என் மலர்
விளையாட்டு

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணியின் ஆதிக்கம் தொடருமா?- வங்காளதேசத்துடன் இன்று மோதல்
- வங்காளதேச அணி லீக் சுற்றில் ஹாங்காங், ஆப்கானிஸ்தான் அணிகளை வென்றது.
- இவ்விரு அணிகளும் சர்வதேச 20 ஓவர் போட்டியில் இதுவரை 17 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் (20 ஓவர்) துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் 'சூப்பர்4' சுற்றுக்கு வந்துள்ள இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் 'டாப்-2' இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும்.
இந்த நிலையில் துபாயில் இன்று நடக்கும் 'சூப்பர்4' சுற்றின் 4-வது ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, வங்காளதேசத்தை எதிர்கொள்கிறது.
நடப்பு தொடரில் தோல்வியே சந்திக்காத ஒரே அணியாக வலம் வரும் இந்தியா, லீக் சுற்றில் ஐக்கிய அரபு அமீரகம், பாகிஸ்தான், ஓமனை அடுத்தடுத்து பந்தாடியது. தொடர்ந்து சூப்பர்4 சுற்றில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை மீண்டும் தோற்கடித்தது.
இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு வலுவாக இருக்கிறது. கடந்த ஆட்டத்தில் தொடக்க ஆட்டக்காரர்கள் அபிஷேக் வர்மா (74 ரன்), சுப்மன் கில் (47 ரன்) அதிரடியால் பாகிஸ்தான் நிர்ணயித்த 172 ரன் இலக்கை 7 பந்துகள் மீதம் வைத்து இந்தியா எளிதாக எட்டியது. மேலும் பேட்டிங்கில் கேப்டன் சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, சஞ்சு சாம்சனும், பந்து வீச்சில் குல்தீப் யாதவ், பும்ரா, வருண் சக்ரவர்த்தியும், ஆல்-ரவுண்டராக ஷிவம் துபே, ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் பட்டேலும் வலுசேர்க்கின்றனர். ஆனால் பீல்டிங் தான் சற்று கவலைக்குரியதாக உள்ளது. கடந்த ஆட்டத்தில் 4 கேட்ச் வாய்ப்புகளை கோட்டை விட்ட இந்திய வீரர்கள் பீல்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.
2024-ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து 35 இருபது ஓவர் போட்டியில் விளையாடி இருக்கும் இந்தியா 32-ல் வெற்றி பெற்றுள்ளது. 3-ல் மட்டுமே தோல்வியை சந்தித்துள்ளது. 20 ஓவர் போட்டியில் இந்திய அணி தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்டி, இறுதிப்போட்டியை உறுதி செய்யும் வேட்கையுடன் காத்திருக்கிறது.
வங்காளதேச அணி லீக் சுற்றில் ஹாங்காங், ஆப்கானிஸ்தான் அணிகளை வென்றது. இலங்கையிடம் தோல்வி கண்டது. சூப்பர் 4 சுற்றில் தனது முதல் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி பழிதீர்த்தது. அந்த நம்பிக்கையுடன் இந்த ஆட்டத்தில் களம் காணும். அந்த அணியில் பேட்டிங்கில் தவ்ஹித் ஹிரிடாய், கேப்டன் லிட்டான் தாஸ், சைப் ஹசன், தன்சித் ஹசனும், பந்து வீச்சில் முஸ்தாபிஜூர் ரகுமான், தஸ்கின் அகமது, மெஹிதி ஹசனும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.
இந்திய அணியோடு ஒப்பிடுகையில் வங்காளதேச அணியின் வலிமை குறைவானது என்றாலும், சுழற்பந்து வீச்சுக்கு அனுகூலமான மைதானத்தில் அந்த அணி எதிரணிக்கு அதிர்ச்சி அளிக்கும் வல்லமை கொண்டதாகும். இந்தியாவுக்கு எதிராக ஆடும் போது வங்காளதேச அணியினர் ஆக்ரோஷத்துடனும், போர்க்குணத்துடனும் போராடுவார்கள். இருப்பினும் கடந்த கால வரலாற்றையும், தற்போதைய இந்திய அணியின் வளமான செயல்பாட்டையும் பார்க்கையில் வங்காளதேசம் சரிசமமான சவால் அளிப்பது கடினம் தான்.
இவ்விரு அணிகளும் சர்வதேச 20 ஓவர் போட்டியில் இதுவரை 17 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 16-ல் இந்தியாவும், ஒன்றில் வங்காளதேசமும் வெற்றி பெற்றுள்ளன.
மெதுவான தன்மை கொண்ட இந்த ஆடுகளத்தில் சுழலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போட்டி குறித்து வங்காளதேச அணியின் தலைமை பயிற்சியாளர் பில் சிமோன்ஸ் நேற்று கூறுகையில், 'இந்தியா ஒன்றும் தோற்கடிக்க முடியாத அணி கிடையாது. ஒவ்வொரு அணிக்கும் இந்தியாவை வீழ்த்தும் திறன் உள்ளது. ஆட்டத்தின் முடிவு அன்றைய நாளில் 3½ மணி நேரத்தில் என்ன நடக்கிறது என்பதை பொறுத்தே அமையும். இதற்கு முன்பு இந்திய அணி என்ன செய்தது என்பது விஷயமல்ல. எங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்போம். இந்திய அணி தவறிழைக்கும் வகையில் நெருக்கடி கொடுத்து, அதன் மூலம் வெற்றி பெற முடியும் என்று நம்புகிறோம்.
20 ஓவர் கிரிக்கெட்டில் 'நம்பர் ஒன்' அணியாக விளங்கும் இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கு எப்போதும் நிறைய எதிர்பார்ப்பு இருக்கும். அதற்குள் நாங்களும் பயணித்து, அந்த தருணத்தை அனுபவித்து எங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் கவனம் செலுத்துவோம்' என்றார்.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: அபிஷேக் ஷர்மா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் பட்டேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்ரவர்த்தி.
வங்காளதேசம்: சைப் ஹசன், தன்சித் ஹசன், லிட்டான் தாஸ் (கேப்டன்), தவ்ஹித் ஹிரிடாய், ஷமிம் ஹூசைன், ஜாக்கர் அலி, மெஹிதி ஹசன், நசும் அகமது, தஸ்கின் அகமது, தன்சிம் ஹசன், முஸ்தாபிஜூர் ரகுமான்.
இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி ஸ்போர்ட்ஸ் 1, 4, 5 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.






