரதமர் மோடியை இழிவுப்படுத்தியதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது போன்ற விசயம் நடைபெற்றால், இதேபோன்று சேலை அணிந்து விடுவோம்" என்றார்.

    • மோகன்லாலுக்கு தாதாசாகேப் பால்கே விருது கிடைத்தது மிகப்பெரிய சந்தோசம்- ஊர்வசி
    • விருது வாங்கியது ரொம்ப ரொம்ப சந்தோசம். இது என்னுடைய 2ஆவது தேசிய விருது- ஜி.வி. பிரகாஷ்

    71ஆவது தேசிய விருது அறிவிக்கப்பட்ட நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று விருது வழங்கி கவுரவித்தார்.

    தமிழகத்தைச் சேர்ந்த ஜி.வி. பிரகாஷ் வாத்தி பட பாடலுக்காக சிறந்த இசையமைப்பாளர் விருதை பெற்றார். விருது பெற்றது குறித்து ஜி.வி. பிரகாஷ் கூறியதாவது:-

    எனக்கு வாத்தி பட பாடலுக்காக சிறந்த இசையமைப்பாளர் விருது கிடைத்துள்ளது. விருது வாங்கியது ரொம்ப ரொம்ப சந்தோசம். இது என்னுடைய 2ஆவது தேசிய விருது. ரொம்ப ஹேப்பியாக உள்ளது. சூரரை போற்று படத்திற்கு சிறந்த பின்னணி இசைக்காக கிடைத்தது. வாத்தி படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், தனுஷ், படத்தில் பணியாற்றிய எல்லோருக்கும் எனது நன்றி.

    இவ்வாறு ஜி.வி. பிரகாஷ் தெரிவித்தார்.

    உள்ளொழுக்கு மலையாள படத்தில் நடித்த ஊர்வசிக்கு சிறந்த துணை நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. விருது வாங்கியது தொடர்பாக ஊர்வசி கூறியதாவது:-

    விருது வாங்கியது ரொம்ப ரொம்ப சந்தோசம். எனக்கு இது 2ஆவது விருது. இரண்டு விருதுகளையும் பெண் ஜனாதிபதியிடம் இருந்து வாங்கியுள்ளேன். இந்தியாவின் உயரிய பதவியில் இருக்கும் இரண்டு பெண் ஜனாதிபதியிடம் இருந்து வாங்கியதை பெருமையாக நினைக்கிறேன். மோகன்லாலுக்கு தாதாசாகேப் பால்கே விருது கிடைத்தது மிகப்பெரிய சந்தோசம்.

    இவ்வாறு ஊர்வசி தெரிவித்தார்.

    ஊர்வசி பிரதீபா பாட்டீல் மற்றும் திரவுபதி முர்மு ஆகியோர் கைகளால் விருது வழங்கியுள்ளார்.

    • இரண்டு நாள் தங்கம் விலை உயர்வுக்கு டிரம்பின் விசா அறிவிப்பு முக்கிய காரணம்
    • டிரம்ப் அறிவிப்பு உலக பொருளாதாரத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

    தங்கம் நகை மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது:-

    தங்கம் விலை இன்னும் உயர காத்துக் கொண்டிருக்கிறது என்றுதான் சொல்வேன். இதற்கு முன்பாக பல காரணங்கள் இருந்தாலும், திடீரென இந்த இரண்டு நாள் விலை ஏற்றத்திற்கு (நேற்றும் இன்றும் சவரனுக்கு 2240 ரூபாய் உயர்ந்துள்ளது) அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் விசா குறித்த அறிவிப்புதான் காரணம்.

    இது உலக பொருளாதாரத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலான நாடுகளில் உள்ள மக்கள் பாதிக்கப்படுவார்கள். இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு சென்று வேலை பார்க்கும் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

    இவ்வாறு ஜெயந்திலால் சலானி தெரிவித்துள்ளார்.

    ×