என் மலர்
ஆசிரியர் தேர்வு
- ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் மாதம் நடைபெறுகிறது.
- இந்தியாவும், பாகிஸ்தானும் அதிகபட்சம் இரு அணிகளும் 3 போட்டிகளில் நேருக்கு நேர் மோதலாம்
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 9 தொடங்கி செப்டம்பர் 28 வரை நடைபெறும் என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மோசின் நக்வி அறிவித்துள்ளார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் குரூப் A-வில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் நாடுகள் இடம்பெற்றுள்ளன.
குரூப் B-ல் வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், ஹாங்காங் அணிகள் இடம்பெற்றுள்ளன.
இந்தியா - பாகிஸ்தான் போட்டி செப்டம்பர் 14ல் நடைபெறுகிறது. குரூப் பிரிவில் முன்னேறி அரையிறுதி இறுதி போட்டிக்கு இந்தியா, பாகிஸ்தான் அணிகள் சென்றால் 2 அணிகளும் மீண்டும் மொத வாய்ப்புள்ளது. அவ்வகையில் 3 முறை இரு அணிகளும் நேருக்கு நேர் மொத வாய்ப்புள்ளது.
- ஆந்திர மாநில அமைச்சர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கலெக்டர்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை.
- வறுமையை ஒழிக்கும் திட்டம் குறித்த சுவரொட்டியை வெளியிட்டார்.
ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அவருடைய குப்பம் தொகுதியில் வசிக்கும் 250 குடும்பத்தினரை தத்தெடுத்துள்ளார்.
ஆந்திர மாநில அமைச்சர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கலெக்டர்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்தினார்.
அப்போது வறுமையை ஒழிக்கும் திட்டம் குறித்த சுவரொட்டியை வெளியிட்டார்.
அவர் கூறுகையில்:- நான் குப்பம் தொகுதியில் 250 குடும்பங்களை தத்தெடுக்கிறேன். அவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சி எனது பொறுப்பு.
வறுமையை ஒழிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக நானே களம் இறங்கி இதனை நடைமுறைப்படுத்துகிறேன். சமூகத்தில் பொருளாதார இடைவெளியை குறைக்கும் நோக்கத்துடன் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதைப்போல மாநிலத்தில் ஏழை குடும்பத்தினரை தத்தெடுக்க முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்ட அந்த நபர், சூலூர்பேட்டையில் உள்ள ஓட்டலில் வேலை செய்து வந்துள்ளார்.
- வாலிபரை போலீசார் கைது செய்து அழைத்து சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியானது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாலுகாவை சேர்ந்த 8 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமி கடந்த 12-ந்தேதி பள்ளி முடிந்து மதியம் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது வடமாநில வாலிபர் சிறுமி வாயை பொத்தி தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்தார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது
பல்வேறு அரசியல் கட்சியினரும், சமூக ஆர்வலர்களும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தி ஆரம்பாக்கம் போலீஸ் நிலையம் முன்பு பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
20-க்கும் மேற்பட்ட தனிப்படை போலீசார் 14 நாட்கள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். குற்றவாளியை கண்டுபிடிக்க அவரது புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரங்களை போலீசார் பொது இடங்களில் போஸ்டராக ஓட்டினர். குற்றவாளி குறித்து துப்பு கொடுத்தால் ரூ.5 லட்சம் வெகுமதி எனவும் போலீஸ் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
நேற்று மாலை சம்பவத்தில் தொடர்புடைய மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவரை போலீசார் ஆந்திர மாநிலம் சூலூர்பேட்டை ரெயில் நிலையம் அருகே கைது செய்தனர். அந்த நபரின் பெயர் விவரங்களை போலீசார் வெளியிடவில்லை.
தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்ட அந்த நபர், சூலூர்பேட்டையில் உள்ள ஓட்டலில் வேலை செய்து வந்துள்ளார். கஞ்சா போதைக்கு அடிமையான அந்த நபர், ஓட்டலுக்கு கூட செல்லாமல் தொடர்ந்து விடுமுறை எடுத்து வந்து உள்ளார். வாரம் தோறும் சனிக்கிழமை விடுமுறை எடுத்து தமிழக எல்லைப் பகுதியான கிராமங்களுக்கு சுற்றுலா போல வருவது அந்த நபரின் வழக்கமாக இருந்துள்ளது. அதன்படி சம்பவத்தன்று (சனிக்கிழமை) அந்த வாலிபர் கும்மிடிப்பூண்டிக்கு வந்தது உறுதியானது.
அந்த வாலிபரின் புகைப்படத்தை பாதிக்கப்பட்ட சிறுமியிடம் போலீசார் காண்பித்தபோது அவர்தான் என உறுதிப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் ஆரம்பாக்கம் ரெயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
ஆரம்பாக்கத்தில் வைத்து விசாரித்தால் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதால் கவரப்பேட்டை காவல் நிலையத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். அந்த வாலிபரை போலீசார் கைது செய்து அழைத்து சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியானது.
அந்த வடமாநில வாலிபரிடம் 15 மணி நேரத்திற்கும் மேலாக போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து அந்த வாலிபரை மகிளா கோர்ட்டில் இன்று ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
- ‘கூலி' படத்தின் ஆரம்பக் காட்சியில் கமல்ஹாசனின் குரலை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.
- ‘விக்ரம்' படத்தில் ரஜினி நடிக்க முடியாது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 'கூலி' படம் அடுத்த மாதம் (ஆகஸ்டு) வெளியாகிறது. இந்தநிலையில், 'கூலி' படத்தின் ஆரம்பக் காட்சியில் கமல்ஹாசனின் குரலை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இதனால் ரஜினிகாந்த் படத்தில் கமல்ஹாசன் இணைவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து லோகேஷ் கனகராஜ் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும்போது, 'கூலி' படம் 'எல்.யூ.சி.' (லோகேஷ் கனகராஜின் முந்தைய படங்களின் தொடர்ச்சி) படம் என்றும், இதில் கமல்ஹாசன் சிறப்பு தோற்றத்தில் வருகிறார் என்றும் வதந்தி பரவியுள்ளது.
'விக்ரம்' படத்தில் ரஜினி நடிக்க முடியாது. 'கூலி' படத்தில் கமல் நடிக்கமுடியாது. இந்த கதை அவருக்காக எழுதப்பட்டது. இதில் வேறு ஒருவரை நடிக்கவைக்க முடியாது என தெரிவித்துள்ளார்.
- முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 198 ரன்கள் குவித்தது.
- தென்ஆப்பிரிக்கா அணியால் 167 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.
உலக சாம்பியன்ஸ் ஆஃப் லெஜண்ட்ஸ் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொண்டு விளையாடி வருகிறார்கள்.
தென்ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ்- பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்றிரவு நடைபெற்றது.
இதில் முதலில் களம் இறங்கிய பாகிஸ்தான் லெஜண்ட்ஸ் அணி 198 ரன்கள் குவித்தது. அந்த அணியின் உமர் அமின் 58 ரன்கள் விளாசினார். சோயிப் மாலிக் ஆட்டமிழக்காமல் 46 ரன்கள் அடித்தார்.
பின்னர் 199 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய தென்ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் அணியால் 167 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் 31 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணி வெற்றி பெற்றது. அந்த அணியின் மோர்னே வான் விக் அதிகபட்சமாக ஆட்டமிழக்காமல் 44 ரன்கள் எடுத்தார்.
இந்த போட்டியில் தோல்வியடைந்தாலும் தென்ஆப்பிரிக்கா 4 போட்டிகளில் விளையாடி 3-ல் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில முதலிடம் வகிக்கிறது. பாகிஸ்தான் 3 போட்டிகளில் 2-ல் வெற்றி, ஒரு டிரா மூலம் 2ஆவது இடத்தில் உள்ளது.
இந்தியா 2 போட்டிகளில் விளையாடி ஒன்றில் தோல்வி, ஒன்றில் டிரா (பாகிஸ்தான் உடனான போட்டியில் விளையாட மறுத்தது) மூலம் கடைசி இடத்தை பிடித்துள்ளது.
- சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் முன்னதாக 4 முறை நடைபெற்றுள்ளது.
- நாட்டின் எந்தவொரு குடிமகனுக்கும் எந்த அநீதியும் செய்யப்படாது.
பீகார் மாநிலத்தில் இந்திய தேர்தல் ஆணையம் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை மேற்கொண்டுள்ளது. இதன்மூலம் பீகாரில் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட இருக்கிறது. இந்த சிறப்பு தீவிர திருத்தம் குடியுரிமை சட்டத்தை தேர்தல் ஆணையம் மூலம் பாஜக மறைமுகமாக நடைமுறைப்படுத்த முயற்சிக்கிறது. மேலும், வாக்காளர்களை நீக்கி தேர்தலில் வெற்றிபெற பாஜக முயல்கிறது என எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தொடர்பாக விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இந்த கோரிக்கை ஏற்கப்படாததால், கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் நேற்றைய பாராளுமன்ற அலுவல் பணி முற்றிலுமாக முடங்கியது.
இந்த நிலையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சரான சிராக் பஸ்வான் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) புதிது அல்ல எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சிராக் பஸ்வான் கூறுகையில் "சிறப்பு தீவிர திருத்தம் பணி நமது நாட்டில் முதன்முறையாக நடைபெறவில்லை. முன்னதாக 4 முறை நடைபெற்றுள்ளது. இந்த முறை அதே அடிப்படையில் நடத்தப்பட்டு வருகிறது.
நாட்டின் எந்தவொரு குடிமகனுக்கும் எந்த அநீதியும் செய்யப்படாது. ஆனால் யாராவது நாட்டிற்குள் ஊடுருவியிருந்தால், அவர்கள் மிகப்பெரிய உரிமையான வாக்குரிமையை தவறாகப் பயன்படுத்த அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
இவ்வாறு சிராக் பஸ்வான் தெரிவித்தார்.
- இஸ்ரேல்- காசா இடையே போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.
- இந்த பேச்சுவார்த்தை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் நாட்டிற்குள் புகுந்து ஹமாஸ் குழுவினர் கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் 1200 பேர் கொல்லப்பட்டனர். 250க்கும் அதிகமானோர் பணயக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக ஹமாஸ்க்கு எதிராக இஸ்ரேல் போர் பிரகடனம் செய்து காசா மீது கடுமையான வகையில் தாக்குதல் நடத்தி வருகிறது.
இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் உள்ள அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். இஸ்ரேல்- ஹமாஸ் இடையே 20 மாதங்களுக்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. இரண்டு முறை பணயக்கைதிகள் பரிமாற்றத்திற்காக போர் நிறுத்தம் ஏற்பட்டது.
தற்போது பொதுமக்கள் பட்டினியால் வாடி வருகின்றனர். அவர்களுக்கு மனிதாபிமான உதவி பொருட்கள் கிடைக்கும் வகையிலும், மீதமுள்ள பணயக்கைதிகளை மீட்கும் வகையிலும் போர் நிறுத்தத்திற்கு பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. அமெரிக்கா, கத்தார், எகிப்து நாடுகள் மத்தியஸ்தரராக செயல்பட்டு வந்தது. ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.
இந்த நிலையில் ஹமாஸ் உடனான போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளுக்கு மாற்று வழிகளை பரிசீலித்து வருகிறோம். என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. மேலும், பேச்சுவார்த்தைக்கு அனுப்பிய பிரதிநிதிகளை திரும்ப அழைத்துள்ளது. இதனால் போர் நிறுத்தம் ஏற்படுவது உறுதியற்ற நிலையாகவே உள்ளது.
- இங்கிலாந்து அணி மூன்றாம் நாள் முடிவில் 544 ரன்கள் குவித்தது.
- ஜோ ரூட் சிறப்பாக ஆடி 150 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
மான்செஸ்டர்:
இங்கிலாந்து, இந்தியா இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் ஓல்டு டிராஃபோர்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, இந்தியா முதல் இன்னிங்சில் களமிறங்கியது. சிறப்பாக ஆடிய ஜெய்ஸ்வால் 58 ரன்னிலும், பொறுப்புடன் ஆடிய சாய் சுதர்சன் 61 ரன்னில் அவுட்டானார். அரை சதம் விளாசிய பண்ட் 54 ரன்னில் ஆட்டமிழந்தார். கே.எல்.ராகுல் 46 ரன்னிலும், ஷர்துல் தாகூர் 41 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 358 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இங்கிலாந்து சார்பில் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டும், ஆர்ச்சர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. முதல் விக்கெட்டுக்கு 166 ரன்கள் சேர்த்த நிலையில் ஜாக் கிராலே 84 ரன்னில் அவுட்டானார். சதமடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் பென் டக்கெட் 94 ரன்னில் வெளியேறினார். இரண்டாம் நாள் முடிவில் இங்கிலாந்து 46 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 225 ரன்கள் எடுத்துள்ளது.
இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. ஒல்லி போப் அரை சதம் கடந்து 71 ரன்னில் வெளியேறினார். ஹாரி புரூக் 3 ரன்னில் அவுட்டானார்.
5வது விக்கெட்டுக்கு ஜோ ரூட் உடன் பென் ஸ்டோக்ஸ் இணைந்தார். இந்த ஜோடி பொறுப்புடன் ஆடி ரன்களைக் குவித்தது. அரை சதம் கடந்த பென் ஸ்டோக்ஸ் 66 ரன்னில் ரிட்டயர் ஹர்ட் ஆனார். சதமடித்து அசத்திய ஜோ ரூட் 150 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், மூன்றாம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 544 ரன்களைக் குவித்துள்ளது. இதன்மூலம் 186 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. பென் ஸ்டோக்ஸ் 77 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இந்தியா சார்பில் ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட்டும், கம்போஜ், பும்ரா, சிராஜ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
- வாக்காளர்கள் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த பணி முடிவடைந்துள்ளது.
- 35 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படலாம் எனத் தெரிகிறது.
பீகார் மாநிலத்தில் இந்த வருடம் இறுதியில் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்தது.
இந்த சிறப்பு தீவிர திருத்தத்தின் முதற்கட்ட பணிகள் முடிவடைந்துள்ளன. அதன்படி 35 லட்சம் வாக்காளர்கள் வெளிமாநிலத்திற்கு குடிபெயர்ந்துள்ளனர் அல்லது தொடர்பு கொள்ள முடியாதவர்கள் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இவர்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படலாம்.
பீகார் மாநிலத்தில் சுமார் 7.90 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 22 லட்சம் வாக்காளர்கள் மரணம் அடைந்துள்ளனர். சுமார் 7 லட்சம் வாக்காளர்கள் ஒன்றிற்கு மேற்பட்ட இடத்தில் வசித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 1.2 லட்சம் வாக்காளர்களிடம் இருந்து இன்னும் ஃபார்ம் திரும்பப்பெறவில்லை. 7.23 கோடி வாக்காளரிடம் இருந்து ஃபார்ம் பெறப்பட்டு டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது.
7.23 கோடி வாக்காளர்கள் வரைவு வாக்காளர்கள் பட்டியலில் இடம் பெறுவார்கள். அனைத்து பணிகளும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முடிவடையும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
- திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 1-ம் தேதி வெளியாக இருக்கிறது.
- படத்தின் ஆடியோ உரிமையை சரிகம இசை நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக 'இட்லி கடை' உருவாகியுள்ளது. இது தனுஷ் நடிக்கும் 52-வது திரைப்படமாகும். தனுஷ் இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. எம்மாதிரியான கதைக்களத்துடன் இப்படம் இருக்கும் என மக்களிடம் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது. அருண் விஜய் இப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 1-ம் தேதி வெளியாக இருக்கிறது. படத்தின் ஆடியோ உரிமையை சரிகம இசை நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு ஜூலை 27-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
- என்னை தேற்கடிக்க முடியாவிட்டால் எங்களை நீக்க முயற்சி செய்கிறீர்கள்.
- அனைத்து ஜனநாயக ஆயுதங்களையும் பயன்படுத்தி எதிர்த்துப் போராடுவோம்.
பீகாரில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தில் வாக்காளர்கள் நீக்கப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-
பீகாரில் நடத்தப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை (S.I.R) உடனடியாக கைவிட வேண்டும். தங்களுக்கு எதிராக வாக்களிக்கக் கூடிய மக்களை வாக்களிக்கவே விடாமல் தடுத்து, பாஜகவுக்கு சாதகமாக களத்தை மாற்றப் பார்க்கிறார்கள். எங்களை வீழ்த்த முடியவில்லை என்பதால், நீக்க முயற்சிக்கிறீர்கள்.
இது ஒற்றை மாநிலத்தை பற்றியது மட்டுமல்ல இந்திய குடியரசின் அடித்தளத்தைப் பற்றியது. நெருப்புடன் விளையாடாதீர்கள். முழு வீச்சில் இதற்கு எதிராக தமிழ்நாடு போராடும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- பாலஸ்தீன அரசை அங்கீகரித்த முதல் பெரிய மேற்கத்திய நாடாக மாறும்.
- மற்றொரு ஈரானிய 'பினாமியை' உருவாக்கும் அபாயத்தை அதிகரிப்பதாகவும் கூறினார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிப்பதாக பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் கூறினார். இது பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்த உதவும் என்று நம்புவதாக மேக்ரோன் கூறினார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், "மத்திய கிழக்கில் ஒரு நீதியான மற்றும் நீடித்த அமைதிக்கான வரலாற்று உறுதிப்பாட்டை அங்கீகரிக்கும் விதமாக பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க பிரான்ஸ் முடிவு செய்துள்ளது" என்று மேக்ரோன் கூறினார். அடுத்த செப்டம்பரில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் இந்த அறிவிப்பை வெளியிடுவேன் என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.
இதன்மூலம் ஐரோப்பாவின் மிகப்பெரிய யூத மற்றும் முஸ்லிம் சமூகங்களைக் கொண்ட பிரான்ஸ், பாலஸ்தீன அரசை அங்கீகரித்த முதல் பெரிய மேற்கத்திய நாடாக மாறும்.
இந்நிலையில் பிரான்சின் அறிவிப்புக்கு இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கூறுகையில், அத்தகைய நடவடிக்கை பயங்கரவாதத்திற்கு வெகுமதி அளிப்பதாகவும், மற்றொரு ஈரானிய 'பினாமியை' உருவாக்கும் அபாயத்தை அதிகரிப்பதாகவும் கூறினார்.
மேலும், "பாலஸ்தீன நாடு இஸ்ரேலை அழிப்பதற்கான ஒரு ஏவுதளமாக இருக்கும். பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலுடன் ஒரு நாட்டைத் தேடவில்லை. அவர்கள் இஸ்ரேலுக்குப் பதிலாக ஒரு நாட்டைத் தேடுகிறார்கள்," என்று நேதன்யாகு தெரிவித்தார். அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோவும் பிரான்சின் முடிவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.






